July 9, 2025

Sitaare Zameen Par (2025) இந்தி


தில்லியில் ஒரு கூடைப்பந்து உதவி பயிற்சியாளர். காதல் திருமணம் முடித்திருந்தாலும், அப்பா சின்ன வயதில் விட்டுப் போனதால், குழந்தைப் பெற்றுகொள்வதைத் தவிர்க்கிறார். துணைவியார் வலியுறுத்துவதால், தன் அம்மா வீட்டுக்கு வந்து இருக்கிறார்.

 

கோபத்தால், தனது மேலாதிகரியான முதன்மை பயிற்சியாளரை மைதானத்தில் வைத்தே அடித்துவிடுகிறார். தண்ணியைப் போட்டு, போலீசு வண்டியை இடித்ததில், நீதிமன்றத்தில் வந்து நிற்கும் பொழுது, அங்கும் எசகு பிசகாக பேச, அவருக்கு தண்டனைக்கு பதிலாக ஒரு வாய்ப்பாக அறிவுசார் சவால் உள்ள (intellectually challenged) நபர்களின் குழுவிற்கு மூன்று மாத காலம் பயிற்சி கொடுக்க உத்தரவிடப்படுகிறார்.

 

அந்த குழுவின் இயல்புகள் மீது ஒரு ஒவ்வாமை இருந்தாலும், அவர்களின் பலங்களையும் மெல்ல மெல்ல புரிந்துகொள்கிறார். அவர்களோடு ஒன்றத் துவங்குகிறார். அதற்கு பிறகு அந்தக் குழு போட்டிகளில் வெல்லத் துவங்குகிறது. 

 

அதில் உள்ள சவால்கள் என்ன? அவர்களிடமிருந்து பெற்றது என்ன என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***



Champions என ஒரு ஸ்பானிஷ் மொழியில் 2008ல் ஒரு படம். அந்தக் கதையை வாங்கி, இங்குள்ள நிலைமைக்கு சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் தேடி, இன்னும் சில காட்சிகளை மெருகேற்றியிருக்கலாம் என எனக்குப் பட்டது. இறுதிக் காட்சி நெகிழ்ச்சியானது.

 

ஒரு பெரிய நாயகன் என்ற பிம்பத்தை முன்நிறுத்தாமல், கதைக்கு தேவைப்படுகிற நாயகனாக மட்டும் அடக்கி வாசித்திருக்கிறார் அமீர். ”நான் ஒண்ணும் குள்ளம் இல்லை. சராசரி உயரம் தான்” என வாதாடுகிறார்.

 

கொஞ்சம் லூசான பாத்திரங்களாக செய்திருந்த ஜெனிலியா, நிதானமான நாயகியாக வருகிறார். மகிழ்ச்சி.

 

மற்றபடி இந்தப் படத்தின் நாயகர்கள் அந்தக் குழு தான்அவர்களின் இயல்பான வாழ்வில் உள்ள அம்சங்களையும் காண்பித்தது நன்றாக இருந்தது. படத்தைக் காப்பாற்றுவது அவர்கள் தான்.  சரசாரி இயல்பு கொண்ட உள்ள மனிதர்களே இங்கு வாழ்வதற்கு அத்தனை சிரமப்படும் பொழுது, இப்படி சிறப்பியல்புகள் கொண்ட மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பெரிய யோசனையாக இருக்கிறது. அவர்களின் குடும்பங்களும், கரிசனத்துடன் அணுகக்கூடிய சக மனிதர்களும் இருக்கிறார்கள் என படத்தில் சொல்லப்படுவது பெரிய ஆறுதல்.

 

பிரசன்னா இயக்கியிருக்கிறார். இசை ஷங்கர் - எஷான் – லாய். பாடல்கள் சிறப்பு.

 

அரைத்த கதைகளையே அரைக்காமல், இப்படி சில சிறப்பான பேசப்படாத, அவசியம் பேசவேண்டிய சிலருடைய வாழ்க்கையின் பகுதியையும் எடுப்பது எப்பொழுதுமே சிறப்பு.

 

திரையரங்குகளில் ஓடிய பொழுது பார்த்தேன். தமிழ் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். விரைவில் ஓடிடிக்கு வரும். பாருங்கள்.

No comments:

Post a Comment