> குருத்து: வலையுலக படைப்பாளிகள் - தினமணி - சில குறிப்புகள்!

January 1, 2010

வலையுலக படைப்பாளிகள் - தினமணி - சில குறிப்புகள்!

பதிவுலகம், படைப்பாளிகள் குறித்து எம். மணிகண்டன் என்பவர் தினமணியில் இன்று (01/01/2010) அன்று நடுப்பக்க (துணைக்) கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அநேகமாக அவரும் ஒரு பதிவர் என்றே நினைக்கிறேன். பதிவர்களின் பெயர்களை பட்டியலிட்டு எழுதியிருக்கிறார்.

கட்டுரையில்... வலையுல படைப்பு சுதந்திரம், துணிச்சலாக, வித்தியாசமாக எழுதுவது, தேசம் கடந்து நட்பு பாராட்டுவது, துறைவாரியாக பலர் எழுதுவது, பெண்கள் பலர் எழுதுவது என வலையுலகம் ஊடகங்களின் நவீன பரிமாணமாக உருவெடுத்திருப்பது குறித்தும், அமெரிக்கா தேர்தலில் ஒபாமாவை வெற்றி பெற செய்ததில், வலைப்பதிவர்களின் பங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். (அதற்கான சுட்டி இதோ!)

இந்த கட்டுரை நாமும் ஒரு பதிவர் என பெருமைப்பட்டுகொள்ளும்படி இருக்கிறது. இந்த கட்டுரையை படித்துவிட்டு எதிர்ப்பார்ப்புடன் வலைப்பூக்களின் உலகில் புதிதாக ஒருவர் நுழைந்து பார்த்தால்.. ஏமாற்றம் வருவது தவிர்க்க முடியாதது.

கட்டுரையில் குறிப்பிட்ட படி, இந்த கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்தி, ஆரோக்கியமான, சமூக அக்கறையுடன், பொறுப்புணர்வுடன் எழுதுகிற பல பதிவர்கள் பதிவுலகில் சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லொரும் திருவிழா கூட்டத்தில் காணாமல் போனவர்களாக, தேடி கண்டுபிடிக்க வேண்டியவர்களாக தான் இருக்கிறார்கள். மொக்கை, கும்மி, அரட்டை என பரந்துபட்ட வலையை குட்டிச்சுவராக தான் பலர் பயன்படுத்துகிறார்கள். இது கவலைக்குரிய விசயம்.

ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை குன்றக்குடி அடிகளார் நடுவராக பட்டிமன்றம். ஒரு பேராசிரியர் அவருடைய சுற்றில்...சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் பேசுவது போல... ஆறு அறுவை ஜோக், இரண்டு கருத்து என்கிற அளவில் பேசிவிட்டு அமர்ந்தார். குன்றக்குடியார் "இவர் நன்றாக பேசக்கூடியவர். இன்றைக்கு இப்படி பேசியது வருந்ததக்கது என்றார். அடுத்த சுற்றுக்கு வந்த அதே பேராசிரியர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அருமையான கருத்துக்களையும் முன்வைத்தார். அடிகளார் பாராட்டினார்.

இந்த நிகழ்வு போல... பல பதிவர்களுக்கு இலக்கிய அறிமுகம், எழுத்து திறன், சமூக பார்வை இருந்தாலும் வெட்டி அரட்டைகளில், தங்களது அருமையான நேரத்தை வீணடிக்கிறார்கள்.

இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கைகளின் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள் தொடங்கிவிட்டன. முன்பை விட சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில்... மோசமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பொழுது இப்படி சமூக அக்கறையற்று எழுதுவது...ரோம் எரிந்து கொண்டிருந்த பொழுது... நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தது போல தான்.

சமூகம் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறது. புரிந்து கொண்டு, பொறுப்புணர்ச்சியுடன் புதிய ஆண்டில், பயணத்தை துவங்குவோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

என்னா தலைவா! மொக்கை கும்மி தான் எங்க வாழ்க்கையை ஓட்டுது. பிழைப்பை கெடுக்கறீங்களே!

க.பாலாசி said...

//பல பதிவர்களுக்கு இலக்கிய அறிமுகம், எழுத்து திறன், சமூக பார்வை இருந்தாலும் வெட்டி அரட்டைகளில், தங்களது அருமையான நேரத்தை வீணடிக்கிறார்கள்.//

உண்மை.

Vidhoosh said...

பகிர்வுக்கு நன்றி.
நல்ல சிந்தனை.

-வித்யா

கோமதி அரசு said...

தமிழ் மணம் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

//சமூகம் நம்மிடம் நிறைய எதிர்ப்பர்க்கிறது. புரிந்து கொண்டு,
பொறுப்புணர்ச்சியுடன் புதிய ஆண்டில்,
பயணத்தை துவங்குவோம்.//

பயணம் இனிதாக இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்.