> குருத்து: June 2014

June 13, 2014

அம்மம்மாவிற்கு சிவப்பஞ்சலி!



இரண்டு நாள்களுக்கு முன்பு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தலைவரான முகுந்தன் தோழரின் அம்மா தனது 86 வயதில் இறந்துவிட்டார். அவருடைய இறுதி சடங்கில் கலந்துகொண்டேன்.

கலந்து கொண்ட பிறகுதான், தோழரின் அம்மா அல்ல! ஒரு அருமையான தோழர் இறந்துவிட்டார் என அறிந்துகொண்டேன்.

இரங்கல் நிகழ்ச்சியில், உறவினர்கள், தோழர்கள், பகுதிவாழ்மக்கள் என ’சரசுவதி அம்மா’ எப்படி எல்லோருக்குமான ’அம்மம்மாவாக’ பாசத்துடன் பழகினார் என பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள்.  தன் பையனை, பிள்ளைகளை, சொந்தங்களை நேசித்ததைப் போலவே, தன்னைச் சுற்றி வாழ்ந்த சகலரையும் நேசித்து வாழ்ந்திருக்கிறார்.

குறிப்பாக, பல இரவுகள், பல பகல்கள் என பல ஆண்டுகளாக தோழர்களை அன்புடனும், அக்கறையுடனும் கவனித்திருக்கிறார்.  ஒற்றை வரியில், இப்படி எழுதி கடப்பது எளிதானது.  எதார்த்தத்தில் சிரமம்.
ஒருவர் தோழராய் மாறுவது பரிணாம வளர்ச்சி என்றால், தோழரின் குடும்ப உறுப்பினர்கள் தோழரின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருப்பது மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி.
அம்மம்மாவை போலவே தோழர்களின் எல்லா சொந்தங்களும் இருந்துவிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும் என மனம் ஏங்குகிறது!

அம்மம்மாவிடம் பழக வாய்ப்பு இல்லாததற்காக வருத்தம் மேலிடுகிறது!  இருப்பினும், அம்மம்மாவின் பண்புகளை நாம் உள்வாங்கி கொள்ளும் பொழுது, அம்மம்மா நம்முடன் கொஞ்சம் ஒட்டிக்கொள்கிறார்.

தோழரின் அம்மா, தான் நேசித்து வாழ்ந்த விதத்தில், சகலரும் தங்கள் அம்மம்மா இறந்ததாய் இழப்பை அனுபவித்தார்கள்.

அம்மம்மாவின் உடலில் செங்கொடி கம்பீரமாய் போர்த்தப்பட்டிருந்தது.  தோழர்கள், உறவினர்கள் ஊர்வலமாய் கொண்டு போய், சிவப்பஞ்சலி செலுத்தி எரியூட்டினார்கள்.

அம்மம்மாவிற்கு என்னுடைய சிவப்பஞ்சலிகள்!

பின்குறிப்பு : தனது தாய்மொழி தமிழ் என்றாலும், தனது சொந்த முயற்சியில் நாளிதழ்களை வாசித்து, வாசித்து தமிழைக் கற்றுக்கொண்டிருக்கிறார்!