> குருத்து: January 2013

January 29, 2013

மகளிர் தொழிற்பூங்காவில் மகளிர் நிலை!

பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும் என்பதற்காக, அரசு சிட்கோ மூலமாக பெண் தொழிலதிபர்களை உருவாக்க எண்ணியது. அதற்காக ஆவடி - செங்குன்றம் இடைப்பட்ட பகுதியில் மகளிர் தொழிற்பூங்கா ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தியிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிமித்தம் காரணமாக அந்த பகுதிக்கு கிளம்பும் பொழுது, நிறைய பெண் தொழிலதிபர்களை சந்திக்கலாம் என்ற ஆவலோடு கிளம்பினேன். கிட்டத்தட்ட 100 நிறுவனங்களுக்கும் மேலாக சிறிதும், கொஞ்சம் நடுத்தரமானதாய் நிறைய நிறுவனங்கள் இயங்கி கொண்டிருந்தன. காலையிலிருந்து மாலை வரை பல நிறுவனங்களுக்கும் ஏறி இறங்கி பார்த்தால், ஒரு பெண் முதலாளியை கூட காணவில்லை. முதலாளியை விடுங்கள். ஒரு பெண் தொழிலாளியை கூட காணவில்லை. அது தான் அதிர்ச்சியாக இருந்தது.

பிறகு, அங்கு கொஞ்ச காலம் பணியாற்றிய பொழுது தான் அறிந்தேன். எல்லா இடங்களையும் பெண்கள் பெயரில் தான் சிட்கோ ஒதுக்கி தந்திருக்கிறது. ஆனால், அதை இயக்குவது பெரும்பாலும் கணவன்மார்கள் தான். பொதுவாக ஆண்கள் தான் இடம் வாங்க, வங்கியில் கடன் வாங்க என அலைவார்கள். இப்பொழுது எல்லா வேலைகளையும் அலைந்து திரிந்து முடித்துவிட்டு, இறுதியில் மனைவியை கையெழுத்திட அழைத்து செல்கிறார்கள். ஆயதபூஜை போன்ற விசேஷ காலங்களில் மனைவிமார்களை கணவன்மார்கள் நிறுவனத்திற்கு அழைத்துவருகிறார்கள்.

கையெழுத்திட்டால் மட்டும் போதும் என்ற அளவில் நின்றால் பரவாயில்லை. கணவன்மார்கள் முதலாளி என்ற அளவில், தொழிலில் செய்யும் எல்லா திருட்டுத்தனங்களுக்கும் மனைவியும் பொறுப்பாளியாகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 50 பேர் வேலை செய்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அதில் 20 பேருக்கு தான் மருத்துவ காப்பீடுக்கான (இ.எஸ்.ஐ.) பணத்தைக் கட்டுகிறார்கள். இது தான் பரவலான நிலை. மீதி 30 பேரும் பாதுகாப்பாக வேலை செய்தால் பரவாயில்லை. இதில் ஒருவருக்கு வேலை செய்யும் பொழுது, விபத்து ஏற்பட்டு, உயிர் இழந்துவிட்டால் பெரிய பிரச்சனை. பொதுவாக, காவல்துறை உட்பட சகல துறைகளுக்கும் பணம் பாய்ந்து சரிகட்டிவிடுவார்கள். சரிகட்டமுடியவில்லை என்றால், அதிகபட்சம் சிறை செல்ல வேண்டியிருக்கும். ஒரு கையெழுத்து போட்டதற்கு சிறையா என்ற அளவில் தான் மனைவிமார்கள் வருத்தம் கொள்ள வேண்டியிருக்கும்.

சமீபத்தில் மீண்டும் அந்த பகுதிக்கு சென்றிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் நூறு நிறுவனங்கள் உருவாகியிருக்கிறது. முன்பு சிட்கோவிற்கு பேருந்து உள்ளே வராது. போக்குவரத்து உயரதிகாரியை 'தனியாக' கவனித்ததால், இப்பொழுது காலை, மாலை இருவேளையிலும் பேருந்து உள்ளே வந்து செல்கிறது. சில நிறுவனங்களில் பெண் தொழிலாளர்கள் கண்ணில் பட்டார்கள்.

இப்பொழுது கணவன்மார்கள் நிறுவனத்தில் தன்னையும் ஒரு தொழில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டுவிட்டார்கள். இப்பொழுது கையெழுத்திற்கு கூட மனைவியிடம் வாங்குவதில்லை.தமிழ்நாட்டில் மகளிரை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் நிலை இதுதான்!

January 24, 2013

எரியும் பனிக்காடு! - எஸ். இராமகிருஷ்ணன்

முன்குறிப்பு : இந்த நாவலை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். 50வது பக்கத்தை கடந்து கொண்டிருக்கிறேன். தொழிலாளி வாழ்க்கை போல, எளிமையாக நகருகிறது. வறுமை, வறுமை. எங்கும் வறுமை. நாயகனும், நாயகியும் தோட்ட தொழிலுக்கு கங்காணி கொடுத்த நம்பிக்கையில் வாழ்ந்த பகுதியிலிருந்து நகர்ந்து வருகிறார்கள். படித்த பிறகு என்னுடைய விமர்சனத்தையும் இங்கு வரும் நாட்களில் பதிகிறேன். இப்பொழுது இயக்குநர் பாலா இந்த நாவலை அடிப்படையாக வைத்து தான் "பரதேசி" படத்தை எடுத்து வருகிறார் என கேள்விபடுகிறேன். இப்படி நாவலை வைத்து படம் எடுப்பது ஒரு நல்ல முயற்சி. அதுவும் தொழிலாளியின் வாழ்க்கையை படமாக்குவது இன்னும் பாராட்டத்தக்கது. பாலாவின் படம் வருவதற்கு முன்பாக படித்து முடித்துவிடவேண்டும் என எண்ணியிருக்கிறேன். பார்க்கலாம். இந்த நாவலுக்கு ஒரு அருமையான அறிமுகம் எஸ். இராமகிருஷ்ணன் நாவல் வந்த பொழுதில் எழுதினார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி. *****
சமீபத்தில் நான் வாசித்த தமிழ்நாவல்களில் முக்கியமானது எரியும்பனிக்காடு. பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட இந்த நாவல் ரெட் டீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்பாக வெளிவந்தது.

இந்த நாவல் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலை தோட்டம் உருவானதையும் அங்கு வேலைக்குச் சென்ற கூலிகளின் அவலவாழ்வையும் விவரிக்கிறது. தமிழக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை நுட்பமாக விவரிக்கும் ஒரே நாவல் இது தான் என்பேன். இந்த நாவலைத் தமிழாக்கம் செய்தவர் இரா. முருகவேள்.

1940 ம் ஆண்டுகளில் தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் கால் பதித்த டேனியல் அங்குள்ள நிலவிய சகிக்க முடியாத மனிததன்மையற்ற சூழலைக்கண்டு அதை எதிர்த்துக் குரல் தந்ததோடு தென்னிந்திய தோட்ட உத்தியோகிஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றையும் நிறுவி தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக துணை நின்றிருக்கிறார்.

தேயிலைத் தோட்டத்தின் பனிமூட்டத்தில் மறைந்து போயிருந்த ஆயிரமாயிரம் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை நேர்த்தியாக பதிவுசெய்திருக்கிறது டேனியலின் நாவல். பிளான்டேஷன் பனோரமா என்ற கட்டுரைத்தொகுப்பும் டாக்டர்ஸ் டேல்ஸ் என்ற சிறுகதை தொகுப்பையும் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் டேனியல்.  அவை இன்னமும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. 1969ல் இந்த நாவல் வெளியான போது அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் துணை குடியரசு தலைவர் விவிகிரி.

**

1925 ஆண்டின் டிசம்பரில் நாவல் துவங்குகிறது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் அன்றாட வேலை செய்து பிழைக்கும் கருப்பனின் வாழ்வு விவரிக்கபடுகிறது. ஆறுமாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கருப்பன் வேலை கிடைக்காத காரணத்தால் மிகுந்த சிரமப்படுகிறான். அவன் மனைவி வள்ளி இருப்பதைக் கொண்டு காலத்தை ஒட்டுகிறாள். நாளைக்கு என்ன செய்வது என்ற கவலை அவன் மனதை அரிக்கிறது. வேலை தேடி அதிகாலையில் அருகாமையில் உள்ள ஊரான கயற்றாறுக்கு புறப்படுகிறான்.

கயற்றாறின் அன்றைய காட்சி விவரிக்கபடுகிறது. உணவங்ககளில் தலித் மக்களுக்கு தனிக்குவளை தரப்படுவது. அவர்கள் தரையில் உட்கார்ந்து தனியே சாப்பிட வேண்டும் என்று கட்டாயபடுத்துவது. சிரட்டையில் உணவை கொண்டுவந்துவைத்துவிட்டு போய்விடும் பழக்கம் என யாவும் விவரிக்கபடுகிறது. அந்த அவலங்களுக்கு நடுவே வேலை கேட்டு யாசிக்கிறான் கருப்பன்.

அப்போது தேயிலை தோட்டங்களுக்கு ஆள்பிடிக்கும் கங்காணியான சங்கரபாண்டி. அவன் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தால் கைநிறைய பணம் சம்பாதிக்கலாம் நீ உன் மனைவியை கூட்டிக் கொண்டு வந்துவிடு என்று ஆசைவார்த்தை காட்டி அவனை நம்ப வைத்து முன்பணம் தந்து அனுப்பி வைக்கிறான்

வேலையில்லாமல் கரிசல்காட்டில் கிடப்பதை விட தேயிலை தோட்டவேலைக்கு போகலாம் என்றுகருப்பனும் அவன் மனைவியும் கிளம்புகிறார். அவர்களைப் போல கூலிகளாக அழைத்துவரப்பட்டவர்கள் ஒன்றாக ரயிலில் பயணம்செய்கிறார்கள். பலிமுகாம்களுக்கு ரயிலில் யூதர்கள் அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகளை நினைவுபடுத்துவது போன்றிருக்கிறது இந்த ரயில் பயணவிவரணை.

ரயிலில் பயணம் செய்து இறங்கி நடந்து மலையேறி அவர்கள் தேயிலைத் தோட்டம் உள்ள மலைப்பகுதிக்கு செல்வதற்குள் இருட்ட துவங்கிவிடுகிறது. இந்த பயணம் நாவலின் மிக முக்கிய பகுதியாக விவரிக்கபடுகிறது. கண்முன்னே விரியும் காட்சிகள் போல எழுத்தின் வழியே அவை நமக்கு புலப்படுகின்றன.

அவர்கள் நினைத்தது போலின்றி தேயிலை தோட்டத்து வேலை ஒரு அடிமை வாழ்வு என்பது போய் இறங்கிய முதல் நாள் இரவே தெரிந்து போய்விடுகிறது. அந்த மலையிலிருந்து எவரும் தப்பிபோக முடியாது என்ற நிலையில் அவர்களை ஆடுமாடுகளை போல கொட்டடியில் அடைக்கிறார்கள். குளிரும், கடினமான மலையில் ஏறி நடந்த வேதனையும் அவமரியாதையாக நடத்தபடுவதும்  அவர்களை உறக்கமற்று செய்கிறது.

மறுநாள் அவர்கள் கூலிகளாக பதிவு செய்யப்படுகிறார்கள். அங்கு காரணமில்லாமல் கருப்பன் அடிபடுகிறான். அவன் மனைவியை பகிரங்கமாக ரசிக்கிறான் எஸ்டேட் நிர்வாகி. இங்கே நடப்பவற்றை சகித்து கொண்டால் மட்டுமே வாழமுடியும் எதையும் சகித்து கொள்ளுங்கள் என்று உடன் இருந்தவர்கள் அமைதிபடுத்துகிறார்கள். ஆனால் கிராமத்து மனிதர்களான கருப்பனுக்கும் வள்ளிக்கும் இந்த அவமானங்கள் மிகுந்த வலியை உருவாக்கின்றன.

அங்கிருந்து வெளியேறி போகவே முடியாது என்ற  நிலையில் உடல்வருத்தம் பாராமல் அடிமை வாழ்வை நடத்த துவங்கி மூன்று ஆண்டுகள் கூலிகளாக அவர்கள் வேலை செய்வதையும் அந்த நாட்களில் பாலியல் ரீதியாக வள்ளி சந்திக்கும் நெருக்கடியும் கருப்பன் அவமதிக்கபடுவதும் அடிவாங்குவதும், அவர்களை போன்ற சக தொழிலாளர்களை வெள்ளைகார முதலாளிகளும் அவர்களது ஏவல் நாய்களும் பன்றிகளை விடவும் மிக மோசமாக நடத்தும் விதமும் விஸ்தாராமாக விவரிக்கபடுகிறது.

ஒருவகையில் அன்றைய தேயிலைத் தோட்டம் ஒரு இருண்ட உலகம். ஒரு நரகம். அதன் அவலங்கள் உலகம் அறியவில்லை. முறையான சாலைகள் கிடையாது. கடுங்குளிர். போதுமான உணவில்லை. போதுமான உடையில்லை. உறக்கமில்லை. நோய்மை எதிர்பாராத சாவு, நம்பிக்கையிழப்பின் உச்சநிலை என்று நாவல்  காட்டும் மலைவாழ்வு அதிர்ச்சியானதொரு உண்மை.

தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பெண்கள் பாலியல் ரீதியாக தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகிறார்கள், ஆண்கள் காரணமின்றி அடித்து நொறுக்கபடுவது. அன்றாட உணவிற்கு கூட போராட வேண்டிய சூழல் என நீளும் தேயிலைத் தோட்ட வரலாறு கண்முன்னே கதையாக விரிவடைகிறது.

நாவல் வாசிப்பின் ஊடாக வாசகன் திகைத்தும் கலங்கியும் நிற்கும் தருணங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக தேயிலை தோட்டத்தில் திடீரென காய்ச்சல் பரவுகிறது. மலேரியா போன்ற கடும் சுரத்தில் பாதிக்கபட்டு நடுங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வைத்தியம் செய்வதற்கு முறையான மருத்துவர்கள் கிடையாது. கம்பௌண்டராக இருந்த ஒருவர் மருத்துவராக வேலை செய்கிறார். அவராலும் அத்தனை நோயாளிகளையும் கவனிக்கமுடியவில்லை.

கருப்பனுக்கும் காய்ச்சல் அடிக்கிறது. நடுங்குகிறான். மருத்துவர் வந்து மருந்து தருகிறார். வள்ளி செய்வதறியாமல் தடுமாறுகிறாள். நோய்மையிலும் மறுநாள் காலை வேலைக்கு கிளம்பும்படியாக கங்காணி மிரட்டுகிறான். தன்னால் முடியாது என்று கருப்பன் சொன்னதும் அவன் மனைவியை வேலைக்கு அனுப்ப சொல்லி கத்துகிறான். வேறுவழியில்லாமல் அவள் வேலைக்கு செல்கிறாள். நோய் முற்றி இறந்தவர்கள் அதே மண்ணில் புதைக்கபடுகிறார்கள். நோய் பலரை காவு கொள்கிறது. அதே நேரம் இதே எஸ்டேட்டில் வெள்ளைகாரர்கள் மதுவிருந்து நடத்தி தங்கள் வாரஇறுதி கொண்டாட்டங்களை இசையோடு கழிக்கிறார்கள்.

எளிய மனிதர்களின் வாழ்க்கை எந்த அர்த்தமும் இன்று காலனிய பிரபுக்களுக்கு அடிமைதொண்டு செய்தவற்கே முடிந்து போகிறது. குளிரில் பெண்கள் விரல்கள் எரிய தேயிலை கொழுந்து கிள்ளுகிறார்கள். ஆனால் அதை எடைபோடும் ஆள் பாதியை தனது கள்ளமனைவியின் பெயரில் பதிவு செய்துவிடுகிறான். அழகான பெண்ணாக இருந்தால்இச்சைக்கு மயங்கும்படியாக வற்புறுத்துகிறான்.

நாவல் முழுவதும் வள்ளியின் மீது இச்சை மிகுந்த கண்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு பக்கம் தொழிலாளர்கள் கீழ்தரமாக நடத்தபடுகிறார்கள். இன்னொரு பக்கம் தேயிலைத் தோட்டத்தை நிர்வாகம் செய்கின்றவர்கள் அதை சுரண்டி வாழ்கிறார்கள். அப்படி சுரண்டி வாழ்வதற்காக தனது மனைவியை வெள்ளைகாரனுக்கு கூட்டிக் கொடுக்கிறார்கள். வீட்டில் விருந்து தந்து  வெள்ளைகார பிரபுக்களை குளிப்பாட்டுகிறார்கள். ஒருவருக்கொருவர் குழிதோண்டி புதைத்து கொள்கிறார்கள். பிழைப்பிற்காக மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் ஒட்டுண்ணிகள் சிறந்த உதாரணம்.

நாவலின் சிறப்பு அது கவனம் கொள்ளும் அடிநிலை மக்களின் வாழ்வு. நேரடியான அனுபவம் கொண்டவர் டேனியல் என்பதால் துல்லியமாக அதை விவரித்திருக்கிறார். அதுபோலவே இயற்கையை உற்று நோக்கி அவதானிக்கும் கூர்மை அவருக்கு இருந்திருக்கிறது. ஆகவேதான் தேயிலைத் தோட்டங்களில் உள்ள பறவைகள், பூச்சிகள், விதவிதவிதமான பூக்கள், ஒடைகள், மழைக்காலத்தின் அடைமழை. ஆளை மறைந்து பெய்யும் பனி என்று இயற்கையின் அத்தனை நுட்பங்களையும் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மருத்துவர் என்பதால் அவருக்கு நோய்மை பற்றியும் அதனால் உருவாகும் வலியும் உளப்பிரச்சனைகளும் நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த நாவலில் எல்லா கதாபாத்திரங்களின் மனநிலைகளும் விரிவாக வெளிப்படுத்தபட்டுள்ளன. மோசமான குணமுடைய கதாபாத்திரங்கள் கூட அப்படி நடந்து கொள்வதற்கான காரணங்கள் விவரிக்கபடுகின்றன.

நாவலின் ஊடாக டேனியல் போல இரக்கமனது கொண்ட மருத்துவராக  ஆபிரகாம் என்ற ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறார்.  தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்து முதலாளிகளுடன் போராடுகிறார். தொழிலாளர்களை பரிவோடு கவனிக்கிறார். வள்ளி கருப்பன் இருவருமே இவரது வருகைக்கு பிறகு ஆறுதல் அடைய துவங்குகிறார். நோய்வாய்பட்ட  வள்ளி மீண்டும் தனக்கு ஒரு புதுவாழ்வு பிறக்க போகிறது என்று நம்பிக்கை கொள்கிறாள். அவர்களை போலவே அங்கிருந்த பலரும் தங்களுக்கு இனிவிடிவு காலம் என்று நம்புகிறார்கள். ஆனால் எதிர்பாராமை அவர்கள் மீழ கவிழு கருப்பனின் கனவு நிர்மூலமாக்கபடுகிறது.

நாவலின் அத்தியாயங்கள் துவங்கும் போது அதற்கு பொருத்தமானதொரு மேற்கோள்கள் டேனியலால் இணைக்கபட்டிருக்கின்றன. அவர் எந்த அளவு ஆழ்ந்து இலக்கியம் படித்தவர் என்பதை அது ஒரு பக்கம் நிருபிக்கிறது.  டிக்கன்ஸில் துவங்கி காந்தி, தோரு, லாங்பெல்லோ என்று விரிந்து பைபிள் வரையான பல்வேறு முக்கிய பகுதிகள் மேற்கோள்களாக தரப்படுகின்றன. ஒருவகையில் இந்த மேற்கோள்கள் அத்தியாயங்களின்  பிரதான அம்சத்தின் குறியீடுகளை போல காணப்படுகின்றன.

உயிரியல் ரீதியாக பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான் என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்த நாவலின் மொத்த சாரமும்.

நான் வாசித்தவரை இந்திய நாவல்களில் மிக அரிதாகவே தோட்ட தொழிலாளர்களின் வாழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் விஷகன்னிகா என்ற நாவலை வாசித்திருக்கிறேன். புதுமைபித்தன் துன்பக்கேணி என்ற நீண்ட சிறுகதையை எழுதியிருக்கிறார். மலையக தேயிலை தோட்ட வாழ்வு பற்றிய தனித்த நாவல்கள் இலங்கையில் வெளியாகி உள்ளன.  சமீபத்தில் கூட டார்ஜலிங் என்ற பெயரில் தேயிலை தோட்டம் குறித்து ஆங்கில நாவல் வெளியாகியிருக்கிறது.

டேனியலின் கதை சொல்லும் குரலின் அண்மையும், கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சி சொல்லில் அடங்காதது.

தேயிலை தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடப்பதையும் பிழைக்க வந்து அங்கேயே மடிந்து போன நூற்றுக்கணக்கான மக்களின் வலி நிரம்பிய குரல்கள் இன்றும் காற்றில் கேட்பதையும் நாவலின் வழியே உணர முடிகிறது.

சுரங்க தொழிலாளர்களை பற்றிய எமிலி ஜோலாவின் நாவல் சுரங்க தொழில் முறைக்கே பல புதிய சட்ட மாற்றங்களை கொண்டுவந்தது. டிக்கன்ஸின் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பதிவுகள் புதிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் ஒரு போராளியாக மலையக மக்களின் வாழ்வை செம்மைபடுத்த முன்நின்ற டேனியலின் படைப்பு நேர்மை நாவல் முழுவதும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போன்ற நெருக்கத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வந்த  மொழிபெயர்ப்பாளர் முருகவேள் பாராட்டுக்கு உரியவர். நாவலை வெளியிட்ட விடியல் பதிப்பகத்திற்கு இந்த நாவல் வெளிவரக்காரணமாக இருந்த நண்பர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்று இதைச் சிபாரிசு செய்கிறேன்.

எரியும் பனிக்காடு. பி.எச்.டேனியல்.  தமிழில் இரா. முருகவேள். விடியல் பதிப்பகம். கோவை.  விலை ரூ.150.

- எஸ். இராமகிருஷ்ணன்

January 23, 2013

ஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்கு!

ஒன்றாவது படிக்கும் எனது பெண்ணுக்கு நேற்றிரவு விடுகதை போட்டேன்.  (எங்க அப்பா எனக்கு சொன்ன கதை இது :) 

ஒரு ஆள் ஆற்றின் க‌ரையில் ஒரு புலி, ஒரு ஆடு, ஒரு புல்க‌ட்டு வைத்து காத்திருக்கிறார். சிறிய ப‌ரிசல் கிடைக்கிற‌து.  அதில் ஒவ்வொன்றாக‌ தான் க‌ட‌த்த முடியும். வெற்றிக‌ர‌மாக‌ ஒவ்வொன்றாக‌ க‌ட‌த்திவிட்டார். எப்ப‌டி க‌ட‌த்தினார்?

"முத‌ல்ல ஆட்டை கொண்டு போனாரு‌!" 

"இங்க‌ புலி புல்லை தின்னாது. ச‌ரி!"

"அடுத்து ஆட்டை கொண்டு போனாரு!" 

"சரி.அங்க‌ ஆட்டை விட்டுவிட்டு திரும்பினால், ஆடு புல்லை தின்னுடுமே!" என்றால்,

"அட‌ ஆமால்ல‌!" என‌ சிரிக்கிறாள்.

திரும்ப‌வும் முதலிலிருந்து...

"முத‌ல்ல‌ புலியை கொண்டு போனாரு!"

"அப்ப‌ ஒரு பிர‌ச்ச‌னை வ‌ருதே! ஆடு புல்லை தின்னுடுமே!"

"அட‌ ஆமால்ல‌!" என மீண்டும் சிரிக்கிறாள்.

இப்ப‌டியே உரையாட‌ல் தொட‌ர்ந்த‌ 15 நிமிட‌த்தில்,  "இது க‌ஷ்ட‌மா இருக்குப்பா! ஈஸியா ஏதாவ‌து சொல்லுங்க!" என‌ சொல்லிவிட்டாள். 

எங்க‌ அப்பா என‌க்கு இர‌ண்டு நாள் த‌வ‌ணை கொடுத்தார். உன‌க்கு ஒரு நாள் த‌ர்றேன். நாளை இர‌வு என‌க்கு ப‌தில் சொல்.  பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இந்த‌ க‌தையை கேட்டுக்க‌லாம்!

எத்த‌னை பேரிட‌ம் எப்ப‌டி க‌தை சொல்ல‌ப்போகிறாளோ?!
 

January 17, 2013

"பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து" -கண்டன ஆர்ப்பாட்டம்!



நாள்: 19/1/2013 - சனிக்கிழமை

நேரம்: மாலை 4.30 மணி அளவில்!

இடம்:பல்லாவரம் பேருந்து நிலையம் (அம்பேத்கர் சிலை அருகில்)

அனைவரும் வருக!

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
தொடர்புக்கு : 9841658457

பின்குறிப்பு : சென்ற மாதம் 27/12/2012 அன்று காவல்துறையின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்று இப்போது நடக்க இருக்கிறது.

January 3, 2013

தாய் நாவல்!

வாசிப்பில் காதலையும், ரசனைகளையும் மட்டுமே கண்டு வந்த என்னை ரத்தம், வேர்வை, கண்ணீர், உழைப்பு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வைத்த புத்தகம் 'தாய்'. உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்க பட்ட புத்தகம் தாய் என்று ஒரு நண்பர் சொன்னதை நினைவு. ரஷ்ய நாவலான் தாய்(மக்ஸ்சிம் கார்கி), என் நண்பர்கள் பலவாறு என்னை ஊக்க படுத்தி எங்கள் ஊர் நூலகத்திலே அது கிடைத்த போது எனக்கு மகிழ்ச்சியில் குதித்து விடலாம் போல இருந்தது.

அதில் என்ன இருந்தது என்பதை விட இதை நாம் படிக்க போகிறோம் என்பதே சிலிர்பை இருந்தது. அதிலும் அது ஒரு கம்முனிச நாவல் என்று முன்பே அறிந்து வைத்திருந்ததால் நான் என்னவோ பெரிய லெனினின் தங்கை போல ஒரு உணர்வு கிளர்ந்தது(இவ்வளவும் அந்த புத்தகத்தை படிக்கும் முன் இருந்த உணர்வு).படிக்க தொடங்கிய போது, ஒரு நாயகன் நாயகி என்று(தமிழ் சினிமா போல) தொடங்காமல் தொழில்சாலை தொழிலாளர்கள் என்று இருந்தது முதலில் பெரிய ஏமாற்றமாய் தான் இருந்தது 

ஆனால் தொடர்ந்து படித்த போது தான் அந்த தொழிலாளிகளின் வேதனையும் வலியும் மெல்ல மெல்ல தாக்க தொடங்கியது. நாயகன் பாவேலின் தாயின் அற்புதமான தியாகம் மெய் சிலிர்க்க வைத்தது, மெல்லிய சரடாய் வரும் காதல் பெரிய விஷயமாய் தெரியவே இல்லை. என் வாசிப்பின் மற்றொரு பூங்கதவு தாழ்திறந்து கொண்டது, ஒரு புறம் பசி பட்டினி என்ற பல முகங்கள் பற்றி தெரிய நேர்ந்தாலும் மறுபுறம் திறந்த வானமும் எனக்கு கிடைத்த் வாழ்கையும் எவ்வளவு நிம்மதியானது என்பதை உணர்த்து வாழ கற்று தந்தன இந்த நூல்கள்.

- இனியாள்