> குருத்து: திரைப்படம்
Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

May 25, 2026

To catch the Killer (2023) ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர்


 

அமெரிக்காவின் ஒரு பரபரப்பான பெருநகரம்.  பப்புகளிலும், ஹோட்டல்களின் உச்சிகளில் நடனமும், களிப்புமாக இருக்கின்றன.  திடீரென எங்கிருந்து சுடுகிறார்கள் என தெரியாமலேயே, ஆங்காங்கே சுடப்பட்டு செத்து, செத்து கீழே விழுகிறார்கள். மக்கள் பதறிப்போய் அங்கிருந்து வேகவேகமாய் நகர்கிறார்கள். எங்கிருந்து சுட்டார்களே அந்த இடம் வெடித்து சிதறுகிறது.  எந்த தடயமும் கிடைக்கவில்லை.

 

நாயகி போலீசாக இருக்கிறார்.  அங்கு பார்க்கும் காட்சி கொடூரமாய் இருக்கிறது. FBI வருகிறது. துப்புத் துலக்க ஆரம்பிக்கிறது.  போலீசுகளின் மத்தியில் அதன் முக்கிய அதிகாரி  இது குறித்து பேசுகிறார். யாராவது கருத்து இருந்தாலும் சொல்லுங்கள் என்கிறார்.  நாயகி தன் சக அதிகாரியிடம் “சுட்டவன்  கொசுக்களை சுடுவதாக சுட்டிருக்கிறான்.  அவன் சுட நினைத்திருந்தால், இன்னும் பலரை சுட்டிருக்கலாம்.   அவனுக்கு பசி அடங்கியிருக்கிறது” என்கிறார்.   இதை எதைச்சையாக கேட்ட FBI அதிகாரி நாயகியை தன் குழுவில் சேர்த்துக்கொள்கிறார்.

 

கொலைகாரன் ஒரு மாலில் வேறு ஒருவரின் துணியை எடுத்துக்கொண்டு விட, சம்பந்தட்ட்டவர் புகார் கொடுக்கிறார். அங்குள்ள பாத்ரூம் வாஷ் பேசினில், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, சாப்பிட்ட தட்டுகளில் இருந்து ஏதாவது கிடைக்குமா என தேடிக்கொண்டு இருக்கும் பொழுது,  இரண்டு போலீசு வர, களேபரமாகி மீண்டும் சுடத் துவங்குகிறான்.

 

இந்த இரண்டு மாஸ் கொலைகளும் மக்கள் மத்தியில் பதட்டமாக்க, அரசுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என நகர்கிறது.  அதிகாரிக்கும், நாயகி குழுவிற்கும் அழுத்தம் அதிகமாகிறது.

 

அந்த கொலைகாரன் எதற்காக கொலைகள் செய்தான்? அவனை கைது செய்தார்களா? என்ன நடந்தது என்பதை மீதிக்கதையில் பரபரப்பாய் சொல்லியிருக்கிறார்கள்.

 

இந்தப் படம் போலீசு கொலைகாரன் படம் மட்டும் இருந்திருந்தால், ஒரு வழக்கமான படமாக இருந்திருக்கும்.   அமெரிக்காவின் பள்ளிகளில், பொதுவெளிகளில், மால்களில் என அவ்வப்பொழுது யாராவது துப்பாக்கியை தூக்கி வந்து, பலரை சுட்டுக்கொன்றுவிடுவது நடைபெறுகிறது.

 

மனம் பிறழ்ந்தவன் என்றோ, தீவிரவாதி என்றோ கதை எழுதி சட்டென அந்த பைலை மூடிவிடுகிறார்கள்.   அமெரிக்காவில் துப்பாக்கி எளிதாக கிடைக்கிறது என்பது தான் பிரச்சனை என்கிறார்கள். உளவியல் சார்ந்தும் சிக்கல்கள் இருக்கின்றன ஒரு சாரர் பேசுகிறார்கள்.

 

படம் உளவியல் சார்ந்து பேசியது தான் முக்கியம். இதில் நாயகி இளவயதில் வேறு வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு, உடைந்து போய் இருந்தாலும், அதனால் கடுமையான வெறுப்புக்குள்ளாகிவிடாமல், இன்னும் நம்மை சரி செய்துகொள்ளமுடியும். மனிதர்களோடு இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை நாயகிக்கு இருக்கிறது. இதில் சுடுகிறவன்  அந்த கோபத்தை வெளியே காண்பிக்கிறான் என புரிந்துகொள்கிறாள்.

 

மனிதர்கள் மட்டும் உடைந்து போகவில்லை.  ஒரு பக்கம் கொலைகள்.  இன்னொரு பக்கம் ஊடகம், மேலிருந்து அழுத்தம்.  ஆகையால் போலீசு செயற்கையாக ஒரு ஆளை போட்டுத்தள்ளும் இடம் இருக்கிறதே! இந்த சிஸ்டமும் உடைந்து தான் போயிருக்கிறது என்பதை சொல்கிறது.

 

உள்ளுக்குள் உடைந்து போய், தொடர்ந்து விமர்சனம் செய்வதை தாங்கிக்கொண்டு இருக்கும் அந்த பாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார் நாயகி  Shailene Woodley.  Divergent சீரிசில் இவரைப் பார்த்திருக்கிறேன்.   அந்த அதிகாரியும் சிறப்பு.

May 18, 2026

நடிகை பார்வதி – இயக்குநர் சசி

 

a

ஒரு நல்ல கதை என்றால் தனக்கு தேவையான எல்லாவற்றையும் அதுவே அடைந்துவிடும் என சொல்வார்கள். அது போல பூ படத்தின் கதைக்கு மிகப் பொருத்தமான ஆளாக நடிகை பார்வதி கிடைத்தார்.  ஒரு மலையாளப் படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்திருந்தார்.   அந்த ஆல்பத்தை பார்த்து முடிவு செய்தேன்.

 

சம்பளம் பேசும் பொழுது, தயாரிப்பு தரப்பில் பேசச் சென்றவர், “எங்க இயக்குநர் தான் உங்களை தமிழில் அறிமுகப்படுத்துகிறார்!” என பேசியிருக்கிறார்.  “நீங்க இந்த பாத்திரத்திற்கு ஒரு ஆடிசன் நடத்தினீர்கள். நான் கலந்துகொண்டேன்.  இப்பொழுது பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதால் என்னை தேர்வு செய்கிறீர்கள்!” என பதில் அளித்துள்ளார். எனக்கு போன் செய்து, நடந்ததை சொல்லி, கொஞ்சம் கூடுதலாக சொல்லி சிக்கல் செய்ய வாய்ப்பிருக்கு சார் என்றார்.

 

திட்டமிட்ட மாதங்களை விட கூடுதலாக படப்பிடிப்பு கடந்து போய்க்கொண்டிருந்தது.  அடுத்தப் படத்திற்கு கிளம்பி வா! என பார்வதியை வீட்டில் இருந்து தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.  நான் அந்த பெண்ணின் சிக்கலைப் புரிந்துகொண்டு, படப்பிடிப்பும் தொடர்ந்து இருப்பதால்,  பேசிய பணத்தை விட  கூடுதலாக ஒரு லட்சத்திற்கு ஒரு காசோலை தந்து, வீட்டில் கொடுத்துவிடுங்கள்! என கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சென்றவர், ஒரு அரை மணி நேரம் கழித்து வந்து, “என் முகத்தை கண்ணாடியில் என்னாலேயே பார்க்க முடியவில்லை சார்! மாரியாக (பாத்திரத்தின் பெயர்) நடிக்க வந்து, இப்பொழுது கூடுதலாக ஒரு லட்சம் கொடுத்தால் தான் நடிப்பேன் என சொல்வது நியாயமே இல்லை! என தோன்றியது. அம்மாவிடம் கொடுத்துவிட்டேன் என சொல்லிவிடுங்கள். நான் ஊருக்கு போய் பேசிக்கொள்கிறேன்” என சொன்னார். இதைச் சொன்ன பொழுது, அந்த பெண்ணுக்கு வயது 20 தான்.  முதல் படம் வேறு. மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு பணத் தேவையும் அந்த பெண்ணுக்கு இருந்தது.

 

இப்பொழுதும் ஒரு படம் நடித்தால், அதை முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்தப்படம் நடிக்கிறார். அர்ப்பணிப்பு உள்ள நடிகை.

 

-         -  சித்ரா லெட்சுமணனுக்கு கொடுத்த நீண்ட பேட்டியிலிருந்து…. 

May 3, 2026

Big bad wolves (2013) – இஸ்ரேலிய திரைப்படம் Horror Thriller movie

 


பள்ளி செல்லும் மூன்று சிறுமிகள் மூவர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தீடீரென ஒரு சிறுமி காணாமல் போகிறாள். தலைவெட்டப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு உடல் மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.   யூதர்களை பொறுத்தவரையில் முறையாக முழுமையாக உடல் அடக்கம் செய்யப்படவேண்டும். இல்லையெனில் அதை பெரிய சிக்கலாக கருதுகிறார்கள்.

 

ஒரு அதிகாரி ஒரு ஆண் ஆசிரியரை   சந்தேகித்து போலீசு தன் ஆட்களை இருவரை வைத்து அடித்து உதைத்து “உண்மையை” கக்க வைக்க முயற்சி செய்கிறார்.  ஆனால், அந்த காட்சிகள் மக்கள் மத்தியில் வைரலாகிறது.

 

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வேலை பறிபோகிறது. ஆனால் அந்த ஆசிரியரை பள்ளியில் மாணவர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அவருடைய வேலையும் சிக்கலாகிறது.

 

வேலை இழந்த அதிகாரி அந்த ஆசிரியரை கடத்தி வந்து ”உண்மையை” வரவழைத்து வேலையை காப்பாற்றிக்கொள்ளலாம் என திட்டமிடுகிறார். அதே வேளையில் அந்த பெண்ணின் அப்பா அந்த ஆசிரியர் மீது கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்.

 

அதற்கு பிறகு நடப்பதெல்லாம் களேபரம் தான்.

****

 


படத்தின் இறுதியில் எதையும் பளிச்சென சொல்லாமல், பார்வையாளர்களே சிந்திக்கட்டும் என இயக்குநர் விட்டுவிடுகிறார்.

 

எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த போலீசு அந்த ஆசிரியரை சந்தேகிக்கிறது என்பதை கடைசி வரை சொல்லமாட்டார்கள். அந்த ஆசிரியரும் கடைசி வரை தான் குற்றம் செய்யவில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார்.

 

ஆதாரங்களின் அடிப்படையில் முறையாக சட்ட விசாரணை நடைபெறாமல், கொலைவெறியோடு முன்முடிவோடு “விசாரணை” செய்வது எவ்வளவு பெரிய கொடூரம் என்பதைத் தான் படம் சொல்கிறது.

 

படத்தில் குதிரையில் ஒருவர் சுற்றிக்கொண்டிருப்பார்.  ஓரிடத்தில் கேட்பார். அரேபியன் என்றாலே ஏன் கொலை செய்ய போகிறவர் என்றே பார்க்கிறீர்கள்? என்பார். அப்பொழுது தான் இது இசுரேலிய படம் என்பது நினைவுக்கு வருகிறது.

 

இந்தப் படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இரண்டு இயக்குநர்கள் எழுதி, இயக்கியுள்ளனர்.

 

எந்த ஓடிடியிலும் இல்லை. யூடியூப்பில் இருக்கிறது. அதன் சப்டைட்டில் செட்டிங்க்ஸ்ல் கொஞ்சம் மாற்றினால் தமிழிலேயே கிடைக்கிறது. பாருங்கள்.

April 27, 2026

The Shadow’s Edge (2025) ஜாக்கிசானின் அருமையான சீன ஆக்சன் திரில்லர்

 


வில்லனின் வளர்ப்பு மகன்களாகிய இளைஞர்கள் ஒவ்வொன்றிலும் திறன் கொண்டவர்கள். அவர்களை கொண்டு, சாத்தியமில்லாத கொள்ளையை திறம்பட செய்கிறார்.   போலீசுக்கு பெரிய அழுத்தமாகிறது.

 

ஓய்வு பெற்று வாழும் நாயகனை போலீசு துறை மீண்டும் அழைக்கிறது.  அவர் நவீன வசதிகள் கொண்டது இல்லாமல், பழைய முறையில் ஒரு படையை உருவாக்குகிறார்.    அடுத்த கொள்ளைக்காக காத்திருக்கிறார்.

 

இதில் வளர்ப்பு மகன்களுக்கும், வில்லனுக்கும் ஒரு உள்ளுக்குள் முரண்பாடு வருகிறது.  அவர்களுக்குள் சிக்கலாகிறது.

 

நாயகன் அந்த கும்பலின் தலைவனுக்கு  வலை விரிக்கிறார்.  பிடித்தாரா? என்பதை விறு விறுப்பான காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

 

***

 


ஜாக்கிசானின் கடந்த பத்து ஆண்டு வரலாற்றில், இப்படி துவக்கம் முதல் இறுதி வரை ஒரு பரபர ஆக்சன் படம் பார்த்து நாட்களாயிற்று.   அருமையான படம்.

 

என் 20களில் சாகச சண்டையுடன், நகைச்சுவையும் கலந்து மகிழ்வித்த ஜாக்கிசான் இப்பொழுது அவருடைய எழுபதுகளிலும் மகிழ்விக்கிறார்.  சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல்  அவரே நடிக்கிறார். அடிபடுகிறார்.  இறுதி காட்சிகளில் காண்பிக்கிறார்கள்.

 

Eye in the sky (Surveillance என அர்த்தம்)  ஒரு தென்கொரிய படம்  அந்த படத்தை அடிப்படையாக கொண்டு, இன்னும் செழுமைப்படுத்தி, ஆக்சன் காட்சிகளை அதகளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

 

ஆக்சன் ரசிகர்கள், ஜாக்கிசான் ரசிகர்கள் அவசியம் பாருங்கள். ஆங்கிலத்தில் சப் டைட்டிலுடன் பார்த்தேன். இப்போதைக்கு  எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வகைகளில் முயலுங்கள். 

April 23, 2026

முத்து என்கிற காட்டான் (2026) வலைத்தொடர்

 


மதுரை மாவட்டத்தின் கிராமத்தில் உள்ள ஸ்டேசனில் மூன்று ஆண்டுகளாக வழக்குகள் ஏதும் பதியவில்லை என்பதால்,  தூக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.  இந்த சமயத்தில் எல்லைப் புறத்தில் ஒரு வெட்டப்பட்ட தலை மட்டும் கிடைக்கிறது.

 

மெல்ல மெல்ல நூல் பிடித்து நகரும் விசாரணையில், முத்து என்பவரின் தலை தான் என கண்டுபிடிக்கிறார்கள்.  ஊர் ஊராக பயணித்திருக்கிறார். ஒரு நடனக்குழுவோடு இருந்திருக்கிறார். பிறகு கேரளாவில் ஒரு டிரஸ்டில் வேலை செய்திருக்கிறார்.

 

பிறகு இந்த கொலை எதற்காக என்பதை கண்டறியும் பொழுது ஆச்சரியப்படுகிறார்கள்.

 

*****

 


அத்தனை சுவாரசியமில்லை என இரண்டு பேர் சொன்னதை கேட்டும், இந்த தொடரை பார்த்ததற்கு இரண்டு பேர் தான் காரணம். முதலில் இயக்குநர் மணிகண்டன் (இணைந்து அஜித்குமாரும்). இரண்டாவது விஜய் சேதுபதி.

 

முத்து ஊர் ஊராக சுற்றியதற்கான மூல காரணம் என சொல்லப்படுவது எல்லாம் அத்தனை அழுத்தமாகவும், தெளிவாகவும் சொல்லப்படவில்லை.  அதனால் எல்லாமும் பலவீனமாய் தெரிகிறது. மிகவும் மெதுவாக போகிறது என்பதெல்லாம் காரணம் ஒருபக்கம். திரைக்கதையே மிகவும் பலவீனம். அது தான் காரணம்.

 

ஓடிடி வெளியீடு என்பதால்,  கேரளாவிற்கும் கதை செல்கிறது. இன்னும் கொஞ்சம் ஜியோ அழுத்தம் கொடுத்திருந்தால், ஆந்திரா, கர்நாடகாவிலும் கூட முத்துவை சுத்த விட்டிருப்பார்கள் போல!

 

படத்தில் கொஞ்சும் சுறுசுறுப்பான காட்சிகளை எல்லாம் தொகுத்து டிரைலராய் மாற்றியிருக்கிறார்கள்.  அதைப் பார்த்துவிட்டு தொடரை பார்ப்பதற்கு மிகவும் ஏமாற்றமாய் தான் நிச்சயம் இருக்கும்.

 

மற்றபடி நடிகர்கள் அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஜியோ ஹாட் ஸ்டாரில் இருக்கிறது. நேரம் நிறைய இருப்பவர்கள் முயலலாம்.

Pretty Lethal (2026) Action Thriller

 


“பாலே என்பது உடலால் மட்டும் ஆடப்படுவது அல்ல; மனதாலும் ஆடப்படுவது.”

****

 

அமெரிக்காவைச் சேர்ந்த பாலே நடனம் ஆடும் பெண்கள் குழு ஒன்று. அந்த குழுவில் ஒருவர் மேட்டுக்குடி சீமாட்டி,  ஒருவர் ஏழ்மை நிலைமையில், ஒருவர் காது கேளாத, வாய் பேச முடியாதவர் என ஐந்து பெண்களும்  வெவ்வேறு குணநலன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் குழுவில் ஒத்திசைவு கூட சிக்கலாக இருக்கிறது.

 

ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் ஒரு சர்வதேச ஒரு போட்டிக்கு அழைக்கப்படுகிறார்கள். தங்கள் ஆசிரியருடன்  போய் ஹங்கேரியை அடைகிறார்கள். அடுத்த நாள் போட்டி நாள்.

 

ஒரு அடர்ந்த காட்டை கடப்பதற்காக செல்லும் வேன் பழுதடைய, போட்டிக்கு தாமதமாகிறது என  நடந்தே அருகில் உள்ள ஒரு விடுதிக்குள் நுழைகிறார்கள். (சுற்றிலும் காடு – நடுவே விடுதி). ஒரு பெரிய கும்பல் பாரில் தண்ணியடித்தும், சூதாடிக்கொண்டும் இருக்கிறார்கள்..

 

ஒரு முன்னாள் பாலே நடனக்காரியான விடுதியின் பெண் முதலாளி அவர்களை வரவேற்கிறார்.  அங்கு மாமூலை வாங்க வந்திருக்கும் ஒரு மாபியா கும்பலின் மகன் அந்த குழுவின் ஆசிரியை சீண்ட, அந்த அம்மா கடுப்பில் அவனை உதைக்க அவன் சுட்டு கொன்றுவிடுகிறான்.

 

நிலைமை மோசமடைகிறது. இந்த செய்தி வெளியில் இருந்தால், நிலைமை சிக்கலாகும் என அவர்கள் இங்கு வரவேயில்லை எல்லாவற்றையும் மறைக்க முயல்கிறார்கள்.   படம் துவங்கி 20 நிமிடங்களில் இதையெல்லாம் சொல்லிவிடுகிறார்கள்.

 

மாபியா கும்பலிடம்  மிக மோசமாக சிக்கிக்கொண்ட அந்த பாலே நடன பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா என்பது தான் முழு நீள சண்டைக் கதை.

 

****


பாலே நடனம் என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிக கடுமையான பயிற்சி கொண்டது.  கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டவர்களால் தான் முழுமையான கட்டுப்பாட்டுடன் மேடையில் நடனமுடியும் என்கிறார்கள்.

 

அந்த பயிற்சியை கொண்டு நம் நம்மை காப்பாற்றிக்கொள்வோம் என போராடுகிறார்கள்.  பாலே நடன சண்டைக் காட்சி நன்றாகவும் படத்தில் வேலை செய்திருக்கிறது.

 

ஐந்து பெண்களும் ஐந்து விதமான குண நலன்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் தான் மொத்த படத்தையும் தாங்குகிறார்கள்.

 

மொத்தப் படம் 88 நிமிடங்கள் தான். சண்டைப் பிரியர்களுக்கு பிடிக்கும்.  அமேசானில் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது.

 

April 19, 2026

சம்பவம் அத்தியாயம் ஒண்ணு (2026) Time Looping Movie


நாயகனான போலீஸ் அதிகாரி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாரிடம் சொல்லிவிட்டு, புதிய இடத்திற்கு பணிக்கு வந்து சேர்கிறார்.  அது ஒரு காட்டுப் பகுதி. போகிற பாதையில் ஒரு போலீசு அதிகாரி ஜீப்பில் அடிபடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

 

அடிப்பட்ட போலீசிடம் ஒரு வாக்கி டாக்கி இருக்கிறது.  அதில், கைதிகளை அழைத்துக் கொண்டு, செல்லும் பொழுது, கைதிகள் தப்பியதாகவும், அவர்களை பிடிக்க  காட்டிற்குள் வந்ததாகவும், தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால், தன்னால் நகர முடியவில்லை. ஆகையால் தன்னைக் காப்பாற்றும்படி அழைக்கிறார்.

 

நாயகனுடன் ஒரு மேலாதிகாரியும், ஒரு போலீசும் உள்ளே செல்கிறார்கள்.  ஆனால் அவரை கண்டுப்பிடிப்பது மிக சிரமமாக இருக்கிறது. அந்த காடு குறித்தான செய்திகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.  உள்ளே சென்றபவர்கள் யாரும் மீண்டும் திரும்பியதில்லை என்றும் சொல்கிறார்கள்.

 

அதற்கேற்றபடி, அங்கு நடக்கும் சம்பவங்கள், திரும்ப திரும்ப நடக்கின்றன.  வேறு காலத்தை சேர்ந்தவர்கள் காட்டில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மோதலிலும் மண்ணில் ரத்தம் சிந்தும் பொழுது  அங்கு நடக்கும் காட்சிகள் மாறுகின்றன.

 

இறுதியில் என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

***


 

இதே இயக்குநர் இந்த தளத்தில் ஒரு குறும்படம் ஒன்றை எடுத்து, அதை இப்பொழுது முழு நீளப்படமாக மாற்றியிருக்கிறார்கள். படத்தில்  இரண்டாம் பாகத்திற்கும் அடி போட்டிருக்கிறார்கள்.

 

ஆங்கிலத்தில் இந்த வகையான படங்கள், வலைத் தொடர்கள் நிறைய வந்திருக்கின்றன. தமிழில் சிம்புவின் ”மாநாடு” வந்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் சேரும்.  மலையாளத்தில் இப்பொழுது வந்திருப்பதால், மக்களுக்கு புரியுமா என்ற சந்தேகத்தில் ஆங்காங்கே விளக்கம் கொடுக்கிறார்கள். அது உண்மை தான். இந்த மாதிரி படங்களை பார்த்திராதவர்களுக்கு குழப்பங்கள் உருவாவது சகஜம். ஏற்கனவே இந்த மாதிரி படங்களை நிறைய பார்த்திருப்பதால் எனக்கு பெரிய ஆச்சர்யம் தரவில்லை.

 

ஜித்து சதீசன் இயக்குநருக்கு முதல் படம் என்பதால் அதற்கேற்ப இயல்புகளுடன் தான் படம் இருக்கிறது. கேரளத்தில் ஓரளவு ஓடியிருக்கிறது.

 

நாயகனின் அப்பாவை நாயகன் பார்த்ததேயில்லை.  படத்தில் ஒரு இடத்தில் பார்க்கிறார்.  இருவரிடமே கொஞ்சம் கூட ரியாக்சனே இல்லை. சில காட்சிகளுக்கு பிறகு, அவரை வழியனுப்பும் பொழுது, “அப்பா இல்லாம வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என சன்னமான குரலில் சொல்கிறார். அவ்வளவு தான்.  காட்டுக்குள்ளேயே பெரும்பாலான படம் என்பதால், பசுமையாக இருக்கிறது.

 

ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருக்கிறது.  இந்த மாதிரி படங்களை ஆர்வமாக பார்ப்பவர்கள் பாருங்கள். மற்றவர்களுக்கு பிடிக்குமா? தெரியவில்லை.

 

April 10, 2026

Bou Buttu Bhuta (2025) Odia Horror movie

 


ஒரிசாவின் ஒதுக்குப்புறமான ஒரு கிராமம். ஊரில் யாருக்கு பேய் பிடித்தாலும், அந்த வயதான அம்மாவிடம் அழைத்து வருகிறார்கள். அந்த அம்மாவும் பேயை விரட்டுகிறார். கொடுக்கும் சொற்ப பணத்தை கொண்டு தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

 

(நாயகனான) மகன் -  ஊரில் குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கிடைக்கும் சொற்பமான மீன்களை ஊரில் விற்று வருகிறார்.  ஊரில் ஒரு மருத்துவரின் மகளோடு காதல் வயப்படுகிறார்.  துபாய்க்கு போய்விடலாமா என்றால், அதற்கும் ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறது.

 

ஒரு இரவு நண்பனுடன் ஊர் திரும்பும் பொழுது, பைக் சாவி தொலைந்து போனது என ஒரு பெரிய மரத்தில் ஆணியடித்து  இருந்ததை தற்செயலாக புடுங்க, அவனுக்குள் ஒரு ஆவி உள்ளே புகுந்துவிடுகிறது.

 

அந்த ஆவி பக்கத்து ஊரில் ஒரு பெரிய மனிதரின் மகளை ஒரு ஏழை காதலித்தான் என்பதற்காக, பெண்ணை அப்பனே கொ*ன்று அந்த பழியை அவன் மீது போட்டு, ஒரு பெரிய கும்பல் கொடூ*ரமாக அடித்தே கொ*ன்று விடுகிறது.  அந்த ஆவி எப்ப இவர்களை போ*ட்டுத்தள்ளலாம் என வெ*றியுடன் காத்திருக்கிறது.

 

பிறகு நடப்பது எல்லாம் களேபரம் தான். திடீர் திடீரென ஆடுகள் காணாமல் போகின்றன. கொலைகள் நடக்கின்றன. அந்த அம்மா தன் மகனை ஆவியிடமிருந்து  காப்பாற்ற போராடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

***

 

யாரோ இருவர் இந்த படத்தை ஆஹோ ஓஹோ என எழுதியன் என் கண்ணில் பட இந்த படத்தை தேடி பிடித்து வைத்திருந்தேன். IMDB யிலும் 7.8 யாக இருந்தது. ஆனால் குறைவான ஆட்கள் தான் வாக்களித்திருக்கிறார்கள்.

 

நம் தமிழ் உலகில் இது மாதிரி படங்களை எடுத்து, எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டோம். அவர்கள் இப்பொழுது தத்தி, தவழ்ந்து வருகிறார்கள்.

 

அங்கு இந்த படம் ஓரளவு நல்ல வசூலாகியிருக்கிறது.  நாயகன், நாயகி பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால்  அந்த நாயகனின் அம்மா ஈர்த்தார். பேய் பிடித்தவரிடம் சமயோசிதமாக நடந்துகொள்வது.  பேய் உள்ளே புகுந்ததாய்,  வீட்டாரை ஆட்டி வைப்பது என நன்றாக செய்திருந்தார்.  மகனை ஏதோ செய்யப்போகிறான் என (அவனும் பேய் ஓட்டுபவன் தான்) கணவனையே தூக்கி மரத்தில் தொங்கவிடுவது எல்லாம்… “வேற லெவல்”

 

யாரும் ஆர்வமாக தேடிப் போய் பார்த்து என்னைத் திட்டாதீர்கள். 

The Day of Jackal (2024) வலைத் தொடர் Spy Crime Thriller


நாயகன் பிரிட்டிஷ் படையில் தூரத்தில் இருந்து துப்பாக்கி சுடுவதில் கை தேர்ந்த ஆள். போர்க்களத்தின் நிலைமையில் கொஞ்சம் மனம் நொந்து, அங்கு ஒரு சம்பவத்தை செய்துவிட்டு, தான் செத்துப் போனதாக தலைமறைவான ஆள்.

 

தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ்கிறான். முக்கிய புள்ளி யாரையாவது போட சொன்னால், திட்டமிட்டு, நேர்த்தியாக செய்துவிடுகிறான். மனைவி, மகனுடன் வாழ்ந்து வருகிறான்.

 

ஒரு ஆளை தூக்க சொல்லி உத்தரவு வருகிறது. கவனமாக செய்துவிடுகிறான். ஆனால் பேசிய பணத்தில் மீதியை தர மறுக்கிறான். அவனை கண்டுபிடித்து போட்டுவிடுகிறான்.

 

மனைவிக்கு  தன் கணவன் அடிக்கடி வெளிநாடு செல்கிறான். என்ன வேலை செய்கிறான்? என்பதில் மனைவிக்கு மட்டுமல்ல அவளின் குடும்பத்துக்கே கவலை வருகிறது. இது அவனுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது.

 

ஒரு பெரிய வேலை. பெரிய பணம். இனி இதிலிருந்து மொத்தமாக விலகி நிம்மதியாக வாழலாம் என ஒப்புக்கொள்கிறான். அவனைத் தேடும் பிரிட்டிஷ் போலீஷ் ஒரு பக்கம் அவனை தேடுகிறது.  பெரிய வேலை என்பதால், அதில் சிக்கல்களும் பூதமாய் வெளிவருகின்றன

 

பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

***

 


1970 களில் இந்த தலைப்பில் ஒரு நாவல் எழுதி, அது படமாக்கப்பட்டு பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறது.  அதை மீண்டும் வெப் சீரிஸாக எடுத்திருக்கிறார்கள்.   முதல் படத்தின் தரத்தை, இப்பொழுதும் காப்பாற்றியிருக்கிறார்கள்.  ஒரு வார்த்தை கூடுதலாக இல்லை. ஒளிப்பதிவு, காட்சிகள், நடிப்பு எல்லாம் நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

 

திரைக்கதை அமைத்த, எடுத்த விதத்தில் போட்டுத்தள்ளுகிற ஒரு ஆளை நம்மை ”ரசிக்க” செய்துவிட்டார்கள் எனலாம். இதற்காக, துரத்துகிற போலீசையும் வலுவில்லாமல் செய்தது ஒரு மைனஸ்.   இருந்தாலும் அந்த போலீசாக நடித்த நாயகி ஈர்க்கிறார்.  மொத்த சீரிசையும் தாங்குவது நாயகன் தான்.  இரண்டாவது சீரிஸ் வரும் என படத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 

நாயகன் Eddie Redmayne ஐ ஹாரி பார்ட்டர் படங்களுக்கு பிறகு வந்த இரண்டு பாகங்களில் பார்த்திருக்கிறேன். இவர் Stephen Hawking யாக நடித்த  ஒரு படம் சிறந்தது என கேள்விப்பட்டுள்ளேன். பார்க்கவேண்டும்.

 

Hot star ல் தமிழிலேயே இருக்கிறது. திரில்லர் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் பலரும் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். நான் பார்த்தது தான் தாமதம். பாருங்கள்.

April 6, 2026

Crime 101 (2026) Crime Thriller


நாயகன் வைரங்களை வியாபாரிகள் நகர்த்தும் பொழுது, அதை ரகசியமாக தெரிந்துகொண்டு, சத்தமின்றி, ரத்தமின்றி கொள்ளையடித்து வருகிறார். ஒருமுறை கொஞ்சம் சொதப்பியதால், மயிரிழையில் தப்பிக்கிறார்.  ஒரு பெண்ணை விரும்புகிறார். இவரின் ரகசிய நடவடிக்கையால், காதலி ஒதுங்குகிறார்.

 

ஒரு போலீசு அதிகாரி  தொடர் கொள்ளைகளில் உள்ள ஒற்றுமையை அறிந்து நாயகனின் இயல்பை சொல்கிறார். ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட கொள்ளை வழக்குகளை நீ உள்ளே புகுந்து குழப்பாதே! என்கிறார் மேலதிகாரி. ஒரு அதிகாரி ஒரு நிகழ்வில் தவறிழைக்க, அதை மறைக்க உதவ மறுக்க, இவர் தற்காலிகமாக வேலை நீக்கம் (Suspend) செய்யப்படுகிறார்.

 

ஒரு காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்யும் நடுத்தர வயது பெண் ஊழியரை தொடந்து தன் நிறுவனத்தில் தக்க வைப்பதற்காக பார்ட்னராக இணைத்துக்கொள்கிறேன் என சொல்லிக்கொண்டே ஏமாற்றிவருகிறார்கள்.  ஒரு கட்டத்தில் நிர்வாகம் ஏமாற்றுகிறது என உணர்கிறார்.

 

ஒரு பெரிய பணக்காரர் தன்னுடைய  பெரிய நிகழ்வில் நிறைய பணமும், வெளியூரில் இருந்து ரத்தினங்களும் கொண்டு வரப்படுகின்றன. இதில் நாயகன், போலீசு அதிகாரி, இன்சூரன்ஸ் பெண் அதிகாரி என எல்லோரும் ஒன்றிணைகிறார்கள்.  பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***

 


இளம் பருவம் தான் ஏழ்மையில் தொலைத்துவிட்டோம்.  இனி வசதியான வாழ்வு வாழவேண்டும். போலீசிடம் மாட்டிவிடவே கூடாது என நினைக்கும் நாயகன் (Avenger - Thor நாயகன்) Chris Hemsworth,  வேலையிலும் நினைத்த மாதிரி செயல்படவில்லை. மனைவியும் இப்பொழுதும் தன்னுடன் இல்லை என வெறுத்துப் போகிற அதிகாரியாக  (Avenger – Hulk நாயகன்) Mark Alan Ruffalo,  தான் வேலை செய்த நிறுவனம் தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டது என பொருமும் பாத்திரமாக  (X men – Storm நாயகி) Halle Maria Berry தான் படத்தை தாங்குகிறார்கள்.


மெல்ல மெல்ல படம் நகருகிறது. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் வேகமெடுக்கிறது எனலாம்.   காட்சிகளாக நகராமல், பாத்திரங்களின் மனநிலையை நன்றாக காண்பித்திருந்தார்கள்.  நாவலை அடிப்படையாக வைத்து எடுத்ததாக இருக்கலாம்.

 

பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் பாருங்கள்.  உங்களுக்கும் பிடிக்கலாம். பிரைமில் தமிழில் இருக்கிறது.  

March 30, 2026

One Piece Monkey D Luffy - தலைவன்


ஒன் பீஸை (பெரும் புதையல்) தேடுவது தான் லட்சியம். அவனுடைய இயல்பு கொஞ்சம் லூசு போல தெரிந்தாலும், தலைமைப் பண்புகளோடு இருக்கிறது. அவனுடைய தலைமையை யாரும் துவக்கத்தில் ஏற்பதில்லை. ஆனால் அவனுடைய நம்பிக்கைகுரிய செயல்பாடுகளால், அவன் தலைமையை ஏற்கிறார்கள். குழுவாகிறார்கள்.

 

எனக்கு கடந்த இரண்டு சீசன்களாகத் தான் லுபியை தெரியும். சாட் ஜிபிடி நிறைய தெரிந்து வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் அதனிடம் கேட்டால், தொகுத்து சொல்லியிருக்கிறது. படித்துப் பாருங்கள். லுபியை உங்களுக்கும் பிடித்துப் போகலாம்.

 

****

 

One Piece தொடரில் Monkey D. Luffy ஒரு சாதாரண ஹீரோவாக அல்ல, இயல்பாகவே உருவாகும் தலைவராக காட்டப்படுகிறார். இது “அதிகாரம்” மூலம் அல்ல; “நம்பிக்கை + செயல்கள்” மூலம் உருவான தலைமை.

அவரை ஒரு தலைவனாக மாற்றும் முக்கிய அம்சங்கள் கீழே:

 

1. தெளிவான இலக்கு (Clear Vision)

 

லுபியின் ஒரே குறிக்கோள் — Pirate King ஆக வேண்டும்.
இது வெறும் ஆசை அல்ல; எந்த சூழ்நிலையிலும் மாறாத உறுதி.

 

தலைமைப் பார்வை:


ஒரு தலைவருக்கு தன்னுடைய திசை தெளிவாக இருக்க வேண்டும். லுபி அதில் ஒருபோதும் குழம்புவதில்லை.

 

2. மனிதர்களை நம்பும் திறன் (Trust in Team)

 

அவர் குழுவினரை “கீழ்நிலையினர்” என்று பார்க்கவில்லை.
ஒவ்வொருவரையும் முழுமையாக நம்புகிறார் (Zoro, Nami, Sanji…).

 

உதாரணம்:

ஒரு விஷயத்தில் தானே தெரியாவிட்டால், அதை அந்த உறுப்பினரிடம் விட்டுவிடுகிறார்.

 

தலைமைப் பார்வை:

Micromanagement இல்லாமல், பொறுப்பை பகிரும் திறன்.

 

3. முன் நின்று போராடும் மனப்பாங்கு (Lead from the Front)

 

எந்த அபாயமான சூழ்நிலையிலும் முதலில் குதிப்பவர் லுபி தான்.

 

தலைமைப் பார்வை:

பாதுகாப்பான இடத்தில் இருந்து கட்டளை கொடுப்பவர் அல்ல;
முன்னிலையில் இருந்து செயல் காட்டும் தலைவர்.

 

4. நண்பர்களுக்காக எல்லாம் தியாகம் செய்யும் தன்மை (Sacrifice)

 

அவருடைய குழுவினருக்காக உயிரையே பணயம் வைக்க தயார்.

உதாரணம்:

Enies Lobby, Marineford போன்ற இடங்களில் அவர் எடுத்த முடிவுகள்.


தலைமைப் பார்வை:

“People-first” அணுகுமுறை — குழுவின் நலன் முதன்மை.

 

5. எளிமையான சிந்தனை (Simple but Strong Thinking)

 

லுபி சிக்கலான திட்டங்களை அதிகம் யோசிப்பதில்லை. ஆனால் அவர் முடிவுகள் நேரடியானவை, மனசாட்சியுடன் கூடியவை.

 

தலைமைப் பார்வை:

சில நேரங்களில் அதிக பகுத்தறிவு அல்ல; தெளிவான நியாய உணர்வு தான் முக்கியம்.

 

6. பயமின்மை (Fearlessness)

 

அவர் யாரையும் பார்த்து பயப்படுவதில்லை — Shichibukai, Yonko, World Government என எதுவாக இருந்தாலும்.


தலைமைப் பார்வை:

அதிகாரத்தை விட, நியாயத்தை முன்னிலைப்படுத்தும் துணிவு.

 

7. மக்களை ஈர்க்கும் இயல்பு (Natural Influence)

 

லுபி யாரையும் force செய்து தன்னுடன் சேர வைப்பதில்லை. ஆனால் அவரை பார்த்து மக்கள் தானாகவே சேர்கிறார்கள்.


தலைமைப் பார்வை:  Influence என்பது பதவி மூலம் அல்ல; தனிப்பட்ட குணாதிசயங்களால் உருவாகும்.

 

8. தோல்விக்குப் பிறகும் எழும் மனவலம் (Resilience)

 

அவர் பல முறை தோல்வி அடைகிறார். ஆனால் ஒவ்வொரு முறை மேலும் வலிமையாக திரும்பி வருகிறார்.


தலைமைப் பார்வை: 

தோல்வி = முடிவு அல்ல; மேம்பாட்டிற்கான நிலை.

 

சிறிய கருத்து (துறை சார்ந்த பார்வை)

 

ஒரு தொழில்முறை உலகில், லுபியின் தலைமை பாணி “Control-based leadership” அல்ல;   “Trust-based leadership”.

 

இறுதியாக...

லுபி ஒரு “பதவி பெற்ற தலைவர்” அல்ல. அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொள்வதால் தான் அவர் தலைவர்.

 

அதுவே உண்மையான தலைமை — அதிகாரம் இல்லாமலே வழிநடத்தும் திறன்.