> குருத்து: பயணம்
Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

June 19, 2026

குற்றாலம் - அருவிகளின் கொண்டாட்டம்

 


வருடத்திற்கு ஒருமுறை சீசனுக்கு குற்றாலத்திற்கு போய்விடுவதுண்டு.  மதுரையில் இருந்து அண்ணன் வீடு சொந்தங்களுடன், ஒரு வேன் பிடித்து, சமைப்பதற்கான ஏற்பாடுகளுடன் வந்துவிடுவார்.  நாங்கள் சென்னையில் இருந்து நேரடியாக தென்காசி சென்று குற்றாலத்திற்கு போய்விடுவதுண்டு. மூன்று நாட்கள் வழக்கமாய் இருப்பது வழக்கம்.

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்தால் தான் கிடைக்கும். ஆனால் குற்றாலம் என்பது அதன் சீசனைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். திடீரென நிறைய தண்ணீர் விழுந்து, குளிக்கவிடாமல் செய்யும்.  திடீரென தண்ணீர் குறைவாக விழுந்து சொதப்பும். 

 

கடந்த இருபது வருடங்களில், குற்றாலத்தில் தண்ணீர் குறைவாக விழுந்து, போட்ட டிக்கெட்டை ரத்து செய்ய மனமில்லாமல், என்னுடைய குடும்பம் மட்டும் மூன்று முறை கொடைக்கானல் போய் வந்ததுண்டு.

 

சின்ன சின்ன குழப்பங்கள் இருந்தாலும்… ஆண்டு தோறும் குற்றாலாம் செல்வது இன்னும் தொடர்கிறது. அருவியின் ஆசிர்வாதம் இல்லாமல் அந்த ஆண்டு நிறைவடையாது.

 

குற்றாலம் செல்வதால் ஒரு உறவினர் தெரிவித்தார்.  அவருக்கு சில ஆலோசனைகள் தெரிவித்தேன். உங்களுக்கும் பயன்பட்டால் நலம்.

 

***

 

பொதுவாக சனி, ஞாயிறுகளில் விடுமுறை என்பதால், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அதனால் தான் வழக்கமாய் வியாழன், வெள்ளி, சனி என திட்டமிடுகிறோம். அதுவும் பள்ளி, வேலை – விடுப்பு என நெருகடி இருப்பதால் இப்படி. முன்பெல்லாம் திங்கள்- புதன் என்றெல்லாம் போயிருக்கிறோம்.

 

ஆகையால் நீங்களும் சனி, ஞாயிறு என அங்கு போகவேண்டாம். வரிசை எல்லா அருவிகளிலும் இருக்கும். ஆகையால் திங்கள், செவ்வாய், புதன் என்கிற அளவில் திட்டமிடுவது நல்லது. ரயில் டிக்கெட்டும் கொஞ்சம் எளிதாக கிடைக்கும்.

 

இந்த பயணத்தை மூன்று நாட்கள் திட்டமிடுங்கள். இரண்டு நாள் போதுமானதாக இருக்காது.  போய் வந்த பிறகு இரண்டு, மூன்று நாட்கள் உடல் கடுமையாக வலிக்கும்.

 

இப்பொழுது முதன்மை அருவியில் கொஞ்சம் கட்டுமான வேலைகள் நடைபெறுவதால், அங்கு கொஞ்சம் கூடுதல் தண்ணீர் விழுந்தால் அனுமதிப்பதில்லை என செய்தியில் கேள்விபட்டேன். ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி - அருவிகளில் குளிக்கலாம். 

 


இரண்டாம் நாள் ஒரு காரை எடுத்துக்கொண்டு, குற்றாலத்தில் இருந்து 45 கிமீ தள்ளி இருக்கும், வற்றாத ஜீவ ஆறான தாமிரபணியில் குளியுங்கள்.  அங்கு இருக்கும் அகத்தியர் அருவியில் எப்பொழுதும் தண்ணீர் விழும். அங்கு அருமையாய் குளிக்கலாம்.  நாங்கள் இத்தனை ஆண்டுகள் போனதில்,  ஒரு வருடம் விட்டு ஒரு வருடமாவது அங்கு சென்று வந்திருக்கிறோம்.  இங்கு போய் வந்தாலே மாலையாகிவிடும்.

 


மூன்றாம் நாள் பாலருவி.  குற்றாலம்  தென்காசி மாவட்டம் என்பதால், தமிழகத்தின் எல்லை மாவட்டம் இது.   அதிகப்பட்சம் 30 கிமீ . கேரளாவின் கொல்லம் மாவட்டத்திற்குள் நுழைந்துவிடலாம்.    அது ஒரு நல்ல மரங்கள் அடங்கிய காட்டுப்பகுதி.  உள்ளே ஒரு கிமீ நுழைந்ததும், அருவிக்கான வண்டிகள் நமக்காக காத்திருக்கும்.  கொஞ்சம் காத்திருந்து, (வார நாட்களில் அங்கும் கூட்டம் இருக்காது) டிக்கெட் எடுத்து, அவர்களே அருவிக்கு அருகில் கொண்டு போய்விட்டுவிடுவார்கள்.  ஜூன்மாத துவக்கத்தில் இருந்தே கேரளாவில் மழை துவங்குவதால், அங்கு நிச்சயம் அருவியில் நீர் விழும். காலையில் விரைவாக வந்து சேர்ந்தால்,    அங்கு அருமையாக குளித்துவிட்டு, மதிய உணவிற்கு வெளியே வந்துவிடலாம்.

 

திரும்பவும் குற்றாலம் திரும்பி பேக் செய்துவிட்டு, தென்காசிக்கு சென்று, அங்கு புகழ்பெற்ற சிவன் கோவில் உண்டு. அங்கு போய்விட்டு, ரயிலில் ஏறிவிடலாம்.

 

இது நல்ல பிளான். ஆகையால் யோசியுங்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் அழையுங்கள்.

 

-        - இரா. முனியசாமி

9551291721

May 30, 2026

வாழ்வும், பயணமும்

 


வேறு வேறு விஷயங்களுக்காக நமது உறுப்பினர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த ஏற்காடு பயணத்தைப் பற்றியும் பேச்சு வந்தது.

 

நிறுவனங்களில் வேலை பார்க்கும் நால்வர், “ஜூலை முதல் வாரம் சார்… சம்பளம், TDS, கணக்குகள்… எங்கும் நகர முடியாது” என்றார்கள். அதே நேரத்தில், “ஜூன் கடைசி வாரம் இருந்திருந்தால், ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம்” என்ற வார்த்தையும் வந்தது. இது ஒரு சிறிய கவனிக்க வேண்டிய விஷயம்.

 

நமது வேலைகள் எப்போதும் நம்மை சுற்றியே இருக்கும். அவை முடிந்த பிறகே நாம் ஓய்வெடுப்போம் என்று காத்திருந்தால், அந்த நாள் வருவது அரிது. வேலை நமக்கு விடுப்பு கொடுத்து, “சென்று வாருங்கள்” என்று சொல்லாது. நாம்தான் அதிலிருந்து சில நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இங்கே எனக்கு தெரிந்த ஒரு மனிதர் நினைவுக்கு வருகிறார். கே.கே. நகரில் இருக்கும் தணிக்கையாளர் திரு. கிருஷ்ணன். 38 வயது வரை LIC-ல் Branch Manager ஆக பல மாநிலங்களில் பணியாற்றியவர். அதற்குப் பிறகு முடிவு செய்து, தேர்வு எழுதி தணிக்கையாளராக மாறினார்.

 

இப்போது நடுத்தர, பெரிய நிறுவனங்களை கையாள்கிறார். ஆனால் அவரின் வேலை முறையே வித்தியாசம். ஜூலை மாதம் கடைசி தேதி என்றால், அவர் ஜூன்  மாதத்திலேயே முடித்துவிடுவார்.  அக்டோபர் மாதம் கடைசி தேதி என்றால், அதிகப்பட்சம் செப்டம்பருக்குள் முடித்து விடுவார்.

 

நாம் கடைசி தேதிகளில் தளத்தோடும், ஆவணங்களோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அமைதியாக ஒரு நாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பார்.

 

அவரிடம் ஒரு பழக்கம்: பயணத்திற்காக எந்த ஏஜென்சியையும் அணுகமாட்டார். தானே படித்து, தங்கும் இடம் முதல் திட்டம் வரை அனைத்தையும் முன்கூட்டியே அமைத்து, தன் துணைவியாருடன் கிளம்பிவிடுவார்.


இந்தியாவிலிருந்து தொடங்கி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம்… இப்படி 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

 

இது மட்டும் அல்ல. அவரது அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் ஐந்து நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை, மேலும் பயண செலவுக்கும் உதவி அளிக்கிறேன் என்றார். ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னார்: “இவ்வளவு கொடுத்தும், சிலர் இன்னும் ஊரைவிட்டு நகர மாட்டேன் என்பார்கள்” என்று.

 

இந்த அனுபவம் ஒரு விஷயத்தை நினைவுபடுத்துகிறது. பயணம் என்பது நேரம் இருந்தால் செய்வது அல்ல. நேரம் ஒதுக்கி செய்வது. நாம் செய்யாமல் இருந்தால், வேலை எப்போதும் காரணம் தரும். இந்த ஆண்டு நமது சங்கத்தின்  ஏழாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஏற்காட்டிற்கு இரண்டு நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இது ஒரு சாதாரண சுற்றுலா அல்ல. சில நாட்கள் வேலை வட்டத்திலிருந்து வெளியே வந்து, மனதையும், உறவுகளையும் சீராக்கிக்கொள்ளும் ஒரு வாய்ப்பு. இந்த முறை வர முடியாத காரணங்கள் இருந்தால், அது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் வர முடியும் நிலை இருந்தும் தள்ளிப்போட வேண்டாம்.

 

ஏனெனில்… இப்படியான வாய்ப்புகள் அடிக்கடி வருவதில்லை. இறுதியாக... வேலை எப்போதும் இருக்கும். ஆனால் அந்த வேலைக்கிடையில் நாம் உருவாக்கிக்கொள்ளும் நினைவுகள்தான் நீண்ட நாள் நிற்கும்.


- இரா. முனியசாமி

May 8, 2026

🦁 பன்னேருகட்டா தேசிய பூங்கா – ஒரு அருமையான அனுபவம்

 


📅 பயணத் திட்டம் – அவசரம் இல்லாமல் ஒரு நாள்


பெங்களூர் மூன்று நாட்களில் ஒரு நாள் இதற்காக ஒதுக்கினோம். ஏனெனில் இதுவரை விலங்குகளை வண்டலூரில் பார்த்திருக்கிறோம். கூண்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் விலங்குகளை பார்த்திருக்கிறோம். காட்டுப் பின்னணியில் ஒரு வரம்புக்குட்பட்ட பரப்பளவில் சுதந்திரமாக சுற்றித்திரியும் விலங்குகளை பார்த்ததில்லை. ஆகையால் இது சிறப்பானது என தோன்றியது.

 

📌 சரியான நாள் தேர்வு


வாரவிடுமுறை எப்பொழுது என இணையத்தில் தேடிய பொழுது, செவ்வாய் என இருந்தது. ஆகையால் திங்களன்று முதல் வேலையாக போய்விட்டோம்.

 

🎟️ நுழைவு & கட்டணம் – என்னென்ன அடங்கும்?


உள்ளே விலங்குகளைப் பார்க்க குளிர்சாதன வண்டி (சபாரி) மூலம் அழைத்து செல்ல, பட்டாம்பூச்சிக்கென ஒரு பூங்காவைப் பார்க்க, பெரிய கம்பி வலைக்குள் இருக்கும் விலங்குகளைப் பார்க்க எல்லாவற்றிற்கும் ஒரு தலைக்கு ரூ. 690 வசூல் செய்தார்கள். வெயில் என்பதால் சோர்வடைய செய்யும் என்பதால், ஏசி வண்டியை தேர்வு செய்தோம்.

 

🚐 சபாரி அனுபவம் – அருகில் விலங்குகள்

முதல் சுற்றிலேயே போய்விட்டதால், கொஞ்ச நேரம் காத்திருந்தோம். உடனே சபாரி மூலம் அழைத்து செல்லப்பட்டோம்.

 

🐘🦁🐅 விலங்குகளின் உலகம்

யானைகள், சிங்கம், புலி, கரடி, மான்கள், குரங்கு, குதிரை என பல விலங்குகளைப் பார்த்தோம். ஏப்ரல் பாதியில் சென்றாலும், காலை என்பதால், எந்த விலங்கும் சோர்வாக எங்கும் படுத்து கிடக்காமல், சுற்றிக் கொண்டிருந்தன. உலாத்திக்கொண்டிருந்தன. வண்டியில் வந்த குழந்தைகள் உற்சாகமாய் குரல் கொடுத்து கொண்டிருந்தார்கள்.  ஊரில் விட்டு வந்த குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் லைவ்வாக மொபைலில் காண்பித்துக்கொண்டிருந்தார்.

 

🛑 பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிங்கம், புலி என விலங்குகளுக்கு மட்டும் கொஞ்சம் பாதுகாப்பு பலமாய் இருந்தன. அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் சுற்றிவரலாம். மற்றபடி எல்லைத் தாண்டி வேறு எங்கும் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

😄 புலி புல்லை திங்குமா?

ஒரு புலி எல்லாம் வேட்டை வேலை இல்லாமல், நேரத்திற்கு சாப்பாடு தருகிறார்களே என அலுத்துக்கொண்டு, அசுவாரசியமாய் ஒரு புல்லை கடித்துக்கொண்டிருந்தது. பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது என சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள் என நண்பர் கலாய்த்தார்.

 

🔄 சுற்றுப்பயணம் நிறைவு

பிறகு சுற்றி வந்து துவங்கிய இடத்திலேயே இறக்கிவிட்டுவிட்டார்கள். நல்ல அனுபவம்.

 

🦋 பட்டாம்பூச்சி பூங்கா – அமைதியான பகுதி

பிறகு பட்டாம்பூச்சிகளுக்கென ஒரு இடத்தை உருவாக்கி, சில ஆய்வு வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறார்கள். இது சீசன் இல்லை என்பதாலோ, சில வகைப் பட்டாம்பூச்சிகள் எல்லாம் சுதந்திரமாய் மனிதர்களைப் பற்றிய கவலை இல்லாமல் சுற்றிவந்தன.


 

🔋 மின்சார வண்டி வசதி

விலங்குகள் கண்காட்சிக்கு, பேட்டரியில் இயங்கும் வண்டிகள் மூலம் அழைத்து செல்கிறார்கள். ஒரு ஆளுக்கு பெரியவர்களுக்கு ரூ. 100 வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் சில விநாடிகள் நிறுத்தி, துவங்கிய இடத்தில் கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள்.

 

📏 பரப்பளவு – ஆச்சர்யமான அளவு

இந்த பூங்காவின் மொத்த பரப்பு 104 ச.கிலோ மீட்டர் என்கிறார்கள். மிருக காட்சி சாலைக்கு 100 ஏக்கர். பட்டாம்பூச்சிக்கு 7.5 ஏக்கர். பெங்களூர் போன்ற பெருநகரத்திலிருந்து 25 கி.மீக்குள் இத்தனை பெரிய பூங்கா. ஆச்சர்யம்.

 

📆 கூட்டத்தை தவிர்க்க வேண்டுமா?

சனி, ஞாயிறுகளில் எப்பொழுதும் பெங்களூரில் கூட்டம் இருக்கிறது. ஆகையால் வார நாட்களில் திட்டமிடுங்கள். பெரியவர்கள், சிறியவர்கள், மாணவர்கள் என வகை வகையாய் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறார்கள்.

 


🚫 பிளாஸ்டிக் தடை – கவனம்

உள்ளே நுழையும் பொழுது, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை தவிருங்கள். உள்ளே அனுமதிப்பதில்லை. அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டல்களை அங்கேயே 60க்கு விற்பனை செய்கிறார்கள். நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கும்.

 

🦓 விலங்குகள் வந்த வழி


இங்குள்ள விலங்குகள் எப்படி வந்தன? ஊருக்குள் சிக்கியவை, இந்தியாவின் வேறு பூங்காவில் இருந்து கைமாற்றாய் மாற்றிக்கொண்டவை, இனப்பெருக்கத்தின் மூலம் பெருகியவை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்தவை என இருக்கின்றன.

 

🚌 போக்குவரத்து வசதி

நேரடியாக பூங்காவிற்கு வர, திரும்ப என அரசு பேருந்துகள் இருக்கின்றன. தாமதமாக சென்றால், எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவேண்டியிருக்கும்.

 

🍽️ பயணம் முடிந்து…

எல்லாவற்றையும் சுற்றி வந்து நிற்கும் பொழுது, மதியமாகிவிட்டது. பசி வயிறை கிள்ளியது. அடுத்து ஒரு நல்ல சாப்பாட்டை தேடி நகர்ந்தோம்.

 

இறுதியாக...

சாதாரண மிருகக் காட்சி சாலை அனுபவத்தை விட, இயற்கை சூழலில் விலங்குகளை அருகில் காணும் அனுபவம் மிக வேறுபட்டதும் நினைவில் நிற்கக்கூடியதுமாக இருந்தது. வாரநாட்களில் திட்டமிட்டு சென்றால், மேலும் அமைதியான அனுபவத்தை பெற முடியும்




என்னுடைய  மொபைலில் (படங்கள் இணையத்தில் ஒரு தனிநபர் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. பெயரை குறித்து கொள்ள மறந்துவிட்டேன். அவருக்கு நன்றி.)

April 30, 2026

லால்பாக் பொட்டனிக்கல் கார்டன் – பெரு நகரத்தின் நடுவே பெரிய பூங்கா

 


ஒரு ஆள் பழைய சிந்தனை கொண்டவராய் இருந்தால், என்னப்பா ஹைதர் காலத்து ஆளாக இருக்கிறாயே?! என்பார்கள்.   உண்மையில், இந்த லால் பாக் திப்புச் சுல்தானின் அப்பா ஹைதர் அலியால் 1760ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திப்புச் சுல்தான் இன்னும் விரிவுப்படுத்தியிருக்கிறார்.

 

நகரத்தின் மையத்தில் 240 ஏக்கரில் பரந்து விரிந்து நிற்கிறது இந்த பூங்கா.  வெளிநாடுகளில் இருந்து விதவிதமான மரங்கள், செடிகளை பார்த்து பார்த்து வரவழைத்து கவனமாய் வளத்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் சிவப்பு மலர்களை நிறைய வளர்த்ததால், சிவப்பு தோட்டம் (Lal bagh) என பெயர் காரணமாகியிருக்கிறது.

 





265 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட பெரிய வரலாறு தான்.   அதனால் பெரிய, மிகப்பெரிய மரங்கள் இருக்கின்றன. 250 வருட  ஒரு இலவம் பஞ்சு மரம் (silk tree) ஒன்று இருக்கிறது. மரமாய் இருந்து, கால ஓட்டத்தில் மில்லியன் ஆண்டுகள் கடந்து அது இப்பொழுது பாறையாய் இருக்கிறது. வேறிடத்தில் இருந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.   நல்ல விசயம்.


 

ஒரு ஏரி உள்ளே இருக்கிறது. அதன் அருகில் செயற்கையாய், மணிக்கு ஒருமுறை 1 முதல் 1.15. 2 முதல் 2.15 என்ற கணக்கில் கால் மணி நேரம் அருவி போல ஒன்றை செயற்கையாய் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கண்ணாடி மாளிகை இருக்கிறது.  இதில் குடியரசு தினத்திலும், சுதந்திர தினத்திலும் சிறப்பாக மலர் கண்காட்சி நடத்துகிறார்கள்.

 

தமிழ் புத்தாண்டு தினத்தில் உள்ளே போயிருந்தோம்.   குடும்பம் குடும்பமாய் ஒரே விதமான ஆட்கள் அவர்களுடைய வண்ணம், பெரிய சிவப்பு பொட்டு வைத்துக்கொண்டு என ஆயிரக்கணக்கில் வந்துகொண்டே இருந்தார்கள். அசாம் மக்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இது விசேச நாள் என நண்பர் கணித்தார்.  ஆனால் பேட்டரி கார் ஓட்டியவர் இவர்கள் நேபாளத்துக்காரர்கள். அவர்களுக்கு இன்று புத்தாண்டு என எங்கள் குழப்பத்தை தெளிவுப்படுத்தினார். மகிழ்ச்சி.

 

விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம்.  வார நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். ஆகையால் நாட்களை திட்டமிட்டு செல்லுங்கள்.

 

உள்ளே நுழைய கட்டணமாய் பெரியவர்களுக்கு ரூ. 50, சிறியவர்களுக்கு ரூ. 25 என்றும் விசேச நாட்களில் இன்னும் கூடுதல் விலை விற்கிறார்கள்.


 

மைசூரில் நகரத்துக்கு உள்ளேயே ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றை நடத்தியது ஆச்சர்யம் தந்தது. நிறைய விலங்குகளும் உற்சாகமாய் வலம் வந்தன.  பர பரவென இயங்கும் ஒரு மெட்ரோ நகரத்துக்கு மத்தியில் 250 ஏக்கரில் லால் பாக் பூங்கா மட்டும் மெதுவாக சுவாசிக்க செய்கிறது எனலாம்.

 

-        -  இரா. முனியசாமி

-         14/04/2026