> குருத்து: October 2011

October 21, 2011

தொழிலாளர்களின் உரிமை - போனஸ்?

முன்குறிப்பு : தீபாவளி நெருங்குகிறது. பல நிறுவனங்களில் முதலாளிகள் அழுதழுது போனஸ் கொடுத்து கொண்டிருப்பார்கள் அல்லது நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என பொய்யை சொல்லி, இல்லை என்பார்கள் அல்லது சதவிகிதத்தை குறைப்பார்கள்.

இந்த பதிவு கடந்த வருடம் எழுதப்பட்டது. இந்த வருடமும் தேவைப்படுவதால், மீள்பதிவு செய்கிறேன்.

*****

எந்த தொலைக்காட்சி சானலை பார்த்தாலும், பண்டிகை கால விளம்பரங்கள் கொல்கின்றன. தீபாவளி வரைக்கும் தொலைக்காட்சி பார்க்காமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.

பண்டிகைகள் வந்தால்... பணம் உள்ளவர்களுக்கு குஷி. இல்லாதவர்களுக்கு சுமை. அதுவும் தீபாவளி என்றால்... மிகப்பெரிய சுமை தான். தீபாவளி செலவுகளை தாக்குப்பிடிக்க உதவுவது..போனஸ் என்பது மிகப்பெரிய ஆறுதல். இன்றைக்கு எல்லா அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் போனஸ் பற்றிய பேச்சு தான் பரவலாக இருக்கும்.

பல தொழிலாளர்கள் போனஸ் என்றால் ....முதலாளி இரக்கப்பட்டு பண்டிகை கொண்டாட போனஸ் தருகிறார்கள் என தவறாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி பல தவறான அபிப்ராயங்கள் பலரிடம் உலாவுகின்றன. உண்மை பலருக்கும் தெரிவதில்லை. அதனால் சில தகவல்களை பகிர்வதற்காக இந்த பதிவு. நம் வசதிக்காக... கேள்வி பதில் வடிவத்தில்.

தொழிலாளர்களின் உரிமை : போனஸ்?

ஆம். முதலாளிகள் இரக்கப்பட்டு, பெருந்தன்மையாக தருவதல்ல இந்த போனஸ். சம்பளம் போல நம் உழைப்புக்கு தருவது தான் இந்த போனஸ். போனஸ் சம்பந்தமாக ஒரு வழக்கு 6 மாதத்திற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பில்...போனஸ் தொழிலாளர்களின் உரிமை என தீர்ப்பு வழங்கியது.


தொழிற்சாலை நட்டத்தில் இயங்கினால்... நிறுவனம் போனஸ் தர தேவையில்லையா?

நிதி மூலதன சூதாடிகள் பங்கு சந்தையில் ஏகமாக விளையாடி, கொள்ளையடித்ததின் விளைவாக வரலாற்றில் இதுவரை சந்தித்திராத மிகபெரிய நெருக்கடியை முதலாளித்துவ உலகம் சந்தித்து.. இன்னும் மீள முடியாமல் திணறிக்கொண்டிக்கிறது. இந்த நெருக்கடியை தொழிலாளர்கள் தலையில் தான் இறக்கியது முதலாளித்துவம். வேலையில்லை என துரத்தினார்கள். வருடக்கணக்கில் போராடி பெற்ற உரிமைகளை எளிதாக வெட்டினார்கள். இதன் தொடர்ச்சியில் போனஸ் கூட இல்லையென்பார்கள்.

ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கினாலும் போனஸ் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது. (லாபத்தில் நிறுவனம் கொழித்தால்... தொழிலாளர்களுக்கு அள்ளியா தரப்போகிறார்கள் முதலாளிகள்?)

ஆதாரம் : இந்த ஆண்டு பி.எஸ்.என்.எல். - அரசு தொலை தொடர்பு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால்(!) ஊழியர்களுக்கு போனஸ் தர மறுத்துவிட்டது. இப்பொழுது, உச்சநீதி மன்ற வழிகாட்டலை நிறைவேற்ற சொல்லி, போராடி கொண்டிருக்கிறார்கள் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள்.

ஒரு தொழிலாளி ஒரு வருடம் வேலை செய்தால் தான் போனஸ் பெற தகுதியானவரா?

தொழிலாளர்கள் வருடக்கணக்கில் போராடி சில உரிமைகளை பெற்றால்.. அந்த அரசு விதியை கூட பெரும்பாலான முதலாளிகள் கடைப்பிடிப்பதேயில்லை. சட்டம் ஒன்று சொன்னால்..அவர்களாகவே அவரவர் நிறுவனத்திற்கென்று ஒரு விதியை உருவாக்கி வைத்துக்கொள்வார்கள்.

ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளி 30 நாட்களுக்கு மேலே வேலை செய்தாலே அவர் போனஸ் பெற தகுதியானவர்.

ஒப்பந்த தொழிலாளி - போனஸ் பெற தகுதியானவரா?

சட்டப்படி நிரந்தர தொழிலாளியும், ஒப்பந்த தொழிலாளியும் சமமானவர் தான். இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி சட்டங்கள் இதை தான் நிரூபிக்கின்றன. ஆனால், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக... ஒப்பந்த தொழிலாளி என்கிற முறையை உருவாக்கி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை அநியாயம்.

ஒப்பந்த தொழிலாளியும் நிரந்தர தொழிலாளியைப் போலவே மேலே சொன்னது போல தகுதியானவர் தான்.

என்னளவில் தோன்றிய சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளேன். வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பதில் சொல்ல விழைகிறேன்.

October 12, 2011

பொறுக்கித் தின்ன போட்டி போடும் மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம்
அதிகாரத்தை பரவலாக்குவதல்ல!
ஊழலை பரவலாக்குவதே!

விவசாயிக்கு நிலம், விளைபொருளுக்கு
விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம்,
இவையே கிராம மக்களுக்கான
உண்மையான அதிகாரங்கள்!
உள்ளாட்சி வழங்கு அதிகாரம் பிழைப்புவாதிகள்
பொறுக்கித் தின்பதற்கான அதிகாரமே!

விதை, உரம், பூச்சி கொல்லி மருந்துகள்,
உணவு தானியம், காய்கறிகள் விலை நிர்ணயம் செய்வது
டாடா, அம்பானி, பன்னாட்டுக் கம்பெனிகள்!
நெசவு, தீப்பெட்டி, கைவினைத் தொழில்களின்
கழுத்தை நெறிப்பதும் பன்னாட்டு கம்பெனிகள்!
உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாத
உதவாக்கரை உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

விவசாயிகள், விசைத்தறி-கைவினைத் தொழிலாளர்களை
நாடோடிகளாக்கி தற்கொலைக்குத் தள்ளும்
தனியார்மய, தாராளமயக் கொள்கைகளிலிருந்து
மக்களைத் திசைத்திருப்பவும்,
போராட்டத்தை மழுங்கடிக்கவுமே
மகளிர் சுய உதவிக் குழுக்கள்! உள்ளாட்சித் தேர்தல்கள்!

கக்கூசுக்கு கட்டணக் கழிப்பிடம்,
குப்பை வார பிரெஞ்சு கம்பெனி,
ஆரம்ப சுகாதாரத்திற்கு அமெரிக்க மிஷனரி,
பாலம் போட மலேசிய கம்பெனி!
ம... புடுங்கவா மாநகராட்சி!
பொறுக்கித் தின்ன போட்டி போடும்
மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

கூட்டணி போட்ட யோக்கியனெல்லாம்
தனித்தனியா வர்றான்.... எதுக்கும்
சொம்ப எடுத்து உள்ளே வை!

சாதிக்காரன் சொந்தக்காரன்னு ஓட்டுப் போடாதே!
சொந்தச் செலவுல உனக்கு நீயே சூனியம் வைக்காதே!
ஊராட்சி, நகராட்சி - யாராட்சி வந்தாலும்
நாறித்தான் கிடக்குது நம்ம பொழப்பு!

உடம்பு அரிப்பெடுத்தா, "இட்ச்காடு" போடு!!\
உள்ளங்கை அரிப்பெடுத்தா
உள்ளாட்சிக்குப் போட்டி போடு!
அதிகாரத்தை அல்ல, ஊழலை பரவலாக்குவதே
உள்ளாட்சித் தேர்தல்!

விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய
வெளி(நாட்டு கம்பெனி) ஆட்சி!
கக்கூஸ், சைக்கிள் ஸ்டாண்டு, சுடுகாட்டில்
நிர்வாகம் பண்ண உள்ளாட்சி!

தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும்
உரிமை கொண்ட; சட்டம் இயற்றவும்
நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட
மக்கள் சர்வாதிகார மன்றங்களை நிறுவப் போராடுவோம்!
பொறுக்கித் தின்ன போட்டி போடும்
மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

இவண் :

மக்கள் கலை இலக்கிய கழகம் - 95518 69588
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - 94448 34519
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி - 94451 12675
பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு :

அ.முகுந்தன்,
110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24.

October 10, 2011

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ!


திருச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக, திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஜெயலலிதா பேசிய 200 வார்த்தைகளில்,

'நான்' 8 முறையும்,
'நானும்' 2 முறையும்
'எனது' 2 முறையும்
'என்னுடைய' 2 முறையும்

தப்பித்தவறி வாய் குழறி ஒரே ஒருமுறை 'நாங்கள்' என்றும் பேசியுள்ளார்.

கூட்டுச்சிந்தனை, கூட்டுத்துவ செயல்பாடு எல்லாம் 'நமது' முதமைச்சருக்கு சுட்டு போட்டாலும், வராது என்பதற்கு இந்த வார்த்தைகள் நல்ல உதாரணம்.

'நான்' என்ற அகந்தை எவ்வளவு தவறானது என மதக்கதைகளிலேயே நிறைய உண்டு. உறவினர்களான இராமகோபாலன், சோ ராமசாமியோ சொன்னால் நல்லது!

நாம் கதைகளை தொகுத்து அனுப்பி வைக்கலாம். என்ன ஒரு பிரச்சனை என்றால், 'நான்'/'என்னை' கொல்ல கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கதை கட்டிவிடுவார் ஜெ. அதுதான் யோசனையாக இருக்கிறது! :)