> குருத்து: வாழ்க்கை
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

September 20, 2026

நல்ல வாழ்க்கை என்றால் என்ன? - Rhythm of life


உலகிலேயே ஆரோக்கியமாகவும், மனநிறைவுடனும், ஒழுங்காகவும் வாழும் மக்கள் யார்?   Finland, Denmark, Norway, Sweden, Iceland போன்ற Nordic நாடுகளும், Japan போன்ற நாடுகளும் நமக்கு சில முக்கியமான வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றன.

 

அவர்கள் நம்மைவிட வேறுபட்ட உணவைச் சாப்பிடுகிறார்கள் என்பதல்ல முக்கியம். அவர்கள் வாழ்க்கையை எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம். அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல Rhythm இருக்கிறது.

 

வேலை → ஓய்வு → குடும்பம் → நண்பர்கள் → உடல் இயக்கம் → தனிநேரம் → தூக்கம்

 

ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய நேரம். நம்முடைய வாழ்க்கையில் சில நேரங்களில் இதற்கு மாறாக வேலை → இன்னும் வேலை → தொலைபேசி → இன்னும் வேலை → தூக்கம் குறைவு → உடல் சோர்வு என்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.

 

உடம்பு எச்சரிக்கை கொடுத்த பிறகுதான் ஆரோக்கியத்தைப் பற்றி யோசிக்கிறோம். அவர்களிடம் வேலை என்பது வாழ்க்கை முழுவதும் அல்ல; வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதி மட்டுமே. வேலை நேரத்தில் கவனமாக வேலை செய்கிறார்கள். வேலை முடிந்ததும் வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்  அதனால்தான் குறைந்த நேரத்தில் ஒழுங்காக வேலை செய்வது, அதிக நேரம் வேலை செய்வதைவிட முக்கியமாகிறது.

 

உடற்பயிற்சியை அவர்கள் வாழ்க்கையில் தனியாகத் தேடுவதில்லை.

 

நடப்பது, சைக்கிளில் செல்வது, வெளியில் நேரம் செலவிடுவது போன்றவை அன்றாட வாழ்க்கையிலேயே கலந்து இருக்கின்றன. அதாவது, “மாலை 6 மணிக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்று ஒரு தனி கடமையாக வைத்துக்கொள்ளாமல், “வாழ்க்கையே கொஞ்சம் உடல் இயக்கத்துடன் இருக்க வேண்டும்” என்று அமைத்துக்  கொள்கிறார்கள். இது நமக்கும் நல்ல பாடம்.

 

இயற்கைக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் இடம் இருக்கிறது.

வாரக்கடைசி என்றால் ஷாப்பிங் மால் மட்டும் அல்ல. நடை, காடு, ஏரி, மலை, சைக்கிள், வெளிப்புறச் செயல்பாடுகள்... சிறிது நேரம் இயற்கையோடு இருப்பது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் ஓய்வு. நம்முடைய மூளை நாள் முழுவதும்

Phone → Message → Notification → News → Work → Social Media என்று தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இயற்கை மட்டும் நம்மிடம், “கொஞ்சம் மெதுவாக நடங்கள்...” என்று சொல்கிறது. அங்கேதான் சிந்தனை மீண்டும் நம்மிடம் திரும்புகிறது.

 

ஜப்பான் நமக்குச் சொல்லும் பாடம் வேறு.

 

அளவான உணவு, ஒழுங்கான வாழ்க்கை, தொடர்ந்து உடல் இயக்கம், வயதான பிறகும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் இருப்பது... ஆரோக்கியம் என்பது ஒரு மாத diet plan அல்ல. ஆரோக்கியம் என்பது தினசரி வாழ்க்கையின் Rhythm.

 

நன்றாக சாப்பிடுவது மட்டும் போதாது. நன்றாக தூங்க வேண்டும். உடலை இயக்க வேண்டும்.  மனதுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.உறவுகளுக்கு நேரம் கொடுக்க வேண்டும். சிந்திப்பதற்கும் தனியாக இருக்க வேண்டும்.

 

இதில் இன்னொரு முக்கியமான மாற்றம் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையில், “நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன்?” என்பது மட்டுமே வாழ்க்கையின் அளவுகோல் அல்ல. “நான் எவ்வளவு நன்றாக வாழ்கிறேன்?” என்பதற்கும் மதிப்பு இருக்கிறது.

 

அதனால்தான் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு எல்லை இருக்கிறது. குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நேரம் இருக்கிறது. தனிப்பட்ட ஆர்வங்களுக்கும் வாசிப்புக்கும் இடம் இருக்கிறது. ஓய்வெடுப்பதற்கும் குற்ற உணர்வு இல்லை.

 

எனக்குத் தோன்றுவது, நாம் அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே நகலெடுக்க வேண்டியதில்லை. நம்முடைய சூழலுக்கு ஏற்ற சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டாலே போதும்.

 

காலை — உடலை இயக்குதல். பகல் — முழுக் கவனத்துடன் வேலை செய்தல். வேலை முடிந்ததும் — வேலையை மனதிலிருந்தும் இறக்கி வைத்தல். மாலை — நடை, குடும்பம், நண்பர்கள். இரவு — சிறிது வாசிப்பு, சிறிது சிந்தனை. பின்னர் — நல்ல தூக்கம். அடுத்த நாள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தொடங்குதல்.

இதுதான் எனக்குப் பிடித்த Rhythm of Life. இது Slow Life அல்ல. ஒழுங்கான வேகத்தில் வாழும் வாழ்க்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் அதற்குரிய இடத்தைக் கொடுக்கும் வாழ்க்கை.

 

50 வயதைக் கடந்த பிறகு இந்தப் பாடம் இன்னும் முக்கியமாகிறது. வாழ்க்கையின் வெற்றி என்பது எவ்வளவு வேலை செய்தோம்? என்பதில் மட்டும் இருக்க வேண்டியதில்லை.

 

எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோம்? எவ்வளவு வாசித்தோம்? எவ்வளவு சிந்தித்தோம்? எவ்வளவு நன்றாக உறவுகளை வைத்திருந்தோம்? எவ்வளவு அமைதியாக வாழ்ந்தோம்?  என்பதிலும் இருக்க வேண்டும்.

 

உடலுக்கு — இயக்கம்.
மனதுக்கு — வாசிப்பு.
வேலைக்கு — எல்லை.
உறவுகளுக்கு — நேரம்.
சிந்தனைக்கு — அமைதி.
வாழ்க்கைக்கு — ஒரு நல்ல Rhythm.

 

ஒருவேளை, நல்ல வாழ்க்கையின் ரகசியம் இன்னும் அதிகமாக ஓடுவதில் இல்லாமல், எப்போது ஓட வேண்டும், எப்போது நிற்க வேண்டும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதில் இருக்கலாம்.

 

“வாழ்க்கையை வேலைக்கு இடையில் நடத்தாதீர்கள்; வேலை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்று வாழுங்கள்.”

 

-         -  இரா. முனியசாமி

 

Rhythm of life 

 

June 21, 2026

நிலம் வாங்கப் போன மனிதன்

 


நம்ம ஊரில் சிலரைப் பார்த்திருப்போம். காலை கண் திறந்ததும் கைபேசியைத் திறப்பார்கள். இரவு கண் மூடுவதற்கு முன்பும் கைபேசியைத்தான் பார்ப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை முழுக்க ஒரு பட்டியல்.

 

இன்று என்ன வேலை? நாளை என்ன வேலை? அடுத்த மாதம் என்ன திட்டம்? அடுத்த ஆண்டு என்ன இலக்கு? அப்படி வாழ்கிறவர்கள் கெட்டவர்கள் அல்ல. ஆனால் வாழ்வதைவிட, ஓடுவதில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

 

அப்படிப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நிலம் வாங்க வேண்டும். ஏற்கனவே நிலங்கள் நிறைய இருந்தன. ஆனால் இன்னொரு நிலம். ஏற்கனவே பணம் இருந்தது. ஆனால் இன்னும் கொஞ்சம் பணம். ஏற்கனவே நல்ல வாழ்க்கை இருந்தது. ஆனால் அதை அனுபவிக்க நேரம் மட்டும் இல்லை.

 

ஒருநாள் ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. தொலைவில் ஒரு நிலம் விற்பனைக்கு வந்திருக்கிறது. "நாளை போய்ப் பார்க்கலாம்" என்றார்கள். "இல்லை. இன்று போனால் தான் லாபம்" என்றான்.

 

குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவனோடு வேலைக்காரனும் வந்தான். மாலை நேரத்தில் புறப்பட்ட பயணம், இரவுக்குள் சிக்கலாகிவிட்டது. பனிப்புயல் ஆரம்பித்தது.

 

முதலில் மெதுவாக. பிறகு கண்முன் நின்ற மனிதனையே காண முடியாத அளவுக்கு. வழி தெரியவில்லை. திசை தெரியவில்லை. எங்கே போகிறோம் என்பதும் தெரியவில்லை. ஆனால் விசித்திரமாக, அந்த நேரத்திலும் அவன் மனதில் ஓடியது நிலத்தின் விலைதான். "அந்த நிலத்தை வாங்கினால் எவ்வளவு லாபம் வரும்?"

 

மனிதன் சில நேரங்களில் அப்படித்தான். உயிர் கையில் இருந்தாலும் பழக்கப்பட்ட கவலையை விடமாட்டான். குளிர் அதிகரித்தது. வேலைக்காரன் நடுங்க ஆரம்பித்தான்.

 

அப்போது அந்த மனிதன் சுற்றிப் பார்த்தான். எங்கும் வெள்ளை. ஒரே அமைதி. வாழ்க்கையில் முதல் முறையாக அவன் எதையும் செய்ய முடியாத நிலையில் நின்றிருந்தான்.

 

அப்போது தான் அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. "நான் இத்தனை வருடமாக என்ன செய்து கொண்டிருந்தேன்?" அவன் நினைத்துப் பார்த்தான். மகனின் மழலை.  மனைவியின் புன்சிரிப்பு. நண்பர்களின் அழைப்பு. மழை பெய்த மாலை. விடுமுறை நாள். குடும்பத்தோடு அமர்ந்து பேசக்கூடிய நேரங்கள். எல்லாமே இருந்திருக்கின்றன. ஆனால் அவன் எப்போதும் பிஸியாக இருந்தான். அவற்றை அனுபவிக்காமல் கடந்து சென்றுவிட்டான்.

 

பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்தபடி வெளியே இருக்கும் அழகைக் கவனிக்காமல் கைபேசியையே பார்த்துக் கொண்டிருப்பது போல.

 

அப்போது அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. தான் பணத்தைத் துரத்தவில்லை. "ஒருநாள் சந்தோஷமாக வாழ்வேன்" என்ற நாளைத் துரத்திக் கொண்டிருந்தான். ஆனால் அந்த நாள் மட்டும் வரவே இல்லை.

 

அவன் வேலைக்காரனை அணைத்துக் கொண்டு படுத்தான். தன்னுடைய உடல் வெப்பத்தை அவனுக்குக் கொடுத்தான். அந்த இரவில் அவன் ஒரு நிலத்தையும் வாங்கவில்லை. ஒரு ஒப்பந்தத்தையும் முடிக்கவில்லை. ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை.

 

ஆனால் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டான். வாழ்க்கை என்பது நாம் சேர்ப்பது அல்ல. தவறவிடாமல் அனுபவிப்பது.

 

சிலர் வாழ்க்கையை வாழ்கிறார்கள். சிலர் வாழ்க்கைக்காகத் தயாராகிக் கொண்டே இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இரண்டாவது வகையினருக்கு ஒருநாள் தெரியவரும். அவர்கள் காத்திருந்த வாழ்க்கை, அவர்கள் ஓடிக்கொண்டிருந்த காலத்திலேயே அமைதியாகக் கடந்து போய்விட்டது என்று! 


- இரா. முனியசாமி