> குருத்து: July 2021

July 19, 2021

ஊரடங்கு உண்டு! கடனுக்கு மட்டும் அவகாசம் இல்லை!


மதியம் 1.30 மணி. அருகே உள்ள அந்த உணவகத்திற்குள்ளே சாப்பிட அமர்ந்தேன். எப்பொழுதும் உடனே என்ன வேண்டும் என கேட்பவர்கள், இப்பொழுது சில நிமிடங்கள் ஆகியும் யாரும் வந்து கேட்கவில்லை.


கல்லாப்பெட்டி இடத்தில் அந்த அம்மாவே, ”என்ன வேண்டும் சார்?” என கேட்டார்.

“சாப்பாடு” என்றேன்.

உள்ளே உரத்த குரலில் சொன்னார். ”சாருக்கு சாப்பாடு கொடுங்க!”
சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது, ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஏலச்சீட்டுக்காரர் வந்தார். அவர் கட்டவேண்டிய தொகையை கேட்கிறார். 

 அந்த அம்மா “ஏற்கனவே நான் சொல்லிட்டேன்! ஒரு மாசமா ஊரடங்கு. வியாபாரம் இல்லை! இரண்டு மாஸ்டரில் ஒருவரையும், வேலையாட்கள் நான்கு பேரில் இருவரை நிப்பாட்டிட்டேன். நிலைமை சரியானதும் தர்றேன்!” என்றார்.

அதற்கு அந்த ஏலச்சீட்டுக்காரர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அம்மா “இதுதான் முடியும்! உங்களால் என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள்” என கோவத்துடன் சொன்னார்.

“அப்படி சொல்லிட்டு போங்கோ! நான் கம்பெனியில் சொல்லிட்டு போறேன்!” என வேகமாக கிளம்பினார்.

வாடிக்கையாளர்கள் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவா, ஆற்றாமையை சொல்வதற்காகாவோ என்னைப் பார்த்து சொன்னார்.

“மூணு சீட்டு போட்டிருக்கேன் சார். ஒரு சீட்டு 500. மூணு சீட்டுக்கு ரூ. 1500 தரவேண்டும். இப்ப ஒண்ணு தர்றேன். மத்த இரண்டு சீட்டு நிலைமைக்கு சரியானபிறகு தருகிறேன் என சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள். இதில் ஒரு சீட்டு முடிஞ்சிருச்சி! அந்த பணத்தை கொடுங்கன்னு! கேட்டா, அதில் சிலர் என்னைப் போல கட்டாமல் இருக்கிறார்களாம். ஆகையால் அவர்கள் கட்டிய பிறகு தான் பணம் தருவார்களாம்” என்றார்.

இது எந்த நிறுவனத்தில் போய் நின்றாலும் வேறு வேறு வார்த்தைகளில் இது தான் நிலைமை. பேரரசர் தன்னுடைய நண்பர்களான தரகு முதலாளிகளின் நலனை மட்டுமே சிந்திக்கிறார். மக்கள் படும் நிலைமையை பற்றி அவர் சிந்திப்பதே இல்லை. தெரிந்தால் தானே சிந்திப்பதற்கு!

வேறு வழியின்றி உச்சநீதி மன்றத்தின் கதவைத் தட்டினால், இதைப் பற்றி ”முதல் அலையின் பொழுதே தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டோம்” என்கிறார்கள். அப்படி என்ன தெளிவான முடிவு எனக் கேட்டால்...

“இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. நாங்கள் தலையிடமாட்டோம்”.

இனி மக்கள் தான் இவர்களைப் பற்றி சிந்திக்கவேண்டும்!

Vagabond உளவாளி (2019) தென்கொரியா

 


1 Season 16 Episodes. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மணி நேரம்.

தென்கொரியாவிலிருந்து இருந்து வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவிற்கு ஒரு விமானம் கிளம்புகிறது. முக்கிய விஐபி யாரும் இல்லாமல், பொதுமக்கள் பயணிக்கிறார்கள். கராத்தே டேக்வாண்டோ சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள பள்ளிக்குழந்தைகள் கொண்ட 30 பேர் குழுவும் பயணிக்கிறது.

போகிற வழியில் விமானம் வெடித்து சிதறுகிறது. அதில் பயணித்த மொத்த பயணிகளும் இறந்துவிடுகிறார்கள். அதில் பயணித்த ஒரு பள்ளி மாணவனின் சித்தப்பாவான நாயகன், படங்களில் நடிக்கும் சண்டைவீரனாக (Stunt Man) இருக்கிறான். விமானத்தில் பயணித்த ஒருவனை எதைச்சையாக பார்க்க சந்தேகம் கிளம்புகிறது. விசாரிக்க துவங்குகிறான். ஆபிசராக வரும் நாயகியும் விசாரிக்க துவங்குகிறார்.

இந்த ‘விபத்து’ ஏன் நிகழ்த்தப்பட்டது? அதில் இருந்து ’தப்பித்தவர்கள்’ யார்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை பரபரப்பாகவும், சண்டைக்காட்சிகளுடனும் இறுதிவரை சுவாரசியத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டாவது சீசன் இந்த ஆண்டில் வெளியாகும் என செய்தி சொல்கிறார்கள். முதல் சீசன் ஆங்கில சப்டைட்டில்களுடன் நெட் பிளிக்சில் இருக்கிறது. திரில்லர், சண்டை ரசிகர்கள் பாருங்கள்.

- என் பொண்ணு இலக்கியா பார்த்து தன் அனுபவத்தை சொன்னார். நான் எழுதியுள்ளேன்.

ஒரு உறவின் மேல் கத்திமுனையில் எப்படி நடப்பதென அஞ்சுகிறவரா நீங்கள்?


ஒரு உறவின் மேல்

கத்திமுனையில் எப்படி நடப்பதென
அஞ்சுகிறவரா நீங்கள்?

வாருங்கள்
நான் உங்களுக்கு
கத்திமுனையில் நடக்க
கற்றுத்தருகிறேன்

இனியதோ கசப்பானதோ
பழையதெதையும்
நினைவுபடுத்தக்கூடாது

பழைய உரிமைகளை
புதிய காலத்தில்
புதுப்பிக்க முயலக்கூடாது

நமது எல்லா சாகசங்களும்
ஒருவருக்கொருவர்
நன்கு தெரியும் என்பதால்
அவற்றை மீண்டும்
நிகழ்த்தகூடாது

ஒருமை பன்மை அழைப்புகளை
அனாவசியமாய்
குழப்பிக்கொள்ளக்கூடாது

அந்தரங்கமான ஒரு சொல்
அல்லது ஒரு ரகசிய அறையை
திறப்பபதற்கான சொல்
அதை ஒருபோதும்
பயன்படுத்தலாகாது

சம்பிரதாயமான
அல்லது நம்மைப்பற்றியல்லாத
எவ்வளவோ இருக்கின்றன
இந்த உலகில் உரையாட
அதைத்தான் நாம் பேசவேண்டும்
சந்திப்புகள் உரையாடல்கள்
எவ்வளவுகெவ்வளவு
குறைவான நேரத்தில் இருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு நல்லது

பெரும்பாலும் பரிசுகளை
தவிர்ப்பது நல்லது
அவை உள்ளூர விரும்பப்படுவதில்லை

கடந்த காலம்போலவே
எதிர்காலம் பற்றியும் பேசாமலிப்பது நல்லது
மாறாக
நாம் அருந்திக்கொண்டிருக்கும்
காஃபியைப்பற்றிப் பேசலாம்
அல்லது புதிதாக வாங்கிய ஷீவின் விலைபற்றி
ஏன் ரூமியைப்பற்றிக்கூட பேசலாம்
நாம் ஏற்கனவே
கத்திமுனையில் நடந்துகொண்டிருப்பதால்
எதைப்பற்றியும்
கூர்மையான அபிப்ராயங்களை
தவிர்ப்பது நல்லது

எதைப்பற்றிப் பேசினாலும்
அதை மழுங்கடிப்பது நல்லது
அதை நீர்த்துபோகச் செய்வது நல்லது

எவ்வளவு எச்சரிக்கையாக நடந்தாலும்
நாம் நடப்பது கத்திமுனையில் அல்லவா
ஒரு எதிர்பாராத தருணத்தில்
குறுவாளின் பிடி நழுவி
நம் நெஞ்சில் இறங்கும்
நாம் ரத்தம் சிந்துவதைக் காட்டிக்கொள்ளக்கூடாது

வலி பொறுக்காமல்
கண்ணில் தளும்புவதை
ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது
ஒரு உறவில் கத்தி முனையில் நடக்கும்போது
அந்தப்பாதை
அவ்வளவு நீளமாக இருக்கிறது
ஓரடி எடுத்து வைப்பதற்குள்
ஒரு பருவம் போய்விடுகிறது
ஒரு வயது போய்விடுகிறது

24.6.2021
இரவு 10.52
மனுஷ்ய புத்திரன்

வாசிப்பது தடைப்படாமல் இருக்க....!


காலை 4.30 எழுந்துகொள்வேன் அப்பொழுதிலிருந்தே வாசிக்கத் தொடங்கிவிடுவேன்..

இரவு 9.30 படுக்கச் சொல்லுவேன் 9.25 வரை கையில் புத்தகம் இருக்கும்.

ஒரு புத்தகத்தை முடித்து அடுத்த புத்தகத்தை எடுக்கும் வழக்கம் இல்லை. ஒரே நேரத்தில் பல துறை தொடர்பாகப் புத்தகங்களை வாசிப்பது வழக்கம்..
அப்படி இப்பொழுது என் மேஜையில் 11 புத்தகங்களை வாசித்துக் கொண்டு இருக்கிறேன்..

ஒரு புத்தகம் முடித்து அடுத்த புத்தகம் வாசிக்கலாம் என்று முடிவு செய்தால் சில நேரம் வாசிக்கும் புத்தகம் 2 பக்கம் கூட தண்டமுடியாத அளவு பொறுமையாகச் செல்லும். அப்பொழுது மூடி வைத்துவிடுவோம். இப்படித் தொடர்ந்தால் வாசிப்பது தடைப்படும்..

அப்படியே சில நாள் வாசிக்காமலேயே சென்றுவிடும்... மீண்டும் வசிக்கும் நிலை ஏற்படத் தாமதமாகும்.

அதனால் ஒரு கடினமான புத்தகம் கூடவே எளிமையான, சுவாரசியமான புத்தகமும் வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் முதல் புத்தகம் மூடி வைக்கிறீர்களே அப்பொழுது எளிமையான புத்தகம் எடுத்து வாசிக்க வேண்டும்..

இப்படிச் செய்வதால் தினமும் வாசிக்கும் நிலை இருக்கும். முதலில் வாசிப்பது தடைப்படக்கூடாது. எந்த புத்தகம் படிக்கிறோம் என்பதைவிடத் தினமும் வாசிக்கிறோமா என்று பார்க்கவேண்டும்..

அதனால் எப்பொழுதும் இரண்டுக்கு மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வைத்துக் கொண்டால் வாசிப்பு தொடர்ந்து இருக்கும்.. அப்படிப் பல தலைப்புகளில் 11 புத்தகங்கள் என் மேஜையில் உள்ளது.

வாசிக்கும்பொழுது குறிப்பு எடுத்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. அப்படி சில குறிப்பேடுகள் சேர்த்து உள்ளன.முழுவதும் வாசித்த பிறகே குறிப்பு எடுப்பேன்.
புத்தகம் வாசிக்கும் நண்பர்கள் இந்த முறையை முயன்று பார்க்கலாம்...

- எழுத்தாளர் நக்கீரன் உரையிலிருந்து...
முகநூலில் இருந்து.....

அன்புள்ள அப்பாவிற்கு,


தங்கள் அன்பு மகன் எழுதிக்கொள்வது, உங்களுக்கும் கடிதம் எழுதிவிட்டால் இப்போதைக்கு என் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்துவிடும். உங்களுக்கு முதல் கடிதமாக எழுத எனக்கு விருப்பமில்லை. அதற்கு இரண்டே காரணங்கள்தான்.

ஒருவேளை இக்கடிதம் பெரிதாக, நீண்டு செல்லலாம்.
இக்கடிதம் உங்களுக்கு முதல் கடிதம் அல்ல.

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஏற்கனவே நான் உங்களிடம் இரு கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன். இன்னும் 2 கடிதங்கள் எழுதினேன். அவை உங்களை வந்து சேரவில்லை.

சரி. பழந்கதைகளை விட்டுவிட்டு இப்போது கடிதத்தைத் தொடர்கிறேன். உங்களிடமும் சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஆவல். அவ்வளவே!
என்னைச் சிறப்பானவனாக வளர்த்தெடுக்க நீங்கள் விருப்பம் கொண்டிருப்பீர்கள். அதன்படியே என்னையும் வளர்த்திருக்கிறீர்கள். நான் அவ்வாறே வளர்ந்தேனா? என்பதெல்லாம் தனி.

கொஞ்சம் வருத்தம் என்னுள்ளும் தொக்கி நிற்கிறது அப்பா! நீங்கள் பெருமிதம் கொள்கிறபடி ஏதாவது நிகழ்த்தவேண்டும் என்கிற ஆவல் மட்டும் பல ஆண்டுகளாக என் மனதுள் கொதித்து எழுந்து அடங்கவே மறுக்கிறபடி, திமிறுகிறது.

என்ன வார்த்தைகளையெல்லாம் இன்னும், இன்னும் இட்டு என் நிலையை உங்களிடம் சொல்வதெனத் தெரியவில்லை. ஆனாலும் என் நிலை உங்களுக்கு கொஞ்சமேனும் புரிந்திருக்கும்.

என் வாயிலிருந்து சில வார்த்தைகளாவது வெளியே கேட்காதா? என நீங்கள் எண்ணும்படியாக பலவேளைகளில் நான் (மௌனம் சாதித்தபடி ) நடந்துகொண்டிருக்கிறேன். பொறுத்தருளவும்.

ஆனால் உங்களிடம் நான் பேச நினைக்கும் எல்லாவற்றையும் உங்கள் எதிரில் பேச இயலவே இல்லை. உங்கள் மேல் எனக்கு பயமா? என்றால் இல்லை. இல்லவே இல்லை என உறுதியுடன் கூறிக்கொள்வேன்.

என் அப்பாவின் மேல் எனக்கு பயம் கிடையாது. மற்றவர்களை விட மரியாதை உங்கள் மேல் எனக்கு அதிகம். நான் உங்களிடம் அதிகம் பேசாமல் இருந்தாலும், உங்கள் அறிவுரைகளை நீங்கள் தந்துகொண்டேதான் இருக்கிறீர்கள். அதை நான் ஒருபோதும் மறந்ததில்லை. ஆனால் செயல்படுத்த முடியாமல் பலவேளைகளில் திணறியிருக்கின்றேன். நீங்கள்தான் என்னை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

உங்கள் வளர்ப்புமுறை குறித்து பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் எனது அணுகுமுறையாக இருக்கலாம். எனது நடத்தையாக இருக்கலாம்.
எப்போதெல்லாம் எனக்கு கண்டிப்பு தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் வழங்கினீர்கள். எனது திறமையின் எல்லைவரை மட்டுமே உங்கள் கண்டிப்பு சென்றது. வீணாக உங்கள் விருப்பங்களை என் மேல் நீங்கள் திணித்ததே இல்லை. எனவே நீங்கள் உன்னதமானவர்.

தம்பிக்கு அதே அளவு அறிவுரை சரியான தருணத்தில் கிடைக்கவில்லையென்று நினைக்கிறேன். உங்களுக்கு இன்னும் தருணம் இருக்கிறது. அவன் இன்னும் உயரம் எட்ட நீங்களும் அவசியம்.
என் மேல் நானே கொள்ளாத நம்பிக்கை கொண்டிருக்கிற மனிதர் இந்த உலகத்தில் உண்டென்றால், அது நீங்களாகவே இருக்கமுடியும். நான் எப்படி என்னை வடிவமைக்கவேண்டும் என நானே சிந்திக்க நீங்கள்தான் காரணமாய் இருந்துள்ளீர்கள்.

உங்களை உங்கள் அப்பா (என் பாட்டனார்) எப்படி வளர்த்தார் என்பதை நீங்கள் கூறவும், உங்களைவிட வயதில் மூத்தவர்களான பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். உங்கள் வளர்ப்புமுறைகள் அதன் காரணமாகவே என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.

யாராவது பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் வார்த்தைகளைக் கொண்டே அவர்களை மடக்கினால் அவர்களிடம் உங்கள் தொழில் குறித்தும், இன்னாரின் மகன் நான் என்றும் வார்த்தைகள் விழும். எனக்குத் தெரியும். நீங்கள் எந்த தொழில் செய்திருந்தாலும், உங்கள் நாவின் வன்மை அப்படித்தான் இருந்திருக்கும்.

நான் என்ன மாதிரியான புத்தகங்கள் படிக்கவேண்டும் என தீர்மானித்தீர்கள். எனக்கு சிறந்த வாசிப்பு அனுபவங்களைத் தந்தீர்கள். எப்போதும் அதை நான் மறக்கவே மாட்டேன்.

நான் நாளிதழ்களை எழுத்துக் கூட்டி படித்துப் பழகுகிறபோது எனக்கு தெரிந்து நான் 2 அல்லது 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பேன். இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு நாளிதழின் எந்த செய்தியை ஆழமாகப் படிக்க வேண்டும்? எதை கவனிக்க வேண்டும்? எதை ஒதுக்க வேண்டும்? செய்திகளின் உள் அர்த்தம் என்ன? எதுதான் நடுநிலைத்தன்மை? எப்படி ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்? ஒரு வார இதழை எப்படி படிக்க வேண்டும்? எதை நினைவில் கொள்ளவேண்டும்? எதை தூர ஓட்ட வேண்டும்? வியாபார உத்திகள், சமகால அரசியல், வாழ்வியல், சமூகம் ……ம்ம்ம்ம் இன்னும் இன்னும் எவ்வளவோ…?? சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். சாதாரணமாக எந்த பிள்ளைக்கும் ஒரு தந்தை இப்படியெல்லாம் சொல்லமாட்டார் என நினைக்கிறேன்.
இதை எளிதாக சில ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தேன். சிலருக்கெல்லாம் ஏன் நாளிதழ்களைப் படிக்க வேண்டுமென்றே தெரியவில்லை. சிலரோ தேவையற்ற செய்திகளில் நாட்டம் கொண்டு நேரம் போக்கியதைக் கண்டிருக்கிறேன். அந்த வகையிலும் உங்களுக்கு நன்றி. நீங்கள் யார்க்கும் வாய்க்காத ஒரு அப்பா!

உங்கள் அரசியல் கொள்கைகள் யாவையும் என்னை பத்தாம் வகுப்பு படிக்கிறவரையில் நெருங்கவே இல்லை. அதன்பின் நான் படித்த புத்தகங்கள்தான் என்னை மாற்றியிருக்கும் என நினைக்கிறேன். நன்றி. எப்போதுமே இந்த புத்தகத்தைப் படி/வாங்கு என நீங்கள் சொன்னதே இல்லை.
எனக்கான சுதந்திரத்திற்கான எல்லைகளை என் வயது ஏற, ஏற அதிகரித்துக்கொண்டே போனீர்கள். அதேஅளவு என் வயது ஏற, ஏற உங்கள் மீதான எனது விருப்பமும் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது.
நான் என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறபோதெல்லாம் உங்கள் முகம் போல் எனக்கு தோன்றுகிறதே இல்லை. எனக்குத் தெரிய, என் நடவடிக்கைகள் உங்களைப் போல இல்லவே இல்லை. ஆனாலும் உங்களைப் போல நான் உருவத்தில் இருக்கிறேன் என்றும், உங்களை என் செய்கைகளினால் நான் பிரதிபலிக்கிறேன் என்று ( உங்களை நன்கு அறிந்த ) பிறர் கூறுகையில் வியப்பைத் தவிர எனக்கு வேறேதும் தோன்றுவதே இல்லை.
உன் தந்தையால் தான் இன்று சிறப்பாக இருக்கிறேன் எனக் கூறுகிறவர்களைக் கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அதனால் ஆச்சர்யப்பட்டும் போயிருக்கிறேன். எத்தனை விதமான ஆட்களைப் பழகி வைத்துள்ளீர்கள்? எத்தனை எத்தனை அனுபவங்களைக் கொண்டிருக்கிறீர்கள்? எனக்கெல்லாம் அப்படி அமையுமா? என காத்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னோடு பேசுகிற பொழுதும் ஆச்சர்யம்தான்! உங்களோடு பதினைந்து நிமிடங்கள் பேசினால் ( அதாவது நான் உங்கள் பேச்சைக் கேட்டால்!! ) என்னால் குறைந்தபட்சம் 5-6 பதிவுகள் எழுத முடியும். அவ்வளவு பேசியிருக்கிறீர்கள். அவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்.
என் ஆவலெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் உங்களை விட அதிக புகழ் பெற வேண்டுமென்று உங்கள் விருப்பம் இருக்கும். அது இயற்கைதான். ஆனால் எனக்கோ உங்கள் அளவாவது அனுபவங்களும், நண்பர்களும், புகழும் கிடைக்க வேண்டும். அதற்கு நான் உழைக்க வேண்டும்.
நம் சுற்றத்தார் எல்லோரையும் கணக்கில் எடுத்தால் நீங்கள் மட்டும் தனித்து தெரிவீர்கள்! உங்கள் கொள்கைகள் மீது மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், உங்கள் மேல் யாரும் குறை சொன்னதாக அறியவில்லை. ஏனெனில் உங்களின் குணத்தால், மனத்தால் அந்த பெயரை ஈட்டியிருந்தீர்கள். நான் உங்கள் அளவிற்கு கடவுள் மறுப்பு கொள்ளவில்லை என்றாலும் மூட நம்பிக்கைகளை வெறுக்கிற அளவில் நானும் உங்கள் பாதையில் செல்கிறேன்.
பணத்தை விட குணத்தில் சிறந்த மனித மனங்கள்தான் வாழ்க்கைக்குத் தேவை என புரியவைத்திருக்கிறீர்கள். எனக்கு கிடைத்த தோழர்களை எண்ணி மகிழ்கிறேன்.

இன்னும் இன்னும் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் உங்களிடம் பகிர்வதற்கு என்னிடம் எண்ணங்கள் இருக்கின்றன. தந்தை-மகன் (உறவின் மேன்மை) குறித்து வள்ளுவரும் சில குறள்களைக் கூறியுள்ளார். அதையெல்லாம் இங்கே இட்டு நிரப்பி உங்களை மேலும் புகழ்ந்து……ம்ம்ம்ம். போதும். அதெல்லாம் தேவையே இல்லாதவை. அதைவிட மோசமானதாக வேறேதும் இல்லை. நான் அதிகம் உங்களுக்கு எழுதுவதைவிட, உங்களிடம் பேசுவதற்கே விரும்புகிறேன். அதைத்தான் நீங்களும் விரும்புவீர்கள் என எனக்கும் தெரியும். உங்களோடு மனம்விட்டு, அச்சம்விட்டு, உள்ளத்தில் எழுகிற சொற்களையெல்லாம் வெளித்தள்ளிப் பேசுகிற அந்த நாள் எந்நாளோ? தெரியவில்லை. ஆனாலும் நாம் இருவரும் பேசித்தான் ஆகணும்!
இதிலுள்ளவையெல்லாம் கொஞ்சம்தான். எழுத நினைத்தவை இன்னும் அதிகம். உங்கள் பதில் கடிதம் நான் எதிர்பார்க்கமாட்டேன். நீங்கள் என்னிடம் தொலைபேசியிலேயே பேசினால் பொதும் உங்கள் குரல் என்னை எந்நாளும் வழிநட்த்தும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு அதுவே போதும்.
இப்படிக்கு,

உங்கள் அன்பு மகன்

- இணையத்தில் இருந்து.... 

பாலைவனச்சோலை (1981)

நேற்று பாலைவனச்சோலையில் ஒரு பாடல் கேட்டேன். ஐந்து இளைஞர்களும், கீதாவும் நினைவுக்கு வந்தார்கள். யூடியூப்பில் இருந்ததால் பார்த்தேன். இன்னும் படம் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பார்ப்பதற்கு சுவாரசியமாக தான் இருக்கிறது.


ஐந்து இளைஞர்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அந்த குட்டிச்சுவரில் தான் அமர்ந்து பேசி, சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். மதிய வெயிலுக்கு பிறகு எதிர்த்த குட்டிச்சுவரில் மாறி அமர்கிறார்கள். ஒருவர் நாத்திகர். தொழிற்சாலையில் நடந்த தவறுகளை தட்டிக்கேட்டு, வழக்காடிக்கொண்டிருப்பவர். இன்னொருவர் பணக்கார வீட்டுப்பிள்ளை. அன்புக்காக ஏங்குகிற ஆள். இன்னொருவர் நடிப்பதற்கு வாய்ப்பு தேடுகிறவர். இன்னொருவர் படித்துவிட்டு ’வெற்றிகரமாக’ 100வது நேர்முக தேர்வு போகிறார். இன்னொருவர் அம்மா, அப்பா இல்லை. இரண்டு தங்கைகளோடு பொருளாதார நெருக்கடியில் வாழ்கிறவர்.

இளம்பெண்ணும், அவருடைய அப்பாவும் புதிதாக தெருவில் குடிவருகிறார்கள். அவளுக்கு இருக்கும் இதய நோய்க்காக மருத்துவம் பார்க்க இங்கு வந்திருக்கிறார்கள். இந்த ஐவரோடும் இயல்பாக பழக ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு வாழ்விலும் உரிமையுடன் தலையிடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

*****

படம் வந்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பல்வேறு மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து இளைஞர்கள் ஒரு பெண் இயல்பாக பழகுவதை அவ்வளவு இயல்பாக எடுத்திருப்பார்கள். வழக்கமான சினிமா க்ளிசேக்கள் இல்லாத யதார்த்தப் படம் எனலாம். இந்தப் படம் 80களில் வெளிவந்த படங்களில் முக்கியப்படம். திரைப்படங்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கவேண்டும். இந்த படம் அப்படி ஒரு படம். இதே ஆண்டில் இதே போல எதார்த்தமாக எடுக்கப்பட்டு இன்னொரு பிடித்தமான படம் ”கிளிஞ்சல்கள்”. இதன் இயக்குநர் துரை.

இராபார்ட் - இராஜசேகரன் இயக்குநர்கள் இருவரும் வடசென்னைக்காரர்கள் என்பது ஆச்சர்யம். இருவரும் திரைப்பட கல்லூரியில் பயின்று வெளிவந்த ஒளிப்பதிவுகாரர்கள். இருவரும் இணைந்து சில படங்களை இயக்கியிருக்கிறார்கள். பிசிஸ்ரீராம் போன்றவர்களுக்கெல்லாம் இராபார்ட் குரு என்கிறார்கள். இவர்களின் படங்களில், இந்த படமும், ”மனசுக்குள் மத்தாப்பூ”, ”பறவைகள் பலவிதம்” படமும் பிடித்தமானவை.

சந்திரசேகர், சுஹாசினி, ராஜீவ், ஜனகராஜ், தியாகு என படத்தில் நடித்த அத்தனை பேருமே அதே காலக்கட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் அறிமுகமாகி இருந்தவர்கள் தான். அனைவரிடமே ஒரு அப்பாவித்தனம் (innocence) இருப்பது அழகு.

படத்தின் அத்தனைப் பாடல்களுமே அருமை. வழக்கம்போல இளையராஜா தான் என நினைத்துவிட்டேன். தேடிப்பார்த்தால் சங்கர் – கணேஷ் இசையமைத்திருக்கிறார்கள்.

2009ல் பாலைவனச்சோலையை திரும்பவும் தமிழில் எடுத்தார்கள். எடுபடவில்லை.

நிபுணன் (2017) திரில்லர்


சென்னை நகரத்தில் பொதுவாழ்வில் உள்ள ஒருவரை கடத்தி தூக்கில் தொங்கவிட்டு, தலையில் ஒரு விலங்கு முகமூடி அணிவிக்கப்படுகிறது. செத்தப்பிறகு துப்பாக்கியிலும் சுடப்பட்டிருக்கிறார். அவருக்கு இன்னொரு துறை சம்பந்தப்பட்ட யூனிபார்ம் அணிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கொலைக்கான க்ளூ என புரிந்துகொள்ளலாம்.


நாயகன் டி.எஸ்பியாக இருக்கிறார். அவருடன் இரண்டு போலீசு அதிகாரிகள் துணைக்கு இருக்கிறார்கள். அந்த கொலை, அதே வகைப்பட்ட தொடர் கொலைகளாகி என தொடர்கிறது. விசாரணை துவங்கி, மெல்ல மெல்ல நெருங்குகிறார்கள். அடுத்த இலக்கு நாயகனே என கண்டுபிடிக்கிறார்கள்.

இதற்கிடையில், நாயகனுக்கு பார்க்கின்சன் நோய் துவக்கநிலையில் தாக்குகிறது. இதனால் வலது கையின் இயக்கம் குறைகிறது. திடீரென நடுக்கம் வந்து துப்பாக்கி பிடித்து சுடமுடியாமல் கூட போகிறது. அவரை துறை சார்ந்த உயரதிகாரிகள் ஒதுங்கியிருக்க சொல்கிறார்கள். கொலையாளியோ ”முடிந்தால் பிடித்துப்பார்” என சவால் விடுவதாக கருதுகிறார்.

கொலையாளியை பிடித்தார்களா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
****

உ.பி நொய்டாவில் நடந்த ஆருஷி கொலை வழக்கை படத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த குடும்பம் இந்து குடும்பம் தான். படத்தில் ஏன் கிறிஸ்துவ குடும்பமாக மாற்றி காண்பித்திருக்கிறார்கள். ஏன் மாற்றினார்கள்? கொலையாளி ”கிறிஸ்டோபர்” ஏன்? இந்து குடும்பமாகவே காண்பித்திருக்கலாமே!

துவக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அர்ஜூனுக்கு இது 150வது படம் என்பதால், அவருக்கு பில்டப் கொடுத்து துவக்கத்திலிருந்து இறுதிவரை காட்சி வைத்திருக்கிறார்கள். இதனால், அவருடைய உதவி அதிகாரிகளான பிரசன்னாவையும், வரலட்சுமியையும் டம்மி செய்திருக்கிறார்கள். அதனால் இயல்பாக இல்லாமல் செயற்கைத்தனம் வந்துவிடுகிறது. இந்த நிலையில் பார்க்கின்சன் நோய் தாக்குவதாக எப்படி அர்ஜூனை ஏற்க வைத்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நாயகனிடம் மேலதிகாரி சமூகத்தில் ”இவர்கள்” எல்லாம் நிறைய குற்றங்கள் செய்து மிக அபாயமாக இருக்கிறார்கள் என ‘சமூக அக்கறையுடன்” பேசுகிறார். என்கவுண்டரில் போட்டால், மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்கும். ஆகையால், இந்த கொலைகளை சைக்கோ கொலையாளியின் கணக்கில் சேர்த்துவிடலாம் என படத்தை சுபமாக முடிக்கிறார்கள். இது தான் ‘கிரிமினல்’ போலீஸ் டச்!

இந்த படத்தில் அர்ஜூன் நடிக்கும் பொழுது தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என ஜோடியாக நடித்த சுருதி ”மீ டூ” புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அர்ஜூன் மறுத்தார். புகார் கூட பதியப்பட்டது. அதற்கு பிறகு அந்த நாயகிக்கு யாரும் படத்தில் வாய்ப்பு தரவில்லை என புலம்பினார். சோகம்.

யூடியூப்பில் இலவசமாக கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

விக்ரமன் பேட்டியிலிருந்து சில துளிகள்….

”இயக்குநர் மணிவண்ணனை சந்தித்து உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். நான் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், 100 படத்திற்கான தலைப்புகள் எல்லாவற்றையும் நிதானமாய் அரை மணி நேரம் படித்துப் பார்த்து, நாளையிலிருந்து வா! என்றார். அவரிடம் சேர்ந்தேன்.”


”அவரிடம் இரண்டு படம் மட்டும் வேலை செய்துவிட்டு, நான் சம்பந்தப்படாத வேறு ஒரு பஞ்சாயத்தால், அவரிடம் இருந்து விலகி, பார்த்திபனின் புதியபாதை படத்தில் சேர்ந்தேன். படம் முடிவதற்குள் இயக்குநர் பார்த்திபனுக்கும், எனக்கும் பிரச்சனை. அந்த பிரச்சனையை சொல்ல விரும்பவில்லை. பிறகு இயக்குவதற்கு வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன்”

“புதிய வசந்தம் கதையை சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி சாரிடம் சொன்னதில் தயாரிக்கிறேன் என முன்வந்தார். படம் இயக்கினேன். மிகப்பெரிய வெற்றி பெற்றது”.

“இரண்டாவது படம் பெரும்புள்ளி. நான் இயக்கிய படங்களில் இந்தப் படம் நான் இயக்கியிருக்க கூடாது. தோல்வி என்பதால் இதை சொல்லவில்லை! “பிறகு, ஆனந்த்பாபுவை வைத்து ”நான் பேச நினைப்பதெல்லாம்”, அர்ஜூன் – பானுப்பிரியா வைத்து கோகுலம். இரண்டுமே நன்றாக ஓடின.”

”பூவே உனக்காக” மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து, இயக்கினேன். அதில் நடித்த சீனியர் நடிகர், ”குருவி தலையில் பனங்காய். விஜய்யை மாற்றி விட்டு, கார்த்திக் போன்ற நடிகரை வைத்துக்கொண்டால், படம் வெற்றிபெறும்” என்றார் படத்தில் ஒரு நீளமான உணர்ச்சிகரமான வசனம். ஒருமுறை நான் சொன்னதை விஜய் கவனமாய் கேட்டார். பிறகு ”டேக் போகலாம்” என்றார். எனக்கு ஆச்சர்யம்! அதை ஒரே டேக்கில் செய்து என்னை வியப்பில் ஆழ்த்தினார். எனக்கு தெரிந்தவர்களிடம் விஜய்யின் திறமைகளைப் பற்றி சொல்லி, நன்றாக வளர்ந்துவருவார் என சொன்னேன். படம் மிகப்பெரிய வெற்றி.”

“உன்னை நினைத்து” முதலில் விஜய்யை வைத்து சில நாட்கள் ஷீட்டிங் போனது. பிறகு என்னிடம் வந்து க்ளைமாக்ஸ் தனக்கு திருப்தியில்லை என்றார். இந்த சந்தேகம் வந்த பிறகு தொடர்ந்து படத்தை எடுப்பது சரியல்ல நாம் நண்பர்களாக பிரிந்துகொள்ளலாம். வேறு ஒருவரை வைத்து இயக்குகிறேன்” என்றேன். மறுத்ததற்காக மன்னிப்பு கேட்டார். பிறகு சூர்யாவை வைத்து எடுத்து வெற்றி பெற்றது. படம் வெற்றி பெற்றால், அந்த படத்திற்காக பெற்ற தொகையை திருப்பதி கோயிலில் உண்டியலில் போடுகிறேன் என சூர்யா வேண்டிக்கொண்டார். அதை நிறைவேற்றினார்.

”வானத்தைப் போல” கதையை எழுதி சூப்பர் குட் செளத்ரியிடம் சொல்ல, சரத்குமாரும் சரி என சொல்ல, நான் மறுத்தேன். அப்பொழுது தான் “நாட்டமை” வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. உடனே ஒரு மென்மையான பாத்திரம் என்றால், சரிவராது. ”சூர்யவம்சம்” கதை சொல்லி, இருவரும் ஏற்று நான் இயக்கிய படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றது.”

”பிறகு, வானத்தைப் போல கதையை விஜய்காந்தை வைத்து இயக்கினேன். பெரிய வெற்றி. தேசிய விருது, மாநில விருது என சில விருதுகளை பெற்றது. இதில் விஜய்காந்திற்காக சில மாற்றங்கள் செய்திருந்தேன். ஒரிஜினலாக நான் எழுதியிருந்த கதையை எடுத்திருந்தால்… 100 வருசம் பேசப்பட்டிருக்கும்”

“உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” கார்த்திக் நடித்துக்கொண்டிருந்த பொழுது, இந்த கதை தான் நடித்த நந்தவனத்தெரு போல இருக்கிறது. ஆகையால், கதையை மாற்றவேண்டும் என தயாரிப்பாளரிடம் பேசியிருந்தார். நான் கார்த்திடம் பேசினேன். அந்தக் கதையும், இந்த கதையும் வேறு வேறு. ஆகையால், நம்பிக்கையுடன் நடியுங்கள். படம் வெற்றி பெறும். அப்பொழுது “எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. இயக்குநருக்கு நிறைய நம்பிக்கை இருந்தது” என்று இன்று நடந்ததை வெற்றி விழாவில் சொல்லவேண்டும் என சொன்னேன். சொன்னது போலவே வெற்றிவிழாவில் சொன்னார்.”

“என் வாழ்வில் என்னை கடந்து போனதில், நான் மிஸ் பண்ணியது கமலின் “அன்பே சிவம்” ரஜினியின் “பாபா”.

- டூரிங் டாக்கீஸ் பேட்டியிலிருந்து...

World Movies Museum - திரைப்படம் சார்ந்த குழுவில் இணையுங்கள்!


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். 49ஆயிரத்திற்கும் மேலாகவும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உலகின் பல மொழிகள் சார்ந்த படங்கள் குறித்த அறிமுகங்கள், விமர்சனங்கள், விவாதங்கள் என எப்பொழுதுமே களைகட்டும்.


எனக்கு ஏதாவது படம் குறித்த விவரம் தேவை எனில், இந்த குழுவில் தான் தேடுவேன். பெரும்பாலும் கிடைத்துவிடும். நான்கு ஆண்டுகளாக உற்சாகமாக இயங்கி வந்த குழு ஒரு வாரத்திற்கு முன்பு தேடும் பொழுது காணவில்லை. நம்மை பிளாக் செய்துவிட்டார்களோ என எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.

சமீபத்தில் அப்படி ஒரு சர்ச்சைப் பதிவோ, யார் பதிவிலும் போய் சண்டையும் போடவில்லையே! பிறகு எப்படி? அந்த குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரமேஷ் ராமிடம் விவரம் கேட்டால், முகநூல் குழுவை "Disable" செய்துவிட்டதாக தகவல் சொன்னார். காரணம் தெரியவில்லை என்றார்.

இது என்ன அநியாயம்? நாலைந்து வருடங்கள் இயங்கிய குழு. எத்தனை ஆயிரம் பதிவுகள், அதற்கு பின்னால் எவ்வளவு பேருடைய உழைப்பு? எல்லாம் ஒருநாள் விடியும் பொழுது காணாமல் போனால் என்னவாவது?

அந்த குழுவின் நிர்வாகிகளை நான் கவனித்த வரையில், ஒரு சித்தாந்தம் சார்ந்தவர்களோ அல்லது ஒரு அமைப்பைச் சார்ந்தவர்களே கிடையாது. நிர்வாகிகள் எல்லோரும் தனிநபர்கள் தான். குழுவின் விதிமுறைகளை கறாராக கடைப்பிடிப்பவர்கள் தான்.

உதாரணமாய் : ஒரு பதிவில் ஓரிடத்தில் தமிழ் ராக்கர்ஸை கண்டித்து எழுதியிருந்தேன். ”தமிழ் ராக்கர்ஸ்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாலேயே என்னை தடை செய்துவிட்டர்கள். பிறகு நிர்வாகிகளிடம் பேசி, தடையை எடுத்துவிட வேண்டியதாகிவிட்டது.

இப்படி விதிமுறைகளை கறாராக கடைப்பிடித்த குழுவை, முகநூல் தடை செய்ய‌ எடுத்த முடிவு அராஜகமானது என்பேன். எந்தவித முன்னறிவிப்பும், எச்சரிக்கையும் இல்லாமல் செயலிழக்க வைப்பது என்பது முற்றிலும் தவறானது. ஜனநாயகத்திற்கு புறம்பானது.

இதுப் பற்றி எத்தனை பதிவர்கள் கண்டித்தார்கள் என தெரியவில்லை. என்னளவில் இதை கண்டிக்கவேண்டும். அது அவசியம் என்பதால் பதிகிறேன்.

அந்த குழுவை மீட்பதற்கு போராடி, இனி மீட்க முடியாது என முடிவு செய்து, உடனே அதே பெயரிலேயே 2.0 என சேர்த்து இப்பொழுது குழுவை துவங்கிவிட்டார்கள்.

நானும் கூட மீட்பதற்கு ஒரு மனுவை முகநூலுக்கு அனுப்பிவைத்தேன். புதிய குழுவில் நானும் உறுப்பினராகிவிட்டேன். திரைப்படம் சார்ந்த ஆர்வமுள்ளவர்களும் இணையுங்கள் என அழைக்கிறேன்.

Cold case (2021) மலையாளம் ஹாரர் + திரில்லர் படம்


ஆற்றில் மீன்பிடிக்கும் பொழுது ஒரு (அழகிய பெண்!) மண்டையோடு கிடைக்கிறது. நாயகனிடம் அந்த வழக்கு வருகிறது. அறிவியல், விசாரணை இரண்டின் மூலம் மெல்ல மெல்ல முன்னேறி கொல்லப்பட்டது யாரென கண்டுபிடித்துவிடுகிறார்.


இதன் மறுபுறம் ஒரு தொலைக்காட்சியில் ஆவி, பில்லி சூன்யம் குறித்தான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் நாயகி வேலை செய்கிறாள். அவர் தன் குட்டி மகளுடன் புதிய வீட்டிற்கு குடிவருகிறார். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன. தனக்கு தெரிந்த சில எக்ஸ்பர்ட் உதவியுடன் அந்த பேய் யாரென கண்டுபிடித்துவிடுகிறார்(!).

அந்த கொலை நடந்தது ஏன்? எப்படி நடந்தது என்பதை மீதிப் படத்தில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

****

ஒரு பக்கம் போலீஸ் விசாரணை, மறுபக்கம் பேய். இரண்டிலும் போலீஸ் விசாரணை தான் சுவாரசியம். பேய் பெரிதாக எடுபடவில்லை.

நமது மருத்துவரிடம், வழக்கறிஞரிட‌ம் உண்மையை சொல்லுங்கள். பொய் சொன்னால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பார்கள். இந்தப்படம் அப்படித்தானா? என்கிறது.

பிரித்திவிராஜ் சீரியசான போலீசாக படம் முழுவதும் வருகிறார். தமிழ் படமான அருவியில் நடித்து காணாமல் போயிருந்த ஆதித்தியும் வருகிறார். அந்த குட்டிப்பெண் சுட்டி. ’மனம் கொத்தி பறவை’ நாயகி தான் கொலைசெய்யப்பட்ட பெண்ணாக வருகிறார்.

திரில்லர் ரசிகர்கள் பாருங்கள்.

நாசர் பேட்டியிலிருந்து… சில துளிகள்

 


“எங்கப்பா சிவாஜி ரசிகர். என்னை நடிகனாக்க விரட்டிக்கொண்டே இருந்தார். மாதச் சம்பளத்தில் ஒரு நிம்மதியான வேலை தான் என்னுடைய பெருவிருப்பமாக இருந்தது.”


”தேவர் மகனில் முக்கியமான பஞ்சாயத்து காட்சி. சிவாஜியை நான் திட்டவேண்டும். இரண்டு டேக். மூன்று டேக் என போய்க்கொண்டு இருக்கிறது. பதட்டமாகிறேன். சிவாஜி எழுந்து வந்து “எத்தனை பேருக்கு அப்பனை திட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். உனக்கு கிடைச்சிருக்கு. நல்லாத் திட்டு!” என தோளில் தட்டிக்கொடுத்து என்னை இலகுவாக்கினார். மூத்த நடிகர்கள் இளைய நடிகர்களுக்கு நடிப்பு சொல்லித்தருவதை விட, முக்கியமானது இப்படி இலகுவாக்குவது!”

”நான் இதுவரை நடித்த 600 சிறிய, பெரிய படங்கள் என அனைத்திற்குமே ஒரு விதமான தரமான நடிப்பைத்தான் தருகிறேன். குருதிப்புனல் போன்ற சில படங்கள் சிறப்பாக நடிப்பதற்கு காரணம் முதலிலேயே கதை, திரைக்கதை, வசனத்தை கையில் தந்துவிடுவார்கள். அதைப் பற்றி நிறைய விவாதிப்பார்கள். ஆகையால், கதையைப் புரிந்துகொண்டு, கதாப்பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு நடிப்பதால் இன்னும் மெருகேறுகிறது. ஒரு சில படங்களில் அப்பொழுது தான் காரில் இறங்கி உள்ளே போயிருப்பேன். ஒரு முக்கிய காட்சியில் நடிக்கவேண்டும் என அப்பொழுது தான் விளக்குவார்கள். அதையும் மறுப்பதில்லை. நடிக்கத்தான் செய்கிறேன். அதற்குரிய விளைவு தான் இருக்கும்.”

“பாகுபலிக்காக அரங்கில் எப்பொழுதும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் வேலை செய்துகொண்டிருப்பார்கள். இயக்குநர் இராஜமெளலியின் குடும்ப பெண்கள் மூவரின் திட்டமிடல், செயலாக்கம் எல்லாமே மிகவும் மெச்சத்தக்கது!”

"துவக்க காலத்தில் இயக்குநர் பாலச்சந்தரின் ஒரு படம். ஒருநாள் அரைமணி நேரம் தாமதமாக சென்றேன். "அரை மணி நேரம் தாமதம் என்பது உன்னுடைய அரைமணி நேரம் மட்டுமல்ல! இங்கு வேலை செய்யக்கூடிய அத்தனை பேரின் அரைமணி நேரம் என கடிந்துகொண்டார். அவர் சொன்னது சரியென உணர்ந்தேன். அதற்கு பிறகு வாழ்நாளில் எந்த நாளும் தாமதமாக சென்றதில்லை."

“என் வளர்ச்சியில் என் துணைவியாரின் பங்கு மிக அதிகம். சொந்தப் படம் எடுத்து நட்டமாகி, எல்லாவற்றையும் இழந்து… இன்னும் செலுத்தவேண்டிய கடன் இருக்கும் பொழுது எனக்கு “ரெட் கார்டு” என்றார்கள். ”நீங்கள் ரெட்கார்டு போட்டுவிட்டால்.. என் கணவர் வேறு வேலை பார்க்க போய்விடுவார். நானும் டியூசன் எடுத்து சமாளிப்பேன். ஆனால், கடனை செலுத்த வாய்ப்பே இருக்காது. ஆகையால், அவர் நடிக்க அனுமதியுங்கள். கடனை செலுத்திவிடுகிறோம்” என்ற வாதத்தை ஏற்று ரெட்கார்டு போடவில்லை.”

”என் தொழில் சார்ந்த அத்தனை தொடர்புகளிடமும் தொடர்ச்சியாக பேசி, உறவை பேணுவது என்னுடைய துணைவியார் தான். நான் அதில் தொடர்ச்சி கொடுப்பதில்லை. என் தொழில் ரீதியான கால்ஷீட் உட்பட அத்தனையையும் பார்ப்பது அவர் தான்!”

“இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியில்… பக்கத்து நாட்டு அரசன் போர் தொடுத்து வாயிலில் காத்திருக்கும் பொழுது… வடிவேல் அந்த வாயிலின் கேட்டில் உள்ளதை சுற்றுவது எல்லாம் சார்லி சாப்ளினை நினைவுப்படுத்தினார். அதை உடனே தெரியப்படுத்தி பாராட்டினேன். நேரில் வந்துவிட்டார். வடிவேலுவைப் பற்றி கமலும் பக்கம் பக்கமாக பேசுவார். வடிவேலிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், அவர் எல்லா கதாப்பாத்திரங்களையும் தன்னளவில் ரசித்து செய்கிறார். நடிப்பில் அது மிகவும் முக்கியமானது.”

“சந்திரமுகியில் கதைப்படி பிரபு தன் நண்பன் ரஜினியை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லவேண்டும். அங்கு வந்து, பிரபு “சூப்பர் ஸ்டாரை எல்லாம் நான் அப்படி சொல்லமுடியாது” என மறுத்துவிட்டார். கையை பிசைந்துகொண்டிருந்த இயக்குநர் வாசுவிடம், நான் செய்கிறேன் என முன்வந்தேன்.”

"எந்த நடிகரின் நடிப்பைப் பார்த்து வியந்து இருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். ஒருவரின் நடிப்பு நன்றாக இருப்பது என்பது அது ஒரு திரைப்படமாக பார்க்கும்பொழுது தான் தெரியும். ஒருவர் கோபமாக முறைக்கும் பொழுது அடுத்த காட்சியாக‌ காண்பிக்கப்படும் நடிகரின் முகபாவம்தான் அதை முடிவு செய்கிறது! நாம் நன்றாக செய்திருக்கிறோம் என நினைப்போம். ஆனால் திரையில் சாதாரணமாக கடந்து செல்லும்! சில காட்சிகள் சாதாரணம் என நினைப்போம். மிகச்சிறந்த காட்சியாக திரையில் விரியும்!"

- டூரிங் டாக்கீஸ் பேட்டியிலிருந்து….

Man on fire (2004)நாயகன் முன்னாள் இராணுவத்தைச் சார்ந்தவன். முக்கிய பொறுப்பில் இருந்தவன். கடந்த கால வாழ்க்கை நினைவுகள் அவனை இறுக்கமானவனாய் மாற்றி வைத்திருக்கின்றன.

மெக்சிகோவில் குழந்தைகள் கடத்தல் உச்சத்தில் இருக்கிறது. அங்கு ஒரு பணக்காரனின் 9வயது பெண் குழந்தையை பாதுகாக்க நாயகனின் நண்பர் போகச் சொல்கிறார். முதலில் மறுக்கிறான். பிறகு ஏற்கிறான்.
மெக்சிகோ போகிறான். பணக்காரன், அவனின் மனைவி, அந்த சுட்டிக்குழந்தை வரவேற்கிறார்கள். பள்ளி, பியானோ வகுப்பு, நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் செல்வது நாயகனின் பணி. அந்த குட்டிப்பெண் அவனிடம் இயல்பாக பேச, பழக முயல்கிறாள். அவனோ ”நான் பாடிகார்ட் வேலையை தான் பார்க்க வந்திருக்கிறேன். நட்பாக பழகுவதற்கு இல்லை” என்கிறான். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அந்த குழந்தையின் அன்பால் அவனிடம் மாற்றம் ஏற்படுகிறது. நீச்சல் பயிற்சியில் அவளிடம் உள்ள குறையை பயிற்சி கொடுத்து சரி செய்கிறான். அவள் முதலிடத்தில் வருகிறாள்.
இதற்கிடையில் அந்த குழந்தையையும் கடத்த வருகிறார்கள். உள்ளூர் போலீசு இருவர் கடத்தலுக்கு உதவுகிறார்கள். அங்கு நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் நாயகன் போலீசு இருவரையும், கடத்தல்காரர்கள் இருவரையும் கொன்றுவிடுகிறான். இவனும் கடுமையாக சுடப்படுகிறான்.
இவன் மருத்துவமனையில் இருக்க… குழந்தை வேண்டுமென்றால், 10 மில்லியன் டாலர் பணம் கேட்கிறார்கள். அதை கொடுக்கும் பொழுது அங்கு கலாட்டாவாகிவிடுகிறது. பிறகு குழந்தையையும் கொன்றுவிடுகிறார்கள்.
மருத்துவமனையில் கொஞ்சம் உடல் தேறியதும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை விடக்கூடாது என கிளம்புகிறான்.
பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் காட்சிகளுடன், சில எதிர்பாராத திருப்பங்களுடனும் முக்கால்வாசி கதையில் சொல்கிறார்கள்.
******
1980 ல் வந்த நாவலை ஒட்டி எடுத்திருக்கிறார்கள்.. டென்சில் வாசிங்டன் பட வரிசையில் இன்னொரு ஆக்சன் படம். உணர்வுபூர்வமாகவும் இருந்தது. நாயகனும், அந்த குழந்தையும், அவளின் அம்மாவும்
அருமையாக
செய்திருக்கிறார்கள்.
உள்ளூர் போலீசு, சிறப்பு உயரதிகாரி கடத்தல்காரர்களுக்கு உதவியில்லாமல் இத்தனை குழந்தைகளை கடத்த வாய்ப்பில்லை. எல்லோரும் கூட்டுக்கொள்ளை. நாயகன் ஒவ்வொரு நபராக பிடித்து பிடித்து விசாரிக்கும் பொழுது, பேச்சின் இடையில் “We are professional” என்பார்கள். கேட்கும் பொழுது நமக்கே எரியும். நாயகன் செம காண்டாவான்.
இந்தப் படத்தை இந்தியில் அமிதாப் நடித்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் அர்ஜூன் நடித்து ”ஆணை” என எடுத்திருக்கிறார்கள். யூடியூப்பில் தேடிப்பார்த்தால், ”ஆணை” படத்தை 'Order" என தலைப்பில் ஆங்கிலத்தில் டப் செய்திருக்கிறார்கள். ஆங்கில சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. உலகம் உருண்டை என்பதை நிரூபிக்கிறார்கள். Man of Fire பார்ப்பதா? Order பார்ப்பதா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். 🙂
பாருங்கள்.