June 27, 2024

The last stop in Yuma county (2023) திரில்லர் படம்

 


முன்ன ஒரு காலத்தில… கதை. அந்த நெடுஞ்சாலையில் ஒரு கேஸ் நிலையம். அருகே ஒரு உணவகம்.


சமையல் கத்தி விற்பவர் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாட போய்கொண்டிருக்கிறார். நிலைய பொறுப்பாளர் கேஸ் தீர்ந்துப் போனதால், ”இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்! உணவகத்தில் காத்திருங்கள்!” என்கிறார்.

போலிஸ் அதிகாரியான ஷெரீப்பின் மனைவி தான் அந்த உணவகத்தை நடத்திவருகிறார். கத்தி விற்பவர் உள்ளே அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். வங்கியில் இருந்து சுடச்சுட கட்டுக்கட்டாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு, அவர்களும் அந்த உணவகத்தில் நுழைகிறார்கள்.

காலையிலேயே வங்கி கொள்ளை செய்தி, காட்டுத்தீயாய் பரவிவிட்டதால், கத்திக்காரரும், அந்த அம்மாவும் பேசிப் புரிந்துகொண்டு, தன் கணவனான போலீசிடம் சொல்லலாம் என போன் செய்தால், கொள்ளைக்காரன் சுதாரித்து போன் வயரை அறுத்துவிடுகிறான்.

”மரியாதையா பொழப்ப பாரு!” என மிரட்டுகிறான். கேஸ் வர இன்னும் தாமதமாகிறது, ஒரு வயதான தம்பதி அங்கு வருகிறார்கள். ஒரு இளஞ்ஜோடி அங்கு வருகிறார்கள். இன்னும் ஒருவர் அங்கு வருகிறார்.

நிலைமை பதட்டமாகிறது. கத்திக்காரர், உணவக முதலாளி இருவரிடம் மட்டும் துப்பாக்கி இல்லை. மற்ற எல்லோருமே விதவிதமாய் துப்பாக்கிச் சனியனை வைத்திருக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை, பதட்டமாய் சொல்லியிருக்கிறார்கள்.
****


படத்தின் துவக்கத்தில் ஒரு குருவி அங்கு காத்திருக்கும். படத்தின் முடிவிலேயேயும் ஒரு குருவி நடக்கிற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும்.

ஒரு உணவகம். அதன் சுற்றுப்புறம் மட்டும் தான் கதை. கதையில் நிறைய டிவிஸ்டுகள் இல்லை. அங்கு புழங்கும் மனிதர்களின் மனநிலை தான் கதை.

எனக்கு ஆச்சர்யம். பெரும்பாலோர் கையில் துப்பாக்கி எப்படி? அரசு என்ற உருவாக்கத்தின் துவக்கமே, மக்களிடத்தில் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து, தான் மட்டும் ஆயுதங்களை வைத்திருந்தது தான். வரி, வசூல் என மக்களை நசுக்கும் பொழுது, கோபப்பட்டு சுட்டுவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் தான்.

சமூகம் ஏற்றத் தாழ்வான சமுதாயமாய் இருக்கும் பொழுது, சொத்து வைத்திருக்கும் நிலப்பண்ணையார்கள், பிறகு முதலாளிகள் என எல்லோருமே அரசு அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்தார்கள். இன்னும் வைத்திருக்கிறார்கள். சென்னையிலேயே நிறைய பேர் அப்படி துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறார்கள் தான். குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை பதிவை புதுப்பித்துக்கொள்ளவேண்டும். சமீபத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி, குண்டுகள் வைத்திருந்ததாய் செய்தியில் வந்தார். பிறகு அனுமதி வாங்கித்தான் வைத்திருக்கிறார் என முடித்துக்கொண்டார்கள்.

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அப்பப்ப மண்டை குழம்பி பள்ளியில், பொது இடங்களில் பலரை சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். உலகத்திலேயே அதிக ஆயுதங்களை வைத்துக்கொண்டு உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஏற்ற தாழ்வற்ற சமூகம் தான் ஆயுதங்களே தேவையில்லாத சமூகம். அதை நோக்கி மனித சமூகம் நகர்வது பற்றி சிந்திப்பது தான் சரியானது.


90 நிமிடங்கள். சின்னப் படம். சில பாத்திரங்கள் தான். இதில் வில்லன் பாத்திரங்களில் மூத்தவராக வரக்கூடியவர் புத்திசாலி. நடிப்பும் அருமை. அந்தப் படத்தை எடுத்தவரின் நிதானம் ஆச்சர்யமூட்டக்கூடியதாக இருந்தது.

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை என இணையம் சொல்கிறது. வேறு வழிகளில் முயலுங்கள்.

June 21, 2024

சக்தி, உமா மகள் அறிவுமதி திருமணம் - வாழ்த்துகள்!

 


இன்று காலையில் இரமேஷ்குமார் சார், மணிமேகலை அக்கா அவர்களுடன் காலையில் பாண்டிச்சேரி விரைவு ரயிலில் சென்று திருமணத்தில் நானும் கலந்துகொண்டேன்.  நீண்ட வருடங்களுக்கு பிறகு காலை வேளையில் ரயிலில் பயணம் நன்றாக இருந்தது.  மதுரை நண்பர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டே போனதில் நேரம் போனதே தெரியவில்லை.



குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என சொல்வார்களே, அச்சிறுப்பாக்கத்தில் சின்ன குன்று, அங்கு தான் … இனியன் – உமா அவர்களின் மகள் “அறிவுமதி – ஜகதீசன்” திருமணமும் நடைபெற்றது.  அறிவுமதி நல்ல உயரம்.  உமாவையும், இனியனையும் நினைவுப்படுத்தினார்.



நேற்று அந்த பகுதியில் மழை பெய்து இருந்ததால்,  வெயில் அடித்தாலும், வலிக்காத அளவிற்கு குளுமையாகவும் இருந்தது. அங்கிருந்து பார்த்தால், ஊரை நன்றாக பார்க்க முடிந்தது.


முருகன் அகத்தியருக்கு அருளிய இடம் என கோயிலில் எழுதியிருந்தார்கள். தெற்கு முகமாக நிற்கும் முருகன் அபூர்வம் என்றார். இந்த முருகன் கோயிலும், இராஜஸ்தானில் ஒரு முருகன் கோயிலும் என இரண்டு கோயில்கள் மட்டுமே உண்டு என இரமேஷ்குமார் சார் தகவலைச் சொன்னார். ”முருகன் எங்க! எப்ப இராஜஸ்தான் போனாரு” என உமா சீரியசாய் கேள்விக்கேட்டார்.


மதுரையில் இருந்து, மோகன் – கயல் குடும்பம், வேல் - விஜி குடும்பம் சகிதமாய் வந்திருந்தார்கள்.   எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.  அய்யப்பன் தனியாக வந்திருந்தார். இப்பொழுது சிபிஐ வழக்குகளை மட்டுமே கையாள்வதாய் தெரிவித்தார். மகிழ்ச்சி.


நம்ம  டிவிஎஸ் சரவணன் அவர்கள் கடைசி நேர நெருக்கடியில் வர இயலவில்லைஎன தெரிவித்தார்கள்.


பிறகு திருமண வீட்டுக்காரர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் கோயிலுக்கு கிளம்ப, சென்னைக்காரர்கள் சென்னை திரும்பிவிட்டோம். மற்ற மதுரை நண்பர்கள் இன்று இரவு பாண்டியன் விரைவு ரயிலில் கிளம்புவதாக தெரிவித்தார்கள்.


அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி.


”வாழ்க மணமக்கள்”

June 17, 2024

வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 7


பி.எப். தொழிலாளர்களுக்கென ஒரு தளத்தை இயக்கி வருகிறது.  அந்த தளத்தின் வழியாக தான் கடனுக்கு விண்ணப்பிப்பது, பி.எப். பணத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிப்பது, ஓய்வு நிதி விண்ணப்பத்தை  சமர்ப்பிப்பது என பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.   இந்த தளம் தொடர்பாக நமக்கு தொடர்ந்து சந்தேகங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆகையால், அந்த தளம் குறித்து  முக்கிய தகவல்களை பார்ப்பது பலருக்கும் பலனளிக்கும்.

தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/



இதில் உள்ளே நுழைவதற்கு… User ID :  xxxxxxxxxxxx  12 எண்களால் உருவாக்கப்பட்ட எண்ணை ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிறுவனத்தால் ஆதார் எண், தொழிலாளியின் விவரங்களைக் கொண்டு பி.எப் தளத்தில் உருவாக்கப்படும் . அந்த  UAN (Universal Account Number) எண்ணை தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.  இதற்கான கடவுச்சொல்லை (Password) நாமே தளத்தில் உருவாக்கிக்கொள்ளலாம்.

 

தொழிலாளியின் அடிப்படை விவரங்கள் (Know your customer)

 

ஒரு தொழிலாளிக்குரிய பி.எப் பணம் உரியவர்களிடம் கொடுப்பதில் பி.எப் மிகவும் கறாராக நடந்துகொள்கிறது. அதனால், எல்லா விவரங்களும் சரியாக இருக்கவேண்டும் என்பது  மிக அவசியமானது.  பி.எப்பில் உள்ள தரவுகளும் ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்கள்  எல்லாமும் ஒரே சீராக இருக்கவேண்டியது அவசியம்.  நடைமுறையில், பல தொழிலாளர்களின் ஆதாரில் உள்ள விவரங்கள், பான் கார்டில் உள்ள விவரங்கள், வங்கிப் புத்தகத்தில் உள்ள விவரங்கள் என மூன்றிலுமே நிறைய சின்ன சின்ன வித்தியாசங்கள் இருப்பது இயல்பாக இருக்கிறது. பொதுவாக இந்த மாற்றங்களில் கவனம் செலுத்துவதில்லை.  அந்த மாற்றங்களை தொழிலாளர்கள் நேரம் ஒதுக்கி, உரிய இடங்களில் விண்ணப்பித்து சரி செய்து சீராக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இல்லையெனில், பணம் எடுக்கும் பொழுது, இவற்றை எல்லாம் சரி செய்த பிறகு தான் பணம் எடுக்கமுடியும் என்ற நிலை ஏற்படும்.

 

செல்பேசி எண், மின்னஞ்சல்

 

தொழிலாளியின் ஆதாரின் என்ன செல்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதையே பி.எப். தளத்திலும் பதிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், தளத்தில் நுழையும் பொழுதே, ஆதார் எண்ணுக்கு ஒரு ஓடிபியை அனுப்பிவைக்கிறது.  அதை பதியும் பொழுது தான் உள்ளேயே நம்மை நுழையமுடியும்.   அதே போல மின்னஞ்சல் முகவரியும் இப்பொழுது நாம் வழக்கமாக பயன்படுத்துகிறோமோ அதையே கொடுப்பது தான் சரியானது.

 

UAN  அடையாள அட்டை



UAN என்பது தான் தொழிலாளிக்குரிய அடையாள எண்.  தளம் UAN Card என்பது ஒரு தொழிலாளிக்குரிய அடையாள அட்டை ஒன்றை பி.எப் தருகிறது. அதை பிரிண்ட் எடுத்து லேமினேசன் செய்து வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும்.

 

கணக்கு விவரங்கள் (Passbook)

 

நம் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரிந்துகொள்வதற்காக தனியாக ஒரு தளத்தை பி.எப். உருவாக்கி தந்திருக்கிறது.  அந்த தளத்திற்கான User ID, கடவுச்சொல் பி.எப் தளத்தில் நாம் பயன்படுத்துகிற அதே User ID, கடவுச்சொல்லையே பயன்படுத்திக்கொள்ளலாம். https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login  என்ற தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

 

வாரிசுதாரர் நியமனம் (E Nomination)

 

பி.எப். (EPF) கணக்கு வைத்திருப்பவர்களின் பலன்களை, கணக்கு வைத்திருப்பவர் திடீரென மரணம் அடைந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுவதற்கு இந்த வாரிசுதாரர் நியமனம் உதவுகிறது.  ஆகையால்,  தொழிலாளியின் துணைவியார்/கணவர்/பிற உறவுகள் குறித்த பெயர், வயது, முகவரி என அடிப்படை விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றவேண்டும்.  தளம் கேட்கிற விவரங்களை கொடுத்த பிறகு,  ஆதார் ஓடிபி மூலமாக  E sign யையும் பூர்த்தி செய்யவேண்டும்.

 

பணியிலிருந்து விலகும் தேதி (Mark Exit)

 

ஒரு தொழிலாளி  ஒரு நிறுவனத்திலிருந்து விலகும் பொழுது விலகும் தேதியை பதிவு செய்வது அவசியம். முன்பு நிறுவனம் மட்டுமே தொழிலாளி விலகும் தேதியை பதிவேற்றும் வசதி இருந்தது.  சில சமயங்களில் நிறுவனம் மூடிவிடும் பொழுதோ,  நிறுவனம் அதை பதிவேற்ற தாமதிக்கும் பொழுதோ, தொழிலாளிகள் பணத்தை பெற முடியாத சிரமத்திற்கோ, தாமதத்திற்கோ உள்ளாகிறார்கள். ஆகையால்,  சமீப காலத்தில் தொழிலாளியே விலகும் தேதியை கொடுக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  நினைவில் இருந்து அதை பதிவேற்றாமல், விலகிய தேதியை சரியாக பதிவேற்றவேண்டும். இல்லையெனில் அதைத் திருத்துவதற்கு பி.எப் அலுவலகத்திற்கு அலைய வேண்டியிருக்கும்.

 

கடவுச் சொல் (Password)


முன்பெல்லாம் ஒரே UAN, ஒரே கடவுச்சொல் இருந்தால் நீண்ட காலத்திற்கு போதுமானதாக இருந்தது.  பி.எப் தளம் என்பது பணம் சம்பந்தப்பட்டது என்பதால், கடவுச்சொல் என்பது மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. ஆகையால் அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள் என பி.எப் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.

 

மாற்றுவதற்கு, பழைய கடவுச்சொல்லை இட்டு, அதற்குரிய விதிகளுடன் புதிய கடவுச்சொல்லை இரண்டுமுறை முறை பதிவு செய்து, ஆதார் ஓடிபி பெற்று பதிந்தால், புதிய கடவுச்சொல்லை தளம் ஏற்றுக்கொண்டுவிடும்.

 

Form 31  - முன்பணம் மற்றும் கடன் படிவம் (PF Part Withdrawal)

 

நாம் செலுத்திய பி.எப். பணத்தில் இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் முன்பணம், கடன் பெறுவதற்கு பி.எப்பில் வசதிகள் இருக்கின்றன.  அதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களை பி.எப் விதிகளை விதித்திருக்கிறது.  ஏற்கனவே இது குறித்து முந்தைய கட்டுரைகளில் விளக்கியிருக்கிறோம். அதைப் புரிந்துகொண்டு இங்கு கடனுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

 

பி.எப் பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுதல் (Claim Form 19)

 

இந்த விண்ணப்பம் என்பது நாம் நம்முடைய பி.எப் கணக்கில் செலுத்திய மொத்தப் பணத்தையும் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம் ஆகும். 

முழுமையாக திரும்ப பெறுவது என்பது இரண்டு சமயங்களில் சாத்தியப்படும். 

1. தொழிலாளி தன்னுடைய பணிக்காலம் முழுவதும் வேலை செய்து, ஓய்வு பெறும் காலமான 58 வயது நிறைவு பெற்றதற்கு பிறகு விண்ணப்பித்து வாங்குவது. 

2. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலையில் இருந்து நின்ற பிறகு இன்னொரு நிறுவனத்தில் இரண்டு மாதம் வரை இணையாத பொழுது, அதுவரைக்கும் நாம் செலுத்திய பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுவது.

 

ஓய்வூதிய பணத்தை மொத்தமாக பெறுதல் (Claim Form 10C)

 

ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலையில் இருந்து நின்ற பிறகு இன்னொரு நிறுவனத்தில் இரண்டு மாதம் வரை இணையாத பொழுது, அதுவரைக்கும் நாம் செலுத்திய  ஓய்வூதிய பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுவதற்கு இந்த விண்ணப்பத்தை பயன்படுத்தவேண்டும்.

 

எட்டு மாதங்களுக்கு குறைவாக வேலை செய்தால்… ஓய்வூதிய கணக்கில் செலுத்திய பணத்தை திரும்ப பெறமுடியாது.  பி.எப். இந்த ஓய்வூதிய பணத்தை திரும்ப செலுத்துவதற்கு சில விதிகளை உருவாக்கியுள்ளது.  அடுத்து நீங்கள் ஒரு நிறுவனத்தில் இணையும் பொழுது, எட்டு மாத காலத்திற்கு கீழே செலுத்தப்பட்ட தொகை உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். அதை வாங்கவே முடியாது என்று நினைக்க தேவையில்லை.

 

அதே போல  ஒன்பது ஆண்டுகளும், ஆறு மாத காலத்தையும் நாம் தாண்டிவிட்டால், பணிக்கால ஓய்வுக்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியம் தான் பெறமுடியுமே தவிர, இந்த நிதியை நாம் பெற முடியாது.

 

மேலும், 10C விண்ணப்பிதற்கு முன்பாக, பி.எப் பணத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் 19 ஐ பூர்த்தி செய்த பிறகு, 10C ஐ பூர்த்தி செய்வது சரியானது.  இல்லையெனில், பி.எப். உங்கள் விண்ணப்பத்தை ஏற்காமலோ, திருப்பி அனுப்பியோவிடும்.

 

ஓய்வு நிதி விண்ணப்பம் (Claim Form 10D)

 

ஒரு தொழிலாளி தனது பணி ஓய்வு காலமான 58 வயதுக்கு பிறகு மாதாந்திர ஓய்வு நிதி பெற விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம்  இது.

 

மாதாந்திர ஓய்வு நிதி பெறுவதற்கான முதல் தகுதி, ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்திலோ அல்லது சில நிறுவனங்களில் வேலை செய்தோ மொத்த பணிக்காலம் 9.5 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கவேண்டும்.

 

அதற்கு குறைவான பணிக்காலமாய் இருந்தால்,  ஓய்வு நிதிக்கு விண்ணப்பிக்க முடியாது.  அதுநாள் வரைக்கும் எவ்வளவு நிதியை ஓய்வு நிதியில் செலுத்தியிருந்தோமோ, அதை விண்ணப்பித்து மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். (அதற்கான விண்ணப்பம் 10C.).

 

ஒரு UAN எண் – ஒரு பி.எப் கணக்கு (One member – one EPF Account (Transfer Request))

 

ஒரு தொழிலாளி ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்திருக்கும் பொழுது, பி.எப். பணத்தை பெற விண்ணப்பிக்கும் பொழுது, எல்லா நிறுவனங்களின் கணக்குகளும் கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு மாற்றவேண்டும் என பி.எப். கோருகிறது. எல்லா கணக்குகளிலும் தொழிலாளியின் அடையாள எண்ணான ஓரே UAN (Universal Account No.) தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அதுவாகவே மாறாதா?  கடந்த ஏப்ரல் 1, 2024 தேதியில் இருந்து, ஒரே UAN எண்ணாக இருந்தால், தொழிலாளி நிறுவனம் மாறும் பொழுது  பழைய கணக்கை, புதிய கணக்கிற்கு மாற்ற தேவையில்லை என பி.எப். ஒரு அறிவிப்பைத் தந்தது. 

 

பெயரில் எழுத்துப்பிழை, வேலையில் சேர்ந்த தேதி, விலகிய தேதி குறிப்பிடப்படவில்லை என்ற சில காரணங்களால் பி.எப். மாற்றாமல் தனித்தனியான கணக்காகவே வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், நிறுவனங்களில் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கு மாறிவிட்டதா என சோதிப்பது மிக அவசியம்.

 

நமது விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளல் (Track Claim Status)

 

நாம்  பி.எப் கணக்கில் இருந்து கடன் பெற, பி.எப். பணம் பெற  பி.எப். ஓவ்யூதிய பணத்தைப் பெறவும் விண்ணப்பிக்கிறோம்.

 

விண்ணப்பிப்பதோடு நமது வேலை முடிந்துவிடுவதில்லை.   நமது பி.எப் கணக்கில் சில சிக்கல்கள் இருக்கலாம்.  ஆகையால், அதை முன்னிட்டு, நமது விண்ணப்பத்தை பி.எப். நிராகரிக்கலாம்.  குறைகளை சரி செய்ய கோரலாம்.  ஆகையால், விண்ணப்பம் செய்த பிறகு, ஒரு வாரம், பத்து நாளில் இந்த இடத்தில் போய் நாம் சரிப்பார்க்கவேண்டும்.  இன்னும் சரிபார்த்துக்கொண்டு (Processing)  இருக்கிறோம். உங்களுடைய விண்ணப்பம் (Approved) ஏற்கப்பட்டது.   உங்களுடைய விண்ணப்பத்தை நிராகரிக்கிறோம் (Rejected) என தெரிவிப்பார்கள்.

 

ஒரு விண்ணப்பத்தை எதற்காக நிராகரிக்கிறோம் என்பதை பி.எப். அலுவலகம் இன்னும் முறையாக தொழிலாளிக்கு தபால் வழியாகவோ, குறுஞ்செய்தி வழியாகவோ தெரியப்படுத்துவதில்லை.  கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருந்து பணம் வங்கிக்கு வரவில்லை என தெரிந்துகொண்டு, பி.எப். அலுவலகம் சென்று கேட்டால் தான் எதற்காக நிராகரித்தார்கள் என்கிற விவரம் தெரிய வருகிறது.   இதற்கு ஒரு தீர்வு கண்டுப்பிடித்தால் நலம்.

 

அதே போல இந்த தளம் நாள் முழுவதுமே மிக மெதுவாக வேலை செய்கிறது.  பல சமயங்களில் உள்ளேயே நுழைய முடியாத படி சிக்கல் செய்கிறது. ஆகையால் பல தொழிலாளர்களின் பல மணி நேரம் வீணாக செலவாகிறது. ஆகையால் பி.எப். தலைமை இதில் கவனம் செலுத்தவேண்டும் என தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

இன்னும் வளரும்.

 

இரா. முனியசாமி,

பி.எப்., .எஸ்.,  ஜி.எஸ்.டி ஆலோசகர்.


மின்னஞ்சல் முகவரி : ilakkiyaassociates@gmail.com

ஜி.எஸ்டி அனுபவம் - ஒரு சிறு முதலாளியின் கதை


அவருக்கு பெரிய படிப்பறிவு இல்லை.  ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். சொந்தமாக தொழில் செய்யலாம் என துணிந்து இறங்கிவிட்டார்.  இரண்டு நிறுவனத்திடமிருந்து கூலி (Job Work) வேலை செய்து தரும் ஒரு சின்ன நிறுவனமாக  துவங்கினார்.

 

பொருட்களை கொண்டு செல்லும் பொழுதும், வரும் பொழுதும், எழுந்த நடைமுறை இவேபில் பிரச்சனையால் ரோவிங் படையால் கணிசமான அபராத தொகை விதிக்கப்பட்டு, செலுத்தினார். அவருடைய பொருளாதார நிலைமைக்கு அது மிகப்பெரிய தொகை.

 

ஜி.எஸ்.டி பதிவு எடுத்தால், இந்த பிரச்சனையில் தப்பிக்கலாம் யாரோ ஒருவர் ”தப்பாக” யோசனை சொல்ல, என்னிடம் வந்தார்.

 

வருடத்திற்கு அவர் செய்யும் மொத்த வேலையே பத்து லட்சம் கூட தாண்டமாட்டார். ஜி.எஸ்.டி பதிவு எடுத்தால், உரிய தேதிக்குள் பணம் செலுத்தவேண்டும். இல்லையெனில் வட்டி, அபராதம், தாக்கல் செய்வதற்கான மாதாந்திர சேவை கட்டணம்,  என எல்லா நடைமுறை விசயங்களையும் தெளிவாக விளக்கினாலும், செய்த வேலையை விட்டுவிட்டதால், தொழில் செய்தால் தான் வாழலாம் என்ற நிலையில், அவருக்கு இரண்டாவது வாய்ப்பு இல்லை. எடுக்கலாம் என சொல்லிவிட்டார்.

 

பதிவு எடுத்து கொடுத்த பிறகு,  வங்கி கணக்கு திறந்து தாருங்கள் என சொன்னால்... குறைந்தபட்ச தொகையான ரூ. 5000 செலுத்துவதற்கு பணம் இல்லை என்றார்.  45 நாட்களுக்குள் கணக்கு துவங்கியே ஆகவேண்டும் என விதி சொல்லி வலியுறுத்தினேன்.

 

கணக்கு துவங்க போனது தாமதம். வங்கியிலும் அவர்களின் பங்குக்கு தாமதம் செய்தார்கள்.  70 நாட்கள் கழித்து கொடுத்தார். அதற்குள் ஜி.எஸ்.டி தளம் ரிட்டர்ன் போடவிடாமல் தடுத்தது. தாமதக் கட்டணத்துடன் ஒரு மாதம் தாக்கல் செய்யவேண்டியதாகிவிட்டது.

 

அதற்கு பிறகு வங்கி வழியே ஜி.எஸ்.டி செலுத்தலாம் என்றால்.. அதிலும் தொழில் நுட்ப பிரச்சனை. அந்த பிரச்சனையே சரி செய்யாமல், ”உங்களுக்கு பணம் அனுப்புகிறேன். நீங்கள் செலுத்துங்கள்” என்றார். செலுத்தினேன்.

 

அடுத்தமாதம் அதையே செய்ய சொன்னார். நிறுவனத்தின் கணக்கின் வழியே தான் செலுத்தவேண்டும். ஆகையால் உங்கள் அதற்கு முயலுங்கள் என வலியுறுத்தினேன். வங்கியில் போய் முட்டி மோதி, காசோலை புத்தகம் வாங்கி, அதன் மூலம் செலுத்தலாம் என விண்ணப்பித்தார்.  சொந்த வீட்டில் 30 வருடம் வாழ்கிறார். கொரியர்காரர்கள் முகவரியை கண்டுப்பிடிக்க முடியாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள். 

 

ஏப்ரல் மாதம் ரிட்டர்ன் பணத்தை மே 20க்குள் செலுத்தவேண்டும். காசோலையைப் பெற்று, பணத்திற்கு சிரமப்பட்டு  ஏற்பாடு செய்து, செலுத்தவேண்டியதை ஜூனில் 6 ல் செலுத்தினார்.

 

மிகச்சரியாக ஜூன் ஐந்தாம் தேதி தற்காலிகமாக ரத்து செய்துவிட்டார்கள்.  (Form GST REG -31). 

 

அலுவலகம் நேரில் போய் சின்ன நிறுவனம் என குறித்த விவரம், அவருடைய நிலையை எல்லாம் சொன்னால்.. தற்காலிக  ரத்தை சரி செய்துவிடலாம். அலுவலகத்திற்கான செலவு  (Office Exps) இருக்கிறது.  நீங்க சின்ன நிறுவனம் என்பதால்...சின்னதாய் கவனியுங்கள்”  என சொல்லிவிட்டார்கள்.

 

அவரிடம் நிலவரத்தை தெரிவித்தேன்.  என்னுடைய பர்சில் சிரித்துக்கொண்டே சில காந்திகள் இருக்கிறார்கள். கொடுத்துவிடலாம்.  ஏற்கனவே பதிவு எடுத்துக்கொடுத்த கட்டணம், மாதாந்திர கட்டணம் நிறைய பாக்கியிருக்கிறது.  நினைவுப்படுத்தி கேட்கும் பொழுதெல்லாம், ஒரு முறை விபத்தில் கை சிக்கலாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கிறேன் என்றார்.  இன்னொரு முறை பையனுக்கு அப்சன்டிசைட்டிஸ். நிறைய பணம் செலவாகிவிட்டது என்றார்.  இந்த கணக்கையும் அதில் சேர்த்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிடுவாரோ என பயமாக இருக்கிறது.

 

”ஒருமுறை என்னங்க! இவ்வளவு தாமதம் செய்கிறீர்கள்.  ஜி.எஸ்.டியில் சிக்கல் செய்துவிடுவார்கள்” என உள்ளதை கொஞ்சம் அழுத்திச் சொன்னேன்.   எனக்கான கட்டணம் கொடுக்காததால் தான் இப்படி ”கோபமாய்” பேசுகிறேன் என நினைத்தாரோ என்னவோ, ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைத்தார்.

 

அவர் ஜி.பே வழியான எனக்கு அனுப்பிய பணம் வந்த செய்தி வந்தது.  அந்த அலுவலரிடம் கொடுத்துவிட்டு, இன்றைக்குள் பதிவு பழைய நிலைமைக்கு வந்துவிடும் என உறுதியாய் தெரிவித்தார்.

 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். ”அணுகுண்டின் தந்தை” என போற்றப்படும் இராபர்ட் ஓப்பன் ஹைமர் இட்லரைத் தோற்கடிக்க அணுகுண்டை  தயாரித்தார்.  அவர் கண்டுப்பிடிப்பதற்குள், இட்லர் தோற்கடிக்கப்பட்டு, தற்கொலையே செய்துவிட்டான்.  அவர் தயாரித்த குண்டுகளை அமெரிக்கா, ஜப்பானை பணியவைக்க இரண்டு இடங்களில் போட்டது. சில லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இன்றைக்கு வரைக்கும் அதன் பாதிப்பு மோசமாக இருக்கிறது.

 

அந்த சமயத்தில் ஓப்பன்ஹைமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் பொழுது, மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருப்பார்.  அவரிடமே “என் கைகளில் ரத்தம் நிறைய படிந்திருக்கிறது” என்பார்.  ”இப்படிப்பட்ட அழுகுணிகளை எல்லாம் எதற்கு இங்கே அழைத்து வருகிறீர்கள்” என அலட்சியமாய் ஜனாதிபதி சொல்வார்.

 

தெரியாத்தனமாய் ஒரு சிறிய முதலாளியை ஜி.எஸ்.டிக்குள் தலையை கொடுக்க வைத்துவிட்டோமோ! எடுக்காமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது என கொஞ்சம் அழுத்தி சொல்லியிருக்கலாமோ என கவலையாய் இருக்கிறது!

June 4, 2024

Oppenheimer (2023) ஒரு விஞ்ஞானியின் உண்மை கதை


நோலன் படம், அறிவியல் படம், ஆகையால், இங்கிலீஷ் சப்டைட்டில் எல்லாம் நமக்கு பத்தாது என காத்திருந்தேன். இப்பொழுது தமிழிலும் வந்துவிட்டதாய் நண்பர் தெரிவித்தப் பிறகு  பார்த்தேன்.  இப்பொழுதும் முழுவதும் புரிந்ததாய் இல்லை.  இருந்தும் நம்ம கருத்தையும் உலகுக்கு சொல்வது அவசியம் எனப்பட்டதால்…! 

 

***

 

ஓப்பன்ஹைமர் காலம் (1904 – 1967).     முதல் உலகப்போரில் தோற்று, நொந்து நூடுல்சான ஜெர்மனை, அதையே காரணமாய் காட்டி இரண்டாம் உலகப்போருக்கு நகர்த்தி, உக்கிரமாய் சண்டை நடந்து கொண்டிருந்த காலம்.

 

ஓப்பன்ஹைமரை படத்திலேயே சிலர் ராபர்ட் (Julius Robert Oppenheimer)  என்றே அழைக்கிறார்கள். நாமும் அப்படியே அழைப்போம்.  ஒரு இயற்பியல் விஞ்னானி.  ஒரு யூதரும் கூட.  அமெரிக்க அரசு அவரை ஒரு அணுகுண்டு தயாரிக்க சொல்லி தூண்டுகிறது.  உலகம் அமைதி பெறவேண்டும். அதற்கு ஜெர்மனை வீழ்த்த வேண்டுமென்றால், ஒரு வலுவான ஆயுதம் வேண்டும் என்பதை ஏற்கும், அவர் மற்ற விஞ்ஞானிகளையும் ஒருங்கிணைக்கிறார். சில விஞ்ஞானிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள்.

 


அதற்காக ஒரு நகரை உருவாக்குகிறார்கள்.  ஒரு பெருங்கூட்டமாய் விஞ்ஞானிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து குடியேறுகிறார்கள்.   பெரும் பணம் செலவிடப்படுகிறது. மூன்று ஆண்டு காலம் உழைத்து, அவர்கள் நினைத்தது போலவே ஒரு அணுகுண்டை உருவாக்கிறார்கள். சோதனையும் செய்கிறார்கள். இதற்கிடையில் டுவிஸ்ட் என்னவென்றால், போரில் ஜெர்மனி தோற்று, உலகையே தனக்கு கீழே கொண்டு வந்துவிட என நினைத்த தலைவன் தற்கொலை செய்துகொள்கிறான்.

 

போர் முடியும் தருவாயில், இப்பொழுது  ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தில்  தாக்குதல் நடத்துகிறது.  ஜெர்மனிக்காக தயாரித்த குண்டை, அமெரிக்கா ஜப்பானின் இரண்டு நகரங்களில் குண்டை தூக்கி போடுகிறது. சில லட்சங்களில் உடனேயும், அதற்கு பின் வந்த காலத்திலும்  மக்கள் மாண்டுபோகிறார்கள். குற்ற உணர்வில் வருத்தப்படுகிறார்.

 

அமெரிக்காவின் பிரதமரை சந்திக்கும் பொழுது, அவர் மகிழ்ச்சியாய் வாழ்த்து  சொல்லும் பொழுது, இவர் ”தன் கைகளில் ரத்தம் தோய்ந்திருப்பதாக” சொல்கிறார்.  பிரதமரோ “தயாரித்தது மட்டும் தான் நீங்கள். ஜப்பானில் போட்டது நான் தான்!” என்கிறார். தன் செயலரிடம் ”இந்த மாதிரி அழுகுணிகளை எல்லாம் இங்கு அழைத்து வராதீர்கள்” என பிரதமர் எரிச்சல் அடைகிறார்.

அமெரிக்க அரசு ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதற்கான வேலைகளில் ஈடுபடுகிறது. இவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.   அமெரிக்க தயாரித்த நான்கு ஆண்டுகளில், ரசியாவும் அணுகுண்டு தயாரித்து சோதித்துவிடுகிறது.

 

”அணுகுண்டின் தந்தை” போற்றிய அமெரிக்க அரசு, இப்பொழுது அவர் பொதுவுடைமை தத்துவத்தின் மீது ஈர்ப்பும், அமெரிக்க வந்த சமயத்தில் சக விஞ்னான ஆசிரியர்களை இணைத்து ஒரு சங்கமும் உருவாக்க முயன்றார்.  பொதுவுடைமைவாதிகள் சிலரோடு (அவருடைய சகோதரர், காதலி பொதுவுடைமைவாதிகள்)  நட்பில் இருக்கிறார்கள். ஆகையால், இவர் ரசியாவிடம் ரகசியங்களை விற்றார் என குற்றஞ்சாட்டுகிறது.

 

துறை சார்ந்த ஒரு விசாரணை, FBI விசாரணை, நீதிமன்ற விசாரணை என அவரை விடாமல் துரத்துகிறது. அதிலிருந்து மீண்டு வந்தாரா?  என்பதையும் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***


நெருப்பை இந்த உலகுக்கு கொண்டு வந்தவர் என கிரேக்கத்தில் Prometheus  என ஒரு கடவுள் உண்டு.   .  இவரை அமெரிக்காவின் பிரமோதியஸ் என புத்தகம் ஒருவர் எழுத, அதை அடிப்படையாக கொண்டு தான் திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் நோலன்.

 

நோலன் படம் எப்பொழுது நேர்கோட்டில் சென்றது? அவருடைய தொடர் செயல்பாடுகளும், அவர் மீதான விசாரணையும் முன்னும் பின்னுமாய் பின்னி பிணைந்து வந்துகொண்டே இருக்கின்றன.   படம் பார்த்த பின்பு,  மேலே எழுதிய புரிதல் நிச்சயம் இல்லை. இதைப் புரிந்துகொள்ள  கொஞ்சம் வரலாறு, அரசியல்  புரிந்துகொள்ள கொஞ்சம் படிக்கவேண்டியிருந்தது.

 

நோலன் அந்த விஞ்ஞானியின் வரலாற்றை, அரசியலை பதிவது என்பதை விட மனநிலையை பதிவதில் நோலன் மிகவும் முயன்றிருக்கிறார்.  படம் முழுவதும் பேச்சு தான்.  அந்த சோதனையை மேற்கொள்ளும் பொழுது, இதன் தொடர் விளைவுகளால் உலகம் மொத்தமும் அழிந்து போகுமோ என்ற எண்ணமும் ஓரத்தில் இருந்துகொண்டே இருந்திருக்கிறது.  அந்தப் பட்டனை அழுத்தும் விஞ்ஞானிக்கு கை நடுங்கும்.  ஹிரோசிமா, நாகசாகி அதன் விளைவுகளை அறிந்திருக்கும் நமக்கும் பதட்டமாகிறது.

 

படத்தில் சம காலத்தை சேர்ந்தவரான ஐன்ஸ்டீனிடம் ராபர்ட்டுக்கு ஒரு சந்திப்பு நடக்கும். அந்த சந்திப்பின் வசனங்கள் மிகவும் முக்கியமானது.

 

அமெரிக்கா எல்லா நாடுகளையும் மிரட்டி உலகை வலம் வருவதற்கு இந்த அணுகுண்டு துவக்கப்புள்ளி என படம் பார்த்தப்பின்பு தோன்றியது.  இன்றைக்கும் அதன் ஆயுத, அரசியல் பலத்தை வைத்து தான் உலகை மிரட்டி வருகிறது.   அவர்களின் அரசியல் வீழ்ச்சியை உலக நாடுகளே எதிர்பார்த்து வருகிறது.

 

அமேசான், Zee5 ல் இருப்பதால் இருப்பதாக just watch தளம் சொல்கிறது.  இந்தப் படம் பற்றி உங்கள் கருத்து என்ன?

 

June 2, 2024

Thalavan (2024) மலையாளம்


ஓய்வு பெற்ற ஒரு போலீசு உயரதிகாரி ஒரு தனியார் சானலுக்கு தன்னுடைய பணிக்காலத்தில் இருந்த பிரபல வழக்குகள் குறித்து பேசுகிறார்.


அதில் ஒரு வழக்கை எடுத்து பேசும் பொழுது… ஒரு போலீசு இன்ஸ்பெக்டர் நேர்மையாக இருக்கிறார். கொஞ்சும் முசுடாகவும் இருக்கிறார். அவருடைய துணைவியாரை வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆள் வந்து கடுமையாக தாக்குகிறான். அவனை கைது செய்து உள்ளே தள்ளுகிறார். தாக்கியவருடைய மனைவி அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து தன் கணவனை மன்னிக்கும்படி, வெளியே வருவதற்கு உதவி செய்யும்படி கெஞ்சுகிறார்.

அவருடைய ஸ்டேசனில் புதிதாக ஒரு உதவி ஆய்வாளராக (SI) பணியில் சேர்கிறார். அவரும் நேர்மையான ஆள். ஆனால் அவருடைய “துடுக்கான” பேச்சால், ஒன்றரை வருடத்தில் ஐந்து மாற்றல்கள் பெற்று, இங்கு வந்துள்ளார். இங்கும் (மேலே சொன்ன) இன்ஸ்பெக்டரோடு முட்டிக்கொள்கிறார்.

இந்த சமயத்தில் திடீரென அந்த பெண் கொலை செய்யப்பட்டு, அந்த இன்ஸ்பெக்டரின் வீட்டு மாடியில், கடுமையாக தாக்கி, கொல்லப்பட்டு ஒரு சாக்கில் கட்டப்பட்டு கிடக்கிறார். இன்ஸ்பெக்டரை கைது செய்து, போலீசு விசாரணையை துவங்குகிறது.

இப்பொழுது இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு. விசாரிக்கும் பொறுப்பு அடுத்த நிலையிலிருக்கும் உதவி ஆய்வாளரிடம் வருகிறது. தொடரும் விசாரணையில் நிறைய புதுப் புது விசயங்கள் வெளியே வருவதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
****


ஒரு கொலை. அந்த கொலையை ஒட்டிய விசாரணையை சுவாரசியமாகவும், (மலையாள படங்களுக்குரிய) விறுவிறுப்பாகவும் சொன்னது நன்றாக இருக்கிறது.

போலீசு Vs பொதுமக்கள், போலீசு Vs போலீசு முரணைத் தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறார்கள். ஒரு இடத்தில் நண்பர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள். அங்கு தற்செயலாக வரும் ஒரு போலீசு ”என்னடா இத்தனைப் பேர் ஒரு பெண்ணை தள்ளிக்கிட்டு வந்திருக்கிறீர்கள்?” என கேவலமாய் கேட்பது அங்கு ஏகப்பட்ட களேபரங்களை உருவாக்கும். போலீசு பொதுமக்களை தனக்கு கீழாக தான் பார்க்கிறது. அதே போல தான் நடத்துகிறது. அதனால் தான் ”போலீசு உங்கள் நண்பன்” என பிரச்சாரம் செய்யவேண்டிய தேவையிருக்கிறது.

போலீசு பொதுமக்களையே இப்படித்தான் நடத்துகிறது. தன்னுடைய ஸ்டேசனில் மட்டும் சக போலீசை மட்டும் சரியாக நடத்திவிடுமா என்ன? புகைச்சல்களை உருவாக்கிவிடுகிறது. வாய்ப்பு கிடைக்கிற பொழுது சிக்கலில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

இன்ஸ்பெக்டராக வரும் பிஜூமேனன் அந்தப் பாத்திரத்திற்கான நடிப்பு, உணர்வுக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறையில் உள்ள சண்டைக்காட்சியில் தமிழ், தெலுங்கு படங்களின் பாதிப்பு நன்றாக தெரிகிறது.

உதவி ஆய்வாளராக வரும் அசிப் அலி நன்றாக செய்திருக்கிறார். முரண்படும் இடங்களில் எல்லாம் நன்றாக கோபப்பட்டுள்ளார். மற்றவர்களும் பொருத்தம் தான். ஜிஸ் ஜாய் இயக்கியுள்ளார்.

தொலைக்காட்சியில் ஒவ்வொரு வழக்காக பேசும் அந்த ஓய்வு பெற்ற அதிகாரியை இறுதியில் யாரோ சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். இரண்டாம் பாகத்திற்கு அடி போட்டுள்ளார்கள்.

தமிழகத்தின் திரையரங்குகளில் சப் டைட்டிலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் பாருங்கள்.