நகரத்தில் வாழும் ஒரு தம்பதி. சில நாட்கள் தலைமறைவாக இருக்கவேண்டும் என்கிற அளவுக்கு நெருக்கடி. தனக்கு தெரிந்த டாக்ஸி ஓட்டுனரின் கிராமத்திற்கு செல்கிறார்கள். சுற்றிலும் அடர்த்தியான கரும்புக்காடு. நடுவில் அந்த சிறிய வீடு. அந்த சூழலே பயப்படும்படி இருக்கிறது.
இதில் நாயகி நிறைமாத கர்ப்பமாக வேறு இருக்கிறார். அங்கு இருக்க பயப்படும் நாயகிக்கு ஓட்டுனரின் துணைவியார் ஒரு அம்மாவைப் போலவே பார்த்துக்கொள்வேன் என ஆறுதல் சொல்கிறார்.
அந்த அம்மா தன்னுடைய சொந்த மருமகளை மிகவும் மோசமாக நடத்துகிறார். இதில் நாயகிக்கும் அந்த அம்மாவுக்கும் விவாதம் வருகிறது. அங்கு மூன்று பையன்கள் கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள். ”அந்த பசங்க பக்கத்துல போகாதே!” என எச்சரிக்கிறார். ஏன் என்றால் சொல்ல மறுக்கிறார். மூன்று பசங்களும் ஏற்கனவே கிணற்றில் விழுந்து இறந்து போனவர்கள் என பின்னால் சொல்கிறார்கள்.
ஊருக்கு போய் திரும்பிய கணவனிடம் ”இனி இங்கு இருக்கவேண்டாம். கிளம்புவோம்” என அவசரப்படுத்துகிறார். அதற்கு பிறகு நடப்பது எல்லாம் ரணகளம்.
****
Lapachhapi என்றால் கண்ணாமூச்சி என்கிறார்கள். நமது இந்திய கிராமங்களின் மூடப்பழக்கவழக்கங்கள், மூட நம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை ’பேய்’ கதை மூலம் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.
கதையும், திரைக்கதையும் வலுவாக இருந்தால், சுற்றிலும் கரும்புக்காடு. நடுவில் ஒரு வீட்டை வைத்து கூட ஒரு நல்லப்படம் எடுக்கலாம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.
பொதுவாக கர்ப்பிணிகளை திரைப்படங்களில், குறிப்பாக இறுதிக்காட்சிகளில் எல்லாம் பாடாய் படுத்துவார்கள். ஆகையால் திரையில் கர்ப்பிணிகளைப் பார்த்தாலே கொஞ்சம் அலர்ஜி தான். இந்தப்படத்திலும் பார்க்க துவங்கும் பொழுது, அந்த எண்ணம் தான் மனதில் ஓடியது. ஆனால், படம் சொல்லும் செய்திக்கு அது அவசியம் என்பதை பிறகு உணர முடிந்தது.
படத்தில் நடித்த நாயகியும், அந்த வயதான அம்மாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் சில திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளும் பெற்றிருக்கிறது. படத்தின் வெற்றியில் இப்பொழுது இந்தியில் மீண்டும் எடுக்கிறார்கள்.
பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
- 28, நவம் 2020

No comments:
Post a Comment