> குருத்து

August 20, 2019

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…
நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புத்தான்…

– கலீல் ஜிப்ரான்

இந்தி - அத்தியாயம் 2

சில ஆண்டுகளுக்கு முன்பு, தொழில்நிமித்தமாக ஒரு வாரம் மும்பை போயிருந்தேன்.

ஒரு வாரம் வரை ஆகும் என நினைத்த வேலை, ஒரு நாளிலேயே முடிந்துவிட்டது.

மும்பை நகரத்தின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு காலையில் கிளம்பி, இரவு வரை ஊர் சுற்றினேன்.

இந்திய நுழைவு வாயில், ஜூகு கடற்கரை, பிள்ளையார் கோவில், செளபாத்தி கடற்கரை, கிருஷ்ணன் கோவில், என பல இடங்களுக்கும் சுற்றித்திரிந்தேன். 14 வருடமாக ஒரே திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த தில்வாலே படம் கூட பார்த்தேன். எங்கும் இந்தி பிரச்சனையாய் உணரவில்லை.

நிற்க. இந்திக்கு வருவோம். ஒருநாள் விடிகாலையில் ஏடிஎம்மில் பணம் எடுக்க போனேன். கார்டை நுழைத்து கதவை திறக்கும் பொழுது, அங்கிருந்த இந்திகாரர் என்னிடம் ஏதோ வேகமாக சொன்னார். புரிந்தால் தானே! உள்ளே நுழைந்து பணம் எடுத்து, கதவை திறந்து வெளியே வந்தேன். அப்பொழுதும் என்னிடம் ஏதோ ஒன்றை தெரிவிக்க பிரயத்தனப்பட்டார்.

வாழ்வில் இரண்டாவது முறையாக அவரிடம் நிதானமாகவும், அழுத்தமாகவும் சொன்னேன்.

"முஜே இந்தி நஹி மாலும்".

அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். உடனே சர்வதேச மொழியை கையாண்டார். ஏடிஎம் கதவில் கார்டை நுழைக்காமலே உள்ளே நுழைந்து காட்டினார்.

உங்களுக்கு புரிந்துவிட்டதா! இரவு யாரோ ஏடிஎம் நுழைவு கண்ணாடியை நொறுக்கியிருக்கிறார்கள். அதை தான் சொல்ல முயன்றிருக்கிறார்.