December 15, 2012

மாதவிடாய் - ஆவணப்படம்!

என் 20 வயதில் அலுவலகத்தில் உடன் வேலை செய்த பெண், வயிற்றைப் பிடித்து கதறிய பொழுது, பயந்தே போயிருக்கிறேன்.

சாதாரண நாட்களில் சாந்தமாய் இருப்பவர்கள் இந்த 'மூன்று நாட்களில்,  எரிச்சலும், கோபமாய் கடித்து குதறுபவராக 'வேறு ஒரு நபராய்' சிலரை பார்த்திருக்கிறேன்.

'மாதவிடாய்'  என்பது மனித இனத்தை மறு உற்பத்தி செய்வதற்கான ஒரு சுழற்சி முறை. ஒரு அருமையான விஷயம். குறித்த அறிவியல்பூர்வமான விளக்கம் அறிந்த பிறகு,  'தீட்டு'  கழிப்பதற்காக நடத்தப்படும் சடங்குகளுக்கு செல்வதை நிறுத்தியிருக்கிறேன்.

இந்த சடங்கில் கலந்து கொள்ளும் ஆண்கள்/பெண்கள் பலரும் தங்கள் குலசாமிகளுக்கு ஆகாது என சாப்பிடாமல் செல்வதை குறித்து, சாமிகள்/ஆசாமிகள் குறித்த பல கேள்விகள் மனதில் எழுந்திருக்கிறது.

'மாதவிடாய்' குறித்த ஆவணப்படம் பெரியார் திடலில் நேற்று திரையிட்டார்கள்.  போயிருந்தேன்.

****
இரு மாணவிகளிடம் 'மாதவிடாய்' என்றால் என்ன?' கேள்வி கேட்கப்படுகிறது.  கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கூச்சத்தோடு சங்கடமாய் நெளிகிறார்கள்.  படம் துவங்குகிறது.

நகரங்களில், கிராமங்களில் மாதவிடாயின் பொழுது உடல்ரீதியான, உளரீதியான, சமூக ரீதியான பாதிப்புகளைப் பற்றி பல வர்க்கப் பெண்களும், பல துறை பெண்களும் தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள்.

மாதவிடாய் என்றால் என்ன? என்பதற்கு அறிவியல்பூர்வமான விளக்கம் படத்தில் தரப்படுகிறது.

இந்து, முஸ்லீம், கிறித்துவ பெண்கள் 'தீட்டு' என தள்ளி வைத்து பார்க்கும் நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை பகிர்கிறார்கள்.

நாப்கினில்  உள்ள வகைகள் என்ன?  அதில் உள்ள வசதிகள் என்ன? என்பதையும் விளக்குகிறார்கள்.

அரசு சமீப காலங்களில் பள்ளிகளில்  நாப்கின் தரும் இயந்திரத்தையும், எரிக்கும் இயந்திரத்தையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

'மாதவிடாய்' குறித்த ஒரு தெளிவையும், சிரமப்படும் பெண்களின் மீது அக்கறை கொள்ளுங்கள் என்பதையும் முன்வைக்கிறது படம்.

****

படம் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு பெண் பருவம் எய்துவிட்டால், கவனமாய் 'பாதுகாக்கும்' சமூகத்தில் கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லாத பல பள்ளிகளில் இடைநிற்றல்கள் அதிகமாக இருக்கிறது.  படத்தில் கிராமப்புற பள்ளியைச் சேர்ந்த ஒருவர் இந்த தகவலை சொல்கிறார்.

பா.ஜ.க. தமிழிசை பள்ளியில் இயந்திரம் வைத்தற்காக ஜெ.வை மனம் உவந்து பாராட்டுகிறார்.  ஜெ. 91 லிருந்து கடந்த 21 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்.  ஒரு பெண்ணாகவும் இருந்து கொண்டு ஏன் இத்தனை தாமதமாய் செய்தார்? இன்னும் ஏன் பல பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தி தரவில்லை? ஆட்சியாளர்கள் எப்பொழுதும் ஆட்சியாளர்களாக நடந்துகொள்கிறார்கள்.

தலைமைச் செயலகம் துவங்கி அரசு மருத்துவமனைகள், பொதுக்கழிப்பறைகள் எல்லாம் ஏன் படுகேவலமாக இருக்கிறது?

'சுதந்திரம் பெற்று' 65 ஆண்டுகள் காலமாகி, இந்த நாட்டில் சரிபாதி பெண்கள் மாதந்தோறும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை மாநில அரசும், மத்திய அரசும் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன?

சென்னையில் மதுரவாயில் பகுதிகள் உழைக்கும் மக்களை திரட்டி ஒரு பொதுக்கழிப்பறை கட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், பெண்கள் விடுதலை முன்னணியும் சில ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. குடிமக்களின் மீது இந்த அரசுக்கு அத்தனை அக்கறை!

*****

சமூக எதார்த்தத்தை படமாக முன்வைத்திருக்கிறார். மற்றபடி அரசியல் அம்சங்கள் படத்தின் இடையில் ஒளிந்திருக்கின்றன. பார்க்கும் நாம் தாம் அதை வெளிக்கொண்டுவரவேண்டும். பெண்கள் பிரச்சனை குறித்த ஆவணப்படங்கள், குறும்படங்கள் மிககுறைவு.  இந்த சூழலில் இந்த படம் அவசியமானது.

மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி  ஏலோ,
மாதவிடாய் ஆனதுவே  ஏலே லம்படி  ஏலோ,
தீட்டு தீட்டு என்று சொல்லி ஏலே லம்படி  ஏலோ,
ஒதுக்கி வச்சி ஒடுக்குனாங்க ஏலே லம்படி  ஏலோ,

வயசுக்கு வந்துட்டாலே ஏலே லம்படி  ஏலோ,
வீட்டுக்குள்ளே அடைக்கணுமா ஏலே லம்படி  ஏலோ,
மாச தீட்டு ரத்தம் தானே ஏலே லம்படி  ஏலோ,
கரு வளர உதவும் தானே ஏலே லம்படி  ஏலோ,

மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி  ஏலோ,
மாதவிடாய் ஆனதுவே  ஏலே லம்படி  ஏலோ,

- என படத்தில் சாலைச்செல்வம் பாடும் ஒருபாடல் படம் முழுவதும் வருகிறது. அருமையான பாடல்.  இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங் எல்லாம் உறுத்தாமல் படத்திற்கு உதவி செய்திருக்கின்றன. படக்குழுவினருக்கு பாராட்டுகள்.

பார்க்கவேண்டிய, பகிர்ந்துகொள்ளவேண்டிய படம்.

****
'மாதவிடாய்'  - ஆவணப்படம்!

இது ஆண்களுக்கான பெண்களின் படம்!

படம் : 38 நிமிடங்கள்

இயக்கம் : கீதா இளங்கோவன்

விலை ரூ. 100

No comments:

Post a Comment