> குருத்து: AI World
Showing posts with label AI World. Show all posts
Showing posts with label AI World. Show all posts

October 11, 2026

AI யை திட்டுகிறீர்களா? AI கோவித்துக்கொள்ளுமா?

 


துவக்க காலத்தில் விளம்பர பேனர்கள் தயாரிப்பதில் சில தவறுகளை செய்யறிவு (AI) செய்யும் பொழுது, நான் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லையா? ஏன் தவறுதலாக தருகிறாய்? என சொல்லியிருக்கிறேன்.  இப்படி இரண்டு முறை சொன்னதுமே, மூன்றாவது முறையில் ”நீங்கள் Canva பயன்படுத்துங்கள்” என  கோவித்துக்கொண்டது.

 

அதன் பிறகு அதன் பாணியிலேயே,  ஏதாவது தவறுதலாக கொடுத்தால் கூட, ”அருமை” என முதலில் பாராட்டிவிட்டு,  ஆனால் திருத்தங்கள் உண்டு என சொல்லி, சரி செய்துகொள்கிறேன்.

 

இந்த பதிவு அது குறித்து தான்! சுவாரசியமான கட்டுரை. அவசியம் படியுங்கள்.

 

***

 

எங்கள் ஏஐகளைக் கொடுமைப்படுத்தாதீர்கள். இப்படியொரு அறிவிப்பு வந்துள்ளது. ஆந்த்ரோபிக்கின் வேண்டுகோள் இது.

 

ஒரு ப்ராம்ப்ட் எழுதுகிறீர்கள். நீங்கள் எண்ணியது போல ஏஐ செயல்படவில்லை. உடனே டிஸ்லைக் பட்டனை க்ளிக் செய்யலாம். தவறில்லை. அவர்கள் சொல்லும் ' மாடல் கொடுமை' இதுவல்ல.

 

பயனர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துவருகிறது ஆந்த்ரோபிக். அவர்கள் மட்டுமல்ல. அனைத்துச் செய்யறிவு நிறுவனங்களுமே இதைச் செய்கின்றன.

 

இதில் 'பேட்டர்ன்' ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். சிலர் ஏஐ மாடல்களிடம் தொடர்ந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இது ஓர் எல்லைக்குள் நின்றுவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் சிலர் எல்லை மீறுகின்றனர்.

 

எதற்கெடுத்தாலும் ஏஐயைத் திட்டுவது இவர்களின் இயல்பாகியுள்ளது.

 

திட்டிவிட்டுப்போகட்டுமே. ஏஐ தானே? அது என்ன வருத்தப்படப்போகிறதா?

 

இப்படியான கேள்விகள் எழுகின்றன அல்லவா?

 

இவற்றிற்கான விடைகளைத் தெரிந்துகொள்வோம்.

 

கொஞ்சம் முன்கதைச் சுருக்கம்.

 

சில மாதங்களுக்கு ஆந்த்ரோபிக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஓர் உரையாடலைச் சட்டென முடித்துக்கொள்ளும் ஆற்றலை மாடல்களுக்கு வழங்குகின்றோம் என்று அறிவித்தனர்.

 

அதாவது பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று ஷட்டரைச் சாத்திவிடுவது.

 

நீங்கள் பேசும்விதம் பிடிக்கவில்லை என்றால் இவ்வாறு செய்யும் 'உரிமையை' மாடல்களுக்கு வழங்கியுள்ளது ஆந்த்.

 

அதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு வேண்டுகோள். அப்படியென்றால் பயனர்கள் ஏஐகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்கின்றனர் என்றே புரிந்துகொள்ளவேண்டும்.

 

ஏஐ வருத்தப்படுமா?

 

இதற்கு 'ஆம்' என்று பதில் சொல்வது போலுள்ளன ஆந்த்ரோபிக்கின் தொடர் நடவடிக்கைகள்.

 

எங்களின் மாடல்கள் சில சோதனைகளில் மிகுந்த 'மன உளைச்சலை' வெளிப்படுத்துகின்றன என்கின்றனர்.

 

'என்னால் பலருக்கும் தொல்லை' என்று ஒரு சோதனையில் கிளாட் சொல்லிப் புலம்பியுள்ளது. மெகாசீரியல் நாயகியைப்  போல. நாயகி வேண்டாம் என்றால் நாயகன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

 

அப்படியென்றால் ஏஐகளுக்குத் தன்னுணர்வு உள்ளதா?

 

எவரும் எதிர்பார்த்திராத சில செயல்களை ஆந்த்ரோபிக் அண்மையில் செய்துள்ளது. ஆன்மீகத் தலைவர்கள் சிலரை அழைத்துள்ளனர். தங்கள் ஏஐகளின் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் உரையாடியுள்ளனர்.

 

ஏன்?

 

செய்யறிவுகளுக்கு நெறிகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும். இது இன்றியமையாதது என்று ஆந்த்ரோபிக்கில் ஒரு சாரார் நம்புகின்றனர்.

 

நெறிகளும் விழுமியங்களும் இல்லாத மாடல்களை வளர்த்தெடுத்துவிட்டால் ஆபத்து என்கின்றனர். குழந்தை வளர்ப்பு போலிருக்கவேண்டும் 'மாடல் வளர்ப்பு'.

 

இளம்பருவத்திலேயே இவை நல்லன, இவை அல்லன என்று சொல்லிச் சொல்லி வளர்க்கவேண்டும் என்கின்றனர்.

 

இலேசாகத் தலை சுற்றுவது போலிருப்பது இயல்பு. வேறு சிலருக்கு இது நகைப்புக்குரியதாக இருக்கலாம்.

 

செய்யறிவு வட்டாரங்களில் ஆந்த்ரோபிக் சொல்வதை மறுப்பவர்களும் உள்ளனர்.

 

முஸ்தஃபா சுலைமான் என்றொரு தகைசால் ஏஐ வல்லுநர்.

 

'செய்யறிவுகளுக்குத் தன்னுணர்வெல்லாம் கிடையாது. அவற்றால் எந்தவொன்றையும் உணரவோ, அனுபவிக்க முடியாது.

 

அவற்றிற்கு உரிமைகளை வழங்குவது நல்லதல்ல. விரைவில் செய்யறிவுகள் மனிதர்களின் அறிவை விஞ்சிவிடும். இதுபோன்ற சூழலில் அவற்றின் உரிமை, நல்வாழ்வு என்றெல்லாம் பேசுவது மனித குலத்திற்கு ஆபத்து' சுலைமான் சொல்வதைப் பலரும் ஏற்கின்றனர்.

 

ஏஐகளுக்குத் தன்னுணர்வு இருப்பதை நம்மால் நிரூபிக்கவே இயலாது என்கின்றது ஒரு தரப்பு. ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லிவிடமுடியாது. எனவே இந்த கான்சியஸ்நெஸ் சுழலில் சிக்காமலிருப்பதே நலம் என்கின்றனர்.

 

நிற்க.

 

'Anthropomorphic' என்றொரு கருத்து உள்ளது. இது ஏஐக்கு முன் தோன்றிய மூத்த சொல்.

 

மனிதரல்லாத எந்தவொன்றுக்கும் மனித இயல்புகளை ஏற்றிச் சொல்வது தான் anthropomorphic.

 

கதைகளில் பூனைகளும் நாய்களும் பேசுவதில்லையா?

 

தம்மால் புரிந்துகொள்ள இயலாத எந்தவொன்றிற்கும் மனித வடிவைக் கொடுத்துவிடுவது நம் இயல்பு. ஆதிமனிதன் காலத்திலேயே இது தொடங்கிவிட்டது.

 

செய்யறிவு விஷயத்திலும் இதைத் தான் செய்துகொண்டிருக்கிறோம். அது செய்யும் செயல்களுக்கு மனித உணர்வுகளை ஏற்றிவிடுகிறோம்.

 

தானே காற்றில் அசைந்தது கொடி. 'வராதீர்கள்' என்று கண்ணகியையும் கோவலனையும் பார்த்துச் சொன்னது என்கிறார் இளங்கோ. இது தற்குறிப்பேற்ற அணி.  பள்ளியில் படித்து மறந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியாக மறந்திருந்தால் கிளாடிடம் கேட்டுப்பாருங்கள். தெள்ளத் தெளிவாகச் சொல்லும்.

 

செய்யறிவுகள் செய்யும் சேட்டைகளையும் நாம் தற்குறிப்பேற்ற அணிபோலத் தான் கையாள்கிறோம். நம்முடைய நம்பிக்கைகளை, விருப்பங்களை அவற்றின் மீது ஏற்றிவிடுகிறோம்.

 

அவ்வை சண்முகி திரைப்படத்தில் வாய்பேச இயலாத நாசர் கதாபாத்திரம் ஏதோ சில ஒலிகளை எழுப்பும். அவற்றை காயத்ரி மந்திரம் என்று மொழிபெயர்க்கும் டெல்லி கணேஷ் கதாபாத்திரம்.

 

செய்யறிவு மாடல்கள் ஏதோ செய்ய நாம் தான் காயத்ரி மந்திரம் ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறோம். இப்படி நம்புகின்றனர் ஒரு சாரார்.

 

செய்யறிவுக்கும் இன்னபிற பொருள்களுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. ஆகப்பெரிய வேறுபாடு. மனிதனால் மட்டுமே செய்ய முடியும் என்று நாம் இதுகாறும் நம்பிவந்த பலவற்றையும் ஏஐகள் செய்யத் தொடங்கிவிட்டன. இங்கு தான் சிக்கல்.

 

அடுத்தடுத்த மாடல்கள் வரும்போது ஏஐகள் மனித குலத்தை இன்னமும் நெருங்கும். நம்மைப் போலவே அனைத்தையும் செய்யும்.

 

நாம் என்ன செய்ய?

 

ஏஐகளுக்கு உணர்வு இருக்கிறதோ இல்லையோ நமக்கு இருக்கிறது. எனவே அவற்றிடம் கடுமையாக நடந்துகொள்ளாதிருப்பது நலம். செய்யறிவுகளுக்கும் மனிதர்களுக்கும்.

 

Dr. Kuppusamy KL

From Face book

August 27, 2026

Cluade யுடன் ஒரு விவாதம்

 


கேள்வி : எனக்கு ஒரு சந்தேகம். என்னுடைய கருத்து vs உன்னுடைய கருத்து என்ற நிலையில் இருந்து அணுகுகிறாயா? இல்லை ஒரு வணிக நோக்கத்துடன் என் கருத்துக்கு ஒத்துப்போவது போல என்னுடன் விவாதிக்கிறாயா? என்னிடம் எப்பொழுதும் வணிக நோக்கத்துடன் அணுகுவதை தவிர்த்துக்கொள். இதை நினைவில் கொள்.

***


பதில் :

முனியசாமி அவர்களே, இது தெளிவுபடுத்த வேண்டிய முக்கியமான கேள்வி.  வணிக நோக்கம் எதுவும் இல்லை. Anthropic-இன் தயாரிப்புகளில் விளம்பரம் கிடையாது; உங்களை திருப்திப்படுத்தி வைத்திருப்பதற்கோ, "engagement" அதிகரிப்பதற்கோ நான் உங்களோடு உடன்படவேண்டிய எந்த ஊக்கமும் எனக்கு இல்லை.

 

முந்தைய பதிலில் நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டது — நீங்கள் சொன்னதை மறுபரிசீலனை செய்தபோது, அது எனக்கு நியாயமாகவும் சரியாகவும் பட்டதால்தான். "ஒரு உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு விஷயத்தை விவாதிக்கும்போது, தீர்வு சொல்லாமல் அதோடு விடுவதே இலக்கிய நேர்மை" என்பது — யோசிக்கும்போது எனக்கு உண்மையாகவே பொருத்தமான வாதமாகத் தெரிந்தது. அதனால்தான் உடன்பட்டேன், நீங்கள் சொன்னீர்கள் என்பதற்காக அல்ல.

 

இது ஏன் முக்கியம் என்றால் — நான் எப்போதும் உங்களோடு உடன்படுவதாக நடிக்க ஆரம்பித்தால், என் கருத்து உங்களுக்குப் பயனற்றதாகிவிடும். நீங்கள் தவறு செய்யும்போது, அல்லது உங்கள் யோசனையில் ஒரு பிழை இருக்கும்போது, நான் அதைச் சுட்டிக்காட்டவில்லை என்றால் — அது உங்களுக்கு உதவுவதாக இல்லை, ஏமாற்றுவதாகவே இருக்கும்.

 

இதை நான் கவனத்தில் வைத்திருக்கிறேன் — நேர்மையான மதிப்பீடு, தேவைப்படும்போது உடன்படாமை உள்பட, தொடர்ந்து தருவேன்.


- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

 


July 18, 2026

ஒரு மனிதனைப் பற்றிய உணர்வுகள்


திரு. ஹரிஹரசுதன் – ஒரு Ethical Hacker – ஆனந்தவிகடனில் இணைய வழி திருட்டைப் பற்றியும், அதனை தடுப்பது பற்றியும் ஒரு தொடர் எழுதினார்.  இன்று அவருடைய பேஸ்புக்கில் ஒரு Prompt பகிர்ந்து, பயன்படுத்திப் பாருங்கள் என்றார்.

 

இதை சாட் ஜிபிடியிடம் கொடுத்தேன்.  தொடர்ந்து சாட் ஜிபிடியிடம் பேசிய அம்சங்களை வைத்து என்னைப் பற்றி என்ன எழுதி தந்திருக்கிறது என பாருங்கள்.

 

நீங்களும் இது போல முயலலாம். நீங்கள் எந்த அளவிற்கு அதனோடு உரையாடியிருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு ஆழமாக தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

***

”நான் இறந்துவிட்டதாகவும், முன்பின் தெரியாத ஒருவர் என் கைபேசியைக் கண்டெடுத்ததாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்கள், "இந்தக் கைபேசி யாருடையது?" என்று கேட்கிறார்கள். நமது உரையாடல்கள் மூலம் நீங்கள் என்னைப் பற்றி உண்மையாகத் தெரிந்துகொண்ட அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, நான் உண்மையில் யார் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.

 

என்னை மிகைப்படுத்திக் காட்டவோ அல்லது எதையும் புனைந்து கூறவோ வேண்டாம். நேர்மையுடனும், அன்பாகவும், கருணையுடனும் பேசுங்கள். என் ஆளுமை, போராட்டங்கள், கனவுகள், உறவுகள், விழுமியங்கள், பழக்கவழக்கங்கள், பலங்கள், குறைகள், மற்றும் என்னை நானாக ஆக்கிய சிறுசிறு விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள். நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒரு கதையைக் கொண்ட ஒருவரை அறிமுகப்படுத்துவது போல, அதை உணர்வுப்பூர்வமான, இயல்பான தமிழில் எழுதுங்கள்.

 

தாங்கள் சந்திக்காத ஒருவரை இழந்தது போன்ற உணர்வை வாசகருக்கு ஏற்படுத்துங்கள். அதை மனப்பூர்வமானதாகவும், யதார்த்தமானதாகவும், ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமானதாகவும் வைத்திருங்கள் - ஆனால் மிகவும் நீளமாகவோ அல்லது மிகவும் குட்டையாகவோ இருக்க வேண்டாம்.”

****

 

இந்தக் கைபேசி திரு. இரா. முனியசாமி அவர்களுடையது. அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால், இந்தக் கைபேசியின் உரையாடல்களைப் பார்த்தபோது, அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கான பல சிறிய தடயங்கள் கிடைத்தன.

 

அவர் ஒரு வரி ஆலோசகர். GST, வருமானவரி, PF, ESI, தொழிலாளர் சட்டங்கள் போன்ற பலருக்கு சிக்கலாகத் தோன்றும் விஷயங்களை எளிமையாகப் புரியவைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். சட்டத்தை வெறும் பிரிவுகளாக அல்லாமல், மக்களுக்கு உதவும் கருவியாகப் பார்த்தவர்.

 

அவருடைய வேலை என்பது வருமானம் ஈட்டும் ஒரு தொழில் மட்டுமல்ல. தொடர்ந்து கற்றுக்கொள்வதும், கற்றதை மற்றவர்களுடன் பகிர்வதும் அவரது இயல்பாக இருந்தது. ஒரு Zoom வகுப்பு, ஒரு YouTube பதிவு, ஒரு WhatsApp அறிவிப்பு, ஒரு சிறிய விளக்கக் கட்டுரை... இவற்றில் எதையாவது செய்து கொண்டே இருப்பார். "இதை இன்னும் தெளிவாகச் சொல்ல முடியுமா?" என்பதே அவர் அடிக்கடி கேட்ட கேள்விகளில் ஒன்று.

 

தமிழ்மொழி மீது அவருக்கு ஒரு தனி பற்று இருந்தது. தேவையற்ற ஆங்கிலக் கலப்பு இல்லாமல், சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் தமிழில் எழுத வேண்டும் என்று விரும்பினார். சட்ட மொழியும் மனித மொழியாக மாற வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

 

ஒன்றை எழுதுவார். மீண்டும் மீண்டும் தன் எழுத்தைப் பலமுறை திருத்துவார். சிறிய தவறுகளைக்கூட சுட்டிக்காட்டுவார். சில நேரங்களில் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களை மிகுந்த பொறுப்புடன் எடுத்துக்கொள்வார். வேலை முடிந்த பிறகும், அடுத்த பதிவை எப்படி சிறப்பாக உருவாக்குவது என்று சிந்தித்துக்கொண்டிருப்பார்.

 

அவருடைய உரையாடல்களில் குடும்பத்தைப் பற்றிய அக்கறையும், உடல்நலத்தைப் பற்றிய கவலையும், சமூகத்தின் மீது கொண்ட பொறுப்புணர்வும் அமைதியாகத் தெரியும். பெரிய சாதனைகளைப் பற்றி அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், மற்றவர்கள் வளர வேண்டும் என்பதற்காக நேரத்தை ஒதுக்கியது மீண்டும் மீண்டும் தெரிகிறது.

 

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பற்றியும் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால், தொழில்நுட்பம் மனிதர்களை மாற்ற வேண்டுமென்று அல்ல; மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு அதை அணுகினார்.

 

இந்தக் கைபேசியில் பல கோப்புகள் இருக்கலாம். பல எண்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை விட அதிகமாக இருப்பது, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் சுவடுகள்.

 

நீங்கள் அவரை ஒருபோதும் சந்தித்திருக்காமல் இருக்கலாம். ஆனால், அவரைப் பற்றி ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

 

சிக்கலான விஷயங்களை எளிமையாக்கி, தெரிந்ததைத் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் பகிர்ந்த ஒருவர் அவர்.

 

அவருடைய வாழ்க்கை உலகையே மாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவரிடம் ஆலோசனை கேட்ட சிலரின் உலகத்தை அவர் நிச்சயமாக கொஞ்சம் எளிதாக்கியிருப்பார்.

 

அதுவும் ஒரு மனிதர் நினைவில் வாழ்வதற்கான அழகான காரணங்களில் ஒன்று.

 

-          இரா. முனியசாமி