October 27, 2025

 


வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF)  :   புதிய மாற்றங்கள்

 

வாரிசுதாரர் நியமனம் (E Nomination ) கட்டாயமும் - அவசரமும்

 

பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு வைத்திருப்பவர்களின் பலன்களை, கணக்கு வைத்திருப்பவர் திடீரென மரணம் அடைந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுவதற்கு இந்த வசதி உதவுகிறது.

 

பணியில் இருக்கும் பொழுது இறந்தால், அந்த பணியாளர் வாங்கும் சம்பளம். வேலை செய்த வருடங்களை கணக்கில் கொண்டு மூன்று லட்சங்களில் இருந்து 7 லட்சங்கள் வரை அவருடைய குடும்பத்திற்கோ, வாரிசாக நியமிப்பவருக்கோ உடனடியாக போய்ச்சேரும்.

 

ஆகையால் ஒரு பணியாளர் இறந்த பிறகு வாரிசுதாரரை கண்டறிவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகளில் இப்பொழுது பி.எப். வாரிசுதாரரை உடனடியாக நியமிக்க சொல்லி, முன்பு வலியுறுத்தியது. இப்பொழுது கட்டாயப்படுத்துகிறது.

 

ஆகையால் முதலில் பணியாளர் UAN என்ற அடையாள  எண்ணை பெற்றுக்கொண்ட பிறகு, அதை பி.எப். உறுப்பினருக்கான தளத்தில் சென்று அதை பதிவு (Activate UAN) செய்யவேண்டும்.  அதன் பிறகு, பணியாளரின் புகைப்படத்தை  சுயவிவரம் பகுதியில் (Profile)  வலையேற்றவேண்டும்.

 




அதன்பிறகு  பணியாளரின் துணைவியார்/கணவர்/பிற உறவுகள் குறித்த பெயர், வயது, முகவரி என ஆதாரின் அடிப்படையில்  விவரங்களையும், புகைப்படத்தோடு பதிவேற்றவேண்டும்.  தளம் கேட்கிற விவரங்களை கொடுத்த பிறகு,  ஆதார் ஓடிபி மூலமாக ( E sign யையும்) பூர்த்தி செய்யவேண்டும்.

 

இப்பொழுது பணியாளர்களை இந்த வாரிசுதாரர் நியமனத்தை உடனடியாக செய்யவைக்கும் பொருட்டு, ஐந்து முறை மட்டும் உறுப்பினருக்கான தளத்தில் அனுமதிக்கிறது. அதற்குள் வாரிசுதாரரை நியமித்துவிடவேண்டும். இல்லையெனில் உள்ளே எந்த வேலையையும் செய்வதற்கு அனுமதிக்காமல் தடை (Blocked) செய்கிறது. ஆகையால் பணியாளர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக செயல்படுத்துங்கள். நிறுவனங்கள் தனது பணியாளர்களிடம் தெரிவித்து உடனே செய்ய வலியுறுத்துங்கள். பிறகு பி.எப். அலுவலகத்திற்கு சென்று அலையவேண்டியிருக்கும்.

 

பி.எப். ஊழியர்களின் கருணைத்தொகை அதிகரிப்பு

 

பி.எப். நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பணியில் இருக்கும் பொழுது இறக்கும் பொழுது அவர்களுடைய வாரிசுக்கு முன்பு கிடைக்கும் கருணைத்தொகை (Exgratia) ரூ. 8.80 லட்சமாக இருந்தது. இப்பொழுது அந்த தொகை ஏப்ரல் 1, 2025லிருந்து 15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை 5% உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சிலர் பத்திரிக்கையில் இந்த செய்தியைப் பார்த்து  பி.எப்.பில் நிதி செலுத்தும் பணியாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்துமா என சந்தேகம் கேட்டார்கள். இந்த அறிவிப்பு என்பது பி.எப்பில்  பணிபுரியும் ஊழியர்களுக்கான அறிவிப்பு. பி.எப். சந்தாதாரர்களுக்கு என புரிந்துகொள்ளக்கூடாது என விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.

 

பணியாளர்களை இணைப்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டம்

 

PM விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா (PM-VBRY)” என்பது Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana எனப்படும் சர்வதேச மொழியில் “PM-VBRY” என்ற திட்டம் ஆகும். இது EPFO மூலம் அமல்படுத்தப்படும் புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு ஊக்கமளிக்கும் திட்டமாகும். திட்டத்திற்கு மொத்த ஒதுக்கீடு ரூ. 99,446 கோடி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 3.5 கோடி வேலை வாய்ப்புகளை 2 ஆண்டுகளில் உருவாக்குவதே இலக்காக கொண்டு இந்த திட்டம் வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் என்பது, 01 ஆகஸ்ட் 2025 முதல் தொடக்கம் ஆகும், காலம் 31 ஜூலை 2027 வரை இருக்கும்.

 

திட்டத்தின் இரண்டு பகுதிகள்

இந்த திட்டம் Part A மற்றும் Part B என்ற இரண்டு பிரதான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 


முதல் பகுதி (Part A)

EPFOல் முதன்முறை சேரும் புதிய உறுப்பினர்களுக்கானது.  ஒரு பணியாளர் ஆறு மாதங்கள் அவருக்கான நிதியளிப்பு செய்த பிறகு, அவருக்கு உதவித் தொகையாக ரூ. 7500 என அவருடைய கணக்கில் வரவு (Direct Benefit Transfer) வைக்கப்படும்.  அடுத்த ஆறு மாதங்கள் வேலை செய்த பிறகு, அவருடைய கணக்கில் மீண்டும் ரூ. 7500 வரவு வைக்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட பணியாளர் தனது வங்கி கணக்குடன் ஆதாருடன் இணைத்திருக்கவேண்டும். ஊக்கம் பெறுபவர்களின் சம்பளம்  மாதம் ரூ. 1 லட்சம் வரைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாம் பகுதி (Part B)

இந்த பகுதி நிறுவனங்களுக்கானது. தனது தேவைக்கு பணியாளர்களை புதிதாக நியமிக்கவேண்டும். இப்படி நியமிக்கும் ஒவ்வொரு பணியாளருக்கும் பணியாளர்களின் சம்பளத்தைப் பொறுத்து உதவித்தொகை தரப்படுகிறது.  ஊதியம் ரூ. 10000 என்றால், ரூ. 1000 எனவும், ரூ. 10001யிலிருந்து ரூ. 20000 வரைக்கும் ரூ. 2000 எனவும், ரூ. 20001 லிருந்து ரூ. 100000 வரையும் ரூ. 3000 வரை தரப்படுகிறது.  இந்த ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு தரப்படுகிறது. (காலம் - ஜூலை 2027 வரை) அதுவே உற்பத்தித் துறையாக இருந்தால் (Manufacturing) நான்கு ஆண்டுகளுக்கு தரப்படுகிறது.  இந்த நிதி நிறுவனத்தின் பான் கணக்கை அடிப்படையாக இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதோடு நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி இருந்தால், பி.எப். தளத்தில் அந்த விவரங்களையும்  பதியவேண்டும்.

 

இதற்கான நிபந்தனைகள்

 

1.       இந்த ஊக்கத் தொகையை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பணியாளர்களின் விவரம் பி.எப். தளத்தில் சரியாக பதிவு செய்யப்படவேண்டும்.

2.       பணியாளரை சரியாக அடையாளப்படுத்தும் விதத்தில் அடையாள எண் (Universal Account Number) உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். உமாங் செயலியில் (Face Authentication) செய்யப்பட்டிருக்கவேண்டும்.

3.       ஐம்பது ஊழியர்களுக்கு கீழ் எண்ணிக்கை கொண்ட நிறுவனங்களாய் இருந்தால், குறைந்தப்பட்சம் இரண்டு பணியாளர்கள் சேர்க்கப்படவேண்டும்.

4.       ஐம்பது ஊழியர்களுக்கு அதிக எண்ணிக்கை கொண்ட நிறுவனங்களாய் இருந்தால், குறைந்தப்பட்சம் ஐந்து பணியாளர்கள் சேர்க்கப்படவேண்டும்.

 


 

புதிய முறை அமுல்படுத்துதல்

 

கடந்த ஆகஸ்டு 2025 வரைக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் அடையாள எண்கள், சம்பள விவரம், பி.எப். விவரம் எல்லாவற்றையும் ஒரு பைலில் (ECR) தொகுத்து தாக்கல் செய்துகொண்டிருந்தோம். இப்பொழுது பி.எப். அதில் நடக்கும் தவறுகளை சரி செய்வதற்காக புதிய முறை (செம்ப்டம்பர் மாத கணக்கை கணக்குப் பார்க்கும்) இந்த அக்டோபர்  மாதத்தில் இருந்து அமுல்படுத்த உள்ளது. அதற்கான வழிகாட்டல்களை 33 பக்கங்களுக்கு புரியும் விதத்தில் ஒவ்வொன்றையும் படங்களாக தந்துள்ளது. இணையத்தில் (USER MANUAL RE-ENGINEERED ECRS) தேடினால் எளிதாக கிடைக்கிறது. பி.எப். தளத்திலும்  அதைத் தரவிறக்கம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

(https://www.epfindia.gov.in/site_en/revamped_ecr.php)

 

முந்தைய முறையில் கட்டணமும், கணக்கு தகவலும் ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.  இப்பொழுது, Return மற்றும் பண பரிமாற்றம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்படும்.  ECR சமர்ப்பிக்கும் முன்பு தவறான தகவல்களை தவிர்த்து, சரியான தகவல்களை தரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (System Based Validation)

 

தாமதமாக செலுத்தினால் வரும் வட்டி மற்றும் அபராதத்தை புதிய முறையில் பி.எப். தளமே கணக்கிட்டு தரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   ஒருமுறை ECR சமர்பிக்கப்பட்டதும், அதில் தவறு இருந்தால், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், அதனை திருத்தும் வசதியும் இருக்கும் என புதிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறை வந்தாலும், ஏற்கனவே நிறுவனங்கள் தாக்கல் செய்துகொண்டிருந்த பழைய தாக்கல் செய்யும் வடிவத்தை (ECR format) மாற்றம் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆகையால் கொடுக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்களை கவனத்துடன் புரிந்துகொண்டு, செயல்படுத்துங்கள்.

 

Passbook Lite என்ற புதிய வசதி அறிமுகம்.

 

பி.எப். தனது உறுப்பினர்களுக்கான “Passbook Lite” என்ற புதிய வசதியை  உறுப்பினர்களுக்கான தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதனால் சில அடிப்படைத் தகவல்களை இங்கேயே பார்க்கலாம்.  விரிவாக பார்க்கவேண்டுமென்றால், பாஸ்புக்கிற்கு என இயங்கும் தளத்தில் தனியாக பார்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

 

பி.எப். கணக்கை மாற்றுவதற்கான சான்றிதழ் (Annexure K)

Annexure K என்பது பணியாளர் வேலை செய்த முந்தைய கணக்கை புதிய கணக்கிற்கு மாற்றுவதற்கான மாற்றுச்சான்றிதழாகும்.  இப்பொழுது இணையத்திலேயே உறுப்பினர்கள் பெறக்கூடிய வசதியை செயல்படுத்தியுள்ளது முக்கியமானது. இந்த முறை வெளிப்படையானதாகவும், எளிதாக்கியும் உள்ளதாக பி.எப். அறிவித்துள்ளது.

உதாரணமாக…

1.       பணியாளரின் பழைய  கணக்கு TN/12345/678

2.       பணியாளரின் புதிய கணக்கு TN/12345/987

 

முதல் கணக்கில் உள்ள பி.எப். தொகை, சேர்ந்திருக்கும் வட்டித்தொகை அனைத்தையும் இரண்டாவது கணக்கிற்கு மாற்றுவதற்கு இந்த விண்ணப்பம் உதவுகிறது.

 

முன்பணம் (Advance) பெறுவதை விரைவுப்படுத்தப்பட்டுள்ள வசதி

 

ஒரு பணியாளர் தன் கணக்கில் சேகரிக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து, திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல் என  அவசர, அவசிய தேவைகளுக்கு முன்பணம் பெறும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.  அதற்கான விதிகளையும் விரிவாக தந்துள்ளது.

 

தானாக ஒப்புதல் (Auto settlement) செய்யும் முறை

 

முன்பு பணியாளர்கள் முன்பணத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது, அதிகாரிகள் நமது கோரிக்கையை பரிசீலனை செய்த பின்பு தான் நடைபெற்றது.  பணியாளர்களின் அடிப்படை விவரங்கள், தகுதிகள் சரியாக இருந்தால்,  சிஸ்டமே சரிப்பார்த்து, 3-5 நாட்களுக்குள் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்.

 

பழைய வரம்பு ரூ. 1 லட்சம். புதிய வரம்பு ரூ. 5 லட்சம்

 

முன்பு இப்படி தானியங்கி முறையில் முன்பணம் பெறும் வசதி ரூ. 1 லட்சம் வரை இருந்தது. கூடுதலான தொகைக்கு தாமதம் ஏற்பட்டது. இப்பொழுது புதிய முறையில் 5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது. இதிலும் பணியாளர்களின் அடிப்படை விவரங்கள், தகுதிகள் சரியாக இருந்தால்,  சிஸ்டமே சரிப்பார்த்து, 3-5 நாட்களுக்குள் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

9551291721


(தொழில் உலகம் அக்டோபர் 2025 இதழில்  இந்தக் கட்டுரை வெளியானது.)

உடலும் மனமும் கவனிக்க வேண்டியது ஏன் அவசியம்?


நம் வாழ்க்கையில் நமது மூளை வேலை நேரமே அதிகம்.

கணக்கு பார்க்கும் போதும்சட்டம் பார்க்கும் போதும்வாடிக்கையாளரை சமாளிக்கும் போதும் — எல்லாம் சிந்தனையையே உபயோகிக்கிறோம்.

உடல் சோர்ந்து போக ஆரம்பித்தால்மனமும்  இணைந்து உழல ஆரம்பிக்கும்.

 

நரம்பியல் நிபுணர் டாக்டர் சுந்தர் ராமன் சொல்கிறார்.

மூளை சரியாக செயல்பட தேவையானது தூக்கமும் இரத்த ஓட்டமும்.
நாம் முதலில் இதையே கவனிக்க வேண்டும்.”

அதாவது,
தூக்கம் → மூளை தெளிவு
நடை/உடற்பயிற்சி → மனம் சீரான நிலை

 

உடல் கவனிப்பது எப்படி?

 

  • தினமும் குறைந்தது அரை மணி நடை.
    இதனால் இரத்த ஓட்டம் சீராகி மூளை புத்துணர்ச்சி பெறும்.
  • உணவு நேரத்தை தவறாமல் செய்ய வேண்டும்.
    குறிப்பாக காலை/மதிய உணவை skip செய்வது →
    மாலை நேரத்தில் எரிச்சல் + கவனம் குறைவு உருவாக்கும்.
  • நாற்காலிமேசை உயரம் சரியாக இருக்க வேண்டும்.
    முதுகுகழுத்து வலி வந்தால் —
    வேலையின் தரம் தான் முதலில் பாதிக்கப்படும்.

 

உட்கரு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்சண்முகம் சொல்வார்:

உடல் நோய்கள் பெரும்பாலும் சிறு அலட்சியங்களில் தொடங்கும்.
அலட்சியத்தை குறைத்தால் மருந்து தேவையும் குறையும்.”

 

மன நலன் காப்பது எப்படி?


  • ஒரு நாளில் குறைந்தது 10 நிமிடம் அமைதியான மூச்சு பயிற்சி.
    இது மனதில் இருக்கும் “அசைவு” நிதானமாகும்.
  • வேலைக்கு நேரம்வீட்டுக்கு நேரம் — இரண்டுக்கும் எல்லை.
    எல்லை இல்லாத இடத்தில் தான் சோர்வு உருவாகும்.
  • கடினமான வாடிக்கையாளர்களுக்கு தெளிவான வரம்பு.
    மரியாதையுடன், “நாம் பேசும் நேரத்தில் பேசலாம்” என்று சொல்லலாம்.

 

உளவியல் ஆய்வாளர் டாக்டர் கண்ணப்பன் குறிப்பிடுகிறார்:

மன அழுத்தம் என்பது நிகழ்வுகளில் இல்லை;
அதை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில் உள்ளது.”

 

வாழ்க்கை சமநிலை


வரி கோப்புநிதி அறிக்கை, AO பதில் — இவை எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி.

ஆனா வாழ்க்கை முழுக்க இதல்ல.

குடும்பம்உடல்மன அமைதி — இவை அடிப்படை.

விக்டர் ஃப்ராங்கிள் சொன்னார்:

மனிதனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் துறைகள் —
உறவுநோக்கம்அமைதி.
வேலை அதில் ஒன்று மட்டும்.”

 

சாரமாக….

  • தூக்கம் → மூளை தெளிவு
  • நடை / சிறு உடற்பயிற்சி → மன அமைதி
  • உணவு + நீர் → உடல் நிலை
  • வேலைவாழ்க்கை எல்லை → நீண்டநாள் நலம்

 

நாம் பல காலம் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.
அதற்காக நாம்  நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

 

-         - இரா. முனியசாமி, 

            9551291721

October 24, 2025

சமகால பணியிட சவால்கள்: வரி ஆலோசகர்களும், தணிக்கையாளர்களும் புதிய தலைமுறையை (Gen-Z) கையாள்வது எப்படி?


பணியிடங்கள் விரைவாக மாற்றமடைந்து வருகின்றன. மனிதர்களின் எதிர்பார்ப்புகளும், மதிப்பீடுகளும் தொடர்ந்து உருமாற்றம் கொள்கின்றன. இருப்பினும், பணியிடங்களில் எதிர்பார்க்கப்படும் அடிப்படைத் தேவைகளான பொறுப்புணர்வு, நேரக் கடைப்பிடிப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆகியவை இன்னும் அப்படியே இருந்து வருகின்றன. இந்த முரண்பாட்டில்தான் உண்மையான சவால் தொடங்குகிறது.

 

பழைய தலைமுறைகளைச் சேர்ந்த 40, 50 அல்லது 60 வயதுடையவர்களுக்கு வேலை என்பது ஒரு கடமையாகவும், கட்டாயமான பொறுப்பாகவும் தோன்றுகிறது. அவர்களின் மனதில் சுயமரியாதை என்பது தங்கள் செயல்களின் மூலம் உருவாகும் ஒன்று. "இதைச் செய்ய வேண்டும்" என்ற உள்ளார்ந்த உந்துதல் அவர்களை இயக்குகிறது. ஆனால், 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த Gen-Z தலைமுறைக்கு வேலை என்பது வெறும் கடமை அல்ல; அது *தங்களின் உள்ளார்ந்த திருப்தி, மரியாதை மற்றும் தனிப்பட்ட விருப்பத்துடன் இணைந்திருக்க வேண்டும். அவர்களின் மனதில் சுயமரியாதை என்பது வெளியிலிருந்து கிடைக்கும் அங்கீகாரத்தால் உருவாகும். இந்த அடிப்படை வேறுபாட்டிலிருந்தே பணியிடங்களில் உரசல்கள் தொடங்குகின்றன.*

 

*ஏன் இந்தப் புதிய தலைமுறையை கையாள்வது இவ்வளவு சவாலாக இருக்கிறது?*

 

இதற்கு ஆழமான சமூக, உளவியல் பின்னணி உண்டு. முந்தைய தலைமுறைகள் கடினமான வாழ்க்கைச் சூழல்களில் வளர்ந்தனர்; போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவர்களை ஒழுக்கமும், உழைப்பும் கொண்டவர்களாக வடிவமைத்தன.

ஆனால், Gen-Z தலைமுறை பாதுகாப்பான, தொழில்நுட்பம் நிரம்பிய சூழலில் வளர்ந்தது. இதனால், அவர்கள் வாழ்க்கையை "உணர்ந்து தேர்வு செய்வது" என்பதை மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இதை Dr. Jean Twenge தனது "Generations" (2023) நூலில் தெளிவாக விளக்குகிறார்: "முந்தைய தலைமுறையின் வாழ்க்கை கடினமாக இருந்தது; அதனால் ஒழுக்கம் அவர்களுக்கு இயல்பாக வந்தது. ஆனால் புதிய தலைமுறை பாதுகாப்பாக வளர்க்கப்பட்டது, எனவே அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து தேர்வு செய்வது அவசியமாகிவிட்டது."

 

நாம் வளர்ந்த சமூகம் "நீ செய்ய வேண்டும், பேசாமல் செய்" என்ற கட்டளை மனப்பான்மையை வலியுறுத்தியது. ஆனால், *அவர்கள் வளர்ந்த சமூகம் "ஏன் செய்ய வேண்டும்? அதன் அர்த்தம் என்ன?" என்ற கேள்விகளை ஊக்குவிக்கிறது. இதனால், சொல்லாமல் செய்யும் மனிதர்கள் படிப்படியாக குறைந்து வருகின்றனர்; அதற்கு பதிலாக, தாங்கள் செய்யும் செயலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஈடுபடும் மனிதர்கள் அதிகரித்து வருகின்றனர்*. இதுவே தலைமுறை மாற்றத்தின் மையக் கருத்து.

 

பெரு நிறுவனங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் இவைதான்:

 

பணியில் நிலைத்திருப்பது குறைந்துள்ளது: Gen-Z ஊழியர்கள் ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்குவதை விரும்புவதில்லை. அவர்களுக்கு பணி திருப்தி இல்லையென்றால், உடனடியாக வேறு வாய்ப்புகளைத் தேடுகின்றனர்.

 


நேரக் கடைப்பிடிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது: பாரம்பரிய நேர அட்டவணைகள் அவர்களுக்கு இறுக்கமாகத் தோன்றுகின்றன; நெகிழ்வுத்தன்மை இல்லாத போது, அவர்கள் விலகிவிடுகின்றனர்.

செயலில் ஆழ்ந்த ஈடுபாடு அரிதாகிவிட்டது: கவனச் சிதறல் அதிகம்; சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பம் அவர்களை தொடர்ந்து திசை திருப்புகின்றன.

சிறிய அழுத்தத்திலேயே பின்வாங்குதல்: மன அழுத்தம் அதிகரித்தால், அவர்கள் விரைவில் சோர்ந்து போகின்றனர் அல்லது விட்டுவிடுகின்றனர்.

நம்பிக்கை இல்லையென்றால் உடனடி மாற்றம்: பணியிடத்தில் தங்கள் மதிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்ற உணர்வு வந்தால், அவர்கள் வேறு இடம் தேடத் தொடங்கிவிடுகின்றனர்.

 

இதை Simon Sinek தனது "The Millennial Question" உரையில் சுட்டிக்காட்டுகிறார்:

"இந்த தலைமுறை 'வேலை'யை விட 'வேலை செய்யும் போது உணரும் அர்த்தம்' முக்கியமென நம்புகிறது." இந்த பிரச்சனைகள் பணியிட உற்பத்தித்திறனைப் பாதிக்கின்றன.

 

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் இந்த சவால்களை எப்படி கையாள்கின்றனர்? அவர்கள் மனிதர்களின் உளவியல் தேவைகளை மையமாகக் கொண்டு தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்:

 

• *வேலை + கற்றல் மாதிரி (Work + Learning Model):* வேலை செய்யும் போதே தொடர்ச்சியான கற்றலை ஊக்குவிக்கின்றனர். பயிற்சிகள் (Training) ஒரு ஒருமுறை நிகழ்வு அல்ல; அது தொடர்ச்சியான செயல்முறை. *"என்ன செய்ய வேண்டும்?" என்று கூறுவதற்கு பதிலாக, "ஏன் செய்கிறோம்?" என்று விளக்குவதில் தொடங்குகின்றனர்*. இது ஊழியர்களுக்கு அர்த்தத்தை உணர்த்துகிறது.

 

• *வழிகாட்டி அமைப்பு (Mentor System)*: புதிய ஊழியருக்கு ஒரு அனுபவமிக்க நபரை "ஆதரவு நபராக" நியமிக்கின்றனர். *இது வெறும் உத்தரவுகளை அல்ல, "கேட்டு புரிந்து வழிகாட்டும்" பாணியைப் பின்பற்றுகிறது.*

 

• *கருத்துப் பரிமாற்ற கலாச்சாரம் (Feedback Culture)*: ஆண்டுக்கு ஒரு மதிப்பீடு (Appraisal) போதாது; வாராந்திர சிறிய, நேர்மையான உரையாடல்களை ஊக்குவிக்கின்றனர். இது உடனடி திருத்தங்களை சாத்தியமாக்குகிறது.

 

• *உளவியல் பாதுகாப்பு* (Psychological Safety): பிழை செய்தால் திட்டுவதற்கு பதிலாக, திருத்தி வழிகாட்டுகின்றனர். "பிழை = கற்றல் = முன்னேற்றம்" என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகின்றனர்.

 

இந்த அணுகுமுறைகளின் அடிப்படை உண்மை: *"மனிதரை மாற்ற முடியாது, ஆனால் அவர்களின் மனதைத் திறக்கச் செய்யலாம்."*

இந்திய சூழலில் இந்த சவால்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வழிகள் இவை:

 


1. உத்தரவாக அல்ல, நோக்கத்தை விவரிக்கவும்: "இதை 5 மணிக்குள் முடி" என்று கூறினால் முரண் எழும். அதற்கு பதிலாக, *"இதை 5 மணிக்குள் செய்ய வேண்டும், ஏனெனில் தணிக்கை (Audit) தாமதமானால் வாடிக்கையாளருக்கு அபராதம் அதிகரிக்கும்" என்று விளக்கினால், புரிதல் உருவாகும். Harvard Business Review கூறுவது போல, "நோக்கம் பொறுப்புணர்வை உருவாக்குகிறது."*

 

2. பெரிய வேலையை சிறிய பகுதிகளாக உடைக்கவும்: Gen-Z தலைமுறை பெரிய சுமைகளை ஒரே நேரத்தில் தாங்க மாட்டார்கள். 10 பக்க அறிக்கையை 10 தனித்தனி 1-பக்க பகுதிகளாக பிரித்துக் கொடுங்கள். இது அவர்களுக்கு சாத்தியமானதாகத் தோன்றும்.

 

3. திட்டும்போது அல்ல, பேசும்போது கற்றல் ஏற்படுகிறது: "நீங்கள் சரியாகச் செய்தால் நானும் நிம்மதியாக இருப்பேன்" போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகள் அவர்களின் இதயத்தில் ஊறும். இது உறவை வலுப்படுத்தும்.

 

4. வளர்ச்சி உணர்வை தெளிவாகக் காட்டுங்கள்: அவர்களுக்கு வளர்ச்சி பாதையை ஒரு வரைபடமாக விவரிக்கவும்: உதாரணமாக, உதவியாளர்மூத்த உதவியாளர்மேலாளர்வாடிக்கையாளர் கையாளுதல்தலைமைப் பொறுப்பு. வளர்ச்சி தெரிந்தால், அவர்கள் நிலைத்திருப்பார்கள்.

 

5. *சிறு முயற்சிக்குக் கூட பாராட்டுங்கள்: அவர்கள் வாழ்க்கை முழுக்க "லைக்குகள்" மற்றும் உடனடி அங்கீகாரங்களுடன் வளர்ந்தவர்கள்.* "நீ நேற்று தயாரித்த குறிப்பு மிக அழகாக இருந்தது; நல்ல கவனம்" என்ற ஒரு வாக்கியம் அவர்களை மூன்று மாதங்களுக்குத் தாங்கும். Ken Blanchard-இன் "The One Minute Manager" நூல் கூறுவது போல, "மக்கள் அங்கீகரிக்கப்படும் நடத்தையைத் திரும்பச் செய்வார்கள்."

 


இறுதியாக, நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை: *புதிய தலைமுறை மோசமானவர்கள் அல்ல; அவர்கள் வேறுபட்டவர்கள். நாம் சந்தித்த காயங்கள், கஷ்டங்கள் அவர்களுக்கு இல்லை. ஆனால், அவர்கள் தேடுவது உணர்வின் அர்த்தம், தனித்தன்மையின் மதிப்பு மற்றும் உண்மையான மனித உறவுகள்.*

 

Carl Rogers, மனவியல் அறிஞர் கூறியது போல, "*ஒருவரை மாற்ற முயலாதீர்கள். அவரைப் புரிந்துகொள்ள முயலுங்கள். புரிதல் இருக்கும் இடத்தில் இயங்கும் சாத்தியம் உருவாகும்."*

 

*புதிய தலைமுறையை கையாள்வது வெறும் வேலையல்ல; அது ஒரு கலை. அவர்களை குறை சொல்வதை விட, காரிய சாத்தியமான இந்த கலையை நாம் கற்றுக்கொள்வோம்

அவர்களை மாற்ற முயற்சி வேண்டாம். அவர்களை வழிநடத்த வேண்டும்.

நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டியது:

நாம் உங்களைப் புரிந்துகொள்கிறோம்.

ஆனாலும் பணிக்கு ஒரு ரிதம் வேண்டும்.

அந்த ரிதத்தை உங்களுக்கு நாங்கள் கற்றுத்தருகிறோம்.

நீங்கள் வளருங்கள்.

வளர்ந்து நம்மை அனைவரையும் உயர்த்துங்கள்.”

 

- இரா. முனியசாமி

ஜி.எஸ்.டி, வருமானவரி, இ.எஸ்.ஐ, பி.எப் ஆலோசகர்

9551291721


(பின்குறிப்பு : ஊழியர்கள் மட்டும் என்றில்லை. இந்த கட்டுரை நமது பிள்ளைகளை புரிந்துகொள்வதற்கும் பொருந்தும் தானே!)