> குருத்து: கல்வி
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

June 1, 2026

“கற்பது உலகளவு” - கல்வியாளர் தா. நெடுஞ்செழியன்

 


“கற்பது உலகளவு”

— கல்வியாளர் தா. நெடுஞ்செழியன்

 

கல்வி குறித்து நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால் கல்வியை மதிப்பெண்கள், பட்டங்கள், வேலைவாய்ப்புகள் என்ற எல்லைக்குள் மட்டுமே பார்க்காமல், ஒரு மனிதரின் சிந்தனையையும் வாழ்க்கைப் பார்வையையும் வடிவமைக்கும் சக்தியாகப் பார்க்கச் சொல்லும் நூல்கள் அரிது.

 

அப்படிப்பட்ட நூல்களில் ஒன்றாக கல்வியாளர் தா. நெடுஞ்செழியன் விகடனில் தொடர்ந்து தொடராக எழுதிய* கற்பது உலகளவு*  அமைந்துள்ளது.

 

உயர்கல்வி, தொழில் வழிகாட்டல், எதிர்காலக் கல்வி வாய்ப்புகள் ஆகிய துறைகளில் நீண்டகாலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழிகாட்டி வரும் தா. நெடுஞ்செழியன், கல்வியை ஒரு தேர்வு முடிவாக அல்ல, வாழ்நாள் பயணமாக அணுக வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த அனுபவங்களின் சுருக்கமாகவே இந்த நூலைப் பார்க்கலாம்.

 

இந்நூல், எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது என்ற கேள்விக்கு மட்டும் பதில் தேடுவதில்லை. ஒரு மாணவர் தனது திறமையை எப்படி அறிந்துகொள்வது, மாறிவரும் உலகில் கல்வியின் பங்கு என்ன, எதிர்கால வாய்ப்புகளை எப்படி அணுகுவது, கற்றலை எவ்வாறு தொடர்ச்சியான பழக்கமாக மாற்றுவது போன்ற பல முக்கியமான சிந்தனைகளை முன்வைக்கிறது.

 

இன்று தகவல்களுக்குக் குறைவில்லை. இணையத்தில் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெற முடிகிறது. ஆனால் எந்தத் தகவல் நமக்குப் பொருத்தமானது, எந்தப் பாதை நமக்குச் சரியானது என்பதைத் தீர்மானிக்கத் தேவையான பார்வையே முக்கியம். அந்தப் பார்வையை உருவாக்க முயலும் நூலாக கற்பது உலகளவு திகழ்கிறது.

 

இந்த நூலை மாணவர்கள் மட்டும் அல்லாமல், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வித் துறையில் ஆர்வமுள்ளவர்கள், இளம் தலைமுறையின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்ட அனைவரும் வாசிக்கலாம்.

 

கல்வி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல.
கல்வியே வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் போது, கற்றலுக்கு எல்லைகள் இருப்பதில்லை.

 

கற்பது உலகளவு என்ற தலைப்பைப் போலவே, கற்றலின் எல்லைகளை விரிவுபடுத்தவும், கல்வியை புதிய கோணத்தில் சிந்திக்கவும் அழைக்கும் ஒரு பயனுள்ள நூலாக இது அறிமுகமாகிறது.

 

-          இரா. முனியசாமி

 

வெளியீடு : விகடன் பிரசுரம்

விலை : ரூ. 400

 

*பின்குறிப்பு*: தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன.  கல்லூரி படிக்கிற மாணவர்களுக்கும், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி நூல். அவசியம் வாசிக்கவேண்டும்.  தேவையானவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.

January 4, 2022

Taare Zameen Par (2007) மண்ணில் ஒளிரும் நட்சத்திரங்கள்




தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்ற படம்

"சாலமன் தீவுகளில், பழங்குடியினர் காடுகளை துடைத்து வயலுக்கு வழிவகை செய்யும் போது, ​​​​அவர்கள் மரங்களை வெட்டுவதில்லை, அவர்கள் வெறுமனே ஒன்றுகூடி அதை சபிக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, மரங்கள் மெல்ல மெல்ல வாட ஆரம்பிக்கின்றன. அது தானே இறக்கிறது.”
- படத்திலிருந்து....

****

அம்மா, அப்பா, பள்ளி படிக்கும் இரண்டு பையன்கள் கொண்ட நடுத்தர வர்க்க குடும்பம் அது. இதில் மூத்தவன் பள்ளியில் நன்றாக படிக்கும் பையன். மூன்றாம் வகுப்பு படிக்கும் இளையவன் படிப்பில் பின் தங்கி இருக்கிறான். அவனால் படிக்க முடியவில்லை. எழுத்துகள் நடனமாடுகின்றன. தேர்வுகள் பயமுறுத்துகின்றன. ஆசிரியர்கள் திட்டி தீர்க்கிறார்கள். தண்டிக்கிறார்கள். மற்றபடி வழக்கமான சேட்டைகள் கொண்ட இயல்பான பையன் அவன்.

அவனை உண்டு, உறைவிட பள்ளியில் (Boarding School) சேர்க்கிறார்கள். வீட்டில் அம்மாவும், அண்ணாவும் தான் பெரிய ஆறுதல். இப்பொழுது தனித்துவிடப்படுகிறான். அந்த பள்ளியிலும் வழக்கம் போல ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். தண்டிக்கிறார்கள். யாரிடமும் பேசாமல் மெளனமாகிவிடுகிறான்.

இந்த நெருக்கடியான சமயத்தில்;… கலை ஆசிரியராக புதியவர் வருகிறார். வழக்கமான ஆசிரியராக இல்லாமல், குழந்தைகளின் இயல்பை புரிந்துகொண்டு கையாள்கிறார். அவனுக்கு இருக்கும் சிறப்பு பிரச்சனையையும், சிறப்பான ஆற்றல் எது என்பதையும் கண்டறிகிறார். பெற்றோர்களை சந்தித்து விவாதிக்கிறார். தலைமை ஆசிரியருடன் கலந்து பேசுகிறார்.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

அந்த பையன் கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் இறுக்கமாகி கொண்டே, யாரிடமும் பேசாமல் இருப்பதை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. ”என்னைய விட்டுறுங்கடா!” என அவன் கண்ணின் வழியே புரிந்துகொள்ளமுடியும்.

அந்த பையனின் பிரச்சனை என்பது புதிது அல்ல! படத்திலேயே சொல்வது போல அந்த பையனுக்கு உள்ள கற்றல் குறைபாடு பிரச்சனையான டிஸ்லெக்சியா (dyslexia) புகழ்பெற்றவர்களான அறிவியலாளர் ஐன்ஸ்டீன், ஓவியர் லியோனார்டோ டாவின்சி, வால்ட் டிஸ்னி, நடிகர் டாம் க்ரூஸ் நம்மூர் அபிசேக் பச்சன் என பலரும் இருக்கிறார்கள். 2016 டேட்டா படியே இந்தியாவில் 3.5 கோடி குழந்தைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த குறைபாடுள்ள மாணவனின் பிரச்சனையை அந்த பள்ளியாலும், நேசிக்கும் படித்த பெற்றோர்களாலும் கூட கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம். ஒரு பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பொழுது, ஆசிரியருக்கு இருக்கும் அழுத்தத்தால் ஒவ்வொரு மாணவனின் பிரச்சனையை கண்டறிவது என்பது சாத்தியமில்லை என்பார் தலைமை ஆசிரியர். இது நம்முடைய கல்வி முறையின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு வகுப்பில் 20பேருக்கு மேல் இருக்ககூடாது என்பது தான் சரியானது என்கிறார்கள். ஓடுகிற ஓட்டத்தில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களை மிதித்துவிட்டு ஓடுவது தான் வழக்கமாகிவிடுகிறது.

ஒரு இடத்தில் ஒரு பாடலை சொல்லி அர்த்தம் கேட்கும் பொழுது, அதைப் புரிந்துகொண்டு அவன் சொந்த வார்த்தைகளில் விளக்குவான். ஆசிரியர் அவனைத் திட்டுவார். புத்தகத்தில் உள்ளதை ஒரு பையன் ஒப்பிப்பான். அவனை பாராட்டுவார். மனப்பாடம் செய்ய முடியாத ஒரு மாணவன் இந்த சிஸ்டத்தில் என்ன ஆவான்?

இப்பொழுது நடைமுறையில் உள்ள ”மெக்காலே” கல்விமுறை சரியில்லை! மாற்றவேண்டும் என கடந்த இருபது வருடங்களாக பல்கலை துணைவேந்தர்கள் முதல், பல பேராசிரியர்கள், கல்வியாளர்கள் திரும்ப ஊடகங்கள் வழியாக, கருத்தரங்கள் வழியாக திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பொழுது ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ்காரனுக்கு தேவைப்பட்டது. அறிமுகப்படுத்தினான். இப்பொழுதும் இந்த கல்விமுறையை யாருடைய நலன்களுக்காக கட்டிக்கொண்டு அழுகிறார்கள்?

மற்றபடி, அந்த பையன் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தான் எனலாம். அமீர்கான் எப்பொழுதும் போல சிறப்பு. அமீர்கான் முதன்முதலாய் இயக்கியப்படம் என்பது இன்னும் சிறப்பு. படம் பல விருதுகளை பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை கவனப்படுத்தியிருக்கிறது என்பது இந்தப் படத்தின் சிறப்பு.

படம் வெளிவந்த சமயத்திலேயே பார்த்திருந்தாலும், இப்பொழுது பார்த்தாலும் மனதிற்கு நெருக்கமாக தான் இருக்கிறது. அருமையான படம். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் இருக்கிறது. அவசியம் பாருங்கள்.

October 8, 2021

Online Class - ஒரு அனுபவம்


அந்த சின்ன அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த பொழுது, அதற்கு நடுவே ஒரு குட்டிப்பெண்ணும் அமர்ந்திருந்தாள். பெண் தொழில் முனைவோராக இருந்தால், பிள்ளைகளும் அவ்வப்பொழுது அலுவலகம் வருவார்கள். கொரானா காலம் என்பதால், அடிக்கடி வருகிறார்கள்.


ஒரு ஸ்டூலில் அந்த ஐ பேட் (Pad) ஜம்மென்று அமர்ந்திருந்தது. அதில் ஒரு பெண் ஆசிரியர் தானியங்கள் குறித்து சீரியசாக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். குரல் நன்றாக இருக்கிறதே ஆசிரியரின் முகத்தை பார்க்க முயன்றேன். ”அதெல்லாம் நீங்க பார்க்க கூடாது” என அந்த குட்டிப்பெண் மறைத்தாள். முயன்று பார்த்ததில், தானியங்களின் படங்கள் தான் தெரிந்தது. அதில் 30 மாணவர்கள் ஒரு சீராக வரிசையில் இருந்தார்கள். ஆனால் யாருடைய முகமும் தெரியவில்லை. ஒவ்வொரு மாணவனின்/மாணவியின் முதல் எழுத்து மட்டும் தெரிந்தது.

அந்த பெண் அந்த ஐ பேட்டிற்கு நேர் எதிரே திரும்பி உட்கார்ந்திருந்தாள். சரியாக சொன்னால், அந்த ஆசிரியருக்கு புறமுதுகு காட்டி அமர்ந்திருந்தாள். மற்ற மாணவர்களும் என்ன செய்வார்கள் என ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன்..

அந்த குட்டிப்பெண் அங்கு வேலை செய்பவர்களின் பெயர்களை எல்லாம் இன்சியலுடன் கேட்டு பொறுப்பாக ஒரு டைரியில் எழுதிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அந்த வேலை போரடித்துவிட்டது. அவள் கையில் நிறைய சின்ன சின்ன ஸ்டிக்கர்கள் வைத்திருந்தாள். ஸ்டிக்கரை ஒவ்வொரு ஊழியரின் கையிலும் ஒட்டி, கொஞ்சம் தண்ணீர் விட்டு தேய்த்தாள். அந்த ஈரம் காய்ந்ததும், ஸ்டிக்கரை எடுத்தால், கையில் அதன் அச்சு நன்றாக பதிந்திருந்தது.

மாதம் ஒருமுறை வேலை நிமித்தம் அங்கு போவதால், என்னிடம் கடைசியாக வந்தாள். ”இவ்வளவு ஸ்டிக்கர் வைச்சிருக்க! எவ்வளவு விலை?” என்றேன். ஐந்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் தருவார்கள். அதில் நிறைய இருக்கும். உங்க கையில் ஒட்டவா? என கேட்டாள். “எங்க வீட்ல இப்படியெல்லாம் ஒட்டிட்டு போனா திட்டுவாங்களே!” என்றேன். அவளே சிரித்துவிட்டாள். ”சரி ஒட்டு! நல்லா ஒட்டியிருந்தா, இதை போட்டோ எடுத்து பேஸ்புக்குல போடலாம்!” என்றேன். உற்சாகமாகிவிட்டாள். ஒட்டினாள். என் ’துரதிருஷ்டம்’. என் கையில் ஒட்டவில்லை. இன்னைக்கு காலையில் நான் குளிச்சேன். அதனால் தான் ஒட்டலையோ! உனக்கு நல்லா ஒட்டுதே! நீ காலையில் குளிக்கவில்லை தானே! என சீண்டினேன். சிரித்து நகர்ந்துவிட்டாள்.

அந்த அலுவலக அறையில் அந்த ஆசிரியரின் குரல் ஒரு அசரீரி போல கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த ஐ பேடில் ஆசிரியரிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் சந்தேகம் எல்லாம் கூட கேட்டார்கள். அந்த ஆசிரியர் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி கேள்வி கேட்க சொல்லிக்கொடுத்திருப்பார்களோ என சந்தேகமும் வந்தது. தமிழில் சொன்னால், நாமாவது கேட்டு அறிவு வளர்த்துக்கொள்ளலாம் என நினைத்தால், ஆங்கிலத்தில் வகுப்பை நடத்திக்கொண்டிருந்தார். சோகம்.

மதிய சாப்பாட்டு நேரத்தை நேரம் நெருங்கி கொண்டிருந்தது. இவ்வளவு நேரமும் ஐ பேடிலிருந்து சரியாக இரண்டு அடி தள்ளி இருந்த குட்டிப்பெண் அந்த ஐ பேடை வேகமாக கையில் எடுத்தாள். ”வகுப்பு எவ்வளவு நேரம்?” என அலுவலக உதவியாளரிடம் கேட்டேன். ”12.45” வரை என்றார். ”மதியம் வகுப்பு கிடையாதா?” என்றேன். ”இல்லை” என்றார். நேரம் பார்த்தேன். 12.45. அந்த குட்டிப்பெண்ணுக்கு பக்கா டைமிங் சென்ஸ்.

அவள் அவ்வளவு ஆர்வமாய் என்ன பார்க்க ஆரம்பித்தாள் என கவனித்துப் பார்த்தேன். முதல் நாள் ஏதோ வேலை பிசியில் இருந்ததால், தமிழ் நாடகங்களை வீட்டில் பார்க்க முடியவில்லை போல! கண் கொட்டாமல், பொறுப்பாக ஒவ்வொரு நாடகமாக பார்க்க ஆரம்பித்தாள். அதற்கு பிறகு வீட்டுக்கு கிளம்பும் வரை அந்த ஐ பேடை கீழே வைக்கவேயில்லை. நாடகங்களும் முடிந்தபாடில்லை.

கொரானாவிடம் வேண்டிக்கொண்டேன். "எங்கள் குழந்தைகளை தமிழ் நாடகங்களிலிருந்து காப்பாற்று!"

Picture உபயம் : இணையம்