April 23, 2026

முத்து என்கிற காட்டான் (2026) வலைத்தொடர்

 


மதுரை மாவட்டத்தின் கிராமத்தில் உள்ள ஸ்டேசனில் மூன்று ஆண்டுகளாக வழக்குகள் ஏதும் பதியவில்லை என்பதால்,  தூக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.  இந்த சமயத்தில் எல்லைப் புறத்தில் ஒரு வெட்டப்பட்ட தலை மட்டும் கிடைக்கிறது.

 

மெல்ல மெல்ல நூல் பிடித்து நகரும் விசாரணையில், முத்து என்பவரின் தலை தான் என கண்டுபிடிக்கிறார்கள்.  ஊர் ஊராக பயணித்திருக்கிறார். ஒரு நடனக்குழுவோடு இருந்திருக்கிறார். பிறகு கேரளாவில் ஒரு டிரஸ்டில் வேலை செய்திருக்கிறார்.

 

பிறகு இந்த கொலை எதற்காக என்பதை கண்டறியும் பொழுது ஆச்சரியப்படுகிறார்கள்.

 

*****

 


அத்தனை சுவாரசியமில்லை என இரண்டு பேர் சொன்னதை கேட்டும், இந்த தொடரை பார்த்ததற்கு இரண்டு பேர் தான் காரணம். முதலில் இயக்குநர் மணிகண்டன் (இணைந்து அஜித்குமாரும்). இரண்டாவது விஜய் சேதுபதி.

 

முத்து ஊர் ஊராக சுற்றியதற்கான மூல காரணம் என சொல்லப்படுவது எல்லாம் அத்தனை அழுத்தமாகவும், தெளிவாகவும் சொல்லப்படவில்லை.  அதனால் எல்லாமும் பலவீனமாய் தெரிகிறது. மிகவும் மெதுவாக போகிறது என்பதெல்லாம் காரணம் ஒருபக்கம். திரைக்கதையே மிகவும் பலவீனம். அது தான் காரணம்.

 

ஓடிடி வெளியீடு என்பதால்,  கேரளாவிற்கும் கதை செல்கிறது. இன்னும் கொஞ்சம் ஜியோ அழுத்தம் கொடுத்திருந்தால், ஆந்திரா, கர்நாடகாவிலும் கூட முத்துவை சுத்த விட்டிருப்பார்கள் போல!

 

படத்தில் கொஞ்சும் சுறுசுறுப்பான காட்சிகளை எல்லாம் தொகுத்து டிரைலராய் மாற்றியிருக்கிறார்கள்.  அதைப் பார்த்துவிட்டு தொடரை பார்ப்பதற்கு மிகவும் ஏமாற்றமாய் தான் நிச்சயம் இருக்கும்.

 

மற்றபடி நடிகர்கள் அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஜியோ ஹாட் ஸ்டாரில் இருக்கிறது. நேரம் நிறைய இருப்பவர்கள் முயலலாம்.

Pretty Lethal (2026) Action Thriller

 


பாலே என்பது உடலால் மட்டும் ஆடப்படுவது அல்ல; மனதாலும் ஆடப்படுவது.”

****

 

அமெரிக்காவைச் சேர்ந்த பாலே நடனம் ஆடும் பெண்கள் குழு ஒன்று. அந்த குழுவில் ஒருவர் மேட்டுக்குடி சீமாட்டி,  ஒருவர் ஏழ்மை நிலைமையில், ஒருவர் காது கேளாத, வாய் பேச முடியாதவர் என ஐந்து பெண்களும்  வெவ்வேறு குணநலன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் குழுவில் ஒத்திசைவு கூட சிக்கலாக இருக்கிறது.

 

ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் ஒரு சர்வதேச ஒரு போட்டிக்கு அழைக்கப்படுகிறார்கள். தங்கள் ஆசிரியருடன்  போய் ஹங்கேரியை அடைகிறார்கள். அடுத்த நாள் போட்டி நாள்.

 

ஒரு அடர்ந்த காட்டை கடப்பதற்காக செல்லும் வேன் பழுதடைய, போட்டிக்கு தாமதமாகிறது என  நடந்தே அருகில் உள்ள ஒரு விடுதிக்குள் நுழைகிறார்கள். (சுற்றிலும் காடு – நடுவே விடுதி). ஒரு பெரிய கும்பல் பாரில் தண்ணியடித்தும், சூதாடிக்கொண்டும் இருக்கிறார்கள்..

 

ஒரு முன்னாள் பாலே நடனக்காரியான விடுதியின் பெண் முதலாளி அவர்களை வரவேற்கிறார்.  அங்கு மாமூலை வாங்க வந்திருக்கும் ஒரு மாபியா கும்பலின் மகன் அந்த குழுவின் ஆசிரியை சீண்ட, அந்த அம்மா கடுப்பில் அவனை உதைக்க அவன் சுட்டு கொன்றுவிடுகிறான்.

 

நிலைமை மோசமடைகிறது. இந்த செய்தி வெளியில் இருந்தால், நிலைமை சிக்கலாகும் என அவர்கள் இங்கு வரவேயில்லை எல்லாவற்றையும் மறைக்க முயல்கிறார்கள்.   படம் துவங்கி 20 நிமிடங்களில் இதையெல்லாம் சொல்லிவிடுகிறார்கள்.

 

மாபியா கும்பலிடம்  மிக மோசமாக சிக்கிக்கொண்ட அந்த பாலே நடன பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா என்பது தான் முழு நீள சண்டைக் கதை.

 

****


பாலே நடனம் என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிக கடுமையான பயிற்சி கொண்டது.  கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டவர்களால் தான் முழுமையான கட்டுப்பாட்டுடன் மேடையில் நடனமுடியும் என்கிறார்கள்.

 

அந்த பயிற்சியை கொண்டு நம் நம்மை காப்பாற்றிக்கொள்வோம் என போராடுகிறார்கள்.  பாலே நடன சண்டைக் காட்சி நன்றாகவும் படத்தில் வேலை செய்திருக்கிறது.

 

ஐந்து பெண்களும் ஐந்து விதமான குண நலன்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் தான் மொத்த படத்தையும் தாங்குகிறார்கள்.

 

மொத்தப் படம் 88 நிமிடங்கள் தான். சண்டைப் பிரியர்களுக்கு பிடிக்கும்.  அமேசானில் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது.

 

நிறுவனத்தின் DSC ஒப்புதல் தாமதம் – சட்ட ரீதியான தீவிர விளைவுகள்

 


ஒரு நிறுவனம் தனது பணியாளர்களின் (Employees) விவரங்களை EPFO தளத்தில் பதிவு செய்யவும், திருத்தவும், உறுதிப்படுத்தவும், நிறுவனத்தின் பொறுப்பாளர் (Authorised Signatory) அவர்களின் DSC (Digital Signature Certificate) பதிவு மற்றும் அதன் ஒப்புதல் (Approval) அவசியமாக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய நடைமுறைகளின் படி, DSC Active நிலையில் இருந்தால் மட்டுமே… புதிய பணியாளர்களை சேர்க்க முடியும். பணியாளர் விவரங்களை திருத்த முடியும். KYC போன்ற அம்சங்களுக்கும் ஒப்புதல் தரமுடியும். மாதாந்திர நிதியை தாக்கல் செய்ய என அனைத்தையும் செய்ய முடியும்.

 

சட்ட ரீதியான கட்டுப்பாடுகள்

 

இந்த நடைமுறைகள், கீழ்கண்ட சட்டப் பிரிவுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன:

 

Section 6 of EPF Act, 1952 -  பணியாளர்களின்  பி.எப். நிதி பங்களிப்பு கட்டாயம்

 

Paragraph 36(1) of EPF Scheme, 1952 - பணியாளர்களின் விவரங்களை சரியாக பராமரிக்கும் பொறுப்பு நிறுவனத்திற்கு இருக்கிறது.

 

Paragraph 38 of EPF Scheme, 1952 - மாதாந்திர நிதி செலுத்த வேண்டிய கடமை

 

Section 14B of EPF Act  - தாமதத்திற்கு அபராதம்

 

Section 7Q of EPF Act -  தாமதத்திற்கு வட்டி

 

நிறுவனங்கள் DSC பதிவு செய்த பின்னர், அந்த DSC-க்கு PF அலுவலக ஒப்புதல் பெற
1 மாதம் முதல் 2 மாதங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்படுகிறது.  இந்த தாமதம் காரணமாக - புதிய பணியாளர்களை EPF-ல் பதிவு செய்ய முடியவில்லை.  ECR தாக்கல் செய்ய முடியவில்லை  PF நிதியை செலுத்த முடியவில்லை

 

1.       சட்டப்படி தவறு (Statutory Default)

 

நிறுவனம் தவறு செய்யவில்லை என்றாலும், DSC அப்ரூவல் இல்லாததால் நிதியை செலுத்த முடியாத நிலை  சட்டப்படி செலுத்த மறுத்ததாக (default) கருதப்படும்

 

2. வட்டி &  அபராதத்தை தவிர்க்க முடியாது

 

  • Section 7Q –  வட்டி
  • Section 14B – அபராதம்

நிறுவனத்தின் மீது தவறே இல்லையென்றாலும், இப்பொழுது சட்டப்படி தவறாகிவிடுகிறது. இதை செலுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை உருவாகிறது.

 

3. பணியாளர் உரிமை பாதிப்பு

 

புதிய பணியாளர் EPF-ல் சேர்க்கப்படவில்லை என்றால், PF தொகை செலுத்த முடியாது போகும்.  இந்த காலத்தில் வேலை செய்யும் பொழுது பணியாளர் உயிர் துறந்தால், அவரது குடும்பத்தினருக்கு, PF நிதி, EPS ஓய்வூதியம், EDLI Insurance (₹7 lakh வரை)  இவற்றை பெற முடியாத நிலை உருவாகலாம்.

இதில் நிறுவனத்தின் தவறு இல்லாதபோது..  PF  தன்னுடைய அலுவலக தாமதத்தினால் காரணமாக ஏற்பட்ட விளைவுக்கு யார் பொறுப்பு ஏற்பது?

நடப்புச் சட்டப்படி- EPFO தாமதம் குறித்து வெளிப்படையான நிவாரண ஏற்பாடு இல்லை. நீதிமன்றத்திற்கு சென்று முறையிடவேண்டிய நிலை வரும்.   

 

நிர்வாக ரீதியான குறைபாடு என்பது ஒரு சாதாரண தொழில்நுட்ப தாமதம் அல்ல:

 

Statutory compliance பாதிப்பு, பணியாளருக்கான பலன்கள் (Social security) பாதிப்பு , நிறுவனத்தின் மீது தவறான பொறுப்பு (liability ) உருவாகிறது. இது அலுவலக ரீதியான தோல்வியாக (Systemic Failure) பார்க்கவேண்டும்.

 

இந்த நிலைமையில் நிறுவனங்கள், தங்களுக்கான பாதிப்புகளில் இருந்து தப்பிக்க..

 

  1. DSC பதிவு செய்த உடனே புகார் ஒன்றை (Grievance) பதிவு செய்ய வேண்டும்
  2. பி.எப் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். (email / letter)
  3. அதற்கான ஆதாரங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும்
  4. தாமதம் காரணமாக அபராதம் வந்தால்  நாம் தரப்பில் ஆதாரம் (representation) தர தயாராக இருக்க வேண்டும்

 

சமூக பாதுகாப்பு (Social Security) என்பது சட்டத்தின் நோக்கம்; தொழில்நுட்ப தடை காரணமாக அதை மறுக்கும் நடைமுறை ஏற்க முடியாது.  இந்த தாமதம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினை ஆகும்.

 

இந்த நிலைமைக்கு EPFO துறையிலிருந்து தெளிவான வழிகாட்டுதல் (clarification) அல்லது தற்காலிக தளர்வு (relaxation) வழங்கப்படுவது மிகவும் அவசியம்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

 

April 21, 2026

Gen z இளைஞர்கள்- தனித்துவமற்ற பண்புகளும், தனித்து விடப்பட்ட சூழலும் - Dr. சிவபாலன் இளங்கோவன்


வளரிளம் பருவம் என்பது குழந்தைகளின் கற்பனை உலகத்திற்கும், பெரியவர்களின் எதார்த்த உலகத்திற்கும் இடைப்பட்ட ஒரு காலம். முழுமையான குழந்தைத்தனமும் அல்லாத முழுமையான முதிர்ச்சியையும் பெறாத குழப்பமான காலகட்டம் அது. குழந்தைகளுக்கே உரிய ‘உடனடியாக கிடைக்க வேண்டும்’  என்ற மனநிலையும், பெரியவர்களுக்கே உண்டான “சுய முடிவெடுத்தல்’ க்கு உண்டான ஆசையையும் ஒருங்கே கொண்டிருக்கும் பருவம் இது.  இந்த பருவம்அழகானதுமாக, அதே நேரத்தில் குழப்பமூட்டுவதாகவும் இருக்கும். 

 

அதுவரை குழந்தையாக இருந்த ஒருவனின் உடல் திடீரென வளரத் தொடங்குகிறது. இந்த வளர்ச்சி அத்தனை துரிதமாக நடக்கிறது. சட்டென உயரமாகி நிற்பார்கள், குரல் கரகரத்துவிடுகிறது, ரோமங்களும், அந்தரங்க பகுதிகளும்திடீரென ஒரு பொலிவிற்கு வந்துவிடுகிறது. உடலில் நடக்கும் இந்த மாற்றங்களின் வேகத்திற்கு இணையாக மனதில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. உடலளவில் சட்டென வளர்ந்துநிற்கும் வளரிளம் பருவத்தினர் உள்ளுக்குள் அதேகுழந்தையாகவே இருக்கிறார்கள். 

 

உடலுக்கும், மனதுக்குமான வளர்ச்சியில் ஏற்படும் இந்த சமநிலையின்மை வளரிளம் பருவத்தினரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. விலையுயர்ந்தபொருளை கையில் வைத்திருக்கும் ஒருவர் அதை எப்படி பயனபடுத்துவது என தெரியாமல் தவிப்பது போல வளரிளம் பருவத்தினர் தவிக்கிறார்கள். இந்த தவிப்பை அவர்கள் உணர்வதில்லை. ஆனால் அவர்களின் பெற்றோர்கள் உணர்ந்திருக்கிறார்கள்! . இதனால் தான் பல பெற்றோர்களுக்கு“இப்போது நாங்கள் எப்படி நடந்து கொள்வது?” என்ற கேள்வி எழுகிறது.

 

பல நேரங்களில் இளம்வயது குழந்தைகளின் நடத்தைகள் பெரியவர்களுக்கும் புரியாமல் குழம்புகிறார்கள். ஒரு நாள் அமைதியாக இருப்பவர்கள், மறுநாள் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் விருப்பு, வெறுப்புகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. எண்ணங்கள், கனவுகள் நிலையானதாக இல்லை. நண்பர்களும் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். பெற்றோர்களால் இந்த மாறிக்கொண்டேயிருக்கும் குணநலன்களை புரிந்து கொள்ளமுடியவில்லை. 

 

“கொஞ்ச நாள் முன்பு இது தான் வேண்டும் என சொன்னவன், இப்போது இது வேண்டவே வேண்டாம் என்கிறான்” என கோபப்படுகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் கொள்வார்கள். இது முரண்பாடு அல்ல வளர்ச்சியின் இயல்பான அங்கம். ஆம். மனிதனின் வளர்ச்சியில் வளரிளம் பருவத்தில் நடப்பது போல அத்தனை துரிதமான வளர்ச்சி வேறெந்த பருவத்திலும் நிகழ்வதில்லை. மேலும், உடலுக்கும், மனதுக்கும் இடையேயான சமநிலையற்ற வளர்ச்சியும் இந்தபருவத்திற்கே உண்டானது. அதனால் பெரியவர்களாகிய நாம் இந்த பருவத்தை “கட்டுப்படுத்த வேண்டிய பருவம்” என்றுபார்க்காமல், “புரிந்து கொண்டு வழிநடத்த வேண்டிய பருவம்” என்று பார்க்கும்போது தான் வளரிளம் பருவத்தினரின்குணநலன்களில் நேர்மறையான நல்ல மாற்றம் உருவாக முடியும்.

 

உடல் ரீதியான மாற்றங்கள்: வெளியே வளர்ச்சி; உள்ளேகுழப்பம்

 

இளமைகாலத்தின் முதல் அடையாளம் உடல் வளர்ச்சிதான். சில மாதங்களிலேயே உயரம் அதிகரிக்கலாம். உடல் வடிவம்மாறலாம். குரல் மாறலாம். பெண்களில் மார்பக வளர்ச்சி, ஆண்களில் தசை வளர்ச்சி, உடல் முடி அதிகரித்தல் போன்றமாற்றங்கள் நடக்கலாம்.

 

இந்த மாற்றங்களை பெரியவர்கள் சாதாரணமாகஎடுத்துக்கொண்டாலும், இளம் பருவத்தினருக்கு இது பெரும்அனுபவமாக இருக்கும். “நான் எப்படி தெரிகிறேன்?”, “என்னைக்குறித்து நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?” என்ற கவலைஅவர்களுக்குள் அதிகமாக இருக்கும். மிகச்சிறந்த வகையில்தங்களை தங்களின் நண்பர்களிடம் வெளிப்படுத்துவது தான்இந்த வயதின் மிக முக்கியமான உந்துதலாக இருக்கும். சமூகவலைதளங்களின் காலகட்டத்தில் தங்கள் இந்த உடல் ரீதியானமாற்றங்களுக்கான அங்கீகாரத்தை பெரும்பாலும் சமூகவலைதளங்களில் இருந்தே எதிர்பார்க்கிறார்கள். 

சிலர் தங்கள் உடலை ஏற்க முடியாமல் வெட்கப்படுவார்கள். சிலர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு குறையாகஉணர்வார்கள். இது உடலின் பிரச்சனை அல்ல. இன்றையஇளைய தலைமுறையினரிடம் உருவாகியிருக்கக்கூடிய ஒருஒப்பீட்டு அழுத்தம்.

 

இன்றைய சமூக வலைதளங்கள் உடல் ரீதியான ஒப்பீட்டைஅதிகரித்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த ஒப்பீட்டைமிகைபடுத்தியும் இருக்கின்றன. நிஜவுலகம் என்பது அசலானது. அங்கு பார்க்கும் அனைவரும் அசலானவர்கள். அசலானநண்பர்கள், அசலான முகம், அசலான நடவடிக்கைகள். அதனால் அங்கு எதிர்கொள்ளும் உடல் ரீதியானவெளிப்பாடுகளும், ஒப்பீடுகளும் அசலானவை. அங்கே பார்க்கும்தங்களின் சக வயதினர் தங்களை போலவே அத்தனைபோதாமைகளுடன் இருக்கிறார்கள் என்பது ஒருவகையில்எதார்த்தத்தை புரிய வைக்கும். ஏற்றுக்கொள்ள வைக்கும். ஆனால், சமூக வலைதளங்கள் மிகைப்படுத்தப்பட்டவை. அங்குபார்க்கும் கணக்குகள் மிகையான வெளிப்பாடுகளாகஇருக்கின்றன. மிகையான அழகு, மிகையான வாழ்க்கை, மிகையான ஒப்பீடுகள். இந்த மிகையும், போலியும் இந்தவயதினரை தாழ்வு மனப்பான்மை கொள்ள செய்கிறது. தங்களின்உடலின் மீதும், அழகின் மீதும் அவமானம் கொள்ள வைக்கிறது. அதனால் தான் இன்றைய கால வளரிளம் பருவத்தினரிடம்தங்களின் உடல் மீதும், உருவ அமைப்பின் மீதும் ஏராளமானதாழ்வு மனப்பான்மையை பார்க்க முடிகிறது. இந்த தாழ்வுமனப்பான்மை அவர்களின் அடையாளத்தை, ஆளுமையை, அதன்இயல்பான வளர்ச்சியை பாதிக்கிறது. இந்த வகையான பாதிப்புதான் வளரிளம் பருவத்தினரின் பெரும்பாலான உளவியல்பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. 

 

இந்த பிரச்சினையை பெரியவர்களாகிய நாம் சரியாகஅணுகுகிறோமா? பெற்றோர்கள் இந்த பிரச்சினையை புரிந்துகொண்டிருக்கிறார்களா?

 

நிச்சயமாக இல்லை. 

 

வழக்கம் போல, உடல் தோற்றங்களை ஒப்பீடு செய்கிறோம், உடல் ரீதியாக அவர்கள் கொண்டிருக்கக்கூடிய தாழ்வுமனப்பான்மையை அகற்றாமல் அதை இன்னும் மோசமாக்கும்வகையில் அவர்களின் உடல் குறித்து விமர்சிக்கிறோம். “பாடிஷேமிங்” குறித்து முந்தைய தலைமுறைகள் கொண்டிருந்தமதிப்பீடுகளுக்கும், இன்றைய தலைமுறையினர்கொண்டிருக்கும் பதட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள்இருக்கின்றன. அதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

உடல் குறித்த ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்தெடுக்கவேண்டும். சமூக வலைதளங்களின் மிகைத்தன்மை குறித்துஉரையாட வேண்டும். அதை பற்றியான நேர்மறையானஎண்ணங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக

 

* உடல் குறித்து கேலி செய்யக்கூடாது

* வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்பதை சொல்லவேண்டும்

* உடல் தோற்றத்தை விட ஆரோக்கியத்தைப் பற்றி பேசவேண்டும்

 

ஒரு அன்பான உரையாடல், ஒரு கேலி வார்த்தையை விடஆயிரம் மடங்கு தாக்கம் உண்டு.

 

வளரிளம் பருவத்தினரின் அடையாள தேடலும், சிக்கலும்:

 

இளமைகாலத்தின் மிக பெரிய தேடல் அடையாள தேடலே!. 

 

இந்த வயதில் தான் ஒருவர் தன் விருப்பம், திறமை, தனித்தன்மைஆகியவற்றை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்த தேடல்ஒரு நீண்ட பயணத்தை போன்றது. ஒரு சந்தர்ப்பத்தில், ஒருசூழலில் இந்த இந்த அடையாளம் உருவாகிவிடுவதல்ல. நீண்டபயணத்தின் இறுதியிலேயே முழுமையான அடையாளத்தைஉணர்ந்துகொள்ள முடியும். அந்த நீண்ட பயணத்தில் சமூகமும், பெற்றோரும், ஆசிரியரும், கல்வியும் இவர்களுடன் இணக்கமாகஇருக்கும் போது ஆரோக்கியமான அடையாளம் உருவாகிறது. ஒன்றுக்கொன்று முரணாக ஆகும்போதும் சிதறுண்டஅடையாளமாக உருவாகி விடுகிறது. இன்றைய காலத்தில் இந்தஅடையாள தேடலை சமூக வலைதளங்கள் இன்னும்சிக்கலாக்கியிருக்கின்றன. 

 

ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை விட, திணிக்கப்பட்ட ஒரு அடையாளத்தை தனது அடையாளமாகஉணரக்கூடிய ஆபத்தை சமூக வலைதளங்கள்உருவாக்கியிருக்கின்றன. நண்பர்கள், சமூகம், சமூகஊடகங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் தங்கள் கருத்தைத்திணிக்கின்றன. இதனால் பல இளைஞர்கள் தங்களைப்பற்றிஉண்மையாக அறியாமல், வெளிப்படையான அங்கீகாரத்தைநாட ஆரம்பிக்கிறார்கள்.

 

ஒரு மாணவர் ஓவியம் வரைவதில் திறமை இருந்தாலும், சமூகவலைதளங்களில் அதற்கான அங்கீகாரத்தை பெறமுடியவில்லை என்றால் அந்த தனித்துவமான திறனைநிராகரிக்கிறார். எதற்கு சுலபமான அங்கீகாரம் கிடைக்கிறதோஅதை தேடி செல்கிறார். தனித்துவத்தை இழக்கிறார்கள். ஒருமந்தைகளாக இன்றைய இளைஞர்கள் திரள்வதற்கு இப்படிதனித்துவமான அடையாளத்தை இழப்பதே காரணமாகஇருக்கிறது. தனித்துவ சிந்தனைகள், தனித்துவமான பண்புகள், தனித்துவமான அறிவு, தனித்துவமான பார்வை என அத்தனையும்இந்த சமூக வலைதள மந்தை கலாச்சாரம் இழக்க வைக்கிறது.   

 

பெற்றொர்களும், சமூகமும் இளைஞர்களிடம் உருவாகி வரும்இந்த மந்தை கலாச்சாரத்தை புரிந்து கொண்டு, இளைஞர்களின்தனித்துவத்தை மீட்டெடுப்பதற்கான செயல்திட்டங்களைஉருவாக்க வேண்டும். அதற்கு சமூக வலைதளங்களை எப்படிஆரோக்கியமாக பயன்படுத்துவது என்று பார்க்க வேண்டும். குழந்தைகளிடம் கலை, இலக்கிய செயல்பாடுகளைஊக்குவிக்கும் போது அவர்களின் இழந்தை அடையாளங்களைமீட்டெடுக்க முடியும் அதன் வழியாக தனித்துவமானஇளைஞர்களை உருவாக்க முடியும் அதன் வழியாகஇளைஞர்கள் மந்தைகளாக திரள்வதை தடுக்க முடியும். 

 

சுதந்திரம் வேண்டுமா? பாதுகாப்பும் வேண்டுமே!

 

பதினைந்து வயதிலேயே இன்று அனைவரின் கைகளுக்கும்தனிப்பட்ட அலைபேசி வந்திருக்கிறது. இன்றையபதின்பருவத்தினரின் தன்னிச்சையான உணர்வு என்பதுதங்களுக்கென்று தனிப்பட்ட அலைபேசியை அடைவதிலிருந்துதொடங்குகிறது. பெற்றோர்களை பொறுத்தவரை, குழந்தைகள்சீக்கிரமே வளர்ந்துவிட வேண்டுமென்று நினைக்கிறார்கள். அதனால், அவர்களின் தன்னிச்சையாக செயல்படும் உணர்வைஎந்த மேற்பார்வையுமின்றி அனுமதிக்கிறார்கள். அதன்விளைவாக மிக இளம் வயதில் அவர்கள் முழுமையானதன்விருப்பப்படி நடக்கும் உரிமையை அடைந்து விடுகிறார்கள். 

 

ஆனால் அதற்கான போதுமான அனுபவங்கள் இன்றைய இளம்வயதினரிடம் இருக்கிறதா என்றால் இல்லை. அவர்களின்அனுபவங்கள் திரை வழியாக உருவானவைகளாகவேஇருக்கின்றன. எதார்த்த வாழ்வில் அவர்களுக்கானஅனுபவங்கள் இன்னும் கிடைக்கவே தொடங்கவில்லை ஆனால்அதற்குள்ளாகவே சிக்கலான விஷயங்களுக்கெல்லாம் தனியாகமுடிவெடுக்கும் நிலைக்கு சென்றுவிட்டார்கள். இதுதான்பெற்றோர்-குழந்தை மோதல்களின் காரணமாகிறது.

 

சில பெற்றோர் கடுமையாக கட்டுப்படுத்த முயல்கிறார்கள். சிலர்முழு சுதந்திரம் கொடுக்கிறார்கள். இரண்டு வகையானநிலைப்பாடுகளும் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

 

முதலில் அனுபவங்களை உருவாக்க வேண்டும். அந்தஅனுபவங்களை எதார்த்த வாழ்வில் இருந்து பெறுவதற்கானவழிகளை உருவாக்க வேண்டும். அந்த அனபவங்கள் சார்ந்த ஒருவெளிப்படையான உரையாடல் அமைவதற்கான வெளியைஏற்படுத்தி தர வேண்டும். எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல், முன் முடிவுகளும் இல்லாமல் இப்படிப்பட்ட அனுபவங்கள்சார்ந்த உரையாடல்கள் அமையும் போது அதுசுதந்திரத்திற்கான கதவை திறக்கிறது. தன்னிச்சையாகமுடிவெடுப்பதற்கான பக்குவத்தை உருவாக்குகிறது. இந்தபக்குவம் அவர்கள் சமூக வலைதளங்களை முதிர்ச்சியாககையாள்வதற்கும் தேவையானதாக இருக்கும். அதனால்பெற்றோர்களை பொறுத்த வரையில்,

 

* சுதந்திரத்தை பல்வேறு கட்டங்களாக அளிக்க வேண்டும். 

* அதற்கான அனுபவங்களை முதலில் பெறுவதற்கான சூழலைஉருவாக்க வேண்டும்

* வெளிப்படையான உரையாடல் நிகழ்வதை அனுமதிக்கவேண்டும்

* அதற்கான நம்பிக்கையை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்

* பாதுகாப்புணர்வையும், எதை வேண்டுமானாலும்பகிர்ந்துகொள்வதற்கான சூழலையும் குடும்பத்தில் உருவாக்கிதர வேண்டும் 

* தவறுகள் நடந்தாலும் பேசக்கூடிய சூழல் இருக்க வேண்டும்

 

 

எதிர்ப்பு, மீறல், விலகல் — உண்மையில் என்ன நடக்கிறது? 

 

இளம்வயதில் மூளையின் முடிவெடுக்கும் பகுதி இன்னும்வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் உணர்ச்சிகள் வேகமாகவரும். கோபம் சீக்கிரம் வரும். பிறரின் பார்வையை புரிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கும்.

 

இதனால் பெற்றோருக்கு “எல்லாவற்றிற்கும் எதிராகபேசுகிறான்” என்ற உணர்வு வரலாம். ஆனால் பெரும்பாலும் இதுமரியாதையின்மை அல்ல; குழந்தைகளிடம் இயல்பாகஉருவாகக்கூடிய எதிர்ப்பு மனநிலை. 

 

வளரிளம் பருவத்தை அடையும் போது அதுவரை பெற்றோர்களைசார்ந்திருந்த மன நிலை மாறி, பெற்றோர்களை சாராமலேயேஎன்னால் செய்ய முடியும் என்ற மனநிலை உருவாக தொடங்கும். உண்மையில், இப்படிப்பட்ட மன நிலை ஆரோக்கியமானது. அதன் வழியாக தனித்துவ திறமைகளின் மீதான தேடல்தொடங்கும். இந்த தேடலுக்கு அடிப்படை மீறல் தான். அத்தனையில் இருந்தும் மீறல். இந்த மீறல் தான் எதிர்ப்பு மனநிலையை உருவாக்குகிறது. அது இந்த பருவம் சார்ந்த மனநிலையே!. தனித்துவ அடையாளங்கள் உருவாகும் போது மீறல்மன நிலையும் வடிந்து போகும். அதன் பிறகு தனதுஅடையாளத்தின் வழியாக மீண்டும் அத்தனையுடனும்ஒன்றிணைந்து கொள்வார்கள். அதனால் இந்த வயதில்குழந்தைகளிடம் உருவாகக்கூடிய எதிர்ப்பு மன நிலையும், மீறலும், விலகலும் தற்காலிகமானதே. இதை வைத்துக்கொண்டுகுழந்தைகள் மாறிவிட்டார்கள் என நம்பிக்கையிழக்கதேவையில்லை. 

 

இதற்காக குழந்தைகளை தண்டிப்பது, அவர்கள் மீது கோபம்கொள்வது, வருத்தப்படுவது தேவையில்லை. அதுபெற்றோர்களின் பதட்டத்தினால் உருவாகக்கூடியது. பெற்றோர்களின் இந்த நடவடிக்கைகள் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்குமான இடைவெளியை அதிகரிக்கும். அதுவளரிளம் பருவத்தில் இன்னும் மோசமான பாதிப்புகளை இரண்டுதரப்பிலும் ஏற்படுத்தி விடும்.

 

டிஜிட்டல் காலத்தில் இளைஞர்கள்: 

 

வளரிளம் பருவம் என்பது எப்போதுமே வாழ்க்கையில் தீவிரமானமாற்றங்கள் நடைபெறும் ஒரு முக்கியமான கட்டமாகஇருந்துள்ளது. ஆனால் இன்றைய இந்திய இளம்வயதினர்எதிர்கொள்ளும் சூழல், அவர்களின் பெற்றோர் தலைமுறையினர்சந்தித்த சூழலிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது. உடலியல் மாற்றங்கள் பழையபடி இயல்பாகவே நடந்தாலும், சமூக எதிர்பார்ப்புகள், கல்வி அழுத்தம், குடும்ப அமைப்பில்ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் உலகின் தாக்கம்ஆகியவை இன்றைய இளம்வயதினரை முற்றிலும் புதிய சூழலில்வளரச் செய்கின்றன.

 

வெளிப்படையாக பார்க்கும்போது இன்றைய இளைஞர்கள்பெரியவர்களாக மாறுவது மெதுவாக நடக்கிறது போலத்தோன்றலாம். பெரியவர்களின் பாரம்பரிய அடையாளங்கள்பொறுப்புகளை ஏற்குதல், சுயமாக முடிவெடுப்பது போன்றவைதாமதமாக நிகழ்கின்றன. ஆனால் உள்ளார்ந்த நிலையில்அவர்கள் மனதிலும் உணர்ச்சிகளிலும் முன்பு இல்லாத அளவுக்குவேகமாக நகர்கிறார்கள். கடுமையான போட்டி, டிஜிட்டல்தொடர்புகள் மற்றும் தொடர்ந்து சாதனை எதிர்பார்க்கும்சமூகத்தின் வேகத்துக்கு ஏற்ப தங்களை அமைத்துக்கொள்ளஅவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த வெளிப்படையான மெதுவும், உள்ளார்ந்த வேகமும்கொண்ட முரண்பாட்டை புரிந்துகொள்வது, இன்றைய இந்தியசூழலில் இளம்வயதினருடன் பணிபுரியும் பெற்றோர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியமானது.

இந்திய குடும்பங்களில் இன்று இளம்வயதினர்கள் முந்தையதலைமுறையுடன் ஒப்பிடும்போது அதிக நேரத்தை வீட்டிலேயேசெலவிடுகிறார்கள். முன்பு இளம் வயதிலேயே பொறுப்புகளைஏற்கவும், தனியாக பயணம் செய்யவும், வெளியில் விளையாடவும், அல்லது குடும்பத்திற்கு பொருளாதார பங்களிப்பு செய்யவும்ஊக்குவிக்கப்பட்டார்கள். இன்று பாதுகாப்பு பற்றிய கவலைகள், கல்வி தேவைகள் மற்றும் பெற்றோர் அணுகுமுறையின்மாற்றங்கள் இந்த பழக்கத்தை மாற்றியுள்ளன. பல இளைஞர்கள்தனியாக பயணம் செய்வதை தாமதமாக ஆரம்பிக்கிறார்கள், கண்காணிப்பு இல்லாத வெளிப்புற தொடர்புகள் குறைவாகஉள்ளன, பள்ளி நேரத்துக்கு வெளியே பெரும்பாலும் வீட்டில், டியூஷன் மையங்களில் அல்லது கோச்சிங் வகுப்புகளில் நேரம்செலவிடுகிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்தாலும், அவர்களின்சமூக வாழ்க்கை பெரும்பாலும் ஆன்லைனில்தான்நடைபெறுகிறது  ஸ்மார்ட்போன்கள், மெசேஜிங் பயன்பாடுகள், கேமிங் தளங்கள், சமூக ஊடகங்கள் வழியாக. நண்பர்கள், சண்டைகள், ஒப்பீடுகள், அங்கீகாரம் போன்றவை அனைத்தும்இப்போது டிஜிட்டல் உலகத்தில் நிகழ்கின்றன.

 

இந்திய சமூகத்தில் நண்பர்கள் மதிப்பு மற்றும் சமூகப் புகழ்முக்கிய பங்கு வகிப்பதால், ஆன்லைன் உலகம் சில நேரங்களில்புறக்கணிக்கப்படுவோம் என்ற பயம், வெட்கம், மதிப்பீடுசெய்யப்படுவோம் என்ற அழுத்தம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

 

சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதுமூளையை எப்போதும் விழிப்புடன் வைத்தாலும், அமைதியாகஇருக்க உதவாது. நீண்ட நேர கவனம், பொறுமை மற்றும்சலிப்பை ஏற்றுக்கொள்ளும் திறன் மெல்ல குறைந்து வருகிறது.

 

இளம்வயது மூளை இயற்கையாகவே அங்கீகாரத்தையும்சேர்ந்துணர்வையும் தேடுகிறது. முன்பு இந்த அங்கீகாரம்குடும்பம், ஆசிரியர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மூலம்கிடைத்தது. இன்று சமூக ஊடகங்கள் அதை எண்களாகமாற்றியுள்ளன லைக்குகள், பார்வைகள், கருத்துகள். இதனால்எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றம் தொடர்ந்து நடைபெறும் சுழற்சிஉருவாகிறது.

 

மேலும், இந்திய இளைஞர்கள் மிகவும் இளம் வயதிலேயேபெரியவர்களின் பிரச்சனைகளைப் பற்றிஅறிந்துகொள்கிறார்கள் — போட்டித் தேர்வுகள், வேலை வாய்ப்புபற்றிய அச்சம், பொருளாதார அழுத்தம், சமூக ஒப்பீடுகள், உலகளாவிய நெருக்கடிகள் போன்றவை. இந்த முன்கூட்டியவெளிப்பாடு பலருக்கு வெளியில் தெரியாத மன அழுத்தத்தைஉருவாக்குகிறது.

 

மனநலத்தின் உண்மை நிலை: இடைவெளி இல்லாத அழுத்தம் 

 

இன்றைய இந்திய இளம்வயதினர்கள் எதிர்கொள்ளும் மனநலசவால்கள் கல்வி எதிர்பார்ப்புகளுடனும், சமூக ஒப்பீடுகளுடனும்ஆழமாக இணைந்துள்ளன.பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம், பெற்றோர்மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றிவிடுவோமோ என்ற பயம், கல்வி, தோற்றம் மற்றும் சமூக நிலைமையில் நண்பர்களுடன்தொடர்ந்த ஒப்பீடு போன்றவற்றை டிஜிட்டல் உலகம் மேலும்அதிகரிக்கிறது. பள்ளி நேரம் முடிந்த பிறகும் நண்பர்கள்மதிப்பீடு நிற்காது. குழு உரையாடல்கள், சமூக ஊடகச்செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சிலருக்கு இதுஆதரவாக இருக்கும்; மற்றவர்களுக்கு இது பதட்டம், உடல்தோற்ற குறை உணர்வு மற்றும் உணர்ச்சி சோர்வாக மாறலாம்.

 

ஒரு நல்ல மாற்றம் என்னவென்றால், இன்றைய இளைஞர்கள்மனநல சிக்கல்கள் குறித்து பேசத் தயாராக உள்ளனர். முந்தையதலைமுறையுடன் ஒப்பிடும்போது ஆலோசனை, கவுன்சிலிங், சிகிச்சை போன்றவற்றை ஏற்கும் மனப்பான்மை குறிப்பாகநகர்ப்புற மற்றும் நகரம் சார்ந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது.

 

ஆனால் இன்னும் பலர் அமைதியாகவே போராடுகின்றனர். தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் அது பலவீனமாககருதப்படுமோ அல்லது படிப்பில் கவனம் இல்லாததற்கானகாரணமாகப் பார்க்கப்படுமோ என்ற அச்சம் இருக்கிறது.

 

மதிப்புகள், விழிப்புணர்வு மற்றும் எதிர்பார்ப்புகளின் சுமை:

 

இன்றைய இந்திய இளைஞர்கள் சமூக ரீதியாக முன்பை விடஅதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஊடகங்களின்தொடர்ச்சியான தாக்கம் காரணமாக சமத்துவம், காலநிலைமாற்றம், பாலின சமநிலை, சமூக நீதி போன்ற விஷயங்களில்அவர்கள் ஆழமான சிந்தனை கொண்டிருக்கிறார்கள்.

 

அவர்கள் பொதுவாக பாரம்பரியக் கருத்துகளை கேள்விகேட்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும்,வேறுபாடுகளைஏற்றுக்கொள்ளும் மனநிலை உடையவர்களாகவும், நியாயம்மற்றும் தனிப்பட்ட எல்லைகள் குறித்து தெளிவாகபேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அதே சமயம், இந்திய சமூகத்தில் சாதனை, பொருளாதார ஸ்திரத்தன்மைமற்றும் மரியாதைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அதிகம். வெற்றிகரமான தொழில் வாழ்க்கையே பாதுகாப்பிற்கும் சமூகஅங்கீகாரத்திற்கும் முக்கிய பாதையாகக் காட்டப்படுகிறது.

 

இதனால் ஒரு தனிப்பட்ட முரண்பாடு உருவாகிறது. “பெரியகனவு காணுங்கள்” என்று சொல்லப்படுகிறார்கள்; ஆனால் அதேநேரத்தில் தோல்வி, போட்டி மற்றும் ஆபத்து குறித்து தொடர்ந்துநினைவூட்டப்படுகிறார்கள். வெற்றிகரமான எதிர்காலத்தைஉறுதிசெய்ய வேண்டிய அழுத்தம் மிகவும் இளம் வயதிலேயேதொடங்குகிறது. இதனால் ஆராய்ந்து பார்க்கவும், தவறுகள்செய்யவும், ஓய்வு எடுக்கவும் வாய்ப்புகள் குறைகின்றன.

 

இதன் விளைவாக, பல இளைஞர்கள் மனதில் நீண்டகாலபதட்டத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஆசை இல்லாததால்அல்ல; எதிர்காலம் உறுதியற்றதாகத் தோன்றுவதால்தான் அந்தஅச்சம் உருவாகிறது.

 

இளமைகாலம் ஒரு சிக்கல் அல்ல; அது உருவாகிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. அவர்கள் தவறுகள் செய்கிறார்கள்என்றால் அது வளர்ச்சியின் ஒரு பகுதி. அவர்களுக்குதேவைப்படுவது தீர்ப்பு அல்ல துணை நிற்கும் ஒருவர்.

அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உடனடி ஆலோசனைகளை அல்ல. முன்முடிவுகள் அல்லாமல் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வதை தான்!. யாரிடமும் ஒப்பீடு செய்யாமல் அவர்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பும்அளிக்கும் பெற்றோர்களை தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அன்பும் புரிதலும் சேர்ந்த இப்படிப்பட்ட வழிகாட்டுதலே இளம்தலைமுறைக்கு நாம் தரக்கூடிய மிகப் பெரிய பரிசாகும்.


- Dr. சிவபாலன் இளங்கோவன்

அவசரம் - இந்த மில்லேனியத்தின் உணர்வு


அரவிந்தனைப் பற்றிய நினைவுப் பதிவுகளில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த விஷயம் என்னை யோசிக்க வைத்தது. ( எழுதியது யார் என்று குறித்துக் கொள்ள மறந்து விட்டேன்.)


அரவிந்தன் உடல் நலம் குறித்து மிகுந்த கவனம் உடையவர். பொதுவாக பல இலக்கியவாதிகளுக்கு இருக்கும் எந்த 'உல்லாச 'பழக்கங்களும் இல்லாதவர். அவருக்கு எப்படி இப்படி ஒரு அவசர மரணம் நிகழ்ந்தது என்று அதை எழுதியவர் கேட்டிருந்தார். 


அரவிந்தன் எப்போதுமே ஒரு அவசரத்துடன் காணப்பட்டார் என்றும் அவர் எழுதியிருந்தார். உண்மைதான். அரவிந்தனை எப்போதும் ஒரு அவசரத்துடன்தான் பார்த்திருக்கிறேன். உட்கார்ந்திருக்கும்போது கூட அவரிடம் ஒரு அவசரம் தென்படுவது போலவே இருக்கும். அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்தவர். எதையும் காலக்கெடுவுக்குள்  முடிக்க வேண்டிய அவசரம் அவருக்குள் தொற்றி இருக்கலாம். அவருடன் வேறு சில நண்பர்களும் சேர்ந்து ஒரு அவசரம் இல்லாத  கூடுகைக்கு சில முறை முயன்றோம். எங்களது தனித்தனி அவசரங்களால் அது கூடவில்லை. அது இனி ஒருபோதும் கூடாது.


 என்னையும் நான் எப்போதுமே ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பதாக பலர் சொல்லி இருக்கிறார்கள். 'நீ எல்லாவற்றையும் அவசரமாகச் செய்கிறாய் 'என்று சொல்லி இருக்கிறார்கள். அவசரம்  அரவிந்தனின் மொழியில் சொன்னால் இந்த மில்லேனியத்தின் உணர்வு. நாம் மிக வேகமாக வாழ்ந்து மிக வேகமாக செத்துப் போகிறோம்.


 பிரெஞ்சு மொழியில் flaneur என்கிற ஒரு வார்த்தை உண்டு. தமிழில்  சுமாராக இப்படி மொழிபெயர்க்கலாம்' மிக மெதுவாக நடப்பவர் '.


 பொதுவாக பிரெஞ்சு மக்கள் மிக மெதுவாக நடக்கக் கூடியவர்களாகவும் ஆங்கிலேயர்கள் மிக வேகமாக நடக்கக்கூடியவர்களாகவும் சொல்கிறார்கள். இந்தியர்களும் மிக வேகமாக நடக்கக் கூடியவர்கள் தான். இந்தப் பண்பு ஒரு கலாச்சார பண்பும் கூட என்றும் தோன்றுகிறது.


என்னுடைய கனவெல்லாம் இப்போது அவசரம் இல்லாத ஒரு வாழ்க்கை குறித்துதான் இருக்கிறது. எந்த நோக்கமும் இல்லாது காலக்கெடுவும் இல்லாது மிக மெதுவாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே  நடப்பது. அரவிந்தனுக்கும் இப்படிப்பட்ட கனவுகள் இருந்திருக்கலாம்.


 ஆனால் அது அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடிய விஷயம் அல்ல என்றும் தெரிகிறது. நான் /நாம் எப்போதும் விரட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். இருக்கிறோம். அரவிந்தனின் மரணம் மட்டுமல்ல  இறுதிச்சடங்குகள் கூட மிக வேகமாக யாரோ விரட்டியது போல் முடிந்து விட்டது.


 மிக மெதுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்கும் பிரெஞ்சு நடை ஒருவேளை நமக்கெல்லாம் மரணத்திற்கு பிறகாவது கிடைக்குமோ என்னவோ?


- போகன் சங்கர்

April 19, 2026

பெங்களூர் : லால் பாக் கார்டன் நகரின் நடுவே ஒரு பெரிய பூங்கா

ஹைதர் அலி காலத்தில் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துவங்கி, அவரது மகன் திப்பு சுல்தான் அதை இன்னும் விரிவுப்படுத்தியுள்ளார்.


உலகில் இருந்து நிறைய அரிய தாவரங்களை சேகரித்து வளர்த்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியுள்ளனர்.

240 ஏக்கர் +, 1800 வகை தாவரம் + மரம் என விதவிதமாய் வளர்ந்து நிற்கிறது.

இத்தனை ஆண்டு கால வரலாறு பூங்காவின் மரங்களே பெரிதாய், மிகப்பெரியதாய் வளர்ந்து நிற்பதே சாட்சி. பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சி. எத்தனை வெயில் அடித்தாலும் வாங்கப்பா பார்த்துக்கலாம் என பூங்கா சவால் விடுகிறது.


நடந்து கடப்பது அத்தனை கால் வலியையும், உடன் மகிழ்ச்சியையும் தருகிறது. பூங்காவை சுற்றி வர சின்ன வண்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ரூ.100 கட்டணம். அது கேட் எண் 2 ல் இருக்கிறது என்கிறார்கள்.

நாங்கள் இந்த வசதி அறியாமல், எண் நான்கில் நுழைந்து கேட் எண் 2 கண்டுப்பிடிப்பதே சிரமமாகிவிட்டது.

ஒன்று மொழி பிரச்சனை. எந்த பக்கம் என கேட்டாலும் சிலருக்கு தெரியவில்லை. இன்னொன்று ஆங்காங்கே நிர்வாகம் போர்டு வைக்காதது ஒரு குறை.

இன்று ஞாயிறு விடுமுறை குடும்பங்களோடு பலர் வந்திருந்தார்கள்.


நுழைவுக்கட்டணம் ரூ. 50. இது எப்பொழுதாவது பயணிப்பவர்களுக்கு கூட சரி. ஆனால் உள்ளூர் வாசிகளுக்கு இது சிரமம் தான்.

மாத பாஸ் போல ஏதேனும் ஏற்பாடு செய்து கொடுத்தால் சரியானது.

சம்பவம் அத்தியாயம் ஒண்ணு (2026) Time Looping Movie


நாயகனான போலீஸ் அதிகாரி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாரிடம் சொல்லிவிட்டு, புதிய இடத்திற்கு பணிக்கு வந்து சேர்கிறார்.  அது ஒரு காட்டுப் பகுதி. போகிற பாதையில் ஒரு போலீசு அதிகாரி ஜீப்பில் அடிபடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

 

அடிப்பட்ட போலீசிடம் ஒரு வாக்கி டாக்கி இருக்கிறது.  அதில், கைதிகளை அழைத்துக் கொண்டு, செல்லும் பொழுது, கைதிகள் தப்பியதாகவும், அவர்களை பிடிக்க  காட்டிற்குள் வந்ததாகவும், தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால், தன்னால் நகர முடியவில்லை. ஆகையால் தன்னைக் காப்பாற்றும்படி அழைக்கிறார்.

 

நாயகனுடன் ஒரு மேலாதிகாரியும், ஒரு போலீசும் உள்ளே செல்கிறார்கள்.  ஆனால் அவரை கண்டுப்பிடிப்பது மிக சிரமமாக இருக்கிறது. அந்த காடு குறித்தான செய்திகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.  உள்ளே சென்றபவர்கள் யாரும் மீண்டும் திரும்பியதில்லை என்றும் சொல்கிறார்கள்.

 

அதற்கேற்றபடி, அங்கு நடக்கும் சம்பவங்கள், திரும்ப திரும்ப நடக்கின்றன.  வேறு காலத்தை சேர்ந்தவர்கள் காட்டில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மோதலிலும் மண்ணில் ரத்தம் சிந்தும் பொழுது  அங்கு நடக்கும் காட்சிகள் மாறுகின்றன.

 

இறுதியில் என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

***


 

இதே இயக்குநர் இந்த தளத்தில் ஒரு குறும்படம் ஒன்றை எடுத்து, அதை இப்பொழுது முழு நீளப்படமாக மாற்றியிருக்கிறார்கள். படத்தில்  இரண்டாம் பாகத்திற்கும் அடி போட்டிருக்கிறார்கள்.

 

ஆங்கிலத்தில் இந்த வகையான படங்கள், வலைத் தொடர்கள் நிறைய வந்திருக்கின்றன. தமிழில் சிம்புவின் ”மாநாடு” வந்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் சேரும்.  மலையாளத்தில் இப்பொழுது வந்திருப்பதால், மக்களுக்கு புரியுமா என்ற சந்தேகத்தில் ஆங்காங்கே விளக்கம் கொடுக்கிறார்கள். அது உண்மை தான். இந்த மாதிரி படங்களை பார்த்திராதவர்களுக்கு குழப்பங்கள் உருவாவது சகஜம். ஏற்கனவே இந்த மாதிரி படங்களை நிறைய பார்த்திருப்பதால் எனக்கு பெரிய ஆச்சர்யம் தரவில்லை.

 

ஜித்து சதீசன் இயக்குநருக்கு முதல் படம் என்பதால் அதற்கேற்ப இயல்புகளுடன் தான் படம் இருக்கிறது. கேரளத்தில் ஓரளவு ஓடியிருக்கிறது.

 

நாயகனின் அப்பாவை நாயகன் பார்த்ததேயில்லை.  படத்தில் ஒரு இடத்தில் பார்க்கிறார்.  இருவரிடமே கொஞ்சம் கூட ரியாக்சனே இல்லை. சில காட்சிகளுக்கு பிறகு, அவரை வழியனுப்பும் பொழுது, “அப்பா இல்லாம வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என சன்னமான குரலில் சொல்கிறார். அவ்வளவு தான்.  காட்டுக்குள்ளேயே பெரும்பாலான படம் என்பதால், பசுமையாக இருக்கிறது.

 

ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருக்கிறது.  இந்த மாதிரி படங்களை ஆர்வமாக பார்ப்பவர்கள் பாருங்கள். மற்றவர்களுக்கு பிடிக்குமா? தெரியவில்லை.

 

April 10, 2026

Bou Buttu Bhuta (2025) Odia Horror movie

 


ஒரிசாவின் ஒதுக்குப்புறமான ஒரு கிராமம். ஊரில் யாருக்கு பேய் பிடித்தாலும், அந்த வயதான அம்மாவிடம் அழைத்து வருகிறார்கள். அந்த அம்மாவும் பேயை விரட்டுகிறார். கொடுக்கும் சொற்ப பணத்தை கொண்டு தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

 

(நாயகனான) மகன் -  ஊரில் குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கிடைக்கும் சொற்பமான மீன்களை ஊரில் விற்று வருகிறார்.  ஊரில் ஒரு மருத்துவரின் மகளோடு காதல் வயப்படுகிறார்.  துபாய்க்கு போய்விடலாமா என்றால், அதற்கும் ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறது.

 

ஒரு இரவு நண்பனுடன் ஊர் திரும்பும் பொழுது, பைக் சாவி தொலைந்து போனது என ஒரு பெரிய மரத்தில் ஆணியடித்து  இருந்ததை தற்செயலாக புடுங்க, அவனுக்குள் ஒரு ஆவி உள்ளே புகுந்துவிடுகிறது.

 

அந்த ஆவி பக்கத்து ஊரில் ஒரு பெரிய மனிதரின் மகளை ஒரு ஏழை காதலித்தான் என்பதற்காக, பெண்ணை அப்பனே கொ*ன்று அந்த பழியை அவன் மீது போட்டு, ஒரு பெரிய கும்பல் கொடூ*ரமாக அடித்தே கொ*ன்று விடுகிறது.  அந்த ஆவி எப்ப இவர்களை போ*ட்டுத்தள்ளலாம் என வெ*றியுடன் காத்திருக்கிறது.

 

பிறகு நடப்பது எல்லாம் களேபரம் தான். திடீர் திடீரென ஆடுகள் காணாமல் போகின்றன. கொலைகள் நடக்கின்றன. அந்த அம்மா தன் மகனை ஆவியிடமிருந்து  காப்பாற்ற போராடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

***

 

யாரோ இருவர் இந்த படத்தை ஆஹோ ஓஹோ என எழுதியன் என் கண்ணில் பட இந்த படத்தை தேடி பிடித்து வைத்திருந்தேன். IMDB யிலும் 7.8 யாக இருந்தது. ஆனால் குறைவான ஆட்கள் தான் வாக்களித்திருக்கிறார்கள்.

 

நம் தமிழ் உலகில் இது மாதிரி படங்களை எடுத்து, எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டோம். அவர்கள் இப்பொழுது தத்தி, தவழ்ந்து வருகிறார்கள்.

 

அங்கு இந்த படம் ஓரளவு நல்ல வசூலாகியிருக்கிறது.  நாயகன், நாயகி பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால்  அந்த நாயகனின் அம்மா ஈர்த்தார். பேய் பிடித்தவரிடம் சமயோசிதமாக நடந்துகொள்வது.  பேய் உள்ளே புகுந்ததாய்,  வீட்டாரை ஆட்டி வைப்பது என நன்றாக செய்திருந்தார்.  மகனை ஏதோ செய்யப்போகிறான் என (அவனும் பேய் ஓட்டுபவன் தான்) கணவனையே தூக்கி மரத்தில் தொங்கவிடுவது எல்லாம்… “வேற லெவல்”

 

யாரும் ஆர்வமாக தேடிப் போய் பார்த்து என்னைத் திட்டாதீர்கள். 

The Day of Jackal (2024) வலைத் தொடர் Spy Crime Thriller


நாயகன் பிரிட்டிஷ் படையில் தூரத்தில் இருந்து துப்பாக்கி சுடுவதில் கை தேர்ந்த ஆள். போர்க்களத்தின் நிலைமையில் கொஞ்சம் மனம் நொந்து, அங்கு ஒரு சம்பவத்தை செய்துவிட்டு, தான் செத்துப் போனதாக தலைமறைவான ஆள்.

 

தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ்கிறான். முக்கிய புள்ளி யாரையாவது போட சொன்னால், திட்டமிட்டு, நேர்த்தியாக செய்துவிடுகிறான். மனைவி, மகனுடன் வாழ்ந்து வருகிறான்.

 

ஒரு ஆளை தூக்க சொல்லி உத்தரவு வருகிறது. கவனமாக செய்துவிடுகிறான். ஆனால் பேசிய பணத்தில் மீதியை தர மறுக்கிறான். அவனை கண்டுபிடித்து போட்டுவிடுகிறான்.

 

மனைவிக்கு  தன் கணவன் அடிக்கடி வெளிநாடு செல்கிறான். என்ன வேலை செய்கிறான்? என்பதில் மனைவிக்கு மட்டுமல்ல அவளின் குடும்பத்துக்கே கவலை வருகிறது. இது அவனுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது.

 

ஒரு பெரிய வேலை. பெரிய பணம். இனி இதிலிருந்து மொத்தமாக விலகி நிம்மதியாக வாழலாம் என ஒப்புக்கொள்கிறான். அவனைத் தேடும் பிரிட்டிஷ் போலீஷ் ஒரு பக்கம் அவனை தேடுகிறது.  பெரிய வேலை என்பதால், அதில் சிக்கல்களும் பூதமாய் வெளிவருகின்றன

 

பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

***

 


1970 களில் இந்த தலைப்பில் ஒரு நாவல் எழுதி, அது படமாக்கப்பட்டு பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறது.  அதை மீண்டும் வெப் சீரிஸாக எடுத்திருக்கிறார்கள்.   முதல் படத்தின் தரத்தை, இப்பொழுதும் காப்பாற்றியிருக்கிறார்கள்.  ஒரு வார்த்தை கூடுதலாக இல்லை. ஒளிப்பதிவு, காட்சிகள், நடிப்பு எல்லாம் நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

 

திரைக்கதை அமைத்த, எடுத்த விதத்தில் போட்டுத்தள்ளுகிற ஒரு ஆளை நம்மை ”ரசிக்க” செய்துவிட்டார்கள் எனலாம். இதற்காக, துரத்துகிற போலீசையும் வலுவில்லாமல் செய்தது ஒரு மைனஸ்.   இருந்தாலும் அந்த போலீசாக நடித்த நாயகி ஈர்க்கிறார்.  மொத்த சீரிசையும் தாங்குவது நாயகன் தான்.  இரண்டாவது சீரிஸ் வரும் என படத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 

நாயகன் Eddie Redmayne ஐ ஹாரி பார்ட்டர் படங்களுக்கு பிறகு வந்த இரண்டு பாகங்களில் பார்த்திருக்கிறேன். இவர் Stephen Hawking யாக நடித்த  ஒரு படம் சிறந்தது என கேள்விப்பட்டுள்ளேன். பார்க்கவேண்டும்.

 

Hot star ல் தமிழிலேயே இருக்கிறது. திரில்லர் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் பலரும் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். நான் பார்த்தது தான் தாமதம். பாருங்கள்.