January 30, 2024

Curse of Bridge Hollow (2022) குழந்தைகளுக்கான ஜாலியான படம்


அப்பா ஒரு அறிவியல் ஆசிரியர். தன் மனைவி, பள்ளி செல்லும் மகளுடன் அந்த புது ஊருக்கு வந்து சேர்கிறார்.


ஊரே ஹாலோவீனுக்காக தயாராகிக்கொண்டு இருக்கிறது. அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்பட கூடிய ஒரு நிகழ்வு என்கிறார்கள்.

குடிபுகுந்த புது வீட்டில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சக்தியை அந்த பெண் கிளப்பிவிட, ஊரில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஆபத்தான வண்டுகள், கோடாலியோடு இருக்கும் ஜோக்கர்கள், ஜோம்பிகள் எல்லோருக்கும் உயிர் கொடுத்துவிடுகிறது. அவைகள் மனிதர்களை துரத்த ஆரம்பிக்கின்றன.

ஊரே அல்லோலப்படுகிறது. மீண்டும் அந்த சக்தியை அடைக்கப்படவில்லை என்றால், அதன் இலக்கை அது அடைந்துவிட்டால் எல்லா நாளும் ஹாலோவீன்னாக மாறிவிடும் என்ற ஆபத்து இருக்கிறது.

அப்பாவும், மகளும், அந்த ஊரில் உள்ள சில பசங்களும் இதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை பல்வேரு கலாட்டகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****

இந்த மாதிரி ஹாரர் படத்தில், ஹாரர் மீது நம்பிக்கையில்லாத ஒரு பாத்திரத்தை கொண்டு வந்து, அவரே நம்புகிற மாதிரி காட்சிகளை நகர்த்துவார்கள் இறுதியில் அவரும் நம்பிவிடுவார். அப்பா பாத்திரத்தின் வேலை இது தான்.

இதை கதையின் சுவாரசியத்திற்காக செய்கிறார்களா? அறிவியலை கிண்டல் செய்வதாக நினைக்கிறார்களா தெரியவில்லை. ஒரு ஜாலிக்காக நகைச்சுவை பேய் படம் பார்த்தால், இப்படி தொடர்ந்து கடுப்பேத்துகிறார்கள்.

படத்தில் வரும் Priah Ferguson க்காக தான் இந்தப் படத்தையே பார்த்தேன். Stranger things தொடரில் குட்டிப்பெண்ணாக வந்து கலக்குவார். இந்தப் படத்தில் கொஞ்சம் வளர்ந்துவிட்டார்.

13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜாலியான படம். நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

January 26, 2024

கதிர்நிலவன் - ஷாலினி திருமணம் சிறப்பாக நடைபெற்றது!


இந்த பதிவு நண்பர்கள் சம்பந்தப்பட்டது! மற்றவர்கள் கடந்து செல்லுங்கள்!


நன்றி.


***

நண்பர்களுக்கு,

 

வணக்கம். இன்று நமது இமேசுகுமார் ‍-  மணிமேகலை தம்பதிகளின் இரண்டு மகன்களில் மூத்தவர் கதிர்நிலவன் - ஷாலினி திருமணம் சென்னை கோடம்பாக்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது.

 

மதுரையில் இருந்து நண்பர் வேல் – விஜி தம்பதியினரும், (TVS) சரவணன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.  ஆங்கில ஆசிரியர் லியோ தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.  ரமேசுகுமார் அவர்களின் தம்பி வழக்கறிஞர் ரூபனைப் பார்த்தோம்.

 

சென்னையில் இருந்து, நான் துணைவியாருடன் கலந்துகொண்டேன். இலக்கியா 12 வது படிப்பதால், தேர்வு நெருக்கடியால் அழைத்து வரமுடியவில்லை. மனோகரன் அவர்கள் கலந்துகொண்டார்.  நண்பர் சண்முகசுந்தரம் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.  சங்கர பாண்டியன் தன் குடும்பத்துடன்  கலந்துகொண்டார். கண்ணன் வெளி மாநிலத்தில் இருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை. அவருடைய துணைவியார் மீனா, தன் பசங்க இருவருடனும் வந்து கலந்துகொண்டார்.

 

முன்பே இனியனின் துணைவியார் உமா  தன் பிள்ளைகளுடன் கலந்துகொண்டார் என வேலு சொன்னார். அவருடைய பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆகையால் அவசரமாய் கிளம்பிவிட்டார்கள் என சொன்னார்கள்.

 

மணிமேகலை அக்காவின் அண்ணன் கபிலன் அவர்களை பல ஆண்டுகள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி.

 

இரமேசுகுமார் தன் குடும்பத்துடன் அவர்கள் சென்னையில் தான் குடியேறியிருக்கிறார். அவரை விரைவில் வீட்டுக்கு போய் சந்திக்கவேண்டும்.

 

சுவையான சாப்பாடு. மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டு எல்லோரும் விடைபெற்றோம்.

 

பல ஆண்டுகள் கழித்து, இப்படி சந்தித்ததில், உரையாடியதில் மகிழ்ச்சி. மதுரை நண்பர்கள் எப்பொழுது சென்னை வந்தாலும் என்னை அழையுங்கள். சந்திப்போம்.

 

நன்றி.

 

 

 

 

 

January 24, 2024

Fantastic Beasts: The Secrets of Dumbledore (2022)


நல்ல சக்திகளும், தீய சக்திகளுக்குமான மோதல் தான் கதை.

ஜெர்மனில் மாய உலகத்தில் தேர்தல் நடக்கிது. தன் செல்வாக்கை வைத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை இல்லாமல் ஆக்கிவிடுகிறான். ”எளிதானதை செய்யாதீர்கள். சரியானதை செய்யுங்கள்” என டம்பிள்டோர் சொன்ன செய்தியை அங்குள்ள தலைமை புறக்கணிக்கிறது. தேர்தலில் தீய சக்திகளின் தலைவனையும் ஒரு வேட்பாளராக அனுமதிக்கிறார்கள்.

தலைவனை வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுப்பார்கள் என காத்திருந்தால், நம்மூர் மான் குட்டி போல அவர்களின் மாய உலகத்தில் ஒரு உயிரினம் இருக்கிறது. எங்கோ ஒரு காட்டிற்குள் குட்டியை பெற்றெடுக்கிறது. தீய சக்திகளின் தலைவன் அனுப்பிய ஆட்கள், அதன் அம்மாவை கொன்றுவிட்டு, குட்டியை கொண்டு வந்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு இன்னொரு குட்டி பிறக்கிறது. அதை டம்பிள்டோர் ஆள் தூக்கிவந்துவிடுகிறார். (இந்த குட்டியை தேர்தல் ஆணைய ஆட்கள் பாதுகாக்க மாட்டார்களா?) 🙂

தீய சக்திகளின் தலைவன் அந்த குட்டியையும் கழுத்தறுந்து கொன்றுவிட்டு, அந்த குட்டித் தன்னை தேர்ந்தெடுக்கும்படி வசியப்படுத்திவிடுகிறான். தேர்தல் நெருங்குகிறது.

டம்பிள்டோர் குடும்பத்திலேயே கைவிடப்பட்ட ஒருவனை தீயசக்திகளின் தலைவன் அவனின் மனதில் உள்ள வெறுப்பை ஊதி ஊதி அவனை கொம்பு சீவிக்கொண்டு இருக்கிறான். (இதற்கு முந்தைய பாகம் பார்க்கவேண்டும்.) இப்பொழுது அவனை டம்பிள்டோரை கொல்ல அனுப்புகிறான்.

டம்பிள்டோர் தப்பித்தாரா? ஜெர்மன் தேர்தலில் தீய சக்திகளின் தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டானா? என்பதை சில சாகங்களை செய்து காட்டுகிறார்கள்.
***


ஹாரி பார்ட்டர் கதைகள், அதை ஒட்டிய படங்கள் நன்றாக கல்லா கட்டியதால், ஹாரி பார்ட்டர் கதைக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை சில பாகங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தீய சக்திகள் படத்தில் வலுவாக காட்டப்படுகிறது. ஆனாலும் நல்லதை நினைக்கும் சக்திகள் தொடர்ந்து தங்களது சக்திக்குட்பட்டு சின்சியராக அதைத் தடுக்க முயல்கிறார்கள். சில சமயங்களில் வெற்றி பெறலாம். சில சமயங்களில் தோல்வி பெறலாம். ஆனால், தொடர்ந்து முயல்வது தான் சரியானது. இதை சமூகத்திற்கும் நாம் பொருத்தி பார்க்கலாம்.

முந்தைய பாகங்களைப் பார்த்தால் தான் புரியும் என்றில்லை. தனியாகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

படத்தில் டம்பிள்டோராக வருகிற ஜூட் லோ ரெம்பவே கூல், தீய சக்திகளின் தலைவனாக வரும் மட்ஸ் மிக்கெல்சன் அவருடைய மிடுக்கால் கலக்குகிறார். விலங்குகளில் நண்பனாக வரும் நியூட்டாக எடி ரெட்மேன் வழக்கம் போல வருகிறார். முக்கிய பாத்திரத்தில் ஜெசிகா வில்லியம்ஸ் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பு.

நெட் பிளிக்சில் ஆங்கிலத்தில், ஆங்கில சப் டைட்டில்களுடன் கிடைக்கிறது. வெளியான பொழுது, தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார்கள். ஆகையால், வேறு வகைகளில் முயன்றால், கிடைக்கலாம்.

January 16, 2024

kho gaye hum kahan (2023) இந்தி


நாம் எங்கே தொலைந்து போனோம்?


மூவரும் பள்ளிக்காலத்து நண்பர்கள். ஒருவர் ஸ்டாண்ட் அப் காமிக்காக இருக்கிறார். இன்னொருவர் கார்ப்பரேட் நிறுவனத்தில் சந்தைப்படுத்தும் பிரிவில் வேலை செய்யும் எம்.பி. பட்டதாரி. இன்னொருவர் ஜிம்மில் பயிற்சியாளர்.

 

காமிக் இளைஞருக்கு நீடித்த உறவில் நம்பிக்கையில்லை. ஆப்பில் பதிந்துகொண்டு, புதுப்புது பெண்களுடன் வலம்வருகிறார். அம்மாவின் இறப்பு அவனை கடுமையாக பாதித்திருக்கிறது.  அப்பா அவனுக்கு இருக்கும் உளவியல்  சிக்கலைப் புரிந்துகொண்டு அவனை கவுன்சிலிங்குக்கு அனுப்புகிறார்.

 

அவள் மூன்று வருடம் ஒருவனுடன் காதலில் இருக்கிறார். ஒருநாள் திடீரென பிரேக் அப் என சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான். அதனால் மிகவும் சோர்வாக இருக்கிறாள்.

 

ஜிம் பயிற்சியாளர் ஒரு சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு பயிற்சியாளராக இருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உறவு இரகசியமாக இருக்கிறது. அவள் வெளியே சொல்ல மறுக்கிறாள்.

ஜிம் பயிற்சியாளர் ஒரு ஜிம் வைப்பது தனது இலக்கு என்கிறார். மற்ற நண்பர்கள் இருவரும் அதற்கு துணை நிற்பதாகவும், அதற்காக மெனக்கெடுகிறார்கள்.

 

ஆனால், நண்பனின் காதலை காமிக் ஒரு திறந்த மேடையில் (பெயரை சொல்லாமல்) வெளிப்படையாக பேச அவன் காயப்படுகிறான். இருவருக்குள்ளும் பெரிய மனஸ்தாபம் வந்துவிடுகிறது.

 

பிறகு என்ன ஆனது என்பதை நட்பு, காதல், காமம் என உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

 

மேட்டுக்குடி இளைஞர்களின் சிந்தனை, அவர்களின் வாழ்க்கை, பப், குடி, காதல், காமம் எவ்வாறு இருக்கிறது? அவர்களுடைய உறவுகள் அவர்களை எவ்வளவு பதட்டமடைய வைக்கின்றன? சமூக வலைத்தளங்கள் அவர்கள் வாழ்வில் எவ்வளவு தவிர்க்க முடியாத அளவிற்கு இரண்டற கலந்து இருக்கிறது, அது எவ்வளவு தூரம் அவர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்பதை மூவரின் வாழ்க்கையை கொண்டு வண்ணமயமாய் (!) சொல்லியிருக்கிறார்கள்.

 

படத்தின் இறுதியில் வந்தடையும் சில உணர்வுகள் முக்கியமானவை. கவனிக்கத்தக்கவை. உரையாடுதல், எல்லா உறவுகளிலும் மிக முக்கியமானவை. உரையாடுதல் குறைய குறைய மக்கள் ஒன்றாக வாழ்ந்தாலும், அவர்களுக்குள் தூரம் அதிகமாகிக்கொண்டே போகிறது. பேஸ்புக்கில் ஐயாயிரம் நண்பர்கள் இருந்தாலும், எதார்த்தத்தில் ஒரு நண்பனை கூட தக்கவைப்பதில்லை. பேருந்தில், ரயிலில் என கூட்டமாய் சென்றாலும் ஒவ்வொருவரும் அவரவர் செல்லில் ஒரு மெய்நிகர் டிஜிட்டல் உலகில் தனித்து உலாவுகிறார்கள்.

 

இந்த நேரத்தில் பசித்த சிங்கம், ஒன்றாய், கூட்டாய் வாழ்ந்த மாடுகள் கதை நினைவுக்கு வருவது நல்லது. நம்மை வேட்டையாடுவதற்கு முதலாளித்துவ சந்தைக்கு மிக எளிதாகிவிடுகிறது.

 

சித்தாந்த், அனன்யா, ஆதர்ஷ் கெளரவ் மூவரும் பிரதான பாத்திரத்தில் வருகிறார்கள். நம்மை கவர்கிறார்கள். அர்ஜூன் வாரன் சிங் இயக்கியிருக்கிறார்.

 

நெட் பிளிக்சில் தமிழிலும் கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். உங்கள் எண்ணங்களையும் பகிருங்கள்.