> குருத்து: June 2008

June 16, 2008

வறுமைக்கோடு என்றால்!
முன்குறிப்பு : பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளின் வரிசையில், இப்போழுது 'வறுமைகோடு" பற்றி.

சகலருக்கு புரியும் படி எளிமையாக பத்திரிக்கையாளர் ஜவஹர் எழுதியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.

'சுதந்திரம்' கிடைத்து, 60 ஆண்டுகள் கழித்தும் வறுமைக்கோடு பற்றி இன்றைக்கு பேசுகிறோம். அவ‌ல‌ம் தான்.

இந்தியாவையும், உலகையும் குத்தி குத‌றுகிற‌ கழுகான‌ அமெரிக்கா, இந்திய‌ர்க‌ள் தின்று தீர்ப்ப‌தால் தான் உல‌கில் உண‌வு ப‌ஞ்ச‌ம் என்கிற‌து. நாமும் அமைதியாக‌ கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

*******

"வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் 23 கோடியே 77 லட்சம் பேர்" என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுக்ராம் தெரிவித்துள்ளார். 1987-88ம் ஆண்டுக் கணக்கின்படி இந்த நிலவரம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேர்கோடு தெரியும்... வளைகோடு தெரியும்... அது என்ன வறுமைக்கோடு?

வறுமையில் வாடுவோர் இத்தனைபேர் என்று சொல்ல வேண்டியது தானே?

அப்படியென்றால் வறுமை என்றால் என்ன?

உடனே நீங்கள் பதில் சொல்லிவிடுவீர்கள்.

"உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கே தட்டுப்பாடு உள்ள நிலைமைதான் வறுமை" என்று.

ஆனால் அரசும், பொருளாதார நிபுணர்களும் உங்களது வரையறையை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உணவு என்றால் என்ன உணவு? கஞ்சியா? கூழா அல்லது பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்த நல்லுணவா? உடை என்றால் என்ன உடை? காடாத் துணியா? 'கார்டன் வரேலியா'?

உறையுள் என்றால் எட்டடிக் குச்சா? எட்டடுக்கு மாளிகையா?

மருத்துவ வசதி என்றால் சுக்குக் கசாயாமா? அப்பல்லோ ட்ரீட்மெண்ட்டா?

கல்வி என்றால் ஓரோன் ஒண்ணு. ஈரோன் ரெண்டு என்னும் ஆரம்பக் கல்வியா? அல்லது தியரி ஆப் ரிலெட்டிவிட்டி குவாண்டம் தியர் என்று மிரட்டும் உயர் கல்வியா?

இவற்றில் எது கிடைக்கவில்லை என்றால் வறுமை? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நாம் அப்படியே திகைத்துப்போய் நிற்கிறோம். உடனே வெற்றிப் புன்னகையுடன் அவர்களே பதிலும் சொல்கிறார்கள்.

"நகரத்தில் உள்ள ஒருவர் சராசரியாக 2100 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். கிராமத்தில் உள்ளவர் சராசரியாக 2400 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். இதற்குக்கூட வசதி இல்லாத நிலைமைதான் வறுமை.இந்த 2100-2400 கலோரி உணவு தான் வறுமைக்கோடு. இந்த அளவுக்குச் சாப்பிட வசதி இல்லாதவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் ஆவர். இந்த அளவுக்கோ அல்லது அதிகமாகவோ சாப்பிட வசதி உள்ளவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் ஆவர்" என அரசின் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கலோரி என்றால்?

ஒரு கிராம் எடையுள்ள தண்ணீரை ஒரு டிகிரி சூடாக்கத் தேவைப்படும் வெப்ப சக்தியின் அளவு ஒரு கிலோ கலோரி.

மனிதன் வேலை செய்ய, உயிர் வாழ சக்தி தேவை. வேலை செய்யும் போது உடம்பில் உள்ள சத்து எரிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யச் சாப்பிட வேண்டும். உணவில் உள்ள சத்து உடம்பில் சேர்கிறது. மீண்டும் வேலை செய்யும் பொழுது மீண்டும் சத்து எரிக்கப்படுகிறது. இது ஒரு சுழற்சி. உணவில் இருந்து கிடைக்கும் இந்த சக்தியும் 'கிலோ கலோரி' என்ற அதெ அளவிலேயே அளக்கப்படுகிறது. நடைமுறையில் சுருக்கமாகக் 'கலோரி' என்றே குறிக்கப்படுகிறது.

சுலபமாக புரியும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்த்தால் விசயம் விளங்கிவிடும்.

ஒரு இட்லிக்கு - 75 கலோரி கிடைக்கிறது

ஒரு மணி நேரம் நடந்தால் - 160 கலோரி செலவாகிறது.

ஒரு வேளைக்கு ஒரு கிண்ணம் சோறு - வெறும் சோறு மட்டும் சாப்பிட ஒருவருக்கு வாய்ப்பு வசதி இருக்கிறதா? அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே இருக்கிறார். அவர் ஏழை அல்ல.

அப்படியென்றால் அவர் பணக்காரரா? இல்லை. 'ஏழை அல்லாதவர்' (Non-poor) அப்படித்தான் அரசு சொல்கிறது.

நகரத்தில் உள்ள ஒருவர் 2100 கலோரி உணவு சாப்பிட வாய்ப்பு இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர் என்பது அரசின் கணிப்புதானே. அதன்படி பார்த்தால் சுமார் ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள கிண்ணத்தில் இருக்கும் சோற்றில் 700 கலோரி சக்தி இருக்கிறது.

ஒருவேளைக்கு கிண்ணம் என்று மூன்று வேளைக்கு மூன்று கிண்ணம் வெறும் சோறு சாப்பிட்டால் 2100 கலோரி சக்தி கிடைத்துவிடும். அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே போய்விடுவார். அவர் ஏழை அல்ல, 'ஏழை அல்லாதவர்'!

அப்படியானால் மற்ற தேவைகள்? அதற்கும் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்கீடு செய்துவிடலாம். மொத்தத்தில் ஒரு கணவன், ஒரு மனைவி, மூன்று குழந்தைகள் ஆகிய 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 988 ரூபாய் செலவிடும் சக்தி இருந்தாலே மேற்சொன்ன தேவைகள் அனைத்தும் கிடைத்துவிடுமாம். அந்தக் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களாம்.

இதில் கணவன் மட்டும் வேலை பார்த்தாலும் சரி... அல்லது மனைவி, குழந்தைகள் அனைவருமே வேலை பார்த்தாலும் சரி... மொத்தத்தில் அந்தக் குடும்பத்தினர் மாதத்துக்கு 988 ரூபாய் செலவழிக்கிறார்களா? அப்படியானால் அவர்கள் ஏழை அல்ல! இவ்வாறுதான் அரசு நிர்ணயித்திருக்கிறது. (இப்போது இந்தத் தொகை சற்று உயர்த்தப்பட்டுள்ளது)

இதில் மற்றொரு சோகம் என்னவென்றால், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களில் சுமார் 80% பேர் உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச உணவுக்கும், வழியின்றித் தவிக்கிறார்கள் என்பதையும் அரசின் புள்ளிவிவரமே தெரிவிக்கிறது.

எனவே, இந்த வறுமைக்கோட்டுக்கு நிர்ணயமே சரியல்ல; வறுமையின் தீவிரத்தையும், வறியவர்களின் எண்ணிக்கையையும் இது குறைத்துக் காட்டுகிறது என்று அரசு சார்பற்ற பொருளாதார நிபுணர்கள் பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனெனில்-

ஏழைகள் பெரும்பாலோர் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவர்கள் தான். அவர்களுக்கு 2100 கலோரி. 2400 கலோரி என்ற அளவு நிச்சயமாகப் போதாது. இத்தகைய ஆண்களுக்கு 3900 கலோரியும், பெண்களுக்கு 3000 கலோரியும் தேவை. ஆனால் வறுமைகோட்டுக்கு 2100-2400 என்ற சராசரி கணக்குத்தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வறுமைக்கோட்டுக்கு நிர்ணயம் உணவுக்கு மட்டுமே ஓரளவு முக்கியத்துவம் தருகிறது. உடை, வீடு, மருத்துவ வசதி, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை. எனவே இது உண்மையில் 'வறுமைக்கோடு' அல்ல. பஞ்சைக்கோடு-பராரிக்கோடு (Not poverty line but 'destitution line')

கணவன், மனைவி குழந்தைகள் ஆகிய அத்தனை பேரும் வேலை பார்த்துச் சம்பாதித்து மாதத்துக்கு 988 ரூபாய் செலவழித்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று நிர்ணயிக்கப்படுவது அபத்தம். இப்படிச் சராசரி செலவினத்தைக் கொண்டு நிர்ணயிப்பதைவிட, சராசரி நபர் வருமானம் என்பதைக் கொண்டு நிர்ணயிப்பது ஓரளவுக்கு உண்மையான நிலவரத்தைக் காட்டும் என்றெல்லாம் பொருளாதார நிபுணர்கள் பலர் கூறுகிறார்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது.

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 77 லட்சம்; இதில் 2100 கலோரியை விடக் குறைவாகப் பெறுபவர்களின் சதவிகிதம் 78.2 என்று சொல்லும் பொழுது இதெல்லாம் உயிரற்ற வெறும் எண்கள் அல்ல; ரத்தமும், சதையும், ஜீவனும் கொண்ட நமது சக மனிதர்கள்.. இந்த மனிதர்களின் அவலங்கள்...

18.08.2002 - ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

June 5, 2008

பணவீக்கம் என்றால் என்ன?


முன்குறிப்பு : இந்தியாவில் எல்லா பத்திரிக்கைகளிலும் அடிக்கடி அடிபடுகிற வார்த்தை பணவீக்கம். இன்றைக்கு பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தினால், ஏற்கனவே இருக்கிற பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதியமைச்சர் சிதம்பரமும் வேறு வழியே இல்லாமல் தான், இந்த விலையேற்றம் என்கிறார்கள். ஏற்கனவே வாங்குகிற சம்பளம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது, இந்த விலையேற்றம் இன்னும் மக்களை வாட்டி வதைப்பதாக இருக்கும்.

நம்பி, வாக்களித்த மக்களுக்கு "வேறு வழியே இல்லாமல்" தான் என பொறுப்பற்ற முறையில் சொல்கிற இவர்கள் தான் உலக வங்கிக்கும், உலக வர்த்தக கழகத்துக்கும் ஆகச் சிறந்த விசுவாசிகளாக இருக்கிறார்கள்.

இங்கு விலைவாசி உயர்வுக்குக்காக போராடுகிற பா.ஜனதா, அதிமுக, பா.ம.க., ம.தி.மு.க, சி.பி.எம்., என தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என எல்லோரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் தான். இப்பொழுது, மக்களின் எதிர்ப்பை வாக்கு வங்கியாக மாற்றப்பார்க்கிறார்கள்.
******

பணவீக்கம் என்ற சொல் வணிகவியல் சார்ந்த கலைச்சொல். "பணவீக்கத்தை" பற்றிப் புரிந்து கொள்ள தேடியதில், பத்திரிக்கையாளர் ஜவஹர் எளிமையாக எழுதி இருந்தார்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

******

கை வீங்கும், கால் வீங்கும், பணம் வீங்குமோ?

கையோ, காலோ... அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் அது வீக்கம்!

அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - பேப்பர் கரன்ஸி - ரூபாய் நோட்டுகள் அதிகமானால் அதுவே பணவீக்கம்!

மார்க்கெட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. மக்களிடம் ரூ. 200 கோடி ரூபாய் பணம் இருந்தால்...?

அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். பொருட்களின் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே பொருட்களை 200 கோடி ரூபாய் வரை விலை ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. விலைவாசி உயர்கிறது. அதாவது உயர்த்தப்படுகிறது.

மற்றொரு நிகழ்வைப் பார்க்கலாம். மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மார்க்கெட்டில் பொருட்களின் சப்ளை குறைத்துவிடுகிறது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வந்திருக்கின்றன. என்ன ஆகும்?

அப்பொழுதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். விலை உயரும்... அதாவது உயர்த்தப்படும்.

இவ்வாறு பணப்புழக்கம் அதிகரித்தால் அல்லது சப்ளை குறைவின் காரணமாக, இருக்கும் பணமே அதிகம் என்று ஆகிவிட்டால் ("Too munch of money, chasing too few goods...")
அந்த நிலையே பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பணப்புழக்கம் எப்படி அதிகரிக்கிறது?

நமது நாட்டில் ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அதாவது வரவை விட செலவு அதிகம்.

இப்படித் துண்டு விழும் செலவைச் சமாளிக்க அரசு வெறும் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துத் தள்ளுகிறது. பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்கிறது. விளைவு? பணவீக்கம்!

தனியார்துறைக்கு அளவுக்கு அதிகமாக பணத்தைக் கடனாக அளிப்பதாலும் பணப்புழக்கம் அதிகமாகி, பணவீக்கம் அதிகரிக்கிறது.

எனவே, இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டு. ஆனால் மன்மோகன்சிங் ஒன்றை மட்டும் சொல்கிறார்.

"பட்ஜெட் பற்றாக்குறையை - செலவை - குறைக்க வேண்டும்". எப்படி?

ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசிக்கு மானியமா? மானியத்தை வெட்டு! விலையை உயர்த்து. விவசாயிகளுக்கான உரத்துக்கு மானியமா? வெட்டு! விலையை உயர்த்து!

இதே மாதிரி சாதாரண மக்களுக்குத் தேவையான பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் பஸ், ரயில் மற்றும் இதே போன்ற சேவைகளுக்கும் அளிக்கப்படும் மானியம் தொடர்ந்து வெட்டப்படுகிறது. விலை, கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

கடைசியில் சராசரிக் கணக்கு - மொத்தக் கணக்கு போட்டு பணவீக்கம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

அப்படியானால், செலவைக் குறைக்க, வரவை அதிகரிக்க என்னதான் செய்வது?

* நமது நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அதைக் கைப்பற்ற வேண்டும்.

* கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரி பாக்கியைக் கறாராக வசூலிக்க வேண்டும்

* அரசு நிர்வாகத்திலும் பொதுத்துறையிலும் மண்டிப் போயிருக்கும் ஊழலைத் துடைத்தெறிந்தால் அவை வற்றாத கங்கைதான்.

* ஏழை மக்களுக்கான மானியத்தை வெட்டுவதற்குப் பதிலாக, ராணுவம் மற்றும் இது போன்ற உற்பத்தி தொடர்பற்ற சமாச்சாரங்களுக்குக் கோடானு கோடி ரூபாய் கொட்டி அழுவதை வெட்டி சுருக்க வேண்டும்

* நூறு கோடி ரூபாய்க்குத் திட்டம் போட்டு அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து, விலைவாசி உயர்ந்து, கடைசியில் அதே திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றும் அராஜகத்தை நிறுத்த வேண்டும்.

- இவற்றைச் செய்தாலே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குத் தேவை இருக்காது. அதன் மூலம் ஏற்படும் கரன்ஸி நோட்டு அச்சடிப்பும் பணவீக்கமும் இருக்காது.

- ஜவஹர், 9.10.1992ல் ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

******

பின்குறிப்பு :

ஜவஹர் சொல்கிற வழிமுறைகள் எளிதாய் தோன்றும். ஆனால், அதை நிறைவேற்றுகிற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் பேர் வழிகள். கடைந்தெடுத்த காரியவாதிகள். காரணமானவர்களே அதை களைவார்கள் என்பது, "திருடனாய் பார்த்து திருந்துகிற கதை தான்".
நடைமுறை சாத்தியமில்லை.

அரசியல் அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றும் பொழுது, இவை எல்லாம் எளிதாய் நடைமுறை சாத்தியமாகும்.