> குருத்து: அந்த நாள் (1954) ஒரு கொலையும் தொடர் விசாரணையும்

October 9, 2025

அந்த நாள் (1954) ஒரு கொலையும் தொடர் விசாரணையும்


1943 காலக்கட்டம். ஜப்பான் ஆங்கிலேயரை எதிர்த்து இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்டிருந்த காலம். சென்னையில் குண்டு வீசுகிறது. எங்கும் மின்சாரம் இல்லை. பயத்தில் ஊரை விட்டு எல்லோரும் வேறு வேறு இடங்களுக்கு இடம் நகர்கிறார்கள்.

திருவல்லிக்கேணியில் ஒரு நல்ல வசதியாக இருக்கும் ஒரு ரேடியோ என்ஜினியர் துப்பாக்கியால் சுடப்பட்டு, அவர் வீட்டில் இறந்துகிடக்கிறார். போலீசுக்கு தகவல் போகிறது. அப்பொழுது போலீசு துறையில் இப்படிப்ப்பட்ட கொலைகளை துப்பறியும் சிஐடி விசாரணையை துவக்குகிறார்.

சுடப்பட்டவரின் தம்பி, தம்பி மனைவி, பக்கத்துவீட்டுக்காரர், அவருடைய காதலி என விசாரணையில் ஒவ்வொருவராக உள்ளே வருகிறார்கள். யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டறிந்தார்களா என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

***


1954ல் வந்த படம். ஆனால் இப்பொழுதும் பார்க்க சுவாரசியமாய் இருக்கிறது. குரோசாவின் Rashomon (1950) படம் உலகம் முழுவதும் இப்பொழுது வரை அதன் தாக்கத்தில் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழையும் விட்டுவைக்குமா என்ன?

ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி, சிஐடி பாத்திரத்தில் நன்றாக நடித்திருமிருக்கிறார். வீணை S. பாலச்சந்தர் சிறப்பாக இயக்கியிருக்கிறார். 50களில் பாடல்களின் தாக்கம் மிக அதிகம். அப்பொழுதே ஒரு பாடல் இல்லாமல் எடுத்தது பெரிய விசயம். சண்டைகளும் இல்லை. ஏ.வி.எம் தயாரித்திருக்கிறது.

படம் வந்த பொழுதில், பெரிய வெற்றி அடையவில்லை. ஆனால் இன்றளவும் பேசப்படுகிற படம் என்பது முக்கியமானது.

சிவாஜி தான் முதன்மை பாத்திரம். தன்னைச் சுற்றி எல்லா பாத்திரங்களும் கொ*லைவெ*றியோடு திரிய வைக்கிற எதிர்மறைப் பாத்திரம். அருமையாக செய்திருக்கிறார். நாயகியாக பண்டரிபாயும் சிறப்பு.

கொலை. அது தொடர்பான விசாரணை துவக்கம் முதல், இறுதி வரை எங்கும் திசை மாறாமல் செல்கிறது. படம் முழுவதும் லேசான நகைச்சுவை காட்சிகளிலும் வசனங்களிலும் தூவப்பட்டு இருக்கிறது. மொத்த படமும் 130 நிமிடங்கள் தான். எல்லா பாத்திரங்களும் உடனுக்குடன் நேரடியாக சொல்வது கொஞ்சம் இயல்பாக இல்லை. அதை கொஞ்சம் இயல்பாக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, படம் சொல்கிற படி, ஜப்பான் தமிழ்நாட்டில் குண்டு வீசியதா? என தேடிப்பார்த்தால், இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனை பலவீனப்படுத்துவதற்காக கல்கத்தா, அந்தமான் வரை குண்டு வீசியிருக்கிறது. அதை கதைக்காக சென்னை மாகாணம் வரை இழுத்துவிட்டிருக்கிறார்கள்.

திரில்லர் ரசிகர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம். பிரைமில் இருக்கிறது. யூடியூப்பிலும் நல்ல பிரதி கிடைக்கிறது.

0 பின்னூட்டங்கள்: