November 23, 2014

புறக்கணிப்பின் ‘வலி’



சமீபத்தில் ‘வலி’ என்றொரு அருமையானதொரு குறும்படம் பார்த்தேன்.  ஒரு உணவகம். ஒரு காபி ஆர்டர் பண்ணி திருநங்கை காத்திருக்கிறார்.  அடுத்தடுத்து அங்கு வரும் ஆண், பெண், காதலர்கள் என எல்லோரும் அவர் அருகே அமர்வதை தவிர்க்கின்றனர். சக மனிதர்களின் புறக்கணிப்பு தந்த வலியால் மனம் உடைந்து அழுகிறார். தேவதை போல வரும் ஒரு பெண் குழந்தை, அவரை சக மனுசியாக பார்த்து சிநேகத்துடன் நடந்துகொள்கிறாள். நெகிழ்ந்து, கண்ணீர் வருவதுடன் படம் முடிகிறது!

படத்தின் இறுதிக்காட்சியில் நானும் அழுதேன். நம்மை போன்ற சக மனுசியான திருநங்கைகளை வீடும், சமூகமும் புறக்கணித்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? சம காலங்களில் திருநங்கை குறித்த நல்லவிதமான புரிதல்கள் ஏற்பட்டு வருவதை பார்க்கிறேன். இந்த படமும் அதற்கு உதவி செய்திருக்கிறது.

படத்தில் திருநங்கையாக நடித்தவர் பிரதீப். எங்கள் நண்பர்கள் குழாமில் அவரும் ஒருவர். ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் உணர்வுகளை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்.  படத்தின் இயக்குநர் விக்டரை சந்தித்த பொழுது, “இது ஒரு உண்மைக்கதை.  ஒரு உணவகத்தில், நகர்ந்து போனவர்களில் நானும் ஒருவன். என் செய்கையின் நெருடலில் தான் இந்த படத்தை எடுத்தேன்” என்றார்.

படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

படத்திற்கான சுட்டிக் கீழே!

https://www.youtube.com/watch?v=6WNPf5I6I_w

November 20, 2014

ஒரு விபத்தும் சில ‘எருமைகளும்’!



மாலை 7 மணி.  ஆந்திராவை நோக்கி செல்லும் நீண்ட புறவெளி சாலை(Bypass)-யில் வாகனங்கள் வேகவேகமாய் கடந்து போய்க்கொண்டிருந்தன. ஓரிடத்தில், மனிதர்கள் சிறு கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு நாற்பது வயது கனத்த மனிதர் ரத்த வெள்ளத்தில் வானம் வெறித்து கிடந்தார்! கொஞ்சம் தள்ளி ஒரு எருமை கொஞ்சம் காயத்தோடு ஏற்கனவே விழுங்கி இருந்த உணவை மெல்ல அசுவாரசியமாய் மென்று கொண்டிருந்தது! அவர் வந்த பைக் சாலையின் ஓரத்தில் முட்டி கீழே கிடந்தது!
****

புறவெளிச் சாலையின் தடுப்புச் சுவர் ஓரிடத்தில் உடைந்து விழ, சில எருமைகள் சாலையில் ஏறிவிட்டன. வேகமாய் வந்த அவர் இருட்டில் நின்று கொண்டிருந்த மாட்டை கவனிக்காமல் மோதிவிட்டார்.
108 ஆம்புலன்ஸ் வந்து பார்த்து, “இவர் அடிப்பட்ட மனிதர் இல்லை. பிணம்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டதாம். வீட்டிற்கு தெரிவித்து அவர்கள் வந்துகொண்டிருப்பதாக சொன்னார்கள்.
****

இறந்தவருக்கு இரண்டு பிள்ளைகள் என்றார்கள். இனி அவர்களின் எதிர்காலம்? யோசிக்கும் பொழுது கவலையாய் இருந்தது.
முதல்நாள் இதே சாலையில் ஒரு அவசர வேலை காரணமாக 80 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றதும் நினைவுக்கு வந்தது! விபத்து நடந்து 10 நிமிடம் தான் ஆனது என்றார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு தான் ஓரங்கட்டி தொலைபேசியில் 10 நிமிடம் பேசிவிட்டு வந்ததும் நினைவுக்கு வந்தது.
****

மூன்று நாட்கள் கழித்து இன்றும் அதே சாலையில் வந்துகொண்டிருந்தேன். சரிந்து விழுந்த தடுப்புச் சுவரை இன்னும் எழுப்பவில்லை!
இன்னும் சில எருமைகள் வருவதற்கும், சில ‘விபத்துகள்’ நடப்பதற்கும் பொறுப்பாய் விட்டு வைத்திருக்கிறார்கள்.
மனித உயிர்கள் நம் நாட்டில் மலிவானவை!
****

அந்த டோல்கேட்டில் வரி கட்ட வண்டிகள் வரிசையாய் காத்திருந்தன.  கணக்காய் காசு வசூலித்து  கல்லா பெட்டி நிரம்புவதை சில ‘ஆபிசர் எருமைகள்’ ஆர்வமாய் கவனித்துக்கொண்டிருந்தன!
****