May 20, 2007

எங்கள் தெரு - கவிதை

பத்தாண்டுகளுக்கு முன்பு

சூரியனுக்கு முந்தி
நாலு முப்பதுக்கே
சுறுசுறுப்பாய் எழும்.

தீப்பொறிகள் தெறிக்க
நெருப்பில் கருவிகள் செய்யும்
பூமாரியின் குடும்பம்.

கழணி தண்ணி
வீடு வீடாய் சேகரித்து
புண்ணாக்கு கரைத்து
அம்பாரமாய் வைக்கோல் கொணர்ந்து
கறவை மாடுகளோடு வாழும்
பால்வாடை கமழும்
பல குடும்பங்கள்.

சாணி சேகரித்து
வட்ட வட்டமாய் - அழகாய்
எரு தட்டி பிணம் எரிக்க
சுடுகாட்டுக்கு விற்கும்
பாலா குடும்பம்.

அம்பது பைசாவிற்கு
ஆவி பறக்க இட்லி விற்கும்
பார்வதியம்மாள்.

திறந்தவெளி தொழிற்சாலை
எங்கள் தெரு.

ஒரு காம்பவுண்டிற்குள் பத்து வீடுகள்.
கொழம்பிலிருந்து சீம்பால் வரை
பரிமாறி கொள்ளப்படும்.

பூட்டுக்களைப் பார்த்ததில்லை
வீட்டின் கதவுகள்.
களவு எப்பொழுதும் போனதில்லை.

உழைப்பில் ஈடுபடுகிற அழகான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள் வர தயங்கும்
'அசுத்தமான' தெரு.

இப்பொழுது

சோம்பலாய் ஏழு மணிக்கு எழுகிறது.
எழுந்ததும் நிறுத்திய வண்டி நிற்கிறதா
சரிபார்க்கிறார்கள்.

காம்பவுண்டு வீடுகளை
கந்து வட்டி குடும்பங்கள் கையகப்படுத்தி
மாடி வீடுகளாய் மாறிப்போனது.
ஆளுயர கேட் முன்நிற்கிறது.
தாண்டினால் நாய் இரைகிறது.

அழைப்பு மணி அழுத்தினால்
திருடனா?
சரி பார்த்தபின்பு
கதவு திறக்கப்படுகிறது.

தீப்பொறிகள் பறப்பதில்லை.
மாடுகள் வழிமறிப்பதில்லை.
எரு நினைவில் மட்டும் நிற்கிறது.
ஆவி பறக்கும் இட்லி இல்லை.
செம்மண் சாலை போய்
தார் சாலையாகிப் போனது.

பூமாரி, பாலா - என
எல்லா குடும்பங்களும்
சிதறடிக்கப்பட்டுவிட்டன.
ஒப்புக்குக்கூட புன்னகைக்க மறுக்கிறார்கள்
புதிய மனிதர்கள்.
உழைக்க மறுக்கும் அவலமான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள்
வர விரும்பும்
'அழகான தெரு'.

தெருவில் நுழையும்பொழுதெல்லாம்
எண்ணம் எழுகிறது.
'சுத்தமான தெரு'வுக்கு பதிலாக
'அசுத்தமான தெரு'வாகவே இருந்திருக்கலாம்.

1 comment:

  1. Engal Theru Kavithai Migavum Yatharthamaha irukkirathu.
    unmaiyil paththandukalukku munnal iruntha pasangalum, nesangalum tharpothu illai enpathu mikavum varuthumakathan ullathu.
    ithu nagareegathin valarchiyal enbathu theriyavillai

    by

    Meena
    Madurai

    ReplyDelete