> குருத்து: January 2012

January 31, 2012

கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு! ‍ சிறு வெளியீடு!


மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு!

"மக்களின் உயிருக்கு உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு!"என கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் தொடர்போராட்டங்களை கடந்த 5 மாதங்களாக நடத்திவருகிறார்கள். பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் வந்திருந்து, போராட்டங்களுக்கு வலுசேர்க்கிறார்கள். வெற்றிகரமாக தமிழகம் தழுவிய போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது.

போராடுகிற மக்களுக்கு அணு உலை ஏற்படுத்தும் கொடிய நோய்கள், வாழ்வாதாரப் பிரச்சனைகள் தான் போய் சேர்ந்திருக்கிறது. அணு சக்தி, அணு உலை ஒப்பந்தங்கள் எல்லாம் அடிமை ஒப்பந்தங்கள் என்ற அரசியல் முக்கியத்துவத்தையும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பொழுது, இன்னும் போராட்டம் வலுப்படும்.

அரசும், காங்கிரசும், இந்துத்துவவெறியர்களும் இந்த போராட்டத்தை குலைப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து இந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வெற்றிபெற ஒன்றிணைவோம்!

அதற்கு இந்த சிறுவெளியீடு பயன்படும். படியுங்கள். பரப்புங்கள்.

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16

தமிழக உழைக்கும் மக்களே!

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான், ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப்போராடுவோம்!

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு லட்சம் கோடிக்கு அணு உலை வாங்க‌
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு.
இது தான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

'வளர்ச்சி ‍வேலைவாய்ப்பு வல்லரசு' என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுப்பட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாரளமயம், உலகமயம் ‍
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம் விவசாயிகள் விடுதலை முன்னணி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி
நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

கூடங்குளம் ‍- அணுஉலை போராட்டக்குழுவினர் மீது தாக்குதல்!


இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து நடுவண் குழுவுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகளுடன் இடிந்தகரையைச் சேர்ந்த 50-க்கு மேற்பட பெண்களும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர். அப்பொழுது அங்கிருந்த இந்து முன்னணி காலிகள் மற்றும் காங்கிரசு காலிகள் தாக்குதல் நடத்தினர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாக்குதலை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். தாக்குதலை கண்டித்து, கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மக்கள் போராட்டங்களை துவங்கியுள்ளனர். வியாபாரிகள் கடை அடைத்துள்ளார்கள். மீனவர்களும் போராடத்துவங்கியுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு" என மக்கள் தொடர்ந்து ஐந்து மாதத்திற்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய ஆதரவை தரவேண்டியது நமது கடமை.

ஆகையால், தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள அனைவரும் கண்டனங்களை பதிவு செய்வோம்!

January 27, 2012

அமெரிக்கா - இணையத்தை முடக்க நினைக்கிறதா?


இந்த மாதம் அமெரிக்க பாராளுமன்றத்தில் இணையம் தொடர்பாக இரு மசோதாக்கள் விவாதிக்கப்பட இருந்தன. ஒன்று சோபா (SOPA), அறிவுசார் சொத்துடைமை காப்புரிமைச் சட்டம், மற்றொன்று பிபா (PIPA) தகவல் திருட்டை தடுக்கும் சட்டம்.

முகநூல், கூகுள், டிவிட்டர் என பிரபல சமூக வலைத்தளங்கள் எல்லாம் தங்கள் வலைத்தளங்களை ஒருநாள் கதவடைப்பு செய்து, மக்கள் ஆதரவுடன் போராடினார்கள். இப்பொழுது அந்த மசோதாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் துவக்கம் தான். கட்டற்ற சுதந்திர இணையத்தை முழுவதையும் முடக்குவது தான் அமெரிக்காவின் உள்நோக்கம் என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் சட்டத்தின் சாரமான 'காப்புரிமை'யே பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவானது. மக்கள் விரோதமானது. உதாரணமாக, இரத்த புற்று நோயை கட்டுப்படுத்த, தினமும் உட்கொள்ளும் மாத்திரைகள் 4. இந்திய நிறுவனங்களின் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 90. ஒரு நாளைக்கு ரூ. 360/-. மாதம் ரூ. 11,000 ஸ்வீடன் நிறுவனமான நோவார்ட்டிஸ் நிறுவனம் இந்த மருந்திற்கான காப்புரிமை வாங்க முயன்று கொண்டிருக்கிறது. அதன் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 1000. ஒரு நாளைக்கு ரூ. 4000. ஒரு மாதத்திற்கு ஒன்னேகால் லட்சம். இந்தியாவில் ஆண்டுதோறும் ரத்தப்புற்றுநோய்கள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 24000 பேர். காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுவிட்டால், மக்கள் செத்துமடியவேண்டியது தான்.

இதே காப்புரிமையை இணையத்தில் பொருத்தினால், ஒரு திரைப்படத்தின் பாடல்களின் விலை மட்டும் ரூ. 100. டிவிடியிலோ ஒரு புதுபடத்தை ரூ.400 லிருந்து ரூ. 500. என விலை வைக்கிறார்கள். திரையரங்கில் படம் பார்த்தோமென்றால், நுழைவுச்சீட்டின் விலையே நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ. 500 ஆகிவிடுகிறது. மற்ற இதர செலவுகளை கணக்கிட்டால் ரூ. 700-ஐ நெருங்கிவிடும். நடுத்தர வர்க்கமே 4 மாதத்திற்கு ஒரு படம் தான் பார்க்கமுடியும். காப்புரிமை இல்லாதபொழுதே நிறுவனங்களும், பிரபலங்களும் கோடிகளில் கொழிக்கிறார்கள். கருப்புபணத்தில் திளைக்கிறார்கள்.

மற்றொரு கோணத்தில் இந்த விசயத்தை பார்த்தால், சமகாலத்தில் செய்திகளை வழங்கும் ஊடகங்களில் பெரும்பான்மையானவை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துகொண்டவை. எழுச்சியோடு ஆயிரக்கணக்கில், லட்சகணக்கில் போராடும் மக்கள் போராட்டங்களை மறைக்கிறார்கள். திரிக்கிறார்கள். இந்த இடத்தை இணையம் இட்டுநிரப்புகிறது. இப்படித்தான், கடந்த ஆண்டில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என பல்வேறு நாடுகளில் மக்கள் நிலவுகிற பிற்போக்கு, ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக எழுச்சியோடு போராடினார்கள். இந்த போராட்டத்தின் வெற்றியை ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது தனிக்கதை. இந்த போராட்டங்களில் எல்லாம் இந்த சமூக தளங்கள் மக்களிடையே தகவல் தொடர்பில் நிறைய பங்காற்றின.

இந்த சமூக தளங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்போ, முற்போக்கு கருத்தோ எல்லாம் பொங்கிவரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மாறாக, இணையத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாக, பொதுவுடமைக்கு எதிராக கட்டுரைகள் தான் மலிந்துகிடக்கின்றன. திரைப்படம், பொழுதுபோக்கு அம்சங்கள் தான் நிறைய தேடப்படுகின்றன. பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. படிக்கப்படுகின்றன. 2008ல் கூகிளில் மூன்று கோடிபேர் தேடிப்பார்த்த நடிகை நம்மூர் நமீதா. அதற்காக நமீதா நன்றியெல்லாம் தெரிவித்தார்.ஆக, சமூகத்தில் எத்தனை சதவிகிதம் முற்போக்கு கருத்துக்கள் இருக்கிறதோ, அவ்வளவு தான் இணையத்திலும் இருக்கின்றன.

சமூக மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிற முற்போக்கு தளங்களை, புரட்சிகர அமைப்புகளின் தளங்களை முடக்குவது தான் இவர்களின் நோக்கம். உதாரணமாக, தமிழில் வெளிவரும் வினவு தளத்தில், மதங்களின் பிற்போக்குத் தன்மைகளை விமர்சித்து கட்டுரைகள் எழுதினால், அடிப்படைவாதிகள் உடனே வினவு தளத்தை முடக்கவேண்டும் என கோபமாக கருத்துசொல்கிறார்கள்.

January 25, 2012

முல்லை பெரியாறு - சிறு வெளியீடு!


அணையை மீட்க எல்லையை மூடு!
பொருளாதார தடை போடு!

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16



தமிழக உழைக்கும் மக்களே!


* முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்,
5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும்
அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!

* கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்!
பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்!

* அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற
மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்!

* கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு
அடையாள ஆதரவு - என்று இரட்டை வேஊட்ம்
தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் தேசியக்கட்சிகளான
காங்., பா.ஜ.க, சிபிஎம், சிபிஐ கட்சிகளை விரட்டியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனங்களுக்குத் துணைபோகும்
மத்திய அரசின் அலுவலங்களை இழுத்துப்பூட்டுவோம்!

* தமிழக எம்பிக்களை ராஜினாமா செய்யக்கோரி முற்றுகையிடுவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்


வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

January 24, 2012

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை மசோதா : முழு மோசடி


இந்தியாவில் ஏற்கெனவே இயங்கிவரும் மற்றும் புதிதாக நிறுவப்படும் அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மையைக் கண்காணிக்கவும் உறுதி செய்யவும் புதிய சட்டத்தையும், அச்சட்டத்தின் கீழ் செயல்படத்தக்க புதிய ஆணையம் ஒன்றையும் உருவாக்கும் நோக்கத்தோடு அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதாவைத் தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைத்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.

இதுநாள்வரை இந்தியாவிலுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மையைக் கண்காணித்துவந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தைவிட, புதிதாக உருவாக்கப்படும் ஆணையம் எந்தவொரு அமைச்சகத்துக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகச் செயல்படும் என்றும்; அணுஉலைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவும், கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும்; அணு உலைகள் எந்த அளவிற்கு கதிர்வீச்சை வெளியிடலாம் எனத் தீர்மானிக்கவும்; அணு உலைகளை ஆய்வு செய்யவும், அணு உலைகளை இயக்கும் நிர்வாகத்திற்கு வழிகாட்டவும் உள்ளிட்டு இவ்வாணையத்திற்குப் பலவிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மைய அரசு தெரிவித்திருக்கிறது.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து அணு உலைகளைப் பற்றிய அச்சத்தை மக்கள் மத்தியில் மிகத் தீவிரமாக ஏற்படுத்தியிருப்பதால், அவர்களின் அச்சத்தைப் போக்கும்விதமாக அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணிக்க சுதந்திரமான ஆணையம் உருவாக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழியைச் செயல்படுத்தும்விதத்தில்தான் இந்தப் புதிய சட்டமும், ஆணையமும் உருவாக்கப்படுவதாக காங்கிரசு கூட்டணி அரசு தெரிவித்திருக்கிறது.

அணு மின்சாரத்திற்கு மாற்று வேறு எதுவும் கிடையாது என ஆளும் கும்பலும் அதிகார வர்க்கமும் அடித்துப் பேசி வரும் நிலையில்; அமெரிக்கா மற்றும் பிரான்சிலிருந்து அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்; ஜெய்தாபூர், கூடங்குளம், கல்பாக்கம், கைகா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் பரவிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை மசோதா மற்றும் அதன்கீழ் உருவாக்கப்படவுள்ள ஆணையத்தின் சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திரம், நடுநிலை, ஒளிவுமறைவற்ற தன்மை பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகிவிடுகிறது.

இம்மசோதாவின்படி அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அணு பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இக்கவுன்சிலின் தலைவராக பிரதமரும், 5 அல்லது 6 மைய அமைச்சர்கள் அக்கவுன்சிலின் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த கவுன்சில் அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு தேடுதல் கமிட்டியை அமைக்கும்; அக்கமிட்டி அலசி ஆராய்ந்து ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி வாய்ந்த நிபுணர்களை கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கும். அப்பரிந்துரையின்படி கவுன்சில் ஆணையத்தை நியமிக்கும். இப்படிச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொன்னால், அணு பாதுகாப்பு கவுன்சிலுக்கு, அதாவது பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் நெருக்கமானவர்கள், அணுசக்தி தொடர்பான மைய அரசின் விருப்பங்களுக்குத் தலையாட்டுபவர்கள் மட்டும்தான் இந்த ஆணையத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் வரமுடியும்.

இவ்வாணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, ஆணையத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் கவுன்சிலுக்கு உண்டு. இக்கவுன்சில் தரும் வழிகாட்டுதல்களுக்கும் உத்தரவுகளுக்கும் ஆணையம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என இம்மசோதாவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது அணு உலைகளின் பாதுகாப்பைக் கண்காணித்துவரும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அணுசக்தி அமைச்சகத்துக்கும் அணுசக்தி கமிஷனுக்கும் கட்டுப்பட்டது என்றால், புதிதாக அமையவுள்ள ஆணையம் பிரதமரின் தலைமையில் அமைக்கப்படும் கவுன்சிலுக்குக் கட்டுப்பட்டது. இதிலெங்கே சுதந்திரமும், ஒளிவுமறைவற்ற தன்மையும் உள்ளது? இவ்வாணையம் புதிய மொந்தை பழைய கள்ளு என்பது தவிர வேறெதுவும் இல்லை என்பதை இம்மசோதாவின் பல்வேறு விதிகளும் எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வாணையத்தின் செயல்பாடுகள் இந்திய அரசின் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காதவாறு இருக்க வேண்டும் என இம்மசோதாவின் 20ஆவது பிரிவு குறிப்பிடுகிறது. அணு சக்தித் துறையைப் பொருத்தவரை இந்தியாவின் சர்வதேசக் கடப்பாடு என்பது அமெரிக்காவின் அணு ஆற்றல் மேலாதிக்கத்திற்குத் தாளம் தட்டுவது தவிர வேறெதுவும் கிடையாது. மேலும், அமெரிக்கா மற்றும் பிரான்சைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை வாங்குவதற்குப் போடப்பட்டுள்ள இறக்குமதி வர்த்தக ஒப்பந்தங்கள், இது தொடர்பாக மைய அரசு அளிக்கும் வாக்குறுதிகளைக்கூட இந்த விதியின்படி இந்தியாவின் சர்வதேச கடப்பாடுகளாகி விடுகின்றன.

இதனால் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள சர்ச்சைக்குரிய ஆறு அணு உலைகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பழைய தொழில்நுட்பத்தில் அமைந்த 10,000 மெகாவாட் திறனுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத் திறன் குறித்து ஆணையம் கேள்வி கேட்க முடியாது என அம்பலப்படுத்தியிருக்கிறார், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன். அதாவது, இவ்விதியின்படி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகபோக நிறுவனங்கள் இந்தியாவிற்கு விற்கவுள்ள அணு உலைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ரப்பர் ஸ்டாம்பாக இந்த ஆணையம் செயல்படும் என்பதுதான்.

அணுசக்தி தொடர்பாகப் போடப்பட்டுள்ள 123 ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கான வியாபார ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெறாமாலேயே கள்ளத்தனமாகப் போட்டுக் கொண்டு வந்த மன்மோகன் சிங் கும்பல், ஆணைய உறுப்பினர்கள் கடிதம் எழுதுவதற்குக்கூட சுதந்திரம் வழங்கவில்லை. இம்மசோதாவின் பிரிவு 20 (ஞு)இல் அணு உலைகளின் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கு இந்த ஆணையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அந்நிய நாட்டு நிபுணர்களுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்றால், அதற்குக்கூட அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘‘இந்த ஒழுங்குமுறை ஆணையம் நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு, பாதுகாப்புக்கு, அந்நிய நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவுக்கு, பொது ஒழுங்கிற்கு, நன்னடத்தைக்கு, நன்னெறிகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது” என இம்மசோதாவின் 21ஆவது பிரிவு வரையறுக்கிறது. அணு உலைகள் நாட்டு மக்களின் உடல் நலத்திற்கும், நாட்டின் சுற்றுப்புறச் சூழலிற்கும் கேடு விளைவிக்காதபடி இயங்குவதைக் கண்காணிக்க உருவாக்கப்படும் ஆணையத்திற்கு இத்துணை நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியமென்ன? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல அணு உலைகளின் பாதுகாப்புக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியமென்ன?

அணுக்கதிர் வீச்சின் அபாயங்களை முன்னிறுத்தி அணு உலைகளை எதிர்ப்பதை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதாகவும் நாட்டின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகவும் ஆளும் கும்பல் முத்திரை குத்துகிறது. இந்த அடிப்படையில்தான் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மீனவர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, ஒழுங்குமுறை ஆணையம் நாட்டின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்ற நிபந்தனையின் பொருள் ஆணையம் சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகளையோ, மக்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளையோ காட்டி அணு உலைகள் இயங்குவதற்குத் தடை விதிக்க முடியாது என்பதுதான்.

ஆணையம் பொதுநலனுக்கு எதிராகச் செயல்படுவதாக மைய அரசு கருதினால், ஆணையத்தின் தலைவரையும் பிற உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்வதோடு, ஆணையத்தையே கலைத்துவிடுவதற்கும்; குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் பொறுப்புகளை மைய அரசு தானே எடுத்துக் கொள்ளுவதற்கும் ஏற்ப இம்மசோதாவில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆணையத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தப்பித்தவறிக்கூட அரசின் அணுக் கொள்கைகளுக்கு எதிராக நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் இப்படிபட்ட எதேச்சதிகார விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, கலைக்கும் அதிகாரத்தை மைய அரசு தனது கையில் வைத்துக் கொண்டு, சுதந்திரமாகச் செயல்படும்படி ஆணையத்தை உருவாக்கப் போவதாகத் தம்பட் டம் அடிப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனம் தவிர வேறில்லை.

அணு உலைகள் அனைத்துமே நாட்டின் வளர்ச்சிக்காகவும் பொது நலனுக்காகவும்தான் செயல்படுத்தப்படுவதாகவும், அவற்றை எதிர்த்துப் போராடுபவர்கள் பொது நலனுக்கு எதிரானவர்களாகவும் ஆளுங்கும்பலால் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் பொது நலன் என்ற போர்வையில் அபாயம் நிறைந்த அணு உலைகளைத்தான் மைய அரசு பாதுகாக்கத் துடிக்கிறது என்பது விளங்கும்.

சிவில் அணு உலைகளைப் பெயரளவில் கண்காணிக்கும் அதிகாரம் கொண்டுள்ள இந்த ஆணையம், இராணுவ நோக்கங்களுக்காகச் செயல்பட்டு வரும் அணு உலைகள் இருக்கும் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க முடியாது; சிவில் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த அம்சங்களில்கூட, அவ்வணு உலைகள் தொடர்பான அனைத்து விசயங்களையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் இம்மசோதாவில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், அணு மின் நிலைய வளாகத்துக்குள் நடக்கும் விபத்துக்களுள் இந்த ஆணையம் முக்கியமானவையாகக் கருதுவதை மட்டும் வெளியுலகுக்கு அறிவித்தால் போதும் என்றும் இம்மசோதா தெளிவுபடுத்தியிருக்கிறது. இது, அணு உலையில் இருந்து அவ்வப்போது வெளிப்படும் கதிர்வீச்சுக் கசிவால் ஏற்படும் சிறு சிறு விபத்துக்களையும், அதனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், அணு உலை இயங்கும் பகுதியில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுவதையும் குழிதோண்டிப் புதைக்கும் சதி தவிர வேறெதுவும் கிடையாது.

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!‘சுதந்திரமாக’ச் செயல்படவிருக்கும் இந்த ஆணையம், அரசாங்கம் அமைக்கும் விசாரணை கமிசன்களைப் போல, அரசின் ஊதுகுழலாகத்தான் செயல்படும். கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினையையொட்டி அமைக்கப்பட்டுள்ள முத்துநாயகம் கமிட்டியின் செயல்பாடுகளுக்கும் இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு எதுவும் இருக்கப் போவது கிடையாது என இப்பொழுதே நாம் அடித்துச் சொல்லிவிடலாம்.

இதுவொருபுறமிருக்க, நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள அணு விபத்து காப்பீடு சட்டத்தில், “அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில் அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடமிருந்து அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம் குறைந்தபட்ச இழப்பீடு கேட்பதற்கு” ஏற்ப விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த விதிகளை அச்சட்டத்தில் மன்மோகன்சிங் தானே முன்வந்து சேர்க்கவில்லை. போபால் படுகொலை தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த கோபமும், வெறுப்பும் இப்படிபட்ட விதியை அச்சட்டத்தில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தை மன்மோகன் சிங்கிற்கு ஏற்படுத்தியது.

இந்த விதியை அச்சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா கொடுத்த நெருக்குதலையடுத்து, இந்த விதியை நீர்த்துப் போகச் செய்துவிடும் திருத்தங்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகத் தற்பொழுது முன்வைத்துள்ளது, மன்மோகன் சிங் கும்பல். மன்மோகன் சிங் இந்தத் திருத்தத்தை அறிவித்துவிட்டுதான், ஒபாமாவைச் சந்திக்க கடந்த மாதம் விமானம் ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணு விபத்துக்களால் பாதிக்கப்படும் மக்கள் அணு உலைகளைத் தயாரித்து விற்ற நிறுவனத்திடமிருந்து நேரடியாக நட்ட ஈடு கோருவதற்கு வழிவகை செய்யும் பிரிவையும் இந்தச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. மன்மோகன் ஒபாமாவைச் சந்தித்தபொழுது, அமெரிக்கா கோருவதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அவரிடம் வாக்குறுதி அளித்துவிட்டுத் திரும்பியதோடு, இந்த மாதத்திற்குள் அணு விபத்து காப்பீடு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிடுவேன் எனச் சபதமும் போட்டுள்ளார்.

அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த தகவல்களையும் உண்மைகளையும் மூடிமறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மசோதாவை அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா என அழைக்கிறார்கள். அணு விபத்து காப்பீடு சட்டத்தில் இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் ஏகபோக நிறுவனங்களிடமிருந்து விபத்துக்கான நட்ட ஈடு பெறுவதைத் தடுக்கும் சட்டத்திற்கு அணு விபத்து காப்பீடு சட்டம் எனப் பெயரிடுகிறார்கள். இது, அருவெறுக்கத்தக்க பித்தலாட்டத்தனமும் கிரிமினல்தனமும் கொண்டதுதான் மன்மோகன் சிங் கும்பல் என எடுத்துக் காட்டுகிறது.

____________________________________________________

- புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012

January 21, 2012

நண்பன் - ஒரு காட்சி பற்றிய விமர்சனம்!


நண்பன் படம் பற்றி பலரும் விமர்சனம் எழுதி வருகிறார்கள். பல விமர்சனங்கள் மேலோட்டமாக இருக்கின்றன. படத்தில் விவாதிக்க கூடிய கருத்துக்கள் நிறைய இருக்கின்றன. யாராவது விரிவாக எழுதினால் ஒரு புரிதலுக்கு வரலாம். அந்த படத்தில் ஒரு காட்சியை குறித்து பேசலாம் என இந்த பதிவு.

படத்தில் ஜீவாவின் குடும்பத்தை சில நிமிடங்கள் காண்பிக்கிறார்கள். படுத்த படுக்கையாகி கிடக்கும் அப்பா; புலம்பி தீர்க்கும் அம்மா; இருபத்தேழு வயதாகியும் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அக்கா. ஜீவாவின் அம்மா சுத்தம் இல்லாமல் சப்பாத்தி செய்து கொடுக்கிறார்கள். ஜீவாவின் இரு நண்பர்களான விஜய்க்கும், ஸ்ரீகாந்துக்கும் அசுத்தம் கண்டு குமுட்டல் எடுக்கிறது. வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்து, 80களில் உள்ள ஏழைக்குடும்பம் போல உன் குடும்பம் என ஜீவாவை நக்கலடிக்கிறார்கள். இந்த காட்சிகள் முழுவதும் கருப்பு-வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த காட்சியில் அரங்கிலும் சிரிப்பலை எழுகிறது.

இந்தக் காட்சி கோடிக்கணக்கான ஏழை உழைப்பாளி குடும்பங்களை இழிவுப்படுத்துகிறது. மேட்டுக்குடி திமிரை வெளிப்படுத்துகிறது. 3 இடியட்ஸில் பார்த்த பொழுதே கோபம் வந்தது. அதே காட்சியை தமிழிலும் கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். ஆக அந்த கருத்தை இவர்களும் மறுப்பின்றி ஏற்கிறார்கள்.

காலம் காலமாக வறுமையும், வாழ்க்கை சிக்கலும் உழைப்பாளிகளுக்கு விதிக்கப்பட்டதா என்ன? வறுமையை விரும்பி ஏற்று கொண்டிருக்கிறார்களா என்ன? நடுத்தர வர்க்கத்துக்கும், மற்ற வர்க்கங்களுக்குமான சிக்கல்கள் மட்டும் 80களில் இருந்தது இப்பொழுது இல்லையா என்ன?

27 வயதான அக்கா திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பது போல காண்பிப்பது! இதுவும் அபத்தம். ஏழைக்குடும்பங்களில் வயது வந்த யாரும் வீட்டில் அடைப்பட்டு கிடக்க வாழ்க்கை நிலைமைகள் அனுமதிப்பதில்லை. ஏதாவது ஏற்றுமதி நிறுவனத்திலோ அல்லது ஜவுளிக்கடைகளிலோ இயல்பாக வேலைக்கு சென்றுகொண்டுதான் இருப்பார்கள்.

இன்னுமொரு கற்பனை . வரதட்சணையாக 50 பவுன் கேட்கிறார்கள். உடைமை வைத்திருக்கும் மற்ற வர்க்கங்களுக்கு தான் இந்த பிரச்சனை எல்லாம். ஏழைகள் வீட்டில் இருந்தால் தானே கேட்பதற்கு! இருந்தால் தானே கொடுப்பதற்கு! அல்லது நம்பி யாராவது கடன் கொடுத்தால் தானே சீர் செய்வதற்கு! எதற்கும் வழியில்லை. தோடு, மூக்கத்தி போடு! 3 பவுன் நகை போடு! என்பதாக தான் வரதட்சணையின் அளவு இருக்கும். மண்டபத்தில் கூட அல்ல! கோயிலில் எளிமையாக திருமணத்தை முடித்துவிடுவார்கள்.

அடுத்து சுத்தம் சம்பந்தப்பட்டது. ஏழைகள் பெரும்பாலும் உடலுழைப்பில் ஈடுபடுபவர்களாக தான் இருக்கிறார்கள். களத்து மேடுகளில் வேலை செய்யும் விவசாயியோ, கொத்தனாரோ, பெயிண்டரோ, ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளியோ, பெரும்பாலும் காலை, மாலை என இரண்டு நேரம் குளிப்பார்கள். குளிக்காவிட்டால் அவர்கள் நிம்மதியாய் தூங்கமுடியாது.

பெரும்பாலும் உடல் உழைப்பில் ஈடுபடுவதால், உடல் நன்றாக இருந்தால் தான் வேலைக்கு செல்லமுடியும். ஒருநாள் படுத்தால் கூட வாழ்க்கை தேவைகள் கழுத்தை பிடிக்கும். அப்படியே நோய்வாய்ப்பட்டால் மருத்துவ செலவுக்கு செய்ய பணம் எங்கே இருக்கிறது? ஆகையால், சுத்தமாக இருப்பது அவர்களுடைய அக விருப்பம் சார்ந்தது அல்ல! வாழ்க்கை வாழ முன்நிபந்தனையாகிறது.

இதற்கு வரலாற்றிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு சொன்னால் விளங்கும். அதுவும் காந்தியை வைத்து சொன்னால் நன்றாக புரியும்.

குஜராத்தில் பிளேக் நோய் பரவி, பல மனித உயிர்களை பலிவாங்கி கொண்டிருந்த காலம். குப்பையும், கூளமும் அதிகமாகி, சுத்தமில்லாதது தான் காரணம் என காந்தி அறிகிறார். களத்தில் இறங்கி, பல வீடுகளுக்கும் நேரடியாக ரெய்டு போகலாம் என முடிவெடுக்கிறார். 3 இடியட்ஸ் இயக்குநர் போலவே காந்தியும் சிந்திக்கிறார். எப்படி? ஏழைகள் தான் சுத்தமில்லாதவர்களாக இருப்பார்கள் என! அதனால் முதலில் சேரிப்பகுதியில் வீடு வீடாக போகிறார். வீடு, கழிப்பறை என எல்லாம் படுசுத்தமாக இருக்கின்றன. அடுத்து, மற்ற வர்க்கங்கள் வீட்டுக்கு போகிறார். வீடு, கழிவறை எல்லாம் அசுத்தமாக இருக்கிறது. காந்தி நொந்து போகிறார்.

****

January 20, 2012

திருநெல்வேலியில் அணு உலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!



பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடு!

ஆர்ப்பாட்டம்

நாள் : 21/01/2012 சனிக்கிழமை

நேரம் : காலை 10 முதல் 1 மணி வரை

இடம் : ஜவஹர் திடல், பாளை தினசரி சந்தை,
திருநெல்வேலி

மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் பல்வேறு கட்சியினரும் கலந்துகொள்கிறார்கள்.

ஒருங்கிணைப்பு :

மனித உரிமை பாதுகாப்பு மையம் ‍ தமிழ்நாடு

நன்றி : வினவு

January 18, 2012

அப்துல்கலாமும் கூடங்குளமும் ‍- பொய்யும், உண்மையும்!

முன்குறிப்பு : கூடங்குளம் அணு உலை சம்பந்தமாக அப்துல்கலாம் எழுப்பியுள்ள ஆதரவு கருத்துகளுக்களை, கட்டுரையாளர் எளிமையாக அம்பலப்படுத்துகிறார். அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.

****

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் கூடங்குளம் சென்ற அன்றையதினம் இந்து ஆங்கில நாளிதழ் அவருடைய மிகப்பெரும் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. Nuclear power is our gateway to a prosperous future என்ற அந்தக் கட்டுரை இந்தியாவுக்கு அணுசக்தி அவசியம் தேவை என தனது வாதங்களை மிக ஆணித்தனமாக எடுத்துரைத்தது. அக்னிச் சிறகுகளைப் படித்த அதே வேகத்தோடுதான் படித்தேன். இரண்டு முறை படித்தேன். கட்டுரையின் உள்ளடக்கத்தையும் அதன் நோக்கத்தையும் உடனே புரிந்துகொண்டேன். தக்க சமயத்தில் மத்திய அரசுக்கு கலாம் உதவியிருக்கிறார் என்பதை மறுநாள் கட்டுரைக்கு கிடைத்த வாசகர்கள் வரவேற்பைக் கொண்டு அறிந்துகொண்டேன். அணு உலை ஆதரவாளர்களுக்கு மிகப்பெரும் உதவியைக் கலாம் செய்திருக்கிறார். ஆனால் கலாமின் கட்டுரையை மறுத்து பேச ஏராளம் உள்ளது.

ஒவ்வொரு அணுவினுள்ளும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சக்தி உள்ளது. கரிம எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களின் சக்தியைவிட அணுவின்சக்தி பலலட்சம் மடங்கு அதிகம். ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு 50 சரக்குப்பெட்டிகளில் ஏற்றப்பட்டுள்ள 10000 டன் நிலக்கரி தரும் சக்தியை 500 கிலோ யுரேனியம் தாது தரும். இன்னமும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால், 62. 5 கிலோ தோரியத்திலிருந்து இந்த சக்தியை எடுத்துவிடலாம் என்ற பாலபாடத்திலிருந்து ஆரம்பிக்கும் டாக்டர் கலாம், இன்றைய நவீன யுகத்தின் பல தேவைகளுக்கு சக்தி எப்படி அவசியமானது என்பதை விவரிக்கிறார். வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக சக்தி அவசியம் எனக் குறிப்பிடும் கலாம், சராசரி அமெரிக்கன் சராசரி இந்தியனைவிட 15 மடங்கு அதிகமாக சக்தியை செலவிடுவதாக ஒரு புள்ளி விபரத்தையும் சுட்டிக்காட்டுகிறார். (அப்படி அதிக சக்தியைச் செலவழித்து, தினவெடுத்துப்போய் த‌ன்னை சோத‌னை என்ற‌ பெய‌ரில் அவம‌திக்கும் அமெரிக்க‌ தேச‌த்தை போனால் போக‌ட்டும் என‌ விட்டுவிட‌க்கூடிய‌ மாபெரும் ச‌க்தி க‌லாமுக்கு மட்டுமே உண்டு.)

இன்றைய நவீன உலகமய யுகத்தில் இந்தியாவின் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நம் கட்டுமானத் துறையையும், 75 கோடி மக்கள் வசிக்கிற 6 லட்சம் கிராமங்களையும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் மிகு சக்திகளாக மாற்றுவதே இந்தப் பத்தாண்டுகளின் குறிக்கோள் என கலாம் கூறுகிறார். அதற்கு அணுமின்சாரம் எப்படி உதவும் என அவர் கூறவில்லை. நாடு சுதந்திரமடைந்ததிலிருந்தே கிராமப்புறங்களும் அதன் வாழ்வும் நமது ஆட்சியாளர்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. நாட்டின் எல்லாப் பகுதிகளும், எல்லா மாநிலங்களும் சீரான வளர்ச்சியைப் பெறவைக்க மத்திய அரசிடம் திட்டங்கள் இல்லை. மஹாராஷ்டிரா மாநிலத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். உலகத் தரத்திலான கட்டுமானங்களும், வாழ்க்கையும் மும்பையில் குவிந்து கிடக்க, மாநிலத்தின் மற்றொரு பகுதியான விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலைகள் சில லட்சங்களைத் தொட்டுவிட்டன.

நாடு முழுவதும் நகர்ப்புறங்கள் வீக்கமடைந்து கிராமப்புறங்கள் சூம்பிப்போக விடப்படுகின்றன. கிராமப்புற மக்கள் விவசாயத்தைக் கைவிட்டு சாரை சாரையாக நகர்ப்புறங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் குடிபெயர ஆரம்பித்துவிட்டனர். நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கைகளை கலாம் படிக்காமல் இருந்திருக்கமாட்டார். ஆட்சியாளர்கள் கூறும் 9, 10 சத வளர்ச்சி என்பது மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில கோடி பேருக்கு மட்டுமே என்பதும், டாட்டா-அம்பானிகளின் வளர்ச்சி 100 சதவீதத்தைத் தாண்டும் என்பதும், கிராமப்புற ஏழை மக்களின் வளர்ச்சி மைனஸில்தான் என்பதையும் கலாம் நிச்சயம் அறிந்திருப்பார். இந்தியா உலகமயத்தின் பிடியில் சிக்கியபிறகு இத்தகைய வளர்ச்சிதான் சாத்தியமாகியிருக்கிறது என்பதை கலாம் நிச்சயம் உணர்ந்திருப்பார். உலகம் முழுவதும் நிதிமூலதனங்கள் பற்றியும், அதன் ஆன்லைன் சூதாட்டங்களையும் கலாம் அறிந்திருப்பார். கிராமப்பொருளாதாரத்தைச் சீரழித்துப் போட்டிருக்கிற உலகமயக் கொள்கைகளை நீக்கினால் மட்டும்தான் கிராமப்பொருளாதாரம் மேம்பாடடையும். கிராமப்புற மக்களை கிராமங்களிலிருந்து வெளியேற்றாத, அவர்களின் பொருளாதாரத்திற்கு நீடித்த வளர்ச்சியை அளிக்கக்கூடிய திட்டங்கள்தான் தேவை. அதற்கு மின்சாரம் தேவை என்பது நூறில் ஒரு கூறுதான். ஏனெனில் இதைச் செயல்படுத்த ஆட்சியாளர்களின் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவேண்டும். அதனால்தான் அணுமின்சாரத்தோடு கிராமப்புற வளர்ச்சியை கலாம் ஒப்பிடும்போது அவ்வளர்ச்சி(!) கிராமப்புறங்களை மேலும் மேலும் சின்னாபின்னமாக்கிவிடுமோ என அஞ்சவே தோன்றுகிறது.

கலாமின் புரா(PURA)திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு வழங்குதல் என்பது இதன் உள்ளடக்கம். நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து கிராமப்புறங்களில் சிறந்த தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை தொலைத்தொடர்பு நிறுவனமும்(தற்போது BSNL), கிராமப்புறங்களின் பட்டி தொட்டியெங்கும் மின்வசதிகளை மாநில மின்சாரவாரியங்களும் செய்துகொடுத்துள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகமய யுகத்தில் இந்நிறுவனங்கள் திவாலாகட்டுமாறு மத்திய, மாநில அரசுகளால் கைவிடப்படுகின்றன. கலாம் முதலில் இதைத் தடுத்து நிறுத்தவேன்டும்.

நம்முடைய பொருளாதாரத்தின் பலத்தைப்பற்றி கலாம் பேசுகிறார். 2008-ல் 1 ட்ரில்லியன் டாலர்(1 ட்ரில்லியன்=1000 பில்லியன், 1 பில்லியன்=100 கோடி)என்ற இலக்கத்தை நம் பொருளாதாரம் அடைந்துவிட்டது. சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கழிந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2016-க்குள்ளாக இது 2 ட்ரில்லியன் டாலர் என்ற அளவையும், 2025 வாக்கில் 4 ட்ரில்லியன் டாலர் என்ற அளவையும் இந்தியப்பொருளாதாரம் தொடும் எனவும் கலாம் கூறுகிறார். இத்தகைய மிகப்பெரும் வளர்ச்சியை எட்ட மிகப்பெரும் மின்சக்தி தேவை. தற்போதைய மின்தேவையான 1, 50, 000 மெகாவாட்டிலிருந்து, 2030 வாக்கில் 9, 50, 000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என கலாம் கூறுகிறார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்தப் பேச்சுவார்த்தைகளின்போதும், ஒப்பந்தத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கருத்துத் திரட்டல்களை எதிர்கொள்ளவும் எதிர்கால மின் உற்பத்தியில் அணுமின்சாரத்தின் பங்கு குறித்த மிகையான புள்ளி விபரங்களை அரசும், அதிகாரிகளும், அணுமின் விஞ்ஞானிகளும் இட்டுக்கட்டியதைப் பற்றி நாம் அறிவோம். ஹோமி ஜஹாங்கீர் பாபா அடியெடுத்து வைத்து பரப்பிய அணுமின்சக்தி பற்றிய புனைவுகள் இன்றைக்கு அப்துல்கலாம் வரைக்கும் முழுவீச்சுடன் நாடுமுழுவதும் செறிவாய் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவ‌ரை ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடி ரூபாய்க‌ளை முழுங்கியுள்ள‌ ந‌ம‌து அணுச‌க்தித்துறை இன்றுவ‌ரை 4385 மெகாவாட்டுக‌ளை

ம‌ட்டுமே மின் உற்ப‌த்தி செய்ய‌ முடிந்துள்ள‌து என்ப‌தை அறியும்போது, நாட்டின் மொத்த‌ மின் உற்ப‌த்தியில் இது வெறும் 2. 85 சத‌விகித‌ம் ம‌ட்டுமே என‌ உண‌ரும்போது, க‌லாம் எடுத்துரைத்த‌ இந்த‌ ட்ரில்லிய‌ன் டால‌ர் பொருளாதார‌ம் இன்றைக்கும் வ‌றுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள‌(ஒரு நாளைக்கு 32 ரூபாய் கூட‌ ச‌ம்பாதிக்க‌ முடியாத‌)ப‌ல‌ கோடி ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தாம‌ல் எதை நோக்கி திசை திருப்ப‌ப்ப‌டுகிற‌து என்ப‌தை என்ணி வேத‌னைப்ப‌டாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை.

40 வ‌ருட‌ப் ப‌ழ‌மையான‌ புகுஷிமா அணு உலை விப‌த்து, பொருளாதார‌த்தில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ மாற‌ நாம் காணும் க‌ன‌வைத் த‌ட‌ம்புர‌ள‌ அனும‌திக்க‌ வேண்டுமா? என‌ க‌லாம் கேட்கிறார். பொருளாதார‌த்தில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ மாறுவ‌து ம‌ட்டும்தான் கலாமின் ல‌ட்சிய‌மாக‌ இருக்கிற‌து. அப்போதுதான் அணுச‌க்தித்துறைக்கு ப‌ல்லாயிர‌ம் கோடிக‌ளையும், இந்திய‌ன் ச‌ந்திர‌னில் இற‌ங்குவ‌த‌ற்கு ப‌ல்லாயிர‌ம் கோடிக‌ளையும், அக்னி-9, 10, 11 என‌ தொட‌ர்ச்சியாக‌ உற்ப‌த்தி செய்ய‌ ப‌ல்லாயிர‌ம் கோடிக‌ளையும் நாம் செல‌விட‌முடியும்!அன்பில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌, அமைதியில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ இந்தியா அமைந்திட‌ அவர் விரும்ப‌வில்லை. அப்ப‌டி விரும்பியிருந்தால் 1998 அணுவெடிப்புச் சோத‌னையில் முன்ன‌ணி த‌ள‌ப‌தியாக‌ அவ‌ர் நின்றிருக்க‌மாட்டார். ந‌ம‌க்கும் பாகிஸ்தானுக்கும், ந‌ம‌க்கும் சீனாவுக்கும் ஆயுத‌ப்போட்டியை ப‌ல‌நூறு ம‌ட‌ங்கு பெருக்கிய‌ ப‌ல‌வித‌ ஏவுக‌ணைக‌ளை அவ‌ர் உருவாக்கியிருக்க‌மாட்டார். கலாம் உருவாக்க‌வில்லையென்றால் இந்தியா ஏவுக‌ணைக‌ளை உருவாக்கியிருக்காது அல்ல‌து வாங்கியிருக்காது என்று அர்த்த‌ம‌ல்ல‌. ஏவுக‌ணைக‌ளை, பேர‌ழிவு ஆயுத‌ங்க‌ளை, அணுவெடிப்புக‌ளை ஒரு ந‌ல்ல‌ செய்தியாக‌ குழ‌ந்தைக‌ள்வ‌ரை கொண்டுசென்ற‌துதான் அவர் புரிந்த‌ மிக‌ப்பெரும் த‌வ‌று.

'ஜெர்ம‌னி அணு உலைக‌ளை மூட‌ப்போவ‌தாக‌ அறிவித்துள்ள‌தை முன்வைத்து நாமும் அணுமின் உணு உலைக‌ள் வேண்டாம் என்று கூறுவ‌து த‌வ‌று. சில‌ அணுமின் உலைக‌ளை இழ‌ப்ப‌த‌னால் அத‌ன் மின் உற்ப‌த்தியில் எந்த‌ப் பாதிப்பும் ஏற்ப‌ட‌ப்போவ‌தில்லை. மேலும் யுரேனிய‌த்தின் வ‌ள‌ம் ஜெர்ம‌னியில் அருகிப்போய்விட்ட‌தால் த‌ன‌து எதிர்கால‌ அணுமின் உற்ப‌த்திக்கு வேற்று நாடுக‌ளைச் சார்ந்திருக்க‌ அது விரும்ப‌வில்லை'என‌ க‌லாம் கூறுகிறார். 2007‍ல் ஜப்பானில் காஷிவசகி அணுமின் உலை பூகம்பத்தால் சேதமடைந்து 317 கேலன் கதிரியக்கம் கலந்த தண்ணீர் கடலுக்கு திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்தும், அதே ஆண்டு ஜெர்மனியில் இரண்டு அணு உலைகளில் ஏற்பட்ட விபத்தையடுத்தும்தான் ஜெர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சர் நாட்டின் பழமையான அணு உலைகளை மூடிவிடவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். எனவே யுரேனிய வளம் தங்களிடம் இல்லை என்பதைக்காட்டிலும் அணு உலைகள் தவறானவை என்ற அவர்களது புரிதலே ஜெர்மனியின் முடிவுக்குக் காரணம். கலாம் கூறுவதுபோல யுரேனியம் தாதுப் பற்றாக்குறைதான் காரணம் என வைத்துக்கொள்ளுவோம். அப்ப‌டியானால் யுரேனிய‌த்தின் தேவைக்கு இந்தியா ம‌ட்டும் ஒவ்வொரு நாட்டிட‌மும் கையேந்தி நிற்க‌வேண்டுமா?இந்த‌க் கையேந்த‌ல் இறுதியில் அமெரிக்காவிட‌ம் ம‌ண்டியிடுவ‌தில் போய் முடியும் என்ப‌தை க‌லாம் அறிய‌வில்லையா?

வளர்ந்த நாடுகள் அணுமின்சாரத்தை மிகையாக உற்பத்தி செய்யவல்லவையாக இருப்பதை கலாம் புள்ளி விபரங்களோடு பட்டியலிடுகிறார். அணுமின்சாரத்தை அதிகம் உற்பத்தி செய்வதால்தான் அவை வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் கலாம், வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகள் வளர்ந்த நிலையை அடைய விரும்பவில்லை என்றும், அதனால்தான் அணுமின்சாரம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கு எதிரான‌ நிலையை அந்நாடுக‌ள் எடுக்கின்ற‌ன‌ என்றும் க‌லாம் கூறுகிறார். இந்தியா அணுமின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌தை எந்த‌ மேலைநாடும் எதிர்த்த‌து கிடையாது. சொல்ல‌ப்போனால் க‌லாம் ப‌ட்டிய‌லிட்டிருக்கிற‌ அமெரிக்கா, பிரான்ஸ், ஜ‌ப்பான், ர‌ஷ்யா, கென்யா, உக்ரைன், க‌ன‌டா, இங்கிலாந்து என‌ கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லா நாடுக‌ளுமே இந்தியா அணுமின்சார‌ம் உற்ப‌த்தி செய்ய‌ வேண்டும், அத‌ற்கு த‌ங்க‌ள் நாடுக‌ளின் அணு உலைக‌ள் அல்ல‌து யுரேனிய‌ம் விற்ப‌னை செய்ய‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தையே விரும்புகின்ற‌ன‌. இந்நாடுக‌ளுட‌ன் இந்தியா த‌னித்த‌னியே அணுச‌க்தி ஒப்ப‌ந்த‌த்தையும் செய்துகொண்டுள்ள‌து. எல்லா நாடுக‌ளிலும் அணுமின்ச‌க்திக்கு எதிரான‌ இய‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும்தான் தீவிர‌மாக‌ப் போராடிவ‌ருகின்றன. 'இந்தியாவின் தேவைக்கு என்ன‌ வேண்டுமோ அதை இந்திய‌ர்க‌ள்தான் தீர்மானிக்க‌வேண்டும்' என்ற‌ க‌லாமின் கூற்றைத்தான் பொன்னெழுத்துக்க‌ளால் பொறிக்க‌வேண்டும். நம் நாட்டிற்கு எது தேவை என்ப‌தை இந்திய‌ அதிகார‌வ‌ர்க்க‌ம் தீர்மானிக்க‌க்கூடாது. இந்திய‌மக்க‌ள்தான் தீர்மானிக்க‌வேண்டும். அத‌ன்ப‌டி மான்சான்டோவும், வால்மார்ட்டும், டவ் கெமிக்க‌லும் இந்தியாவில் நுழைய‌ அனும‌திக்க‌முடியாது. அணுமின் உலைக‌ள் ப‌ற்றிய‌ உண்மையான‌ விப‌ர‌ங்களை பொதும‌க்க‌ள் முன்பு வைக்கும்போது அணுமின் உலைக‌ளையும் இந்திய‌ம‌க்க‌ள் நிராக‌ரிப்பார்க‌ள் என்ப‌தில் ச‌ந்தேக‌மேயில்லை.

மிகத்தூய்மையான மின்சக்தி காற்றிலிருந்தும், சூரியனிலிருந்தும்தான் பெறப்படுகின்றன என ஒப்புக்கொள்ளும் கலாம், அதன் பேரளவு உற்பத்தி குறித்து சந்தேகம் தெரிவிக்கிறார். உலகெங்கிலும் 29 நாடுகளில் 441 அணுமின் உலைகள் தயாரிக்கும் 375000 மெகாவாட் மின்சாரம்தான் நம்பத்தகுந்த மூலம் என கலாம் தெரிவிக்கிறார். சூரிய மின்சக்தி, காற்றுமின் சக்தி குறித்த தொழில்நுட்ப ஆய்வுகளை பரந்த அளவுக்கு செயல்படுத்தி, அணுசக்தித் துறைக்கு செலவழிக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இத்துறைகளுக்கு செலவழித்தால், சூரிய, காற்று மின் உற்பத்தி பன்மடங்கு உயரும் என்பது கலாமுக்குத் தெரியாததல்ல.

அணுமின் உற்பத்தி குறித்த, அணு உலைகள் பற்றிய மக்களின் பயங்கள் குறித்து கலாம் கேலி பேசுகிறார் என்று கூட சொல்லலாம். பெரும்பாலான அணு உலை எதிர்ப்பு அமெரிக்கா ஜப்பானில் வீசிய அணுகுண்டுகளிலிருந்து கிளர்ந்தெழும்பிய காளான் மேகங்கள் பற்றிய புகைப்படங்களைப் பார்த்து எழுந்த பயம்தான் என்பது கலாமின் கூற்று. அனகொண்டாவைப் பார்த்து மட்டும் பயப்படுங்கள், நம்முர் நல்லபாம்புகளைக் கண்டு ஏன் பயம்? என்று கலாம் நேரடியாக சொல்லிவிட்டுப் போகலாம். கடந்த நூற்றாண்டின், ஏன் இதுவரை மனிதகுல வரலாற்றிலேயே மிகக்கொடுமையான கண்டுபிடிப்பாக அணுப்பிளப்பை சொல்லலாம். 375000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறதே என்று பார்க்காமல், பல லட்சக்கணக்கான ச‌மாதிகளை அணு உருவாக்கியுள்ளது. இன்னமும் உருவாக்கும் என்று ஒப்பிடும்போதுதான் மனிதகுலத்தின் வலி என்னவென்பதைப் புரிந்துகொள்ளமுடியும். "அணுகுண்டு என்றால் என்ன?அணு உலை என்றால் என்ன?இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்க‌ள்!அணுகுண்டு என்ப‌து மிக‌ப்பெரும் வெப்ப‌த்தை, க‌திர்வீச்சை வெளியிடும் ச‌க்தி கொண்ட‌ பொருள். அணு உலை என்ப‌து மித‌மான‌ வெப்ப‌த்தை வெளிப்ப‌டுத்தி, அத‌ன் ப‌ய‌னை மின்சார‌ம் த‌யாரிக்க‌ உத‌வும் அமைப்பு. அணுமின் உலைக‌ளில் ஏற்ப‌டும் விப‌த்து என்ப‌து சுற்றுவ‌ட்டார‌த்தில் சேத‌த்தை ஏற்ப‌டுத்த‌வ‌ல்ல‌து. அணுகுண்டை போன்று நேர‌டியான உயிர்ப்ப‌லிக‌ள் எதுவும் ஏற்ப‌டுவ‌தில்லை. செர்னோபிள் விப‌த்தையொட்டி புற்றுநோயால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் 4000 பேர். நேர‌டியாக‌ விப‌த்தில் இற‌ந்த‌வர்க‌ள் 57 பேர்". க‌லாமின் இந்த‌ போத‌னைக‌ளும், த‌வ‌றான‌ப் புள்ளிவிப‌ர‌ங்களும் அவ‌ர் மீது நாம் வைத்துள்ள‌ ந‌ம்பிக்கைக‌ளை அசைத்துப்பார்க்கிற‌து.

செர்னோபிள் விப‌த்தைய‌டுத்து ஏற்ப‌ட்ட‌ உயிர்ப்ப‌லிக‌ள் ப‌ற்றி அரசின் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பு என்ன‌ தெரியுமா?"அங்கு ப‌ணிபுரிந்த‌ 28 ப‌ணியாளர்க‌ள் மற்றும் 15 பொதும‌க்க‌ள் மொத்த‌ம் 43 பேர் ம‌ட்டுமே". ஆனால் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌?நியூயார்க் அறிவிய‌ல் க‌ழ‌க‌ம் 2009-ல் Chernobyl : consequences of the catastrophe for people and environment என்ற‌ 327 ப‌க்க‌ அறிக்கையை வெளியிட்ட‌து. அது என்ன‌ சொல்கிற‌து தெரியுமா? 'செர்னோபிள் விப‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ உக்ரைன் ம‌ற்றும் ர‌ஷ்ய‌ப் ப‌குதிக‌ளில் 1990 முத‌ல் 2004 வரை ந‌ட‌ந்துள்ள‌ இற‌ப்புக‌ளில் 4 ச‌த‌விகித‌ம் செர்னோபிள் விப‌த்தால் நேரிட்ட‌வை'. இப்புள்ளி விப‌ர‌த்தின் ப‌டி ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் செர்னோபிள் விப‌த்து ஏற்ப‌டுத்திய‌ கொடும் நோய்க‌ள் க‌ண்டு இற‌ந்திருக்கிறார்க‌ள்.

செர்னோபிளோடு ஒப்பிடும்போது புகுஷிமா ஒன்றுமே இல்லை என்ற‌ க‌லாமின் கூற்றும் பிர‌ச்சினையை திசை திருப்பும் ஒன்றாகும். ஹில்லாரி கிளின்ட‌னின் ஆலோச‌க‌ராக‌ விள‌ங்கும் அணு விஞ்ஞானி ராப‌ர்ட் ஆல்வாரேஸ் எழுதுகிறார்:"புகுஷிமா 4ம் அணு உலையில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ எரிபொருள் சேமிப்ப‌க்கிட‌ங்கு ஒன்றில் இருக்கும் சீசிய‌ம் 137-ன் அள‌வான‌து, இதுவ‌ரை பூமியின் வட‌ப‌குதியில் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ எல்லா வ‌ளிம‌ண்டல‌ அணு வெடிப்பு சோத‌னைக‌ளின்போது வெளிப்ப‌ட்ட‌ சீசிய‌ம்-137 அள‌வைவிட‌ அதிக‌ம். இந்த‌க் கிட‌ங்கில் ம‌ட்டும் வெடிப்பு ஏற்ப‌ட்டால், செர்னோபிளைப் போல‌ 3 முத‌ல் 9 ம‌ட‌ங்கு வ‌ரை க‌திரியக்க‌ப்பொருட்க‌ள் வெளிப்ப‌ட்டு சேத‌த்தை ஏற்ப‌டுத்தும்".

In Fukushima's Wake என்றக் கட்டுரையில் அலெக்ஸாண்டர் காக்பர்ன் பின்வருமாறு எழுதுகிறார்: "அமெரிக்கா மொத்தம் 104 அணு உலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் பலவும் ரொம்பவும் பழமையானவை. இவற்றுள் 24 அணு உலைகள் புகுஷிமாவைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டவை. வடக்கு கரோலினாவிலுள்ள ஸரோன் ஹாரிஸ் அணுமின் நிலையத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு வேறு இரண்டு அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கமோ, சுனாமியோ வேண்டாம். ஒரு அறிவார்ந்த பயங்கரவாதி இம்மின்நிலையத்தின் தடுப்புகளை ஊடுருவி உலையின் குளிர்விக்கும் கருவிகளை சேதப்படுத்தி விடுவதாக வைத்துக்கொள்வோம். அதன்பிறகு அங்கு ஏற்படும் ஒரு தீவிபத்தானது 140000 புற்று நோயாளிகளை உருவாக்கும். சுற்றளவில் பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை நாசமாக்கும்".

காலம் செல்ல செல்ல தொழில்நுட்பம் முன்னேற முன்னேற அணு உலை விபத்துகள் வராமல் தடுக்கும் மக்களின் சக்தியும் அதிகரிக்கும் என்று கலாம் கூறுகிறாரே தவிர, விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்கமுடியும் என்பதை கலாம் உறுதியாகச் சொல்லவில்லை. மனிதத் தவறுகளும், பயங்கரவாதச் செயல்களும் அணுமின் உலைகளை அணு குண்டுகளாக மாற்றும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.

அணு உலை விபத்துகளை ரயில் விபத்தோடும், விமான விபத்தோடும் ஒப்பிட்டுப்பேசுவது கலாமுக்கு வாடிக்கையாகிப் போய்விட்டது. முன்பு ஒருமுறை இவ்வாறு ஒப்பிட்டுப் பேசியது என் நினைவிலிருக்கிறது. தற்போது டைட்டானிக் கப்பலுக்கும், அப்பல்லோ ராக்கெட் முயற்சிகளுக்கும் கலாம் தாவுகிறார். ஒவ்வொருவருடமும் விமானவிபத்தில் 15000 பேர் வ‌ரை உயிரிழக்கும் போதும், 1912-ல் டைட்டானிக் கப்பல் விபத்தில் 1500 பேர் வரை உயிரிழந்தபோதும், அப்பல்லோ விண்வெளிப்பயணம் 10 முறை தோல்வியடைந்தபோதும் மனிதன் சோர்ந்திருந்தால், பின்வாங்கியிருந்தால் இன்று கண்டம் விட்டு கண்டம் விமானத்திலும், கப்பலிலும் பயணம் செய்யமுடியுமா?அல்லது நிலாவில்தான் வைத்திடமுடியுமா?நியாயமான கேள்விதான். இன்னொரு கேள்வியையும் கலாம் கேட்டிருக்கலாம்:"ராமேசுவரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் தொடர்ச்சியாக அடிவாங்கிக்கொண்டு மீன்பிடிக்கச் செல்லவில்லையா?"

ஒரு அணு உலையில் ஏற்படுகின்ற விபத்துகளையும், நாட்டில் அன்றாடம் நடக்கும் விமான, ரயில் விபத்துகளையும் ஒப்பிடுவது அறமற்றது என்று சொல்வதைத்தவிர வேறு என்ன சொல்லமுடியும்?

2010-ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி அணு ஆயத வல்லமை பெற்றுள்ள உலகின் 9 நாடுகளில் மொத்தம் 22000 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதில் 8000 அணு ஆயுதங்கள் உடனடியான செயல்பாட்டிற்குத் தயாராக இருப்பதாகவும், அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்தினர் முதலில் இந்த அணுஆயுதங்களில் 90 சதவிகிதத்தை வைத்திருக்கும் அமெரிக்கா மற்றும் ரஷிய நாடுகளை எதிர்த்து இயக்கம் நடத்தவேண்டும் எனவும் கலாம் கூறுகிறார். அணுமின் நிலையங்களையே எதிர்ப்போர் அணு ஆயுதங்களையும் நிச்சயமாக எதிர்க்கத்தான் செய்வார்கள். அதில் கலாமுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம். அணுமின் நிலையங்கள் வேண்டாம் என்பதற்கான முக்கியமான காரணமே 22000 அணுஆயுதங்களின் எண்ணிக்கை மேற்கொண்டும் உயர்ந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தினால்தான். ஏனென்றால், உலகின் பல நாடுகளில் புதிது புதிதாக அணுமின்நிலையங்கள் நிறுவ முயற்சி செய்யப்படும் வேளையில், மேலும் பற்பல நாடுகள் அணுஆயுத வல்லமைக் கொண்ட நாடுகளாக மாறும் அபாயம் இருப்பதையும், அவை மிக எளிதாக தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடும் வாய்ப்புகள் இருப்பதையும் கலாம் வேண்டுமானால் மறுக்கலாம். யதார்த்தத்தை யாராலும் மறைக்கமுடியாது. அடுத்த சில ஆண்டுகளில் ஈரானும், சவூதி அரேபியாவும், சிரியாவும் அணுஆயுதம் பெற்ற நாடுகளாகிவிடும். சர்வதேச அணுசக்தி கமிஷனின் ஆய்வுப்படி அடுத்த 30, 40 வருடங்களில் ஏறத்தாழ 30 நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்தி செய்யும். அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு எளிதில் செல்லும். எல்லாவற்றிற்கும் மூல காரனம் அணுமின் உலைகள் என்பதை மீண்டும், மீன்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

ப‌ல‌ ஆயிர‌ம் ஆண்டுக‌ள் நீடித்து நிலைக்க‌க்கூடிய‌ அணுக்க‌ழிவுக‌ளை ந‌ம‌து எதிர்கால‌ ச‌ந்த‌திக‌ள் எப்ப‌டியாவ‌து எதிர்கொள்ள‌ட்டும், அதைப்ப‌ற்றி இன்று வாழும் நான் ஏன் க‌வ‌லைப்ப‌ட‌வேண்டும் என்ற‌ அணுமின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் ம‌ன‌நிலையை அவ‌ர்க‌ளின் சுய‌ந‌ல‌த்தின் வெளிப்பாடாக‌, அவர்க‌ளின் வ‌ல்லாதிக்க‌த்தின் புற‌வ‌டிவ‌மாக‌ நாம் பார்க்க‌லாம்.

இதுவ‌ரை அமெரிக்கா ச‌ம்பாதித்து வைத்துள்ள‌ அணுக்க‌ழிவுக‌ளில் பாதிய‌ள‌வு வாஷிங்ட‌ன் அருகே, ஹான்ஃபோர்டில் ம‌ட்டும் உள்ள‌து. இர‌ண்டாம் உல‌க‌ப்போர் காலம் தொட‌ங்கி இன்றுவ‌ரை(ப‌னிப்போர் ந‌டைபெற்ற‌ கால‌த்தில் ம‌ட்டும் உச்ச‌ம்) அது த‌யாரித்த‌, சோத‌னை செய்த‌ அணுஆயுத‌ங்க‌ளின் க‌ழிவுக‌ள்(யுரேனிய‌ம், புளுட்டோனிய‌ம் உட்ப‌ட‌) 200 கிட‌ங்குக‌ளில், 2 ல‌ட்ச‌ம் ட‌ன்க‌ள் அள‌வு இங்கு குவிந்துள்ள‌து. இவை அனைத்தும் உய‌ர் அபாய‌ம் கொண்ட‌ க‌திரிய‌க்க‌க் க‌ழிவுக‌ள். க‌ட‌ந்த‌ 60 வ‌ருட‌ங்க‌ளில் உருவான‌ இக்க‌ழிவுக‌ள் க‌ழிவுச் ச‌க‌தியாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மிக‌ உய‌ர் க‌திரிய‌க்க‌முள்ள‌ இந்த‌க் க‌ழிவுக‌ளை திட‌ப்பொருளாக்கி, பின்ன‌ர் க‌ண்ணாடி போன்ற‌ப் ப‌டிக‌ங்க‌ளாக‌ மாற்றி, பெரும் பெரும் க‌ண்ணாடிப்பெட்ட‌க‌ங்க‌ளினுள் வைத்து புதைக்க‌ப்ப‌ட‌வேண்டும். இவ்வாறு செய்வ‌த‌னால் உட‌ன‌டியாக‌ அது காற்றில் க‌ல‌ப்ப‌தில்லை. க‌ண்ணாடியின் வேதிப்பொருட்க‌ள் நியூட்ரானை உறிஞ்சும் த‌ன்மை கொண்டிருப்ப‌தால் அணுப்பிள‌ப்பு நிக‌ழவும் அத‌னுள் ந‌டைபெற‌ வாய்ப்பில்லை. ஆனால் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளுக்குப் பின்ன‌ர் என்ன‌ ந‌ட‌க்கும் என‌ க‌ற்ப‌னை செய்து பாருங்க‌ள்! அந்த‌க் க‌ண்ணாடிப்பெட்ட‌க‌ங்க‌ள் உடைந்து போக‌லாம். உள்ளே இருக்கும் திட‌க்க‌ழிவுக‌ள் துண்டு துண்டாக‌ச் சித‌றி ம‌ண்ணோடும், த‌ண்ணீரோடும் க‌ல‌க்க‌லாம். அல்ல‌து மேலும் தூள்தூளாகி வ‌ளிம‌ண்ட‌ல‌த்தில் க‌ல‌க்க‌லாம். ந‌ம‌து எதிர்கால‌ச் ச‌ந்த‌திக‌ளுக்கு நாம் விட்டுச்செல்லும் உல‌க‌ம் இத்த‌கைய‌துதானா?ஏற்க‌ன‌வே ஹான்போர்டின் அணுக்க‌ழிவு சேமிப்புக்கிட‌ங்குக‌ளிலிருந்து க‌சிவு ஏற்ப‌ட்டு கொல‌ம்பியா ஆறு மாசுப‌ட்டுக்கொண்டிருப்ப‌தையும் நாம் சுட்டிக்காட்ட‌வேண்டும். எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ இக்க‌ழிவுக‌ளைக் கையாண்டு, இறுதியில் புதைக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கும், அத‌ன்பின்ன‌ரும் அப்புதைவிட‌ங்க‌ளைப் பாதுகாக்க‌வும் ஆகும் செல‌வு என்ன‌?அதை யார் த‌ருவ‌து?ப‌லான‌ அமெரிக்காவுக்கே இத்த‌கைய‌ப் பிர‌ச்சினைக‌ள் என்றால் ந‌ம‌க்கு?!

கூட‌ங்குள‌ம் அணுமின் உலைக‌ளிலிருந்து வ‌ர‌ப்போகும் அணுக்க‌ழிவுக‌ளிலிருந்து க‌லாம் கூறுவ‌து போல‌ 75 ச‌த‌விகித‌த்தை ம‌றுசுழ‌ற்சி மூல‌ம் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டாலும் எஞ்சிய‌க் க‌ழிவுக‌ளை 40, 50 ஆண்டுக‌ள் க‌ழித்து என்ன‌ செய்ய‌ப்போகின்றோம் என்ப‌த‌ற்கு எந்த‌ ப‌திலும் இல்லை. 1000 மெகாவாட் அணுமின் உலையான‌து ஆண்டொன்றுக்கு 27 ட‌ன்க‌ள் மிக‌ உய‌ர் அபாய அணுக்க‌ழிவையும், 310 ட‌ன்க‌ள் உயர் அபாய‌ அணுக்க‌ழிவையும், 460 ட‌ன்க‌ள் குறை அபாய‌ அணுக்க‌ழிவையும் உருவாக்க‌வ‌ல்ல‌து. கூட‌ங்குள‌த்தில் த‌ற்போது 1000 மெகாவாட் திற‌னுடைய‌ இர‌ண்டு மின் உலைக‌ள் உள்ள‌து. மேலும் 1000 மெகாவாட் திற‌னுடைய‌ 4 அணு உலைக‌‌ள் நிறுவ‌ப்ப‌டும் என‌ அர‌சின் அதிகாரிக‌ளும், அமைச்ச‌ர்க‌ளும் அறிவிக்கின்ற‌ன‌ர். உருவாகும் க‌ழிவின் அள‌வை நீங்க‌ளே க‌ண‌க்கிட்டுக் கொள்ளுங்க‌ள்.

"நாம‌ல்ல‌, நாடுதான் முக்கிய‌ம்" என்ற‌ ஒரு அரிய‌க் க‌ருத்தை அறிய‌ முடியாத‌வர்க‌ளின் தாக்க‌மும் கூடங்குள‌ம் போராட்ட‌த்திற்கான‌ மிக‌ முக்கிய‌ கார‌ண‌மாக‌ க‌லாம் கூறுகிறார். சுத‌ந்திர‌ப் போராட்ட‌க்கால‌த்தில் காந்தியும், தில‌க‌ரும்கூட‌ தேச‌த்துரோகிகளாக‌ அன்றைய‌ அதிகார‌வ‌ர்க்க‌த்தால் குற்ற‌ம் சும‌த்த‌ப்ப‌ட்ட‌தை நோக்கும்போது, க‌லாம் கூறிய‌து ப‌ற்றி போராட்ட‌க்கார‌ர்க‌ள் பொருட்ப‌டுத்த‌வேண்டிய‌தில்லை. "வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது"என்றும் கலாம் கூறுகிறார். அரபு நாடுகளில் சமீபத்திய அமைதிப் புரட்சி வெறும் மக்கள் கூட்டங்களால்தான் சாத்தியமானது. முகமது கடாபி, ஹோஸ்னி முபாரக், ஸ்டாலின் போன்ற தனிமனிதர்களும்கூட வரலாறு(!)களைப் படைத்திருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுமின் உலைகள் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கிறது என்றக் கூற்றை குறிப்பிடும் கலாம், வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிறார். இதுவரை இந்தியாவில் கட்டப்பட்டுள்ள அணு உலைகளில் எவ்வளவு விதி மீறல்கள் உள்ளனவோ?!பூம்புகாரை கடல் கொண்டது பற்றிக் குறிப்பிடும் கலாம், கூடங்குளத்தில் பலமான நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார். ரிக்ட‌ர் அளவுகோலில் 6 வரை ஏற்படும் நிலநடுக்கத்தைத் தாங்கவல்ல சக்தி கூடங்குளம் அணு உலைகளுக்கு உண்டு என்கிறார். அப்படியானால் 6 க்கு மேல் பூகம்பம் வந்தால்? வராது என உறுதிபடத்தெரிவிக்கும் கலாமின் கூற்று ஒன்றும் வேத வாக்கல்ல! கதிரியக்கம் மரபணுக்களைப் பாதிக்காது என்கிறார். கதிரியக்கம் டி. என். ஏ. வைப் பாதிக்கும். ஆனால் அப்பாதிப்பை சரிசெய்யும் சக்தி செல்லுக்குள்ளேயே உண்டு என்கிறது அறிவியல். அதாவது டி. என். ஏ. வின் பாதிப்புகளை சரி செய்யும் சக்தியை செல் இழந்துவிடுமானால் கதிரியக்கப் பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அணுமின் உலைகளுக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் தேசப்பாதுகாப்புக்கு எதிரான கருத்துகள் என்று கலாம் முத்தாய்ப்பாக தனது கூரியப் பிரச்சாரத்தை முடிக்கிறார். இந்திய தேசத்தின் பாதுகாப்பை மேருமலை போன்று தனது பேனா முனையில் தூக்கிப்பிடித்திருக்கும் கலாமை எண்ணும்போது வியப்புதான் மேலிடுகிறது. கோபம் கொஞ்சம் கூட வரவேயில்லை.

--------------------------------

- செ.சண்முகசுந்தரம் ( c.shanmughasundaram@gmail.com)

நன்றி:அம்ருதா, ஜனவரி-2012

January 10, 2012

அணு மின்சாரத்தால் தமிழகம் இருளிலிருந்து மீளும்?


கூடங்குளத்திலுள்ள இரண்டு அணு உலைகளை இயக்க ஆரம்பித்தால், தமிழகம் இருளிலிருந்து மீண்டுவிடுமென அணு உலைஅதிகாரிகள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

இதை கொஞ்சம் பார்க்கலாம்.

இரண்டு அணு உலைகளை இயக்க ஆரம்பித்தால், கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 2000 மெகாவாட் தான்.

சொல்வது 100% என்றால், எப்பொழுதும் அணு உலையில் கிடைப்பது 60% தான். அப்ப 1080 மெகாவாட்.

அணு உலை இருக்கும் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கப்படுவது 30% தான். தொடர் போராட்டத்தினால், பெருந்தன்மையுடன் 50% தருவதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்ப 540 மெகாவாட்.

இதில், மின்சாரத்தை கடத்துவதில் இழப்பு 25%.அதையும் கழித்தால் 405 மெகாவாட். இறுதியில், பயன்படுத்துவோருக்கு கிடைக்கும் வரை இழப்பு 20% ஆக தமிழகத்திற்கு கிடைப்பது 305 மெகாவாட் தான்.

தமிழகத்தின் பற்றாக்குறையோ 2500 லிருந்து 4000 மெகாவாட் என அரசு தரப்பு அறிக்கை சொல்கிறது. பிறகெப்படி, இருளிலிருந்து மீள்வது?

விரிவாக கட்டுரையை படிக்க : பூவுலகின் நண்பர்கள்

January 8, 2012

கூடங்குளம் -விழித்தெழும் உண்மைகள்! - புத்தகம்


கட்டுரை : அ. முத்துக்கிருஷ்ணன்

விலை : ரூ. 15

பக்கங்கள் : 64

வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை - 600 0118

உயிர்மையின் 100 வது இதழில் அ. முத்துகிருஷ்ணன் எழுதி சிறப்பு பகுதியாக வெளிவந்த பக்கங்கள் நூல் வடிவம் பெற்று வெளிவருவதே இந்நூல்.

* அணு உலை விபத்தை கார் விபத்துடன் ஒப்பிடலாமா?

* 25 ஆண்டு போராட்டத்தை ஏன் நாம் அறிந்து கொள்ள்வில்லை?

* அணுசக்தித் துறை ஏன் இரகசியம் காக்கிறது?

* அணுக்கழிவுகள் எத்தனை ஆண்டுகள் கதிரியக்கதை வெளிப்படுத்தும்?

* மின்சாரம் தயாரிக்க மாற்று வழிகளை ஏன் அரசு ஊக்கவிக்கவில்லை.

* உலகில் அபாய உலைகள் இந்தியாவில் தான் உள்ளனவா?

* வளர்ந்த நாடுகள் ஏன் தங்கள் அணு உலைகளை மூடி வருகிறார்கள்?

* செர்நோபில்-போபால் ஏன் நாம் பாடப்புத்தகங்களில் இல்லை?

* இந்திய அணு உலைகள் பாதுகாப்பனவைதானா?

* நாடெங்கிலும் ஏன் மக்கள் அணு உலையை எதிர்த்துப் போராடுகிறார்கள்/

* இந்திய ஊடகங்கள் ஏன் நம்மைக் குழப்புகின்றன?

* மூன்றாம் உலகநாடுகளில் ஏன் அதிக அணு உலைகள் நிறுவப்படுகின்றன?

- அனைத்து கேள்விகளுக்கும் எளிய முறையில் பதில் தருகிறது இந்த புத்தகம். கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.

January 6, 2012

அணு உலையை துவங்கும்பொழுது எதிர்ப்பது சரியா?


அணு உலையை ஆதரிக்கும் அறிவாளிகளின் கேள்விகளில் ஒன்று :

அணு உலையை கோடிகளில் செலவழித்து, உற்பத்தியை தொடங்க போகும் சமயத்தில் எதிர்ப்பது சரியா?

அணு உலையை எதிர்த்து போராடும் கூடங்குளம் பெண்களின் பதில் :

மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தம் செய்து, கல்யாணத்திற்கான எல்லா வேலைகளும், செலவுகளும் செய்தாயிற்று, நாளைக்கு கல்யாணம். இரவு மாப்பிள்ளைக்கு எயிட்ஸ் என தெரியவந்தால், திருமணத்தை நிறுத்துவீர்களா? இவ்வளவு செலவழிச்சாச்சு என நடத்துவீர்களா?

****

நன்றி : . முத்துகிருஷ்ணன்

January 1, 2012

அணுஉலை மின்சாரம் இனி ஜப்பானில் இருக்காது!


அணுஉலை மின்சாரம் இனி ஜப்பானில் இருக்காது! - பேரா. ஹிரோசி யமாஷிடோ.

ரபி : கூடங்குளம் அணுஉலைகள் வேண்டுமா? வேண்டாமா என்ற வாத பிரதிவாதங்கள் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட அணுக்கசிவுக்கு பின் அணு உலைகள் தொடர்பாக ஜப்பானில் இன்றைய நிலைபாடு என்ன?

பேராசிரியர் : நாங்கள் ஏற்கெனவே ஹிரோசிமா, நாகசாகியில் விழுந்த அணுகுண்டுகளின் தாக்கமே இன்னும் பல தலைமுறை ஜப்பானியர்களிடம் இருக்கும். அரசாங்கமும் முதலில் அணு உலைகள் தொடர்பாக அவை ஆபத்தில்லை என்றே மறுத்து வந்தது. ஆனால் புகுசிமா விபத்துக்கு பின்னர் அணுஉலையால் பெறப்படும் மின்சாரத்தை அடியோடு குறைத்து வருகின்றது. தற்போது ஓரிரு அணுஉலைகள் மட்டுமே இயங்கி வருகின்றது. அவையும் விரைவில் நிறுத்தப்படும்.

பெரும்பாலான அணு உலைகள் மூடப்பட்டதால் கோடையில் மின்சார தட்டுபாடு வருமோ என்ற அச்சம் ஜப்பானியர்களிடம் இருந்தது. ஆனால் நாங்கள் ஒரு மின் விளக்கு தேவை என்றால் அதனை அப்போது மட்டுமே பயன்படுத்துவொம். தேவையற்ற நேரத்தில் வீணாக அதனை எரியவிட மாட்டோம். ஏசி அறைக்குள் முடங்கி இருப்பதை காட்டிலும் காற்றோட்டமாக வீடுகளை மாற்றியும் வருகின்றோம். இதனால் மின்சாரமும் மிச்சமாகின்றது! என்றார்.

****

பேராசிரியர் யமாஷிடோ. சென்னை பல்கலைக்கழகத்தில் 1987ஆம் ஆண்டு இந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது ஜப்பான் டோஹகு பல்கலைக்கழத்தின் மொழியியல் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

****

நன்றி : இராமேஸ்வரம் ரபி