> குருத்து: January 2023

January 24, 2023

மூன்றாம்பிறை - நடிகர் மம்முட்டியின் வாழ்க்கை அனுபவங்கள்


தன் வாழ்வில் எதிர்கொண்ட சில மனிதர்களை, சில சம்பவங்களை சொல்லி, அதன் மூலம் தான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன உணர்ந்தேன், சமூகம் எப்படியிருக்கிறது என்பதை எளிமையாக சொல்லி செல்கிறார் மம்முட்டி.


தன்னை தன் மூத்த மகனாக நினைத்து பேசிய எதைச்சையாய் சந்தித்த ஒரு தாயின் மனநிலையை புரிந்துகொண்டு தன் தாய், தந்தையின் மனநிலையை புரிந்துகொண்டு தன் தவறைத் திருத்திக்கொள்கிறார்.

ஒரு இரவில் வேகமாக சென்று கொண்டிருந்த பொழுது…மம்முட்டியை யாரென தெரியாமலேயே ஒரு முதியவர் பிரசவ வலியில் துடித்துக்கொண்டு இருக்கும் தன் பேத்தியை காப்பாற்ற உதவ கோருகிறார். மம்முட்டி உதவுகிறார். மருத்துவமனைக்குள் உள்ளே நுழையும் பொழுது… கசங்கிய இரண்டு ரூபாயை கையில் கொடுத்துவிட்டு செல்கிறார்.

காட்சியின் இயல்புக்காக உண்மையில் காடுகளில் வாழும் பழங்குடி மக்களை அழைத்து வந்து ஒரு விருந்து உண்ணும் காட்சியை படமாக்குகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் படம் பார்த்ததில்லை. ஸ்டார்ட். கட். என்பதெல்லாம் அவர்களுக்கு புரியவில்லை. வைத்தால் சாப்பிடுகிறார்கள். இல்லையெனில் ”தீர்ந்துவிட்டதா” என கேள்வி கேட்கிறார்கள். மம்முட்டியின் அருகில் அமர்ந்திருந்த பழங்குடி சார்ந்தவர், சாப்பிட்டுக்கொண்டிருந்த மம்முட்டியின் இலையில் அவியல் இல்லையென பார்க்கிறார். கொஞ்சமும் யோசிக்காமல்… தன் இலையில் இருந்ததை அவருக்கு எடுத்து வைக்கிறார். சாதி, மதம், ஏற்றத்தாழ்வு என ஏகப்பட்ட கோளாறுகளுடன் வாழ்ந்துவரும் நம்மிடையே சாத்தியமா? என கேட்கிறார்.

பெரிய நடிகன் என்ற பந்தா இல்லாமல்... தன் எண்ணங்களை, உணர்வுகளை மலையாள மண்ணின் தன்மைக்கேற்றவாறு எளிமையாக பேசுகிறார். எதைச் சொன்னாலும், பொதுவாக குறை சொல்லாமல், அந்த தவறுக்கான பரிசீலனையை தன்னிலிருந்து துவங்கி எழுதியிருப்பது சிறப்பு.

பொதுவாக ஒரு துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை பொதுவெளியில் சொல்வது எப்பொழுதுமே குறைவு தான். அப்படி நல்லமுறையில் ஒரு படைப்பாக கொண்டு வந்துவிட்டால் அந்த புத்தகம் எப்பொழுதுமே சிறந்துவிளங்கும்.

பொதுவாக நடிகர்கள் இப்படி எழுதுவது குறைவு. தமிழில் விகடன் போன்ற பத்திரிக்கைகள் ஆசிரியர் குழுவில் இருப்பவரில் ஒருவர் நடிகர்களிடம் விவாதித்து அதனை செழுமைப்படுத்தி எழுதி வெளியிடுவார்கள். இந்த வடிவத்தில்…உள்ளடக்கத்திலும், எழுதிய வடிவத்திலும், படித்ததில் மிகவும் பிடித்தது நடிகர் பிரகாஷ்ராஜின் ”சொல்லாததும் உண்மை.”

மம்முட்டி 2002 காலக்கட்டத்தில் ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கைக்காக வாரம் வாரம் தொடர்ந்து எழுதியதை “காழ்ச்சப்பாடு” (Perspective) என்ற தலைப்பில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதை தமிழில் கே.வி.ஷைலஜா அவர்கள் மலையாளத்திலிருந்து வந்த புத்தகம் என்கிற உணர்வு வராமல், தமிழிலேயே எழுதப்பட்டது போல மொழிபெயர்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார். ”மூன்றாம்பிறை” என அதற்கு ஒரு நல்ல தலைப்பையும் கொடுத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தாராளமாய் சொல்லலாம்.

புத்தக காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. இரண்டு மாலை வேளையில் படித்து முடித்துவிட்டேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.

ஆசிரியர் : மம்முட்டி
தமிழில் : கே.வி. ஷைலஜா
வெளியீடு : வம்சி புக்ஸ்
பக்கங்கள் : 128
விலை : ரூ. 150

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை



இப்பொழுதுள்ள பெரும்பாலான குழந்தைகள் கழுதைகளை பார்த்திருக்க வாய்ப்பேயில்லை! குதிரையின் இனங்களில் ஒன்றாக கழுதை இருக்கிறது. வெப்ப மண்டல பகுதிகளில் வாழ்கின்றன. சுமை தூக்குவதற்கு பயன்படுவதால்… மனிதர்களின் வாழ்வில் பல ஆண்டு காலம் உடன் பயணித்திருக்கிறது.


என்னுடைய சிறுவயதில் மதுரையின் வைகையில்… துணிகளை துவைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அழுக்குத் துணிகளை, துவைத்த துணிகளை தூக்கிச் செல்ல கழுதைகளை பயன்படுத்துவார்கள்.

கழுதையை ஒரு முக்கிய பாத்திரமாக வைத்து ”பஞ்ச கல்யாணி ” என்ற பெயரில் 1979ல் ஒரு படம் தமிழில் வெளிவந்தது. இப்பொழுதும் யூடியூப்பில் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் சில கடைகளில் கழுதைப் படத்தை வைத்திருப்பார்கள். ”என்னைப் பார் யோகம் வரும்” என எழுதி வைத்திருப்பார்கள். இப்பொழுது கழுதைகள் அருகி வருவதால், கடைகளில் அந்த கழுதைப் படங்களும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

1952ல் இந்தியாவில் இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 13 லட்சம் என்கிறார்கள். இப்பொழுது 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணக்கின்படி 1428 என சுருங்கிவிட்டது. நமது வாழ்வில் துவைக்கும் மிஷின்கள் வந்து, அவரவர் துவைக்க துவங்கிய பிறகு … துவைக்கும் தொழிலும் நசிய துவங்கிவிட்டது. மெல்ல மெல்ல கழுதைகளும் காணாமல் போன துவங்கின. கழுதையைப் பார்த்து பல வருடங்களாயிற்று!

சமீபத்தில் ராஜஸ்தான் போயிருந்த பொழுது… அஜ்மீர் நகரத்தின் நெருக்கடியான தெருக்களில் கழுதைகள் கடந்து சென்றன. புகைப்படம் எடுப்பதற்குள் வேகமாக சென்றுவிட்டன. அங்கு செங்கல் சூளைகளில் செங்கலை எடுத்துச் செல்ல பயன்படுத்துகிறார்கள். ராஜஸ்தானில் மட்டும் 23000 கழுதைகள் இருப்பதாக பிபிசி தளம் தெரிவிக்கிறது.

ஆகையால், கழுதைக்கு அங்கு நல்ல மதிப்பு இருக்கிறது. சமீபத்தில் கழுதை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்கு விட்ட கழுதைகளை காணோம் என புகார் கொடுத்திருக்கிறார்கள். மொத்தம் 70 கழுதைகள். ஒரு கழுதையின் விலை ரூ. 20000. மொத்த மதிப்பு 14 லட்சம்.

போலீசார் புகாரை வழக்கம் போல கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாய் போராட துவங்கி, விசயம் பெரிதாகிவிட்டது. பிரச்சனையை முடிப்பதற்காக… போலீசு தனது வழக்கமான பார்முலாவான எங்கோ ”கிடைத்த” 15 கழுதைகளை கொண்டு வந்து புகார் கொடுத்தவர்கள் முன்னால் நிறுத்தியிருக்கிறார்கள். தொலைத்தவர் வந்து… ”பிங்கு, பபுலு” என அழைத்திருக்கிறார். எந்த கழுதையும் சமிக்ஞையும் கொடுக்காததால்… இது எங்கள் கழுதையில்லை என போய்விட்டார்கள். இரும்பு கோடாரி கதை நினைவுக்கு வருகிறதா? 🙂

”கழுதை கெட்டால் குட்டிச்சுவர்!”

”வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்!”

”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!”

- இப்படி நம் பேச்சு வழக்கில் கழுதைகள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

அழிந்து வரும் கழுதைகளை காப்பாற்ற 2020ல் தமிழக அரசு கவனத்தில் கொண்டு சில முயற்சிகளை செய்யப்போவதாக ஒரு செய்திப் படித்தேன்.

உழைத்து தரும் மனிதர்களையே அரசுகள் கண்டு கொள்வதில்லை! கழுதைகளையா கண்டு கொள்ளப் போகிறார்கள்?

கழுதைகளைப் பற்றி உங்களுக்கு என்ன நினைவுகள் இருக்கின்றன?

January 18, 2023

கனவு வெளிப் பயணம் – கவிஞர் சல்மா


பத்து நாடுகள் பயணித்ததில்.. முதல் அனுபவமாக பாகிஸ்தான் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் கல்வி, நிர்வாகம், சமூகம் என பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க அம்சங்களை மட்டும் பகிர்கிறேன்.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்து பாகிஸ்தான் அழைத்து சென்று அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்வது தான் பயணத்தின் நோக்கம். இங்குள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும், அங்குள்ள நிறுவனமும் இணைந்து எடுத்த முயற்சி இது.

தமிழகத்தில் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்த கவிஞர் சல்மா அந்த 30 பேரில் ஒருவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு சென்ற முதல் குழு இது தான். ஆச்சர்யம். தலைநகர் இசுலாமபாத், லாகூர், பெஷாவர் என மொத்தம் 11 நகரங்களுக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.

சென்ற இடங்களில் எல்லாம் அதிகாரிகள் மட்டுமில்லாமல்… பொது மக்களும் அன்போடு வரவேற்றிருக்கிறார்கள். மாலைகள், மரியாதைகள், அன்பு பரிமாற்றங்கள். பிரிவினையின் பொழுது அவர்களுடைய சொந்தங்கள் சிலர் இந்தியாவில் இருந்தனர். அப்படிப்பட்ட இந்தியாவில் இருந்து வந்தவர்களை தங்கள் சொந்தங்களாக நினைத்து அன்புடனும், மரியாதையுடன் வரவேற்றுள்ளனர்.

பெட்ரோல் பங்கில் முன்னாள் இராணுவ வீரர் (அரசு அனுமதியுடன் துப்பாக்கியுடன்) காவலுக்கு இருக்கிறார். அவருடன் பேச்சுக்கொடுத்ததில்… முன்பு இந்திய சகோதர்ர்களோடு சண்டையிட்டதை வருத்தத்துடன் பகிர்கிறார். எல்லோருக்கு தேநீர் தருகிறார். அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ள மறுக்கிறார். ”இது என்னுடைய பரிசு” என்கிறார்.

அங்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33%. சட்டத்தில் இருந்தாலும், அதை களத்தில் சாத்தியப்படுத்துவதற்கான போராட்டத்தில் பெண்கள் இருக்கிறார்கள். கிடைக்கிற வாய்ப்புகளை பிடித்து மேலேறி வருகிறார்கள். அங்கு பெண்களுக்கு மேஜர் வயது 16. ஆண்களுக்கு 18.

20,000 கிறிஸ்தவர்களும் 20 சர்ச்சுகளும் உள்ள முல்தான் மிகவும் புராதனமான அமைதியான நகரம். இதுவரை மதக்கலவரங்களே நடந்ததேயில்லை என பெருமையுடன் சொல்கிறார் அங்கு இருக்கும் எம்.பி.

சல்மா அவர்களுக்கு உருது தெரியவில்லை. ”உருது தெரியாத முசுலீமா?” என ஆச்சரியப்படுகிறார்கள். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானில் பிறந்தவர். அந்த கிராமத்திற்கு போயிருந்த பொழுது, இந்த ஊரில் பிறந்தவர் இந்திய பிரதமர் என பெருமையுடன் அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். பிரதம புகழ்பெற்ற இந்தி நடிகர் இராஜ்குமார் பாகிஸ்தானில் பிறந்தவர் தான்.

பயணம் முடித்து சொந்த ஊர் சேர்ந்ததும், காத்திருந்து உளவு போலீசார் எல்லா விவரங்களையும் விவரமாக கேட்டுக்கொண்டனர். ”இந்த விசாரணை எல்லோருக்குமா?” என்றதற்கு ”ஆமாம்” என்றிருக்கிறார்கள். ஆனால் உடன் வந்தவர்களை விசாரித்தில் அப்படி யாரையும் இது வரை விசாரிக்கவில்லை என பதில் சொல்லியிருக்கிறார்கள். இது இந்திய நிலைமை.

ஆசிரியர் : கவிஞர் சல்மா (2014)
பக்கங்கள் : 249
விலை : 145
வெளியீடு : விகடன் வெளியீடு

January 16, 2023

சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன்?


நிலவுகிற அரசுக்கு எதிராக கேள்விகள் எழுப்பியதற்காக சாக்ரடீசுக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது.


வாழ்வின் இறுதி நிமிடங்களில் நிற்கிறார். சாக்ரடீசிடம் கலக்கம் இல்லை. ஒரு கோப்பையில் விஷம் தருகிறார்கள்.

சாக்ரடீஸ் கேட்கிறார். ”இதில் சில துளிகளை கடவுளுக்கென்று தெளிக்கலாமா! ”

“கூடாது. (கடவுளை வைத்து இன்னும் நிறைய காரியங்கள் இருக்கின்றன. கடவுள் செத்துப்போய்விடக்கூடாது அல்லவா!) உங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது.” என்கிறார்கள்.

சுற்றி இருந்த சீடர்களும், ஆண்களும் அழுகிறார்கள். “அன்பின் மிகுதியில் அழுவார்கள் என்பதற்காக தான் பெண்களை வெளியே அனுப்பினோம். இப்பொழுது நீங்கள் அழுகிறீர்களே!” என்கிறார் சாக்ரடீஸ். பழரசத்தைப் போல அருந்துகிறார்.

கொல்லப்படும் பொழுது அவருக்கு வயது 71.

****

சாக்ரடீஸின் காலம் கிமு 399 – கி.மு 470. ஏதென்ஸ் அரசமைப்பு எப்படி இருந்நது? அங்கிருந்த சூழ்நிலை என்ன? சாக்ரடீஸ் என்ன கேள்விகளை எழுப்பினார்? அதனால் சமூகத்தில் என்ன விளைவுகள் ஏற்பட்டன என்பதை, ஒரு குட்டிப்பெண், தனது அப்பாவிடம் கேள்விகளை எழுப்புவதின் மூலம் உரையாடல்களை அமைத்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

நிலவுகிற அரசு தவறுகள் செய்யும் பொழுது, அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை சிறையில் தள்ளி சித்திரவதை செய்வதும், அதிகப்பட்சம் சட்டதின் வழியே, சட்டத்திற்கு புறம்பாகவும் கொல்வது அன்றிலிருந்து இன்று வரைக்கும் நடைமுறையாக தான் இருக்கிறது. அதற்காக கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடியுமா? எழுப்பிக்கொண்டே இருப்போம்.

குழந்தைகளுக்காக இந்தப் புத்தகம் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், பெரியவர்கள் படித்தாலே அந்த காலக்கட்ட கட்டமைப்பை புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் சிரமமாக தான் இருக்கிறது.

நல்லப் புத்தகம். குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள்.

ஆசிரியர் : எம்.எம். சசீந்திரன்

தமிழில் : யூமா வாசுகி

பக்கங்கள் : 65

விலை : 50

வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
Readingmarathon2023

January 15, 2023

தாய் நாவல் - விலை ரூ. 150 மட்டுமே!

ரசிய இலக்கியங்கள் உலகப்புகழ் பெற்றவை.  அவற்றில்  ஒன்று மார்க்சிம் கார்க்கி  எழுதிய “தாய்”  நாவலும் சிறப்பான ஒன்று. ரசியாவில் கொந்தளிப்பான காலம் 1905. அந்த காலகட்டத்தில் எழுதி, இன்றைக்கும் உலகத்தின் பல மொழிகளில்  மொழிமாற்றம் செய்யப்பட்டு வாசகர்களால் படிக்கப்படுவதுதான் இதன் சிறப்பு. 

 

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து… மூன்று நாட்களில் படித்து முடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

 

இந்த நாவல்  இரண்டு பாகங்கள் உடையது. நாவலின் 578 பக்கங்களில், முதல் பாகம் 273 பக்கங்கள் கொண்டது. மீதி இரண்டாம் பகுதிக்கானவை.

 

தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து சமுக மாற்றத்தில் செயலாற்றவேண்டும் என்ற அடிப்படையில்… தொழிலாளர்களின் துயர வாழ்க்கை, தொழிலாளர்களை அமைப்பாக்குவது குறித்து முதல் பாகத்திலும், விவசாயிகளின் வாழ்க்கை, விவசாயிகளை அமைப்பாக்குவது குறித்து இரண்டாம் பாகத்திலும் அருமையாக எழுதியிருப்பார் கார்க்கி.

 

தாய் நாவல் தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பு சிறப்பானது.  கலைஞர் கருணாநிதி நாவலின் உள்ளடக்கதில் ஈர்க்கப்பட்டு, அவருடைய கைவண்ணத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.

 

இப்பொழுது இந்த பதிவு குறிப்பாக எதற்கு என்றால்…. பொதுவாக இந்த நாவலை சில பதிப்பகங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். விலை ரூ. 350, ரூ. 400 என விற்கிறார்கள்.  நேற்று புத்தக திருவிழாவில் கடை எண் : 158ல்  தாய் நாவலை கெட்டி அட்டையில் தரமான வடிவத்தில் ரூ. 150க்கு பார்த்ததும் பெரிய ஆச்சர்யம்.  திருமணத்தில் புத்தகங்களை பரிசாக கொடுக்கும் வழக்கம் இருப்பதால், ஐந்து புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.

 

எப்படி உங்களால் இவ்வளவு குறைவாய் கொண்டு வரமுடிகிறது என கேட்டதற்கு… ஸ்டாலில் இருந்த தோழர் இதற்கான விளக்கம் தந்தார்.

 

”நாங்கள் பதிப்பகத்தை தொழில் முறையில் நடத்துகிறவர்கள் இல்லை.  ”சீர் வாசகர் வட்டம்” என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  புத்தகங்களை கூட்டாக படிக்கிறோம். விவாதிக்கிறோம்.  அதன் வழியாக சிறந்த புத்தகங்களை தேர்வு செய்கிறோம்.  சமூக அக்கறை கொண்டவர்களிடம் நன்கொடைகள் பெறுகிறோம்.  தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளில் இருந்தும் 119 நன்கொடையாளர்கள் இதற்காக உதவியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தின் இறுதி பக்கங்களில்  உதவியர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம். 

 

நாங்கள் இதை ஒரு இயக்கமாக கொண்டு செல்கிறோம். ஆகையால் இதன் பதிப்பில், விற்பனையில் ஈடுபடும் எங்கள் தோழர்கள் சம்பளம் என எதையும் பெற்றுக்கொள்வதில்லை. இப்படி குறைவான விலைக்கு கொண்டு வருவதால், சில ஆயிரம் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே விரைவாக விற்பது நடக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் சில ஆயிரம் புத்தகங்கள் பதிப்பதால் புத்தகத்தின் அடக்க விலை நிறைய குறைகிறது. 

 

கடந்த காலங்களில் தந்தை பெரியாரின் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை மலிவு பதிப்பாக கொண்டு வந்தோம்.  இதுவரை 4 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறோம். கடந்த ஆண்டு புதுமைப்பித்தன் சிறுகதைகளை தொகுப்பாக மலிவு பதிப்பாக கொண்டு வந்தோம்.  அதன் தொடர்ச்சியில் இந்த ஆண்டு மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” நாவலை கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.

 

”நல்ல காரியத்தை செய்கிறீர்கள். தொடர்ந்து உற்சாகமாய் செயல்படுங்கள்” என வாழ்த்துகளை தெரிவித்து விடைபெற்றோம்.


புத்தக கண்காட்சிக்கு செல்பவர்கள் கடை எண் 158ல் வாங்குங்கள். போக 

வாய்ப்பில்லாதவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள். 

9566331195, 9600652285, 9865252105.

 

ஆசிரியர் : மாக்சிம் கார்க்கி

தமிழில் : தொ.மு.சி. ரகுநாதன்

பக்கங்கள் : 578

விலை : ரூ. 150

January 14, 2023

Saudi Vellakka (2022) மலையாளம்




"உலகம் இரண்டாக இயங்குகிறது. நீதிமன்றங்களும் கூட விதிவிலக்கில்லை. அரசியல், அதிகாரம், பண பலம் படைத்தவர்கள்தான் நீதிமன்றத்தின் நேரத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள்" - இதையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் வருத்தப்பட்டுச் சொன்னார்.

***
”தாமதமாக கிடைக்கும் நீதி அநீதி!
அநீதி தரும் அமைப்பின் மீது சின்ன கல்லை குறிப்பார்த்து எறிந்திருக்கிறார்கள்”
***

டியூசன் படிக்க வந்த சின்ன பையன்கள் மாடியில் தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அடித்த பந்து கீழே நடந்து சென்ற பக்கத்து வீட்டு வயதான அம்மா தலையில் விழுகிறது. அந்த அம்மா மேலே வந்து அந்த பையனை தென்னை மட்டையில் லேசாக தட்ட… அவனுக்கு ஆடிக்கொண்டிருந்த பல் கீழே விழுகிறது.

அந்த அம்மா, ஆட்டோ ஓட்டும் மகன், மருமகளுடன் வாழ்ந்து வருகிறார். டியூசன் ஆசிரியரின் அப்பாவிற்கும் அந்த அம்மாவின் குடும்பத்திற்கும் அக்கம் பக்கத்து வீடு என்பதால் சின்ன சின்ன சண்டைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த கடுப்பில் பையனின் அப்பாவிடம் அவர் தூண்டிவிட, பையனின் அப்பா போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கிறார். அந்த அம்மாவை கைது செய்கிறார்கள். அவரின் பையன் கொஞ்சம் சிரமப்பட்டு மாஜிஸ்திரேட் முன்னிலையிலேயே ஜாமீனில் வீட்டுக்கு கூட்டிவந்துவிடுகிறார். அப்போதைக்கு அந்த வழக்கு அமுக்கி வைக்கப்பட்ட பூதம் போல அடங்கிவிடுகிறது.

சில வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கு பூதம் வெளியே வருகிறது. அந்த பையன் இளைஞனாகி பெங்களூரில் வேலை செய்து வருகிறான். அவனின் அப்பா எட்டு வருடங்களுக்கு முன்பே இறந்துவிடுகிறார். அந்த பையனுக்கு வேலையில் ஒருநாள் விடுப்பு கிடைப்பதே சிக்கலாக இருக்கிறது. அந்த அம்மாவின் பையனோ வழக்கை எதிர்கொள்ளும் அளவிற்கு வசதியும் இல்லை. தெம்பும் இல்லை. வழக்கு நடத்த வேண்டாம் என சொல்லும் தன் துணைவியாரை சமாதானப்படுத்தவும் முடியவில்லை. மகனின் சிக்கலான நிலையை புரிந்துகொண்டு வந்து தனியாக வாழ்கிறார். பணியாரம் விற்று வாழ்கிறார். மகன் நொந்து போய் கண் காணாத இடத்திற்கு போய்விடுகிறார்.

வழக்கு நடக்கிறது. சாட்சி வரவில்லை. வாய்தா. நீதிபதி வரவில்லை. வாய்தா. ஆவணம் கிடைக்கவில்லை. வாய்தா. வாய்தாவிற்கு மேல் வாய்தாவாகி இழுத்துக்கொண்டே செல்கிறது. இறுதியில் அந்த அம்மா தண்டனை பெற்று சிறைக்கு சென்றாரா இல்லையா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நாட்டில் இப்படி 47 மில்லியன் வழக்குகள் தேங்கியிருக்கின்றன. அதில் ஒரு கதையை சொன்னதாக படத்தில் தெரிவிக்கிறார்கள். உண்மைதான். மிகையில்லை. படத்தில் சர்க்கரையும், ரத்த கொதிப்பும் கொண்ட அந்த வயதான அம்மா போல பல லட்சம் பேர் வாய்தா வாய்தா என தொடர்நது அலைக்கழிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அம்மாவின் நிலை மோசம் என்றால்… சிறையில் மாட்டிக்கொண்டு, ஜாமீன் எடுக்க முடியாமல் அவர்கள் செய்த தவறுக்கு கிடைக்கும் தண்டனையை விட அதிக ஆண்டுகள் சிறையிலேயே பல வருடங்களை தொலைத்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த நாட்டில் அதிகம்.

வழக்குகள் தேங்குவதை, சிறையில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தவிப்பதை எல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதியில் இருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வரை வெளிப்படையாக பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். சமீபத்தில் ”ஜாமீன் பெற முடியாமல் ஒரு நாள் சிறையில் இருந்தாலும் அதிகப்பட்ச தண்டனைதான்” என்கிறார் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி.

ரமணா ஸ்டைலில் சொன்னால்… உச்ச நீதிமன்றத்தின் கீழ் 25 உயர்நீதிமன்றங்கள். 672 மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை நிர்வகிக்கும் 16 ஆயிரம் நீதித்துறை நடுவர்கள் இருக்கிறார்கள். இந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 136 கோடி மக்களுக்கு போதுமானதில்லை என்பது மலை போல் தேங்கியுள்ள வழக்குகளே சொல்கின்றன.

நீதியை தாமதப்படுத்தக் கூடாது என்ற அக்கறையே ஒன்றிய அரசுக்கு இல்லை. நீதிபதிகளை நியமிப்பதில் ஒன்றிய அரசு நிறைய அலட்சியம் காட்டுகிறது. நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்து கொள்ளும் கொலீஜிய முறை ஒன்றிய அரசுக்கு எரிச்சலாக இருக்கிறது. காவி சிந்தனை கொண்டவர்களை அதி வேகமாக நீதித்துறையில் உள்ளே தள்ள இந்த முறையை ஒரு தடையாக உணர்கிறார்கள். இரண்டுமே தவறு. நீதிபதிகளை தேர்ந்தெடுப்பில்…மக்கள் பெருந்திரளாக அங்கம் வகிக்கும் ஒரு ஜனநாயகபூர்வமான நடைமுறை வேண்டும் என்பதே சரி.

இவ்வளவு பரந்து விரிந்த இந்தியாவில் இன்றைக்கும் உச்ச நீதி மன்றம் தில்லியில் மட்டுமே! இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் கிளைகள் திறப்பது பற்றி சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். பல வருட போராட்டங்களுக்கு பிறகுதான் மதுரையில் உயர்நீதி மன்ற கிளையே திறந்தார்கள்.

உலகம் இரண்டாக இயங்குகிறது. நீதிமன்றங்களும் கூட விதிவிலக்கில்லை. அரசியல், அதிகாரம், பண பலம் படைத்தவர்கள்தான் நீதிமன்றத்தின் நேரத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். இதையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் வருத்தப்பட்டுச் சொன்னார்.

எங்கும் நீதி கிடைக்காமல் கடைசிப் புகலிடமாக நீதிமன்றத்தைத்தான் மக்கள் நினைக்கிறார்கள் என நீதிபதிகளே உருக்கமாகச் சொல்கிறார்கள். ஆனால் நீதிமன்றங்கள் தங்களது அலட்சியமான, தாமதமான நடவடிக்கைகளால் அந்த மதிப்பை பல காலமாகவே இழந்துகொண்டே வருகின்றன என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது. அதைத் தான் இந்த படமும் அழுத்தமாக முன்வைக்கிறது.

Spoiler Alert

நீதி பரிபாலனையின் நிலைமை அவல நிலைமையில் இருக்க… படத்தின் வரும் எளிய மனிதர்கள் மனிதர்களுக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறார்கள். இரவு முழுவதும் கைது, ஜாமீன் என அலைந்து விட்டு, காசு வாங்காமல் நகரும் சக ஆட்டோகாரர், நண்பனின் அம்மாவை தன் அம்மாபோல் பதறும் நண்பன், நியாயத்தை உணர்ந்தோ, நடைமுறையில் தன்னால் விடுப்பு எடுக்க முடியாத நிலையிலோ, இந்த வழக்கு தோற்றுபோகவேண்டும் என வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞன் அத்தனை மெனக்கெடுவான். எல்லா சாட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசி, கெஞ்சி பிறழ் சாட்சிகளாக மாற்றுவான்.

சில ஆண்டுகளின் ஜவ்வான இழுத்தடிப்புக்கு பிறகு, வழக்கு பலவீனமடைந்து…அந்த அம்மா விடுதலை ஆகப் போகிற நேரத்தில்… தன் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு “கோபப்பட்டு அடிச்சது உண்மை. அதற்காக எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன். அந்த பையனிடம் நான் மன்னிப்பு கேட்கவேண்டும். அனுமதி கொடுங்கள்”” என்பார். அதே போல…”நீ பத்தாவதில் தேர்ச்சியடைந்த பொழுது உன்னைப் பார்க்க வந்தேன். உன் வீட்டில் விசேசம் நடந்த பொழுது உன்னைப் பார்க்க வந்தேன். அப்பொழுது நீ நீலக்கலர் சட்டை அணிந்திருந்தாய்” என சொல்லும் பொழுது.. அந்த பையன் நெகிழ்ந்துவிடுவான். நாமும்தான்.

படம் நியாயம் கேட்டு குரல் உயர்த்தவில்லை. தாமதமாய் வழங்கும் நீதி அநீதி. அநீதி தரும் அமைப்பின் மீது ஒரு சின்ன கல்லை குறிப்பார்த்து வீசியிருக்கிறார்கள்.

வயதான பாத்திரத்தில் நடித்த தேவி வர்மாவும், இளைஞனாக வரும் லுக்மன்னும் இன்னும் பல நாட்கள் நம் மனதில் நிற்பார்கள். படத்தில் வரும் சின்னச் சின்ன கதைப்பாத்திரங்கள் கூட நினைவில் நிற்கும்படி பங்காற்றியிருக்கிறார்கள். இயக்குநர் தருண் மூர்த்திக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம். ஒளிப்பதிவாளர் ஷரத் வேலாயுதனின் கேமரா கொச்சின் மற்றும் அதன் அருகில் இருக்கும் இடங்களையும், மனிதர்களின் உணர்வுகளையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு. இசையமைப்பாளர் பால் பிரான்சிஸின் பின்னணி இசையும், பாடலும் அருமை.

திரையரங்குகளிலும், திரைப்பட விழாக்களிலும் வெளியிடப்பட்டு… இப்பொழுது Sony Livல் வெளிவந்திருக்கிறது. அவசியம் பார்க்கவேண்டிய படம்.

January 9, 2023

கட்டா குஸ்தி (2022)



கேரள பாலக்காட்டில் கட்டா குஸ்தியில் தேர்ந்த ஆளாக இருக்கிறார் நாயகி. அவளுக்கு திருமண ஏற்பாடு இதனாலேயே தள்ளி தள்ளி போகிறது. பெண் பார்க்க வந்த ஒரு அம்மா சொல்லும்… “உன்னை மட்டும் தூக்கி போட்டு மிதிக்க மாட்டாடா! என்னையும் உதைப்பா!”. இதனாலேயே வருத்தப்பட்டு அப்பா நோய்வாய்படுகிறார்.


பொள்ளாச்சியில் அப்பா சேர்த்து வைத்த சொத்தை காலி செய்துகொண்டு, கட்டப் பஞ்சாயத்து, தண்ணி என வெட்டியாய் சுற்றித்திரிகிறார் நாயகன். தான் கட்டிக்க போகிற பொண்ணுக்கு ஊரிலேயே நீளமான கூந்தல் இருக்கனும். தன்னை விட படிப்பு குறைவாக இருக்கவேண்டும். (நாயகன் எட்டாவது வரை படித்திருக்கிறார்.) என பார்க்கிற பொண்ணுங்களை எல்லாம் நிராகரிக்கிறார்.

”ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம்” என்ற பழமொழிக்கேற்ப, பொய்களைச் சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். பிறகு நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.

*****

ஒரு ஆண் என்றால் விளையாட்டில் எதிர்த்து விளையாடுகிறவர்களோடு மட்டும் மோதினால் போதும். நம்மூரில் பெண்களின் நிலை அப்படியில்லை. வீட்டிலேயே பலரோடு மோதவேண்டியிருக்கும் என்கிற செய்தியை சொன்ன வரைக்கும் படம் ஓக்கே தான்.

மற்றபடி, நன்றாக படித்த, நல்ல வேலையில் இருக்கும் ஆண்களுக்கே பெண் கிடைக்காமல் அலைகிற காலம் இது. இதில் பொய்யை சொல்லி ஒரு தற்குறிக்கெல்லாம், டிகிரி படித்தப் பெண்ணை கட்டி வைப்பது எல்லாம் லாஜிக்கேயில்லை. அதே போல இறுதி காட்சிகளும் அத்தனை பொருத்தமில்லை.

விஷ்ணு விஷால் நிஜத்தில் போதை மருந்தின் பிடியிலிருந்து தப்பித்து, ஒரு புதுத் தெம்புடன் வந்திருக்கிறார். இப்படி நல்ல கதைகளில் தொடர்ந்து நடிக்கட்டும். ஐஸ்வர்யா லட்சுமி நன்றாக நடித்துள்ளார். ஆணாதிக்க மாமாவாக கருணாஸ், சித்தப்பாவாக வரும் முனீஸ்காந்த் என பலரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

நெட் பிளிக்சில் கிடைக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

உதிர்ந்த 2022யும் புதிதாய் முளைத்திருக்கும் 2023யும்!


பலரும் பழைய ஆண்டு குறித்தும், புதிய ஆண்டு குறித்தும் நிறைய எழுதிவிட்டர்கள். வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்கள். வேலை நெருக்கடிகளில்…எட்டு தேதி ஆன பின்பு தான் அசை போட நேரமும், மனநிலையும் வாய்த்திருக்கிறது.

சுய பொருளாதாரம்

ஜி.எஸ்.டி ஆலோசகராக தனியே தொழில் துவங்கி ஆறு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துவிட்டேன். துவக்க மூன்று வருடங்களில் வருமானம் போதாமல்… கொஞ்சம் கடன் வாங்கித்தான் சமாளித்தேன். அதற்கு பிறகு கடனும் இல்லை. சேமிப்பும் இல்லை என்ற நிலை வந்த பொழுது… கொரானா, ஊடரங்கு எல்லாம் வந்தது. அதையும் கடன் வாங்கி ஒருவழியாக கடந்து வந்தோம்.

பட்ஜெட் போட்டு… செலவுகளை எழுதி வைத்து, கவனமாக இருந்ததில்… செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர முடிந்திருக்கிறது. முன்பெல்லாம் எப்பொழுதும் மனதில் பொருளாதார நெருக்கடி ஓடிக்கொண்டே இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக நிலைமை பரவாயில்லை. ஆனால் சேமிப்பு இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது எப்பொழுதும் சிக்கல் தான். மருத்துவ ரீதியான ஏதாவது பிரச்சனை வந்தால் சமாளிப்பது சிரமமாகிவிடும். ஆகையால் இனி அதில் கவனம் கொடுக்கவேண்டும்.

கல்வி

தொழிலிலும் சரி, தொழில் நுட்பத்திலும் சரி மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு தொழில் ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் வழக்கமாக கற்பதற்கு கொடுக்கும் கவனத்தை கூட கூடுதல் கவனம் கொடுக்கவேண்டும் என யோசித்திருக்கிறேன். தேங்கிப் போனால் குளம் குட்டையாகிவிடுவோம். நீரோடை போல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

வாசிப்பு

கடந்த ஆண்டு வாசிப்பு குறித்து ஆறுதல் தான் படமுடியும். விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல் ரீதியான புத்தகங்களை தவிர, பிடித்த புத்தகங்களை எல்லாம் நிகழ்ச்சிப் போக்கில் தான் படித்திருக்கிறேன். இந்த ஆண்டு அந்த தவறை தொடரக்கூடாது. மார்க்சிய ஆசான்களின் புத்தகங்கள், தத்துவம், சமூகம், வரலாறு என ஒரு 25 புத்தகங்களை பட்டியலிட்டு வீட்டு கதவில் ஒட்டிவிட்டேன். ஒவ்வொரு புத்தகமும் 300, 400 பக்கங்கள் கொண்டவையாக இருக்கின்றன. தினமும் படிக்கவேண்டும் என வழக்கத்தை உருவாக்கினால் மட்டுமே இந்த இலக்கை அடையமுடியும். போராடி ஒரு கை பார்த்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
ஆரோக்கியம்

மனதின் வேகத்திற்கு எப்பொழுதும் உடலும் நம்முடன் ஒத்துழைக்கவேண்டும் என்பது மிக அவசியம். ஆகையால் இந்த ஆண்டும், தினமும் யோகாவை தொடர்வது. தினமும் மூன்று கிலோ மீட்டர் நடப்பது. கூடுதலாக பட்ஜெட்டுக்குள் கட்டுப்பட்டால்.. நீச்சல் அடிக்கவேண்டும். நம்ம ஊர் கண்மாயில், கிணற்றில், ஆற்றில் குளித்து நீச்சலை சிறுவயதிலேயே பழகிவிட்டேன். உடல் முழுவதுக்கும் நல்ல உடற்பயிற்சி. விசாரித்து சேரவேண்டும்.

பயணம், பக்கெட் லிஸ்ட் என இன்னும் சில தலைப்புகள் இருக்கின்றன. பிறகு பேசுவோம்.

#நாள்_குறிப்புகள்
#2023

வாசிப்பை நேசிப்போம் விழா! வாசிப்பவர்களை உற்சாகப்படுத்தும் விழா!



முகநூலில் வாசிப்பதை உற்சாகப்படுத்துவதற்கு தமிழில் சில குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் 57 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட ”வாசிப்பை நேசிப்போம்” குழு உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் குழு.


நமது குழுவில் கடந்த வருடம் அந்த குழுவில் மாரத்தான் போட்டி, எழுத்தாளர் கொண்டாட்டம், 30நாள் வாசிப்பு போட்டி என பல போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளில் இணைந்து வெற்றிகரமாக இலக்கை எட்டியவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னையில் தக்கார் பாபா அரங்கில் நடைபெற்றது.

ஆண்டு முழுவதும் குறைந்தப்பட்சம் 30 புத்தகங்களை படித்து, விமர்சனமாக, அறிமுகப்படுத்தும் விதமாக எழுதுவது தான் மாரத்தான் போட்டி. நானும் அந்த ஒரு போட்டியில் மட்டும் இணைந்திருந்தேன். துவக்க மாதங்களில் எல்லாம் மெல்ல வாசிக்க ஆரம்பித்து, நவம்பர், டிசம்பர் இரண்டு மாதங்களிலும் அடித்துப் பிடித்து இலக்கையும் எட்டியிருந்தேன்.

பரிசுகள் வழங்கப்பட்டன. எல்லாரும் சுருக்கமாகவும், தெளிவாகவும் தங்களுடைய சின்ன சின்ன அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். சொற்களின் வலிமை தெரிந்ததினால் இருக்கலாம்.

”நான் வாங்குகிற புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லமுடியாது. அம்மா திட்டுவார். ஆகையால், அலுவலகத்தில் தான் அடுக்கி வைத்திருக்கிறேன்” என்றார் ஒரு இளைஞர்.

”தினமும் இரண்டு பக்கங்கள் வாசிக்க துவங்கினேன். இன்றைக்கு ஒரு நாளைக்கு 80, 90 பக்கங்கள் படிக்கிறேன்” என்றார் ஒரு இன்னொரு இளைஞர்.

“பள்ளியில் பிள்ளைகளில் தேர்வுத் தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தலை சுத்திப் போகிறார்கள். நாம் படிப்பது மட்டும் போதாது! அடுத்த தலைமுறைகளையும் படிக்க வைக்க முயல்வேண்டும்” என்றார் ஒரு ஆசியர்.

”பொது வேலை ஒன்றில் இருப்பதால், வாசிப்பதற்கென்று எனக்கு இலக்கு இருக்கிறது. படிக்கும் மக்களோடு நானும் சேர்ந்துகொள்வதால், நானும் நிறைய படிக்கிறேன். 57 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட குழுவை பராமரிப்பது பெரிய விசயம். குழு நிர்வாகிகள் பெரிய பொறுப்பை விருப்பார்வத்துடன் செயல்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நன்றி” சொன்னேன் நான்.

இப்படி பல பல அனுபவங்களை நெகிழ்வோடும், மகிழ்வோடும் பலரும் பகிர்ந்துகொண்டார்கள்.

குழுவின் நிர்வாகி கதிர் பேசினார். “வாசிக்க நினைத்தேன். குழு துவங்கினேன். எல்லோருடனும் நானும் படித்தேன். பல எழுத்தாளர்களைப் படிக்க நினைத்தேன்.”எழுத்தாளர் கொண்டாட்டம் ” துவங்கினேன். எல்லோரும் படித்தார்கள். நானும் படித்தேன். என்னைப் போலவே குழுவின் மீது அக்கறை கொண்டவர்களும் உடன் பயணிப்பதால், அவர்கள் பல வேலைகளை பிரித்து செய்வதால். என் வேலையின் சுமையை குறைக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் prasancbe tamirabaran, Gomathi sankar. இனி அடுத்து என்ன செய்வது என்பதை என்னை விட ஆர்வமுடன் சொல்பவர்கள் அவர்கள். பெரும்பாலானவர்கள் சொன்னதை செய்கிறார்கள்.

எந்தப் போட்டி நடத்த நினைத்தாலும், இந்த போட்டி வெற்றி பெறுமா என சின்ன சந்தேகம் வரும். ஆனால் கருணாமூர்த்தி (இந்த ஆண்டில் 417 புத்தகங்கள் படித்து எழுதியவர்) போன்றவர்கள் இருக்கும் வரை எந்த கவலையும் இல்லை. அவர் அந்த போட்டியையும் அருமையாக முன்னெடுத்து செல்கிறார். பின்னாலேயே பலரையும் ஆர்வமாக பின்தொடர வைத்துவிடுகிறார். அவர் இருக்கும் வரை எந்த போட்டியையும் தைரியமாய் நடத்தலாம். கவலையில்லை.

சென்னையில் புத்தாண்டை ஒட்டி புத்தக திருவிழா நடத்துகிறார்கள். அதனால் பரிசளிப்பு விழாவையும் இங்கு நடத்துகிறோம். தூரம் அதிகம் என்பதால், தென் பகுதியில் இருந்து... பலரால் வர இயலவில்லை. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடக்கும் பொழுது, நமது குழு உறுப்பினர்களை அங்கு சந்திக்கும் ஏற்பாட்டை செய்யலாம் என யோசித்து வருகிறோம்.

இனி காணொளி வாயிலாக புத்தக விமர்சனம் செய்யலாம் என கொண்டு வரலாம் என பரிசீலிக்கிறோம். வாசிப்புக்கு பிறகு இனி வரலாற்று வழி பயணம் மேற்கொள்ளலாம் என யோசித்து வருகிறேன். முதலில் தமிழ்நாட்டிற்குள் சுற்றுவோம். பிறகு பிற மாநிலங்கள் என நகரலாம். எத்தனைப் பேர் இணைந்து கொள்கிறீர்களோ, இணைந்து கொள்ளுங்கள். நம்ம நிறைய செலவு செய்யப்போவதில்லை. அவரவர் காசு தான். இந்த ஆண்டு இதை நடைமுறைப்படுத்தலாம்” என இன்னும் பல விசயங்களை தொட்டுப் பேசினார்.

மொத்த நிகழ்ச்சியையும் Priyadharshini Gopal உயிர்ப்புடன் ஒருங்கிணைத்தார். எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் சொன்னார். எல்லோரையும் அழைக்கும் பொழுதும், பேசுவதற்கு உற்சாகப்படுத்தும் பொழுதும் அவ்வளவு அன்பும், உற்சாகமும் இருந்தது.

உள்ளே நுழைந்ததும் கமர்கட்டு மிட்டாய், கொஞ்ச நேரத்தில் டைரி மில்க் சாக்லெட், பிஸ்கெட், தேநீர் என எல்லாமும் சுவையாக இருந்தன. நிகழ்வு முடிந்ததும், அரிசி சோறும் , சாம்பார், வத்தல் குழம்பு, ரசம் என ஒரு அருமையான சாப்பாடு. (தக்கார் பாபா அரங்கில் அசைவத்திற்கு அனுமதியில்லை என எழுதிப் போட்டிருந்தார்கள். (பாவிகள் 🙂 )

”சொல்லில் பிடித்தது செயல்” என்பார் தோழர் லெனின். நாம் வாசிப்பது எழுத்துகளைத் தான். ஒரு மனிதனின் சராசரி வாழ்வை யூடர்ன் போட்டு சரியான பாதையில் திருப்பி விடுவதற்கு சில சொற்கள் போதுமானவை. அதை தொடர் வாசிப்பில் நம் வாசகர்கள் கண்டடைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Ini Utharam (Now Answer) (2022) மலையாளம்


நாயகி ஒரு மருத்துவர். கேரளாவின் பாலக்காட்டில் தனியாக போலீஸ் ஸ்டேசன் வந்து, தன்னிடம் ஒருவன் தப்பாக நடந்துகொண்டதாகவும், அவனை கொலை செய்துவிட்டதாகவும், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்துள்ளதாகவும் வந்து புகார் தருகிறார். அதே சமயத்தில் பல ஊடகங்களும் வந்து சேர, பரபரவென தீப்பிடித்த மாதிரி விசயம் சூடு பிடிக்கிறது. மக்கள் மத்தியிலும் பேசு பொருளாகிறது.


நாயகி போலீஸுடன் சென்று, காட்டுப் பகுதியில் ஒரு இடத்தை காட்ட.. தோண்ட ஆரம்பிக்கிறார்கள். அங்கு ஒருவடைய உடல் அல்ல இருவருடைய உடல்கள் கிடைக்கின்றன. அதில் ஒரு ஆள் நாயகியின் காதலன். இந்த கொலையை தான் தனியாக செய்யவில்லை. அவள் புகார் கொடுத்த ஸ்டேசனின் இன்ஸ்பெக்டர் தான் தனக்கு உதவினார் என அடுத்த குண்டை தூக்கி போடுகிறார். அந்த இன்ஸ்பெக்டருக்கு அந்த பகுதியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு உதவுகிற ஆள் என இழிபுகழ் பெற்றிருக்கிறார். அந்த அதிகாரி செய்திருப்பார் என ஊர் மக்களும் ஊடகத்தில் கருத்து சொல்கிறார்கள்.

நாயகி ஏன் அப்படி சொன்னாள்? அவளுக்கு என்ன ஆனது? கொலைகளுக்கான காரணம் என்ன? இன்ஸ்பெக்டருக்கும், அந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு? என பல கேள்விகளுக்கு முக்கால் வாசி படத்தில் திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு போலீஸ் அதிகாரி தப்பு செய்தால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்காமல், அது மொத்த துறைக்கும் களங்கம், அதனால் அந்த நபரை காப்பாற்றியே ஆகவேண்டும் என்பது துறை சார்ந்த அதிகாரிகளின் மனநிலையாக இயல்பாக இருக்கிறது. ஆளும் அரசியல்வாதிகளும் அதற்கு பொறுப்பு என்பதால் அவர்களும் பெரும்பாலும் மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். யார் கேள்வி கேட்டாலும், மட்டையடியாக பதில் சொல்கிறார்கள். கூடுதலாக அந்த அதிகாரி ஆளும் அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருந்தால், இன்னும் அதிகாரமிக்கவராகிவிடுகிறார். எந்த அராஜகத்தையும் செய்ய துணிகிறார். படத்தில் அந்த இன்ஸ்பெக்டரின் மொத்த நடவடிக்கையுமே ஆபத்தாக இருக்கிறது.

தான் நினைத்தால்… இப்படியும் கதை எழுதுவேன். அப்படியும் கதை எழுதுவேன் என உயர் போலீஸ் அதிகாரி ஓரிடத்தில் குரூர புன்னகையுடன் சொல்கிறார். அப்படித்தான் ஒவ்வொரு வழக்கிலும் அரசியல், அதிகாரம், செல்வாக்கு, பணம் என்ற பின்னணியில் போலீசு “கதை” எழுதுகிறார்கள் என்பதும் யதார்த்தமாக இருக்கிறது. பல முக்கிய வழக்குகளில் அப்படி ”கதை, திரைக்கதை, வசனம்” எழுதிய விசயம் அம்பலமாகியிருக்கிறது. சமீபத்திய உதாரணம் : தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு. புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் தலைமையில் மக்களின் விடாப்பிடியான போராட்டத்தினால் தான் பல சமயங்களில் நீதி கிடைத்திருக்கிறது. யாருக்கோ பிரச்சனை என நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால், அநீதியின் கரங்களில் சிக்கிக்கொள்கிறோம்.

படத்தில் கொலைகள் ஏன் நடந்தன என்பதை படத்தின் இறுதி வரை அந்த சஸ்பென்சை கொண்டு சென்றிருப்பது சிறப்பு. நாயகியாக சூரரைப் போற்று நாயகி அபர்ணா. முக்கிய கதைப்பாத்திரத்தில் தமிழ் பேசும் உயர் அதிகாரியாக ஹரீஷ் உத்தமன் வருகிறார். எல்லோரும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரஞ்சித் உன்னி என்பவர் கதை எழுதி, சுதீஷ் ராமச்சந்திரன் இயக்கியிருக்கிறார். Zee5ல் வெளியாகியிருக்கிறது.

ஜே. கே காப்பியரும் போலீசும்!


ஒரு தொழிற்சாலை. தொழிற்சாலைக்கு உள்ளேயே தொழிலாளர்கள் தங்குவதற்கான‌ குடியிருப்பு. ஜார்கண்டை சேர்ந்த நடுத்தர வயது தொழிலாளி ஒருவருக்கு உடல்நலமில்லை. மயங்கிவிழுந்துவிட்டார்.


உடனே பக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு போயிருக்கிறார்கள். "நிலைமை கைமீறி போகிறது. ஸ்டான்லிக்கு கொண்டு போங்கள்!" என சொல்லிவிட்டார்கள். அங்கே போய், முதலுதவி செய்யும் பொழுதே உயிர் பிரிந்துவிட்டது.

போலீஸ் ஸ்டேசன் போய் மற்ற விவரங்களை பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

அந்த நிறுவனத்தின் முதலாளி ஸ்டேசன் போனால்... "ஐந்து பண்டல் ஜேகே காபியர் வாங்கி வாருங்கள்" என சொல்லியிருக்கிறார்கள்.

இவர் போய் ஜேகே காபியர் விலை அதிகம் என்பதால் வேறு நிறுவன பண்டல்கள் வாங்கினால்... "ஸ்டேசனில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். திரும்ப அனுப்புவார்கள்" என கடைக்காரர் பொறுப்பாக சொல்லியிருக்கிறார். ஓசி! இதுல ஜேகே காப்பியர் வேறயா! என வேறு கம்பெனி பண்டல்களை வாங்கிக்கொண்டு போயிருக்கிறார். சொன்னது போலவே மாற்றி வாங்கி வரச்சொன்னார்களாம்.

அடுத்து... "இன்ஸ்பெக்டர் அய்யாவுக்கு இந்த மாத்திரைகளை வாங்கிட்டு போங்க!" என சொல்லியிருக்கிறார்கள். அதையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார். இப்படி இன்னும் இரண்டு மூன்று விசயங்களுக்கு அலையவிட்டிருக்கிறார்கள்.

மொத்தமாய் லம்சம்மாக ஒரு தொகையை வாங்கிக்கொண்டு தான் தங்கள் செய்ய வேண்டிய கடமையை பார்த்திருக்கிறார்கள். இதில் இப்படிப்பட்ட சில்லறை வேலைகளையும் செய்தாகவேண்டும்.

போலீசின் இப்படிப்பட்ட செயல்பாடுகள் திருந்த இன்னும் பல காலமாகும் போலிருக்கிறது!