> குருத்து: May 2019

May 14, 2019

The Birth of Pele (2016)


புழுதி பறக்கும் தெருக்களில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி விளையாடி திரிகிறான் பீலே!

உள்ளூர் போட்டியில் விளையாடுகிறார்கள். அந்த போட்டியில் தோற்றாலும் 5 கோல்கள் போட்டு கைதட்டல்களை வாங்குகிறான் பீலே.

அப்பா முன்னாள் கால்பந்து விளையாட்டுவீரர். காலில் அடிபட்டதால் இப்பொழுது மருத்துவமனையில் துப்புரவு வேலை செய்கிறார். வறுமையால் தன்னுடன் வேலை செய்யும் மகனுக்கு ஓய்வு நேரத்தில் 'ஜிங்கா' ஸ்டைலை கற்றுத் தருகிறார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, உலகக் கோப்பைக்காக விளையாடும் குழுவில் 16 வயதிலேயே இடம்பெறுகிறான்.

'ஜிங்கா' பிரேசில் நாட்டு பழங்குடி மக்களின் நடனம். அவர்கள் ஒடுக்கப்படும் பொழுது, தங்களது பாரம்பரியத்தை பாதுகாக்க கால்பந்து விளையாட்டில் அந்த முறையை புகுத்துகிறார்கள்.

1950ல் உலக கோப்பையில் தோற்றதற்கு காரணம் ஜிங்கா ஸ்டைல்தான் என்ற பழி இருப்பதால் அந்த முறையை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கிறார்கள்.

பல்வேறு போராட்டங்கள். ஜிங்காவை அனுமதித்தார்களா உலகக் கோப்பையை வென்றார்களா என்பது முழு நீள கதை!

*****

விளையாட்டு எப்பொழுதும் விளையாட்டாக இருந்ததில்லை என்பது மற்றும் நன்றாக உணர முடிகிறது. பயிற்சியாளர் விளையாட்டு வீரர்கள் உள்பட அத்தனை பேருக்கும் அத்தனை மனஅழுத்தம்!

பயிற்சியாளரே தன் குழுவின் பலம் எதில் இருக்கிறது என உணர்ந்து இறுதியில் பேசுவது அருமையான இடம்.

படத்தில் நடித்த அத்தனை பேரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார் நன்றாக இருக்கிறது.

'எதை செய்தாலும் ஈடுபாட்டோடு செய்' என்கிறார் பீலே அப்பா. என்னுடன் படம் பார்த்த என் பெண்ணுக்கும் அதையேதான் அழுத்தமாக சொன்னேன்.
பார்க்க வேண்டிய படம்.

தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.

Law Abiding Citizen (2009)


இரண்டு திருடர்கள். திடீரென ஒரு வீட்டில் புகுந்து குடும்பத்தலைவனை கட்டிப்போட்டு கொள்ளையடிக்கிறார்கள். ஒருவன் எல்லைமீறி அவருடைய மனைவியையும் சிறுமியையும் பலாத்காரம் செய்து கொன்று விடுகிறான்.
கொன்றவன் அப்ரூவர் ஆகி உடன் வந்தவர் மீது பழி போடுகிறான். வழக்கறிஞரும் ஒத்துழைக்கிறார். பத்து வருடம் வழக்கு நடக்கிறது. இறுதியில் மரண தண்டனை கொடுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் பார்த்து, கொதித்து போன குடும்பத்தலைவர், விடுதலையாகி வெளியே வந்த கொலைகாரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொள்கிறார். உடனே சரணடைகிறார்.

சிறையிலிருந்து கொண்டே வழக்கு தொடர்பான ஆள்கள் ஒவ்வொருவராக கொலை செய்கிறார்.

போலீசு கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. ஊர் பதட்டமடைகிறது.
எப்படி கொலைகளை தடுத்து நிறுத்தினார்கள் என்பது முழுநீளக்கதை!

*****

'ஒப்பம்' என மோகன்லால் படம். ஒருவனுக்கு வழங்கப்பட்ட அநீதி தீர்ப்பால் அவனுடைய குழந்தைகள் உள்பட மொத்த குடும்பமும் அவமானத்தில் தற்கொலை செய்து கொள்ளும். சிறையிலிருந்து வெளியே வந்தவன் அந்த வழக்கு தொடர்பான (நீதிபதி உள்பட) ஆட்களை ஒவ்வொருவராக தேடித்தேடி கொலை செய்வான்.

இதுவரை அநீதி இழைக்கப்பட்டவன் அரசு அதிகாரிகளை பழிவாங்குவது போல அன்றிலிருந்து இன்று வரை இப்படி நிறைய படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

தொடர்ந்து சமூகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
எளியவர்கள், அப்பாவிகள் இந்த சட்டத்தால் அநீதியாக தினமும் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் எந்த அதிகாரியினுடைய குடும்பமும் பழிவாங்கியதாக எந்த வழக்கும் இல்லை. வரலாறும் இல்லை. இது சம்பந்தமாக தமிழ் இந்துவில் ஒரு கட்டுரைகூட வெளிவந்தது.
மற்றபடி வலுவான திரைக்கதையும், எடுத்த விதமும் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது.

பார்க்க வேண்டிய படம். பாருங்கள். தமிழில் கிடைக்கிறது.

Zootopia (2016)


விலங்குகள் சூழ் உலகம் அது. கிராமத்தில் வாழும் பெண் முயலுக்கு தான் போலீஸ் அதிகாரியாக உருவாக‌வேண்டும். சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும் என ஒரு கனவு.

பல்வேறு சோதனைகளுக்கு பிறகு சிங்கம், புலி, கரடி அதிகாரிகளுக்கு மத்தியில் வரலாற்றில் முதல்முறையாக முயலும் அதிகாரி ஆகிறது. ஆனால் முயலுக்கோ அதன் குட்டித்தன்மைக்கேற்ப‌ பார்க்கிங் டிக்கெட் போடும் வேலை தான் ஒதுக்கப்படுகிறது.

நகரில் சில மிருகங்கள் காணாமல் போகின்றன. அதில் ஒருவரை கண்டுபிடிக்கும் வழக்கு முயலின் துடுக்குத்தனத்தால் கிடைக்கிறது. நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் வேலையை விட்டு தூக்கி விடுவோம் என கடும் நெருக்கடி தருகிறார்கள்.
இதற்கிடையில், காணாமல் போன மிருகங்கள். அதன் தொடர்ச்சியில், சைவ விலங்குகளுக்கும், அசைவ விலங்குகளுக்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்படுகிறது.

ஏகப்பட்ட சாகசங்கள், கலாட்டாக்களுக்கு மத்தியில் முயல் காணாமல் போன மிருகத்தை கண்டுபிடித்ததா? தன்னுடைய பதவியை தக்க வைத்ததா? சமூகத்தில் அமைதியை கொண்டுவந்ததா? என்பதை முழுநீள கதையில் விவரிக்கிறார்கள்.

*****

சமீபத்தில் பார்த்த அனிமேஷன் படங்களில் விறுவிறுப்பான படம். உட்டோப்பிய சமூகம் என்றால், க‌னவுலகம் என்று அர்த்தம். அதன் அடிப்படையிலேயே விலங்குகள் உலகத்திற்கு Zootopia பெயரிட்டிருக்கிறார்கள்.

சைவ அசைவ விலங்குகளின் ஒருங்கிணைந்த வாழ்வில் அதிகாரத்திற்கு நடக்கும் போட்டி தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகிறது
அதிகாரம் சரியான நபர்களிடம் இருந்தால் நிறைய நல்ல பலன் தருகிறது. அதிகாரம் மோசமான நபர்களிடம் போய் விட்டால் கேடுகள் புற்றீசல் போல‌ வருகின்றன. மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தில் இருப்பவர்களே நமக்கு நல்ல உதாரணம் ஆகிறார்கள்.

முயலின் நண்பனாக வரும் நரி பாத்திரம் அருமை. நக்கலும் கிண்டலும் அவ்வளவு இயல்பாக வருகிறது

வெளிநாட்டில் யோகாசனம், தியானம் என்ற பெயரில் மையங்களில் நடக்கும் கூத்துக்களை நக்கல‌டித்திருக்கிறார்கள். யோகா செய்யும் யானை அட்டகாசம். காட்பாதர் முத்தமும் அட்டகாசம்.

ஆமை வேகம் அல்ல! அதை விட மெதுவாக வேலை செய்யும் ஆர்டிஓ அலுவலக ஊழியர்களையும் நக்கல் செய்திருக்கிறார்கள்.

பார்க்க வேண்டிய படம். தமிழிலும் கிடைக்கிறது பாருங்கள்

May 13, 2019

A Perfect World (1993)


இரண்டு பேர் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள். போகிற வழியில் நடந்த களேபரத்தில் ஒரு வீட்டிலிருந்து ஏழு வயது பையனை பயணக்கைதியாக தூக்கி சென்றுவிடுகிறார்கள். ஊர் முழுவதும் பரபரப்பாகிவிடுகிறது. தனிப்படை அமைத்து மும்முரமாய் தேடுகிறார்கள்.

இதில் இரண்டாம் ஆள் அந்த பையனிடம் தவறாக நடக்க முயல, முதலாம் ஆள் சுட்டுக் கொன்றுவிடுகிறார். அந்த பையனுக்கு அப்பா இல்லை. வறுமையில் வாடுகிற பையன். ஊர் சுற்றிக்கொண்டு, தேவையானவற்றை வாங்கித்தந்து, நட்பாய் பழகும் முதல் ஆளுடன் ஒட்டிக்கொள்கிறான்.
அந்த பையனை காப்பாற்றினார்களா என்பது முழு நீளக்கதை!

****

கதையின் நாயகன் கெவின் காஸ்ட்னர். இயக்குநரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட். இருவருக்குமே முக்கியமான படமிது.

நாயகனின் கதை உருக்கமானது. சிறு வயதில் அம்மாவை தொந்தரவு செய்த ஒருவனை தான் கொலை செய்திருக்கிறார். சில வருடங்களுக்கு பிறகு, செய்த கொடூரம் தாங்க முடியாமல் பிறகு அப்பாவையும் கொலை செய்திருக்கிறார்.

படத்தின் சாரம் இது தான். உலகம் மோசமாக இயங்குகிறது. ஆனால், அதை திருத்தாமல், அதனால் பாதிக்கப்படுகிறவர்களை தண்டிப்பது தான் A Perfect World. இந்த முரணைத்தான் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம். தமிழிலும் கிடைக்கிறது.

அவர்கள் வீட்டுக்கு கதவுகளில்லை!


நரிக்குறவர் குடும்பம்!
கணவனும் மகனும் பாண்டிச்சேரிக்கு
ஊசிமணி பாசிமணி
விற்க கிளம்பிவிட்டார்கள்!


சென்னை ஆவடியில்
தாயும் மகளும் தனியாக இருந்தார்கள்!

நடுநிசியில்
உள்ளே புகுந்த இளைஞர்கள்
தூங்கிக் கொண்டிருந்த
அவர்களின் தலையில்
அம்மி கல்லை போட்டுக்
கொன்று விட்டார்கள்.
பச்சிளம் குழந்தையையும்
கொன்றுவிட்டார்கள்.
எல்லாம் பாலியல் வன்முறைக்காகத்தான்!

அவர்கள் வீட்டில்
கதவுகளில்லை!
தன் வீட்டில் உடமை இல்லை! - பிறகு
கதவுகள் எதற்கு என நினைத்தார்களோ?
மனித சமூகத்தோடு
வாழ்கிறோம்!
மனிதர்கள் இத்தனை இழிகுணத்தோடு
வாழ மாட்டார்கள் என அப்பாவியாய் நம்பினார்களா?

இரண்டு உறவுகள்!
மிகப் பெரிய இழப்புகள்!
நாளை அவர்கள் வீட்டுக்கு கதவுகள் பொருத்தப்படலாம்!!
அந்த கதவுகள்
சமூகத்தின் மீதான
நம்பிக்கை இல்லா தீர்மானம் அல்லவா!

சகோதரியே!
நாங்கள் வெட்கப்படுகிறோம்!
எங்களை ஒருபோதும் மன்னித்துவிடாதே!

Pretham 2 (2018) மலையாளம்


ஒரு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட முகநூல் சினிமா குழு ஒன்று.

நேரடி அறிமுகம் இல்லாமல் அந்த முகநூல் குழு மூலமாக அறிமுகமான மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் ஒரு குறும்படம் எடுக்கலாம் என திட்டமிட்டு ஒரு வீட்டில் ஒன்றுகூடுகிறார்கள். அந்த வீட்டில் சின்ன சின்ன அமானுஷ்ய விஷயங்கள் நடைபெறுகின்றன. கலவரமடைகிறார்கள். அங்கு இருந்து கிளம்பும் முடியாது. விடாது துரத்தும் என்கிறார்கள்.
அங்கு வந்து தங்கி இருக்கும் மென்டலிஸ்ட் அதற்கான காரணங்களை ஆய்வு செய்கிறார்.

அந்த சினிமா முகநூல் குழுவில் உள்ள ஒரு நபரால் தவறாக வழிநடத்தப்பட்டதால் குழுவிலிருந்த ஒரு மாணவரின் அப்பா சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அந்த மன உளைச்சலில் மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

யார் அந்த நபர் என தேடி அலைகிறது அந்த ஆத்மா. (கொடூரமாக நடந்து கொண்டால் பேய். சாப்ட்டாக நடந்துகொண்டால் ஆத்மா! சரி தானே! 🙂 )
அந்த குறும்படம் வாயிலாகவே அந்த நபருக்கு வலை விரிக்கிறார்கள். அதில் சம்பந்தப்பட்டவர் சிக்கினாரா என்பது முழு நீளக்கதை!

****

இது வழக்கமான பேய் படம் இல்லை. கொஞ்சம் அமானுஷ்யம் கொஞ்சம் புத்திசாலித்தனம் என படம் நகர்கிறது. முதல் படம் இதே சாயலில் எடுத்து வெற்றி பெற்றதால் இரண்டாவது பாகத்தையும் தைரியமாய் அதே ஸ்டைலில் எடுத்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஏற்படும் சிக்கல்கள் தினமும் செய்தி தாள்களில் பார்க்கமுடிகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு கூட ஒரு அப்பா, நாள் முழுவதும் தன் பெண் செல்போனிலேயே இருந்ததால் பெண்ணை எரித்து கொன்றுவிட்டார். திக்கென்று இருந்தது. இனி இப்படி கதைகள் நிறைய வரும்.

நாம வேற வெள்ளந்தியான ஆள் என்பதால் முகநூலில் சாட்டை (Chat) ஆப் செய்தே வைத்திருக்கிறேன். 🙂

படத்தில் mentalist ஆக வரும் ஜெயசூர்யா தான் மொத்த படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார். மென்டலிஸ்ட் என்றால் டுபாக்கூர் என படத்திலேயே கலாய்க்கிறார்கள். தேடிப்படித்து பார்த்தால் கொஞ்சம் மேஜிக், மைண்ட் ரீடிங் என கலவையாக எழுதியிருக்கிறார்கள். டுபாக்கூர் தான் போல!
சென்னை ஈகாவில் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.