January 13, 2022

Delhi Crime (2019) நிர்பயா வழக்கும், குற்றவாளிகளை தேடலும்!

 





ஒரு சீசன் 7 அத்தியாயங்கள்

”மத்திய அரசின் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு இடையே பெண்களுக்கு எதிரான வன்முறை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் . ஒவ்வொரு நாளும் 100 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன, கடந்த 2016-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 39 ஆயிரம் தாக்குதல்கள் நடந்துள்ளது. இது கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகம்.”

- செய்தி

*****
தலைநகரான தில்லியில் டிசம்பரின் ஒரு குளிர்கால இரவில், பிசியோதெரபி மாணவியான நிர்பயா, தன் ஆண் நண்பருடன் தெற்கு தில்லியில் அந்த தனியார் பேருந்தில் ஏறுகிறாள். அந்த வண்டியில் ஓட்டுநரோடு இன்னும் ஐந்து பேர் உடன் இருக்கிறார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு ஆறு பேராலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக டார்ச்சர் செய்யப்பட்டு, இருவரும் துணியே இல்லாமல், சாலையோரத்தில் தூக்கியெறியப்படுகிறார்கள். அவர்கள் மீது பேருந்தை ஏற்றி கொல்லப் பார்க்கிறார்கள். அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்.

மெல்ல மெல்ல தலைநகர் முழுவதும் செய்தி பரவுகிறது. பிறகு இந்தியா, உலகம் முழுவதும் இந்த அதிர்ச்சி செய்தி பரவுகிறது. போலீஸ் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறது. பலாத்காரத்தை செய்துவிட்டு, வெவ்வேறு திசைகளில், மாநிலங்களில் போய் ஒளிந்துகொள்கிறவர்களை தேட துவங்குகிறார்கள். பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஒவ்வொருவரையும் கைது செய்வது தான் படம்.

ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், கொல்ல முயல்வதும், கொல்லப்படுவதும் இந்தியாவில் நடக்கும் அரிதிலும் அரிதான நிகழ்வா? இல்லை. தொடர்ச்சியாய் இப்படி நடப்பதும் தலைநகர் தில்லியிலேயே இப்படி கொடூரமாய் நடந்ததும், ஏற்கனவே குமுறிக்கொண்டிருந்த தன் கோபத்தை மக்கள் மொத்தமாய் காட்டியதிலும் தான் இதன் முக்கியத்துவம் இருக்கிறது.

படத்தில் போலீஸ் வீட்டிற்கே செல்லாமல் கண் விழித்து விடிய விடிய வேலை செய்வது, ஸ்டேசனிலேயே தூங்கி எழுந்து, தொடர்ந்து வேலை செய்வது, அவர்களின் இயல்பான உடல் நோவுகள், அவர்களின் மனித நேயம், போலீஸ் என்பதால் தன் பெண்ணுக்கு வரன் கிடைக்காமல் சிரமப்படுவது, தில்லியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, போலீசின் எண்ணிக்கை இல்லாததது, அதற்குரிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் இருப்பது, யூனியன் பிரதேசம் என்பதால், ஒன்றிய அரசின் கையில் போலீசின் அதிகாரம் இருக்கிறது. அதனால், தில்லியின் முதல் அமைச்சர் போலீஸ் அதிகாரம் தன் கைக்கு வரவேண்டும் என உள்ளடி வேலைகளை செய்வதால் ஏற்படும் துயரம் என போலீசின் பல பிரச்சனைகளையும் சொல்லிவிட்டார்கள். இந்த சம்பவத்தில் தில்லி போலீசின் பெயர் மிக மோசமாக சாபம் கிடைத்துவிட்டது. தொலைந்த இடத்தில் தானே தேடமுடியும். அதனால், இழந்த பெயரை அந்த சம்பவத்தை வைத்தே விமோசனம் பெறுவதற்காக இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன? ஒரு போலீஸ் போகிற போக்கில் தன் சக போலீசிடம் சொல்கிறார். “இது ஒரு பொருளாதார பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட செக்டார் தான் நிறைய பணத்தை கொண்டு வருகிறார்கள். அவர்களைப் பார்த்து பணம் இல்லாதவர்களுக்கு கோபம் வருகிறது. அதனால் எடுத்துக்கொள்ள பார்க்கிறார்கள். அவர்களுக்கு இழப்பதற்கு ஏதும் இல்லை”. இந்த சம்பவத்தில் பெரும்பாலும் படிக்காதவர்கள், ஏதுமற்றவர்கள் அதனால் இப்படி பதில் சொல்கிறார். படித்த உயர்தட்டு இளைஞர்கள் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதில்லையா? படத்திலேயே “நல்ல வேளைக்கு இந்த கொடூரத்தை செஞ்சவங்க பெரிய இடத்து பிள்ளைகளா இல்லை!” ஒரு வசனம் வரும். அப்பொழுது இந்த பதில் பொருந்துமா? பொருந்தாது.

இங்கிலீஷில் “Tip of Iceberg” என்பார்கள். வெளியே தெரிவது ஒரு சின்ன முனை. அந்த முனையை பிடித்து கடலின் உள்ளே சென்றால் இமயமலையை விட பெரிய மலை இருக்கலாம் என்பார்கள். இந்த சம்பவமும் ஒரு சின்ன முனை தான். இங்கு நிலவும் பிற்போக்கு உற்பத்தி முறையும், அதனால் எழும் பிற்போக்கு சிந்தனையான ஆணாதிக்கத்தோடு சேர்ந்த பெண்களைப் பற்றிய சிந்தனை தான் அடிப்படை. ஒருவனை கைது செய்து அழைத்து, ஆற்றை கடக்கும் பொழுது, தப்பிப்பான். ”உங்க அம்மா கிட்ட சொல்லிருவேன்” என போலீஸ் கத்தும். உடனே சரணடைந்துவிடுவான். இன்னொரு குற்றவாளி “எங்கம்மாவிற்கு இன்னேரம் தெரிந்திருக்கும். அவர்கள் தற்கொலை செய்திருப்பார்கள்” என கையை அறுத்து தற்கொலைக்கு முயல்வான். அதெப்படி அம்மாவை தெய்வமாகவும், அம்மாவை போல ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ய முடிகிறது? அது வேறு டிப்பார்மெண்ட். இது வேறு டிப்பார்மெண்ட்.

ஒரு கொடூர பாலியல் சம்பவம். விளைவு அந்த பெண், மருத்துவர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு, சிங்கப்பூர் அழைத்து சென்றும் இறந்துவிடுவாள். ஒரு ஆள் சிறையில் இருக்கும் பொழுதேதற்கொலை (!) செய்துகொள்வான். ஒரு பையன் மைனர் என்பதால், அதிகப்பட்சம் தண்டனையான மூன்று ஆண்டுகளோடு தப்பித்துக்கொள்வான். மீதி நால்வருக்கு சட்டத்தில் உள்ள எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட்டு, தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது. அவ்வளவு தானா?

நாம் நம்மோடு வாழும் சக பெண்களை எப்படி கருதுகிறோம்? எப்படி நடத்துகிறோம்? என ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணமிது! இல்லையெனில் இன்னொரு நிர்பயா இப்பொழுது எங்கோ ஒரு மூலையில் நிர்கதியாய் போராடிக்கொண்டிருப்பாள்.

மற்றபடி, அந்த குற்றவாளியின் மனநிலையான அம்மாவை ”தெய்வமாகவும்”, மற்ற பெண்களை இழிவாகவும், வீட்டிற்குள் அடைத்து வைக்கிற மனநிலையுடன் இருக்கிற ஆட்களாகவும் இருக்கிற மனநிலை தான் இந்துத்துவ வெறியர்கள் தான் ஒன்றிய அரசிலும், சில மாநிலங்களின் ஆட்சியிலும் இருக்கிறார்கள்.  கடந்த ஏழு ஆண்டுகளில் முன்பை விட பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், பலாத்காரங்கள், தாக்குதல்கள் அதிரித்திருக்கின்றன.

மாநிலங்கள் வாரியாக சேகரித்து ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே அதனை நிரூபிக்கின்றன. இதில் பாஜகவின் ட்ரோல் படை பெண்கள் மீது சமூக வலைத்தளங்களில் நிகழ்த்துகிற தாக்குதல்கள் எல்லாம் இந்த பட்டியலில் விடுப்பட்டு போயிருக்கின்றன என நிச்சயமாய் சொல்லலாம்.

”இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவாகியுள்ளன, ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இது 2018 ஆம் ஆண்டைவிட  ஏழு சதவீதத்திற்கும் மேலானது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரம் காட்டுகிறது.

ஒரு லட்சம் பெண்கள் மக்கள் தொகையில் பதிவு செய்யப்பட்ட குற்ற விகிதம் 2019 ஆம் ஆண்டில் 62.4 சதவீதமாக உள்ளது, இது 2018 ஆம் ஆண்டின் 58.8 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,78,236 பதிவாகியுள்ளன. 2018 ஆம்

ஆண்டில், நாடு முழுவதும் 33,356 கற்பழிப்புகள் பதிவாகியுள்ளன, இது 2017 ஆம் ஆண்டில் 32,559 ஆக இருந்தது.

2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861  குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை 'கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை' (30.9 சதவீதம்), பெண்கள் மீதான தாக்குதல்' (21.8 சதவீதம்), பெண்கள் கடத்தல் (17.9 சதவீதம்).

பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளும் அதிகரித்து உள்ளன. 2018 ஆண்டடைவிட 2019ஆம் ஆண்டில்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளன.

2019 ஆம் ஆண்டில் குழந்தைகள் மீதான குற்றங்கள் மொத்தம் 1.48 லட்சம்  பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகள்

மற்றும் 35.3 சதவீத வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை.”

-    - மாலைமலர், 3/09/2020

No comments:

Post a Comment