January 29, 2022

Shyam Singha Roy (2021) தெலுங்கு



”ஒரு குறும்படம் எடுத்து காட்டு! உனக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு தருகிறேன்” என தயாரிப்பாளர் சொல்ல.. படம் இயக்கும் வாய்ப்பையும் பெற்று, படமும் வெற்றி பெறுகிறது. இந்தியில் அதேப் படத்தை எடுக்கும் வாய்ப்பு அடுத்து கிடைக்க… அந்த கதை சுட்டது என கைது (!) செய்யப்படுகிறார்.


நாயகன் எடுத்த அந்த கதையை முன்பே எழுதியது யார்? என கதை 1960களில் துவங்கி 1970 களில் படம் நகர்கிறது. சாம் சிங்கா ராய். மேற்கு வங்கத்தில் ஒரு பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவர். முற்போக்கான எழுத்தின் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என நம்புகிறார். அந்த கிராமத்தை விட்டு கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்துவிடவேண்டும் என முடிவெடுக்கும் பொழுது, நடனத்தில் சிறந்து விளங்கும் ”தேவதாசி” பெண்ணை கோயிலில் பார்க்கிறார். காதல் வயப்படுகிறார். தேவதாசிகளை தன் காம இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பார்ப்பானை நாயகி எதிர்க்க, கடுமையாக தாக்கப்படுகிறாள்.

அங்கு நடக்கும் மோதலில் அந்த பார்ப்பனனை கொன்று தீயில் பலியிடுகிறார். நாயகியை அழைத்துக்கொண்டு, கல்கத்தா நகருக்கு வருகிறார். பிறகு என்ன நடந்தது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

***

நானி, சாய் பல்லவி இருவருடைய காதல் பகுதி ரசிக்கும்படி இருந்தது. தங்கள் பாத்திரத்தில் அருமையாக பொருந்தியிருக்கிறார்கள். சாய் பல்லவியின் அந்த குழு நடனம் அசத்தலாக இருந்தது. படம் பரவலாக பேசப்படுகிறது.

கோயிலுக்கு சேவை செய்ய என்னும் போர்வையில், பெண்களை நிலபிரபுக்களும், அவர்களை அண்டிப்பிழைத்த பார்ப்பனர்களும் தங்களின் காம இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ச்சியாக போராடி, 1947லிலேயே தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதற்கு பிறகு நீடித்ததா என வரலாற்றின் பக்கங்களில் தேடிப்பார்க்கவேண்டும். ஆனால், வங்கத்தில் 1970களுக்கு பிறகும் தேவதாசி முறை நீடித்ததாக படம் பேசுகிறது. இயக்குநர் 1970 களில் இந்தியாவில் அரசியல் ரீதியாக கொந்தளிப்பான காலகட்டம். அந்த காலக்கட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைத்தாரா என தெரியவில்லை. ஒன்று வரலாற்று ரீதியான படமாக எடுத்திருக்கலாம் அல்லது சம கால படமாக எடுத்திருக்கலாம். இரண்டையும் இணைக்கிறேன் என எடுத்தது தான் இந்த காலக் குழப்பத்திற்கு காரணம் என நினைக்கிறேன்.

எல்லோரும் சொல்வது போல, கதையை சுட்டதற்காக எல்லாம் கைது வரை சென்றது எல்லாம் அதீதம். அதை நியாயப்படுத்த இராமர் கோவில் விசயத்தை எல்லாம் இழுத்தது இன்னும் அபத்தமாகப்பட்டது. நல்லவேளை வழக்கை திரும்ப பெற்றுவிட்டதால் தப்பித்தோம்.

நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.

படத்தின் இயக்குனருடைய புதிய தலைமுறை பேட்டி(யில் நான் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார்.)

https://www.puthiyathalaimurai.com/newsview/128095/shyam-singha-roy-director-rahul-sankrityan-exclusive-interview

No comments:

Post a Comment