> குருத்து: November 2011

November 25, 2011

பதிவர்களின் திரை விமர்சனங்கள்!


எங்கெங்கோ தொலைவில் கிடக்கும் 'கனவு கன்னிகளின்' 'நல்ல' படங்களை சிரமப்பட்டு தேடி, வாசகர்களுக்கு தருவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். விமர்சனத்தில் அந்த அக்கறையை கொஞ்சம் காட்டலாம்.

திரைப்படம் பற்றி எப்படி எழுதினாலும், படிப்பதற்கு ஆள்கள் கிடைக்கிறார்கள் என அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள்.

பத்திரிக்கை உலகில் 'கவர் பண்பாடு" உண்டு. பதிவர்கள் காசு வாங்காமலே, வாங்கியது போல எழுதுகிறார்கள்.

விமர்சனம் என்கிறார்கள். போகிற போக்கில் அசிரத்தையாக வேடிக்கைப் பார்த்தவனின் குறிப்புகளாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன.

படத்தின் சாரம் எதைப்பற்றி விவாதிக்கிறது! என்ன விசயத்தை பார்வையாளின் மூளையில் பதிக்கிறது என கவலை கொள்ளாமல், படம் கல்லா கட்டுமா! என தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் போல மிகுந்த கவலையுடன் பேசுகிறார்கள்.

மழையில் நனைந்து, வெயிலில் வாடி, பணத்தையும் தொலைத்து, மூன்று மணி நேரம் தங்கள் அருமையான காலத்தையும் துறந்து படம் பார்க்கிறார்கள். ஆனால், பதிவை பத்து நிமிடத்தில் எழுதி, படிப்பவர்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள்.

யாராவது வாசகர்களின், ரசிகர்களின் மீது அக்கறை கொண்டு, படத்தைப் பற்றி ஆழ்ந்து நான்கு பக்கத்திற்கு எழுதினால், திட்டுகிறார்கள்; எதிர்மறையாக சிந்திக்கிறார்கள் என தங்களை 'நேர்மறையின்' ஆதரவாளர்களாக பறைசாற்றி கொள்கிறார்கள்.

வாசகர்கள் தங்கள் விமர்சனத்திற்காக காத்துக்கொண்டிருப்பார்கள் என பதட்டத்தில், பதிவர்கள் பல மோசமான படங்களில் சிக்கி கொள்கிறார்கள். அவர்களின் மீதான அக்கறை தான் இந்த பதிவு.

November 20, 2011

மன்னிப்பு கேட்கவேண்டும்!


பால், மின்சார கட்டணம், பேருந்து கட்டண உயர்வு குறித்து எழுதும் பொழுது,

"மக்களின் மீது சுமையை ஏற்றலாம். பாறாங்கல்லை வைத்தால், செத்துவிடுவார்கள்" என தினமணி வைத்தியநாதன் எழுதுகிறார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுகிற உத்தரவு குறித்து, எழுதும் பொழுது,

"திருவள்ளுவர் சிலையை தூக்கிவிட்டு, அம்மாவின் சிலையை அங்கு வைப்பதாய் கார்ட்டூன் படம் போடுகிறது" ஆனந்தவிகடன்.

இராஜூவ் காந்தி வழக்கில், மூவர் தூக்கு குறித்து, நீதிமன்றத்தில் பதில் தாக்கல் "அரசுக்கு ஒன்றும் கருத்தில்லை. நீங்கள் தூக்கை நிறைவேற்றிக் கொள்ளலாம்" என கூறிய பொழுது, தமிழ் அமைப்புகள் எல்லாம் புலம்பி தீர்த்தார்கள்.

அம்மா திருந்திவிட்டார் என தேர்தல் சமயங்களில் மாய்ந்து, மாய்ந்து எழுதி தீர்த்த, மேடைகள் தோறும் பேசி திரிந்த எல்லோரும் "ஜெ. திருந்தவில்லை. இன்னும் மக்கள் விரோத தனம் கூடியிருக்கிறது" என ஒழுங்கு மரியாதையா மக்களிடையே பிரச்சாரம் செய்யவேண்டும் என நாம் அனைவரும் கோரவேண்டும்

November 16, 2011

கருத்தரங்கம் - மாருதி தொழிலாளர்களிடமிருந்து அனுபவம் கற்போம்!


மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்!
பாடம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்!

கருத்தரங்கம்

20.11.2011

ஞாயிறு காலை 10.00 மணி

சீனிவாசா திருமண மண்டபம்
கல்லறை பேருந்து நிலையம் அருகில்
பூந்தமல்லி
*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர்.சி.வெற்றிவேல் செழியன்
அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை:
மாருதி தொழிலாளர்களின் வெற்றி;
அனுபவம் கற்போம்!

தோழர் பா.விஜயகுமார்
பொருளாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

வால்ஸ்ட்ரீட் முற்றுகை;
திணறும் முதலாளித்துவத் தலைமை பீடம்!

தோழர் சுப.தங்கராசு
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

நன்றிரை:

தோழர் இரா.ஜெயராமன்
இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு
**************************************

தொடர்புக்கு:

தோழர் அ.முகுந்தன், 110,2 ஆம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம், 63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை -24. தொ.பே: 9444834519

அனைவரும் வருக! அனுபவம் பெறுக!

November 15, 2011

இன்றைய நிலவரம்! - கவிதை!


காலுக்குத் தொப்பியும்
தலைக்குச் செருப்பும் அணியுமாறு
இந்த நிமிடம் வரை உத்தரவு
எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.


கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்
காதிருக்கும் இடத்தில் காதுமே
இருந்துவிட்டுப் போகட்டுமென்று
மாட்சிமை தங்கிய அரசு
குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது,
கருணையுடன்…..

தொடர்ந்தும் வாய் வழியாகவே
உண்பதைமாற்றுவது குறித்து
இன்றைய அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்.

ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்
மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.

உலகிலேயே முதன் முறையாக
தண்டவாளத்தில் பேருந்து,
தார் ரோட்டில் ரயில்
துறைமுகத்தில் விமானம்,
விமான நிலையத்தில் கப்பல் என்று
அரசு எடுத்துவரும்
ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு
குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.


பிரசவ ஆஸ்பத்திரியை
சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
நாட்டையே சுடுகாடாக மாற்றும்
திட்டம் படிப்படியாக நிறைவேறும்.

கோன் எவ்வாறோ குடிமக்களும்
அவ்வாறேயானபடியால்
அவர்களும்
எதையும் எப்போதும்
ஒரே இடத்தில்
நீடித்திருக்க விடமாட்டார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

****

நன்றி: ஆதவன் தீட்சண்யா

முதல் பதிவு: ஜூனியர் விகடன் 13/11/2011 இதழ்

November 10, 2011

உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்! - தொ. பரமசிவன்


நன்றி : சித்திரவீதிக்காரன்

முன்குறிப்பு: இரண்டு நாள்களுக்கு முன்பு, நல்லூர்முழக்கம் தளத்தில் இந்த கட்டுரையை படித்தேன். என் நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி வைத்தேன். மறுகாலனியாதிக்க தாக்குதலில் வாழ்கிறோம். தொ.பரமசிவம் அவர்களின் இந்த உரை பண்பாட்டு தளத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து அக்கறை கொள்கிறது. எனக்கு பிடித்த ஆளுமைகளில் தொ.ப.வும் ஒருவர். அனைவரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய பதிவு. படியுங்கள். நன்றி

*****

மதுரை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் “உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவரான தொ.பரமசிவன் அய்யா ஆற்றிய நீண்ட உரையை எனது அலைபேசியில் பதிந்து என் நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். உலகமயமாக்கலுக்கு எதிரான அவரது உரையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். தொ.பரமசிவன் அய்யாவின் உரையை தொகுத்ததில் எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் அமைந்தால் என்னையே சேரும். மற்றபடி எல்லாப்புகழும் தொ.பரமசிவன் அய்யாவுக்கே! என்னால் அய்யாவிடம் தமிழ் கற்க முடியவில்லை என்ற ஏக்கத்தை நான் கேட்ட அவரது பல உரைகள் போக்கியது. எனவே, நானும் தொ.ப’வின் மாணவன்தான். தொ.ப’வின் அற்புதமான உரையை அனைவரும் வாசியுங்கள்!

பேசுகிற இடம் மதுரை. பேசப்படுகிற விசயம் புத்தகம். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில் தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன. ‘கலித்தொகை’ என்ற செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ‘பரிபாடல்’ என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம். அப்பேற்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு. இந்த ஊரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல்.

“உலகமயமாக்கலில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு.

புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது. நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது. எனக்கு இங்கு வந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் சந்தை என்று போட்டிருப்பார்கள். இங்கு புத்தகத் திருவிழா என்று போட்டிருக்கிறார்கள். “திருவிழா என்பது கொண்டாடப்பட வேண்டியது. அதே போல் புத்தகங்களும் கொண்டாடப்பட வேண்டியவை”.

உலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது? மதுரையை எப்படி மதுரைமயமாக்குவது? மதுரையை வண்ணமயமாக்கவேண்டும், ஒளிமயமாக்கவேண்டும் என்று சொல்லுங்கள். புரிகிறது. ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடையிது. இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள். அதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. நான் கட்சி அரசியலை சொல்லவில்லை.

உலகமயமாக்குவது என்றால் உலகையே சந்தையாக மாற்றுவது. உலகிலே சந்தை மட்டும் இருந்தால் போதுமா? இம்மதுரையிலே சந்தையும் இருக்கும், தமுக்கமும் இருக்கும், மீனாட்சிகோயிலும் இருக்கும், மனநோயாளிகளுக்கான மருத்துவமனையும் இருக்கும். சந்தையில் ஐந்து வயது சிறுவர், சிறுமிகளுக்கு இடம் இருக்க முடியுமா? அல்லது கம்பூன்றி நடக்கும் வயதானவர்களுக்கு இடம் இருக்குமா? வயதானவரை தெருவில் பார்த்தால் ஒதுங்கி நடப்போம். ஆனால் சந்தையில் “சந்தையில இடிக்கிறதெல்லாம் சகஜம்” என்று போய் விடுவார்கள். பாக்கெட்டில் பணமில்லாதவனுக்கு சந்தையில் இடமிருக்குமா? கன்னிப் பெண்களுக்கு அங்கு இடமிருக்குமா?

சந்தை என்பது வாங்குவதற்கான இடமே தவிர அங்கு மனித உறவுகள் மலராது. சிறைச்சாலைகளில் கூட மனித உறவுகள் மலரும். மருத்துவ மனைகளில் கூட மனித உறவுகள் மலரும். நான் ஒரு மாதம் மருத்துவ மனையில் இருந்தேன். பக்கத்து அறையில் இருந்தவர்களெல்லாம் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் சந்தையில் “அஞ்சால் விற்றால் லாபம் என்றால் அஞ்சால் விற்போம். நஞ்சை விற்றால் லாபம் என்றால் நஞ்சை விற்போம்”. இது சந்தையின் தன்மை.

உலகமயமாக்கலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். அறிஞர்கள் எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு. நமது பண்பாட்டை குலைப்பதற்கான முயற்சி. இதை பண்பாட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.

பண்பாடு என்பது பொருள் உற்பத்தியில் தொடங்குகிறது. ஒரு குழந்தை இலையில் தனக்கான பீப்பியை செய்து கொள்கிறது. தனக்கான வண்டியை செய்து கொள்கிறது. தனக்கான காகிதப்பையை செய்து கொள்கிறது. இப்படி தனக்காக செய்து கொள்கிறபோதுதான் கலாச்சாரம் பிறக்கிறது. பொருள் உற்பத்தியில்தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாசாரம் உடையவன் ஆகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்து போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக்க முயல்கிறார்கள். சந்தையில் எதைவிற்றால் லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது.

மரபு வழியான அறிவுச்செல்வத்தைத் (இதைத்தான் மார்க்ஸ் ‘’தொகுக்கப்படாத விஞ்ஞானம்’’ என்றார்) திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது உலகமயமாக்கம்.. நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளை கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். கால்ல புண்ணு வந்தா மஞ்சளையும் வெங்காயத்தையும் அரைச்சுப் போடுவோம். இனி எதாவது ப்ரெஞ்ச் கம்பெனியோ, கனடா கம்பெனியோ மஞ்சள், வெங்காயத்தையெல்லாம் நான்தான் கண்டுபிடிச்சேன்னு காப்பிரைட் வாங்கி வச்சுகிருவான். அப்புறம் வெங்காயம், மஞ்சளப் பயன்படுத்த நாம அவன்ட்ட அனுமதி கேட்கணும். பணம் கட்டணும். இப்படி மரபுரீதியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டே கொள்ளையடிக்கிறார்கள். அறிவு என்பது 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. நமக்கு அறிவு பற்றிய சரியான பார்வை இல்லை.

பி.எஸ்.சி ரசாயனம் படிக்கும் மாணவனைப் பார்த்து ரசாயனம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால்தானே அவன் சொல்வான். மனிதன் வேட்டையாடியபோது உணவு மீதம் ஆகி டிஹைட்ரேட் ஆகி நாளை பயன்படுத்தலாம் என்ற போதே ரசாயனம் தொடங்கிவிட்டது. அதில் உப்பைச் சேர்க்கும் போது இன்னும் கொஞ்சநாள் பயன்படுத்தலாம் என்ற போது ரசாயணம் வளரத்தொடங்கியது.

மனிதகுல வரலாறு தெரியாத கல்வி முறையில் வளரும் இன்றைய தலைமுறையில் பண்பாடு பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம். உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்று சொல்லிச்சொல்லியே நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று கேட்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். அதை ஒரு தலைவர் சொன்ன போது ஊரே திரண்டது. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று சொன்னால் சைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இது திருமூலரின் திருமந்திரம். “ஒன்றே குலம், ஒருவனே தேவன் – அவன்தான் இராமன்” என்னும் போது தான் பிரச்சனை வெடிக்கிறது.

எல்லா பிரம்மாண்டங்களும் மனித விரோதமானவை. ஜனங்களின் வாழ்வுக்கு பிரமாண்டம் தேவையில்லை. பிரமாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். 60 மாடி, 70 மாடின்னு கட்டடம் கட்ற போது தானே பின்லேடன் வர்றான். உலகின் அறிவுச் செல்வங்களை கொள்ளையடிக்கவே உலகமயமாக்கம் பயன்படுகிறது. ஆப்ரிக்காவில் உள்ள காடுகளிலும், கடற்கரையோரங்களிலும் இருந்த தாதுக்களைக் கண்டுபிடித்து கொள்ளையடிக்கிறாங்களே அது தான் இன்பஃர்மேசன். இது தான் இன்பஃர்மேசன் டெக்னாலஜி. எதற்கும் பயன்படாத தேரிக்காடு. அங்கே கல்லுமுள்ளும் ஓணானும் குடிகொண்டு இருக்கும். அங்கே தோரியம் இருக்குன்னு சொல்றானே அது இன்பஃர்மேசன். அங்கே பெரிய கம்பெனிக்காரன் வர்றானே அது உலகமயமாக்கம்.

எல்லா இடத்திலும் கையவச்சுட்டு இப்ப சமையலுக்குள்ளயே வந்து கையவச்சுட்டாங்க. பீட்ஸான்னு ஒரு இத இப்ப திங்க கொடுக்கிறாங்க. அதுல என்னா இருக்குன்னு நமக்கு தெரியுமா? நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்னா இருக்குன்னு நமக்கு தெரியும். “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”. நம்ம உணவுச் செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளையடிக்கிறானே அது உலகமயமாக்கம். நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது. திருமலைநாயக்கர் மகாலும், மீனாட்சியம்மன் கோயிலும் மட்டும் நமது முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து அல்ல. தூய நீரும், காற்றும் நமது சொத்தில்லையா? எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பது தான் உலகமயமாக்கம். விற்க முடியாத பொருள் மனிதனிடம் இருக்கிறது.

நாம் இங்கு திருவள்ளுவரையே விற்றுக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் “எற்றிற்கு உரியர் கயவர்?’’ என்கிறார். திருக்குறளுக்கு உயிர் இருக்கிறது. அதை எழுதியவனுக்கு ஆன்மா இருக்கிறது. அதனால் தான் எழுதியவனுக்குச் சாவு இல்லை என்கிறோம். வடநாட்டில் வியாசர் மகாபாரதத்தைச் சொல்ல அதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதியதாக மரபு இருக்கிறது. ஆனால், இதைவிடச் சீரிய மரபு தென்னாட்டில் இருக்கிறது. விநாயகருடைய அப்பா சிவனே திருவாசகம் எழுதியதாக கூறப்படுகிறது. திருவாசகம் காணாமல் போய் அனைவரும் தேடுகிறார்கள். காணவில்லை. ஒரு புத்தகத்தை காணாமல் ஆக்குவது தேசத்துரோகம். அதை தொலைத்தவர்களுக்குத்தான் தெரியும். திருவாசகம் இறுதியில் சிதம்பரத்தில் இருந்தது. சிவபெருமான் கையிலே இருந்தது. சிவபெருமானிடம் கேட்டால் இது என் பெர்சனல் காப்பி என்கிறார். என்னவென்றால் அந்தப் புத்தகத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகன் சொல்ல உடையார் திருச்சிற்றம்பலமுடையார் எழுத்து என்று அதில் இருக்கிறது. இதை ஏன் சிவன் வைத்திருந்தார் எனப் பின்னால் வந்த அறிவியலாளர் தத்துவப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொல்கிறார்: “உலகைப் படைத்து காத்து அழித்து பிறகு மீண்டும் உலகை படைக்கும் முன் உள்ள ஒரு லன்ச் பிரேக்கில் படிக்க ஒரு புத்தகம் வேண்டும் அல்லவா? அதற்குத்தான் போரடிக்காமல் இருக்க சிவன் திருவாசகத்தை வைத்திருந்தார்’’ என கூறுகிறார் தன் மனோன்மணியத்தில். இவ்வாறு கடவுளே ஸ்க்ரைப்பாக இருந்திருக்கிறார் நம் நாட்டில்.

ஒன்றைத் திட்டமிட்டே பழசாக்குவது உலகமயமாக்கம். இந்த வருடம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் அடுத்த வருடம் ஒரு சின்ன மாற்றத்துடன் புதிதாக ஒன்று வரும். இப்படித் திட்டமிட்டுப் பழசாக்கி அடுத்த பொருளை விற்பதுதான் உலகமயமாக்கம். எல்லாவற்றையும் சந்தைப்படுத்திக்கொண்டிருக்கும்போது நாம் இந்த ஏமாளிகளிடம் பண்பாடு பற்றி பேசுவது எல்லாம் முட்டாள்தனம். பண்பாடு பற்றி பேசுவதே நாம் ஏமாளித்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

உலகமயமாக்கம் எழுத்துலகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது எனப் பார்ப்போம். சென்னை புத்தகத் திருவிழாவில் 10 லட்சம் புத்தகம் விற்றிருக்கிறது என சொன்னார்கள். மகிழ்ச்சி. மனிதன் வாசிக்க தொடங்கிவிட்டான். வாசிக்கும் மனிதன்தான் யோசிக்கிறான். சமூகம் மாற்றம் அடையத் தொடங்கியதா எனப்பார்த்தால் மாற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் பாதிக்குப் பாதி வாஸ்து புத்தகங்கள்தான் விற்றிருக்கிறது. இங்கு இப்பொழுது விற்கும் புத்தகங்களைவிட பல மடங்கு குருபெயர்ச்சி பலன் புத்தகம் வித்திருக்கும். குருவே வருசம் வருசம் இடம் பெயர்றார்ன்னா நீ உன் சிந்தனையில் இடம் பெயரக்கூடாதா?

மாறுதல் ஒன்றே மாறாதது. 15 வருசமா அப்படியே இருக்கீங்கன்னு சொன்னா அது உண்மையில்ல. முடி லேசா நரைச்சுருக்கும். வழுக்கை கூடியிருக்கணும். அப்படியே எதுவும் இருக்க முடியாது. மாற்றங்களை உருவாக்குவது புத்தகங்கள். மார்க்சிம் கார்க்கியுடைய தாய் காவியம் போன்ற புத்தகங்கள் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியவை. அறிந்தும் அறியாமலும் படித்த புத்தகங்கள் தான் நமக்குள் ஒரு மாற்றம் ஏற்பட உதவுகிறது. அதென்ன அறியாமல் படித்த புத்தகம்? கொல்லைப்பக்கம் போட்ட தக்காளி திடீர்ன்னு செடியா முளைப்பது போல. நாம் தெரியாமல் இப்படி வாசித்த புத்தகங்கள் தான் அறியாமல் படித்த புத்தகங்கள்.

மனித மனத்திலும் விழும் விதைகள் முளைக்கத் தவறுவதே இல்லை. நான் எங்க ஊர் மாவட்ட நூலகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு புத்தகம் எடுத்தேன். அது சரித்திரத்தை மாற்றிய “அங்கிள் டாம்” புத்தகம் என்று தெரியாமல் அதன் குழந்தைப் பதிப்பின் தலைப்பைப் பார்த்து எடுத்தேன் – தாமு மாமாவின் கதை. இந்த புத்தகத்தை இப்பொழுது காணவே முடியவில்லை. நாம் அடிமையாகவே இருக்க சம்மதித்துவிட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வரியைப் படிக்கும் போது அங்கிள் டாம் புத்தகம் ஞாபகம் வரும். மேல்மண் கீழ்மண் ஆவதும், கீழ்மண் மேல்மண் ஆவதும் வரலாறு. புரட்சியை ஒரு புத்தகம் எப்பொழுதும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.

இப்பொழுது சிலர் தினமும் ஒரு புத்தகம் எழுதுகிறான். என்ன செய்யிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஒரே வரியில் அப்போதிருந்த சாதிக்கோட்பாடுகளை உடைத்த வள்ளுவரிடம் இருந்த கலகக்குரலை விடவா இனி எழுத முடியும்? எழுத்துல எதிர்ப்பு இருக்கலாம். கலகக்குரலாய் எழுதலாம். ஆனால், வெறுப்பு இருக்க கூடாது. இப்ப எழுதும் சிலரின் எழுத்த வாசிச்சா வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். கோவம் வரலைன்னா அவன் மனுசனே இல்ல. கடவுள் பற்றி இருக்காரா, இல்லையான்னு எழுதலாம். பேசலாம். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணத்தினால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது.

எதை வேண்டுமானாலும் எழுதலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உலகமயமாக்கம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்த முயல்கிறது. என்னிடம் வந்து ஒரு இளங்கவிஞர் மழை பற்றிய கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு கேட்டார். “தீங்கின்றி நாடெல்லாம்” என்று சொன்னேன். மழையைப் பார்த்தால் ஒவ்வொரு சமயமும் ஒரு வித்தியாசம் காட்டும். ஒரிசா வெள்ளத்தை பார்த்தால் புரியும் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி” என்ற வரி. அதைப்போலத் தண்ணீர் இல்லாம தவிக்கிறப்ப தெரியும் “நீரின்றி அமையாது” என்ற வரி.

வாசிப்பது மூலம் யோசிக்கிறான். யோசிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறான். உலகமயமாக்கலில் எல்லாவற்றையும் சந்தைப்படுத்துகிறோம். திருக்குறளை மட்டுமல்ல. திருவள்ளுவரையே சந்தைப்படுத்துகிறோம். இன்று எல்லாவற்றையும் விற்க தொடங்கிவிட்டோம். நுகர்வுக் கலாசாரம் ரொம்பப் பெருகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் ஒரு சோப்பு இருந்தது. இப்ப ஆறு பேர் இருக்கிற வீட்ல ஏழு சோப்பு இருக்குது. வெளிநாட்டுக் கம்பெனி எல்லாம் “ஒனக்கு ஒண்ணுந்தெரியாது நான் குடுக்கிறேன் இத சாப்புடு”ன்னு சொல்றான். அதுவும் நம்ம மதுரைல சொல்லலாம்மாங்க? தினம் ஒரு கண்டுபிடிப்பா கண்டுபுடிக்கிற ஊரு. போண்டாக்குள்ள முட்டைய வைச்சு கண்டுபுடிச்ச ஊரு. கென்டகி சிக்கன்னு ஒரு கம்பெனி நான் கோழிக்கறி தர்றேன். அத சமைன்னு சொல்றான். நம்ம ஊருல நம்ம பொண்ணுகளுக்கு கோழிக்கறி சமைக்கத் தெரியாதா?

மருத்துவ சம்மந்தமான அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. இதற்காகவே ஆராய்ச்சி பண்ண ரொம்ப பேர் இங்கு வந்து இருக்காங்க. இதற்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் பணங்கொடுக்கிறார்கள்.

உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற சொல்லிலேயே நாம் ஏமாந்து போகிறோம். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” யார் என்ன சொன்னாலும் இந்த நுகர்வு கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். இப்ப கடன் திருவிழா, லோன் மேளா எல்லாம் நடத்துறாங்க. இந்த திருவிழாவிற்கு எப்ப கொடி ஏத்துவாங்க? எப்ப இறக்குவாங்கன்னு தெரியல. எந்த நாடும் உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை.

“மாற்ற முடியாதது எதுவோ அது அறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு”. உலகமயமாக்கல் என்ற ஆரவாரத்திற்கு நாம் ஏமாந்து போகிறோம். நாம் தினமும் பங்கு சந்தை பார்க்கிறோம். எனக்கு என்னவென்றே புரியவில்லை. இப்பதான் தெரிந்தது அது இரண்டு சதவீத மக்களுக்கான செய்தியென்று. நாம் பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை உண்டு பண்ண வேண்டும். நாயகம் ஜனங்களின் நாயகமாக இருந்தால் அது ஊடகங்களின் நாயகமாக இருக்க முடியாது. ஒரு நாள் அறிஞனை முட்டாளாகக் காட்டும்.

பண்பாடு பற்றியெல்லாம் வாசிக்கிறவங்க கொறச்சல். இதப்பத்தி யோசிக்கிறவங்க ரொம்பக் கொறச்சல். பேசுறவங்க கொறச்சல். எழுதுறவங்க ரொம்ப கொறச்சல். எனக்கு ஒரு இங்கிலீஸ் படம் ஞாபகத்துக்கு வருது. ஆண்டவர் கொடுத்த பல கட்டளைகளை மோசஸ் தொலைத்து விட்டு கடைசியாக உள்ளவற்றைத்தான் கடவுள் கொடுத்தார் என சாதிப்பார். அது போல நாம் எதை இழந்தோம் என்பதைக்கூட மறந்து விட்டோம். “இழந்தோம் என்பதைவிட இழக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம்” என வருத்தப்படுகிறார் ஆழ்வார். இதை பாரதி

“கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்கிறார்.

நாம் எப்போதும் மேற்கேதான் பார்ப்போம். கிழக்கே சீனா, ஜப்பானை எல்லாம் பார்க்க மாட்டோம். எத்தனை பேருக்கு மோஸி என்ற அறிஞரைத் தெரியும்?

இறுதியாக வாசிப்பு என்பது யோசிப்பை தரும். யோசிப்பது மூலம் சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டும். எதையும் விற்கலாம், ஒன்றை திட்டமிட்டுப் பழசாக்கி புதியதைச் சந்தைப்படுத்தலாம் என்பது போன்ற பிரம்மாண்டங்களுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும். நன்றி’’

தொ.பரமசிவன் அய்யாவின் உரையை வாசித்து மற்றவர்களிடம் இதைக் குறித்து பேசுங்கள், எழுதுங்கள். பிரம்மாண்டங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். மேலும் தொ.பரமசிவன் அய்யாவின் கட்டுரைகளை படிக்கக் கீற்று வலைத்தளத்தை பார்க்கவும். மேலும் இவரது புத்தகங்கள்பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயம், சமயங்களின் அரசியல்வாசியுங்கள். தொ.பரமசிவன் அய்யாவிற்கு நன்றிகள் பல!

November 8, 2011

முத்தத்தில் துவங்கி....


முத்தத்தில் துவங்கி
முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு
எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

யாரும் சொல்லாமலேயே
கற்றுக்கொள்கிறார்கள்
அலுத்துத் தூங்குவதற்கான
உடற்பயிற்சியாக!

- கவிஞர் அ. வெண்ணிலா

*ச. தமிழ்ச்செல்வன் தொகுத்த 'ரெக்கைகள் விரியும் காலம்' புத்தகத்திலிருந்து...

November 7, 2011

நவம்பர் 7 - புரட்சிகர நிகழ்ச்சி! - ஓர் அனுபவம்!


காலச்சக்கரத்தை பின்சுழற்றி பார்க்கிறேன்.
ஒரு சிறிய ஹால்.
50,60 தோழர்கள்.
பெரும்பாலும் ஆண் தோழர்கள்.
புரட்சியை நேசிக்கும் தோழர்
முதல் பாட்டாளிவர்க்க அரசின் சாதனைகளை
கண்கள் பிரகாசிக்க சொல்வார்.
முதலாளித்துவ கொடூரங்களின்
உச்சங்களை சொல்வார்.
இறுதியில்,
ஒவ்வொருவரும் உறுதிமிக்க
போல்ஷ்விக்காக
உறுதி ஏற்கவேண்டும்! என்பார்.

*****

இன்றும் பார்க்கிறேன்.
நிறைய இளம் மாணவர்கள்.
சரிக்கு சரியாக இளம்பெண் தோழர்கள்
இளம்தோழர்களின் அம்மாக்கள்,
அப்பாக்கள்,
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
குழந்தைகள்
எல்லோருடைய வயதையும் கூட்டி
எண்ணிக்கையால் வகுத்துப்பார்த்தால்
வயது இருபதை தாண்டாது!
ஆயிரத்திற்கும் அதிகமான நாற்காலிகள்.
இடம் கிடைக்குமா என்ற பயம் வந்தது.
இன்னும் வந்துகொண்டே இருந்தார்கள்.

****

புரட்சிக்காக உயிரைக் கொடுத்த
தோழர்களுக்கு
உணர்ச்சிமிக்க பாடலால்
வணக்கம் செலுத்தினார்கள்.

****

'நான் உலகம்!
தொழிலாளி - நானே உலகம்'
பாடலுக்கு நடித்து
உழைப்பால் உலகத்தைப் படைத்த
தொழிலாளர்களுக்கு
தன் அசுர பலத்தை உணரவைத்தார்கள்.

****

நாடகத்தில்...
குடித்துவிட்டு உதைத்த
கணவன் மூஞ்சியில்
தாலியை விட்டெறிந்தார்கள்.

****

மாறுவேடத்தில்...
இளம்பிஞ்சு தோழர்கள்
இளம் பெரியாராக
இளம் ஜான்சிராணியாக
இளம் பகத்சிங்காக
புதிய விடுதலை போருக்கு
அறைகூவல் விடுத்தார்கள்.

****

தங்களின் ஒற்றுமையால்; உறுதியால்
புரட்சிகர சங்கத்தை கட்டியமைத்து
முதலாளிகளின் திமிரை குறைத்த
தொழிலாளர்கள் புதிய திமிருடன்
கள அனுபவங்களை பகிர்ந்தார்கள்.

****

அன்று பேசிய பேச்சு விதை!
மக்களுடன்
களத்தில் உறுதியுடன்
போராடியதன் பயன்
நக்சல்பாரி அரசியல்
மக்களை பற்றிக்கொண்டுவிட்டது!
மக்களே நக்சலைட்டுகளாக!
இனி, எதிரிகளால்
பிரித்து பேசமுடியாது!

****

இதோ
போராட்டங்களினால்
கண்டெடுக்கப்பட்ட
இளம் பெரியார்கள்
இளம் அசரத் மகள்கள்
இளம் பகத்சிங்குகள்!


இனி,
மெல்ல, மெல்ல
எங்கும் பரவுவார்கள்.
எட்டப்பர்களுக்கு
காலம் நெருங்கிவிட்டது!


நேற்று
நிம்மதியாய் உறங்கினேன்!
சுதந்திர தேசத்தில்
செங்கொடி காற்றோடு
ஜெயித்த கதை பேசுவதாய்
கனவு வந்தது!
விரைவில்
கனவு நிஜமாகும்!

****

பின்குறிப்பு : நவம். 7 - புரட்சிதினத்தை ஒட்டி, சென்னையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி அமைப்புகள் கொண்டாடின. அந்த நிகழ்வுக்கு போய் வந்த அனுபவத்தை தான் இங்கு பகிர்ந்துள்ளேன். நன்றி.