இன்றைக்கு (15/11/2025) மாலை மதுரையில் இருந்து நண்பன் வேலு அழைத்து.. இரமேஷ்குமார் அவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை போகும் வழியில் உயிர் பிரிந்துவிட்டதாகவும், இழப்பின் பிரிவு தாங்க முடியாது விசும்பலுடன் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில்
சக்தியின் துணைவியார் உமாவும் அதே தகவலை ரூபனிடம் பேசி உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.
அவருடைய குரலிலும் வலி தெரிந்தது.
எங்களுக்கெல்லாம்
அவர் அப்படித்தான். அத்தனை வாஞ்சையுடனும் அன்புடனும் எங்களிடம் பழகியவர். அதிர்ந்து
பேசாதவர். சமூக கோளாறுகளை பேசும் பொழுது தான் கோபப்பட்டு பேசியதை பார்த்திருக்கிறேன்.
கடந்த
30 ஆண்டுகளுக்கும் மேலாக
தொடரும் தோழமை உறவு. சமூகத்தில் உள்ள கோளாறுகளுக்கு என்ன காரணம் பதினேழு வயதில் தேடிக்கொண்டிருந்த பொழுது, அறிவுச் சுடர் மையம் அறிமுகமானது. அதன் வழியாக அறிமுகமானவர் தோழர் இரமேஷ்குமார் அவர்கள்.
ரயில்வேயில் சீனியர் அலுவலராக அப்பொழுது பணியாற்றிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிறும் மாலை வேளையில் பல்வேறு சமூக தலைப்புகளில் விவாதிக்கும் பொழுது அவரும் எங்களோடு இணைந்து இருப்பார்.
பயணங்களின்
மீது அத்தனை பிரியம் அவருக்கு. அவரிடம் இருந்து எங்களிடம் அது வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டது
எனலாம். தோழர் உமா – சக்தி தம்பதியினரின் மகள்
திருமணத்திற்கு அவருடன் ரயிலில் பயணித்தது இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது.
அவருக்கு
புத்தகங்களின் மீது அத்தனை காதல் இருந்தது.
பரிசாக எல்லோருக்கும் புத்தகம் வழங்கும் பழக்கம் இருந்தது. அவர் வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார். உரிமையோடு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படிப்போம்.
புத்தகங்களுக்காக
ஒரு பதிப்பகம் துவங்கவேண்டும். புத்தக கடை ஒன்றை உருவாக்கவேண்டும் என ஒரு சில ஆண்டுகள்
நிறைய முயன்றார். அவருடைய இயல்பில் அதனை சாத்தியப்படுத்த
முடியவில்லை.
அது போலவே
நல்ல தமிழில் இயல்பாக பேசுவதையும், அழகு தமிழில் ஆங்கில கலப்பு இல்லாமல் எழுதுவதையும்
வழக்கமாக கொண்டிருந்தார். எத்தனை இளையவர்
என்றாலும், அய்யா என பேசுவதை இயல்பாக்கி வைத்திருந்தார். எப்பொழுது போனில் அழைத்தாலும், ”வணக்கம்” என சொல்வதை
வழக்கமாய் வைத்திருந்தார்.
யோசித்துப்
பார்த்தால் பல நல்ல பண்புகளை அவரிடம் இருந்து கற்றிருக்கிறோம் என புரிகிறது.
சில ஆண்டுகளுக்கு
முன்பு ஒருமுறை மாடியில் ஏணியில் இருந்து தவறி விழுந்ததில் இருந்து உடல் நலக்குறைவு
ஏற்பட்டது எனலாம். அதற்கு பிறகு அவரிடம் போனில்
பேசுவது மிகவும் குறைந்து போய்விட்டது.
2024ல் -
கதிர் ஷாலினி சென்னையில் நடைபெற்ற பொழுது, நண்பர்கள் பலரும் கலந்துகொண்டோம். மகிழ்வாக நினைவாக இருந்தது.
கடந்த செப்டம்பரில்
சென்னைக்கு வந்திருந்த பொழுது அவருடைய துணைவியாரான
மணிமேகலை அவர்களுக்கு (எங்களுக்கு எல்லாம் அக்கா) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேரில் போய் பார்த்த பொழுது, ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு
வந்தேன். மூத்த மகன் கதிரின் ( ஷாலினி) துணைவியாருக்கு
விரைவில் குழந்தை பிறக்க போகும் செய்தியைப் சந்தோசமாய் பகிர்ந்துகொண்டார்.
சில நாட்களிலேயே
கதிருக்கு குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியுடன் போனில் பகிர்ந்தார். “சார்! நீங்க
தாத்தாவாகிவிட்டீர்கள்” என்றேன் சிரித்துக்கொண்டே. “நான் தாத்தான்னா நீயும் தாத்தா!தான்” என்றார்.
எங்களை விட வயதில் மூத்தவராக இருந்தாலும்,
எங்களை விட மனதளவில் இளமை ததும்புவராக தான் இருந்தார்.
60+ வயதில்
அவரை இழப்போம் என எங்களது நண்பர்களில் யாருமே நினைக்கவில்லை.
இரமேஷ்குமார்
சாரை இழந்து மணிமேகலை அக்கா எப்படி இருப்பார் என வருத்தம் மேலிடுகிறது. கதிர் – ஷாலினி,
வண்ணநிலவன் என அனைவருக்கும் எங்களது ஆறுதல்கள்.
நன்றாக நினைவிருக்கிறது.
கடிதங்களில், கட்டுரைகளில் இறுதியாக “எந்நாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்” என எழுதி..
ஒரு குட்டி யானை துள்ளலோடு அசைந்தாடி செல்வது போல படம் வரைந்து கையெழுத்திடுவார். அது அவரைப் பற்றிய உருவகம் எங்களது மனதிலும்!
போய் வாருங்கள்
இரமேஷ்குமார் சார்! எங்களது நினைவுகளில் எப்பொழுதும்
வற்றாத இளமையுடன் தங்கியிருப்பீர்கள்!!
தோழமையுடன்…
-
இரா.
முனியசாமி


0 பின்னூட்டங்கள்:
Post a Comment