> குருத்து: August 2019

August 20, 2019

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…
நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புத்தான்…

– கலீல் ஜிப்ரான்

இந்தி - அத்தியாயம் 2

சில ஆண்டுகளுக்கு முன்பு, தொழில்நிமித்தமாக ஒரு வாரம் மும்பை போயிருந்தேன்.

ஒரு வாரம் வரை ஆகும் என நினைத்த வேலை, ஒரு நாளிலேயே முடிந்துவிட்டது.

மும்பை நகரத்தின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு காலையில் கிளம்பி, இரவு வரை ஊர் சுற்றினேன்.

இந்திய நுழைவு வாயில், ஜூகு கடற்கரை, பிள்ளையார் கோவில், செளபாத்தி கடற்கரை, கிருஷ்ணன் கோவில், என பல இடங்களுக்கும் சுற்றித்திரிந்தேன். 14 வருடமாக ஒரே திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த தில்வாலே படம் கூட பார்த்தேன். எங்கும் இந்தி பிரச்சனையாய் உணரவில்லை.

நிற்க. இந்திக்கு வருவோம். ஒருநாள் விடிகாலையில் ஏடிஎம்மில் பணம் எடுக்க போனேன். கார்டை நுழைத்து கதவை திறக்கும் பொழுது, அங்கிருந்த இந்திகாரர் என்னிடம் ஏதோ வேகமாக சொன்னார். புரிந்தால் தானே! உள்ளே நுழைந்து பணம் எடுத்து, கதவை திறந்து வெளியே வந்தேன். அப்பொழுதும் என்னிடம் ஏதோ ஒன்றை தெரிவிக்க பிரயத்தனப்பட்டார்.

வாழ்வில் இரண்டாவது முறையாக அவரிடம் நிதானமாகவும், அழுத்தமாகவும் சொன்னேன்.

"முஜே இந்தி நஹி மாலும்".

அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். உடனே சர்வதேச மொழியை கையாண்டார். ஏடிஎம் கதவில் கார்டை நுழைக்காமலே உள்ளே நுழைந்து காட்டினார்.

உங்களுக்கு புரிந்துவிட்டதா! இரவு யாரோ ஏடிஎம் நுழைவு கண்ணாடியை நொறுக்கியிருக்கிறார்கள். அதை தான் சொல்ல முயன்றிருக்கிறார்.

நீங்கள் எரிய தவறினால்... புகைந்து வீணாகிவிடுவீர்கள்!

நீங்கள் எரிய தவறினால்... புகைந்து வீணாகிவிடுவீர்கள்!

-நிகோலய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி

வாழ்க்கையை கொண்டாடுங்கள் புத்தகத்திலிருந்து…

இந்தி

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடன் வேலை பார்த்த ஒரு தோழி, ஒரு இந்தி ஆசிரியரும் கூட!

மாலை நேரத்தில் வீட்டில் பசங்களுக்கு இந்தி டியூசன் கற்றுக் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

வேலை நேரத்தில் இடையிடையே என்னையும் இந்தி படிக்க சொல்லி, தொல்லை செய்தார். படிக்க ஒப்புக்கொண்டேன்.

நாலைந்து மாதம் உருண்டோடியது. பிராத்மிக் தேர்வு எழுதாமல், நேரிடையாக மத்யமா தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தேன். இந்தி வாக்கியங்களை வாசிக்க துவங்கியிருந்தேன்.

ஒருநாள் டவுனுக்குள் சுற்றிக்கொண்டு இருக்கும் பொழுது, இந்திக்காரர் ஒருவர் என்னிடம் முகவரி கேட்டார். பதில் சொல்லி அனுப்பிவிட்டேன்.

தோழியிடம் இந்த சம்பவத்தை சொன்னேன். மிகவும் சந்தோசப்பட்டார். அத்தோடு நிறுத்தியிருத்தியிருக்கலாம். ஒரு ஆர்வத்தில் "அவர் என்ன கேட்டார்? நீங்க எப்படி பதில் சொன்னீங்க?" என்றார்.

"வேகமா வந்தார். கையில் இருந்த முகவரி காட்டி வேகமாக கேட்டார். 'முஜே இந்தி நஹி மாலும்'னு சொன்னேன். வேகமா போயிட்டார்" என்றேன்.

நொந்துகொண்டார்.

நான் தான் இந்திலேயே பதில் சொல்லிவிட்டேனே!

கொலைகாரன் (2019)

கதை. வடசென்னையில் முகம் சிதைந்து, பாதி எரிந்த நிலையில் ஒரு பிணம். போலீஸ் துப்பறிகிறது.

ஆந்திர அமைச்சரின் தம்பி ஒரு குடும்பத்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய, சென்னைக்கு ஓடி ஒளிந்து வாழ்ந்து வருகிறது.

செத்துப்போன ஆள் அமைச்சரின் தம்பி என அறிகிறது. கொலை செய்தது யார் என துப்பறியும் பொழுது சில சுவாரசியமான திருப்பங்களுடன் கொலையாளி யார் என சொல்கிறார்கள்.

****

இயக்குநரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிற மரபை பாக்யராஜ் தொடங்கி வைத்தார். அதை பின் தொடர்ந்து அதை வழக்கமாக்கிவிட்டார்கள்.

'பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடட்டும். பல் இல்லாதவன்..?'
இப்பொழுதும் தமிழில் கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் சி போன்ற இயக்குநர்கள் கதையை வேறோருவரிடமிருந்து தான் வாங்குகிறார்கள். மான்ஸ்டர் கதை ஒரு பேராசிரியர் எழுதியது தான். புத்திசாலிதனமான முடிவு. சரியான கதை இல்லாமல், கதையை சொல்ல தெரியாமல் பல உதவி இயக்குநர்கள் படும்பாடு வெளியே தெரியாதது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த கதை ஜாப்பான் நாவலில் இருந்து அனுமதி வாங்கி செய்தது என பிபிசியில் எழுதியிருந்தார்கள். துவக்கம் முதல் இறுதி வரை (சில இடங்களை தவிர) தொய்வு இல்லாமல் கொண்டு செல்கிறார்கள்.

துப்பறியும் அதிகாரியாக அர்ஜூன், தனக்கு ஏத்த கதாபாத்திரத்தை தேர்வு செய்திருக்கும் விஜய் ஆண்டனி, புதுமுக நாயகி என படத்தில் பலரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

இசை கொஞ்சம் சில இடங்களில் இரைச்சலாக இருந்தது. நாவலில் இல்லாதது பாடல்கள். சிகரெட் குடிப்பதற்கான இடைவேளைகள். மூன்று பாடல்களையும் தயக்கமின்றி தூக்கிவிடலாம். படம் இரண்டரை மணிதான் எடுக்கவேண்டும் என்கிற மரபையும் மாற்றவேண்டும். இந்த படம் 110 நிமிடங்கள் தான்!

ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம். பாருங்கள்.

Rabbit Hole (2010)

கதை. அம்மா, அப்பா, நான்கு வயது பையன் என நியூக்ளியர் குடும்பம். ஓடும் நாயை துரத்தி சென்று சாலையில் கார் விபத்தில் இறந்துவிடுகிறான். 8 மாதங்கள். இருவரும் பையனின் நினைவுகளில் வதைபடுகிறார்கள்.

நாயை அம்மா வீட்டில் விட்டுவிடுகிறாள். அவனின் உடைகளை பிறக்கப்போகும் தங்கை குழந்தைக்கு தரலாம் என எண்ணுகிறாள். தங்கை நாசூக்காய் மறுக்கிறாள். அனாதை நிலையத்திற்கு தந்துவிடுகிறாள். வீட்டை விற்றுவிடலாம் என கணவனிடம் சண்டையிடுகிறாள். பையனின் இழப்பை ஏற்றுக்கொள்வோம். அதற்காக எல்லா அடையாளங்களையும் அழிப்பது சரியில்லை என அவன் சண்டையிடுகிறான்.

மெல்ல மெல்ல பையனின் நினைவுகளிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்களா என்பது முழு நீளக்கதை!

*****
தாத்தா, அம்மா என வயதானவர்களின் இழப்பையே பலரால் தாங்க முடிவதில்லை. குழந்தைகளின் இழப்போ தாங்க முடியாதது.

தனது எட்டு வயது மகன் இழப்பு குறித்து மூலதனம் புத்தகம் எழுதிய மார்க்ஸ் தனது நண்பன் எங்கெல்ஸ்சுக்கு எழுதுகிறார்.

”எங்கள் இல்லத்தின் ஜீவனாக விளங்கிய குழந்தையின் மரணத்திற்கு பிறகு எங்கள் வீடு முற்றிலும் வெறுமையுடன் பாழடைந்து காட்சியளிக்கிறது. எந்த அளவுக்கு குழந்தையின் இழப்பைக் காண்கிறோம் என்பதை என்னால் சொல்லமுடியாது. நான் ஏற்கனவே எல்லா துயரத்தையும் அனுபவித்தவன். ஆனால் இப்பொழுது தான் உண்மையான துயரம் என்ன என்பதை கண்டுள்ளேன். முற்றிலும் நெஞ்சடைத்து நிற்கிறேன்”
.
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மகனின் இழப்பு குறித்து…

"அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஒருமுறை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தோம். அங்கே ரிசப்ஷனில் மீன் தொட்டியில் நீந்திட்டிருந்த மீன்களைப் பார்த்ததும் என் ரெண்டு வயசு சித்து கேட்டான், ‘ஏம்ப்பா, இந்த ஃபிஷ்லாம் ஹாஸ்பிடல் வந்திருக்கு. இதுக்கெல்லாம் உடம்பு சரியில்லையா?’ அப்படிக் கேட்ட குழந்தையை, இன்னொரு நாள் அதேபோல ஒரு ஹாஸ்பிடலில் தொலைக்கப்போறேன்னு எனக்கு அப்போ தெரியாது.

கீழே போறேன். என் மனைவி முழிச்சுக்கிட்டா. ‘பையன் கண்ணைத் திறந்துட்டானா’ன்னு கேட்கிறா. ‘கண்ணை மூடிட்டான்’னு சொல்ற தைரியம் என்கிட்டே இல்லை. என் மகனைத் தொட்டுப் பார்க்கிறேன். அவன் உடம்பு சில்லுன்னு ஐஸ் மாதிரி இருக்கு. வழக்கமா அவன் உடம்பு சூடா இருந்தா, பதறுவேன். முதலும் கடைசியுமா அவன் உடம்பு சில்லுன்னு ஆனதுக்காகப் பதறினேன்.

காலமும், சக மனிதர்களும் தான் காயத்தை ஆற்றக்கூடிய அருமருந்து. படத்தில் நடித்த அனைவரும் இயல்பாக வலம்வந்தார்கள். 

பார்க்கவேண்டிய படம். பாருங்கள். தமிழிலும் கிடைக்கிறது.

மயிரிழையில்...!


காரைக்குடி வரை சொந்தவேலையாக போயிருந்தேன். 15 வருடங்கள் ஓடிவிட்டன. பெரிதாய் மாற்றமில்லை. எங்கேயாவது போகலாம் என தேடிப்பார்த்தால்.. சுற்றி சுற்றி கோயில்கள் தான் இருந்தன.

இரவு 9 மணிக்கு பழைய பேருந்து நிலையம் சென்றேன். அரசு பேருந்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தேன்.

பேருந்துக்கு வாசல் அருகே, இரண்டு ஆச்சிகள் "இதெல்லாம் இருக்கைகளா? இதில் ஏறி, சென்னை வரை எப்படி போகமுடியும்? நாளைக்கு போய் எந்த வேலையாவது செய்யமுடியுமா?" என கோபமாய் பேசிக்கொண்டு இருந்தார்கள். எட்டிப்பார்த்தேன். படுமோசமாக தான் இருந்தன. நடத்துநர் ஏதும் பேசவேயில்லை.

ஆச்சிகளிடமே கேட்டேன். இது 9.30 மணியா? என்றேன். 9 மணி என்றார். மயிரிழையில் தப்பித்தேன். "முன்னாடியெல்லாம் குறைவா இருந்தது. இப்பத்தான் தனியார் அளவிற்கு வாங்குகிறார்களே? பிறகென்ன ஒழுங்கா பராமரிக்கலாமே!" என்றார் என்னைப் பார்த்து! பெரிதாய் தலையாட்டி ஆமோதித்தேன்.

தமிழ்நாட்டில் அண்ணா காலத்தில் அரசுடைமையாக்கினார்கள். பட்டி தொட்டியெல்லாம் அரசு பேருந்துகள் ஓடின. மக்கள் பயன்பெற்றார்கள். 20 வருடங்கள் பிரச்சனையேயில்லை. லாபம் அதிகமாய் வந்து, போக்குவரத்து கழகம் சார்பில் சில கல்லூரிகள் கட்டியிருக்கிறார்கள். ஆராய்ச்சிக்கெல்லாம் காசு செலவழித்திருக்கிறார்கள்.

அடுத்த 20 வருடங்கள். தனியார்மய காலம். புதுசு புதுசா கிரியேட்டிவா சிந்தித்து பல்லாயிரம் கோடிகள் கடனாளியாக்கிவிட்டார்கள். 60% க்கும் மேலாக காலாவதியான பேருந்துகளை உயிரை கையில் பிடித்து கொண்டு, வண்டிகளை ஓட்டுகிறார்கள். அவர்களுடைய வைப்பு நிதியையும் தின்று தீர்த்துவிட்டார்கள். கடுப்பாகி பழனியில் ஒரு ஊழியர் மோசமான பேருந்துகளை காணொளியாக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை பள்ளிகளுக்கு உதவ சொல்லி அவ்வப்பொழுது அமைச்சர் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அது போல போக்குவரத்து கழகத்தில் பயணித்த முன்னாள் பயணிகளிடம் கெஞ்சமுடியாது அல்லவா!

அரசுத்துறைகளை தனியார்மயமாக்குவதை மத்திய மாநில அரசுகள் கவனமாக செய்துவருகிறார்கள். அதற்காக மக்களுடைய மனதையும் தயார் செய்துவருகிறார்கள். கோபமாய் பேசிய ஆச்சி கூட "நாம் டிக்கெட் போடும் பொழுதே வேணாம்னு சொன்னேன். நீ தான் கேட்கலை" என்றார் சக ஆட்சியிடம்!

கல்யாணம், கருமாதிக்கு ஊர்ப்பக்கம் போய்வருகிறேன். வெகுசீக்கிரத்தில் அதுக்கும் வழியில்லாமல் செய்துவிடுவார்கள்.

The Machinist (2004)

கதை. ஒரு தொழிற்சாலையில் கடைசல் வேலை (lath work) செய்யும் தொழிலாளி. திருமணமாகி குழந்தை உண்டு. இப்பொழுது பிரிந்து வாழ்கிறார்கள். 

அவனுடைய கவனச்சிதறலால் சக தொழிலாளி தன் கையை இழக்கிறார். அவனுடைய நடத்தையில் ஏற்படும் மாற்றம் சுற்றியுள்ள பலருக்கும் பிடிக்காமல் போகிறது.

அவனை கொலை செய்ய ஒரு தடியன் துரத்திக் கொண்டே இருக்கிறான். அதனால் எப்போதும் பதட்டமாக இருக்கிறான். அடிப்படையில் எல்லாவற்றுக்கும் காரணம் தூக்கமின்மை (Insomnia) நோயினால் சிரமப்படுகிறான். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டானா என்பது மீதி கதை.

****

இது ஒரு மன அழுத்த படம் (Depression) என சொல்லலாம்.

உடல் நலம் குன்றினால் உடனே மருத்துவர்களிடம் சென்று விடுகிறோம். ஆனால், மனரீதியாக நோய்வாய்ப்பட்டால் மனநல மருத்துவரை நம்மில் பலரும் அணுக மறுக்கிறோம். நன்கு படித்தவர்கள் கூட தயங்குகிறார்கள். சுற்றி உள்ளவர்கள் நம்மை பைத்தியமென சொல்லிவிடுவார்கள் என்ற பயம். இதனால் சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சினையாக்கி விடுகிறோம்.

படத்தில் நாயகனுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அதற்குப் பிறகு உரிய மருத்துவம் தரப்படாததால் தான் மிகவும் சிக்கலாகி கொண்டே போகிறான். குடும்பமாக இருந்தால் கூட உதவுவார்கள். அவனோ தனியாக இருக்கிறான். நிலைமை கைமீறி போய்விடுகிறது.

படத்தில் நடித்த கிறிஸ்டின் பலே இந்த கதைக்காக 30 கிலோவிற்கும் மேலாக எடையை குறைத்திருக்கிறார். அவரைப் பார்த்தாலே நமக்கு மன அழுத்தம் வந்துவிடுகிறது. 🙂 படம் முடியும் பொழுது தூக்கத்தின் மீது காதலே வந்துவிடுகிறது.

தமிழில் கிடைக்கிறது. எப்பொழுதும் பாருங்கள் என பரிந்துரைப்பது வழக்கம். இந்த படத்தை பரிந்துரைக்க தயக்கமாக இருக்கிறது.

கடல் பார்க்க அழகு!

மெரினா கடற்கரையில் குழந்தைகள் குதூகலமாய் அலைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர்களும் குழந்தைகளோடு போட்டிப்போட்டு அலைகளோடு
மல்லுக்கட்டி விளையாடுகிறார்கள்.

எனக்கு கடல் பார்க்கத்தான் அழகு. என் துணைவியாரும், என் பொண்ணும் அழைக்கும் பொழுது கூட அதிகபட்சமாய் கால்கள் மட்டும் நனைப்பதுண்டு.

கடல் சுனாமியாய் மாறி பல லட்சம் மக்களை கொன்று குவித்த கோரமான படங்கள் வெகுகாலம் மனதில் தங்கி இருந்தது. அதனால் சில வருடங்கள் கால்கள் கூட நனைக்காமல் இருந்ததுண்டு.

இப்பொழுது நீரோடு எனது உறவை நினைத்துப்பார்த்தால்... ஒரு விசயத்தை உணர்கிறேன்.

வைகையில் நீர் வரும் காலமெல்லாம் நண்பர்களுடன் குளித்திருக்கிறேன். அது உப்பாய் இருப்பதில்லை.

பாசனத்திற்காக திறக்கப்படும் நீண்ட கால்வாய்களில், பம்பு செட்டுகளில் குளித்திருக்கிறேன். அதுவும் உப்பாய் இருப்பதில்லை.

எங்கள் பகுதியில் இருக்கும் கண்மாய்களில், ஊர் குளங்களில் பல மணி நேரம் நண்பர்களுடன்
குளித்திருக்கிறேன். அதுவும் உப்பாய் இருப்பதில்லை.

விதவிதமான கிணறுகளில் நேரம் போவதே தெரியாமல் நிறைய உயரத்திலிருந்து தாவி தாவி குளித்திருக்கிறேன். அதுவும் உப்பாய் இருப்பதில்லை.

நீர் உப்பாய் இருப்பதால்,
கண்கள் எரிவதால்
பார்க்க மட்டும்
கடல் அழகாய் படுகிறது!

பின்குறிப்பு : கடல் மீது பிரியம் கொண்டவர்கள் கோபித்துக்கொள்ளாதீர்கள்.

The Invisible Guest

கதை. ஒரு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். திருமணமாகி கைக்குழந்தை உண்டு. இன்னொரு காதலியும் உண்டு.

காதலி கொலை செய்யப்படுகிறாள். பூட்டிய ஹோட்டல் அறையில் கொலை என்பதால், காதலியுடன் இருந்த நாயகன் தான் கொலை செய்துள்ளார் என வழக்கும் நடக்கிறது.


இந்த கொலையை விசாரிக்கும் பொழுது, இன்னொரு விபத்தும், மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க அதை நாயகனும், காதலியும் மறைத்த விசயமும் வெளிவருகிறது.

கொலையை செய்தது யார் என இறுதியில் தெரியும் பொழுது நமக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது.

****

இந்த படம் பெற்றோரே தன் மகளை கொலை செய்ததாக நடந்த வழக்கை ஒட்டி எடுக்கப்பட்ட Talvar படத்தை எனக்கு நினைவுப்படுத்தியது.

படம் சொல்லும் நீதி என 'உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும்' என சிலர் எழுதியிருக்கிறார்கள். அரசியல் செல்வாக்கும், அதிகார செல்வாக்கும், பொருளாதார செல்வாக்கும் கொண்டவர்கள் தண்ணி குடிக்காமலே தப்பித்துவிடுகிறார்கள். அதற்கு லட்ச உதாரணம் சொல்லமுடியும்.


படம் பல திருப்பங்களுடன், துவக்கத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்புடன் செல்கிறது. தமிழில் கிடைக்கவில்லை. ஆங்கில சப் டைட்டிலும் சரியாக பொருந்தாமல் போனதால், கொஞ்சம் மண்டை சூடாகிவிட்டது. 🙂

படம் சூப்பர் ஹிட்டாகிவிட்டதால், இந்தியில் முறையாக வாங்கி, அமிதாப்பும், தாப்ஸியும் நடித்து Badla என வெளியாகியிருக்கிறது.

தாப்ஸிக்காக நாயகன் கதாபாத்திரத்தை நாயகியாக மாற்றிவிட்டார்கள். இந்திய 'பண்பாட்டு' சூழலில் இப்படி மாற்றியது ஆச்சர்யம் தான்!

பார்க்கவேண்டிய திரில்லர் படம் தான்!

Indiana Jones and Raiders of the lost ark (1981)

- இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

கதை. 1936ல் பயணிக்கிறது. நாயகன் அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர் மட்டுமில்லை. தேடும் பொருளுக்காக ஆபத்தான பயணங்களையும் மேற்கொள்கிற ஆள்.

துவக்கத்தில் பெருவில் இருக்கும் ஒரு தங்க விக்ரகத்தை (Idol) தேடிப்போகிறார். பல சோதனைகளுக்கு பிறகு அடைந்தாலும், கடைசி நேரத்தில் வேறு ஒருவன் கைப்பற்றி கொள்கிறான்.

இராணுவத்தை சேர்ந்த இரண்டு புலனாய்வுகாரார்கள் இவரை தேடி வருகிறார்கள். எகிப்தில் இருக்கும் ஒரு முக்கியமான தொல்பொருளை எடுத்துவரச்சொல்லி பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். இதே பொருளை ஜெர்மன்காரர்களும் வெறித்தனமாக தேடுகிறார்கள் என்ற தகவலையும் சொல்கிறார்கள்.

நேபாளத்திற்கு போய், நாயகியை அழைத்துக்கொண்டு எகிப்துக்கு செல்கிறார். ஜெர்மன்காரர்களுடன் மல்லுக்கட்டி பல்வேறு சாகசங்களுக்கு பிறகு தொல்பொருளை அடைந்தாரா என்பது முழு நீளக்கதை!

*****
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-க்கு ஜேம்ஸ்பாண்ட் படம் எடுக்கவேண்டும் என ஆசை. பார்ட்னர் ஒத்துக்கொள்ளவில்லை என இந்த வகை கதையை கையில் எடுத்ததாக சொல்வார்கள். பெரு-வில் நடக்கும் சம்பவம் கூட ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வழக்கமாக இருக்கும் சாகசம் போல தான் இருக்கும்.

ஹாரிசன் போர்டு தான் நாயகன். இந்த படம் எடுக்கும் பொழுது நாற்பதை நெருங்கி கொண்டிருந்தாலும், படத்தில் அத்தனை சுறுசுறுப்பு. ஓடி, வண்டியில் தொற்றி, உருண்டு, புரண்டு நடித்திருப்பார். இப்பொழுது மனுசனுக்கு வயசு 75ஐ தாண்டிவிட்டது. 2021ல் வர இருக்கிற ஐந்தாவது பாகத்திலும் நடிப்பதாக தகவல் சொல்கிறார்கள். ஆச்சர்யம்.

முன்பெல்லாம் சில நல்ல படங்களை அவ்வப்பொழுது குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடுவார்கள். அதற்கென்றே சில திரையரங்குகள் ஊரில் இருக்கும். அப்படி இந்த படத்தை 1990களில் மொழி புரியாவிட்டாலும், ஆ-வென ஆச்சர்யத்துடன் பார்த்த படம்.

எட்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, ஐந்து பிரிவுகளில் படம் வென்றிருக்கிறது. வெளியான வருடத்தில் அதிக வசூலை செய்தப்படம் என்றும் சொல்கிறார்கள்.

தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.

I am legend (2009)

கதை. புற்றுநோய்க்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து சிக்கலாகி, மனிதர்களை ஜோம்பிகளாக (Zombies) மாற்றுகிறது.

காற்றில் பரவும் வைரசால், பாதிக்கப்பட்டவர்களை நியூயார்க்கில் அம்போவென விட்டுவிட்டு நகரம் முற்றிலும் துண்டிக்கப்படுகிறது.

நாயகன் ஒரு மருத்துவர். தன் துணைவியாரையும், பெண்ணையும் அனுப்பி வைக்கும் பொழுது, விமானம் விபத்துக்குள்ளாகிறது.

காற்றில் தாக்கும் வைரசிலிருந்து அபூர்வமாய் தப்பித்து, துணைக்கு ஒரு நாயுடன், மாற்று மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியாளாக ஈடுபடுகிறார்.

மருந்து கண்டுபிடித்தாரா? மக்களை காப்பாற்றினாரா என்பது முழு நீளக்கதை.

****

எவ்வளவு பரபரப்பான நகரம் நியூயார்க். மனித நடமாட்டமே இல்லாமல், கான்கிரீட் காடுகளில் புல் முளைத்து, மான்களும், சிங்கங்களும் சுற்றி வருகின்றன. அந்த சூழலே புதிதாகவும், திகிலாகவும் இருக்கிறது.

மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாக தாங்குகிறார் வில்ஸ்மித். தனக்கு இருந்த ஒரே துணையான நாயும் பாதிக்கப்படும் பொழுது, துடிக்கும் துடிப்பு இருக்கிறதே!

கேஸ்ட் அவே (Cast Away) படத்தில் தனித்துவிடப்பட்ட தீவில் பேச்சு துணைக்காக இருக்கும் புட்பாலை இழக்கும் பொழுது அழுது தவிப்பாரே! அதற்கு இணையானது.
ஜோம்பிகளாக இருப்பவர்கள் மிருக நிலைக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பார் படத்தில். எனக்கென்னவோ எந்தவித சமூக பிரக்ஞையும் இல்லாமல், தான் உண்டு தான் வேலை உண்டு இருப்பவர்கள் கூட ஜோம்பிகளாக தான் தெரிகிறார்கள்.

தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்

இ.எஸ்.ஐ மருந்து ஊழல்!

கடந்த வாரம் வெளிவந்த செய்தியை கீழே தந்துள்ளேன்.

கடந்த இரண்டு வாரங்களில் இரண்டுமுறை இ.எஸ்.ஐ மருத்துவனை சென்றிருந்தேன்.
நோயாளிகளுக்கு தரப்படுகிற பெரும்பாலான மருந்துகள் பெரும்பாலும் அடுத்த மாதம் அல்லது மூன்று மாதங்களில் அதன் வாழ்வு (Expiry Date) முடிந்துவிடுபவையாக இருக்கின்றன. அவையெல்லாம் அபூர்வ மருந்துகள் அல்ல! வலி நிவாரணம், ஒவ்வாமை மற்றும் சத்து மாத்திரைகள் தான்!

உதாரணத்திற்கு வைட்டமின் பி12 மாத்திரைகளை ஒவ்வொரு நோயாளிக்கும் தினம் மூன்று விதம் 10 நாட்களுக்கு 30 மாத்திரைகள் என அள்ளித்தருகிறார்கள்.

அவைகளின் வாழ்வு (Expiry Date) அடுத்த மாதத்தோடு முடிய இருக்கின்றன. படம் பாருங்கள்.

எடப்பாடி, மோடி ஆட்சியில் ஊழல் மலிவாய் இருக்கிறது. அவர்கள் மருத்துவ துறையையும் விடவில்லை.

தொழிற்சங்கங்கள் இந்த ஊழலை தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்து செல்லவேண்டும். இ.எஸ்.ஐ காப்பாற்றப்படவேண்டும்.

****
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 68 ஆண்டுகள் ஆகின்றன. தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகள் செய்து தருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள். ஆனால் அனைத்துதுறைகளிலும் ஊழல் செய்வதை ஒரு முக்கிய வேலையாக கருதி செயல்பட்டு வருகிற அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை விதிவிலக்கல்ல.

தமிழகத்திலுள்ள 65 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரை மருந்துகள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் வாங்குவதற்கு கொள்முதல் திட்டம் ரூ.13.13 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் மத்திய மருத்துவ சேமிப்பு கிடங்கின் கண்காணிப்பாளர் மருந்துகளுக்கான கொள்முதல் தொகையை ரூ.40.29 கோடியாக தேவையில்லாமல் உயர்த்தி, தனியார் மருந்து நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்திருக்கிறார்.

இந்த ஆணை பிறப்பித்திருப்பதற்கு பின்னாலே மருத்துவதுறையின் உயர் அதிகாரிகள் செயல்பட்டிருக்கின்றனர். தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட மருந்துகள் கொண்ட நூற்றுகணக்கான அட்டைபெட்டிகள் மதுரை பிராந்திய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அலுவலர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைபெட்டிகளை வைப்பதற்கு இடமில்லாத காரணத்தால் பயன்படுத்தாத கழிவறைகளில் இவை வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ரூ.27.16 கோடிக்கு தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்ததில் நடைபெற்ற ஊழல் குறித்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் விசாரணை தொடங்கியது. ஆனால் அந்த விசாரணை தொடக்க நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

தமிழகத்தில் அமைய விருக்கிற புதிய ஆட்சியில் தொழிலாளர்களுக்காக நடத்தப்படுகிற இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்காக மருந்து கொள்முதலில் ஊழல் செய்த மருத்துவதுறை அதிகாரிகள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்

Hitch (2005)

ஆங்கில (விஜய்) ஷாஜகான் கதை. கல்லூரியில் படிக்கும் பொழுது மிகவும் சின்சியராக ஒரு பெண்ணை காதலிக்கிறான். அதே போல அவளும்! இவனின் அப்பாவித்தனமான அணுகுமுறையால் அவள் விலகிச் செல்கிறாள். அது அவனை மிகவும் பாதிக்கிறது.

திருமணம் செய்யும் நோக்கத்துடன் உண்மையாக பழக நினைக்கும் ஆண் காதலர்களுக்கு உதவுவதையே தன் தொழிலாக மாற்றிக் கொள்கிறான். இதை வெளிப்படையாக செய்தால் பிரச்சனை என ரகசியமாக செய்கிறான்.

ஒரு பெரிய பணக்காரி. அவளை விரும்பும் உதவி வரி கன்சல்டன்டாக (Tax consultant Assistant) வேலை செய்யும் ஒருவனை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறான்.

இதற்கிடையில் பிரபலங்களை பற்றி கிசுகிசு எழுதும் ஒரு பெண் பத்திரிக்கையாளரை நாயகன் காதலிக்கிறான். அவளும் விரும்புகிறாள்.

பெண்களை ஈர்ப்பதற்கு ஆண்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆளை கண்டுபிடித்து செய்தித்தாளில் அம்பலப்படுத்த துப்பறிகிறாள்.

ஒரு கட்டத்தில் தான் காதலிக்கும் நாயகன் தான் அந்த ஆலோசகர் என தெரியவர கோபத்தில் செய்தித்தாளிலும் எழுதிவிடுகிறாள்.

நாயகனின் நிலைமை மிகவும் சிக்கலாகி விடுகிறது. புரோக்கர் அளவிற்கு கிண்டல் கேலி செய்கிறார்கள். இதிலிருந்து மீண்டு வந்தனா என்பது ஒரு முழு நீளக்கதை!

****

இந்த படத்திலிருந்து சுட்டுத்தான், தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

சோர்வாக இருக்கும் பொழுது பார்க்க கூடிய ஜாலியான படங்களில் சந்தோசமாய் இந்த படத்தையும் சேர்த்துவிடலாம்.

ஆண் பெண் நட்பில் மேலை நாடுகளிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்றால்.. நம் போன்ற நாடுகளில் இடியாப்ப சிக்கல் தான்!

இதில் நாயகன் பண்ணும் வேலைகளை நம்மூரில் நண்பர்களே செய்துவிடுகிறார்கள். என்ன பல சமயங்களில் சொதப்பிவிடும்.

என்ன தான் சொல்லிக் கொடுத்தாலும், இயல்பு வெளிப்படும் அல்லவா! அதை டாக்ஸ் கன்சல்டண்ட் பாத்திரம் நன்றாக வெளிப்படுத்தியிருப்பார்.

என் வாழ்க்கையில் அப்படி ஒரு உதவி தேவைப்படவில்லை. பெண்களை இயல்பாக அணுகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த எழுத்து ஒரு நண்பனைப்போல உதவியது!