> குருத்து: October 2023

October 31, 2023

இப்படி துவங்குகிறது ஒரு கொரிய‌ படம்.


அந்த இரவில் ஒரு நெடுஞ்சாலையில் அவன் வேகமாக காரில் வீட்டிற்கு போய்கொண்டிருக்கிறான். அவன் ஒரு போலீசு. அலுவலகத்தில் அவன் அலுவலக மேஜையை லஞ்ச ஒழிப்பு போலீசு படை குடைந்துகொண்டிருக்கிறது.


அவனின் அம்மா அன்றைக்கு இறந்துவிட்டார். உறவினர்கள் எல்லாம் வந்துவிட, அங்கு செல்லாமல் வேலை நெருக்கடியில் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறான். அவன் தங்கை அவனை மோசமாக திட்டுகிறார்.

பொண்ணு ”எனக்காக சாக்லெட் கேக் வாங்கி வருவதாக உறுதி கொடுத்துள்ளீர்கள். வாங்கிட்டு வந்துவிடுவீர்கள் தானே!” என மழலையோடு போனில் கேட்கிறது.

மொபைலில் பேசிக்கொண்டே ஓட்டியதில், எதிரே வந்த மனிதனை கவனிக்கவில்லை. அடித்து தூக்கிவிடுகிறான். கவனித்தால், அவன் செத்துவிட்டான். காரின் முன் கண்ணாடியில் கொஞ்சம் சேதமாகியிருக்கிறது. ஒரு போலீசு வண்டி சைரனோடு வருகிறது. அந்த உடலை அவசர அவசரமாய் இருட்டில் தள்ளிவிடுகிறான். அந்த வண்டி கடந்து போய்விடுகிறது.

உடலை இங்கு விட்டால் ஆபத்து, என்ன செய்வது என பிறகு பார்த்துக்கொள்ளலாம் என‌ காரில் பின்னால் தூக்கிப்போட்டு கிளம்பிவிடுகிறான்.

போகிற வழியில்... இரவில் சோதனையில் ஈடுபடும் போலீசு நிற்கிறது. இவனையும் நிறுத்துகிறது. "தான் ஒரு போலீசு" என்கிறான். அவர்கள் அதை நம்பவில்லை. ஊதச் சொன்னால், "அம்மா இறந்துவிட்டார். ஆகையால், கொஞ்சமாய் குடித்திருக்கிறேன்" என்கிறான். முன் கண்ணாடி லேசாக சேதம் ஆகியிருப்பதை அந்த போலீசு பார்க்கிறது. டிக்கியை சோதனை செய்யப் போகிறது. அதையும் சமாளித்து வீட்டுக்கு போகிறான்.

வீட்டுக்கு போனால், சக போலீசு அதிகாரிகள் இறந்த அம்மாவிற்காக துக்கம் விசாரிக்க வருகிறார்கள். "உன் டிராயரில் சோதனையிட்டார்கள். பணம் முழுவதும் மாட்டிக்கொண்டது." என்கிறார்கள். "அது என்ன என் பணம் மட்டுமா! உங்களுடைய பணமும் தான் இருக்கிறது!" என கோபமாய் சொல்கிறான். "நீ பழியை ஏத்துக்கோ. எங்களை காப்பாற்று!" என்கிறார்கள்.

முதல் பத்து நிமிடம் இப்படி போகிறது.

படம் : A Hard day

தீபாவளிக்கு 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - செய்தியும் கேள்வியும்!


தினசரி சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன், 3167 சிறப்பு பேருந்துகளுடன் சேர்த்து 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 9467 பேருந்துகள் இயக்க இருக்கிறார்கள் என சொல்லிக்கொண்டே போகிறார்கள்.


கூடுதலாக இயக்குகிற பேருந்துகள் பண்டிகைகளுக்கு மட்டும் எங்கிருந்து திடீரென வானத்தில் இருந்து குதிக்கின்றன என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பேருந்து டிப்போவில் நிறுத்தி வைத்திருந்து, பண்டிகைகளுக்கு மட்டும் இயக்குவது என்பது சாத்தியமாகாது. வண்டி கெட்டுப்போகும்.

தனியார் பேருந்துகளை அதிகமாக்க வாய்ப்பில்லை. அவர்களும் அளவாகத்தான் வைத்து ஓட்டுவார்கள். கூடுதலாக வைத்திருக்கும் பேருந்துகளை ஆன்மீக சுற்றுலா, பிற சுற்றுலாவிற்கு அனுப்புவார்கள். அந்த பேருந்துகளின் ஆரோக்கியமும் பலவீனமாக தான் இருக்கும். சமீபத்தில் குன்னூர் மலையில் தொழில்நுட்ப பிரச்சனையால் ஒரு பேருந்து கீழே விழுந்தது, பலர் பலியானதை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள்.

வேலூர், பாண்டிச்சேரி என நான்கு, ஐந்து மணி நேரத்திற்குள் போய்ச்சேரும் பேருந்துகளை கூடுதலாக இன்னொரு பயணம் போய்வரச்செய்யலாம். ஆனால், திருச்சியைத் தாண்டி விட்டால், போக ஒருமுறை, வர ஒருமுறைக்கே 20 மணி நேரம் தாண்டிவிடும். சாத்தியமில்லை. நகர் பேருந்துகளை தூரமாய் ஓட்டுவதற்கு அனுப்புவதற்கும் வாய்ப்பில்லை. அந்த பேருந்துகளின் ஆரோக்கியம் நாம் அறிந்தததே!

ஆக, இந்த அறிவிப்பில் பாதி பொய் இருக்கிறது. இல்லையெனில் ஏதோ மேஜிக் செய்தால் மட்டுமே இத்தனை கூடுதலான பேருந்துகளை இயக்குவது சாத்தியம்.

நீங்கள் இதுப்பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா? அல்லது இது உண்மை தான் என்றால், அதற்கான விளக்கத்தை கொடுத்தால் நல்லது. இல்லையெனில் விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் சொல்வது போல உண்மை தெரிந்தும் சொல்லாமல், அமைதியாக கடந்து சென்றால், உங்கள் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும். :)

October 28, 2023

Equalizer – 3


ஒரு ஒயின் தொழிற்சாலையில் அதகளம் செய்துவிட்டு, வெளியே வரும் பொழுது, மாபியா கும்பலைச் சேர்ந்த ஒரு சிறுவனால் நாயகன் சுடப்படுகிறார்.


அங்கிருந்து அரை மயக்கத்தில் நகரும் அவரை ஒரு போலீசு காப்பாற்றி, இத்தாலிக்கு அழைத்து வந்து, மருத்துவம் பார்க்கிறார். மெல்ல மெல்ல தேறி வருகிறார். கடற்கரையோரம் உள்ள அந்த ஊரின் மக்களின் இயல்பும், அமைதியான வாழ்க்கையும் அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விடுகிறது.

அங்கு ஒரு மாபியா கும்பல் மக்களை அங்கு இருந்து காலி செய்ய வைத்து, தங்கும் விடுதி, சூதாட்டவிடுதி எல்லாம் கட்ட திட்டமிடுகிறார்கள். மிரட்டுகிறார்கள். வதைக்கிறார்கள். அதிகப்பட்சம் கொலை செய்கிறார்கள்.

நாயகன் சொல்லிப்பார்க்கிறார். பிறகு மோதலாகிவிடுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***

இப்படிப்பட்ட கதைகள் நம்ம ஆந்திராவிற்கு சர்வ சாதாரணம். இதுவரைக்கும் 200 படங்களாவது இப்படி வந்திருக்கும். நம்மூரிலும் இப்படி கதைகள் நிறைய உண்டு. இப்படி ஒரு கதையில் டென்சிலை நடிக்க வைத்திருப்பது ஆச்சர்யம்.

இடைவேளை வரை காயம்பட்ட நாயகன் ஊன்று கோலுடன் நடக்கிறார். அப்படித்தான் படமும் நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் சுறுசுறுப்பாகிறது.

Equalizer தொடர்ச்சியில் இதுவே கடைசிப் படம் என படக்குழு அறிவித்திருக்கிறதாம். விமர்சகர் ஒருவர் சொன்னது போல, படத்தைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்து இருப்பார்கள் என்றார். உண்மை.

செப்டம்பரில் திரையரங்குக்கு வந்து, இப்பொழுது ஆப்பிள், அமேசானில் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

டென்சிலை ரசிப்பவர்கள் பார்க்கலாம். மற்றபடி ஒரு வழக்கமான ஆக்சன் படங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவு தான்.

October 25, 2023

Marshland (2014) ஸ்பானிஷ் சதுப்பு நில கொலைகள்


1980 கால கட்டம். ஸ்பெயினில் ஒதுக்குப்புறமான கிராமத்தில் நடக்கிறது கதை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரிகள் திடீரென காணாமல் போகிறார்கள். விசாரிப்பதற்காக நகரத்தில் இருந்து இரண்டு போலீசு அதிகாரிகள் அங்கு வருகிறார்கள்.


விசாரிக்கும் பொழுது, அந்தப் பெண்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்திற்கு செல்லும் எண்ணத்தில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் பாலியல் ரீதியாக சீரழிந்தவர்கள் என பேசுகிறார்கள்.

இரண்டாவது நாளில் இரு பெண்களும் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்து, ஒட்டுத்துணியில்லாமல் கால்வாயில் எறிந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

விசாரணையில், மெல்ல மெல்ல முன்னேறுகிறார்கள். இந்த கொலைகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? கொலையாளியை கண்டுப்பிடித்தார்களா என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

***

எந்தவித மிகையுமில்லாமல், கிராமப்புறத்தில் இயல்பாக ஒரு திரில்லர். பல விருதுகளை வென்று, பெயர் பெற்ற படமாகவும் இருக்கிறது.


80 காலக்கட்டம் என்பதால் அதற்கொரு நிறத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அது ராவாக நன்றாக இருக்கிறது. அந்த ஊரின் நிலவியலை நன்றாக காட்டியிருந்தார்கள்.

இரண்டு போலீசுகளில் ஒருவர் 50+, இன்னொருவர் 30+ என இருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் புரிதல், விலகல் இரண்டையும் நன்றாக காட்டியிருக்கிறார்கள்.

இருவரில் மூத்த அதிகாரி ஸ்பெயினில் நிலவிய சர்வாதிகார ஆட்சியின் பொழுது ஒரு மூர்க்கமான அதிகாரியாக இருந்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளம்பெண்ணை சுட்டுக்கொன்றவர் எனவும் படத்தின் இடையில் ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிடுவார். அந்த சர்வாதிகார ஆட்சியைப் பற்றி தேடிப்படிக்கவேண்டும் என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது.

Alberto Rodríguez இயக்கியிருக்கிறார். நல்ல திரில்லர். பாருங்கள். இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வகைகளில் முயலுங்கள்.

October 24, 2023

இறுகப்பற்று (2023)


“உறவு என்பது ரப்பர் பாண்ட் போல தான். கணவன் மனைவி இருவரும் எதிரெதிர் திசையில் இழுக்க, அறுபடத்தான் செய்யும். சிலர் அதை தூக்கிப்போட்டுவிட்டு, புதிது என நகர்ந்துவிடுகிறார்கள். சிலர் முடிச்சுப்போட்டு, மீண்டும் ஒட்டவைத்துக்கொள்கிறார்கள்.”


- படத்திலிருந்து...!

மூன்று இளம் ஜோடிகள். ஒரு உளவியல் மருத்துவர் தன்னிடம் ஆலோசனைக்காக வரும் தம்பதிகளுக்கிடையே நடக்கும் உரசல்களினால், பிரிவுகளினால்… தன் வாழ்க்கையிலும் அப்படி வந்துவிடும் என்ற பதட்டத்தில் தன் கணவனிடம் நடந்துகொள்ளும் அணுகுமுறையால் கசப்பு ஏற்படுகிறது.

ஒருவனுக்கு சொந்தமாய் தொழில் செய்யவேண்டும் என பெரும் ஆசை. ஆனால், அதற்காக அவன் குடும்பம் அதற்காக படிக்கவிடாமல், அதற்காக ஒத்துழைப்பு தராமல் அவனை கட்டாயப்படுத்தி, ”பாதுகாப்பான வாழ்க்கை” என வேறு வாழ்க்கைக்குள் தள்ளுகிறது. அந்த மன அழுத்தத்தில் அவன் செய்த செயல்களால் குடும்பத்திற்குள் என்ன ஆனது?

கணவன் – மனைவிக்குள் எழும் ஈகோ எப்படியெல்லாம் அவர்களை தொல்லை செய்கிறது? அதை புரிந்துகொண்டு, மாற்றிக்கொண்டார்களா? பிரிந்தார்களா என மூன்று ஜோடிகளின் வழியே உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

தமிழ் பட உலகம் காதலை 360 டிகிரியிலும் காதலை விதவிதமாக எடுத்து தள்ளியிருக்கிறது. ஆனால் தம்பதிகளுக்குள் எழும் அக சிக்கல்களை விவாதித்தப் படங்கள் தமிழில் குறைவு. அதிலும் நல்ல படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்தப் படம் எடுத்துக்கொண்ட கதைக்களனைத் தாண்டி வேறு எங்குமே பயணிக்கவில்லை. அதே போல கணவன் மனைவி என பிரச்சனை என பழைய பஞ்சாயத்துகளை எடுத்து கையாளவும் இல்லை. இன்றைய இளம் தலைமுறைகளிடம் என்ன விதமான சிந்தனை எழுகிறது? எப்படிப்பட்ட புரிதல்களுடன் வாழ்கிறார்கள்? அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதை நன்றாக பதிந்திருக்கிறார்கள்.

நடிகர்கள் விக்ரம் பிரபு – ஷ்ரத்தா, விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா என மூன்று ஜோடிகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். தன் ஆசை, தன் வாழ்க்கை குறித்து விதார்த் தழுதழுத்து சொல்லும் இடம் அருமை. இப்படி சில இடங்கள் நல்ல அழுத்தமான காட்சிகளாக இருக்கின்றன. இயக்குநர் யுவராஜ் இரண்டு வடிவேல் படங்கள், இன்னொரு படம் என மூன்று படங்கள் இயக்கி தெரியாமல் போயிருந்தாலும், இந்த படம் அவருக்கு நிச்சயம் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. வாழ்த்துகள்.

சமீபத்தில் சித்தாவுடன் வெளிவந்த படங்களில் இதுவும் நல்லபடம். இந்தப் படம் வெற்றி பெற்றதாய், ஒரு விழா கொண்டாடினார்கள். விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும். பாருங்கள் 

October 4, 2023

Timecrimes (2007) ஸ்பானிஷ்


கால பயண (Time travel) திரில்லர் கதை

நடுத்தர வயது நாயகன் வீட்டுக்கு பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குவருகிறான். மனைவி வீட்டை சுத்தப்படுத்தும் வேலையில் இருக்கிறார். வீட்டிற்கு பின்னால் உள்ள புல்வெளியில் ஹாயாக ஒரு சேரைப் போட்டுக்கொண்டு ஒரு பைனாகுலரை வைத்துக்கொண்டு சுற்றி உள்ள மரங்கள் அடர்ந்த இடத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.

மரங்களுக்கு மத்தியில் ஒரு இளம்பெண் தனியாக நிற்கிறாள். மனைவி வெளியே கிளம்பியதும்… மீண்டும் தொடர்கிறான். இப்பொழுது அந்தப் பெண்ணை காணவில்லை. மீண்டும் தேடும் பொழுது, அவள் தன் மேலே போட்டிருந்த டீசர்ட்டை கழற்றுகிறாள். இவன் ஆர்வம் அதிகமாகி, அந்த இடத்துக்கு போகிறான். மரங்களுக்கு இடையே நடந்துப் போய் பார்த்தால்… அந்தப் பெண் மயக்கத்தில் துணியே இல்லாமல் ஒரு பாறையில் சாய்ந்து இருக்கிறாள். அருகே போனதும், பின்னால் இருந்து யாரோ கத்திரியால் அவன் கையில் குத்த… அய்யோ!வென அலறிக்கொண்டு ஓடுகிறான்.

தட்டுத்தடுமாறி ஒரு வேலியைத் தாண்டி, ஒரு தனியார் இடத்திற்குள் நுழைகிறான். அங்கே ஒரு கட்டிடம் இருக்கிறது. உதவி கேட்கலாம் என அங்கு போனால் யாருமே இல்லை. ஒரு வாக்கி டாக்கி கிடைக்கிறது. அதில் பேசியவனிடம் நடந்ததைச் சொல்லி, காப்பாற்ற கோருகிறான். பக்கத்து கட்டிடத்தில் தான் இருப்பதாகவும், இப்பொழுது அங்கு வருவதாகவும் கூறுகிறான்.

வந்தவன் ”உன்னை கொலை செய்ய வந்தவனிடம் இருந்து காப்பாற்றுகிறேன். இந்த இயந்திரத்திற்குள் நுழைந்துகொள்” என்கிறான். இவனும் வேறு வழியின்றி உள்ளே போகிறான். சிறிது நேரத்தில் மூடிய இயந்திரம் திறக்கிறது. நாயகன் வெளியே வந்து பார்த்தால், நல்ல வெளிச்சம் இருக்கிறது. உள்ளே நுழைந்த பொழுது நன்றாக இருட்டிவிட்டதே என யோசித்து அவனிடம் கேட்டால், ”டைம் டிராவல் செய்திருக்கிறாய். இப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இருக்கிறாய்” என சொல்கிறான்.

இப்பொழுது பைனாகுலரில் பார்த்தால், நாயகன் தன் வீட்டு புல்வெளியில் அமர்ந்துகொண்டு பைனாகுலரில் அந்தப் பெண்ணை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இதற்கு பிறகு நடந்த களேபரத்தால், ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அதை சரி செய்ய அடுத்தடுத்து நாயகன் செய்கிற முயற்சிகளும் சொதப்ப… இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை.

****

ஒன்றரை மணி நேரம் தான் மொத்தப்படமே! டைம் டிராவல் தான் கதை. ஒரு சாமான்யன் இதில் மாட்டிக்கொண்டால், பயத்திலும், பதட்டத்திலும் அவன் செய்கிற குழப்பங்கள் தான் கதை. புரிஞ்சவரைக்கும் புரிஞ்சுக்க என எந்தவித விளக்கத்தையும் படக்குழு கொடுக்காமல் விட்டுவிட்டது. ஆகையால் படம் பார்த்தவர்கள் நிச்சயம் குழம்பிபோவார்கள். கொஞ்சம் நிதானமாக அசைப்போட்டு யோசித்தால் தான், என்ன நடந்தது என புரிந்துகொள்ள முடியும். முன்பு Triangle என ஒரு படம் பார்த்தேன். டைம் டிராவல், லூப் குறித்தெல்லாம் தெரியாத காலம். மண்டை காய்ந்துவிட்டது.

மொத்தமே நான்கு கதாப்பாத்திரங்கள் தான். டைம் டிராவல் மூலம் கூடுதல் கதாப்பாத்திரங்கள் உருவாகி, கதையை கட்டமைக்கிறது. இதில் அந்த கட்டிடத்தில் இருந்தவர் கதைப்படி விஞ்ஞானி என்கிறார்கள். அந்த ஆளிடம் இதை எப்படி சரி செய்வது என நாயகன் விவாதிக்கவேயில்லை. தனக்கு தெரிந்த அளவிலேயே நடந்த குழப்பங்களை சரி செய்ய முயல்கிறான். ஏன்?

மனிதாபிமான அடிப்படையில் ஒரு பெண் உதவி செய்யப் போனால், இப்படியா பண்ணி வைப்பீங்க! பாவம். இதற்கு தாங்க எது நடந்தாலும் கண்டுக்காம பல பேர் போயிடாறாங்க! 🙂

மலையாள நடிகர் பிருத்விராஜ் இந்தப் படத்தின் கதையை வாங்கியதாக செய்தி சொல்கிறார்கள். படம் எடுத்தாரா? தெரியவில்லை.

டைம் டிராவல் படங்களில் ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம். இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. கொரானா காலத்தில் கிடைத்ததை, இப்பொழுது தான் பார்த்தேன்.

October 2, 2023

Fly Boys (2006)

 

"போர் வீரர்கள் போர் செய்ய மறுக்கும் போது, ​​தொழிலாளர்கள் கப்பல்கள் மற்றும் விமானங்களில் ஆயுதங்களை ஏற்ற மறுக்கும் போது, ​​உலகம் முழுவதும் உள்ள பேரரசின் பொருளாதார புறக்காவல் நிலையங்களை மக்கள் புறக்கணிக்கும் போது மட்டுமே போர்கள் நிறுத்தப்படும். ”

― அருந்ததி ராய்,
பேரரசின் காலத்தில் பொது அதிகாரம்

முதல் உலகப்போர் காலகட்டம் (1916). ஜெர்மன் படைகள் மெல்ல மெல்ல பிரான்சுக்குள் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள். பிரான்சின் விமானப் படைக்கு ஆட்கள் நிறைய தேவைப்படுகிறார்கள். போர் அப்படித்தான். வெறிகொண்ட பூதம். மனிதர்கள், பொருட்கள் என எல்லாவற்றையும் தின்று செரித்து, இன்னும் வேண்டும் என கேட்டு நிற்கும்.

நட்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறார்கள். அந்தச் சமயத்தில் அமெரிக்கா இன்னும் போருக்குள் உள்ளே வரவில்லை. நட்பு நாடுகளில் உள்ளவர்களும் வரலாம் என அழைப்பு விடுக்கிறார்கள். யாராவது போரில் சண்டையிட்டு சாகலாம் என அழைத்தால் வருவார்களா! ஆனால், நாயகனும் இன்னும் வேறு வேறு பகுதிகளில் இருந்து சிலரும் அமெரிக்காவில் இருந்து கிளம்பி பிரான்சுக்கு வருகிறார்கள். ரயிலில் வந்து இறங்கும் பொழுதே, நிறைய பேர் கை, கால் இழந்து, ரயிலுக்காக காத்திருக்கிறார்கள்.

வந்து சேர்கிறவர்களுக்கு வாழ்வே மாயம் படத்தில் க்ளைடர் விமானம் வருமே! அந்த விமானத்தைப் போல இன்னும் பழைய மாடலில் தோற்றம் இருக்கிறது. அதை இயக்குவதற்கும், சுடுவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒருமுறை போர்க்களத்திற்கு போய்வந்தால், சிலர் இறந்துவிடுகிறார்கள். நாயகனிடம் உயரதிகாரி உனக்கு சொந்தம்னு இருக்கிற இடத்தில் எதையும் எழுதவில்லை. நாளைக்கு உனக்கு ஏதாவது நடந்தால், தெரியப்படுத்தனும் அல்லவா! என்கிறார்.


இருப்பினும் வெற்றிகரமாக பயிற்சி முடித்து, களத்தில் இறக்கிவிடப்படுகிறார்கள். படை வீரர்களில் ஒருவனே சொல்வது போல ஜெர்மனியின் விமானம் பிரான்சின் விமானத்தை விட தொழில்நுட்பத்தில் இன்னும் சிறப்பாக இருக்கிறது. இவர்கள் விமானத்தில் ஒரு துப்பாக்கி வைத்திருந்தால், அவர்கள் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை போய் வரும் பொழுதும் ஒன்றிரண்டு பேர் இறந்து போகிறார்கள்.

இறுதியில் என்ன ஆனது என்பதை பறந்து பறந்து சண்டையிட்டு சொல்லியிருக்கிறார்கள்.

****
படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் என சொன்னதால், உள்ளதை தானே சொல்லமுடியும். அதனால் அதற்குரிய தன்மையுடன் தான் படம் இருக்கிறது.

வேறு நாட்டில் போர். அமெரிக்க இளைஞர்கள் அங்கு சண்டையிட கிளம்புகிறார்களா! இதெல்லாம் நம்பும்படியாக இருக்கிறது என யோசித்துக்கொண்டே தான் படத்திற்குள் நுழைந்தேன்.

நம் தமிழ்படங்களில் முன்பெல்லாம், ஊரில் ஏதாவது காதல், கலாட்டா என பிரச்சனை என்றால், காணாமல் போய் சில வருடங்களுக்கு பிறகு இராணுவ உடையுடன் ஊருக்குள் வருவதை பார்க்க முடியும். இந்தப் படத்தில் அப்படித் தான். நாயகனுக்கு உள்ளூரில் ஒரு பிரச்சனை. அந்த போலீசு அதிகாரி “உன்னை கைது செய்ய உத்தரவு. நானாக இருந்தால் புத்திசாலித்தனமாக ஊரை விட்டு ஓடியிருப்பேன்” என்கிறார். நாயகன் படையில் வந்து இணைகிறார்.

இன்னொருவர் கருப்பினத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை இளம்வீரர். அமெரிக்காவில் இனவெறி தாக்கம் அதிகமாக இருப்பதால், ”இங்கேயாவது சமமாக நடத்துவார்கள் என்று தான் வந்தேன்” என்பார்.

இன்னொருவர் குடும்பம் தான் அந்த இளைஞரை ”போய் வென்று வா! மகனே!" என வாழ்த்தி அனுப்பிவைக்கும். ஆனால், இரண்டுமுறை போர்க்களத்துக்கு போய் வந்ததும், இரண்டு பேர் கண்ணெதிரில் செத்துப்போனதுமே அதிர்ச்சியாகி, மனம் பேதலித்துவிடுவார். (பிறகு சரியாகிவிடுவார்.) இன்னொருவரை அவருடைய அப்பா கட்டாயப்படுத்தி அனுப்பிவைப்பார்.


இருந்தும் படம் பார்க்கும் அளவிற்கு இருக்கிறது. போர் என்றதும் நிறைய ரத்தம், கண்ணீர் என இல்லாமல், ஒரு ஆக்சன் படம் போல எடுத்திருக்கிறார்கள். இதற்கிடையே ஒரு குட்டிக் காதல் கதையும் உண்டு.

ஜேம்ஸ் பிராங்கோ தான் நாயகன். பழைய ஸ்படைர் மேன் படத்தில் நண்பனாக இருந்து, பிறகு வில்லனாக மாறுவார். மற்றவர்களும் ஓக்கே. வானில் சண்டைகள் சிறப்பு. Tony Bill இயக்கியிருக்கிறார்.

தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள். சண்டை, போர் பட விரும்பிகள் பார்க்கலாம். இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை என இணையம் சொல்கிறது. வேறு வழிகளில் முயலுங்கள்.

October 1, 2023

One Piece (2023) தொலைக்காட்சி தொடர் - புதையலை தேடிய ஒரு சாகச பயணம்


முதல் காட்சியில் ஒரு புகழ்பெற்ற கடற்கொள்ளையன் ஒருவனை திரண்டிருக்கும் மக்கள் முன்னிலையில் தூக்கில் இடுகிறார்கள். அவன் பல ஆண்டு காலம் அவனுடைய குழுவால் கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருக்கிறான். அதன் பெயர் தான் ஒன் பீஸ். அதில் ஒரு பகுதி கிடைத்தால் கூட பெரிய பணக்காரனாகிவிடலாம். ஆகையால் பலரும் குழு, குழுவாக இணைந்து தேட துவங்குகிறார்கள். அதை அடைவதற்காக பலர் தங்கள் மொத்த வாழ்க்கையையும் தொலைத்திருக்கிறார்கள்.


நாயகன் ஒரு இளைஞன். அவருக்கு ஒரு கடற்கொள்ளையனை மிகவும் பிடிக்கும். ஆகையால் சிறு வயதில் இருந்தே, தான் ஒரு கடற்கொள்ளையனாக ஆகவேண்டும். அதுவும் அந்த குறிப்பிட்ட ஒன் பீஸை அடைந்து கடற்கொள்ளையர்களுக்கெல்லாம் ராஜாவாக வேண்டும் என்பது அவனது கனவு. அவனுடைய தாத்தாவோ, கடற்கொள்ளையர்களை எல்லாம் வேட்டையாடுகிற அரசு தரப்பு கப்பல் படையில் பெரிய தலையாக இருக்கிறார். பேரனை அடித்து, திட்டி, பயிற்சி எல்லாம் கொடுத்தாலும் அவன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறான்.

சின்ன வயதில் அவன் அபூர்வ பழத்தைச் சாப்பிட்டதால், ரப்பர் மாதிரி உடலை வளைப்பது, எவ்வளவு இழுத்தாலும் நீள்வது என்ற சக்தியோடு இருக்கிறான். இதில் வரும் பல கதாப்பாத்திரங்களுக்கு இப்படி ஏதோ விசேச சக்தி இருக்கிறது.


ஒன் பீஸை அடைய வேண்டுமென்றால், அரசு தரப்பில் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு வரைபடத்தை முதலில் அடைந்தாக வேண்டும். அதை தேடிப் போகும் பொழுது இருவர் அறிமுகமாகிறார்கள். ஒரு ஆள் கத்தி சண்டையில் தேர்ந்த ஆளாக இருக்கிறான். இன்னொரு பெண் விவரமறிந்தவளாகவும் திருடியாகவும் இருக்கிறாள். ஏக களேபரங்களுக்கு பத்தியில் வரைபடத்தை அங்கிருந்து நகர்த்திவிடுகிறார்கள்.

நாயகன் மற்றவர்களை ஒரு குழு என சொல்லிக்கொண்டாலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மறுக்கிறார்கள். இருப்பினும் சேர்ந்தே பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் அடுத்தடுத்து என்ன தடைகள் வந்தன? புதிதாக இவர்கள் குழுவில் யார் யாரெல்லாம் இணைந்தார்கள்? என்பதை சுவாரசியாகவும், தொலைக்காட்சி தொடர் என்பதால், கொஞ்சம் இழுத்தும் சொல்லி முடித்திருக்கிறார்கள்.

****


அந்த காலத்தில் விமானம் இல்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு போகவேண்டும் என்றால், தரை வழிப் பயணம் அல்லது உலகத்தில் நான்கில் மூன்று பகுதி நீர் தான் என்பதால் கப்பல் பயணம் தான். ஆகையால் கப்பல் பயணம் என்பது பொருட்களை எடுத்துச்சென்று வியாபாரம் செய்வது என்பது பொருளாதாரத்திற்கு மிகவும் அடிப்படையாக இருந்தது. அந்த பொருட்கள், செல்வங்களை கடற்கொள்ளையர்களை ஈர்த்தது. அதனால், சின்ன குழுவாக, பெரிய படையாக ஆங்காங்கே நிறைய பேர் இருந்தார்கள். ஆகையால், அரசுக்கு கடற்கொள்ளையர்கள் பெரிய தலைவலியாக இருந்தார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாக இருந்தது.

இந்த பின்னணியில் தான் கடற்கொள்ளையர்களைப் பற்றிய இந்த கதை எடுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானில் மங்கா காமிக்ஸ் புகழ்பெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படிப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் ஒரு கதை தான் இந்த ஒன் பீஸ். அதைத் தான் இப்பொழுது தொலைக்காட்சிக்காக படமாக்கியிருக்கிறார்கள்.

நாயகனுக்கு அறிமுகமாகி பின்பு அவனோடு பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் பின் கதை ஒன்றை சொல்கிறார்கள். சிலது சுவாரசியமாக இருக்கிறது. சிலது சுவாரசியமில்லாமல் இருக்கிறது. ஆனால் குழு என்றால், ஐந்து விரல்கள் போல தான். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. பெரிய அளவு திறமையில்லாமலும் இருக்கலாம். எல்லோரும் ஒரு இலக்கில் ஒரு செயலில் ஒன்றிணையும் பொழுது ஒரு பெரிய சக்தியாக மாறுகிறது. அப்படித்தான் பல கடுமையான தடைகளை எல்லாம் தகர்த்து அந்த இளைஞர் குழு பயணிக்கிறார்கள்.

உலகத்தில் அடைய சாத்தியமில்லாத பெரும் கனவு ஒன்றை அடையப்போவதாக சொல்லித் திரியும் ஒரு நாயகன், எப்படிப்பட்ட குணநலன்களோடு இருக்கவேண்டும் என நினைப்போம். ஆனால் அவன் அதற்கு எதிரான குணநலன்களோடு இருக்கிறான். வெள்ளந்தியாக, ஒரு திட்டமிடல் இல்லாமல், இடம், பொருள், ஏவல் அறிந்து பேசாதவனாக, சில சமயங்களில் முட்டாள்தனமாக கூட நடந்துகொள்கிறான். இத்தனை குறைபாடு இருந்தாலும் அவனிடம் வேறு நல்ல பண்புகள் இருக்கின்றன. தனது இலக்கில் பிடிவாதமாக இருக்கிறான். தன் ”குழுவில்” (அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும்) இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், உயிரே போகும் என்றாலும் உடன் நிற்கிறான். அவர்களுடைய கனவுகளை மதிக்கிறான். அதற்கு துணை நிற்கிறான். அதனால் ஒரு கட்டத்தில் அவனை ஏற்று பின்தொடர்கிறார்கள்.

படமாக எடுத்திருந்தால் கச்சிதமாக எடுத்திருப்பார்கள். ஆனால், தொலைக்காட்சி தொடர் என்பதால், கொஞ்சம் இழுத்து எடுத்திருக்கிறார்கள். ஒன் பீஸை அடைவது நீண்ட பயணத்தில் ஒரு சின்ன பகுதியை ஒரு சீசனாக எட்டு அத்தியாயங்களாக, எட்டு மணி நேரமாக எடுத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து சீசன்கள் இனி வரிசையாக வரும் என எதிர்பார்க்கலாம். இது இளைய தலைமுறையை மனதில் வைத்து எடுத்திருக்கிறார்கள். அதனால் பெரும்பாலான பாத்திரங்கள் 20 லிருந்து 25 வரை தான்.

படத்தில் நடித்த அத்தனைப் பேரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அசாத்திய திறமை இருப்பதால், நிறைய தொழில்நுட்பகாரர்கள் துணை நின்றிருக்கிறார்கள். இசை நன்றாக இருக்கிறது.

நெட் பிளிக்ஸ் தான் தயாரித்திருக்கிறது. தமிழில் நன்றாக மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். கடற் பயணம், கடற்கொள்ளையர்கள், சாகச பிரியர்கள் பாருங்கள். பிடிக்கும்.