> குருத்து: August 2009

August 31, 2009

ஆந்திராவில் 40 நாளில் 21 விவசாயிகள் தற்கொலை!


முன்குறிப்பு : தலைப்பு செய்திகளாக தெரிவிக்க வேண்டிய சில செய்திகளை பெட்டி செய்தியாக பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. தேர்தல், சினிமா போன்ற அக்கப்போர்களில் இந்த பெட்டிச் செய்திகள் நம் கண்ணில் இருந்து மறைந்து விடுகின்றன.

நிதி மூலதன கும்பல்களால் பங்குச் சந்தை சூறையாடப்பட்டு ஏதேனும் பிரச்சனையென்றால்.. அரசு மக்களின் பணத்தை பங்குச் சந்தையில் அள்ளிக் கொட்டுகிற இந்திய அரசு இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டேயிருப்பதை தெரிந்து கொண்டே மவுனம் காக்கிறது.

இன்றைக்கு விவசாயி சாகிறான் என்றால்... நாம் பட்டினி, பசியில் சாகப்போவதற்கு ஒரு முன்னறிவிப்பு. விவசாயியை காப்பாற்றினால்... நாம் பிழைத்தோம்.

*****

ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதியில் பருவ மழையும் பொய்த்தது. மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் பலத்த ஏமாற்றமடைந்தனர். சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 40 நாளில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டோன்சந்தா கிராமத்தை சேர்ந்த ஞீமண்ணா என்ற விவசாயி தூக்கில் தொங்கினார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியும் ஒப்புக் கொண்டுள்ளார். அனந்தஞீர் மாவட்டத்தில் 11 பேரும், அடில்லாபாத்தில் 4 பேரும், வாராங்கல் பகுதியில் 3 பேரும், மேடக் மாவட்டத்தில் 2 பேரும் தற்கொலை செய்து
கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி - (தினபூமி, 17/08/2009).

தொடர்பான செய்திகள் அறிய...

http://vidarbacrisis.blogspot.com

August 25, 2009

விநாயகர் வருகிறார்!


கொஞ்சம் கொஞ்சமாய்
பகுதிகளில் - சிறிதும் பெரிதுமாய்
பிள்ளையார்கள்
பெருகி கொண்டிருக்கிறார்கள்.

தொந்தியும் தொப்பையுமாய்
பிள்ளையாருக்கு தம்பியாய்
தூங்கி வழிந்தபடி
ஒரு காவலர் காவல் இருக்கிறார்.
பிள்ளையாருக்கு காவலா?
மக்களுக்கு காவலா?

பிள்ளையாரின் அமைதியான முகம்
ஆண்டுக்கொருமுறை - மெல்ல மெல்ல
ஆக்ரோஷமாய் மாறிக்கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கு
இரண்டு புதிய ஆயுதங்கள்
பிள்ளையார் கையில் அதிகரிக்கிறது.

பிள்ளையார் கொட்டகையில்
இரண்டு காவிக்கொடி
பறந்து கொண்டிருக்கிறது.

நேற்றிரவு - கனவில்
பிள்ளையாரின் ஆயுதங்களில்
ரத்தம் வழிந்தது.

எல்லா தெருக்களிலும்
வலம் வர இருக்கிறாராம்!
கவலையாய் இருக்கிறது.

August 11, 2009

பன்றிக் காய்ச்சல் - பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்!


முன்குறிப்பு: சமீப நாட்களில் இதழ்கள், தொலைக்காட்சி என எங்கு பார்த்தாலும், பன்றிக் காய்ச்சல் அடிக்கிறது. இந்தியாவில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.சில மாநிலங்களில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுவிட்டன. பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்? வந்தால் என்ன செய்ய வேண்டும்? - என விலாவாரியாக பேசப்படுகிறது? ஆனால், பன்றிக் காய்ச்சலுக்கு யார் காரணம் பன்றிகளா? பணத்தாசை பிடித்த முதலாளிகளா? என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

****
புதிய ஜனநாயகத்தில் ஜூன் 2009ல் வந்து, வினவு-ல் வெளிவந்த கட்டுரை இது. சமகால அவசியம் குறித்து... மீள் பதிவு செய்கிறேன்.

****
கடந்த நூற்றாண்டில், உலகை ஆட்டிப்படைத்த பெரியம்மை, பிளேக், போன்ற கொள்ளை நோய்கள், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவ்வப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள், உலகையே அச்சுறுத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா என வகை வகையான நோய்கள் தோன்றிப் பரவின. இந்நோய்களால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் வந்திருக்கும் புதுவித நோய்தான் பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்நோய்க்குப் பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. பத்திரிக்கைகளும், இதர செய்தி ஊடகங்களும் இந்த நோய் குறித்து மக்களை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயமுறுத்தி வருகின்றன. அமெரிக்கா சென்று திரும்பிய சில இந்தியர்களுக்கு இந்தக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகள் பரவியதால், மக்களிடையே பெரும்பீதி கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள். அவர்களில் உடல் வெப்ப
நிலை அதிகமாக உள்ளவர்களைத் தனியறையில் (குவாரண்டைன்) தடுத்து வைத்து விடுகிறார்கள். சாதாரணமாக ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ, புளூக்காய்ச்சலாக இருக்குமோ எனும் அச்சத்திற்காளாகிறார்கள்.

பொதுவாக, இன்புளுயன்சா என்னும் வைரஸ் தாக்குவதால் மனிதர்களுக்குச் சாதாரணமாக ஏற்படும் நோய்தான் புளூ காய்ச்சல் . இது கடுமையான காய்ச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக் கூடிய தொற்றுநோயாகும். ஆண்டு தோறும் இது பல லட்சம் பேரைத் தாக்குகிறது. அவர்களில் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோரை இது கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் சிலர் இறந்தும் போகிறார்கள். ஆனால், பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘ஸ்வைன் புளூ’ பன்றிகளிடையே தோன்றி, அவற்றிற்கு அருகில் வேலை செய்து, தொடர்ந்து அங்கேயே வசிக்கும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்நோய் மனிதனைத் தாக்கும் போது சுவாசத்தைப் பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

மெக்சிகோவின் கிழக்குப் பகுதி நகரான லா கிளோரியாவில்தான் முதன் முதலாக இந்த நோய் தோன்றியது. அந்நகரில் உள்ள பன்றிப் பண்ணை ஒன்றிலிருந்து நகருக்குப் பரவிய வைரஸ் மெக்சிகோ முழுவதும் பரவி, அண்டை நாடுகளான அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கும் பரவி, தற்போது ஐரோப்பாவிற்குள்ளும் ஊடுருவிவிட்டது.

முதலாளித்துவ நாடுகளின் நவீன பண்ணைகளில் பல லட்சம் பன்றிகள் ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கப் படுகின்றன. லாப வெறியோடு, சிறிய இடத்தில் நகரக் கூட இடமில்லாமல் இவற்றை ஆண்டுக்கணக்காக வைத்திருக்கின்றனர். பன்றிகளைக் கொழுக்க வைப்பதற்கெனக் கொடுக்கப்படும் இரசாயனம் கலந்த உணவுகளும், அப்புறப்படுத்தப் படாமல் கிடக்கும் டன் கணக்கிலான கழிவுகளும், இத்தகைய பண்ணைகளை கிருமிகளின் உற்பத்திச் சாலைகளாக மாற்றியுள்ளன. மெக்சிகோவில் நோய் தோன்றிய பண்ணை ஸ்மித் பீல்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தப் பண்ணையிலிருந்து மட்டும் ஆண்டு தோறும் 10 லட்சம் பன்றிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் 2006ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 60 லட்சம் பன்றிகளை ஏற்றுமதி செய்துள்ளது. தங்களது பண்ணையின் சுகாதாரத்தைப் பறைசாற்ற இந்த நிறுவனம் பல்வேறு தரச் சான்றிதழ்களைக் காட்டினாலும், சுகாதாரம் என்னவோ காகிதத்தில் மட்டுமே உள்ளது.

இந்த நிறுவனத்தைப் போல அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கோடிக்கணக்கான பன்றிகள் இந்த லட்சணத்தில்தான் வளர்க்கப்படுகின்றன. பன்றிக்காய்ச்சலைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் எதுவும் ‘இன்டென்சிவ் பார்மிங்’ எனும் அதிதீவிர உற்பத்திமுறையைப் பற்றியோ, அதனைக் கையாளும் முதலாளிகளின் லாப வெறிதான் இந்த நோய்க்குக் காரணம் என்பதைப் பற்றியோ எழுதுவதே இல்லை.

இந்நோய் தோன்றிய ஒரு சில வாரங்களிலேயே மெக்சிகோ முழுவதும் பரவி அந்நாட்டையே செயலிழக்க வைத்துவிட்டது. நாடு முழுவதும் அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலவுகிறது, எல்லா நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மே 1 அன்று நடக்கும் தொழிலாளர் பேரணி கூட அங்கு நடைபெறவில்லை. அதே சமயம் இந்நோயைக் கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கூட நோய்த்தடுப்பூசி போட முடியாத நிலையில்தான் மெக்சிகோ அரசு உள்ளது. மெக்சிகோவின் எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ள இந்தக் காய்ச்சலை அமெரிக்காவாலும் தடுக்க இயலவில்லை. அமெரிக்க அரசு ஏற்கெனவே எல்லா சமூக நலத் திட்டங்களையும் ஒழித்துக் கட்டிவிட்டதுடன், சுகாதாரத் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கிவிட்டது. நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டுள்ளது. மக்களோ மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ளனர். ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க மக்களைத் தற்போது பன்றிக் காய்ச்சல் பாடாய்ப் படுத்துகிறது.

எல்லா அழிவுகளிலும் லாபம் தேடும் முதலாளித்துவம் பன்றிக்காய்ச்சலையும் விட்டு வைக்கவில்லை, புளு வைரஸிற்கு மருந்துகளை தயாரித்து விற்கும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு அடித்தது யோகம். அவை மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன. ஊடகங்களைத் தங்கள் பக்கம் வளைத்துக் கொண்டு உலகம் முழுவதும் இந்நோய் தாக்குவது உறுதி என்று பீதியூட்டி தங்களது சந்தையை விரிவுபடுத்தி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியதும் இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதே இதற்குச் சாட்சி. கடந்த முறை பறவைக் காய்ச்சல் வந்த போதும் இவற்றின் மதிப்பு இதே போல உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒருபுறம் மருந்துக் கம்பெனிகள் லாபம் ஈட்டினாலும், மற்றொருபுறம் பன்றி இறைச்சியினால் நோய் பரவும் என்ற பீதியின் காரணமாக, பன்றி இறைச்சி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பன்றி இறைச்சி ஏற்றுமதியாளர்களைக் காக்க உலக சுகாதார நிறுவனம் களத்தில் இறங்கியது. பன்றி இறைச்சியின் மூலம் காய்ச்சல் பரவாது என்று பிரச்சாரம் செய்தது. பன்றிக் காய்ச்சல் என்ற பெயரையே ‘மெக்சிகன் காய்ச்சல்’ என்று மாற்றிவிட்டது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவதற்குக் காரணம் மெக்சிகர்கள்தானே ஒழிய, பன்றிகள் அல்ல என்று மறைமுகமாகக் கூறுகிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பண்ணையில் 220 பன்றிகளுக்கு இந்தக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தப் பண்ணை நிர்வாகமும், கனடா அரசும் பண்ணையில் வேலை பார்த்த ஒரு மெக்சிகத் தொழிலாளியிடமிருந்துதான் பன்றிகளுக்குக் காய்ச்சல் பரவியதாகக் கூறியது. ‘ஏன் பன்றிகளிடமிருந்து அந்தத் தொழிலாளிக்கு நோய் பரவியிருக்கக்கூடாது’ எனக் கேட்டால் கனடா பன்றிகளுக்குத் தானாக புளூ காய்ச்சல் வராது, அவற்றிற்கு தொழிலாளர்களிடமிருந்துதான் பரவியிருக்கும் எனக் கூறித் தொழிலாளியைப் பன்றியை விடக் கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடமிருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறினாலும், இது வல்லரசுகள் நடத்தும் உயிரியல் ஆயுதப் போருக்கானதொரு சோதனை எனவும் கூறுகின்றனர். தற்போது அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இச்சோதனைகளின் மூலம் பல்வேறு புதிய வைரஸ்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. அவற்றைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவே கூட மக்களிடையே பரவச் செய்திருக்கக்கூடும். ஆனால் இது போன்ற சோதனைகளை தேச நலன் என்ற பெயரில் மூடி மறைத்துவிடுகின்றனர்.

மே 5ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 1500 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 பேர் இறந்திருந்தனர். அமெரிக்காவில் மட்டும் 109 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், ஒருவர் உயிரிழந்திருந்தார். இப்போது இந்நோய் கட்டுப்படுத்த முடியாதபடி பரவி வருகிறது.

உலகப் பணக்கார நாடான அமெரிக்காவிற்கே இந்த நிலையென்றால், ஏழை நாடுகளை இந்நோய்த் தாக்கும்போது அம்மக்களின் கதி என்ன ஆவது? ஏற்கெனவே அமெரிக்கா தனது ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் மருத்துவக் கழிவுகளையும், ரசாயனக் கழிவுகளையும் அந்நாடுகளில் கொட்டி, சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தி வருகிறது. தூத்துக்குடியிலும், சென்னையிலும் அமெரிக்காவிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட குப்பைகளில் வெடிமருந்துகளும், வெடிக்காத குண்டுகளும் பல ஆண்டுகளாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, கொச்சி துறைமுகத்திலிருந்து கோவைக்குக் கொண்டுவந்து கொட்டப்பட்ட கழிவுகளில் பயன்படுத்தப் பட்ட ஊசி, குளுகோஸ் பாட்டில் உட்பட மருத்துவக் கழிவுகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தனது கழிவுகளை ஏழை நாடுகளுக்குப் பரிசளித்துப் பழகிய அமெரிக்கா, பன்றிக் காய்ச்சலை மட்டும் அந்த நாடுகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தி விடுமா?

இந்தியாவில் சுகாதாரத்துறையை வேகமாகத் தனியார்மயப்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ உதவிகளையும் அரசு திட்டமிட்டு நிறுத்திவருகிறது. அரசுதனியார் கூட்டுச் சுகாதாரத் திட்டம் என்ற பெயரில் அரசு மருத்துவமனைகள் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன. இந்நிலையில் இங்கு பன்றிக் காய்ச்சல் பரவினால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இந்திய சுகாதார அதிகாரிகள், பன்றிக்காய்ச்சலை இந்தியா எளிதில் எதிர்கொள்ள முடியும் என்றும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பேட்டியளித்துள்ளனர். ஆனால் தமிழக மக்களைத் தாக்கிய சாதாரண சிக்குன் குனியா நோயையே தடுத்து நிறுத்த முடியாத இவர்கள்தான், பன்றிக் காய்ச்சல் போன்ற வெகு வேகமாகப் பரவும் நோய்களிலிருந்து மக்களைக் காக்கப் போகிறார்களாம்.

காற்று, நிலம், நீர் என அனைத்தும் மாசுபட்டு, சுற்றுச் சூழல் நாசமானாலும் பரவாயில்லை, புதிது புதிதாகக் கொடிய நோய்கள் உருவாகி மக்களெல்லாம் செத்து மடிந்தாலும் பரவாயில்லை. தங்களது லாபம் மட்டும் குறையாமல் இருந்தால் போதும் – என லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முதலாளித்துவம் இயங்கி வருகிறது. அரசும், முதலாளிகளின் நலனைக் காப்பதிலேயே குறியாய் உள்ளது, மக்களின் அழிவில் கூட முதலாளிகள் லாபம் சம்பாதிக்க உதவுகிறது.

இந்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டப் போராடப் போகிறோமா? அல்லது இப்போதைக்குப் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டு அடுத்து வரவிருக்கும் புது நோய் ஒன்றிற்காகக் காத்திருக்கப் போகிறோமா?

புதிய ஜனநாயகம், ஜூன்’2009

August 4, 2009

'எங்கேயாவது போயிடுங்க: விமான டிக்கெட் இலவசம்" - அமெரிக்க அவலம்!


வீடற்றவர்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களை வேறு இடங்களுக்கு விரட்ட புதிய சலுகை திட்டத்தை அமுல்படுத்தி உள்ளது.

என்ன சலுகை தெரியுமா? நகரை விட்டு போய்விடுவதாக சொன்னவுடன், உடனே விமான டிக்கெட் இலவசம்.

அமெரிக்காவில், சில மாநிலங்களில் வீடற்றோர் அதிகரித்து வருகின்றனர். நிதி நெருக்கடி காரணமாக வேலை வாய்ப்பு இல்லாததால், சமீப காலமாக இவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களிலும் இவர்கள் எங்கும் பரவியுள்ளனர்.
இவர்களுக்காக தனி முகாம்களை நியூயார்க் அரசு நிர்வாகம் அமைத்துள்ளது.

சமீப காலமாக வீடற்றோர் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதால், அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி விட முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

நியூயார்க்கில் இருந்து வெளியேற, விரும்பும் குடும்பங்களுக்கு இலவச விமான டிக்கெட் அளிக்கப்படும். அவர்கள், உறவினர் நண்பர் உள்ள இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். செலவுகளை முழுமையாக நிர்வாகம் ஏற்கும் என்று நியூயார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நியூயார்க்கில், வீடற்றோருக்கான முகாம்கள், கடந்த இரண்டாண்டாக அதிகரித்து வருகின்றன. இவர்களுக்கு பல கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. 2007, ஆண்டுக்குப் பின் 550 குடும்பத்தினர் இங்கு முகாமிட்டு உள்ளனர்.

சலுகை திட்டத்தை சிலர் தான் ஏற்றுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமக நிதி நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவில், பல மாநிலங்களிலும் உள்ள பலர் வேலையிழந்து விட்டனர். அவர்கள், அரசு தரும் வேலையற்றோர் உதவித்தொகையை வைத்துத்தான் நாட்களை கடத்துகின்றனர்.

நன்றி :
தினமலர் - 05/08/2009

தொடர்புடைய பதிவுகள் :

New York gives homeless people a one-way ticket to leave city

August 3, 2009

அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!


நன்றி : உறையூர்காரன்

முன்குறிப்பு : அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு இல்லாமல் வாழ்வது... உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதற்கு சமம். அமெரிக்காவில் மருத்துவத்திற்கான காப்பீடுத்தொகை மிக மிக அதிகம். வேலை செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் தனது ஊழியர்களுக்கு காப்பீடு எடுத்து விடுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளால், நிறுவனங்கள் கோடிகளில் தொழிலாளர்களை வெளியே பிடித்து தள்ளிவிட்டது. இதனால் தொழிலாளர்களும், பொதுமக்களில் பலரும் மருத்துவ காப்பீட்டை புதுப்பிக்க முடியவில்லை.

அமெரிக்காவில் சுகாதார கொள்கைப் பற்றிய பேச்சு, கடந்த தேர்தலிலேயே எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக, ஒபாமா அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பொழுது... அமெரிக்காவில் மருத்துவம் மிக செலவு பிடிக்கிறது என்றார். கடந்த ஜூனிலும் அமெரிக்காவில் மருத்துவ செலவு வெடிகுண்டைப் போல ஆபத்தானதாக தோற்றமளிப்பதாகவும், மருத்துவ துறையை சீரமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது தான் உண்மையான அமெரிக்கா!

****

அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் எவ்வளவு அதிகம்? மருத்துவ காப்பீட்டுத்துறை நிறுவனங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன? வல்லரசு அமெரிக்காவில் மக்கள் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள்? கனடா, பிரான்ஸ், பிரிட்டன், கியூபா நாடுகளில் மருத்துவ நிலைமைகளை மைக்கேல் மூர் எடுத்த சிக்கோ என்ற ஆவணப்படம் விரிவாக விவரிக்கிறது. பதிவர் உறையூர்காரன் அந்த படத்தைப் பற்றி ஒரு நல்ல அறிமுகம் தந்திருக்கிறார். படியுங்கள்.

****


சமீபத்தில் மைக்கேல் மூர் ((Michael Moore) என்பவர் இயக்கிய‌ சிக்கோ (Sicko) என்கிற ஆவணப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. Health Insurance என்கிற பெயரில் அமெரிக்க
மருத்துவத்துறை எப்படி வணிகமயமாக்கப்பட்டது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது அந்த ஆவணப் படம். பீட்டர் என்கிற அமெரிக்கர் தன் காயங்களுக்கு தையல் போடும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த படம்.

அமெரிக்க பிரஜையான பீட்டர் தன் காயத்திற்கு மருத்துவம் பார்க்க மருத்துவரிடம் செல்ல முடியாது. ஏனென்றால் அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லை. ஆனால் இந்த திரைப்படம் பீட்டர் போன்றவர்களைப் பற்றியது அல்ல‌ என்கிறார் இயக்குனர்.அடுத்து ரிக் என்பவர் தன்னுடைய இயந்திர வாள் பட்டறையில் வேலை செய்யும்போது அவருடைய நடுவிரலும் மோதிர விரலும் துண்டாகி போய்விடுகிறது. அவர் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மோதிர விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 18000 டாலரும் நடு விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 60000 டாலரும் செலவாகும் என்கிறார்கள். அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லாததால் தன்னிடம் இருந்த சேமிப்பின் மூலம் 18000 டாலர் கொடுத்து மோதிர விரலை மட்டும் ஒட்டிக் கொள்கிறார். அவருடைய நடு விரல் இங்குதான் உறங்குகிறது என்று ஒரு குப்பைமேட்டை காட்டுகிறார். அமேரிக்காவில் சுமார் ஐந்து கோடி பேருக்கு காப்பீடு இல்லை. ஆனால் இந்த ஆவணப் படம் அவர்களைப் பற்றி இல்லை என்கிறார்.

அடுத்து லாரி மற்றும் டானா ஸ்மித் என்கிற முதிய தம்பதியினர் டென்வர் (கொலராடோ) நகரத்தில் உள்ள தங்கள் மகளின் வீட்டிற்கு சென்று அங்குள்ள பொருள் வைக்கும் அறையில் தங்குகின்றனர். டானா ஒரு பத்திரிக்கை நிருபராகவும் லாரி ஒரு இயந்திர வல்லுனராகவும் பணிபுரிந்து நல்ல பொருளாதார நிலையில் இருந்து அவர்களது ஆறு பிள்ளைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்தவர்கள். இதற்கிடையில் லாரிக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது, அடுத்து டானாவை புற்றுநோய தாக்கியது. இவர்கள் மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் Co-pay, deductables என்று அபரிமிதமான பொருளாதார சுமையால் தங்கள சொந்த வீட்டை விற்று தங்கள் மகளின் வீட்டில் அடைக்கலம் தேடி செல்கின்றனர்.தங்கள் மருத்துவ செலவை சமாளிக்க தள்ளாத வயதிலும் உழைக்கும் ஒரு பெரியவர், ஒல்லியாக இருந்ததால் மருத்துவ காப்புரிமை மறுக்கப்படும் ஒருவர், அதேபோல குண்டாக இருந்ததால் காப்புரிமை மறுக்கப்படும் இன்னொரு பெண்மணி, விபத்தில் சிக்கியபின் ஆம்புலன்ஸ் செலவை தர மறுக்கும் காப்புரிமை நிறுவனம், மனசாட்சிக்கு விரோதமாக காப்பீட்டு கோரிக்கைகளை நிராகரிக்க நிர்பந்தபடுத்தப்பட்டதால் பணியை விட்டு விலகும் ஒரு காப்பீட்டு நிறுவன ஊழியர் என பலரின் அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர். சிறுநீரகத்தில் புற்றுநோய் வந்த ஒருவருக்கு அவரது தம்பி சிறுநீரக தானம் செய்ய முன்வந்தும், காப்பீட்டு நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படும் என்று அவரது அறுவை சிகிச்சைக்கு Experimental என்ற காரணம் கூறி காப்பீடு தரமுடியாது என மறுக்கிறது காப்பீட்டு நிறுவனம். உரிய‌நேர‌த்தில் சிகிச்சைய‌ளிக்க‌ப் ப‌டாம‌ல் அவ‌ர் இறந்துவிடுகிறார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த சிறுநீரக நோயாளியின் மனைவி மருத்துவத்துறையில் பணி புரிபவர் என்பதுதான். ம‌ருத்துவ‌த்துறையில் பணிபுரிப‌வ‌ரின் க‌ண‌வ‌ருக்கே இந்த‌ அவ‌ல நிலையென்றால் சாமானிய‌ர்க‌ளின் நிலையை சற்று நினைத்துப் பாருங்க‌ள்.

அமெரிக்காவின் அண்டைநாடான க‌ன‌டாவிலோ நிலைமை முற்றிலும் த‌லைகீழாக‌ இருக்கிற‌து. அங்கு ம‌ருத்துவ‌ரிட‌ம் செல்வ‌த‌ற்கு நோயாளியாக‌ இருந்தால் ம‌ட்டும் போதும், ப‌ண‌க்கார‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. மிசிகன் (Michigan) மாநில‌த்தில் வ‌சிக்கும் ஒரு பெண் த‌ன் குழ‌ந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் எல்லைத் தாண்டி க‌ன‌டாவிற்கு சென்று ம‌ருத்துவ‌ம் பார்த்துக் கொள்கிறார். சில‌ அமேரிக்க‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ செல‌வை ச‌மாளிக்க‌ க‌ன‌டிய‌ர்க‌ளை திரும‌ண‌ம் செய்துக்கொள்வ‌தாக‌ அவ‌ர் கூறுகிறார். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளான அமேரிக்க அரசியல்வாதிகள், கனடாவில் பை பாஸ் அறுவை சிகிச்சைக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என புரளிகளை கிளப்பி பொது நல்வாழ்வு திட்டத்திற்கான கோரிக்கைகளுக்கு ஆப்பு வைக்கிறார்கள்.

அடுத்து இய‌க்குன‌ர் பிரிட்ட‌னுக்கு செல்கிறார். அங்கு ம‌க்க‌ளுக்கு ம‌ருத்துவ‌ சேவை முற்றிலும் இல‌வ‌சமாக‌ அளிக்க‌ப் ப‌டுவ‌தை உண‌ருகிறார். பிரிட்ட‌னில் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணிபுரியும் ஒருவ‌ரைப் பேட்டி காண்கிறார். அவ‌ர் அமெரிக்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ளைப் போல‌வே வ‌ச‌தியாக‌ வாழுவ‌தையும் சுட்டிக் காட்டுகிறார். அடுத்து ஒரு ம‌ருந்த‌க‌த்திற்கு செல்கிறார். அங்கு ஒரு ம‌ருந்து சீட்டைக்
காட்டி இத‌ற்கு எவ்வ‌ள‌வு செல‌வாகும் என்று கேட்கிறார். அத‌ற்கு ம‌ருந்த‌க‌ உழிய‌ர் 6.60 ப‌வுண்டுக‌ள் ஆகும் என்கிறார். 60 மாத்திரைக‌ள் வாங்கினால் எவ்வ‌ள‌வு ஆகும் என்கிறார்?. அத‌ற்கும் அதே ப‌தில்தான் வ‌ருகிற‌து. 90, 120, 180 என்று எவ்வ‌ள‌வு வாங்கினாலும் 6.60 ப‌வுண்டுக‌ள்தான் ஆகும் என்கிறார். அந்த‌ நோயாளி ப‌தினெட்டு வ‌ய‌துக்குட்ப‌ட்ட‌வ‌ராக‌வோ அல்ல‌து வேலையில்லாத‌வ‌ராக‌வோ இருந்தால் அந்த‌ 6.60 ப‌வுண்டுக‌ள் கூட‌ க‌ட்ட‌வேண்டாம்.

அடுத்து ஒரு ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்கிறார். அங்கு குழ‌ந்தைப் பெற்று விடுபெற்று வ‌ரும் ஒரு த‌ம்ப‌தியிட‌ம் இந்த‌ பிர‌ச‌வ‌த்திற‌கு எவ்வ‌ள‌வு செல‌வான‌து என‌க் கேட்கிறார். அவ‌ர்க‌ள் ஒரு ப‌வுண்டு கூட‌ த‌ங்க‌ள் கையிலிருந்து செல‌வாக‌வில்லை என்கிறார்க‌ள். அந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணிபுரியும் ஒரு ம‌ருத்துவ‌ரிட‌ம் நீங்க‌ள் ஒரு நோயாளிக்கு சிகிச்சைய‌ளிக்கும் முன்ன‌ர் அந்த‌ நோயாளியின் காப்பீட்டு நிறுவ‌ன‌த்திட‌ம் அனும‌தி பெற‌வேண்டுமா என‌ கேட்ட‌தும் அப்ப‌டியெல்லாம் ஏதுமில்லையென்றே ப‌தில் வ‌ருகிற‌து. அந்த‌ ம்ருத்துவ‌ம‌னை முழுதும் அலைந்து திரிந்து Cashier என்று எழுதியிருக்கும் ஒரு இட‌த்தை க‌ண்டுப்பிடிக்கிறார். அங்கு இருப்ப‌வரிட‌ம் சென்று இந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனைத்து வித‌மான‌ சிகிச்சைக‌ளும் இல‌வ‌ச‌ம் என்னும்ப‌ட்சத்தில் எத‌ற்காக‌ ஒரு காசாள‌ர் என வின‌வுகிறார். "உட‌ல் நிலை மிக‌வும் மோச‌மாக‌ இருக்கும் சில‌ர் ம‌ருத்துவம‌னைக்கு வாட‌கையுந்தில் வ‌ந்தால் அந்த‌ வாட‌கையுந்திற்கு அவ‌ர்க‌ள் செல‌வ‌ழித்த‌ ப‌ண‌த்தை அவ‌ர்க‌ளுக்கு திருப்பித் த‌ர‌வே இங்கு நான் உள்ளேன்" என்கிறார் அந்த‌ காசாள‌ர்.

அமெரிக்காவில் ப‌ணிப்புரிந்த‌ ஒரு பிர‌ஞ்சு பிர‌ஜையின் க‌தையை அடுத்த‌தாக‌ விவ‌ரிக்கிறார் இய‌க்குனார். ப‌திமூன்று ஆண்டுக‌ளாக‌ அமெரிக்காவில் பணிபுரிந்த‌ அவ‌ரிட‌ம் அமெரிக்க‌ ம‌ருத்துவ காப்பீடு எதுவும் இருக்க‌வில்லை. ஒருநாள் அவ‌ர் புற்றுநோயால் தாக்க‌ப்ப‌டுகிறார். அமெரிக்காவில் சிகிச்சைப் பெற‌முடியாம‌ல் பிரான்சுக்கு திரும்புகிறார். அவ‌ர் பிரெஞ்சு அர‌சுக்கு வ‌ரியென்கிற‌ பெய‌ரில் ஒரு சென்ட் கூட‌ செலுத்திய‌தில்லை. அவ‌ரிட‌ம் பிரெஞ்சு ச‌மூக‌ பாதுகாப்பு எண் கூட‌ இருக்க‌வில்லை. ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு ம‌ருத்துவ‌ம‌னையில் இலவசமாக சிகிச்சைய‌ளிக்கப்ப‌டுகிற‌து. மூன்று மாத தீவிர சிகிச்சைக்கு பிற‌கு அவ‌ருடைய‌ ம‌ருத்துவ‌ரை சந்திக்கிறார். இப்போது நீங்க‌ள் ப‌ணிக்கு திரும்ப‌ இய‌லுமா என்று ம‌ருத்துவ‌ர் வின‌வ‌, அத‌ற்கு சிறிது கால‌ம் என‌க்கு ஒய்வு தேவைப்ப‌டும் என‌ அவ‌ர் கூற‌. உட‌னே அந்த‌ ம‌ருத்துவ‌ர் அந்த‌ நோயாளிக்கு மூன்று மாத‌ ஒய்வு தேவைப்ப‌டும் என்று குறிப்பெழுதி அர‌சுக்கு அனுப்புகிறார். அவ‌ர‌து மூன்று மாத‌ ஒய்வுகால‌த்தில் அவ‌ர‌து ச‌ம்ப‌ள‌த்தின் 65 ச‌த‌விகித‌த்தை அர‌சு அவருக்கு வ‌ழ‌ங்குகிற‌து.

இன்னொரு பிரெஞ்சு பெண்ம‌ணிக்கு அவ‌ர‌து பிர‌ச‌வ‌த்திற்கு பிற‌கு செவிலியாக‌ ஒரு பெண்ணை பிரேஞ்சு அர‌சே நிய‌மிக்கிற‌து. வார‌த்திற்கு நான்கு ம‌ணிநேர‌ம் அந்த‌ செவிலிப்பெண் அந்த‌ தாய்க்கு உத‌வி புரிகிறார்.

அடுத்து வருவதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல் காயிதா தீவிரவாதிகளாக் நியூயார்கின் வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபோது மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்கிற காரணத்தினால் அவர்களது மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாண அரசுகள் மறுத்துவிடுகின்றன. அதேசமயத்தில் 9/11 சதிவேலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலையில் சர்வதேச தரமான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகின்றன.

இயக்குனர் மூர் இந்த தன்னார்வலர்களை ஒரு படகில் ஏற்றிக் கொண்டு குவான்டனாமோ பேயிற்கு புறப்படுகிறார். குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலை எல்லையில் நின்று இவர்கள் 9/11 தாக்குதலின்போது சேவை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு கைதிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையை அளியுங்கள் என்று கூக்குரலிடுகிறார். ஆனால் பாவம் கேட்பார் யாருமில்லை.

அவர்கள் நால்வரும் எல்லைதாண்டி க்யூபாவிற்குள் நுழைகிறார்கள். அங்குள்ளவர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனைக்கு செல்கிறார்கள், அங்கு அவர்களின் பெயர், பிறந்த தேதி
மட்டும் பதிவேட்டில் எழுதிவிட்டு இலவசமாக சிகிச்சையளிக்கிறார்கள். மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்த கம்யூனிச தேசம்தான் அமேரிக்கர்கள் மத்தியில் ரவுடி தேசம் அமேரிக்க அரசியல்வாதிகளால் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதை உணர்கிறார்கள்.அடுத்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்குகிறார்கள். அமேரிக்காவில் 120 டால்ருக்கு விற்கப்படும் ஒரு மருந்து அங்கு வெறும் 5 சென்டுக்கு கிடைப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இலவசமாக அளிக்கப்படும் மருத்துவ சேவை அமெரிக்காவில் மட்டும் ஏன் வியாபார மயமாக்கப்பட்டது என்கிற கேள்வியுடன் முடிகிறது இந்த ஆவணப்படம்.இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஒடும் இப்ப‌ட‌த்தின் ஒரு சில‌ முக்கிய‌ ப‌குதிக‌ளையே நான் ப‌திந்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் முழுப் ப‌ட‌த்தையும் பாருங்க‌ள்.அமேரிக்கா போன்ற வ‌ல்ல‌ர‌சு நாட்டில் வாழ்வ‌தைவிட‌ பிரான்சு, க்யூபா போன்ற‌ ந‌ல்லர‌சு நாட்டில் வாழ்வதே ம‌னிதாபிமான‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளின் விருப்ப‌மாக‌ இருக்க‌க்கூடும்.

***

பின்குறிப்பு : இந்த படம் ஜுன் 2007ல் வெளிவந்தது. பொருளாதார நெருக்கடி துவங்குவதற்கு முன்பே அமெரிக்காவில் இந்த நிலைமை என்றால்... தொடங்கிய பிறகு நிலைமையை நம்மால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.தொடர்புடைய பதிவுகள் :