September 13, 2023

The Hunt for Veerappan (2023)


வீரப்பன் குறித்தான பரபரப்பான வருடங்களில் நிகழ்ந்தவற்றை தொகுத்து ஒரு ஆவணப்படமாக தந்திருக்கிறார்கள்.


ஒரு யானையின் தந்தத்தை கூட விட்டு வைக்காதது, சந்தன மரங்களை டன் டன்னாக வெட்டியது, ஒரு முறை 60 டன்னுக்கும் மேலாக பிடித்திருக்கிறார்கள். வீரப்பனின் கூட்டாளிகளையும், உறவினர்களையும் போலீசு கொல்லுதல், வீரப்பன் பல போலீசுகளை கொல்லுதல்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல், பிறகு இரு மாநிலங்களிலும் பதட்டங்கள், பல நூறு போலீசு, பல கோடி செலவு, வெயில் காலத்தில் காட்டிற்குள் சொட்டுத் தண்ணீர் கிடைக்காத நிலை; பனிக்காலத்தில் மழையைப் போல பனிக்கொட்டி, குளிரில் நடுங்கும் நிலை, அவன் காட்டுக்குள் இருக்கும் வரை அவனைப் பிடிக்கமுடியாது என முடிவு செய்வது, அவனை வெளியே வரவழைப்பதற்கான முயற்சிகளை எடுத்து… பிறகு சுட்டுக் கொலை செய்வதோடு படம் நிறைவடைகிறது.

இந்த ஆவணப்படத்தில் சொன்னது ஒரு குறிப்பிட்ட பகுதி என்றால் சொல்லப்படாதது நிறைய என புரிந்துகொள்ளலாம்.


படத்தில் அரசு அதிகாரிகள் பலர் பேசுகிறார்கள். வீரப்பனின் கொள்ளையை, கொலைகளை பட்டியலிடுகிறார்கள். புத்திக்கூர்மையையும் புகழ்கிறார்கள். அவனைப் பிடிப்பதற்கு என்னென்ன திட்டங்கள் தீட்டினோம். எல்லாமே தோற்றுப்போயின என விரக்தியோடு பேசுகிறார்கள். வீரப்பனை தமிழ் தேசியம் பேசுகிற ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவனை அரசியல்படுத்த முயன்றதும் வருகிறது.

இதில் சொல்லப்படாத விசயங்களாக சில இருக்கின்றன.

வீரப்பன் கடத்திய யானைத் தந்தங்களை, சந்தன மரங்களை யார் கை மாற்றி கோடி கோடியாக சம்பாதித்தது, அரிசி, ராகி என உணவுப்பொருள்களை வீரப்பன் கும்பலிடம் சேர்ப்பதை கண்காணித்து தடுத்தவர்கள், இந்த கொள்ளையின் பின்னால் இருந்து யார் பலனடைந்தார்கள் என்பதை கண்டுப்பிடித்து கைது செய்தார்களா? அந்த செய்தி ஆவணப்படத்தில் இல்லை. அப்படி இல்லை என்றால் ஏன் இல்லை? அது முக்கியமானது இல்லையா!

வீரப்பனின் தேடுதல் வேட்டையில் அப்பாவி மக்கள் பல நூறு பேர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு அதிகாரி வீரப்பனால் கொலை செய்யப்படுகிறார். உடனே அந்த மேலதிகாரி வதை முகாமில் இருந்து ஆறோ, ஏழு பேரை கொண்டு வரச்சொல்லி அங்கேயே சுட்டுக்கொன்று தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக ஒரு அதிகாரியே மனம் வெதும்பி சொல்கிறார். பலர் வருடக்கணக்கில் சிறையில் இருந்தார்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன தீர்வு கிடைத்தது மக்கள் தரப்பில் ஏன் எந்த வாக்கு மூலத்தையும் இந்தப் படத்தில் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி வருகிறது.

அந்த காட்டையும் அந்த காட்டை ஒட்டிய மக்கள் வாழ்வும் மிகவும் வறிய நிலை. வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வீரப்பனின் உருவாக்கத்திற்கு அந்த பகுதியின் வறிய நிலை ஒரு முக்கிய காரணி இல்லையா? ”சந்தன மரத்தை வெட்டுவது சட்ட விரோதமா? அப்படியென்றால், பணக்காரர்கள் தங்கள் வீட்டில் சந்தன மரத்தில் கட்டில் செய்து கொள்கிறார்களே? அரசு வெட்டலாம். வாழ்வாதாரத்திற்கு நான் வெட்டினால் அது எப்படி கொள்ளையாகும்? என வீரப்பனே ஒரு இடத்தில் கேள்வி கேட்பது போல வருகிறது. வீரப்பனை விடுங்கள். அந்த பகுதி மக்களின் வாழ்வதாரத்திற்கு உரிய ஏற்பாடு செய்வது அரசின் கடமை இல்லையா?

படம் வீரப்பன் என்ற கொள்ளையனை பிடித்த ”சாதனை”யை ஒரு ஆவணப் படமாக மாற்றியிருக்கிறார்கள். மற்றபடி, அந்த காட்டை டிரோனில் நன்றாக படம் பிடித்திருக்கிறார்கள். ”Delhi Crime” என தில்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அரசு தரப்பு கண்ணோட்டத்தில் ஆவணப்படம் எடுத்தவர்கள் தான், இந்த ஆவணப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் வெளியாகியிருக்கிறது.

இந்த ஆவணப்படம் பார்த்த பொழுது, சிவில் அமைப்பில் மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் பாலமுருகன் எழுதிய ”சோளகர் தொட்டி” நினைவுக்கு வந்து போனது. அந்த புத்தகம் மக்களின் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இயக்குநர் வெற்றிமாறன் எடுத்த விடுதலை படத்தின் முதல் பாகத்தின் இடைவேளைக்கு பிறகு வீரப்பன் தேடுதல் வேட்டையில் மக்களை எப்படி வதைத்தார்கள் என்பதை தான் இணைத்திருந்தார் என பரலவாக பேசப்பட்டது.

நீங்கள் பார்த்தீர்களா? என்ன உணர்ந்தீர்கள்?

1 comment: