> குருத்து: October 2012

October 22, 2012

மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை!

“தமிழகத்தின் மின்வெட்டிற்கான காரணமும் தீர்வும்” கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணைய தளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக்கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது.

600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மேட்டுர் அனல் மின் அலகும், பழுதாகி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக் கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிற பாகங்களுக்கு 18-10-2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு மேட்டூர் புதிய மின் அலகில் இருந்து 600 மெகாவாட்டும், வழுதூர் 1 மற்றும் 2 அலகுகளில் இருந்து 187 மெகாவாட்டும், சென்னையில் இருந்து பிரித்தளிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 250 மெகாவாட்டும், ஆக மொத்தம் சுமார் 1037 மெகாவாட் கிடைக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் பற்றாக்குயான 4000 மெகாவாட்டில் கால் பகுதி இதன் மூலம் சரியாகியிருக்க வேண்டும்.

ஆனால் உண்மை நிலை இதுதானா?

இல்லை என்பதையே நமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேட்டூர் புதிய அலகானது 608 மெகாவாட் உற்பத்தியை 12-10-2012 அன்று எட்டியது. ஆனால் அதன் பின் அதனால் அந்த அளவு உற்பத்தியை செய்ய இயலவில்லை. அடுத்து வந்த நாட்களில் 300 - 350 மெகாவாட் மின்சாரத்தை சில நாட்களில் உற்பத்தி செய்வதாகவும், பிற நாட்களில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்படுவதாகவும் நிலையற்ற நிலையிலேயே அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது சரியாகும் என்பதை உறுதிப் படுத்தமுடியவில்லை.

வழுதூர் எரிவாயு மின் அலகுகளின் பிரச்சினை வேறாக உள்ளது. 2012 ஜூன் மாதம் மோசமாகப் பழுதடைந்த 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் 1 ஆம் அலகினை சரி செய்வதற்குத் தேவைப்பட்ட புதிய உபரி பாகங்களை தமிழக அரசு வாங்கவில்லை. மாறாக, பிப்ரவரி 2012 இல் இருந்து பழுதடைந்து நிறுத்தபட்டிருந்த 101 மெகாவாட் திறனுடைய குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தின் ரோட்டர் மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவற்றை அது பிரித்தெடுத்தது. இவற்றைக் கொண்டு வழுதூர் 1 இன் பிரச்சினைகளை அது சரி செய்தது.

101 மெகாவாட் திறனுடய குத்தாலம் எரி வாயு மின் நிலையத்தினை சரிசெய்வதை விட்டுவிட்டு வழுதூர் 1 ஆம் அலகின் பழுதினை நீக்குவதற்குத் தேவையான உபரி பாகங்களைக் கொடுக்கும் ஒரு இடமாக அதனை தமிழக அரசு மாற்றியது எதற்காக?

இவ்வாறு குத்தாலம் மின் நிலையத்தின் உபரி பாகங்களைக் கொண்டு பழுது நீக்கப்பட்ட வழுதூர் 1 ஆம் அலகு இன்று உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து 95 மெகாவாட் கிடைக்கக் கூடும்.

வழுதூர் 2 ஆம் அலகின் கதை என்ன?

தமிழக அரசின் எரிவாயு நிலையங்களிலேயே மிக அன்மையில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி அலகுதான் இது. 17-2-2009 ஆம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிய இந்த 92 மெகாவாட் திறன்கொண்ட மின் அலகானது 9-1-2010 ஆம் தேதியன்று மிக மோசமாகப் பழுதடைந்தது. அதாவது அதன் கியாரண்டி காலமான ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பழுதடைந்து போனது. அதனைப் பழுது நீக்க 16 மாத காலம் தேவைப்பட்டது. மீண்டும் 7-5-2011 ஆம் தேதியன்றுதான் அது தன் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் கூட, அதன் பழுது முற்றாக நீக்கப்படவில்லை. பழுது நீக்கப்பட்ட பிறகும் அதன் ரோட்டர் கருவியானது மிக மோசமான அதிர்வினை வெளிப்படுத்துவதால் 92 மெகாவாட்டுக்கு பதிலாக 68 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த மின் அலகால் உற்பத்தி செய்யும் சூழ்நிலை உருவானது. இவ்வாறு குறைந்த திறனில் இயக்கப்பட்டு வந்த இந்த அலகானது அடுத்து வந்த ஓராண்டில் சுமார் 15 முறை பிற பழுதுகளால் (ட்ரிப்பிங்) பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியில், ஒரு குறிப்பிட்ட உபரி பாகம் இல்லாத காரணத்தால் ஜூன் 2012 இல் இருந்து 45 நாட்களுக்கு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்றும் அது 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 68 மெகாவாட்டைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த அவலம்?

மின் வாரியத்தின் நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள் – குத்தாலம், கோவில்களப்பால் மற்றும் வழுதூர் 1 – பாரத மிகு மின் நிலையத்தின் (BHEL) எந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனமே இந்த நிலையங்களை நிறுவும் ஒப்பந்ததாரராகவும் இருந்தது.

ஆனால் வழுதூர் 2 ஆம் நிலையத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் (B.G.Raghupathy) என்ற தனியார் நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த நிறுவனத்திற்கு இதற்கு முன் மின் நிலையங்களைக் கட்டிய அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான். இதுவே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் மின் நிலைய ஒப்பந்தமாகும்.

இந்த மின் நிலையத்தை நிறுவுவதற்காக அது இத்தாலி நாட்டின் ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களைத் தருவித்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்ற மின் நிலையங்களின் ஒப்பந்தகார நிறுவனமான பாரத மிகுமின் நிலையம் போல பி.ஜி.ஆர் நிறுவனமானது எந்திர வடிவமைப்பிலோ, எந்திர உற்பத்தியிலோ ஈடுபட்டதில்லை. வழுதூர் 2 ஆம் மின் அலகினை அமைப்பதன் மூலம் அது மின்நிலையம் ஒன்றை எவ்வாறு நிறுவுவது என்பதற்கான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களை அதனால் சரியாக நிறுவத் தெரியவில்லை. இதன் காரணமாகமே ஒப்பந்த காலமான 21 மாத காலத்திற்குள் இந்த நிலையத்தினை அதனால் நிறுவ இயலவில்லை. இதற்காக அது கூடுதலாக 10 மாதங்களை எடுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் கூட மின் நிலையத்தின் பணிகளை அது அரைகுறையாகவே முடித்துக் கொடுத்தது.

ஒப்பந்த காலமாகிய ஓராண்டு காலம் வரை நிலையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு ஒப்பந்தகார நிறுவனமே – அதாவது பி.ஜி.ஆர் நிறுவனமே - பொறுப்பாகும். ஆனால் 9-1-2010 இல் ஏற்பட்ட பழுதிற்கும், அதன்பிறகு 16 மாத காலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பிற்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்தைத் தமிழக அரசோ, தமிழ்நாடு மின் வாரியமோ பொறுப்பாக்கியதாகத் தெரியவில்லை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 43 கோடி ரூபாயாகும்.

மேலும், மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியையே இந்த நிலையம் இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாளியாக்குவது?

இதனை விட மிகப்பெரிய சோகம் ஒன்றும் இருக்கிறது. வழுதூர் 2 ஆம் மின் நிலையத்தைச் சரியாக அமைத்துக் கொடுக்கத் தெரியாத இதே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்குத்தான் இன்று நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மேட்டூர் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தத்தை தமிழக அரசு கொடுத்த்து என்பதுதான் அந்தச் சோகம்.

மின்வாரியத்தின் அனைத்து மின் நிலையங்களும் பாரத மிகுமின் நிலையத்தின் எத்திரங்களையே உபயோகின்றன. அதன் புதிய மின் நிலையங்களும் இந்த மரபைத்தான் பின்பற்றி வருகின்றன.

ஆனால், பி.ஜி.ஆர் நிறுவனத்தால் கட்டப்பட்டுவரும் மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்தில் சீன நாட்டின் Tang Fang நிறுவனத்தின் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையம் 25-9-2011 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதனால் நிலையான உற்பத்தியைத் தொடங்க இயலவில்லை.

அனல் மின் நிலையங்களுக்கான சீன நாட்டின் எந்திரங்கள் தரம் குறைவானவை என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நடுவண் மின் துறை அமைச்சகம் கடந்த காலத்தில் அறிவுறுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்திலும் வழுதூர் 2 ஆம் நிலையத்தைப் போலவே கட்டுப்படுத்த இயலாத அளவு அதிர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது. வழுதூர் 2 ஆம் நிலையம் போலவே மேட்டூர் புதிய மின் நிலையம் எதிர்காலத்தில் நோயுற்ற யானையாக இருந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வழுதூர் 2 ஆம் நிலையத்தின் பழுதுகளுக்குப் பொறுப்பேற்க வைக்கப்படாத பி.ஜி.ஆர். நிறுவனம் எதிர்காலத்தில் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வைக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது. உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள கால தாமதத்திற்கு இந்நிறுவனம் தோராயமாக 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றையும் விட மின் உற்பத்தி இழப்பானது இன்று கடுமையான மின் வெட்டிற்கு மாநிலத்தைத் தள்ளியுள்ளது. இது வழுதூர் 2 ஐப் போன்று 6 மடங்கு உற்பத்தியைக் கொண்ட மின் நிலையமாதலால், இதில் ஏற்படும் பழுதுகள் மாநிலத்தின் மின்சார வினியோகத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

ஆக, அரசும், செய்தி ஊடகங்களும் சொல்வதைப் போல இன்று நடைமுறையில் உள்ள மின் தட்டுப்பாட்டில் பெரிய மாற்றங்களேதும் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை.

அவ்வாறு ஏற்பட வேண்டுமென்றால்:

• பி.ஜி.ஆர் நிறுவனத்திடம் கொண்டிருக்கும் மென்மையான அணுகு முறையினை அரசு கைவிட வேண்டும். மக்களின் நலன் கருதி ஒப்பந்தகாரப் பொறுப்புகள் அனைத்தையும் அந்த நிறுவனம் உடனடியாக செயல்படுத்தித் தர நிர்ப்பந்திக்க வேண்டும்.

• குத்தாலம் மற்றும் வழுதூர் மின் நிலையங்களில் நிகழும் பழுதுகள் யாவும் நீண்டகாலம் நீக்கப்படாமல் இருப்பது இந்நிலையங்களைச் சுற்றி உள்ள 8 தனியார் எரிவாயு மின் நிலையங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்காகத்தானோ என்ற
சந்தேகம் உள்ளது . அரசு மின் நிலையங்கள் பழுதடைந்து கிடப்பதால் அவற்றிற்குக் கிடைக்க வேண்டிய அரிதான இயற்கை எரிவாயுவினை இந்தத் தனியார் மின் நிலையங்கள் தங்குதடையின்றி பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அருகில் தனியார் மின் நிலையங்கள் ஏதும் இல்லாத கோவில்களப்பால் அரசு எரிவாயு மின் நிலையம் இதுபோன்ற பழுதுகளை 2004 ஆம் ஆண்டிலிருந்தே சந்திக்கவில்லை என்பது இந்த சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.

• ஆந்திர மாநிலத்தின் சிம்மத்திரி அனல் மின் நிலைத்தில் இருந்து இன்றுவரை நமக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தைக் கேட்காமல் இருக்கும் நிலைப்பாட்டினை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெற வேண்டும்.

• குத்தாலம் எரிவாயு மின் நிலையத்திலிருந்து வழுதூர் 1 அலகிற்குப் பிரித்து எடுத்துச் செல்லப்பட்ட எந்திரங்களுக்குப் பதிலாக பாரத மிகுமின் நிலையத்திலிருந்து உடனடியாகப் புதிய எந்திரங்களை வாங்கிப் பொறுத்தி இயக்க வேண்டும்.

அன்புடன்
கோவை. சா.காந்தி,
19 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

நன்றி : கீற்று

தொடர்புடைய சுட்டிகள் : 

தமிழக மின்சார பிரச்சனைக்கான உண்மை காரணமும், அதற்கான தீர்வும்! - கோவை. சா.காந்தி - கீற்று

October 15, 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!

  
தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.

வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.

இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல்,
கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது.
தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான்.  மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.

எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.
…………..
கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.
“மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.

அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.
சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.

அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.
அன்புடன்

கோவை. சா.காந்தி,
9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

October 10, 2012

கூடங்குளம் மக்களின் அளப்பரிய தியாகம்! உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்க!

செப். 9, 10 அணு உலை முற்றுகையின் பொழுது, 10ந்தேதி கண்ணீர்புகை குண்டு, தடியடி என அவிழ்த்துவிடப்பட்ட வெறிநாய்களைப் போல, காவல்துறை மக்கள் மீது பாய்ந்தது.  வைராவிக்கிணறு, இடிந்தகரை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.  இடிந்தகரை போராட்ட மேடையில் மாதா சிலையை உடைத்தார்கள்.  பேனர்களை கிழித்தெறிந்தார்கள்.  அங்கேயே சிறுநீர் கழித்தார்கள். இதையெல்லாம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இதே வேளையில் கூடங்குளம் மொத்த மக்களும் ஒன்றுகூடி இந்த வெறித்தாக்குதலை கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக்கோரி அணு உலை எதிரே ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  அங்கும் சென்ற காவல்துறை "உங்களுக்கும் இடிந்தகரை மக்களுக்கும் நெடுங்கால பகை உண்டு (இந்து நாடார்கள் Vs கிறிஸ்துவ மீனவர்கள்)  அதனால், அவர்களுக்கு என்ன நடந்தால் என்ன? கலைந்து செல்லுங்கள்!" என பிரித்தாளும் சூழ்ச்சியை செய்திருக்கின்றனர். கூடி நின்ற மக்களோ "அதெல்லாம பழைய கதை.  இப்பொழுது அணு உலையை எதிர்த்து ஒற்றுமையாய் போராடுகிறோம்!" என காவல்துறையின் மீது காறி உமிழ்ந்தனர் மக்கள்.

காவல்துறை உடனே கண்ணீர்புகை, தடியடி என ஆரம்பித்துவிட்டது.  20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாச்சாத்தியை மீண்டும் காவல்துறை அரங்கேற்றியது.  ஏழு வயது பையனை லத்தியால் அடித்து, கை பெரிதாய் வீங்கிவிட்டது.  நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு, வந்து படுத்திருந்தவரை அடித்து, கைது செய்திருக்கிறார்கள்.  30 பைக்குகளுக்கும் மேலாக திருடி சென்றுவிட்டார்கள்.  40 பைக்குகளுக்கும் மேலாக பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதப்படுத்தியிருக்கிறார்கள். தங்கள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த ஜீப்களையும், தொழிலுக்காக வைத்திருந்த லாரியையும் நொறுக்கிவிட்டார்கள். தேர்வுக்கு கிளம்பிய எம்.பி.ஏ மாணவனை நடுமண்டையில் அடித்து, ரத்தத்துடன் கைது செய்து சென்றிருக்கிறார்கள்.  ஆக்கி வைத்திருந்த சோற்றை கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள்.  வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளையும் ஒன்றுவிடாமல் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.   பெண்களை "உதயகுமாரோடு தான் படிப்பியா! எங்க கூட படுக்க மாட்டியா!" என கேவலமாக பேசியிருக்கிறார்கள்.  லத்திக்கம்பைக் கொண்டு பெண்ணுறுப்பில் குத்தியிருக்கிறார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தோழர்கள் "உண்மை அறியும் குழு"வாக சென்ற பொழுது, இதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் சொன்னதில் ஒரு பகுதி தான். இந்த கொடூரமான காவல்துறையின் அட்டகாசத்தின் நோக்கம் இனி, இந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கூடங்குளம் கிராமத்து மக்கள் கலந்து கொள்ள நினைக்ககூடாது!".

"இத்தனை மோசமாக இழிவுப்படுத்தியிருக்கிறார்கள்! கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்! இனி போராடுவீர்களா?" என கூடங்குள பெண்களிடம் தோழர்கள் கேட்டப்பொழுது,   "அணு உலை எங்கள் உயிர் போகும் பிரச்சனை.  இப்பொழுது குடும்பம், குடும்பமாய் போராடுவது போல, இறுதிவரை போராடுவோம்!" என உறுதியாய் கூறியிருக்கிறார்கள்.

இடிந்தகரை, வைராவிக்கிணறு பகுதியில் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான காவல்துறை அந்த மக்களை குதறிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்டு,  படையில் பாதியை நம் பக்கம் திருப்புவோம் என ஊர்கூடி முடிவு செய்து, போராட்டம் செய்திருக்கிறார்கள். என்ன ஒரு உயரிய நோக்கம்! 

மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் இடிந்தகரை மக்களிடம் இந்த போராட்டத்தின் நோக்கத்தையும், பாதிப்பையும் பகிர்ந்த பொழுது, இடிந்தகரை, வைராவிக்கிணறு மக்கள் உள்ளம் நெகிழ்ந்து போனார்கள்.


உழைக்கும் மக்கள் போராட்டக்களத்தில் உறுதியோடு தொடர்கிறார்கள்.  அவர்களின் போராட்டம் வெல்லட்டும்!

இந்த தாக்குதலுக்காக நீதி விசாரணை வேண்டி, நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

****

டிஸ்கி : கடந்த பிப்ரவரியில் அணு உலை எதிர்ப்பு பிரச்சாரத்தை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்தில் செய்துகொண்டிருந்த பொழுது,  ஒரு நடுத்தர வயதை சேர்ந்த ஒருவர், "அவங்க (நாடார்களும், கிறிஸ்துவர்களும்) எந்த காலத்திலும் ஒண்ணு சேர மாட்டாங்க சார்!"  இந்த போராட்டம் தோத்துத்தான் போகும்!" என திரும்ப, திரும்ப ஆதங்கத்தோடு சொல்லிக்கொண்டே இருந்தார்.   இதோ மக்களின் போராட்டப் பாதையில், இழப்புகளை தாங்கிகொண்டு, இணைய முடியாத (!) அவர்கள், இணைந்துவிட்டார்கள்.

October 6, 2012

திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! - சிறு வெளியீடு!

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

சிறு வெளியீடு :

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16

"கடந்த 25/07/2012 அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த சுருதி என்கிற முதல் வகுப்பு மாணவி பள்ளியின் பேருந்து ஓட்டையில் விழுந்து இறந்து போனது நினைவிருக்கலாம்.  சீயோன் பள்ளி நிர்வாகத்தின் லாப வெறியே ஓட்டை ஒடிசல் பேருந்துகளை இயக்கத்திற்கு காரணம் என்பதை உணர்ந்த பொதுமக்கள் பள்ளியின் பேருந்துக்கு தீவைத்து கொளுத்தினர். மக்களது இந்த கோப்த்தை எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் வன்முறை என்று கூறவில்லை.  மக்களது நியாயமான கோபத்தை குற்றம் என்று சொல்ல எவருக்கு மனம் ஒப்பவில்லை.

ஏனென்றால் மாணவியின் இறப்பு பள்ளி நிர்வாகம் நட்த்திய படுகொலை என்று தான் மக்கள் பார்த்தார்கள்.  பள்ளிப் பேருந்து எரிந்ததை குறைந்த பட்ச நியாய நடவடிக்கை என்றுதான் பார்த்தார்கள். வன்முறை என்று பார்க்கவில்லை  இதே கண்ணோட்டத்தை தானே மாருதி தொழிலாளர்களுக்கும் பொருத்தவேண்டும்.  ஆனால் , மாருதி சம்பவத்தை வன்முறை என முத்திரை குத்துவது எதனால்? " பக்.4.

"எதிர்த்து கேள்வி எழுப்பினால், போராடினால் திவீரவாதிகள், வன்முறையாளர்கள் என முத்திரை குத்துவோம், ஒடுக்குவோம் என்று மிரட்டுகிறது அரசாங்கம்.  அரசாங்கத்திற்கு கொம்பு சீவிவிட்டு கொண்டிருக்கின்றன முதலாளிகள் சங்கங்கள்.

இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சி, குட்டக் குட்டக் குனிந்து, இனி குனிவதற்கில்லை என்று தொழிலாளி வர்க்கம் நிமிர்ந்ததன் விளைவு தான், மாருதி போராட்டம்.

நிமிரத்துவங்கி விட்டோம்! இனி குனிவது என்ற பேச்சுக்கே இடமில்லை!" பக். 15.

புத்தகத்திலிருந்து....

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி


நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

October 4, 2012

சேலை

உடுத்துவதும்
பயன்படுத்துவதும்
எத்தனை சிரமமானது என்பதை
ஒரு மனநிலை சரியில்லாத பெண்
புரிய வைத்தாள்!

October 3, 2012

அணு உலை எதிர்ப்பிலும் வெற்று சவடால் அரசியல்!

சீமான், வைகோ, திருமா இன்னபிற தலைவர்கள் எல்லாம் இடிந்தகரைக்கு போய், ஒரு கால இடைவெளியில் ஆளாளுக்கு 20 நிமிடம் ஆவேசமான, நெகழ்ச்சியான‌ உரை நிகழ்த்திவிட்டு வருகிறார்கள். யூடியூப்பில் அவ்வப்பொழுது பார்க்கமுடிகிறது.

அதை தவிர்த்து அவர்களுடைய ஆயிர
க்கணக்கான அணிகளை கொண்டு பொதுக்கூட்டமோ, மக்களிடம் பிரச்சாரமோ செய்வதை கேள்விப்படவே முடியவில்லை. போய் பேசிவிட்டு வந்துவிட்டால் போதும் என நினைக்கிறார்களா?

அணு உலை முற்றுகை போராட்டத்தின் பொழுதும் அதற்கு பிறகு காவல்துறை வெறிநாய்கள் இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் மீது பாய்ந்து கடித்த பொழுதும், களத்தில் எந்த வாக்கு வங்கி தலைவர்களும், அணிகளும், தமிழின அமைப்புகளும், அணிகளும் யாரும் இல்லை. மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் தான் அம்மக்களோடு நின்றார்கள். ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அம்பலப்படுத்தினார்கள்.

வெற்று சவடால் அரசியலை அணு உலை விசயத்திலும் அமுல்படுத்துகிறார்கள். அதுதான் கவலையாக இருக்கிறது!