August 20, 2025

நீட்சே சொன்ன மூன்று மனித தவறுகள்

 நீட்சே சொன்ன மூன்று மனித தவறுகள் – இன்று நம்மை எப்படி பாதிக்கின்றன?


19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃபிரிட்ரிக் நீட்சே, மனிதர்கள் செய்யும் மூன்று முக்கியமான தவறுகளை சுட்டிக்காட்டினார். அதே தவறுகள் இன்று — குறிப்பாக சமூக ஊடக யுகத்தில் — இன்னும் தீவிரமாகவே இருக்கின்றன.


1️⃣ அதிக வேலை – Busy ஆன வாழ்க்கை, சுயத்தை மறக்கும் மனம்


நீட்சே சொன்னார்:  

> “மனிதன் எப்போதும் வேலைப்பளுவில் மூழ்கி இருந்தால், அவன் தன்னைத்தானே மறந்து விடுகிறான்.”


இன்று நாம் “busy” என்பதையே பெருமையாகக் கூறுகிறோம். ஆனால், அந்த பிஸியான வாழ்க்கை:

- தனிப்பட்ட சிந்தனைகளுக்கு இடமளிக்காது  

- கனவுகள், இலக்குகள் எல்லாம் பின்தள்ளப்படுகின்றன  

- ஒருவரை “யந்திரம்” போல ஆக்கிவிடுகிறது  


நாம் யார்? எதற்காக வாழ்கிறோம்? என்ற கேள்விக்கு பதில் தேடவே நேரமில்லை. இது ஒரு “self-negation” — சுயத்தை மறுக்கும் மனநிலை.


2️⃣ மேலோட்டமான ஆர்வம் – “கொஞ்சம் கொஞ்சம்” தெரிந்துகொள்ளும் பழக்கம்


நீட்சே சொன்னார்:  

> “ஒவ்வொன்றையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளும் ஆர்வம், எந்த ஒன்றிலும் ஆழம் இல்லை.”


இன்று நாம்:

- YouTube short-கள், Reels, Tweets மூலம் தகவல்களை “சுருக்கமாக” பெறுகிறோம்  

- ஆனால் எந்த விஷயத்திலும் ஆழமாக ஈடுபடுவதில்லை  

- “நிபுணத்துவம்” என்பது ஒரு சவாலாகிவிட்டது  


அறிவின் ஆழம் இல்லாமல், வளர்ச்சி என்பது ஒரு மாயை. உண்மையான முன்னேற்றம் — தீவிர ஆராய்ச்சி, ஆழமான சிந்தனையால் மட்டுமே சாத்தியம்.


3️⃣ அளவுக்கு மீறிய இரக்கம் – எல்லோரிடமும் சம இரக்கம்


நீட்சே சொன்னார்:  

> “நன்மை-தீமை வேறுபாடு தெரியாத இரக்கம், ஒழுக்கத்தை தகர்க்கும்.”


இன்று நாம்:

- எல்லா பிரச்சனைகளிலும் “நாம் எல்லாரும் victims” என்ற மனப்பாங்கு  

- நல்லது, கெட்டது என்ற வேறுபாடு தெரியாமல் “sympathy overload”  

- இது நீதியை மங்கச் செய்கிறது  


இரக்கமும், நீதியும் சமநிலையில் இருக்க வேண்டும். இல்லையெனில், ஒழுக்கம் itself குழப்பமாகிவிடும்.


📱 நீட்சே சமூக ஊடக யுகத்தை பார்த்திருந்தால்?


- Workaholic culture  

- Superficial scrolling  

- Sympathy without discernment  


இவை அனைத்தும் நீட்சே சொன்ன தவறுகளை இன்னும் தீவிரமாக உருவாக்குகின்றன.  

அவர் பார்த்திருந்தால், “மனிதன் சுயத்தை மறந்துவிட்டான்” என்பதையே மீண்டும் வலியுறுத்தியிருப்பார்.


🔚 சுருக்கமாக:


நீட்சே சொன்ன மூன்று தவறுகள்:

1. மிதமிஞ்சிய உழைப்பு  

2. ஆழமற்ற ஆர்வம்  

3. அளவற்ற இரக்கம்


இவை நம்மை:

- சுயத்தை மறக்க வைக்கின்றன  

- ஆழமற்ற வாழ்க்கையை உருவாக்குகின்றன  

- நியாய உணர்வை மங்கச் செய்கின்றன  


இவை அனைத்தும் — நம்மை “வாழ்வது போல வாழாமல்”, “வாழ்வை ஓட்டுவது போல” ஆக்குகின்றன.

மூளை Vs உடல்


நாற்பது வயதுக்குப் பிறகு மனதில் ஒரு நிதானம் பிறக்கிறது. பல விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன. நாம் யார்? நமக்கு என்னென்ன வரும் என்னென்ன வராது? என்பதெல்லாம் கொஞ்சம் புரிகிறது. இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்யக் கூடாது என்று தெரிகிறது.


ஆனால், மனம் அதற்குள் ஒரு நாற்பது வருடப் பழக்கத்தில் ஊறிப் போயிருக்கும். அதற்கு கடிவாளம் போட்டு இழுத்து வருவது அத்தனை எளிதல்ல.

அதிலும் இந்த மனித மூளை போல் கிருத்துருவம் பிடித்த ஒரு வஸ்து இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. அது நம் உடலை எப்படி ஏமாற்றும். மனதை எப்படி ஏமாற்றும். தன்னையே எப்படி ஏமாற்றும் என்பதற்கு எல்லாம் பலநூறு கதைகள் இருக்கின்றன.

சில உளவியல் ஆலோசகர்கள் மூளையை சவுக்கால் சொடுக்கி வேலை வாங்க வேண்டும். இல்லாவிடில் அது நம்மை ஏய்த்துவிட்டு, உல்லாசமாக தனக்கான சஞ்சாரத்தில் ஏகாந்தம் காணும் என்கிறார்கள்.

ஆனால், அது அத்தனை எளிதல்ல. எல்லா மனிதர்களுக்குமே கடினமாக உழைக்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது என்றெல்லாம் ஆசை இருக்கும். உண்மையில் அதனை எல்லோராலும் செய்ய இயல்வதில்லை.

இதன் பிரதான காரணம் பழக்கம் உருவாக்கும் மனத்தடை. இந்த மனத்தடைக்கு உடல் ஒரு பிரதான காரணம். நாற்பது வருடமாக உடலை நாம் ஒரு வழக்கத்தைச் செய்யப் பழக்கப்படுத்தியிருப்போம். உடல் அதற்கு வாகாகப் பழகியிருக்கும்.

திடீரென புதிய வழக்கத்துக்குள் தள்ளும்போது அது ஏற்றுக்கொள்ள இயலாமல் தடுமாறும். இன்னொன்று மனம் அல்லது மூளை உருவாக்கும் மனத்தடை.

மேற்சொன்ன வழக்கத்துகு மாறான புதிய வழக்கத்துக்குள் நுழைவதில் இருக்கும் சிக்கலின் காரணத்தால்தான் மூளையும் இதற்கு தடை சொல்கிறது. ஆனால், மூளை வெறுமனே அதைச் செய்வதில்லை. நன்றாக யோசித்தே அதைச் செய்கிறது.

இதைப் புரிய மூளையின் திருட்டுத்தனம் எத்தகையது என்பதைப் புரிய வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றில் உடலில் சேகரமாகும் ஆக்சிஜனில் அறுபது சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்ளும்.

எஞ்சியதைத்தான் அது உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பிரித்துக்கொடுக்கும். அவையும் அமைதியாக வாங்கிக்கொண்டு வேலை செய்யும்.

இப்படி தன்னிடம் சேகரமாகியிருக்கும் அறுபது சதவீத ஆற்றலை அல்லது ஆக்சிஜனை என்ன செய்ய வேண்டும் என்ற ஏகபோகம் மூளையுடையதுதான். அது விரும்பினால் அந்த அறுபது சதவீதத்தை அப்படி ஓரமா உட்காரு என்று சொல்லிவிட்டு, அதன் மீது ஜம்பமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும்.

இல்லாவிடில், போய் வேலை செய்வோம் என்று உருப்படியாய் ஒரு வேலையைச் செய்யும். எதையாவது யோசிக்கும். தீவிரமாக சிந்திக்கும். மனம் போன போக்கில் சிந்திக்கும். புதியவற்றை யோசிக்கும். பழையவற்றுக்கு ஏங்கும். இப்படி எதையாவது அது இஷ்டம் போல் செய்து அதனை செலவழிக்கும்.

இப்போது நீங்கள் திடீரென நாற்பது வயதுக்குப் பிறகு கடுமையாக உழைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறீர்கள். உதாரணமாக ஓர் ஒழுங்கீனமான எழுத்தாளர்.

இனி கெட்ட சகவாசங்களை எல்லாம் விட்டுவிட்டு உருப்படியாய் உட்கார்ந்து எழுத வேண்டும் என நினைக்கிறார். அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். தொடர்ந்து நான்கு மணி நேரம் அசைவின்றி ஓரிடத்தில் உட்கார உடலும் மனமும் பழக வேண்டும். ஒரே விஷயத்தை தொடர்ந்து யோசிக்க மூளை பழக வேண்டும்.

இப்போது மூளை யோசிக்கும். நாம் இனி உடலை சீராக இரு என்று சொன்னால், அவை நம்மிடம் அதைச் செய்ய கூடுதலாக ஆக்சிஜன் செலவாகும். அதைக் கொடு என்று கேட்கும். நுரையீரலோ வழக்கமாய் கொடுப்பதைத்தான் கொடுக்கும். அது நமக்கே போதாது.

எதற்கு வம்பு. பேசாமல் இப்படியே இரு என்று மனதைத் தூண்டு. அது அமைதியாக அதன் போக்கில் இருக்கும். தொல்லையில்லாமல் நாம் இருக்கலாம் என மூளை நினைக்கும்.

நிஜமாக மூளை இப்படி நினைக்குமா என்று கேட்பீர்களானால், ஆமாம் நிஜமாகவே அப்படித்தான் நினைக்கும். அது அத்தனை திருட்டுத்தனமானது.

மருத்துவர்கள் ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்கிறார்கள். அரிப்பு ஏற்படும்போது நாம் சொரிகிறோம் அல்லவா? அந்த சொரிதல் என்ற செயல்பாட்டுக்கும் அரிப்பு என்ற நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிறகு ஏன் சொரிந்ததும் அரிப்பு நிற்கிறது. நிஜத்தில் அரிப்பு நிற்பதில்லை.

அது அரிக்கிறது என்ற செய்திதான் மூளைக்குக் கடத்தப்படுவது நிற்கிறது. அதாவது, நம் உடலில் ஏதேனும் பூஞ்சையோ, வேதிப்பொருளோ படும்போது அவ்விடம் அரிக்கிறது. உடனே அச்செய்தியை நரம்புகள் மூளைக்குக் கடத்தும். நிஜத்தில் மூளைக்கு அரித்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. அதை சொரிந்துவிடு என்று சொல்லிவிடும். சொரியும் போது சொரிகிறோம் என்ற செய்தி மட்டுமே அந்த நரம்பின் வழியாக மூளைக்குச் செல்லும். அரிக்கிறது என்ற செய்தி மூளைக்கு செல்லாமல் என்கேஜ்டாக நின்றுவிடும்.

நீங்கள் ஒருவரோடு போனில் பேசும்போது வேறு ஒருவர் அதே லைனில் நுழைய முடியாது இல்லையா? அதே டெக்னிக்தான். மூளை இப்படி தனக்கு பதில் தெரியாத, தனக்குப் பிடிக்காத, தான் மாற விரும்பதா விஷயத்தை தவிர்க்க தன்னையே ஏமாற்றிக்கொள்ளும். என் காதில் அதனைக் கொண்டு வராதே என்று சொல்லி காதைப் பொத்திக்கொள்ளும்.

உண்மையில் இது ஒரு சர்வைவல் டெக்னிக். இந்த உத்தி வழியாகவே மூளை ஆபத்தான மற்றும் சிக்கலான தருணங்களில் தன்னையும் உடலையும் காத்துக்கொள்கிறது.

அதனால், புதிய விஷயத்தை உங்கள் உடம்புக்குப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதல்ல. அதற்கு மூளையை சொடுக்குப் போட்டு சாட்டையில் விளாசி கடுமையாக வேலை வாங்க வேண்டும். இல்லாவிடில் ஏய்த்துவிடும்.

நம் மூளையில் இரண்டு பகுதி உள்ளது. ஒன்று ஏமாற்றும் வேலைக்காரன். இன்னொன்று கண்டிப்பான எஜமானன். எஜமானன் தீவிரமாகக் கண்காணித்தால் வேலைக்காரன் அமைதியாக வேலை செய்வான். எஜமானன் கண்கானிப்பதை நிறுத்திவிட்டால், வேலைக்காரன் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவான்.

August 19, 2025

ஜோசியர் சொந்த வீட்டில்! ஜோசியம் பார்த்தவர் வாடகை வீட்டில்!


சென்னையில் இருக்கும் வரை எதுவும் தெரிவதில்லை. ஆனால், சொந்த ஊருக்கு போனால், வெளிநாடு போகலாமா, தொழில் துவங்கனுமா, சொந்த வீடு கட்டலாமா, வரன் பொருத்தம் பார்க்கனுமா என சகலத்துக்கும் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியம் பார்க்கிறார்கள்.

கடவுள், பேய், பூதம் நம்பிக்கையில்லாமல் இருந்தால் தான் இதில் இருந்து தப்பிக்க முடியும். இல்லையெனில், மண்டையை நிச்சயம் குழப்பிவிடுவார்கள்.

சொந்தத்தில் ஒரு பையனுக்கு பெண் அமையவில்லை என ஒரு ஜோசியக்காரரிடம் செல்ல, ரூ. 30000 க்கு பெரிய பில்லை போட்டு பூஜை ஒன்றை அந்த ஜோசியக்காரன் நடத்தினாராம். டேய்! சம காலத்தில் பொண்ணு கிடைக்கவில்லைன்னு சொல்றது எல்லா ஊரிலும் உள்ள பிரச்சனைடா!

”நீ பிறந்த பொழுது பெரிய வறுமைடா!” என சின்ன வயதில் சொல்லிக்கொண்டே குற்ற உணர்ச்சியை உருவாக்குவார்கள். கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் தெரிந்தது. நான் பிறந்த வருடத்தில், தமிழ்நாடு முழுவதுமே பெரிய பஞ்சமாக இருந்திருக்கிறது என அறியும் பொழுது... வந்ததே கோபம்!

அறிவியலின் கைப்பிடித்து... இன்னும் நாம் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும். தமிழகமே இப்படி இருக்கிறது என்றால்... வட மாநிலங்களை நினைத்துப் பார்க்கவே பகீரென்று இருக்கிறது. இன்னும் கோயில், கும்பாபிசேகம், கலவரம் என பின்னுக்கு இழுத்துக்கொண்டே செல்கிறார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

Ronth (2025) மலையாளம்

கேரளாவின் வடக்கு பகுதி எல்லையில் உள்ள கண்ணூர் மாவட்டம். அங்கு ஒரு தர்மசாலா என போலீஸ் ஸ்டேசன்.


20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ள ஒரு எஸ்.ஐ, பணிக்கு சேர்ந்து ஆறு மாதமே ஆன ஒரு கான்ஸ்டபிள். இருவருக்கும் அன்றைக்கு ஊரை வலம் வருகிற ரோந்து (Patrol) வேலை தரப்படுகிறது.

அந்த ஒரு நாள் இரவில் அவர்களுக்கு பலவித அனுபவங்கள் ஏற்படுகிறது. ஒரு காதல் ஜோடி வீட்டுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மனநிலை சரியில்லாத ஒருவர் தன் குழந்தையை யாராவது கடத்தி கொண்டு போய்விடுவார்கள் என ஒரு டிரம்மில் அடைத்து வைத்திருக்கிறார். ஒரு வீட்டில் ”ஒரு பெண் தற்கொலைக்கு முயல்கிறார். காப்பாற்றுங்கள்” என அடுத்தடுத்து அவர்களுக்கு செய்தி வருகிறது.

அடுத்தநாள் காலையில் எதிர்பார்க்காத ஒரு இறுதிக்காட்சியோடு படம் முடிவடைகிறது.

*****


போலீஸ்காரராக இருந்து, ஜோசப், நாயாட்டு, ஆபிசர் ஆன் டுயூட்டி என கதாசிரியராக மாறி, இள வீழ பூஞ்சிறா இயக்கி இப்பொழுது இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

படம் இயல்புத்தன்மையோடு இருப்பதற்கு இது முக்கிய காரணம். பெண் போலீஸ் ரோந்து கிளம்பும் அந்த போலீசிடம் “குடிகாரர்களை பிடித்து வந்துவிடாதீர்கள். இங்கு களேபரம் செய்துவிடுகிறார்கள்.” என்கிறார். கணவரிடம் இருந்து போன் வரும் பொழுது, கொஞ்சம் தள்ளியிருங்கள் என அந்த பெண் போலீசு சொல்வார். பேசிவிட்டு, “என் புருசன் சந்தேக பேர்வழி. அதனால் தான் சொன்னேன். தப்பா எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்பார்.

இயக்குநர் அரசியல் புரிந்தவராகவும் இருப்பதற்கு, அந்த அதிகாரி கான்ஸ்டபிளிடம் “பணக்காரர்களிடமிருந்து ஏழைகள் எதுவும் பிடுங்கிவிடக் கூடாது என்பதற்காக தான் போலீசே!” என்பார். அடுத்து அந்த பாதிரியிடம் பேசும் காட்சியும் அதற்கு எடுத்துக்காட்டு. இரண்டு போலீஸ்காரர்களின் வாழ்வையும் இணைத்து சொன்னது இயல்பாக இருந்தது.

செல்வாக்கு உள்ளவர்களோடு இணைந்து அதிகாரத்தில் உள்ளவர்கள் தனக்கு கீழ் உள்ளவர்களை எப்படி மாட்டிவிடுவார்கள் என்பதையும் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள். நல்லவர்களும், அப்பாவிகளும் போலீஸ் துறையில் எவ்வளவு அல்லல்படுவார்கள் என நினைக்கும் பொழுது பதட்டமாய் இருக்கிறது.

இரண்டு முக்கிய போலீஸ் பாத்திரங்களான திலீப் போத்தனும், ரோஷன் மாத்யூ இருவரும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.
திலீப் போத்தன் இன்னும் சிறப்பு.

பார்க்கவேண்டிய படம். தமிழிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. ஜியோ சினிமாவில் இருக்கிறது. பாருங்கள்.

August 10, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) : சில சந்தேகங்களும் விளக்கங்களும்!


சமீபத்தில் ஒரு புதிய நிறுவனத்தில் நிர்வாகியை சந்தித்து பேசுகிற பொழுது, சில பணியாளர்கள் தங்களுக்கு பி.எப் திட்டத்தில் இணைய விருப்பமில்லை என தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்க முடியுமா சார்? என கேட்டதற்கு ஏற்றுக்கொண்டேன்.

 

உடனே அந்த அலுவலகத்தின் கான்பரன்ஸ் ஹாலில் 15 பேர் வரை வந்து குழுமினார்கள்.  20 வயது துவங்கி 50 வயது வரைக்குமான வயதினர் இருந்தார்கள்.  இருபது நிமிடங்கள் பி.எப், இ.எஸ்.ஐ. திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்க, நாற்பத்தைந்து நிமிடங்கள் அவர்கள்  கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் அந்த விளக்க கூட்டம் முடிவுற்றது.

ஒவ்வொரு தலைப்பையும் விரிவாக எழுதுவதால், இந்த தலைப்பில் பேசியது, பெரும்பாலான பணியாளர்களுக்கு உதவும் என்பதால் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  

 

பணியாளருக்கான பி.எப் நலத்திட்டங்கள்

 


ஒரு பணியாளர் தன்னுடைய பணிக்காலத்தில் சம்பளம் அவருடைய வாழ்வாதரத்திற்கு உதவுகிறது. ஆனால் ஓய்வு பெற்ற பிறகு, அவர் வாழ்வதற்கு ஒரு நிதியை உருவாக்கி தருவது அவருக்கு மிகவும் பயன்படும்.   அவருக்கு ஓய்வூதியமும் இதன் மூலம் ஏற்பாடு செய்தால், மரியாதையுடன் வாழ்வதற்கு உதவி செய்யும் என்பதற்காகவே, 1952ல் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

 

(ஆகஸ்ட் 2023 நிலவரத்தின் படி) இத்திட்டத்தில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மொத்தம் கிட்டத்தட்ட 8 லட்சம்.  பயன்பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 கோடி பேர்  ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 77 லட்சம் பேர்.

 

ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் (Basic Salary), பஞ்சப்படி (Dearness Allowance) இரண்டிலும் வேலை செய்த நாட்களுக்கு சம்பளம் கணக்கிட்டு, அதில் 12% பிடித்தம் செய்யவேண்டும்.  நிறுவனமும் அதே அளவிற்கு 12% செலுத்தவேண்டும். நிறுவனம் செலுத்துகிற நிதியான 12% நிதியில் 8.33%  ஓய்வூதிய கணக்கிற்கு செல்லும். மீதி 3.67% பி.எப் கணக்கிற்கு செல்லும்.

 

சேகரிக்கப்படும் பணத்திற்கு வருட வட்டி வருடந்தோறும் கணக்கிட்டு தருகிறார்கள். 2024 – 25 கணக்காண்டிற்கு 8.25% அறிவித்திருக்கிறார்கள்.  வங்கி வட்டியை விட நல்ல வட்டி தருகிறார்கள்.

 

பணியாளருக்கான ஓய்வூதியம்


 

ஒரு பணியாளர் தன்னுடைய பணிக்காலம் 58 வயது வரை வேலை செய்த பிறகு, விண்ணப்பித்து  பெறுவது தான் ஓய்வு நிதி.  இதற்கு முதல் தகுதி ஒரு நிறுவனத்திலோ அல்லது சில நிறுவனங்களிலோ வேலை செய்த காலங்களின் கூட்டுத்தொகை பத்து ஆண்டுகளுக்கு  அவர் கணக்கில் செலுத்தியிருக்கவேண்டும்.

 

பி.எப்  ஓய்வூதியத்தை எப்படி கணக்கிடுகிறது?

 

தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை கீழ்க்கண்ட வகையில் கணக்கிடுகிறது. சிக்கலான முறை எல்லாம் கிடையாது.

கணக்கிடுவதற்கான Formula = Pensionable Salary * Employee Service

                                                            70

https://www.epfindia.gov.in/EP_Cal/pension.html  இந்தச் சுட்டியும் ஓய்வூதியத்தை கணக்கிட உதவும்.

 

குறைக்கப்பட்ட ஓய்வூதியம் அல்லது விருப்ப ஓய்வூதியம்  (Reduced Pension)

 

ஒரு பணியாளர்  வேலை செய்ய இயலாமை காரணமாகவோ, தனது நோயின் காரணமாகவோ 50 வயது முடிவடைந்ததுமே, ஓய்வூதியம் பெறுவதற்கு உரிய தகுதி அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பி.எப். பென்சன் தொகை செலுத்தியிருந்தால் தனக்கு ஓய்வூதியம் அவசியம் என கருதினால், பி.எப்பில் விண்ணப்பிக்கமுடியும்.  இதில் மேலே விளக்கியபடியே தான் பி.எப். ஓய்வு நிதியை கணக்கிடுவார்கள். 

 

பணியாளரின் குடும்பத்திற்கான ஓய்வூதியம்

 


ஒரு பணியாளர் பணியில் இருக்கும் பொழுது இறப்பு ஏற்பட்டால்,  அவருடைய குடும்பத்திற்கும் ஓய்வூதியம் கிடைப்பதற்கு பி.எப் வழி செய்கிறது.  பணியாளர் ஆணாக/பெண்ணாக இருந்தால், அவருடைய துணைவியாருக்கு/கணவருக்கு  அவருடைய இறப்பு காலம் வரைக்கும் ஓய்வூதியம் கிடைக்கும்.

 

பணியாளருடைய இரண்டு வாரிசுகளுக்கு அவர்களுடைய இருபத்தைந்து வயது வயது வரையும் நிதி கிடைக்கும்.  அந்த இரண்டு வாரிசுகளுக்கு பிறகும், மேலும் அவருக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களும் விண்ணப்பித்தால், அவர்களும் தங்களுடைய இருபத்தைந்து வயது வரை நிதி கிடைக்கும்.

 

ஊனமுற்றோருக்கான ஊதியம்

 

ஒரு பணியாளர் வேலை செய்யும் பொழுது விபத்து ஏற்பட்டு, பகுதியளவு ஊனமானலோ, அல்லது வேலை செய்யமுடியாத அளவிற்கு முழு ஊனம் ஆனாலோ அந்த பணியாளர் ஊனமுற்ற நாளிலிருந்து மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுகிறார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும். 

 

பணியாளருக்கான EDLI (Employees Deposit Linked Insurance Scheme)  திட்டமும்  அதன் பலன்களும்

 


இந்தத் திட்டம் 1976ல் அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான திட்டமாகும்.  பி.எப் திட்டத்தில் இணைந்த அனைத்து பணியாளர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.  கட்டவேண்டிய தொகை என்பது, ஒரு பணியாளரின் மாதாந்திர அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படியில் 0.50% கணக்கிட்டு பணியாளர் செலுத்தவேண்டியதில்லை. நிறுவனமே செலுத்தும். 

 

இறப்பதற்கு முன்பு பணியாளர் வேலை செய்த ஓர் ஆண்டு சம்பளத்தைக் (Basic + DA) கணக்கிட்டு, அதை 35ஆல் பெருக்குகிறார்கள்.  கூடுதல் போனசாக ரூ. 1.75 லட்சத்தையும் சேர்த்து தருகிறார்கள். அதிகப்பட்சம் ஏழு லட்சம் வரை கிடைக்கும்.

 

இதற்கு பிறகு பணியாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு, பதிலளிக்க ஆரம்பித்தேன்.

 

பணியாளருக்குரிய வருங்கால வைப்பு நிதி (PF) அடையாள எண் (UAN – Universal Account Number)

 

பணியாளருக்கென செலுத்தப்படும் நிதிக்காக. வங்கியில் கணக்கு எண் தருவது போல, பி.எப் அமைப்பும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 12 இலக்கங்களில் தனித்த ஒரு அடையாள எண்ணைத் தருகிறது.

  

பணியாளரின் அடிப்படை தரவுகளையும், ஆதார் எண்ணையும் பெற்று, நிறுவனம் பி.எப் தளத்தில் பதியும் பொழுது, பி.எப். தனித்த அடையாள எண்ணை (UAN) தருகிறது.

 

அந்த (UAN) எண்ணை பெற்றுக்கொண்டால், இனி பணியாளர் தன் வாழ்நாளுக்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  அதே எண்ணைத் தான் அடுத்து புதிய வேலையில் எங்கு இணைந்தாலும், அங்கும் தெரியப்படுத்தவேண்டும்.

 

 நிறைய பணியாளர்கள் தன்னுடைய அடையாள (UAN) எண்ணை முறையாக குறித்து வைத்துக்கொள்வது இல்லை. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதால், சம்பந்தப்பட்டவருக்கு ஏற்கனவே பி.எப் அடையாள எண் (UAN) இருக்கும் பட்சத்தில், பி.எப் தளத்தில் பணியாளரின் ஆதாரை அடிப்படையாக வைத்து சோதிக்கும் பொழுது அவருக்குரிய தனித்த எண்ணை பி.எப் தளமே காட்டிவிடுகிறது.

 

இப்படிப் பதிந்த பிறகு நிறுவனம் பணியாளருக்கு உரிய அடையாள எண்ணை (UAN) தெரியப்படுத்தவேண்டும். பணீயாளரும் அந்த எண்ணை நிறுவனத்திடமிருந்து கேட்டுப் பெற்று, பாதுகாப்பாய் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

 

பணியாளர்களுக்காக இயங்கும் பி.எப் தளத்தின் முகவரி

 


பி.எப். பணியாளர்களுக்கென ஒரு தளத்தை இயக்கி வருகிறது.  அந்த தளத்தின் வழியாக தான் கடனுக்கு விண்ணப்பிப்பது, பி.எப். நிதியைப் பெற விண்ணப்பம் சமர்ப்பிப்பது, ஓய்வு நிதி பெறுவதற்கான விண்ணப்பத்தை  சமர்ப்பிப்பது என பல வேலைகளை செய்ய உதவுகிறது. 

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

 

பணியாளரின் கணக்கு விவரங்கள் (Passbook)

 

பணியாளர்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரிந்துகொள்வதற்காக தனியாக ஒரு தளத்தை பி.எப். உருவாக்கி தந்திருக்கிறது.  அந்த தளத்திற்கான User ID, கடவுச்சொல் பி.எப் தளத்தில் நாம் பயன்படுத்துகிற அதே User ID, கடவுச்சொல்லையே பயன்படுத்திக்கொள்ளலாம். https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login  என்ற தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.  செல்லில் Umang என்ற ஒரு செயலி (App) இருக்கிறது.  அதிலும் பார்த்துக்கொள்ளலாம்.

 

ஒரு பணியாளர் நிறுவனத்தில் இருந்து விலகும் பொழுது, தன்னுடைய பி.எப். பணத்தைப் பெறுவதற்கு நிறுவனத்தின் அனுமதி தேவைப்படுமா?  வேலை செய்யும் பொழுது நடந்த ஏதோ ஒரு முரண்பாட்டை காரணம் சொல்லி, பணத்தை எடுக்கவிடாமல் நிறுவனம் தடுக்க முடியுமா?

 

ஒரு பணியாளரின் கணக்கில் செலுத்தப்படும் நிதி என்பது அவருக்கு சொந்தமானது.  பி.எப். விதிகளுக்கேற்ப அந்த நிதியை கையாளலாம்.  இதில் நிறுவனம் தலையிட முடியாது. 

 

பி.எப். பணியாளர்களுடைய பி.எப் நிதியை கையாள்கிறது.  ஆனால் அந்த பணியாளரை அடையாளம் காணுவதற்கு அதற்கென பிரத்யேக வழியில்லாத நிலை முன்பு இருந்தது.  அதனால், ஒரு பணியாளரை தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில்,  நிறுவனத்தின் நிர்வாகி பி.எப் பணத்தைப் பெறுவதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது தவிர்க்க முடியாத அவசியமாக இருந்தது.

 


ஆனால், ஆதார் அமுலாக்கத்திற்கு பிறகு, ஆதார்  பயோ மெட்ரிக் அடையாளத்துடன் இருப்பதால், ஆதாரை ஒரு முக்கிய அடையாளமாக பிஎப். இறுகப் பிடித்துக்கொண்டது.  அதனால் நிறுவனத்தின் நிர்வாகி கையெழுத்திட வேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை.  ஆதாரை அடிப்படையாக கொண்டு நிதியை பெற்றுவிடமுடியும்.

 

ஆனால், ஒரு பணியாளர் வேலை செய்யும் பொழுதே, தன்னுடைய பி.எப். கணக்கில்  ஆதார், வங்கிக்கணக்கு எண், பான் எண்ணை எல்லாம் இணைத்திருக்கவேண்டும் அவசியமானது.   அதை அந்த நிறுவனம் தன்னுடைய டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரித்து இருக்கவேண்டும்.   ஒருவேளை நிறுவனம் அதை அங்கீகரிக்க தவறினால், பி.எப். அலுவலகத்தில் இது தொடர்பாக முறையிட்டால், நிறுவனத்திற்கு அதை செய்ய சொல்லி சம்பந்தப்பட்ட அலுவலர் வலியுறுத்தி செய்ய சொல்வார். அதனால் கவலையில்லை.

 

ஒரு பணியாளர் வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, தொழிலாளியின் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும், தொடர்ந்து வட்டித்தருவார்களா?

 

இந்த சந்தேகம் பணியாளர்களால்  அடிக்கடி கேட்கப்படும் சந்தேகமாக இருக்கிறது.  ஒரு பணியாளர் வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்தாலோ,  மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் வட்டியைக் கணக்கிட்டு தருகிறார்கள். அதற்கு பிறகு நிறுத்திவிடுகிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நடைமுறை.

 

இதில் பி.எப் நிதிக்கு மட்டும் தான் வட்டி தருகிறார்கள்.   பி.எப். ஓய்வூதிய கணகிற்கு வட்டி ஏதும் தருவதில்லை.  ஆகையால், தொழிலாளர்களுக்கு  ஓய்வூதியம் அவசியம் தேவைப்படுவதால் அந்த நிதிக்கு திட்டச் சான்றிதழுக்கு (Scheme Certificate) விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  பி.எப் நிதியை வேண்டுமென்றால், வாங்கிக்கொள்ளலாம்.

 

வேறு நாட்டிற்கு சென்றாலும், இந்த திட்டத்தை அங்கு தொடரமுடியுமா? என்றார் ஒரு இளம் பணியாளர்.

 

இந்த திட்டம் இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கானது. ஆகையால் இந்தியாவில் மட்டும் தான் செல்லுபடியாகும்.

 

ஒரு தொழிலாளி இந்த திட்டத்தில் இணையும் பொழுது, மேலே சொன்ன பலன்கள் உண்டு.  இதில் இணையாத பொழுது அவரும், அவருடைய குடும்பமும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால் இந்த திட்டத்தில் இணைவது மிகவும் அவசியம் என பேசிவந்தேன்.

 

அடுத்தநாள் பேசும்  அதன் நிர்வாகியை தொடர்பு கொண்ட பொழுது பணியாளர்கள் இந்த திட்டத்தில் இணைய ஏற்பு தெரிவித்திருந்தார்கள். மகிழ்ச்சி.

 

உங்களுக்கும் இது போல கேள்விகள் இருந்தால், என்னுடைய வாட்சப் எண்ணுக்கு தட்டச்சு செய்தோ அது சிரமம் என்றால், குரலில் பதிந்து அனுப்புங்கள். பதிலளிக்கிறேன்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721