> குருத்து: July 2020

July 5, 2020

The Man from Nowhere (2010) தென்கொரியா

எங்கிருந்தோ வந்தான்

கதை. நாயகன் அந்த அபார்மென்டில் யாரிடமும் நெருக்கம் கொள்ளாமல், தனித்தே வாழ்கிறான். வீட்டிலேயே ஒரு அடகுகடை நடத்துகிறான். பக்கத்துவீட்டில் அம்மாவும், ஒரு குட்டிப்பெண்ணும் வாழ்கிறார்கள். அந்த பெண் இவனிடம் வந்து அவ்வப்பொழுது உரிமையாய் பேசுகிறது. ஆனால், இவன் சிடுசிடுவென பேசுகிறான்.

அந்த குட்டிப்பெண்ணின் அம்மா ஒரு பாரில் நடனக்காரியாக இருக்கிறார். அவளின் நண்பன் சொன்னான் என, ஒருவனிடமிருந்து போதை மருந்தை திருடுகிறாள். போதைக்கும்பலுக்கு தெரிந்துவிடுகிறது. வீட்டில் இருந்து இருவரையும் தூக்கி சென்றுவிடுகிறார்கள்.

நாயகன் சில ஆண்டுகள் ஏஜெண்டாக வேலை செய்கிறான். இவளை கொல்லும் முயற்சியில் கர்ப்பிணியாக இருக்கும் காதல் துணைவியாரை கொன்றுவிடுகிறார்கள். அதிலிருந்து தான் ஒதுங்கிவாழ்கிறான். தனக்கு ஒரு குழந்தை இருந்தால், இந்த வயதில் தானே இருக்கும் என்ற எண்ணத்தில், அந்த குட்டிப் பெண்ணுடன் பழகினாலும், வெளிக்காட்டாமல் இருந்துவருகிறான்.

இப்பொழுது கடத்தப்பட்டதும், அவளை மீட்க களத்தில் இறங்குகிறான். ஒருபக்கம் போதைக்கும்பல், இன்னொரு பக்கம் போலீசு என பர பரவென போகிறது. இறுதியில் அந்த பெண்ணை மீட்டானா என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

****
தெலுங்கில் மகேஷ்பாபு எதையாவது செய்வார் என எதிர்பார்ப்பது மாதிரியே கதையை கொண்டு செல்வார்கள். ஆனால், கடைசிவரை ஏதும் செய்யவே மாட்டார். இனிமேலாவது அவர் வேறு கதாபாத்திரங்களை ஏற்கவேண்டும் என விகடன் ஒருமுறை எழுதியிருந்தது.

இந்தப் படத்தில் அப்படி ஒரு பாத்திரம் தான் நாயகனுக்கும்! ஆனால், பார்ப்பவர்களை ஏமாற்றாமல், களத்தில் இறங்கி அடிக்கிறார். கொரியக்காரர்கள் அதிரடியான படமாக இருந்தாலும், உணர்வுபூர்வமாகவும் எடுக்கிறார்கள். இந்த படமும் அப்படித்தான்! நாயகனும் அந்த பெண்ணும் படத்தை தாங்குகிறார்கள்.

கொரியப் படங்களில் இந்தப் படத்தை குறிப்பிட்டு ஆங்காங்கே பலரும் எழுதுகிறார்கள். செம வசூல். இன்னும் வேறு படங்கள் இதன் வசூல் ரிக்கார்டை முறியடிக்கவில்லை என்று வேறு பில்டப் ஏற்றுகிறார்கள்.

சண்டை பிரியர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும்! கரோனா காலத்தில் பார்க்கலாம்.

பாலுமகேந்திராவின் "மூடுபனி" (1980)


கதை. நாயகனின் சிறுவயதில் அம்மாவை அப்பா கொடுமைப்படுத்துகிறார். வேறு ஒரு பெண்ணுடன் தன் சொந்த வீட்டிலேயே வாழ்கிறார். அம்மா செத்துப்போகிறார். வளர்ந்த பிறகு, பெண்களைப் பிடிக்கவில்லை. விலைமாதர்களை கண்டால், வெறிகொண்டு கொலைகளை செய்கிறார். மருத்துவரைப் பார்க்கும் பொழுது, "ஒரு நல்லப் பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொள்! சரியாகிவிடும்" என்கிறார்.

நாயகியைப் பார்க்கிறார். பிடித்துப்போகிறது. தன் விருப்பத்தை சிக்கலாக வெளிப்படுத்துகிறார். நாயகியோ வேறு ஒருவரை காதலிக்கிறார். பக்காவாக திட்டம் போட்டு, நாயகியை கடத்துகிறார். பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

****
படம் பார்க்கும் பொழுதே தோன்றியது. அம்மாவை கொடுமைப்படுத்துவது அப்பா. கொடுமை செய்கிற அப்பாமார்களை தேடித்தேடி கொலை செய்வது தானே நியாயம். எதற்கு விலைமாதர்களை கொலை செய்யவேண்டும்?

எளிய கதை தான். ஹிட்ச்காக்கின் சைக்கோ படத்தை தழுவி இந்தப் படத்தை பாலுமகேந்திரா எடுத்துள்ளார். நாயகனான பிரதாப்பும், நாயகியாக ஷோபாவும் மொத்தப்படத்தையும் தாங்கியிருக்கிறார்கள். இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் அருமை. மற்றபடி பானுச்சந்தர், மோகன் எல்லாம் வந்துபோகிறார்கள்.

ஷோபா இந்தப் படத்திற்கு பின்னால் தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய படப்பட்டியலை பார்த்தால், மிக நீண்டதாக இருக்கிறது. அதற்குள் பல விருதுகள். நல்ல பெயர்.

ஷோபாவின் தற்கொலை பாலுமகேந்திராவிற்கு நிறைய கெட்ட பேரை கொடுத்திருக்கிறது. படத்தின் துவக்கத்தில், "எனக்கு எல்லாமுமாய் இருந்த அன்பு மனைவி அம்மு (ஷோபா)வுக்கு ஆத்ம சமர்ப்பணம்" என டைட்டில் கார்டு போடுகிறார். அந்த சமயத்தில் ஷோபாவிற்கு வயது மிக குறைவு. பாலுமகேந்திரா நாற்பதை கடந்திருக்கிறார். பாலுமகேந்திரா தான் விலகியிருக்கவேண்டும். ஒரு நல்ல நடிகையை திரை உலகம் இழந்திருக்கிறது.

Confession of Murder (2012) - தென்கொரியா

கதை. பத்துப்பெண்கள் வரிசையாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். ஒருமுறை போலீசு அதிகாரி அவனை துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் பொழுது, வாயை கிழித்து, தப்பித்துவிடுகிறான். இது தான் தொடக்க‌ காட்சி.

15 ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. தென்கொரியாவில் ஒரு வழக்கை 15 ஆண்டுகளுக்குள் (year statute of limitations) முடிக்கவில்லை என்றால், இனி அவ்வளவு தான் என‌ முறையாக (Officially) ஊத்திமூடிவிடுகிறார்கள்.

அதற்கு பிறகு, ஒரு ஆள் பத்து கொலைகளையும் நானே செய்தேன் என ஒரு புத்தகம் எழுதி வெளியிடுகிறான். ஊரே பரபரப்பாகிவிடுகிறது. சில லட்சங்கள் புத்தகம் வெளியான உடனேயே விற்று தீர்ந்துவிடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டில் போய், மன்னிப்பு கேட்கிறான். பெரிய புகழ் கிடைக்கிறது. பத்து பெண்களில் ஒரு குடும்பத்தினர் அந்த கொலைகாரனை கொலை செய்யவேண்டும் என வெறியோடு முயல்கிறார்கள். இதற்கிடையில் "நான் தான் உண்மையான கொலைகாரன்" என புதிதாய் ஒருஆள் சொல்லி, அதற்கான‌ ஆதாரத்தையும் வெளியிடுகிறான். இன்னும் பரபரப்பாகிவிடுகிறது.

யார் உண்மையான கொலைகாரன்? என்பதை பர பர சேஸிங் சண்டை காட்சிகளுடனும், உணர்வுபூர்வமாகவும் சொல்கிறார்கள்.

*****
மெமரிஸ் ஆப் மர்டர் என ஒரு புகழ்பெற்ற கொரிய படம் உண்டு. அந்தப் படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்க மாட்டார்கள். அந்தப் படத்தின் தொடர்ச்சியைப் போல இந்தப் படம் என்கிறார்கள். கதை என்ற அடிப்படையில் சரிதான்.

'கொலைகாரனை' கொலை செய்ய துரத்தும் நெடுஞ்சாலை சண்டைக்காட்சியை அபாரமாக எடுத்திருக்கிறார்கள். சண்டை படமாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக எடுப்பதும் கொரியக்காரர்களுக்கு அருமையாக வருகிறது.

படத்தின் வெற்றியில் ஜப்பானிய மொழியில் 2017ல் எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தைத் தழுவி, மலையாளத்தில் Angels என்றொரு படத்தை எடுத்திருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது.

லாக்டவுனில் பார்க்ககூடிய படம். பாருங்கள்.

கரோனா : போலீசின் வாகனப் பறிப்பும், விடுவிப்பும்!

இரண்டு நாட்கள் எங்கேயும் வெளியே போகவில்லை. குப்பை கொட்டனும், இன்னும் சில அத்தியாவசிய‌ மளிகை, காய்கறி பொருட்கள் வாங்கவேண்டும். நம்ம ஏரியாவுக்குள்ளேயே சுத்தப்போறோம் என வண்டியை எடுத்தேன். தெருவைக் கடந்ததுமே ஒரு கான்ஸ்டபிள் நின்றுகொண்டிருந்தார். நானும், இன்னொரு நபரும் இணையாக செல்ல, அவரை கைக்காட்டினார். நான் போலீசை கடக்க முயன்றேன். பிறகு எனக்கும் குத்துமதிப்பாக கைகாட்டினார். நான் அவரை கொஞ்சம் கடந்துவிட்டேன். "என்ன மீறி போறீங்க?" என அதட்டினார். "அவருக்கு தானே சார் கை காட்டினீங்க! திடீர்னு எனக்கு கைகாட்டினா எப்படி சார்?" என்றேன். பிறகு ஏதும் சொல்லவில்லை.

எனக்கு முன்பாக ஏழு பேர் காத்திருந்தார்கள். ஒருவர் காரில் வந்தார். அவரை விசாரித்தால், தன் குழந்தைக்கு பால் வாங்க வந்ததாக தெரிவித்தார். அவருடைய காரில் பின்சீட்டில் குழந்தைகளுக்கான‌ விளையாட்டு சாமான்கள் இருந்தன. "பால் வாங்க காரில் யாராவது வருவார்களா?" என்றார். "சார் கடை ஏதும் இல்லை. இரண்டு கிலோமீட்டரா வரிசையா தேடிட்டு வர்றேன்" என்றார். திரும்ப போலீசே "காலையிலேயே வாங்கி வைச்சிருக்கனும்." என்றார். "நான் இந்த ஏரியாவிற்கு புதுசு சார்" என்றார். காரில் வந்தவரால் இருப்பு கொள்ளவில்லை. அவருடைய குழந்தை நினைப்பில் பதட்டமாகவே இருந்தார். என் வண்டியில் குப்பை இருந்தது. எப்படி கொட்டுவது? என யோசித்துக்கொண்டிருந்தேன். அருகில் நின்றிருந்த இளைஞர் கையில் ஒரு ரவை பாக்கெட் வைத்திருந்தார். காலை டிபன் போச்சு!

ஒரு ஐம்பது வயதுகாரர் வந்தார். நிறுத்தினார்கள். அவர் ஏதோ சொல்லிப் பார்த்தார். நிற்க சொன்னார்கள். அவர் யார் யாருக்கோ போன் செய்து, போலீசுகாரரிடம் கொடுத்தார். வாங்கி பேசிவிட்டு, அவரை அனுப்பினார். இன்னொருவரும் அதே போலவே யாரிடம் சீரியசாக போய்க்கொண்டிருந்தார். ஒரு அதிமுக கட்சி கொடியோடு ஒரு வண்டி போனது. போலீசுகாரர் நிறுத்தவேயில்லை. என்னிடம் செல்போன் இல்லை. இருந்தால், யாருக்கு பேசியிருக்கலாம் யோசித்தால், அதிகார வர்க்கம், தேர்தல் அரசியல் கட்சியாளர்கள் யாரோடும் நமக்கு உறவும் இல்லை. நமக்கு 'செல்வாக்கு' இல்லை என்பது பளிச்சென புரிந்தது. அப்படியே பேசினால் கூட, "நீ ஏன்ப்பா வண்டியெல்லாம் எடுத்துட்டு போற!" என அட்வைஸ் வேறு செய்வார்கள்.

பத்து வண்டிகள் வரை சேர்ந்துவிட்டது. ஆனால், ஐந்து பேரிடம் மட்டும் செல்போனை வாங்கிக்கொண்டனர். மிச்ச ஐந்து பேரும் உடன் வரவில்லை. என்ன கணக்கு? புரியவில்லை. ஒரு இளைஞர் வந்தார். என்னிடம் செல்போன் இல்லாததால், இடையிலேயே போய்விடக்கூடாது என்பதற்காக என் பைக்கிலேயே அந்த இளைஞர் வந்தார். குறுக்குப்புத்தி. நன்றாக சிந்திக்கிறது. ஆள் ரெம்ப குட்டையாக இருந்தார். போலீசு இல்லை. "நீங்க யார்? வாலண்டியரா?" என்றேன். "நான் ஸ்டேசன் ஸ்டாப்" என்றார். அரசாங்கம் இப்படி வேலைக்கு ஆள் நியமிக்கிறதா என்ன? மாதாமாதம் ஸ்டேசனுக்கு வரும் லஞ்ச பணத்தில் சம்பளம் கொடுப்பார்களோ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பகுதியில் இருந்த‌ வேலம்மாள் பள்ளியின் பார்க்கிங் பகுதியை போலீசு இப்படி பிடிக்கப்பட்ட வண்டியை நிறுத்த பயன்படுத்துகிறார்கள். ஏற்கனவே 200 பைக்குகள் மேல் நிறுத்தியிருந்தார்கள். 10 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எங்களுக்கு முன்பே சில பேர் வண்டி, தன் விவரம் கொடுக்க காத்திருந்தார்கள்.

அங்கு ஒரு பெண் ஆய்வாளர், இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒருவர் மப்டியில் இருந்தார்கள். இருவர் வண்டி விவரங்களை பதிவேடுகளில் பதிவதில் மும்முரமாக இருந்தார்கள். சுற்றி நின்றவர்களில் சிலர் போனில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் அந்த ஆய்வாளரிடம் போனை கொடுத்தார். பேசியவர் சென்னையில் ஒரு பகுதியில் போலீசு அதிகாரியாக இருக்கிறார் என்பது புரிந்தது. இருவரும் பேசிக்கொண்டார்கள். அந்த அம்மா போனில் பேசியவரிடம் "இப்படி பிடிச்சுட்டு வந்தவங்கள எல்லாம் விட்டுட்டா, யார் வண்டியைத் தான் பிடிச்சு கேஸ் போடுறது!" என அலுத்துக்கொண்டார்.

சில நிமிடங்களில், இன்னொருவர் தன்னிடமிருந்த பாஸை காட்டினார். அந்த ஆய்வாளர் "இது பழசாச்சே!" என்றார் கோபமாய். உடனே, அவர் செல்போனில், புதிதான பாஸை காட்டினார். "இதை புடிக்கும் பொழுதே காட்ட வேண்டியது தானே!" என்றார் கோபமாய்! "நான் காட்டினேன். அவர் வாங்கிப் பார்க்காமலேயே கூட்டி வந்துவிட்டார்" என்றார்.

இப்படி வரிசையாய் போன் கொடுப்பதை தவிர்க்க, "யாரும் போன் பேசக்கூடாது" என சத்தமாய் சொன்னார். இன்னொருவர் இப்பொழுதும் பேசிக்கொண்டிருந்தார். உடனே அவரை மிரட்டினார். "ஹாஸ்பிட்டலிருந்து போன் மேடம். ஹவுஸ்கீப்பிங்‍‍லிருந்து கூப்பிடறாங்க!" என்றார்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் "(அதிகாரத்தில் இருப்பவர்கள்) தெரிஞ்சவங்க பேசினா உடனே விடுறீங்க. என்னையும் விடுங்க." என்றார். தானும் ஒரு முக்கிய அலுவலகத்தில் வேலை செய்வதாக இந்தி ஸ்லாங்கில் சொன்னார். இப்படி எல்லாம் பேசினால், போலீசுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். கேள்வி கேட்பது அவர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது! அவரை உடனே வெளியே போகச் சொல்லி மிரட்டினார்கள். "எனக்கும் ஆட்கள தெரியும். நான் பார்த்துக்கிறேன்" என கோபமாய் சொல்லிக்கொண்டே கிளம்பினார்.

இப்பொழுது இன்னொருவர் வந்து போனை நீட்டினார். போனில் பேசியவர் பெரிய அதிகாரி போல! அந்த ஆய்வாளர் "நீங்க தான் உத்தரவு போடுறீங்க! நீங்களே விடவும் சொல்றீங்க! இங்க நிலைமை சரியில்லை சார். சொன்னா புரிஞ்சுக்குங்க!" என்றார்.

போனை வைத்ததும், உடனே ஒரு சவுண்ட் விட்டார். "இங்க வண்டிக்கு விவரம் கொடுத்தவங்கள தவிர, மற்றவங்க வெளியே போங்க! காத்திருக்கிறவங்க அவங்க செல்போனை எல்லாம் இங்க கொண்டு வந்து வைங்க" என்றார். யாரும் இப்படி பேசுவதை வீடியோ எடுத்துவிடக்கூடாது என்ற கவனம் இருக்கும் போல!

போலீசுகாரர்களுக்கு கொரானா பற்றிய பயம் இருந்தது. ஆனால், வரிசையை ஒழுங்குப்படுத்தவும் இல்லை. ஆனால், அதிகாரத்தோடு மரியாதை இல்லாமலும், கோபமாக திட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருந்தார்கள்.

நான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்துகொண்டேன். நடந்தவைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக வந்தவர்களுடைய விவரத்தை கேட்க ஆரம்பித்தார்கள். "நான் முன்னாடியே வந்துவிட்டேன். பின்னாடி வந்தவங்கள பதியறீங்க!" என குரல் கொடுத்தேன். உடனே என்னை அழைத்தார்கள். பெயர், செல்போன், முகவரி, வண்டி விவரம் கேட்டார்கள். அந்த பதிவேட்டில், என்னுடைய துணைவியார் பெயரையும், என் குழந்தை பெயரையும் கேட்டார்கள். "ஏங்க நான் மட்டும் தானே வந்தேன். குடும்பத்தோடு வந்ததா எழுதுறீங்களா?" என்றேன் சீரியசாய். எழுதிக்கொண்டிருந்த‌ அந்த பெண் கான்ஸ்டபிள் சிரித்துவிட்டார். ஆனால், பதில் சொல்லவில்லை. என்னுடைய அங்க அடையாளங்கள், போட்டிருந்த ஆடைகள் விவரம் என எல்லாவற்றையும் பதிந்துகொண்டார்கள். வண்டியை பெற்றுக்கொண்டதற்கு எந்தவித ரசீதும் தரவில்லை. கேட்டதற்கு "உங்க வண்டியெல்லாம் பத்திரமா இருக்கும். நாங்க கூப்பிடுவோம்!" என்றார்கள். கிளம்பினேன்.

கரோனாவை கட்டுப்படுத்தவேண்டும் என்ற உணர்வை விட, போலீசுகாரர்களுக்கு, தினமும் இத்தனை வண்டியை பிடித்தோம் என்ற கணக்கு காட்டவேண்டும் என்ற சடங்குத்தனமான வேலை பாணி தான் இருந்தது. அங்கு நின்றிருந்த வண்டிகள் எல்லாம் எந்தவித அதிகார தொடர்பு இல்லாதவர்களுடைய வண்டிகளை பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். உலகம் எப்பொழுதும் இரண்டாக தான் இயங்கிகொண்டு இருக்கிறது.

Forensic, Witch, Ready or Not, IP Man 4 - ஒரு பார்வை


  சமீபத்தில் பார்த்த படங்கள் ஒரு பார்வை

Forensic (2020) மலையாளம்

மம்தா போலீசு அதிகாரியாகவும், தடய அறிவியல் நிபுணராக டேவினோ தாமஸ் நடித்தப்படம். பெண் குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்படுகின்றனர். யார் கொலைகாரன் என்பதை துப்பறிந்து கண்டறிகிறார்கள். இறுதிக்காட்சிகள் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது அல்லது லாஜிக் இல்லாமல் இருந்தது.
மலையாள படங்கள் நேராக செல்லாமல், கொஞ்சம் வளைந்து, நெளிந்து செல்வது போலவே இந்த படமும் இருக்கிறது. திரில்லர் படங்கள் பார்ப்பவர்கள் பார்க்கலாம்.

Witch (2018) தென்கொரியா

சிறுவர் சிறுமிகளை வைத்து ஆய்வு செய்கிறார்கள். அங்கிருந்து ஒரு சிறுமி தப்புகிறாள். ஒரு குடும்பத்தில் வளர்ந்து பெரியவளானதும், சில அறிகுறிகளால், வில்லன் கும்பலுக்கு தெரியவர, பிறகு என்ன ஆகிறது என்பதை ரத்த களறியாக சொல்லியிருக்கிறார்கள்.

அமெரிக்க X Men சீரிஸ் படங்களைப் போல, கொரியாவிலும் முயற்சி செய்திருக்கிறார்கள். இது முதல்படம். இனிமேல் வரிசையாக வரும். முதல்படம் அதற்குரிய குறைவான ரத்தக்களறியுடன் இருக்கிறது. அடுத்தடுத்தப் படங்களை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. இந்த பாகம் எனக்கு பிடித்திருந்தது.

Ready or Not (2019)

அந்த பணக்கார குடும்பத்தில் நாயகனுக்கு திருமணம் ஆகிறது. அந்த குடும்பத்தின் பாரம்பரியத்தின்படி, திருமணமான இரவு ஒரு விளையாட்டு விளையாடியே ஆகவேண்டும். அந்த பெரிய வீட்டில், புதிதாய் வந்த மணப்பெண் ஒளிந்துகொள்ளவேண்டும். சும்மா ஒரு விளையாட்டு தானே என ஒத்துக்கொள்கிறாள். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் ஆளாளுக்கு ஒரு கொலை கருவியோடு கொல்ல விரட்டுகிறார்கள். பிறகு சைக்கோ குடும்பத்துடன் சிக்கிவிட்டோம் என உயிர்ந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறாள். இறுதியில் என்ன ஆனது என்பதை பரபரவென சொல்லியிருக்கிறார்கள். நார்மலான படம். விறுவிறுவென படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்.

IP Man (2019) The Finale

IP Man சீன குங்குபூ தற்காப்பு கலை ஒன்றில் தேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர். அவர். 1937ல் சீனாவில் துவங்கிய முதல் பாகம். நாலாவது பாகத்தில் 1964ல் கதை நடக்கிறது. அவருடைய துணைவியார் இறந்துவிடுகிறார். அவருக்கு தொண்டையில் கேன்சர் வந்துவிடுகிறது. அவருடைய பையனை அமெரிக்கா போய், அங்குள்ள பள்ளியில் சேர்க்க முயல்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொழுதே, உள்ளூரில் சீனர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுடன் எப்படி எதிர்கொண்டார் என்பதை மீதிக்கதையில் சொல்கிறார்கள்.

உண்மைக்கதை என்பதால், அதற்குரிய இயல்புகளுடன் இருக்கிறது. திரைக்கென்று சில மாற்றங்கள் செய்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அவருடைய சீடர்களில் ஒருவரான ப்ரூஸ்லீயும் ஒரு பாத்திரமாக வருகிறார். அவரைப் போலவே ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மாஸ்டர் இறுதியில் இறந்துவிடுவதால், இனி இந்த பாகம் தொடராது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். எனக்கு பிடித்தது போலவே, உங்களுக்கும் பிடிக்கும்.

9 ‍ (2019) மலையாளம்

கதை. நாயகன் வானவியல் (astrophysicist) ஆய்வாளர். பால்வெளியில் இருந்து பூமியை நோக்கி ஒரு வால் நட்சத்திரம் வந்துகொண்டிருக்கிறது. அது பூமிக்கு வந்த பிறகு, 9 நாட்களுக்கு மின்சாரமோ, இணையமோ, மின்வாகனங்களோ எதுவுமே இயங்க போவதில்லை என மக்களுக்கு விளக்குகிறார்.

அந்த ஒன்பது நாளும் இமயமலை அருகே இருக்கும் தன் வீட்டில் தங்கி, ஆய்வு செய்ய சொல்லி, அவருடைய சீனியர் ஒரு வேலையை கொடுக்கிறார். நாயகன் காதலித்து மணந்த‌ துணைவியார் முதல் பிரசவத்தில் இறந்துவிடுகிறார். அந்த இழப்பு அவருக்கு தாங்கமுடியாததாக இருக்கிறது. தனது 10 வயது மகனுடன், ஒரு ஆய்வுக் குழுவையும் அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்.

அங்கு எதைச்சையாய் வந்து சேர்கிற இவா என்கிற பெண்ணால், நிறைய திகில் சம்பவங்கள் நடக்கின்றன. மகனை கொல்ல முயற்சி நடக்கிறது. உதவியாளர் ஒருவர் ஐசியூவில் சேர்க்கப்படுகிறார்.

எல்லாவற்றையும் எதிர்கொண்டு, ஊர் வந்து பத்திரமாக‌ சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை!

***
என்னடா விஞ்ஞான படம் போல பில்டப்பா துவங்கி, எங்கெங்கோ போகிறது என யோசித்தால், முடிவில் அதற்கான விளக்கம் கொடுக்கும் பொழுது, அப்பாடா என்றிருக்கிறது!

நாயகன் பிரித்திவிராஜ், துணைவியாக வரும் மம்தா, மகன் ஆதாம், இவாவாக வரும் (மாலை நேரத்து மயக்கத்தில் வந்த) வாமிகா படத்தில் முக்கிய பாத்திரங்கள். நன்றாக செய்திருக்கிறார்கள். சீனியர் ஆராய்ச்சியாளராக வரும் பிரகாஷ்ராஜ் படத்தை துவங்கி வைத்து, முடித்தும் வைக்கிறார். ஆளை இப்பொழுது நிறைய பார்க்கமுடியவில்லை. சுஷாந்த் சிங் மரண விவகாரம் குறித்து பலரும் பேசும் பொழுது, "தானும் கடுமையாக தனிமைப்படுத்தப்பட்டதாக" வருத்தப்பட்டிருந்தார். ஒரு கலைஞன் சமூக பொறுப்புடனும் இருக்கவேண்டும் என்பதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் நல்ல எடுத்துக்காட்டு. அவர் மீண்டும் பழையபடி படங்களில் வரவேண்டும்.

படம் ஒரு சைக்காலஜி திரில்லராக பார்க்கும்படி வந்திருக்கிறது. பாருங்கள்.

12 Angry Men (1957)

"நீதி புலன்களால் அறியமுடியாத பொருளாகும். அதனை உணர மட்டுமே இயலும்."
"மனிதனை மனிதன் சுரண்டாத சமுதாயத்தில், ஒரு சிலருடைய நன்மைகளுக்காக பலர் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியதாக இருக்காத சமுதாயத்தில் மட்டுமே சமுதாய நீதியை நிலை நாட்ட இயலும்"
- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம் தொகுப்பிலிருந்து...

****
கதை. 18 வயது பையன் தன் தந்தையை கொன்றுவிட்டான் என்பது வழக்கு. சந்தர்ப்பங்களும், சாட்சிகளும் அவன் குற்றவாளி என்கிறார்கள்.

நீதிபதி சமூகத்தில் வெவ்வேறு தகுதிகளில் இருக்க கூடிய 12 பேரை ஜுரிகளாக நியமித்து, அந்த பையன் குற்றவாளியா இல்லையா என்பதை விவாதித்து முடிவைச் சொல்ல சொல்கிறார். அதன்படி தான் தீர்ப்பு என்கிறார்.

விவாதம் தொடங்கும் முன்பே, எத்தனை பேர் குற்றவாளி என வாக்கெடுப்பு நடத்தும் பொழுது, 11 பேர் "குற்றவாளி" என்கிறார்கள். ஒருவர் மட்டும் "குற்றவாளி இல்லை" என சொல்லவில்லை. நாம் விவாதிப்போம் என்கிறார்.

விவாதம் மெல்ல துவங்கி, வழக்கின் முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுகிறது. இறுதியில் என்ன முடிவெடுத்தார்கள் என்பது முழுநீளக்கதை!

*****
சமூகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் ஒன்றாய் கூடி, ஒன்றை விவாதித்தால் விவாதம் எப்படி களைகட்டும்? ரணகளமாக இருக்கும். அப்படி இருந்தது.

இப்படி ஒரு நீதி பரிபாலன முறை உண்மையில் அமெரிக்காவில் இருந்ததா என தெரியவில்லை. வேறு சில படங்களில், பழைய தமிழ்படங்களில் பார்த்து இருப்பது போல மங்கலாக நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொருடைய வாழ்க்கை முறை தான் சிந்தனையை தீர்மானிக்கும் என்ற விதி இருக்கிறது.

படத்தில் விவாதத்தை ஒருங்கிணைப்பவர் ஒரு கோச். வாதங்களை அடுக்கி, அலசி ஆராய்ந்து முன்வைப்பவர் பங்குச் சந்தை புரோக்கர்.

ஒன்றைப் பற்றி திறந்த மனதுடன் அணுகவேண்டும். முன்முடிவோடு அணுககூடாது.
அந்த பையன் சேரி. அம்மா இல்லை. அப்பாவும் சரியில்லை. அப்ப அவன் கொலை செஞ்சிருப்பான் என யோசிப்பது தான் முன்முடிவு. படத்தில் இரண்டு இடத்தில் வந்து போகும்.

படத்தில் தன் வாதத்தை நிதானமாக, ஆதாரங்களுடன், மற்றவர்களின் கருத்தை மதித்து நடப்பவர் மெல்ல மெல்ல முன்னேறி, மற்றவர்களின் ஆதரவை பெறுவார். கோபமாகவும், மற்றவர்களை சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துகொள்கிறீர்கள் என கத்தி கத்தி பேசுபவர் தனிமைப்படுவார்.

படத்தில் இப்படி பேசுவதற்கு பல இடங்கள் உண்டு. நீள்வதால், இப்போதைக்கு நிறுத்திக்கொள்வோம்.

படம் இன்று வரைக்கும் உலக அளவில் பேசக்கூடிய படமாக இருக்கிறது. முதலில் தொலைக்காட்சி படமாக எடுத்து, பிறகு படமாக எடுத்திருக்கிறார்கள். ரசியாவிலும், இந்தியிலும் மீண்டும் எடுத்திருக்கிறார்கள். தமிழில் "வாய்மை" இந்த படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த படத்தை மேலாண்மை வகுப்புகளில் இன்றைக்கும் பாடமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆச்சர்யமான செய்தி. படம் வெளிவந்த பொழுது, வசூல் அளவில் தோல்வி என்கிறார்கள்.

தமிழில் இல்லை. ஆங்கில சப் டைட்டில்களுடன் பார்த்தேன்.

Gantumoote (2019) கன்னடம்

கதை. 90களில் நடக்கிறது. மீரா பள்ளி மாணவி. அவர்களுடைய பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அவளுக்கு சினிமா மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. சல்மான்கான் பிடித்த நாயகனாக இருக்கிறார். பள்ளியில் உடன்படிக்கும் பையன் ரோஜா தருகிறான். எதற்கு என தெரியாமலே வாங்குகிறாள். பிறகு, அவனை தவிர்க்கிறாள். வகுப்பில் சல்மான்கான் சாயலில் (!) இருக்கும் மதுவை விரும்புகிறாள். இருவரும் காதலிக்கிறார்கள். அதற்கு பிறகு என்ன ஆனது என்பது முழுநீளக்கதை!

****
கன்னடத்தில் வந்த நல்ல படங்களில் ஒன்று என பத்திரிக்கைகள் எழுதியிருக்கின்றன. திரைப்படம் சார்ந்த ஒரு குழுவில் இன்னும் எத்தனைப்பேர் இந்த படத்திற்கு இன்னும் எழுதிவைத்திருக்கிறீர்கள் என, ஒரு நிர்வாகி அலுத்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது.

பள்ளிக்காலத்து காதல் கதைகள் இதுவரை வந்த பெரும்பாலான படங்கள் எல்லாம் ஆண் பார்வையில் வந்தது என்றால், இந்தப்படம் பெண் பார்வையில் வந்திருப்பது சிறப்பு. பெண் இயக்குநர் என்பதும் சிறப்பு. பெண் பார்வையில் எடுப்பதற்கு பெண் இயக்குநர் தான் வரவேண்டியிருக்கும் நிலை வருத்தம் தான். எந்தவித மசாலாத்தனமும் இல்லாமல், இயல்பாக இருப்பது இன்னும் சிறப்பு.

90களில் எடுத்தப்படம் என சொல்லிவிட்டு, இவ்வளவு லிப்லாக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் என்பது கொஞ்சம் நெருடல் தான். 90களில் பள்ளிப் படித்தவர்களுக்கு இப்படி எல்லாம் நாம் இருந்தோமா என கடுப்படித்திருக்கிறது. அதை எழுதியும் இருக்கிறார்கள்.

பள்ளிச் சார்ந்த ஒரு கல்வி சுற்றுலாவில், இருவரும் தனியாக இருப்பதை பார்த்த ஒரு ஆசிரியர் கண்டும் காணாதது போல வந்துவிட்டு, இருவரையும் தனியாக அழைத்து “தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆகையால் படிப்பில் கவனம் செலுத்துங்கள்” என அவ்வளவு அழகாக அறிவுரைகள் வழங்குவார். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என ஆசைப்படுகிறாரா?

அந்த பெண்ணுக்கு திரைப்படம் தான் ஆதர்சனம். ஆனால் இயல்பு வாழ்க்கையில் உள்ள உண்மை அவளுக்கு திரைப்படம் வேறு. இயல்பு வாழ்க்கை வேறு என அவளுக்கு உணர்த்துகிறது.

”தேர்வில் தோல்விக்கா இப்படி?” என நாயகி வருத்தமடைவாள். நல்ல கல்வி என்பது சுதந்திரத்தையும், தன்னம்பிக்கை உணர்வையும் தரக்கூடியது. தேர்வில் தோல்வி என்றால், ஒவ்வொரு வருடமும் நிகழ்கிற தற்கொலைகளும் இந்த கல்விமுறை தவறு என நிரூபிக்கும்.

மொத்தப் படத்தையும் மீராவும், மதுவாக நடித்தவர்களே தாங்குகிறார்கள். மற்றவர்கள் இயல்பாக வலம் வருகிறார்கள்.

நல்லபடம். பாருங்கள்.

யார் திருந்துவார்கள்?


Andhadhun (2018) - இந்தி

கண் தெரியாத கலைஞனின் இசை

கதை. நாயகன், தனக்கு கண் தெரிந்தும், கண் தெரியாத மாதிரி நடந்துகொள்கிறான். அது தன்னுடைய இசைத் திறமைக்கு வலுவூட்டும் என நம்புகிறான். லண்டன் சென்று செட்டிலாகவேண்டும் என்பது அவனது கனவு. தற்செயலாக ஒரு பெண்ணைச் சந்தித்து, அவளுடைய உணவகத்தில் தொடர்ந்து பியானோ வாசிக்கிறான்.

பாலிவுட் முன்னாள் காதல் மன்னன் அந்த உணவகத்தின் வாடிக்கையாளர். தன்னுடைய துணைவிக்கு பிறந்தநாள். அவரை ஆச்சர்யப்படுத்தவேண்டும் என நாயகனுக்கு முன்பணம் கொடுத்து வீட்டுக்கு வந்து வாசிக்கச் சொல்கிறார். சொன்ன நேரத்திற்கு சென்றால், அங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது. கண் தெரியாத மாதிரியே நடந்துகொண்டு, பியானோ வாசித்து, வாழ்த்துக்கள் சொல்லி, சமத்தாய் நழுவி வந்துவிடுகிறான்.

அதற்கு பிறகு, யூகிக்கமுடியாத பல களேபரங்கள் தான் முழுநீளக் கதை.

****
இந்த படம் வந்த பொழுதே பார்த்திருக்கவேண்டியது. இந்தி தெரியாததால், சப் டைட்டிலோடு தான் பார்க்கவேண்டியிருக்கிறது. அருகில் உள்ள திரையரங்குகளில் கேட்டால் இல்லை என்பார்கள். பிரபல திரையரங்குகள் தூரமாக இருக்கும். இப்படி பல படங்கள் தப்பியிருக்கின்றன.

படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே என அனைவருமே நன்றாக பொருந்தியிருக்கிறார்கள். ஆயுஷ்மான் குரானின் ஆர்ட்டிகிள் 15 படத்தையும் சமீபத்தில் பார்த்தேன். அதுவும் நல்லபடம்.

பிரெஞ்சில் வந்த ஒரு குறும்படத்தை எடுத்துக்கொண்டு, கற்பனை குதிரையை ஓடவிட்டு, ஒரு அருமையான திரில்லரை தந்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தப் படத்தின் இயக்குநரான ஸ்ரீராம் ராகவனின் ஜானி கட்டார், பத்லாபூர் என இரண்டு நல்ல படங்களைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு கொலை என தொடங்கும் படம், பிறகு உறுப்புகள் திருட்டு, கடத்தல் என பயணிக்கிறது. கொஞ்சம் சுத்தலாய் இருந்தாலும், சுவாரசியமாய் தான் இருந்தது. இறுதிக்காட்சி கொஞ்சம் குழப்பமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு, ”நாம நினைக்கிறது சரியா!” என பலருக்கும் கேள்வி வரும்! இயக்குநர் தெரிந்தே பார்வையாளர்களின் சிந்தனைக்கு விட்டுவிட்டார்.

பலரும் பார்த்தீருப்பீர்கள். பார்க்காதவர்கள் பாருங்கள்.

குறிப்பு : இந்த படத்திற்கு அடிப்படையான ப்ரெஞ்ச் குறும்படமான Piano Tuner படத்திற்கான சுட்டி. சுவாரசியமான படம்.

Brochevarevarura (who shall save the day) 2019 – தெலுங்கு

கதை. ஒரு உதவி இயக்குநர் பட வாய்ப்புக்காக துடிப்பாக அலைந்துகொண்டிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகையிடம் கதை சொல்லி அனுமதி வாங்க அனுப்பி வைக்கிறார். அவரும் சந்தித்து கதை சொல்ல துவங்குகிறார். தொடர்ச்சியான சந்திப்புகளில் நடிகைக்கு இயக்குநரை பிடித்துப்போகிறது. உதவி இயக்குநரின் அப்பாவிற்கு அடிபட்டு, அறுவை சிகிக்கைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சில லட்சங்கள் தேவைப்படுகிறது.

ஜூனியர் கல்லூரி படிக்கும் ஒரு பெண். அம்மாவும், அப்பாவும் பிரிந்து அம்மாவுடன் இருந்து, அம்மா இறந்ததும் அப்பாவிடம் வந்து சேர்கிறார். அவளுக்கு படிப்பில் பெரிய ஆர்வம் இல்லை. நடனத்தில் நிறைய ஆர்வம். ஆனால் அப்பா படிப்பதில் மட்டும் கவனம் செலுத்த சொல்கிறார். கல்லூரியில் உடன் படிக்கும் மூன்று பேரின் நட்பு கிடைக்கிறது. அப்பா டார்ச்சரிலிருந்து தப்பிக்க, பெண்ணை கடத்தியதாக திட்டம் போட்டு, நால்வரும் அப்பாவிடமிருந்து சில லட்சங்களை பறிக்கிறார்கள்.

இதற்கு பிறகு என்ன ஆனது என்பதை காமெடி திரில்லராக கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

*****
அப்பாவின் நண்பர் டியூசன் மாஸ்டர். அந்த ஆள் தப்பாக நடந்துகொள்கிறான் என அப்பாவிடம் சொன்னால், ”டியூசனிலிருந்து தப்பிக்க ஏதாவது கதை விடாதே!” என்கிறார் அப்பா. இப்படி வீட்டுச் சூழல் சிக்கலாக இருக்கிறது என வீட்டிலிருந்து தப்பித்தால், உலகம் அவ்வளவு குரூரமாக இருக்கிறது. ”வெளியே பாதுகாப்பில்லை. ஆகையால் வீட்டிலேயே இரு!” என்கிறார்கள் நண்பர்கள். நகை முரண் தான்.

வழக்கமான தெலுங்கு மசாலா படமில்லை. நடிகையாக வருகிற நிவேதாவும், மாணவியாக வரும் நிவேதாவும் நமக்கு பழகிய முகங்கள். படத்தில் வருகிற அனைத்து கதாபாத்திரங்களுமே மனதில் நிற்கிறார்கள்.

பார்க்க கூடிய படம். பாருங்கள்.

June - மலையாளம் (2019)

கதை. நாயகி 11ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் புதிய நண்பர்கள், தோழிகள் கிடைக்கிறார்கள். நட்பும், காதலுமாய் இடைவேளை வரை கலகலப்பாக பள்ளிக் காலம் செல்கிறது. காதல் விசயம் வீட்டுக்கு தெரிந்து, பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள். காதல் முறிகிறது. பிறகு, ஒரே தாவலில் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிடுகிறாள்.

நாயகன் மும்பையில் இருப்பதை அறிந்து, வேலை அங்கு தேடிக்கொள்கிறாள். ’பழைய’ காதலை புதுப்பித்துக்கொள்கிறார்கள். நாயகன் வீட்டில் அவனின் அப்பா எல்லா விசயங்களையும் தீர்மானிக்கிறார். திருமணம் எப்படி நடத்துவது, நாயகி திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லக்கூடாது என சகல விசயங்களிலும் நாயகன் அப்பாவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கிறான். நாயகி அதில் கேள்வி எழுப்புகிறாள். இருவருக்கும் மீண்டும் விரிசல் விழுகிறது.

பிறகு, ஊருக்கு திரும்புகிறாள். பள்ளிக்காலத்தில் ஒரு தலைக்காதல் செய்த இன்னொருவன் மீண்டும் அவள் வாழ்வில் வருகிறான். வீட்டில் திருமணம் செய்ய நெருக்குகிறார்கள்.

என்ன முடிவெடுத்தாள் என்பது மீதிக்கதை!
*****

பள்ளிக்கால வாழ்க்கையை எடுப்பது இப்பொழுது திரை உலகில் டிரெண்டாகி இருக்கிறது. ஒரு அடார் லவ்-வோடு இந்தப்படமும் வெளியாகி, பெரிய வெற்றியடைந்திருக்கிறது. இயல்பாகவும், கலகலப்பாகவும் எடுத்து சென்றிருக்கிறார்கள். மலையாளம் என்பதால், அந்த இயல்பு சாத்தியமாகியிருக்கிறது.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் காதல் வந்து, வந்து தான் போகும். அது இயல்பானது. இந்த நாட்டில் தான் சாதி, ஏற்றத்தாழ்வு என பல சமூக குறுக்கீடுகள் இருக்கிறதே! காதலை புனிதமாக்குவதும், ஆண்கள் பெருமையாக பழைய காதல்களை சொல்ல முடிவதும், பெண்கள் அதை தங்களுக்குள்ளேயே மூடி மறைப்பதுமே சமூகத்தில் கோளாறுகள் இருப்பதற்கான சான்றுகள் தான்.

மொத்தப்படத்தையும் நாயகி Rajisha தாங்கிப்பிடிக்கிறார். முதல் படமான ”அனுராக கரிக்கின் வெல்லம்” படத்திலேயே மாநில அரசின் சிறந்த நடிகை விருதை வென்றிருக்கிறார். மற்றவர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

கொரானா காலத்தில் பாருங்கள். புன்னகைக்க வைக்கும். பள்ளிக்கால வாழ்க்கையை சில மணி நேரங்கள் நினைக்க வைக்கும் அல்லது நண்பர்களிடம் பேச வைக்கும்.

நண்பன் ஒருவனிடமிருந்து வாங்கிப் பார்த்தேன். ஆங்கில சப்டைட்டில்கள் அவ்வப்பொழுது வந்து வந்து போயின. கொஞ்சூண்டு மலையாளம் அறிந்த எவனோ ஒருவன், மொழிபெயர்த்து இருக்கிறான் என நினைத்துக்கொண்டேன். மலையாளம் புரிந்துகொள்ள முடிந்ததால் தப்பித்தேன்.

July 4, 2020

IP Man (2008)

கதை. 1937 காலகட்டம். தென் சீன பகுதி. நாயகன் Wing Chun என்ற தற்காப்பு கலையில் சிறந்த மாஸ்டர். தன் துணைவியாருடன், ஒரே பையனுடன் வசதியாக வாழ்ந்துவருகிறார். பயிற்சி பள்ளி நடத்த வலியுறுத்துகிறார்கள். ஆனால் மறுக்கிறார். வடக்கு சீன பகுதியில் வந்து உள்ளூரில் சண்டை பயிற்சி பள்ளி வைத்துள்ள அத்தனை மாஸ்டர்களையும் வீழ்த்துகிறான் ஒருவன். உள்ளூரில் நாயகனின் புகழ் இருப்பதால், அவரையும் தேடிவருகிறான். அவனை தோற்கடித்து அனுப்புகிறார். உள்ளூரில் இன்னும் பிரபலமாகிறார்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டம். ஜப்பான் நாடு சீனாவை ஆக்கிரமிக்கிறது. ஊரையே கலவரப்படுத்துகிறார்கள். நாயகன் வீடு இழந்து, வசதி இழந்து ஒரு சிறுவீட்டில் வசித்துவருகிறார். வறுமையால் ஒரு நிலக்கரி சுரங்க வேலை செய்யும் இடத்தில் வேலை செய்கிறார்.

ஜப்பான் தளபதி தனது வீரர்களுக்கு பயிற்சியாய் இருக்கட்டும் என சீன தற்காப்பு வீரர்களை அழைத்து வந்து சண்டையிட செய்கிறான். சீன வீரர்களை மோசமாக நடத்துகிறார்கள். நாயகன் கோபத்தில் ஒரே நேரத்தில் பத்து ஜப்பான் வீரர்களை அடித்து துவைத்து, சென்றுவிடுகிறார். அதற்கு பிறகு அவரை ஜப்பான் தளபதி தேடுகிறான். அதற்கு பிறகு என்ன ஆனது என்பதை பர பர சண்டைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

****

தற்காப்பு சண்டைப் படங்கள் பார்த்து பல வருடங்களாயிற்று. ஜெட்லி வந்த பிறகு பறந்து, பறந்து சண்டைப் போட்டு, ஆர்வம் இல்லாது செய்துவிட்டார்கள். இந்தப் படம் உண்மையாக வாழ்ந்த ஒரு மாஸ்டரின் படம். இந்த சீரிஸ்ஸில் மொத்தம் நான்கு படங்கள் வந்திருக்கின்றன. நன்றாக இருக்கும் என ஆங்காங்கே ஒரு சிலர் எழுதியும் இருந்தார்கள். ஆகையால் பார்த்தேன்.

எளிமையான கதை. நாயகனும் மிகவும் எளிமை. வட சீனத்துக்காரன் ”ஒரு லேடி கற்றுக்கொடுத்த கலை தானே இது!” என இழிவாக பேசுவான். தற்காப்பு கலையில் ஆண், பெண் என்ன? என்பார். சண்டையில் தோற்றதும், கோபமாக ”தென் சீனக்காரனிடம், வட சீனக்காரன் தோற்றுவிட்டான்”. அதற்கும் அமைதியாக, ”உன்னுடைய தற்காப்பு கலையில் பிரச்சனையில்லை. அதை கையாள்கிற உன்னிடம் தான் பிரச்சனை” என்பார்.

கராத்தே, குங்பூ, ஜூடோ என நிறைய வகைகள் இருந்தாலும், நிஜத்தில் ”மான் கராத்தே” தான் சிறந்தது என்பார்கள். ”அதென்ன மான் கராத்தே?” என நான் முதன் முதலில் கேட்ட பொழுது, கெக்கெ! பிக்கே! சிரித்துவிட்டார்கள். வெளியூரில் ஒரு வருடம் வேலை பார்த்த பொழுது, அங்குள்ள பள்ளியில் காலை 5 மணி முதல் 6 மணிவரை டோக்வான்டோ ஸ்டைல் கராத்தே சொல்லித்தந்தார்கள். நான் ஒரு ஆர்வத்துடன் சேர்ந்துவிட்டேன். கடுமையான உடற்பயிற்சி. மூன்று மாதம் பெண்டை கழட்டிவிட்டார்கள். மஞ்சள் பெல்ட் (அதுதான் முதல் பெல்ட்) வாங்கிவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்த பொழுது, ஊரைவிட்டு கிளம்ப வேண்டியிருந்தது. கிளம்பும்பொழுது, என்னை விட இளவயது மாஸ்டர் அமைதியாக சொன்னார் ”இப்பொழுது நீங்கள் கற்றுக்கொண்டதை கொண்டு, ஒரு ஆளை கொன்றுவிடலாம். ஆகையால் கவனமாக இருங்கள்” என்றார். எனக்கே அதைக் கேட்ட பொழுது டெரராக இருந்தது. சண்டை கற்றுக்கொள்வது என்பது நிஜ வாழ்வில் பயன்படுகிறதோ இல்லையோ, நம்பிக்கைத் தரும். எதிர்கொள்ளும் தைரியத்தை கற்றுத்தரும்.

இவருடைய மாணவர்களில் புகழ்பெற்றவர்களில் ஒருவர் நம்ம புருஸ்லீ. தமிழில் கிடைக்கிறது. ஆங்காங்கே சீன மொழி என மாறிவிடுகிறது. சப் டைட்டில் வைத்து சமாளித்தேன். நான் நண்பரிடம் வாங்கிப் பார்த்தேன். நல்லபடம் பாருங்கள்.

பொன்மகள் வந்தாள்

பிடித்த அம்சங்கள்

*சமூகத்தில் சட்டத்தை மீறுபவர்கள் யார், யார் என ஆராய்ந்தால், அதில் முதலில் இருப்பவர்கள் போலீசு என தாராளமாய் சொல்லலாம். ஆனால், சமூகத்தில் சட்டத்தை காப்பாத்துகிறவர்கள் என பெயரில் வலம் வருகிறார்கள்.

போலீசு தனக்கு உள்ள கெட்ட பெயரை மாற்ற‌, சமூகம் மிகவும் கோபப்படுகிற சில நிகழ்வுகளில், குறைந்தபட்சமாக‌ சிக்கியவர்களை கை, கால்களை ஸ்டேசனில் வைத்து உடைக்கிறார்கள். அதிகப்பட்சமாக போலி என்கவுன்டரில் போட்டுத்தள்ளி, திரைக்கதை எழுதி முடித்துவிடுகிறார்கள்.

படத்தில் அப்படி போலீசு திரைக்கதை எழுதி, முடித்துவிடும் உள்ள ஆபத்தை இந்த படம் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறது.

(கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படி பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள் எத்தனை பேர்? போலீசுகாரர்கள் யாரும் வழுக்கிவிழுந்தார்களா? பட்டியல் கொடு என மிகவும் தாமதமாக மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டிருக்கிறது.)

* பெண் பிள்ளைகளுக்கு இங்கு எல்லாவித ஆலோசனைகளையும் அள்ளித்தெளிக்கிறார்கள். வீட்டில் வளர்கிற பசங்களுக்கும் சொல்லி வளருங்கள்.

* கோயிலுக்கு கொடுப்பதை போல கல்விக்கும் கொடுங்கள் என ஜோதிகா சொன்னதை வைத்துக்கொண்டு, படம் குப்பை என சங்கிகள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். படம் அசீபாவிற்கு நேர்ந்த அவலத்தைப் பற்றியும் பேசுவதால், சங்கிகளுக்கு எரிகிறது. நன்றாக எரியட்டும்.

* படத்தின் வடிவத்தில் பலரும் குறைகளை சொல்கிறார்கள். "மூத்த" இயக்குநர்களில் பலர் இன்னும் கல்லா கட்டுவதிலேயே குறியாக இருக்கும் பொழுது, புதிய இயக்குநர் சமூகத்தில் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை குறித்து எடுத்து இருக்கிறார். இனி வரும் காலத்தில் இன்னும் சிறந்த படங்களை கொடுப்பார். வாழ்த்துவோம்.