> குருத்து: February 2009

February 23, 2009

தில்லையில் வெற்றிப் பேரணியும், பொதுக்கூட்டமும்!
“தீட்சிதர்களின் ஆதிக்கத்தை தகர்த்தோம்!
தில்லை கோயிலை மீட்டோம்!”


என்ற இரண்டு முழக்கங்களின் அடிப்படிடையில், தில்லையில் கடந்த சனிக்கிழமையன்று(21.02.2009) வெற்றிப்பேரணியும், பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேரணிக்கு காவல்துறையால் முதலில் தடை விதிக்கப்பட்ட்டிருந்தது. பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தில்லை இயக்கம் மக்கள் இயக்கமாக நடத்தியதன் விளைவாக, கடைசி நாளில் அனுமதி வழங்கப்பட்டது.

திட்டமிட்ட படி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - புரட்சிகர அமைப்புகள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தனது அணிகளோடு வந்திருந்தனர். பெரும்பாலும் செஞ்சட்டை அணிந்த தோழர்கள்.

பேரணி தில்லையின் கோவிலின் கீழ ரத வீதிக்கு அருகே துவங்கியது. வெற்றிப்பேரணியில் சர வெடி அதிர்ந்தது.

தப்பாட்ட குழுவினரின் அதிரடியான தப்பாட்டத்தால் உற்சாகம் களைக்கட்டியது. தாளத்திற்கு தக்கவாறு குழுவினரின் ஆட்டம் இருக்கிறதே! அப்பப்பா! தீட்சிதர்களை மண்டியிட வைத்த குஷியில் வந்த ஆட்டம்.

அடுத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் கேலியான காட்சி சித்திரம்

“இரட்டை இலை சின்னத்தை
தனது விரல்களில் காண்பித்து கொண்டே
பார்ப்பனத் திமிருடன் நடந்து வரும்
“அம்மா!”
“அம்மாவின்” முந்தானையை பிடித்தபடி
காலில் விழுந்த படியே வரும்
சட்டையில்லாமல்
பூணுலுடன் கொழுத்த தீட்சிதர்

தீட்சிதர்களின்
அந்தரங்க சேஷ்டைகளுக்காக
செருப்பால்
அடித்துக்கொண்டே வரும்
4 பெண்கள்”


வெடியை விட, தப்பாட்டத்தை விட, முழக்கங்கள் தில்லை வீதிகளில் காற்றைக் கிழித்தன.

“தமிழில் பாடும் போராட்டம்
முதல் வெற்றி கண்டது பார்!

ஆலயம் மீட்கும் போராட்டம்!
அடுத்த வெற்றியை கண்டது பார்!

நக்சல்பாரிகளின் தலைமையிலே
உழைக்கும் மக்களின் போராட்டம்
வென்றது பார்! வென்றது பார்!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு
கிரிமினல் கேசில் சிக்கியுள்ள
தீட்சிதர்களை கைது செய்யாததின்
மர்மம் என்ன?

தில்லை நகர காவல் துறையே
பதில் சொல்! பதில் சொல்!

விரட்டியடிப்போம்!
விரட்டியடிப்போம்!
தீட்சிதர்களை
கோயிலை விட்டே
விரட்டியடிப்போம்!
தில்லையை விட்டே
விரட்டியடிப்போம்!

நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை
இடித்து தகர்த்திடுவோம்!
தகர்த்திடுவோம்!


தில்லையில் கோவிலைச் சுற்றி, முக்கிய வீதிகளான கீழ வீதி அருகே தொடங்கி, தெற்கு வீதியில் வந்து, மேல ரத வீதியில் ஊர்வலம் வந்த வழி நெடுகிலும் பொதுமக்கள் ஆர்வமாய் பேரணியைக் கண்டனர். கையில் வைத்திருந்த முழக்க அட்டைகளில் உள்ள வாசகங்களை வாசித்தனர். தொண்டர்கள் பொதுமக்கள் பலருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.

தில்லை மக்கள் இது போன்றதொரு, செஞ்சட்டைகள் அணிந்த நீண்ட, எழுச்சியான ஊர்வலத்தை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டார்கள்.

பேரணியால் தில்லை அதிர்ந்தது ஒரு புறம்! மறுபுறம் -தீட்சிதர்களின் இதயம், வயிறு எல்லாம் பயத்தால் அதிர்ந்திருக்கும்.

(பொதுக்கூட்டம் பற்றி அடுத்தப் பதிவில்)

February 20, 2009

இன்று தில்லையில் பேரணி! பொதுக்கூட்டம்!தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்!
தில்லை கோயிலை மீட்டோம்!


தமிழக அரசே!

* அரசாணைப் பிறப்பித்து தில்லைக் கோயிலை அறநிலையத் துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வா!

* நகை களவு, நிதி கையாடல், கோயில் நில விற்பனை, கொலை முதலான குற்றங்கள் புரிந்த தீட்சிதர்களை கைது செய்!

* நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறி!

****

பேரணி


நாள் : 21.02.2009 சனிக்கிழமை மாலை 4 மணி

துவங்கும் இடம்

இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி

இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்

தலைமை

வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

முன்னிலை

சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.


சிற‌ப்புரை


தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.

பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.


மற்றும்

பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும்
பேசுகிறார்கள்.

புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி


ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் மையக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்..

ப‌ங்கேற்போர்:

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
மற்றும் சில அமைப்புகள்

நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

மூன்று கோரிக்கைகளோடு இந்த பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

1. தற்பொழுது போடப்பட்டிருக்கும் அறநிலையத்துறை உத்தரவின் படி கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு தீட்சிதரின் எடுபிடி என்ற அளவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்நிலை மாற தனிச்சிறப்பான அரசாணை மூலம் இக்கோவிலை அறநிலையத்துறை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் தீட்சிதர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்படுவர்.

2. தீட்சிதர்கள் மேல் நகைக்களவு, மோசடியான நிதி நிர்வாகம் (ஆண்டுக்கு மொத்த வருமானமே ரூ. 37,199 தானாம்), இன்னபிற குற்றச்சாட்டுகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்காமல் வைத்திருக்கிறது.

இது தவிர கோவிலில் நடந்த கொலை மற்றும் பல கிரிமினல் குற்றங்களை காவல்துறை பதிய மறுத்து, ம.உ.பா.மையம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

இது தவிர அரசு இப்பொழுது தான் கோவிலின் சொத்து விவரங்களை திரட்டி கொண்டிருக்கிறது. பக்தர்கள் தானமாக கொடுத்துள்ள நிலம் மற்றும் வீடுகளை விற்று தீட்சிதர்கள் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

இப்படி தீட்சிதர்கள் மீதுள்ள எல்லா குற்ற வழக்குகளுக்காக கைது செய்து, விசாரிக்கப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

3. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் எழுப்பப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர் உடனே இடிக்கப்பட வேண்டும்.

ஆகையால், இந்த பேரணி, பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பலரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

February 18, 2009

தில்லையில் பேரணி! பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த பதிவர்களே! வாசகர்களே!

தில்லையில் (சிதம்பரத்தில்) வருகிற 21.02.2009 – சனிக்கிழமையன்று மாலை பேரணியும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்புகளும், மற்றும் சில அமைப்புகளும் இணைந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் உரிமையோடு அழைக்கிறோம்.

எதற்காக இந்த பேரணியும்,பொதுக்கூட்டமும்?

தில்லை நிகழ்வுகளை தொடர்ச்சியாய் பலர் கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த போராட்டத்தின் அர்த்தமும் , தேவையும் நிச்சயமாய் விளங்கும்.

புதியவர்களுக்காக – ஒரு சிறு அறிமுகம்

இதுவரை

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் கோவிலில், நடராசருக்கு எதிரே உள்ள சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடக்கூடது. காரணம் – தமிழ் தீட்டு மொழி என அந்த கோவிலை நிர்வகிக்கிற தீட்சிதர்கள் பல ஆண்டு காலம் மறுத்துவருகின்றனர்.

70 வயது முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமிக்கு தன் வாழ்நாள் லட்சியம் நடராசர் முன்பு
மனமுருகி தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என்பது. பாட சென்றால், தீட்சிதர்கள் அந்த பெரியவரை கையை முறித்து, வெளியே தூக்கிப்போட்டனர்.

முறையிட காவல் நிலையம் போனார். வழக்கு பதிய மறுத்தனர். தமிழால் வயிறு வளர்க்கும் ஆதினங்கள், மடங்கள் என போய் முறையிட்டார். முகம் திருப்பிக் கொண்டனர். எல்லா ஆத்திகர்களும் கைவிட்ட பிறகு, நாத்திகர்களான கம்யூனிஸ்டுகளை மனித உரிமை பாதுகாப்பு மையம் வந்து முறையிட்டார்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் குதித்த கதை

இந்த வழக்கு மனித உரிமை மீறல் மட்டும் இல்லை, தீட்சிதர்களின் சாதித்திமிர் கொண்டதாக, மொழித்தீண்டாமை கொண்டதாக இருந்தது.

இது குறித்து, இந்து அறநிலையத்துறைக்கு பல புகார்கள் அனுப்பியும், எந்த பதிலுமில்லை.

இதன் வரலாறு தேடிப்பார்த்தால்...

1987ல் அதிமுக ஆட்சியில் தில்லைக் கோவிலில் நடைபெற்ற தீட்சிதர்களின் முறைகேடுகள், திருட்டுகள் பற்றி தீட்சிதர்களின் ஒரு பிரிவினரே அரசுக்கு புகார் தெரிவித்த அடிப்படையில், அரசு ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது.

தீட்சிதர்கள் “இந்து மதத்தில் தனி வகையறா” என தடை வாங்கினர்.

மீண்டும், பல ஆண்டுகளுக்கு பிறகு 1987ல் திமுக ஆட்சியில் மீண்டும் நிர்வாக அதிகாரியை அரசு நியமித்தது.

தமிழ் படங்களில், மிக மிக சாதுவான மனிதனாக காட்டப்படும் பார்ப்பனர்கள், கோவிலில் அரசு
அலுவலகம் திறக்கப்பட்டதும் அந்த அதிகாரியைத் தாக்கி, அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினர். பிறகு, அந்த வழக்கையும், தனது பல பணத்தால், செல்வாக்கு பலத்தால் அமுக்கினர்.

தீட்சிதர்களை சட்டபடியாக மட்டும் எதிர்கொண்டு விட முடியாது என கருதிய ம.உ.பா.மை. தனது தோழமை அமைப்புகள் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சில தமிழ் அமைப்புகள் கொண்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டது.

சில வெற்றிகள்

மக்கள் மத்தியில் பிரச்சாரம் ஒரு புறம். மறு புறம் சட்ட ரீதியாகவும் பல போராட்டங்கள்.

(இந்த போராட்டம் நீண்ட கதை. இது தொடர்பாக பல பதிவுகள் தனியாக இருக்கின்றன. பார்க்க : மகா – தில்லை போராட்டம் – வரலாற்று தடங்கள் )


முதல் வெற்றி –
சிற்றம்பல மேடையில் பாட முதலில் அரசு அனுமதி

இரண்டாவது வெற்றி – அரசு நிர்வாக அதிகாரியை மீண்டும் நியமித்தது.


அவாள்கள் ஒன்று கூடுகிறார்கள்.

இன்றைக்கு, இழந்த கோவிலை மீட்க, தீட்சிதர்கள் மீண்டும் கிளம்பி விட்டார்கள். உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடருகிறார்கள்.

ஒரு கும்பல் ஜெயலலிதாவை, மற்றும் பலரைப் பார்த்தார்கள். கடந்த வெள்ளியன்று சு.சாமியும்,
விசுவ இந்து பரிசத் தலைவர் வேதாந்தம் தில்லைக்கு போய் விசேஷ பூஜை நடத்தியிருக்கிறார்கள். நேற்று, சு.சாமி இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்து கொள்ள விண்ணப்பித்திருக்கிறார். தீட்சிதர்களில் ஒரு குழு தில்லி சென்றிருக்கிறது. இல. கணேசன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பேரணி, பொதுக்கூட்ட தேவை!

இப்படி இழந்த கோவிலை மீட்க பார்ப்பன கும்பல் தனது சதி வேலைகளை செய்ய கிளம்பிவிட்டது. கிடைத்த வெற்றியை போதும் என ஒதுங்கி கொண்டால், தீட்சித கும்பலுக்கு கொண்டாட்டமாகிவிடும். நாம் அதை அனுமதிக்கலாமா?

பெற்ற வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ள ....

மூன்று கோரிக்கைகளோடு இந்த பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

1. தற்பொழுது போடப்பட்டிருக்கும் அறநிலையத்துறை உத்தரவின் படி கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு தீட்சிதரின் எடுபிடி என்ற அளவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்நிலை மாற தனிச்சிறப்பான அரசாணை மூலம் இக்கோவிலை அறநிலையத்துறை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் தீட்சிதர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்படுவர்.

2. தீட்சிதர்கள் மேல் நகைக்களவு, மோசடியான நிதி நிர்வாகம் (ஆண்டுக்கு மொத்த வருமானமே ரூ. 37,199 தானாம்), இன்னபிற குற்றச்சாட்டுகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்காமல் வைத்திருக்கிறது.

இது தவிர கோவிலில் நடந்த கொலை மற்றும் பல கிரிமினல் குற்றங்களை காவல்துறை பதிய மறுத்து, ம.உ.பா.மையம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

இது தவிர அரசு இப்பொழுது தான் கோவிலின் சொத்து விவரங்களை திரட்டி கொண்டிருக்கிறது. பக்தர்கள் தானமாக கொடுத்துள்ள நிலம் மற்றும் வீடுகளை விற்று தீட்சிதர்கள் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

இப்படி தீட்சிதர்கள் மீதுள்ள எல்லா குற்ற வழக்குகளுக்காக கைது செய்து, விசாரிக்கப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

3. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் எழுப்பப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர் உடனே இடிக்கப்பட வேண்டும்.

ஆகையால், இந்த பேரணி, பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பலரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

பின்குறிப்பு : தில்லை போராட்டத்திற்கு முன்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமி
ஆறுதல் சொல்லக்கூட ஆளிலில்லாமல், சிதம்பரம் தெருக்களில் புலம்பிக்கொண்டு திரிந்தார்.

சமரசம் இல்லாமல், தொடர்ந்து போராடும் அமைப்புக்கு வந்து, தொடர் போராட்டங்களுக்கு பிறகு, அவர் களப்போராளியாகவே மாறிவிட்டார்.

ஏற்கனவே, இந்த சட்டம், நீதிமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்திருப்பார். மீண்டும், தொடர்கிற போராட்டத்தில், ஒரு நாத்திகவாதியாக மாறினாலும் மாறியிருப்பார்.

February 12, 2009

தடை செய்யப்பட்ட லாட்டரியும், தடையில்லா அமோக விற்பனையும்!


ஒருவன் தினமும் கடவுளிடம் தனக்கு லாட்டரியில் பரிசு விழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வான்.

சில ஆண்டுகள் இப்படியே வேண்டிக் கொண்டிருந்த அவன், ஆசை நிறைவேறாததால் ஒரு நாள் கோபமாக கடவுளை திட்டினான்.

அதற்கு கடவுளும் கோபமாக சொ‌ன்னா‌ர்... டேய் முட்டாளே முதல்ல போய் லாட்டரி டிக்கெட் வாங்குடா!

***

இந்த துணுக்கை வாசிக்கும் பொழுது, நமக்கு சிரிப்பு வருகிறது. ஆனால், உண்மையில் லாட்டரி பறித்த உயிர்கள் நிறைய.
***

நேற்று அண்ணனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

“5% வட்டிக்கு வாங்கியிருந்த 1.5 லட்சம் கடனை அடைச்சுட்டேன்” என சந்தோசமாய் சொன்னார்.

“எப்படி?” என்றேன்.

“கடவுள் இருக்கான்டா!” என்றார்.

“கடவுள் ஒன்னும் இல்லை. காரணத்தைச் சொல்லுங்க” என்றேன்.

“2 லட்சம் ரூபாய் லாட்டரியில் விழுந்தது. வரியெல்லாம் போக 1.5 லட்சம் கொடுத்தார்கள்.” என்றார்

“தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டிருக்கிறதே!” என உடனடியாக கேட்டேன்.

***

என்னைப் போல என நீங்களும் கேட்டால், நாம் அப்பாவிகள்.

ஆளுங்கட்சி ஆசியுடன், காவல்துறையின் ஆதரவுடன் தமிழகமெங்கும், தங்கு தடையின்றி வெளி மாநில லாட்டரிகள் தினசரி 75 லட்சம் அளவில் விற்கப்படுகிறது.

லாட்டரிக்கு வாடிக்கையாளர்கள் தொழிலாளர்களும், உதிரி தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் தான்.

தங்களுடைய வருமானத்தில், ஒவ்வொருநாள் வாழ்க்கையையும் பல போராட்டங்களுடன் நகர்த்தி கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராமல் வரும் மருத்துவ, குடும்ப விசேசம் சம்பந்தமாக எழும் செலவுகளுக்கு, தவிர்க்க இயலாமல் கடனில் சிக்கிக்கொள்வார்கள். அதுவும் 100க்கு 2 வட்டியோ 3 வட்டியோ அல்ல! 10 வட்டி! அல்லது அதற்கும் மேல்! ஏன் இவ்வளவு வட்டி என்றால், அவர்களிடம் அடமானம் வைக்க, அல்லது நம்ப எந்த உடைமையோ இல்லாததால் அநியாய வட்டி. (அமெரிக்காவில் சப்-பிரைம் கடனுக்கு அதிக வட்டி வாங்குகிறார்கள். அதற்கும் இதே தான் காரணம். உலகம் முழுவதும் இது தான் நிலை)

இப்படி கடனில், வட்டியில் மாட்டிக்கொள்கிற இவர்கள், இதிலிருந்து விடுபட அவர்களில் வாழ்வில் எந்த வழியும் இல்லாததால், நொந்து நொந்து வட்டி கட்டும் இவர்களுக்கு ஒரே நம்பிக்கை “லாட்டரி”. தொடக்கத்தில் 5ரூ. 10 ரூ.க்கு வாங்கும் இவர்கள் வாழ்க்கை நெருக்கடி நெருக்க நெருக்க், ரூ. 50, ரூ. 100 என வாங்க தொடங்குவார்கள். ஏதோ ஒரு நாளில், அந்த குடும்பம் தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் தனது சொந்த மண்ணை விட்டு காலி செய்துவிடுவார்கள். நானே பல குடும்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

இப்படி பல குடும்பங்களை லாட்டரி சிதைத்ததில் தான், எதிர்ப்புகள் கிளம்பி, பல
போராட்டங்களுக்கு பிறகு, ஜனவர் 8, 2003-ல் அன்றைக்கு முதலவராய் இருந்த ஜெயலலிதா தடை செய்தார். அன்றைக்கும் ஆங்காங்கே திருட்டுத்தனமாய் விற்றுக்கொண்டிருந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமோகமாய் விற்க தொடங்கிவிட்டார்கள்.

மே 8, 2007ல் தமிழகம் முழுவதும் சோதனை செய்ததில், 112 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கரூரைச் சுற்றியும், கரூரில் காவல்நிலையம் அருகேயே லாட்டரி விற்று, மக்களிடத்தில் எதிர்ப்பு கிளம்பியதும் கைது செய்தார்கள் (25.03.2008)

கடந்த ஜூலை 2008ல் விருகம்பாக்கம் பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள லாட்டரிகள் கைப்பற்றப்பட்டன.

கடந்த செப்டம்பரில் சென்னை திருவேற்காடு பகுதியில், கமிஷனர் ஜாங்கிட் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரிகளை கைப்பற்றினார்.

தடையில்லாமல் இருந்த பொழுது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாய் லாட்டரி விற்பனை நடந்ததாம். உண்மையான லாட்டரி மூலமும், சிவகாசியில் அடித்த போலி லாட்டரிகள் மூலம், தமிழ்நாட்டில் பல புள்ளிகள் திடீர் பணக்காரர்களாக மாறினார்கள்.

அடித்த கொள்ளையின் ருசி அவர்களுக்கு விட்டுப்போகுமா! காவல்துறை ஆதரவுடன் கொள்ளையை தொடர்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 1968ல் அன்றைக்கு முதல்வராய் இருந்த அண்ணாதுரை “விழுந்தால்
வீட்டுக்கு! விழாவிட்டால் நாட்டுக்கு! என்ற முழக்கத்துடன் முதன்முதலில் லாட்டரியை துவங்கி வைத்தார்.


அண்ணா தொடங்கி வைத்ததாலும், முதலீடே இல்லாமல் கொட்டும் பணத்தாலும், கருணாநிதிக்கு
லாட்டரி மேல் எப்பொழுதுமே பாசம். விசாரித்ததில், தென்மாவட்டங்களில் ரவுடிகளின் அன்பு அண்ணன் அழகிரி ஆதரவோடு தான் விற்பனை ஜோராக நடக்கிறதாம்.

லாட்டரி முடிவுகள் அறிய அதிர்ஷ்டம் தினசரி இதழாக வந்துகொண்டிருந்தது. தடை செய்யப்பட்டதும் நிறுத்தப்பட்டது. பிறகு, இப்பொழுது ரகசியமாக வந்துகொண்டிருக்கிறதாம். இந்த இதழை அதிமுக கொள்கைகளை பரப்பும் தினபூமி நாளிதழின் சார்பு நிறுவனம் தான் நடத்திவருகிறது.

இந்த அநியாய லாட்டரி திட்டத்தை இந்தியாவில் முதன் முதலில் துவங்கி வைத்து, பல தொழிலாளர்களின் வாழ்வில் கேடுகளை விளைவித்தவர்கள் வேறு யாருமில்லை கேரளா சி.பி.எம் கட்சிகாரர்கள் தான்.


அந்த பாசத்தில் தான், லாட்டரிக்கு ஆதரவாக, மதுரையில் 4.4.2005-ல் “லாட்டரிக்கு தடையை நீக்க கோரி” நடந்த சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மோகன் ஆதரித்து பேசினார்.

இதை அம்பலப்படுத்தி,

“மகா நடிகர் எம்.பி. மோகனே,
கம்யூனிஸ்ட் என்று சொல்லாதே!”


புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது.

யார் தாலி அறுந்தால் என்ன? சிபிஎம் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மக்கள் விரோதப் போக்குடையதாக செயல்படுகின்றன. மக்கள் தான் துன்ப துயரங்களில் மீள மாற்று வழிகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.தகவல்களுக்கு நன்றி

புதிய ஜனநாயகம் இதழ், வெப்துனியா, விபரம்.காம், திருமலை கொளுந்து, மாலைச்சுடர்

February 10, 2009

இதயம், முதுகுவலி – ஆபரேசன் - கவிதை


முதுகெலும்பு
இல்லாதவருக்கு
முதுகுவலி
ஆபரேசன்.

இதயம் இல்லாதவருக்கு

8 மணி நேர
இதய ஆபரேசன்.

- யாரோ!
- நேற்று வந்த எஸ்.எம்.எஸ்-ல்.

February 6, 2009

தில்லை தீட்சிதர்களின் லீலைகள் – ஒரு புகார் மனு!


தில்லை தீட்சிதர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் செய்த லீலைகளுக்கு சற்றும் சளைக்காதவர்கள். கோவில் வருவாயில் தின்று கொழுத்து, அவர்கள் சிதம்பரம் கோவிலுக்குள் செய்த அட்டூழியங்களை நாத்திகர்களாகிய ம.க.இ.க காரர்கள் சொன்னால் சந்தேக கண் கொண்டு பார்க்கிறார்கள்.

இதோ சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோ, தமிழக முதலமைச்சர், உள்துறை செயலர் ஆகியோருக்கு விரிவான புகார் ஒன்றை கடந்த ஆண்டு அளித்துள்ளார். படியுங்கள்.

இந்த புகார் உட்பட பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையிலேயே தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இனி அவர் அளித்த புகார் மனுவை அவரது சொற்களிலேயே தந்துள்ளேன்:

சிதம்பரம் நடாஜர் கோயில் தீட்சிதர்கள் யாருக்கும் அந்த சமூகத்திற்குச் சொந்தமல்ல என்று 100 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்திருக்கிறது. இருந்தாலும் பெரிய கோயிலை, தீட்சிதர்கள் தங்கள் சமூகத்திற்குச் சொந்தமான சொத்துபோல்
தீட்சிதர்கள் கோயிலின் 4 கோபுர வாயிற் கதவுகளையும் பிறகு 2-வது உட்பிரகார கதவுகளையும் இரவில் மூடிக்கொண்டு, கோயில் வெளிப்பிரகாரத்திலும் உட்பிரகாரத்திற்குள்ளும் சுமார் 10 தீட்சிதர்கள் அடங்கிய கும்பல்கள், கள்ள சாராயம், அயல்நாட்டு மதுபானங்கள் சகலத்தையும் குடிப்பதும், பரோட்டா, சிக்கன், மட்டன், ஆம்லட், அவிச்ச முட்டை சகலமும் சாப்பிட்டு விட்டு, வெற்றிலை, பீடி, சிகரெட், பான்பராக் போட்டுக்கொண்டு, பெண்களுடன் உறவு கொண்டு, சொர்க பூமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திடுக்கிடும் 2 அல்லது 3 கொலைகளையும் நடத்தி, அதை குடித்துவிட்டு இறந்து விட்டார்கள் என்று மறைத்துவிட்டார்கள். அந்த ரௌடி தீட்சிதர்களும் நல்ல பணக்காரர்கள். சாமி பைத்தியம் பிடித்தவர்களிடம் குளத்தை தூர் வார வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்று பணத்தைக் கணிசமாக வசூல் செய்து, ஆளுக்கு ஒரு செல்போன் வைத்துக்கொண்டு, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தங்களுக்கு முதலமைச்சரும் சில அமைச்சர்களும் வேண்டியவர்கள் என்று சொலலிக்கொண்டு, போலீசைப் பயமுறுத்துகிறார்கள்.
நடராஜர் கோயிலுக்குள் பஞ்சமா பாதகம் செய்து, போலீஸ் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் முக்கிய தீட்சிதர்கள் பெயர்கள்: (1) தில்லை தீட்சிதர் த.பெ.
கீர்த்திவாசக தீட்சிதர், சபாநாயகர் கோயில் தெரு (2) ராஜா தீட்சிதர் த.பெ. குப்புசாமி தீட்சிதர், கீழரத வீதி (3) பட்டு தீட்சிதர் த.பெ. கோபால் தீட்சிசதர், வடக்கு சந்நதி (4) கனகு தீட்சிதர் த.பெ. வைத்திநாத தீட்சிதர், கீழ வீதி, (5) குப்புசாமி தீட்சிதர் த.பெ. சிச்சுவடி மணி தீட்சிதர், கீழரத வீதி (6) முருக தீட்சிதர், (7) அமர்நாத் தீட்சிதர், கீழ வீதி முதலாவோர்.

சிதம்பரம் டவுன் கீழ ரத வீதியில் உள்ள வேம்பு தீட்சிதர் மகன் மூர்த்தி தீட்சிதரை சுமார் ஒரு வருடத்திற்கு முன் நடராஜர் கோயில் உள் பிரகாரத்திற்குள் கருங்கல் தூண் அல்லது சுவற்றில் மோதி, தீட்சிதர்கள் கொன்றுவிட்டார்கள். மேல கோபுர வாசல் வழியாக கோயில் முதல் பிரகாரத்திலிருந்து, கற்பகிரகம் உள்ள உள் பிரகாரத்திற்குள் செல்லும் மேல் புறமுள்ள கதவு, காலை 6.3.4 மணியாகியும் ஒரு நாள் திறக்காமல், கோயிலுக்குள் பக்தர்கள் போக முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது ப.சிதம்பரம் கட்சியைச் சேர்ந்த திரு. நாகராஜன், இன்னும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கீழ சந்நதி வழியாக ஒரு ஆட்டோ வந்தது. மேல்புறம் கோயில் கதவு திறக்கப்பட்டு, மேலே கண்ட தீட்சதர்கள் மூர்த்தி தீட்சிதரை ரத்தம் ஒழுக ஒழுக துக்கி வந்ததைப் பார்த்து, கொலை நடத்திருக்கும் என்று சந்தேகப்பட்டு, ராஜ்குமார் மேலரத வீதி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் செய்திருக்கிறார்.

போலீஸ் கொலை கேசு என்று தெரிந்ததும், உடனே வராமல் ராஜ்குமாருடன் வாதம் செய்து, டி.எஸ்.பி.க்குப் புகார் செய்வேன் என்று தெரிவித்த பிறகு வேண்டாவெறுப்புடன் போலீசுடன் குற்றம் நடந்த இடத்திற்குப் போனபோது, ஆட்டோ டிரைவரை விசாரித்தால் யார் அவரை அழைத்து வந்த தீட்சிதர் என்பதும் மற்றும் என்ன நடந்தது என்பதும் தெரியும்.

ஆனால், ராஜ்குமார் போலீசிடம் சொல்லி, புலன் விசாரணை செய்ய சொல்லிவிட்டுப் போய்விட்டார். பிணத்தை வேம்பு தீட்சிதர் வீட்டில் போட்டுவிட்டு, குற்றம் செய்தவர்கள்
போய்விட்டார்கள். பணத்தை வசூல் செய்து, பங்கு பிரித்துக் கொள்வதில் மூர்த்தி தீட்சிதர் சரியாக கணக்கு வரவு செலவு காட்டாமல் ரூ.50000-க்கு மேல் மறைத்துவிட்டதாக தகராறு செய்ததால் மற்ற தீட்சிதர்கள் கல் தூணில் மோதி கொன்றுவிட்டதாகத் தகவல். மூர்த்தி தீட்சிதருக்கு கே.அடுரிலிருந்துதான் ஒரு ஆதிதிராவிடர் கள்ளச் சாராயம் கொண்டு வந்து கொடுத்து, அதை சொம்பில் ஊற்றி வைத்துக்கொண்டு, நடராஜப் பெருமாள் உள்ள பொற்சபையிலேயே வைத்துக்கொண்டு, தீர்த்தம் சாப்பிடுவது வழக்கமாம்.

கே.ஆடூரில் மளிகைக் கடை வைத்திருந்த செல்வராஜ் மனைவியை சிதம்பரம் கோயிலுக்கு அழைத்துவந்து அனுபவிப்பதில் தகராறு ஏற்பட்டு, செல்வராஜை சிதம்பரத்தில் கொன்று, ஆட்டோவில் ஊருக்குக் கொண்டு போனார்கள். இறந்து போன செல்வராஜ் மனைவி சிதம்பரத்தில் தான் இருக்கிறார். அவள் பெயர் ராஜகுமாரி.

போலீஸ், டிபூடி கலெக்டருக்குச் சொல்லி, பினத்தைப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். சந்தேகப்பட்ட கொலை வழக்கு என்று பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தீட்சதர்களை விசாரித்திருந்தால் உண்மை தெரியும். இறந்துபோன மூர்த்தி தீட்சிதர் குடித்துவிட்டு குடும்பத்தில் தொல்லை கொடுத்து வந்ததால் கொலை கேசு புகார் செய்ய பயந்து, போஸ்மார்டம் பண்ணுவதைத் பெரிய தீட்சிதர்கள் முயன்று கொலை குற்றத்தை மறைக்க முயன்றிருக்கலாம்.

ஆனால், கோயில் பொது இடம், புனிதமான இடம். பக்தர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடம். அதற்குள் கொலை நடக்க போலீஸ் அனுமதிக்கக்கூடாது. மூர்த்தி கொலை நடந்த இரவுக்கு முன்னாள் மாலை, காலம் சென்ற மக்கள் தலைவர். ஜி.கே.மூப்பனாருக்கு, அம்மன் கோயிலில் உள்ள சித்திரகுப்தருக்கு, இ.காங்கிரஸ் நிர்வாகிகள் திரு. நாகராஜன், திரு.ராஜன் போன்றவர்கள் இறந்துபோன மூர்த்தியை வைத்துதான் விசேஷ பூஜை செய்திருக்கிறார்கள். எனவே, சிதம்பரம் டவுன் போலீஸ் இதற்குமுன் கோயிலில் நடந்த ராயர் கொலையையும் புலன் விசாரிக்காமல் விட்டுவிட்டதால், நடராஜர் கோயிலின் புனிதத்தையும் அங்கு வருகிற வயதானவர்கள் மற்றும் பக்தர்கள் உயிர் உடமைகளைக் காப்பாற்றவும் முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரனை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கோர்டில் நிறுத்த அரசு உத்தரவிட வேண்டும்.

மூர்த்தி கொலைக்கு முன் வீட்டு புரோக்கர் ராயர் என்ற ஒரு ஏழை சில தீட்சிதர்களால் 1/4 பிராந்தி பாட்டிலை கீழவீதியிலுள்ள ஆட்டோ ரிக்ஷாக்காரர்களில் ஒருவர் பிடுங்கிக் கொண்டதால் அவர் அன்று டவுன் போலீஸ் சர்க்கிளாக இருந்த இப்ராகிம் ராவுத்தரிடம் பிடிபட்டு, தீட்தர்கள் தான் பிராந்தி பாட்டில், பரோட்டா, சிக்கன் எல்லாம் வாங்கிவரச் சொன்னார்கள் என்று கீழகோபுர வாசலில் தீட்சதர்களைக் காட்டிக் கொடுத்தாலும் ராயரை உதைத்து கொன்று, கோபுர வாசலுக்குள் போட்டுவிட்டார்கள் என்று தகவல்.

கீழ கோபுர வாசலில் பிராந்தி, பாட்டில், பரோட்டா, சிக்கன் பொட்டலத்துடன் வந்தவரைப் பிடித்த டவுன் போலீஸ் ஏன் அதில் சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரவில்லை? அல்லது ராயர் இறந்த பிறகாவது சந்தேகப்படவில்லை? சந்தேகப் பட்ட கொலை என்ற ராயர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்பது முக்கியமாக கவினிக்க வேண்டிய விஷயம்.

இதுவும் பொதுஇடம். புனிதமான இடம். கோயிலுக்குள் நடந்த கொலை. கடந்து 1 வருடத்தில் கோயிலுக்குள் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றனர்.

ராயர் கொலை நடந்த இரவு பல்லாக்கு திருவிழா. மூர்த்தி கொலை, ராயர் கொலைக்கு முன் ஒருவர் கோயிலுக்குள் வந்து, அம்மன் கோயிலில் குடித்துவிட்டு தூங்கும் ஒருவரை தீட்சிதர்கள் பங்கு மாமுல் கேட்டு, கொடுக்காததால், சிவகங்கை குளத்திற்கு அருகில் கொன்றுவிட்டதாக ஒரு தகவல். சிதம்பரம் டவுனில் தீட்சிதர்கள் மீது புகார் கொடுக்கவே பயப்படுகிறார்கள் என்று எனக்கு கிடைத்த தகவல்களை முதலமைச்சருக்கும் உள்துறை செயலாளருக்கும் உரிய நடவடிக்கைக்கு அனுப்புகிறேன்.

மதிப்புக்குரிய குமாஸ்தாக்கள் சங்கத் தலைவர் திரு.ராஜ்குமார், காங்கிரஸ் தலைவர் திரு. நாகராஜ், திரு.ராஜு முதலியவர்களை விசாரித்தால் விளக்கமாகச் சொல்வார்கள்.

தயவுசெய்து தீட்சிதர்கள் தாட்சண்யத்திற்காகவோ, தீட்சதர்கள் மீது வழக்குப் போட்டால் தெய்வ குற்றம் ஏற்படும் என்று பயந்தோ, வழக்கு சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரிக்காமல் விட்டால் மனித உரிமை மீறல் குற்றத்திற்காக மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார் செய்ய வேண்டிவரும்.

வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை அரசு எடுக்க எவ்வளவு காரணங்கள் உண்டோ, அதைவிட 1000 காரணங்கள் இருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க கொள்ளையர்கள், கொலைக்காரார்கள், ஆணவக்காரர்கள், சர்வாதிகாரிகள் கடாராமாக விளங்கும் கோயிலை, மனித உரிமைகளும், இந்திய அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளையும் மதிக்காமல் மிதிக்கும் சில தீட்சிதர்கள் பிடியில் இருந்து மீட்டு, அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்

நன்றி – லைட்ங்க் (lightink)

http://lightink.wordpress.com

February 5, 2009

சிதம்பரம் கோவிலில் உண்டியல்! தீட்சிதர்கள் கதறி அழுகை!சிதம்பரம் கோவிலில் உண்டியல்! தீட்சிதர்கள் கதறி அழுகை!
– தினமலர் – 06.02.2008

“வரலாற்றில்

முதன்முறையாக”
சிதம்பரம் கோவில்
உண்டியல் பார்த்திருக்கிறது.

“வரலாற்றில்
முதன்முறையாக”
ஜீவதார வாழ்வுரிமை
பறிக்கப்பட்டதாக
வாயிலும், வயிற்றிலும்
அடித்து
தீட்சிதர்கள் கதறி அழுகை.

இனி –
தீட்சிதர்களின் கொழுப்பு
அதனால் எழுந்த திமிர்
கொஞ்சம் கொஞ்சமாய்
குறையும்.

தீட்சிதர்களுக்கு,
டையட்டிசனாக (Dietician)
தொடர்ந்து
ம.க.இ.க.,
ம.உ.பா.மை.
செயல்படும்.

குறிப்பு :
ம.க.இ.க – மக்கள் கலை இலக்கிய கழகம்
ம.உ.பா.மை – மனித உரிமை பாதுகாப்பு மையம்.

பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்!


(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி எழுதிய தலையங்கம் இது. இதை எழுதிய அடுத்த நாளே அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது மரணத்தின் பாதையை அறிந்திருந்த அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் அமைந்துள்ளது.)

ராணுவத்தைத் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் - தொழில் நிமித்தமாக - அந்த தொழில்
புரிபவர்களின் உயிரை பலியாக கேட்பதில்லை; இலங்கையில் இந்த வகையில் பத்திரிகைத் தொழிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்படுவதும், வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவதும், மூடப்படுவதும், பலவந்தமாக நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எண்ணற்ற செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அனைத்தும் - கடைசி அம்சம் உட்பட - எனக்கும் பொருந்தும் என்பது எனக்கு மிகவும் சிறப்பு செய்வதாக உள்ளது.

பத்திரிகைத் தொழிலில் மிக நீண்ட காலமாக நான் இருந்து வருகிறேன். உண்மையில், இந்த 2009ம் ஆண்டு, சன்டே லீடர் பத்திரிகையின் 15ம் ஆண்டாகும். இந்த காலக்கட்டத்தில் இலங்கையில் பல மாறுதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் விரும்பத்தக்கவை அல்ல என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எல்லையில்லா ரத்த தாகம் கொண்டவர்களால் இரக்கமற்று தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். பயங்கரவாதிகளாலோ, அரசாங்கத்தாலோ ஏவப்படும் பயங்கரவாதம் என்பது நமது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. சுதந்திரத்தை முடக்க விரும்பும் அரசு முக்கிய நடவடிக்கையாக படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது.

இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். நாளை நீதிபதிகள் கொல்லப்படுவார்கள். இந்த இரு தரப்பினருக்கும் ஆபத்துகள் அதிகரிக்கின்றன. நம்பிக்கைதான் குறைந்து வருகிறது.

இருந்தபோதிலும் ஏன் இந்த தொழிலை தொடர்ந்து செய்கிறோம் என்று நான் அவ்வபோது ஆச்சரியப்படுவதுண்டு. நானும் ஒரு கணவன்தான். எனக்கும் மூன்று அருமையான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன, நான் சட்டம் அல்லது பத்திரிகை ஆகிய எந்தத் துறையில் இருந்தாலும். ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவது தேவைதானா? தேவையில்லை! என்றே பலரும் கூறுகின்றனர்.

நண்பர்கள் என்னை வழக்குரைஞர் தொழிலுக்குத் திரும்புமாறு கூறுகின்றனர். அத்தொழில் எனக்கு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான வாழ்வைத் தரும் என்று அவர்கள் நம்புகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு வருமாறு என்னை அழைக்கின்றனர், நான் விரும்பும் துறைக்கு என்னை அமைச்சராக்குவதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் ஆபத்துகளை உணர்ந்த வெளிநாட்டுத்தூதர்கள், என்னை இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் - அவர்கள் நாட்டில் பாதுகாப்பாக வசிக்குமாறும் அழைக்கின்றனர். எனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் ஒன்றைக்கூட நான் செய்வதாக இல்லை.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம்
மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது.

நாங்கள் என்ன பார்க்கிறோமோ அதை, அவ்வாறே மண்வெட்டி என்றோ, திருடன் என்றோ, கொலைகாரன் என்றோ அப்படியே எழுதுவதால் சண்டே லீடர் பத்திரிகை சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. நாங்கள் வார்த்தை விளையாட்டுகளுக்கு பின்னே பதுங்குவதில்லை.

நாங்கள் வெளியிடும் புலனாய்வு செய்திகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படுகின்றன. அதற்காக ஆபத்து வரும் வாய்ப்புகள் இருப்பது தெரிந்தும் எங்களுக்கு ஆதாரங்களை வெளிப்படுத்தும் சமூகப்பொறுப்புள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்துவிட்டதாக யாரும் நிரூபித்தது இல்லை. அதேபோல எங்களுக்கு எதிரான எந்த வழக்குகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும் இல்லை.

சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்குக் காட்டும். பத்திரிகைகளின் மூலமாகத்தான் நாட்டின் நிலை குறித்தும், நாட்டை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள முடியும். இந்தத் தலைவர்கள்தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

சில நேரங்களில் இந்த கண்ணாடியின் மூலம் நீங்கள் பார்க்கும் உருவம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலைக்காக நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்காக அந்தக் கண்ணாடியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றனர். இதுதான் எங்களுக்கான அழைப்பு - நாங்கள் புறக்கணிக்க முடியாத அழைப்பு.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எங்கள் பார்வையை நாங்கள் மறைத்ததில்லை. இலங்கையை ஒரு வெளிப்படையான, மதசார்பற்ற, சுதந்திர ஜனநாயக நாடாக நாங்கள் பார்க்க விரும்பினோம். இந்த வார்த்தைகளுக்கு உள்ளே இருக்கும் பொருளை கவனியுங்கள். வெளிப்படையாக என்றால் அரசு என்பது மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக, அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தாததாக இருக்க வேண்டும்.

மதசார்பின்மை என்பது, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட - பல கலாசாரங்களைக் கொண்ட நம்முடைய சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான முக்கியமான கருத்தாகும். சுதந்திரம் என்பது, மனிதர்கள் பலவிதங்களில் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இருக்கும் முரண்பட்ட விதங்களிலேயே ஏற்றுக்கொள்வதுமாகும். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுவதல்ல. மேலும் ஜனநாயகம் என்பது… இது ஏன் முக்கியமானது? என்பதையும் நான் விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், மன்னிக்கவும்! நீங்கள் இந்தப் பத்திரிகையை வாங்குவதை நிறுத்திவிடுவதே நல்லது.

பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு கருத்தை கேள்வி கேட்காமல் எழுதுவதன் மூலம் - பிரதிபலிப்பதன்மூலம் சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு தேடியதில்லை. கருத்து முரண்பாடுகளை எதிர்கொள்வதன் மூலமாகவே இதுவரை பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் கூறிய கருத்துகள் மக்களில் பலருக்கும் சுவை அளிப்பதாக இல்லை என்பது தெரியும்.

உதாரணமாக, தனிநாடு கேட்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கான மூல காரணங்களை கண்டறிந்து அவற்றையும் களைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இலங்கை இனப்பிரசினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்காமல், வரலாற்று நோக்கிலும் இந்தப் பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறோம். பயங்கவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நாடு உலகிலேயே இலங்கை ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கூறி அதை எதிர்த்து வருகிறோம். இத்தகைய கருத்துகளுக்காக நாங்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே தேசவிரோதம் என்றால் அதைப் பெருமிதத்துடன் ஏற்கிறோம்.

சண்டே லீடர் பத்திரிகைக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்; எதிர்கட்சிகள் மீதல்ல. கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆட்சியின் அத்துமீறல்களை, ஊழல்களை வெளிக்கொணர்ந்து அன்றைய ஆட்சியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக நாங்கள் இருந்தோம். இத்தகைய எங்களின் போக்கும் அந்த ஆட்சி வீழக் காரணமாக இருந்தது.

போரை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதற்காக நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை
ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. உலகில் உள்ள மிகவும் இரக்கமற்ற - ரத்தவேட்கை கொண்ட இயக்கங்களில் ஒன்றாக அந்த இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு கூறுவதால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதையும், அவர்கள் மீது இரக்கமற்று துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுமழை பொழிவதையும் ஏற்க முடியாது. ஏனெனில் அது தவறானது மட்டுமல்ல, புத்தரின் தம்மத்தை பாதுகாப்பதாகக் கூறும் நாம் வெட்கப்படவேண்டியதும் ஆகும். இத்தகைய அத்துமீறிய தாக்குதல்கள், செய்தித்தணிக்கை காரணமாக பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்று சேர்வதில்லை.

இதைவிட நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களின் சுயமரியாதையை இழந்து, நிரந்தரமாக இரண்டாம்தர குடிமக்களாக வசிக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பின்னர், அப்பகுதியில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதன்மூலம் சீற்றத்தை தணிக்கமுடியும் என்று கனவு காணக்கூடாது.

இந்தப்போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக தமிழ் மக்களிடம் மேலும் கசப்புணர்வும், வெறுப்புணர்வுமே ஏற்படும். அதை சமாளிப்பது எளிதல்ல. அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை, அனைத்து தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்ப்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். நான் கோபமடைந்தும், சலிப்புற்றும் இருக்கிறேன் என்றால், எனது நாட்டு பெரும்பான்மை மக்களும் - முழு அரசும் - வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மையை பார்க்கத் தவறுவதால்தான்.

நான் இரண்டு முறை தாக்கப்பட்டதும், எனது வீடு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டாலும், இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடத்தி, இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அனைத்து சம்பவங்களும் அரசின் தூண்டுதல் காரணமாகவே நடந்தது என்று நான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இறுதியில் நான் கொல்லப்பட்டால், அரசுதான் என்னை கொன்றிருக்க வேண்டும்.


இதில் துயரமான வேடிக்கை என்னவென்றால், நானும் மஹிந்தாவும் கடந்த கால்நூற்றாண்டாக நண்பர்களாக இருப்பது பொதுமக்களில் பலருக்கும் தெரியாது. அவரை அவரது முதல் பெயரான ‘மஹிந்தா’ என்ற பெயரிலும், சிங்கள மொழியில் அழைக்கும் ‘ஓயா’ என்று அவரை இன்றும் அழைக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன்.

அதிபர் மாதத்திற்கு ஒருமுறை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கும் கூட்டத்திற்கு நான் செல்வதில்லை. எனினும் சில பின்னிரவு நேரங்களில் தனியாகவோ, நெருங்கிய நண்பர்கள் சிலருடனோ அதிபரின் இல்லத்திலேயே சந்தித்து அரசியலைப்பற்றியும், பழைய இனிமையான நாட்களைப் பற்றியும் பேசுவதுண்டு. இந்த இடத்தில் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.
நண்பர் மஹிந்தா! கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நீங்கள் உருவெடுத்தபோது, எங்கள் பத்திரிகையைப்போல இதமான வரவேற்பு உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை. உண்மையில் உங்கள் முதல் பெயரை குறிப்பிடுவதன்மூலம் பல்லாண்டாக நடைமுறையில் இருந்த சம்பிரதாயங்களை உடைத்தோம்.

மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீது அப்போது நீங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக உங்களை நாங்கள் வரவேற்றோம். ஆனால் ‘ஹம்பன்டோடா’வுக்கு உதவும் முறைகேட்டில் நீங்கள் முட்டாள்தனமாக ஈடுபட்டபோது நாங்கள் கனத்த இதயத்தோடு அதை வெளியிட்டோம். மேலும் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்கும்படியும் வலியுறுத்தினோம். அதை நீங்கள் பல வாரங்கள் கடந்து செய்தீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பில் மிகப்பெரும் தீயவிளைவை அது ஏற்படுத்தியது. அது உங்களை இன்றளவும் துரத்தி வருகிறது.

அதிபர் பதவி மீது உங்களுக்கு ஆர்வமில்லை என்று நீங்களே என்னிடம் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் அதிபர் பதவியைத்தேடி செல்லவில்லை: அப்பதவி தங்கள் மடியில் விழுந்தது. உங்கள் மகன்களே உங்களின் மகிழ்ச்சி என்றும், அரசு நிர்வாகத்தை உங்கள் சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் மகன்களோடு நேரத்தை செலவிடுவதே உங்களுக்கு விருப்பமானது என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் தந்தை இல்லாது போகும் சூழலில் அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது.

எனக்கு மரணம் ஏற்படும்போது, நீங்கள் வழக்கமான சடங்குச் சொற்களை கூறுவதோடு, முழுமையான விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதே போன்ற மற்ற சம்பவங்களில் நடந்ததைப்போல இந்த விசாரணையிலும் எந்த உண்மையும் வெளிவராது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உண்மையைச் சொன்னால், எனது மரணத்திற்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்பது நாம் இருவருக்கும் தெரியும், அந்த பெயரைச் சொல்லும் துணிவு உங்களுக்கு இல்லாவிட்டாலும்கூட. ஏனெனில் என் வாழ்க்கையோடு, உங்கள் வாழ்க்கையும் அந்த உண்மையில் சிக்கியிருக்கிறது.

இலங்கை தேசம் குறித்து நீங்கள் இளமையில் கண்ட கனவுகள், நீங்கள் அதிபராகப் பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உடைந்த செங்கற்களைப்போல தூள்தூளாகி விட்டது. தேசபக்தி என்ற பெயரில் மனித உரிமைகளைப் பறிப்பதிலும், ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதிலும், பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடியதிலும் மற்றெந்த அதிபரையும்விட நீங்களே மிஞ்சி இருக்கிறீர்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், பொம்மை கடையில் இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதாரணம்கூட உங்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணில் ஏற்படுத்திய ரத்தக்கறையையும், குடிமக்களின் மனித உரிமைகளைப் பறித்ததையும்போல எந்தக் குழந்தையாலும் செய்ய முடியாது. நீங்கள் பதவி போதையில் மூழ்கி இருப்பதை உங்களால் உணரமுடியாது: இந்த போதை தலைக்கேறிய நிலையில் உங்கள் மகன்கள் இருப்பதைப் பார்த்து நீங்கள் வருந்தும் நிலை ஏற்படலாம். அது துயரத்தையை கொண்டுவரும். என்னைப் பொறுத்தவரை, தெளிவான மனநிலையில் என்னைப் படைத்தவனிடம் நான் செல்கிறேன். உங்களுக்கான நேரம் இறுதியாக வரும்போது, நீங்களும் அதையே செய்வீர்கள் என்று நம்புகிறேன். அதை விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் எந்த தனிமனிதனுக்கும் பணியாமல், தலை நிமிர்ந்து வாழ்ந்த நிறைவு இருக்கிறது. நான் இந்தப் பாதையில் தனியே பயணம் செய்யவில்லை. சக பத்திரிகையாளர்களும் என்னோடு பயணம் செய்துள்ளனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்; விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அதிபரான நீங்கள் முன்னொரு காலத்தில் எந்த பத்திரிகை சுதந்திற்காக பாடுபட்டீர்களோ, அதே பத்திரிகை சுதந்திரத்திற்காக தற்போது பாடுபடும் மேலும் சில பத்திரிகையாளர்கள் மரணத்தின் நிழலில் உள்ளனர். எனது மரணம் தங்கள் கண்காணிப்பின் கீழ் நிகழ்வதை நீங்கள் மறக்கவே முடியாது. எனது கொலையாளிகளை நீங்கள் பாதுகாப்பதைத்தவிர வேறு வாய்ப்பில்லாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படாத வகையில் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன். உங்களைப் பதவியில் அமர்த்தியுள்ள உங்கள் குடும்பத்தினர், உங்கள் பாவங்களுக்காகவும் கடவுளிடம் நீண்ட நேரம் முழந்தாளிட்டு பாவமன்னிப்பு கேட்பார்கள்.

சண்டே லீடர் பத்திரிகையின் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்கள் பணியில் துணை நின்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினரின் நலன்களுக்காக, குரல் எழுப்பக்கூட நாதியற்றவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறோம்.
வேர்களை மறந்துவிட்டு தலை கொழுத்துத் திரிபவர்களின் ஊழல்களை வெளிப்படுத்தி உங்கள் வரிப்பணம் விரயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தி இருக்கிறோம். அரசுத்தரப்பில் கூறப்படும் பிரச்சாரங்களுக்கு மாற்றாக உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறோம். இதற்கான விலையை ஒரு நாள் கொடுக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும். அதனை நானும் - என் குடும்பத்தினரும் தற்போது கொடுக்கிறோம்.

நான் அதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இதனைத் தடுக்க நான் எதையும் செய்யவில்லை; முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ இல்லை. ஆயிரக்கணக்கான படுகொலைகளைக் கண்டிக்கும்போது மனித கேடயங்களின் பின் பதுங்கிக்கொள்ளும், எனது கொலையாளியைப்போல நான் கோழை இல்லை என்பதை அவன் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உயிர் யாரால் எப்படி கவரப்படும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது எப்போது நடைபெறும் என்பதுதான் மீதமுள்ள கேள்வி.

சண்டே லீடர் பத்திரிகை தனது அறம் சார்ந்த யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் என்பதும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நான் இந்தப்பணியில் தனித்து செயல்படவில்லை. இந்த பத்திரிகை வீழ்த்தப்படுவதற்கு முன்னர் எங்களில் பலர் கொல்லப்படவேண்டும் - கொல்லப்படுவார்கள். அதுவரை சண்டே லீடர் பத்திரிகை மக்களுக்காகப் போராடும். எனது கொலை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படாமல், கருத்துரிமைக்காக தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கான தூண்டுதலாக செயல்படும் என்று நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கொலை, இலங்கையில் மனித விடுதலைக்கான புதிய யுகத்தை படைப்பதற்காக போராடும் சக்திகளை இணைக்க உதவி செய்யும் என்றும் நம்புகிறேன். தேசபக்தியின் பெயரால் பல படுகொலைகள் நடந்தாலும், மனிதநேயம் மேலும் செழித்து வளரும் என்றும் அது அதிபரின் கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன். எத்தனை ராஜபக்சேக்கள் சேர்ந்தாலும் மனிதநேயத்தை அழித்துவிட முடியாது.

நான் இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் இறங்க வேண்டுமா என்று பொதுமக்கள் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காலம் மாறும்போது இந்த அநீதிகளும் மாறிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனக்கும் அது தெரியும்: அது தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால் இப்போது நாம் பேசாவிட்டால், பின்னர் பேசுவதற்கு யாரும் மிஞ்சாமலே போய்விடக்கூடும். அவர்கள் சிறுபான்மையினராக, ஒடுக்கப்பட்டவர்களாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஜெர்மானிய மதத் தத்துவாதியாகிய மார்ட்டீன் நீய் மொல்லர் என்பவரின் வாழ்க்கை அனுபவமே எனது பத்திரிகை வாழ்க்கை முழுக்க எனது உந்து சக்தியாக செயல்பட்டு வந்தது. யூதர்களுக்கு எதிரான கருத்து கொண்ட இவர், இளமைக்காலத்தில் ஹிட்லரின் ஆதரவாளராக இருந்தார்.
ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் ஜெர்மனியை கைப்பற்றியவுடன், ஹிட்லரின் கொள்கை
நாஜிக்களை மட்டுமே அழிப்பதல்ல என்பதையும், ஹிட்லருக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் அழிப்பதே ஹிட்லரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டார். ஹிட்லருக்கு எதிரான கருத்துகளைக் கூறிய மார்ட்டீன் நீய் மொல்லரும் நாஜிப்படையால் பிடிக்கப்பட்டு1937 முதல் 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்குமுன் எழுதிய கவிதையை நான் என் இளம்பருவத்தில் படித்தேன். என் நெஞ்சில் நிலைத்த அந்த கவிதை இதோ:

முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் - அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல; அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப் பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

மூலம்: http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர்: சுந்தரராஜன்(sundararajan@lawyer.com)

நன்றி: கீற்று