August 10, 2007

கனவுகள் - கவிதை!

கண் திறந்தால்
அடுத்த இரவுக்கு
காத்திருத்தல்

கண்மூடினால்
தொலைந்து போன
காட்சிகளுக்குத் தேடல்! - யாரோ!

******

போகிற வழியெல்லாம்
தங்க வெள்ளி காசுகள் சேகரித்து
தலையணைக்கடியில் பாதுகாத்து
காலையில் பார்த்தால்
காணாமல் போகும்

ஆவி விரட்டும் பொழுது மட்டும்
ஓட முடியாமல் தடுக்கி விழுந்து
'அது' நெருங்கி மிக நெருங்கி
வேர்த்து விறுவிறுத்து கண்விழிக்கையில்
நடுநிசி வேளையில்
நாய் ஊளையிட்டு கொண்டிருக்கும்

எட்டுபேருடன்
பறந்து பறந்து சண்டையிட்டு
கதாநாயகனாய் ஜெயித்து
காலையில் எழுகையில்
கழுத்து வலிக்கும்

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து
உள்ளம் களித்து பாக்கள் பாடி
உறக்கம் கலைகையில்
ஓட்டின் துவாரத்தால்
சூரிய வெளிச்சம் கண்ணைக்கூசும்
உள்ளம் பெருமூச்சுவிடும்

கனவுகளை
பொழுதுகளாய் பிரிக்கலாம்
பகற்கனவு
இரவுகனவு

பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு
கனவுகளே
வித்தாய் விழுந்திருக்கிறது

எனக்கு கனவே வருவதில்லை
பெருமையாய் சொல்கிறார்கள்
படுத்ததும் சவமாவதில்
என்ன இருக்கிறது?

நல்ல கனவுகளுக்கு
ஆக்கம் கொடுப்பதே
விழித்திருக்கும் வேளையில்
என் வேலையாகிறது

ஆகையால்
கனவுகளுக்காய்
தவம் இருங்கள்

1 comment: