> குருத்து: May 2023

May 21, 2023

பின்தொடரும் நினைவுகள்


அழுது அஞ்சலி செலுத்தி

மாதங்கள் கடந்த பின்பும்
நண்பர்கள் குழு வாட்சப்பில்
'அவரும்' இருக்கிறார்.
பதிவைப் படித்தவர்களில்
'அவரும்' இருக்கிறார்.

பேஸ்புக்கில் என்றோ எழுதிய பதிவுக்கு
யாரோ எழுதிய பின்னூட்டத்தால்..
திடீரென மேலெழும்பி
கண்ணில்படுகிறார்.

இறப்பதற்கு முன்பை விட
இப்பொழுது அடிக்கடி
கனவில் வந்துபோகிறார்.

பதட்டமாய்
'அவருடைய' எண்ணை
என் செல்போனில் இருந்து அழிக்கிறேன்.
திடீரென ஒருநாள் அழைத்துவிடுவாரோ என
பயமாக இருக்கிறது.

May 19, 2023

ராஜா என்கிற பிச்சைக்காரன்


என் சொந்த ஊரின் உறவுகளில் ஒன்றுவிட்ட மாமா ஒருவர் இருந்தார். அவர் செய்த தொழிலில் செல்வ செழிப்புடன் இருந்த பொழுது முதல் பையன் பிறந்தான். அவன் ராஜாவாக வாழவேண்டும் என ஆசைப்பட்டு ”ராஜா” என பெயர் சூட்டினார். அதற்கு பிறகு மூன்று பெண்பிள்ளைகள்.


செல்வ செழிப்பு நல்ல விசயங்களையும் கொண்டுவரும். கோளாறுகளையும் கொண்டுவரும். மாமா இன்னொரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டார். அவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள். சண்டைகள் இருந்தாலும், அவரது சொந்தங்கள் அந்த குடும்பத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். சொந்தங்களின் விசேசங்களில் அவரையும், குழந்தைகளையும் பார்க்கமுடியும்.

செய்த தொழில் நொடித்து போகும் பொழுது குடியையும் சேர்த்துக்கொண்டார். எப்பொழுதும் மிதக்க ஆரம்பித்தார். ஏதோ ஒரு விசேசத்திற்காக காவிரி ஆறு மிக மிக குறுகலாய்... ஆனால் நல்ல வேகத்துடன் ஓடும் கொடுமுடி ஊரில் தண்ணியைப் போட்டு மப்பில் நின்ற பொழுது, ஆற்றில் ஒரு தக்கையைப் போல இழுத்து செல்லப்பட்டார். தொடர்ந்து சில நாட்கள் தேடியும் மாமாவின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. காவிரியுடன் கலந்துவிட்டார்.

பிறகு திடீர் திடீரென "உங்க அப்பாவை ஈரோட்டில் பார்த்தேன். சேலத்தில் பார்த்தேன்" என யாராவது சொன்னால்... அவரது மகன் ராஜா இரண்டு நாட்கள் அங்கு போய் தேடிவிட்டு வருவான். பிறகு அவரைப் பற்றிய புரளிகளும் அடங்கிவிட்டன.

இப்பொழுது மாமாவின் வாரிசான ராஜாவிற்கு வருவோம். பள்ளி படிப்பு பெரிதாக இல்லை. இளைஞனான ராஜா பள்ளிகளின் வாசலில் ஐஸ் விற்க ஆரம்பித்தான். ”ஐஸ் ராஜா” என பெயர் பெற்றான்.

சீசனுக்கு சீசன் தொழிலை மாற்றுவான். வெயில் காலங்களில் ஐஸ் விற்பவன், கார்த்திகை, மார்கழியில்.. மீனாட்சியம்மன் கோயில் வாயில்களில் நின்று... ஐயப்ப பக்தர்களிடம் மாலைகள், கவரிங் நகைகள் விற்பான். பழனியின் அடிவாரத்தில் வியாபாரம் செய்வான்.

டல்லான ஆளெல்லாம் இல்லை. நன்றாக உழைக்க கூடிய, நன்றாக பேசக்கூடிய, திறமை கொண்டவன் தான். உதிரி தொழில் செய்பவர்களிடம் நன்றாக காசு புழங்கும். ஆனால் அவர்ளின் தொழிலின் தன்மையைப் போல ஏற்ற இறக்கங்களுடன் இருப்பார்கள்.

ராஜா அப்படித்தான். காசு இருந்தால் தண்ணி தான். நல்ல சாப்பாடு தான். இல்லையென்றால் அமைதியோ அமைதி.

அத்தனைத் தங்கைகள் இருந்த பொழுதும், அவன் ஒழுங்காய் இருந்தால் போதும். என பெண் பார்த்து மணம் முடித்தார்கள். ஒரு பெண் குழந்தை பிறந்தது. குடும்பம் கோருகிற ஒழுங்குக்கு கட்டுப்பட மறுத்தான். சில ஆண்டுகளிலேயே உறவு முறிந்தது.

இன்னும் மோசமானான். குடி. குடி. பார்க்கும் சொந்தங்களிடம் தயங்காமல் பணம் கேட்பான். வேலைக்கு போவது குறைந்தது.

சென்னைக்கு நான் இடம் பெயர்ந்ததும்… அவனைப் பற்றிய செய்திகள் எப்பொழுதாவது யாராவது சொல்வார்கள். அப்படி இந்த முறையும் செய்தி ஒன்றைச் சொன்னார்கள். இந்தச் சித்திரைத் திருவிழாவில் திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பதை சொந்தங்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள்.

அவனை அந்த நிலையில் பார்த்த உறவுக்கார பெண் "உழைக்காமல்... குடும்பத்தை கேவலப்படுத்துற மாதிரி சொந்த ஊரிலேயே இப்படி பிச்சை எடுக்குகிறேயே!" எனத் திட்டியதும் ஒரு புன்சிரிப்புடன் கடந்து சென்றுவிட்டானாம்.

உறவுகளில் பல மனிதர்கள் பொருளாதாரத்தின் பல படிக்கட்டுகளில் வாழ்ந்தாலும்.. நகரம் எங்கிலும் நிறைய மனிதர்கள் கையேந்துவதை பார்த்துக் கொண்டிருந்தாலும். முதன்முறையாக 40+ல் நம்மோடு வாழ்ந்த சக வயது மனிதன் ஒருவன் பிச்சை எடுக்கிறான் என கேள்விப்பட்டதும் பெரும் துக்கத்தை தருகிறது.

ஒரு மனிதனின் வீழ்ச்சி பல சிந்தனைகளை கிளர்ந்தெழ செய்கிறது.

May 18, 2023

I can speak (2017) தென்கொரிய படம்


நியாயம் கேட்கிறாள் அந்த முதிய தாய்!

 தென்கொரியாவின் நகர்ப்புற பகுதியில் ஒரு தையற்காரராக தனித்து வாழ்கிறார். தான் வாழும் பகுதியில் பொது ஒழுங்கை குடியிருப்புவாசிகளோ, சிறு வியாபாரிகள் என யார் மீறினாலும் உரிமையுடன் கண்டிக்கிறார். குறைகளை சரிசெய்ய அரசுக்கு ஆதாரத்துடன் புகார் மனுக்கள் கொடுக்கிறார். சரி செய்யவில்லை என்றால் அதிகாரிகளின் சட்டையைப் பிடித்து கேட்கிறார். இருபது ஆண்டுகளில் எட்டாயிரம் மனுக்கள். அவரின் தலையைப் பார்த்தாலே மாவட்ட நிர்வாக ஊழியர்கள் அலறுகிறார்கள்.பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகள், அதில் லஞ்சம் என அதிகார வர்க்கம் கல்லா கட்டப் பார்க்கிறது. அவர் தொடர்ந்து தரும் புகார்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. வேறு குறுக்கு வழிகளை கையாள்கிறார்கள்.

அந்த அம்மாவிற்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என ஆசை இருக்கிறது. அவரின் தம்பியை சின்ன வயதிலேயே அமெரிக்காவிற்கு தத்து எடுத்துப் போனதால், தம்பிக்கு கொரியன் புரியாது. இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. இந்த சமயத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் இங்கிலீஷ் பேச தெரிந்த ஒரு இளைஞர் வேலைக்கு புதிதாக சேர்கிறார்.


அவரை தனக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுக்க கேட்கிறார். அவரோ மறுக்கிறார். பின்பு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலீஷ் கற்றுக்கொடுக்க முன்வருகிறார்.

இடையில் படம் என்ன நொண்டுகிறதே என நாம் நினைக்கும் பொழுது, இங்கிலீஷ் கற்றுக்கொள்வதின் பின்னணிக்கு வேறு ஒரு உணர்வுப்பூர்வமான காரணம் சொல்லி நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.

Spoiler Alert

வரலாற்றில் மனித குலத்துக்கு பெரும் சேதம் விளைவித்தவை முதல் உலகப்போரும், இரண்டாம் உலகப் போரும்!

ஏகாதிபத்தியங்கள் தங்களது சந்தைக்காகவும், நாடுகளைப் பிடித்து
கொள்ளையடிப்பதற்காகவும் போட்ட சண்டைகள் தான் இரண்டு உலகப்போர்களும்!

இதில் ஏகாதிபத்திய இராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் சொல்லி மாளாதவை.


இதில் ஜப்பான் இராணுவம் செய்த செயல்கள் இன்னும் கொடூரம். தான் ஆக்கிரமித்த சீனா, கொரியா, தைவான், வியட்னாம் என பல நாடுகளில் பள்ளிப் படிக்கிற பெண் பிள்ளைகளை தங்களின் பாலியல் இச்சைக்கு பலியாக்கினார்கள். அதைத் தொடர்ந்தும் செய்தார்கள். Comfort women என வக்கிரமாய் பெயரிட்டு அழைத்தார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட பல பெண் பிள்ளைகள் மன உளைச்சலினால் தற்கொலை செய்தார்கள். மனநலம் பாதித்தார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஏகாதிபத்தியம் தோற்றுப்போனது.

அதற்கு பிறகு பாதிக்கப்பட்ட அவர்கள் எஞ்சியிருந்த தங்கள் வாழ்நாள் முழுவதும் உலக நாடுகளிடம் தங்களுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஜப்பான் நாட்டினர் இன்றைக்கு வரைக்கும் தங்கள் இராணுவம் இப்படி ஒரு செயலை செய்யவில்லை என அடம்பிடிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கவும் மறுக்கிறார்கள்.

ஏகாதிபத்தியங்கள் அப்படித்தான். தனியுடைமையின் வளர்ந்த வடிவம் தானே ஏகாதிபத்தியம்.

ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ நாடுகளும் வரலாற்றில் நீடிக்கும் வரை சுரண்டலையும் ஒழிக்க முடியாது. அவர்களின் அடியாட்படைகளான இராணுவத்தையும், போலீசையும் ஒழிக்க முடியாது.

பெரும்பாலான மக்களுக்கான அரசு மலர்ந்தால் மட்டுமே, இராணுவத்தை, போலீசை கலைத்து அதன் அடிப்படை மக்கள் விரோத தன்மையை ஒழித்து மக்கள் படையாக மாற்ற முடியும்.

அதை நோக்கி மனித குல நலனுக்காக சிந்திப்பவர்கள் சிந்திக்கவேண்டும். செயலாற்றவேண்டும்.

வரலாற்றில் நடந்த அநீதிக்கு நியாயம் கேட்கும் ஒரு தாயாக அருமையாக நடித்திருக்கிறார். இறுதி காட்சியின் பொது விசாரணை பொழுது தனது கோரமான வயிறை காண்பிக்கும் பொழுது, மொத்த அரங்குமே தலை குனியும்.

Kim Hyeon-Seok அருமையாக இயக்கியிருக்கிறார். அருமையான படம். பாருங்கள்.

May 12, 2023

சுற்றுலா எல்லோருக்கும் எப்பொழுது சாத்தியமாகும்?
மே மாதம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களுடன் ஊர்ச்சுற்ற கிளம்பிவிட்டார்கள். கிளம்பவில்லையென்றால், கடுமையான வெயிலே ஓடு ஓடு என விரட்டுகிறது. வார இறுதி நாட்களில் எல்லா சுற்றுலாத் தளங்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது என செய்திகளில் தொடர்ந்து சொல்கிறார்கள்.


ஏன் வாரத்தின் இடையில் இந்த செய்திகள் வருவதில்லை. ஏனென்றால், பிள்ளைகளுக்கு தான் பள்ளி, கல்லூரி விடுமுறை. வேலை செய்கிற அப்பாவிற்கோ, அம்மாவிற்கோ வார இறுதியில் தானே வாய்ப்பு.

ஒரு மனிதன் வருடம் முழுவதும் வேலை செய்துக்கொண்டே இருக்கவேண்டுமா? தொடர்ச்சியாக ஒரே வேலையில் ஈடுபடும் ஒரு மனிதன் உண்மையில் என்ன ஆவான்? சலிப்படைய மாட்டானா? வழக்கமாக வேலையை உற்சாகமாக செய்யும் மனநிலை வருமா? அந்த மனிதன் எப்பொழுது தன் குடும்பத்துடன் நான்கு வெளியிடங்களுக்கு பயணிப்பது? ஒரு மனிதன் மாதாந்திர அடிப்படை தேவைகளுக்கே அல்லல்பட்டுக்கொண்டு இருக்கும் பொழுது எப்படி சுற்றுலாவிற்கென பணம் ஒதுக்கமுடியும்?

எனக்கு தெரிந்த ஒரு தணிக்கையாளர் இருக்கிறார். தன் நிறுவனத்தில் வேலை செய்கிற மூவருக்கு கோடை கால விடுமுறையும் கொடுத்து, சுற்றுலா செலவுகளுக்கு பணமும் கொடுத்து அனுப்புவார். இப்படி எத்தனை நிறுவனங்களில் கொடுக்கிறார்கள்? அல்லது அது பற்றி சிந்திக்கிறார்கள். அந்த தணிக்கையாளர் வருடத்திற்கு இரண்டு முறை தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா என இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளுக்கு தொடர்ந்து பயணித்து வருகிறார். அதனால் அவருக்கு தன் தொழிலாளர்களும் பயணிக்கவேண்டும் என தோன்றியிருக்கிறது. கொடுக்கிறார்.

வரி ஆலோசகர்களுக்கென ஒரு சொசைட்டி ஒன்றில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த ஆண்டு, அந்த சொசைட்டிக்கான ஆண்டு விழாவிற்கு ஒரு சென்னை புறநகரில் உள்ள ரிசார்ட்டில் ஒரு நாள் சந்தித்தோம். கலந்து பேசினோம். விளையாடினோம். கிளம்பும் பொழுது … அடுத்த ஆண்டு நிகழ்வுக்கு ஏற்காடு போகலாம் என சிலர் உற்சாகமாக பேசினார்கள். அப்படி என்றால் பணம் ஒரு பிரச்சனையாகிவிடும். ஆகையால் அதற்கு ஒருவரை பொறுப்பாக போட்டு, மாதம் மாதம் ஒரு நிதியை கொடுத்துவைப்போம். அப்பொழுது தான் அடுத்த வருடம் சிக்கல் இல்லாமல் சென்று வரலாம் என பேசிக்கொண்டார்கள். வரி ஆலோசகர்கள் என்பவர்கள் தனிப்பட்ட முறையில் சுய தொழில் செய்பவர்கள் என்ற கணக்கில்
வருவார்கள். அவர்களுக்கே இது தான் நிலைமை.

ருசியாவில் புரட்சி 1917ல் வெற்றியடைகிறது. அதற்கு பிறகு சோவியத்தின் சாதனைகள் உலகம் அறிந்தவை. மக்களின் மனநிலையும் ஆரோக்கியமும் மிக கவனத்துடன் பராமரிக்கிறார்கள். சோவியத் குறித்த ஒரு கட்டுரையில் இப்படி ஒரு செய்திப் படித்த நினைவுக்கு வருகிறது.

தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு இப்படி ஒரு மெமோ வருகிறது.

“நீங்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல விடுமுறையும், நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது. பிறகு ஏன் தொடர்ந்து வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை. உடனே வந்து விளக்கவேண்டும்”.

அப்படிப்பட்ட சமூகம் தான் மீண்டும் எழவேண்டும். அதற்காக நாம் சிந்திக்க வேண்டும். செயலாற்றவேண்டும்.

கடந்த காலங்களில் நான் பயணித்த சில இடங்களின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். இதில் ஒகெனக்கலும், ஊட்டி ரயிலும் பாக்கியிருக்கின்றன.

புகைப்படங்கள் உபயம்: இணையம்

May 10, 2023

மாணவர்கள் முட்டை சாப்பிடுவதற்கு அழுவார்கள்!


நேற்று உறவினர் வீட்டில், சத்துணவு ஆசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தென் மாவட்டத்தின் ஒரு கிராமப்புற நடுநிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றுகிறார். அநேகமாக இன்னும் ஓராண்டில் ஓய்வு பெற்றுவிடுவேன் என்றார்.


25 ஆண்டு பணி அனுபவத்தைப் பற்றி கேட்கும் பொழுது அவர் சொன்ன சில தகவல்கள் பள்ளிகளின், அரசின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.

உங்கள் பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்? அனைவருக்குமே சத்துணவு உண்டா? அல்லது ஏதேனும் விதிமுறைகளில் சிலருக்கு கிடையாதா?

எங்கள் பள்ளி நடுநிலைப் பள்ளி. பள்ளியில் 90 மாணவர்கள் இருக்கிறார்கள். அனைவருக்குமே சத்துணவு உண்டு.

நான் பள்ளியில் படிக்கிற 90 களில் வெள்ளைச் சோறு, காய்கறிகள் போட்ட சாம்பார் ஊற்றுவார்கள். தனியாக காய்கறி என எதுவும் இருக்காது. இப்பொழுது எப்படி?

இப்பொழுது சாம்பார் சோறு, தக்காளிச் சோறு, கறிவேப்பிலை சோறு, புளிச்சோறு, புலாவு என எங்களுக்கென ஒரு பட்டியல் இருக்கிறது. அதன்படி சமைத்து மாணவர்களுக்கு கொடுப்போம். எல்லா நாளிலுமே வேகவைத்த முட்டையும் தருவோம்.

எல்லா மாணவர்களும் முட்டை சாப்பிட சிரமப்படுவார்களே?

அதை ஏன் கேட்கிறீங்க! முட்டை வேண்டாம் என சிலர் அழுவார்கள். சொல்லி சொல்லி சாப்பிட வைப்போம். சில பிள்ளைகள் மஞ்சள் கருவை மட்டும் சாப்பிடுவார்கள். சில பிள்ளைகள் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிடுவார்கள்.

முட்டை என்பது கையாள்வது சிரமம். அரசிடமிருந்து எப்படி விநியோகிக்கிறார்கள்?

நீங்கள் சொல்வது சரிதான். 90 பேர் என்றால்…100 முட்டைகள் கொடுப்பது தான் சரி. அப்பொழுது தான் சேதாரம் போக சரியாக வரும். ஆனால் 90 கூட சரியாக வராது. நாலைந்து முட்டைகள் குறையும்.

இப்படி எண்ணிக்கையில் குறைவதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

எட்டாவது வரை படிக்கிற பள்ளியல்லவா! சில குழந்தைகள் உடல்நிலை சரியில்லை என வராது. புல் அட்டண்டன்ஸ் (Full attendance) இருக்கவேண்டும் அரசு தொடர்ந்து வலியுறுத்துவதால், எல்லா பிள்ளைகளும் வந்ததாய் எழுதுவார்கள். வராத குழந்தைகளின் முட்டைகளை வைத்து கணக்கை சரி செய்வோம்.

முட்டையில் கமிசன் நிறைய போகிறது என புகார்கள் எழுகின்றன. வழக்கமாக நாம் கடைகளில் வாங்கும் முட்டைகளின் அளவில் இருக்குமா?

நீங்கள் சொல்வது சரிதான். அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி இரண்டு ஆட்சிகளிலுமே ஒரு முட்டை பேரலுக்கு இரண்டு மூன்று முட்டைகள் மட்டுமே நாம் சாதாரணமாக கடைகளில் வாங்கும் முட்டைகளின் அளவில் இருக்கும். பெரும்பாலும் சின்ன முட்டைகளாய் தான் இருக்கும்.

அரிசி ரேசன் கடைகளில் மக்களுக்கு கொடுப்பதை தான் தருவார்களா? மற்ற பருப்பு, மளிகை சாமான்களின் நிலவரம் என்ன?

ரேசன் கடையில் போடும் அரிசியை விட, நல்ல அரிசி தான் பள்ளிக்கு வரும். முட்டை குறைவதைப் போல தான், பருப்பு, மளிகை சாமான்களின் நிலையும். முட்டைகளில் சமாளிப்பதைப் போலவே, இதற்கும் சமாளிப்போம்.

உங்களுக்கு சம்பள நிலவரம் எப்படி? தொகுப்பூதியமா? அரசு ஊழியருக்கான சம்பளமா?

நான் 95ல் வேலைக்கு வந்தேன். என்னுடைய முதல் மாத சம்பளம் ரூ. 300. ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாக கூடி, இப்பொழுது 25வது ஆண்டில், 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். இந்த 20 ஆயிரம் சம்பளத்தை வாங்குவதற்கே, நிறைய போராட்டங்களை எங்களது சங்கத்தின் மூலமாக செய்திருக்கிறோம்.

சமைப்பதற்கு மற்ற வேலைகளுக்கென எவ்வளவு வேலையாட்கள் தருகிறார்கள்?

சமையல் செய்பவர், ஒரு உதவியாளர் என அரசு விதிகளின்படி நியமிக்கவேண்டும். ஆனால், சமையல் செய்யும் ஒருவரை மட்டுமே பல பள்ளிகளில் நியமித்துள்ளார்கள். உதவியாளரை தருவதில்லை. ஆகையால் ஒருவரை வைத்தே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

சமைப்பவர்கள் எப்படி சமைப்பார்கள்? பிள்ளைகளுக்கு பிடிக்குமா?

குழந்தைகளுக்கென சாப்பாடு என்பதால், கவனமாகத் தான் சமைப்போம். சில நேரங்களில் சமைப்பவர் வேகமாக சமைக்கவேண்டும் என காய்கறிகளை நன்றாக கழுவதில் சுணக்கம் காட்டுவார்கள். காய்கறிகளையும், பருப்பையும் தனித்தனியாக வேகவைத்தால் தான், சுவையாக இருக்கும். இரண்டையும் சேர்த்து வேகவைப்பார்கள். ஆகையால் நாம் உடனிருந்து கவனித்து செய்வதால், தவறு ஏதும் நடக்காமல் கவனமாய் இருக்கிறோம்.

பள்ளிகளில் காலை உணவு தரப்போவதாக அறிவிப்பு வந்ததே? இப்பொழுது கொடுக்கிறீர்களா? அதையும் நீங்களே பொறுப்பேற்க வேண்டுமா?

விரைவில் எங்கள் பள்ளியில் கொண்டுவரப்படும் என சொல்லியிருக்கிறார்கள். இல்லை. வேறு ஆட்கள் வந்து சமைப்பார்கள் என சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் மற்ற விசயங்களையும் பயன்படுத்துவார்கள் என சொல்கிறார்கள். குழப்பம் தான். அமுல்படுத்திய பிறகு பேசி சரி செய்துகொள்ளலாம் என நினைத்திருக்கிறோம்.

குழந்தைகளின் ஆரோக்கியமும், கல்வியும் தான் இந்த நாட்டின் எதிர்காலம். ஆகையால், அதில் சமரசமில்லாமல் மிகுந்த கவனம் வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நேர்மையாக நடந்துகொள்ள வைப்பதில், பொதுமக்கள் தான் மிகுந்த பொறுப்புடன் குறைபாடுகளை சுட்டிக்காட்டி நேர் செய்யவேண்டும்.

உங்கள் அனுபவம் எப்படி?

May 8, 2023

கவனச் சிதறல்


உலகம் முழுவதும் கவனச் சிதறலில் மனிதர்கள் சிரமப்படுகிறார்கள். ஆற்றல் குறைபாடு வருகிறது. வீடுகளில் ஆளுக்கு ஒரு செல்போனை வைத்துக்கொண்டு தனித்தனி உலகில் சஞ்சரிக்கிறார்கள். ஆகையால் குடும்ப ஒழுங்கு கெடுகிறது. இதே தான் அலுவலகங்களிலும் நடக்கிறது. அதைப் பற்றி பல கட்டுரைகள் எழுதுகிறார்கள். விவாதிக்கிறார்கள்.


ஒரு கட்டுரையோ, ஒரு வேலையோ செய்து முடித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் மல்லுக்கட்டும் பொழுது தான் நாம் இயல்பாகவே எவ்வளவு கவனச்சிதறலோடு வாழ்கிறோம் என்பதே நமக்கு நன்றாக உரைக்கிறது.

கவனச்சிதறல் பல நிறுவனங்களில் பெரிய பிரச்சனையாய் மாறியிருக்கிறது. ஆகையால், சில நிறுவனங்களில் செல்போன்களை அலுவகத்தில் உள்ளே நுழையும் பொழுதே, அதற்கான ஒரு ஏற்பாட்டை உருவாக்கி, வாங்கி வைத்துவிடுகிறார்கள். அவசரத்துக்கு அலுவலக போனை பயன்படுத்திக்கொள்ள சொல்கிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு சில நிறுவனங்களில் நடைமுறையாக பார்த்திருக்கிறேன். இப்பொழுதும் இருக்கிறதா என தெரியவில்லை.

சமீபத்தில் ஒரு அலுவலகத்தில், வேலை நேரங்களில் பர்சனல் போன் பயன்படுத்தக்கூடாது என விதியை அறிவித்தார்கள். அது வேலை செய்பவர்களின் மத்தியில் பெரிய சலசலப்பை உருவாக்கியது. ஒருவர் அதையே காரணம் காட்டி வேலையை விட்டுப் போனார்.

வேலை செய்யும் நபர்களுக்கும், வேலை நேரத்தில் சொந்த அழைப்புகளை அதிகப்பட்சம் தவிர்க்கவேண்டும் என்ற நிதானம் இல்லை. ஆகையால் வேலை கெடுகிறது. வேலையின் தரம் குறைகிறது என்பது நிதர்சனம்.

வளர்ந்த நாடுகளில் இதை எப்படி கையாள்கிறார்கள் என்றால்... வேலை நேரத்தில் சொந்த அழைப்புகளை முற்றிலும் கவனமாக தவிர்த்துக்கொள்கிறார்கள். வேலையை முடித்து அலுவலகத்தை விட்டு நகர்ந்துவிட்டால், அலுவலக அழைப்புகளை முற்றிலும் கவனமாக தவிர்த்துக்கொள்கிறார்கள். பொதுவாக அலுவலத்தில் இருந்து அழைப்பே வராது என சொல்லலாம்.

கவனச்சிதறல் என்பது ஒரு மிகப்பெரிய சிக்கலாக நம் முன்வந்து நிற்கிறது. அதை எதிர்கொள்ளவேண்டும். இதை தனிப்பட்ட நபர்களும், நிறுவனங்களும் ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்தே ஆகவேண்டும்.

உங்கள் தனிப்பட்ட அனுபவம் எப்படி? அலுவலக நிலை எப்படி?

May 6, 2023

பகுதி பிரச்சனை!


நான் இருக்கும் பகுதி சென்னையின் புறநகர் பகுதி. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பொழுது, வாடகையும் அப்படித்தான் இருந்தது. சாலை வசதி, தண்ணீர் வசதி எல்லாம் அதற்கு ஏற்றப்படித்தான் இருந்தது. சாலைகளில் வண்டிகளில் சென்றால், குதிரையில் போவது போல ஒரு உணர்வு வரும்!


அதற்கு பிறகு எல்லா வசதிகளும் வந்து சேரும் பொழுது, மாநகராட்சி தனக்குள் இழுத்துக்கொண்டது. அதற்கு பிறகு வாடகையெல்லாம் எகிறிப்போய்விட்டது. திரும்பவும் எளிய மக்கள் அடுத்த புறநகர் தாண்டி போகும் அளவுக்கு நெருக்கடி வந்துவிட்டது.

எங்கள் பகுதி Lower Income group வகையைச் சார்ந்தது. ஒரு படுக்கையறை, ஒரு சின்ன சமையலறை. ஒரு ஹால். அவ்வளவு தான். அதற்கு இப்பொழுது ரூ. 7000, ரூ. 8000 என்கிறார்கள்.

தெருக்கள் என சொல்ல முடியாது. சந்து என்று தான் சொல்ல முடியும். வீடுகளை ஏழைகளால் எங்கு வாங்க முடிகிறது? ஆகையால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் பலர் அங்கு வீடு வாங்குவார்கள். சின்ன இடத்தை வாங்கி, இரண்டு மாடி மேலே எடுத்து கட்டுவார்கள். இதில் பலர் வீடு வாடகைக்கு விடுவார்கள். சின்ன சந்தில் எத்தனை வண்டி நிற்க வைக்கமுடியும். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட சில வீட்டுக்காரர்கள் காரசாரமாய் சண்டையிட்டுக்கொள்வார்கள்.

சாலை போடும் பொழுது அடுத்தடுத்து சாலையை உயர்த்திக்கொண்டே செல்வதால், புதிதாய் வீடு கட்டுபவர்கள் ஐந்து படிக்கட்டுகள் வைத்து பாதுகாப்பாக கட்டுவார்கள். ஆனால் அந்த படிக்கட்டுகள் சந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டுவார்கள். இது தவிர சிலர் திண்ணை கட்டிக்கொள்வார்கள். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், ஆம்புலன்சோ, ஆட்டோவோ கூட உள்ளேயே நுழைய முடியாது. இதை எல்லாம் யோசிக்கிறார்களா அல்லது பார்த்துக்கலாம் என யோசிப்பார்களா என தெரியாது.

இன்னும் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி அடைந்தால், கார் வாங்குவார்கள். அதை பகுதிக்குள் ஏதாவது ஒரு பொது இடத்தில் நிறுத்தி பாதுகாப்பார்கள். அதற்குள் சண்டைகள் எழும். இன்னும் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி அடைந்தால், வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு பகுதிக்கு இடம் பெயர்வார்கள்.

இதில் தெருவில் வாழும் நாய்களின் பங்கும் உண்டு. ஒரு தெருவிற்கு எத்தனை நாய்கள் இருக்கலாம். அதற்கெல்லாம் வரம்பு கிடையாது. எங்கள் பகுதியில் ஒரே தெருவில் மன்னிக்கவும் சந்தில் 15 நாய்கள் கூட இருக்கும். புதிதாய் யார் வந்தாலும் குலைத்து ஊரை கூட்டிவிடும். சிலரை கடித்துக்கூட வைத்திருக்கிறது. சின்ன பசங்க நாய் குலைக்கிறது என பயந்து நகர்வார்கள். விடாமல் துரத்தி இன்னும் அலற வைத்து பயங்காட்டும்.

இதில் நாய் மீது கரிசனம் உள்ளவர்களும் உண்டு. நாய்கள் தெருக்களை அசுத்தப்படுகின்றன, மனிதர்களை கடிக்கின்றன என நாய் வெறுப்பாளர்களும் உண்டு. இரண்டு குழுக்களுக்கும் அவ்வப்பொழுது சண்டைகள் எழும். இந்த ஊரில் எல்லா ஜீவராசிகளுக்கும் வாழ இடம் உண்டு நினைப்பவன் நான். நாய்கள் தரும் “தொல்லையை” பொறுத்துக்கொள்வேன். எதிர்த்தவீட்டு அம்மா, நம் பொறுமையை சோதிக்கும்படி நடந்துகொள்வார்கள்.

இன்னும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. சின்ன தெருவில் சில நூறு வீடுகள் கட்டி பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்கிறோம். பெரிய பங்களாவில் ஒரு குடும்பம் வாழும் வீடுகளும் சென்னையில் நிறைய உண்டு தானே! இந்தியாவின் சொத்து மதிப்பில் சமூகத்தில் வாழும் ஒரு சதவிகித பெரும் பணக்காரர்கள் 48% சொத்தை வைத்திருக்கிறார்கள் என செய்தியைப் படிக்கும் பொழுது சமூகம் பயங்கர ஏற்றத்தாழ்வுகளோடு தானே இருக்கமுடியும். அதை மாற்றத்தான் அத்தனைப் பேரும் சிந்திக்கவேண்டும். அதை விட்டு விட்டு சின்ன சின்ன சணடைகள் நமக்குள் போட்டுக்கொண்டால் எப்படி?

உங்கள் பகுதியில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்களா?

May 5, 2023

மே 5 ‍ பிறந்த நாள்!


அப்பா மில் தொழிலாளி. அம்மாவும் நெசவு தொழிலாளி. ஆகையால், சின்ன அக்கா தான் என்னைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அக்கா இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, அக்காவுடன் பள்ளிக்கூடம் சென்றுவிடுவேன். வீட்டின் நிலைமை கருதி ஆசிரியரும் சிறப்பு அனுமதி தந்திருந்தார்.


எனக்கு நான்கு வயது. சன்னலோரம் உட்கார்ந்து வகுப்பையும், போரடித்தால் வெளியேயும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சன்னலோரம் அமர்ந்த காட்சி மட்டும் இன்றைக்கும் நினைவு அடுக்குகளில் ஆச்சர்யமாய் நினைவில் நிற்கிறது.

அப்பொழுது எல்லாம் பிறந்த சான்றிதழ் எல்லாம் கிடையாது. வலது கையை தலைக்கு மேல் கொண்டு போய் இடது காதை தொடவேண்டும். என்னால் தொட முடியவில்லை. இவ்வளவு பொறுப்பாய் தினமும் பள்ளிக்கூடம் வருகிறானே என நினைத்து...அடுத்த கல்வியாண்டில்... நாலரை வயது ஆகும் பொழுதே, ஆறு மாதத்தை அதிகப்படுத்தி ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக்கொண்டனர்.

அதற்கு பிறகு என் நெருங்கிய நண்பர்களில் சிலருக்கும் பிறந்தநாள் மே 5 என பார்க்கும் பொழுது அந்த காலத்தில் எனக்கு செய்தது போலவே நிறைய பேருக்கு செய்திருப்பார்கள் என புரிந்துகொள்ள முடிந்தது.

சான்றிதழில் உள்ள மே 5 யே பேஸ்புக்கில் கொடுத்திருப்பதால்... சில நண்பர்கள் வாழ்த்து சொல்வார்கள். இப்பொழுது அந்த வாழ்த்துகள் வருவதில்லை. ஏதாவது தனிப்பட்ட முறையில் சமூகத்தில் சாதித்தால் தான் வாழ்த்து வரும் போல என நினைத்துக்கொண்டேன்.
🙂

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரமத்தில் இருந்து அழைத்து, வாழ்த்து தெரிவித்து நன்கொடை கேட்டார்கள். அத்தனை வசதி இல்லையே! என சொல்லிவிட்டேன். இன்றைக்கு ஹரே ராமா இஸ்கான் ஆட்கள் பொறுப்பாய் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவித்தார்கள். வங்கியில் இருந்தும் வாழ்த்து செய்தி சொன்னார்கள்.

இன்றைக்கு தோழர் மார்க்ஸ்க்கு பிறந்தநாள். பேஸ்புக், வாட்சப் என சில‌ இடங்களில் மார்க்ஸ் கண்ணில்பட்டார். மக்களுக்கு ஏன் இத்தனை துன்பங்கள், துயரங்கள். இதற்கு விடிவு இல்லையா என இளைஞனாய் வாழ்வில் தேடிய பொழுது, ஒரு கட்டத்தில் மார்க்ஸை சென்றடைந்தேன். அவர் தான் என் மண்டையை குடைந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தந்தார். மீதி வாழ்வின் திசையையும் தீர்மானித்தார்.

மே 5 ஐ வணிகர்கள் எப்படி "வணிகர் தினம்" என தேர்ந்தெடுத்தார்கள் என தெரியவில்லை. தேடிப்பார்க்கவேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் எப்படியாவது கண்ணில்பட்டுவிடும். அவர்கள் எங்கு மாநாடு நடத்துகிறார்கள் என்கிற செய்தியும் கண்ணில்படும்.

இன்று பிறந்த, சான்றிதழிலும் பிறந்தநாளாய் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!