விருதுகளும் பட்டங்களும் ஜமீன்தாரி சிந்தனையின் பாதிப்பால் ஏற்பட்டவை என்று கூறினால் அதைப் பலரும் மறுக்கக்கூடும். அளப்பரிய சேவை செய்தவர்களையும், திறமையாளர்களையும் கெளரவிப்பது ஏன் என்று அவர்கள் கேட்கக்கூடும். நியாயம் தான். ஆனால் தங்களது சேவையை சமுதாயம் அங்கீகரிக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுவதுடன் நின்றுவிடாமல் அந்த விருதையோ, பட்டத்தையோ பெயருடன் இணைத்துக்கொண்டு பெருமை தட்டிக்கொள்வது அவசியம்தானா என்று கேட்கத்தோன்றுகிறது.
ஒருவரின் சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் வழங்கப்படுவதுதான் பல்கலைக்கழகங்களால் தரப்படும் கெளரவ டாக்டர் பட்டம். இந்தியாவிலேயே மிக அதிகமான பல்கலைக்கழகங்களால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டவர் பண்டித ஜவஹர்லால் நேருவாகத்தான் இருக்கும். அவர் ஒருபோதும் தன்னை டாக்டர் ஜவஹர்லால் நேரு என்று அழைப்பதை விரும்பவில்லை. கெளரவ டாக்டர் பட்டத்தை யாரும் தனது பெயருக்கு முன்னால் போட்டுப் பெருமை தட்டிக்கொள்வதில்லை என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
இன்னாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் தரப்படவேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நகைச்சுவை நடிகர்கள் உள்பட பலருக்கும் டாக்டர் பட்டத்தை வாரி வழங்குகின்றன. அதை நமது ஊடகங்களும் விளம்பரப்படுத்தி மகிழ்கின்றன. விருதுகளும் பட்டங்களும், அமெரிக்காவில் உள்ளதுபோல விரைவிலேயே விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் நாம் வியப்படையத் தேவையில்லை.
அரசு விருதுகள் வழங்குவது என்பதைத் தவிர்க்க இயலாது தான். மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளும் தங்களது மதிப்பையும், மரியாதையையும் இழந்து கேலிப்பொருள்களாக மாறிவருவது வேதனைக்குரிய ஒன்று. ஆட்சியாளர்களின் அடிவருடிகளும், ஆளூட்கட்சியின் நலம் விரும்பிகளும் மட்டுமே இந்த விருதுகளின் பட்டியலில் இடம் பெறுபவர்களில் பெரும்பான்மையினர் என்பஹு இந்தியாவின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்றாகிவிட்டது.
தகுதிக்கும், திறமைக்கும் தரப்பட்டுள்ள அங்கீகாரம் என்பது போய், நன்றி விசுவாசத்துக்காகத் தரப்படும் நற்சான்றிதழ் தான் இந்த விருதுகள் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
மாநில விருதுகள் தான் இப்படியென்றால், மத்திய அரசின் "பத்ம பூஷண்' விருதுகளின் நிலைமையும் அது தான் என்கிற போக்கு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த வருடத்திய "பத்மபூஷண்' விருதுகளின் பட்டியல் அமெரிக்காவாழ் இந்தியரான ஹோட்டல் அதிபர் சந்த்சிங் சத்வாலின் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனிதர் அமெரிக்காவில் பல மோசடிகளில் தொடர்புடையவர் என்பதும், ஒரு அரசியல் தரகர் என்பது தெரிந்தும், இவருக்குப் "பத்ம பூஷண்" விருது தரப்படுகிறது என்றால், அது தெரியாமல் நடந்த தவறல்ல!
இரண்டாண்டுகளுக்கு முன்பே பிரதமரின் அலுவலக்த்தில் "பத்மஸ்ரீ' விருதுக்காக சத்வாலின் பெயரைச் சிபாரிசு செய்தபோது வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த மனிதரின் பின்னணியைக் காரணம் காட்டி அதைத் தடுத்து நிறுத்தியது. அப்போது பத்மஸ்ரீ விருதுக்கு நிராகரிக்கப்பட்ட இவரது பெயர், இப்போது பத்மபூஷண் விருதுக்குத் தகுதிபெற்றிருக்கிறது என்றால் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.
சந்த்சிங் சத்வாலின் மோசடிப் பின்னணி என்ன தெரியுமா? பஸ்ட் நியூயார்க் என்கிற வங்கியில் இவரும் ஓர் இயக்குநர். அந்த வங்கியில் 12 மில்லியன் டாலர் (சுமார் 60 கோடி ரூபாய்) கடன் வாங்கியதுடன், கடனைத் திருப்பிக் கொடுக்க வழியில்லாத பலருக்கும் கடன் வழங்கவும் பரிந்துரைத்தவர் இந்த சத்வால். அந்த வங்கியே இவருடைய கைங்கர்யத்தால் திவாலாகியது. பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்கிற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் இவர் மீது வழக்குத் தொடர்ந்தது. தனது மொத்த வங்கி சொத்தின் மதிப்பே 2,600 டாலர்தான் என்றும், வங்கிக் கையிருப்பு நூறே நூறு டாலர்தான் என்றும் வாக்குமூலம் வழங்கியவர் 12 மில்லியன் டாலர் கடன் வாங்கிய இந்த சந்த்சிங் சத்வால். பல மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஆடம்பர பங்களாவில் குடியிருந்துகொண்டு அது தனது தம்பியின் வீடு என்றும், தாம் அங்கே 5,000 டாலர் வாடகைக்கு இருப்பதாகவும், தானும் மனைவியும் ஹோட்டலில் வேலைக்காக பெறும் 7,600 டாலர் சம்பளப்பணத்தில் வாடகை தருவதாகவும் பொய் வாக்குமூலம் வழங்கியவர்தான் இவர்.
நமது இந்தியக் கைவண்ணத்தை சத்வால் அமெரிக்காவிலும் காட்டினார். அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் தற்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனுக்கு மிகவும் நெருக்கமானவராகிவிட்டார். விளைவு?
1997-ல் இவர் தரவேண்டிய 12 மில்லியன் டாலர் கடன் தொகை, பில் கிளிண்டனின் பதவிக்காலம் முடிய ஒரு மாதம் இருக்கும்போது வெறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலராகக் குறைக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேர்தலுக்கும் பெரிய அளவில் நிதி வசூலித்துக்கொடுத்து அவருக்கும் நெருக்கமாகிவிட்டிருக்கிறார் சந்த் சிங் சத்வால்.
சத்வாலுக்கு "பத்மபூஷண்' தரப்படுவதன் காரணம் என்னவாம் தெரியுமா? இவர் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்குப் பாடுபட்டவராம். இவரைவிட அதிகமாகப் பங்களிப்பு நல்கியவர்கள் பலர் இருந்தும், வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எதிர்ப்புத் தெரிவித்த பிறகும், இந்த மனிதரின் பல்வேறு நிதி மோசடிகளும் பின்னணியும் தெரிந்திருந்தும் இவருக்கு இந்தியாவின் மிகவும் கெளரவமான "பத்மபூஷண்' விருது வழங்கப்படுகிறது என்றால் அந்த விருதுக்கு இனிமேல் மரியாதை எப்படி இருக்கும்?
சந்த் சிங் சத்வாலுக்கு "பத்மபூஷண்' விருது தரப்பட்டால் தவறான முன்னுதாரணம் ஏற்பட்டுவிடும். விருதுகளை விலைக்கு வாங்கலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.
தினமணி தலையங்கத்திலிருந்து... 02.01/2010
சாரியாச் சொல்லி இருக்கறீங்க....
ReplyDeleteநல்லா பெர்பார்ம் பன்றாங்க? தினமணி ஏன் மற்றவர்களை சொல்லலை, அவர்கள் அனைவரும் வேண்டியவங்களா? இல்ல நெசமாவே தகுதியானவங்கதானா?
ReplyDelete