January 28, 2025

கல்யாண கலாட்டாக்கள்


நேற்று ஒரு திருமண வரவேற்பு போயிருந்தோம். மாலை ஆறு மணி என வழக்கம் போல குறிப்பிட்டிருந்தார்கள். நேற்று மழை வேறு தூவிக்கொண்டிருந்தது. பெரிய மழையாய் வருவதற்குள் போய்வந்துவிடலாம் என நானும் என் பெண்ணும் கிளம்பினோம்.

7.30க்கு நுழையும் பொழுது, சொற்பமான ஆட்கள் மட்டும் அந்த ஹாலில் இருந்தார்கள். உள்ளே ஒரு DJ பாடல்களை போட்டு அதிரவைத்து கொண்டிருந்தார். பாடல்களை கேட்கலாம் என நினைத்தால், அதிரும் இசையால் நெஞ்சு தடதடக்க ஆரம்பித்துவிட்டது. இனிமேல் இங்கு இருந்தால், நமக்கு சரிப்பட்டு வராது என வெளியே வந்துவிட்டோம்.

திருமண வீட்டினர் கொஞ்ச தூரம் ஒரு கோவிலில் ஏதோ சடங்கு செய்வதற்காக போயிருந்தனர்.

8 மணி வரை வெளியே இருந்துவிட்டு உள்ளே போனால், மணமக்களை காணவில்லை. பந்தி ஆரம்பித்துவிட்டது. போய் சாப்பிட்டு விட்டு வந்தாலும் இன்னும் வந்த பாடில்லை. காத்திருந்தோம்.

மணமக்கள் வருகிறார்கள் என ஒரு பெரிய பாதையை சேரை எல்லாம் எடுத்துப்போட்டு உருவாக்கினார்கள். மணமக்கள் உள்ளே நுழைய, திரையில் கனவு பாட்டுகளில் வருவது போல, ஒரு இளைஞர் வெள்ளைப் புகையை உருவாக்கினார். நான்கு இளம்பெண்கள் மணமக்களுக்கு முன்பு மலர்ந்து புன்னகைத்தப் படி ஒத்திசைவாக ஆடினார்கள். இரண்டு கேமராக்கள் கவனமாய் படம் பிடித்தார்கள். மேடையில் ஏறியதும், பரிசையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவிடலாம் என சிலர் மேடையில் வந்துவிட்டார்கள். எப்பா கிளம்பணும்பா! என ஒரு குடும்பஸ்தர் சத்தமாகவே சொன்னார்.

அந்த ஆட்டம் பாட்டம் இன்னும் முடியவில்லை என சொல்ல, அவர்களை எல்லாம் காத்திருக்க சொல்லி, இன்னும் பாடல்களைப் போட்டு ஆட துவங்கினார்கள்.

எங்களுடைய பகுதிக்காரர் ஒருவர் பரிசைத் தர முன்னாடி கொண்டிருந்தார். அவரிடம் எங்களுடைய புத்தகங்களையும் மணமக்களுக்கு கொடுத்துவிட சொல்லிவிட்டு, கிளம்பிவந்துவிட்டோம்.

பொதுவாக மணவீட்டார் வழக்கமான மரபு ரீதியான சில சடங்குகளை செய்கிறார்கள். நவீன டிரெண்ட் படி, மணமக்கள் தங்கள் பிரியத்திற்கு இப்படி ஆட்டம், பாட்டம் என ஏற்பாடு செய்கிறார்கள். செய்யட்டும். ஆனால் சடங்குகிற்கும், கொண்டாட்டத்திற்கும் எவ்வளவு நேரம் செலவாகும் என்பதை சரியாக கணக்கிடுவதில் தவறிழைக்கிறார்கள் என கருதுகிறேன். இறுதியில் கலந்துகொள்பவர்கள் தான் சிக்கலுக்குள்ளாகிறார்கள்.

அரங்கு நிறைந்த கூட்டம். ஆனால் மணமக்கள் மேடைக்கு வருவதற்கே 8.30க்கு தான் வந்தார்கள். மழை வேறு இருட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. இவங்க எப்ப முடிப்பாங்க? நாம எப்ப பரிசு கொடுத்து கிளம்புவது என கவலையோடு இருந்த மாதிரி தான் எனக்குப்பட்டது.

சமீபத்தில் ஹிருதயம் ஒரு மலையாள படம் பார்த்த பொழுது, மிகவும் நெருங்கிய சுற்றத்தாரை மட்டும் வரவழைத்து, வண்ண மயமாக ஒரு திரைப்பட காட்சி போல எடுத்து தருவதாக சொல்வார்கள். அதற்கு பெயர் intimate wedding. இனி வரும் காலங்களில் அப்படித்தான் நிலைமை ஆகிடும் போல!

இவ்வளவு நிறைய செலவுகளுடன் தடபுடலாக எடுக்கப்படக்கூடிய திருமண காணொளிகளை அதற்கு பிறகு எத்தனை முறை பார்ப்பார்கள்? சமீபத்தில் கூட இது குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டது.

இதில் பெரும்பாலோர் சொன்னது இது தான். எங்களுடைய திருமண வீடியோவை வாங்கிய உடனே (சரியாக எடுத்தார்களா என சரிப்பார்ப்பதற்கு) ஒருமுறைப் பார்த்தோம். அதற்கு பிறகு ஒருமுறை கூட பார்க்கவில்லை!

படம் : இணையத்தில் எடுத்தது!
Facebook

No comments:

Post a Comment