> குருத்து: June 2009

June 30, 2009

"என் பெயர் பிரேமா!" - ஒரு உண்மை கதை!


21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.

முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை.

- புதிய கலாச்சாரம், மே 2009

****

நண்பர் ஒருவருக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ய பெண் தேடிக்கொண்டிருக்கிறோம். (இந்த சாதி மறுப்பு திருமணம் செய்வதில், செய்து வைப்பதில் பலவித மலைகளை, தடைகளை கடந்தாக வேண்டும். அதை தனி ஒரு பதிவாக பின்னொரு நாளில் பதிவிடுகிறேன்.) இதற்காக திருமண வலைத்தளத்தில் பதிந்து வைத்திருந்தோம். கடந்த வாரம் தென் மாவட்டத்திலிருந்து ஒரு பெண் பேசினார். போனில் அழைத்து... போனில் பணம் இல்லை. அதனால், நீங்கள் அழையுங்கள் சொல்லி... கிட்டத்தட்ட 45 நிமிடம் பேசியிருக்கிறார். பேசியதின் சாரம் இது தான்.

என் பெயர் பிரேமா. பி.எஸ்.சி படிச்சிருக்கேன். வயது 32. கொஞ்சம் பூசுனாப்பல (குண்டா!) இருப்பேன். சிகப்பா, அழகா இருப்பேன். எங்கள் குடும்பம் தொண்டை மண்டல முதலியார் சாதியை சேர்ந்தவர்கள். அப்பா இறந்துவிட்டார். ஒரு அண்ணன், மூன்று அக்காக்கள். அக்காக்கள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது. அண்ணனுக்கு இன்னும் ஆகவில்லை. மூன்று அக்காக்களுக்கு திருமணம் முடிக்க நிறைய கடன்பட்டோம். சிரமப்படுகிறோம். இப்பொழுது எனக்கு செலவழிக்க ஏதும் இல்லை. "உனக்கெல்லாம் நாங்க திருமணம் செய்ய முடியாது. யாரையாவது காதலிச்சு இழுத்துகிட்டு ஓட வேண்டியது தானே! இருந்து கிட்டு எங்க உசிரை வாங்கிகிட்டு!" என அடிக்கடி திட்டுகிறார்கள். இந்த வயசுல நான் யாரை போய் காதலிப்பேன்?

நீங்க வரதட்சணை தேவையில்லை என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதனால் தான் உங்ககிட்டே பேசறேன். நீங்க எப்படி? போட்டோவில் இருப்பது போல(வாவது) இருப்பீர்களா! உங்க படிப்புக்கு அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் அல்லவா! உங்க அம்மா, அப்பா எங்க இருக்காங்க? கல்யாணத்துக்கு பிறகு, அம்மா, அப்பா எங்கே இருப்பார்கள்?

அன்பா இருப்பேன். நீங்க அன்பா இருப்பீங்க தானே!

நான் நல்லா சமைப்பேன். எங்க வீட்ல சைவம் தான். ஆனால், உங்களுக்காக அசைவம் சமைப்பேன்.

ஒரு மெயில் ஐ.டி தர்றேன். அதுல என் போட்டோ இருக்கு. பார்த்துட்டு சொல்லுங்க! நீங்க சரின்னு சொன்னா, இன்னைக்கே சென்னைக்கு கிளம்பி வந்துர்றேன்!

***

இப்படி பேசிய விசயத்தை சொல்லி முடித்ததும்... சிறிது நேரத்திற்கு என்னால் எதுவும் பேச
முடியவில்லை. மெளனம் தான் நிலைத்தது.

முகம் பார்த்ததில்லை. முகவரி தெரியாது. ஆனால், மொத்த வாழ்க்கையையும் நம்பி ஒப்படைக்கும் இழிநிலை கொடுமை. அந்த பெண்ணின் பேச்சில், வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆவல் இருந்தது. இப்படி அந்த பெண்ணை வாழ்வின் அடுத்த நிலைக்கு போகவிடாமல்... திட்டி, திட்டி ஆளுமையை நாள்தோறும் சிதைக்கிறார்கள்.

இந்த பெண்ணை மேற்கொண்டு தொடர்பு கொள்வதிலும்... நிறைய சிக்கல்கள் எழுகின்றன. அந்த பெண் சொல்வது மாதிரி... உடனே பஸ் ஏறி வாம்மா! என நம்மால் சொல்ல முடியவில்லை. வீட்டிற்கு போய் பேசினால்... "வேறு சாதிகாரருக்கு நாங்கள் கொடுக்கிற எண்ணம் இல்லை" என்பார்கள். அப்படியே அந்த பெண்ணின் அம்மா, அண்ணன் இருவரிடமும் பேசி... சம்மதம் வாங்கினால் கூட... மூன்று சகோதரிகளின் மாப்பிள்ளைக் குடும்பங்கள் "சாதி, குடும்ப கெளரவம்" என வழிமறித்து நிற்கும்.

அந்த பெண்ணிடமே.. நாங்கள் வீட்டிற்கு வந்து பேசுகிறோம் என்றோம். காரணம் ஏதும் சொல்லாமல்...வீட்டிற்கு வந்து பேசவேண்டாம் உறுதியாக சொன்னார்.

இனி, மேற்கொண்டு ஏதும் எங்களால் முன்னேற முடியவில்லை. அந்த பெண்ணும் பிறகு பேசவில்லை. இப்பொழுது... யாரிடம் போன் பண்ணி தன் நிலையை சொல்லிக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. அந்த பெண்ணின் நிலை கண்டு வருத்தப்பட தான் முடிகிறது.

பின்குறிப்பு : அந்த பெண்ணுக்கு ஏதும் சிரமம் வந்துவிடக்கூடாது என்பதற்காக.. பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. பிரேமா என்பது இயல்பாக இருக்கிறது. தொண்டை மண்டல முதலியார் என்பது முற்பட்ட பிரிவைச் சேர்ந்தது என்பதால்... உண்மை பெயரிலும் ஒரு "கெத்" இருந்தது.

சாதி கெளரவம் விசயத்தில்... தொண்டை மண்டல முதலியார்கள்... வேளாள மரபை சேர்ந்தவர்கள். நிலங்கள் வைத்திருக்கும் உடைமை வர்க்கம். இவர்கள் சைவ முதலியார்கள். பெளதிக அடிப்படையில் வட மாவட்டங்களில் வாழ்பவர்கள். சாதியில் தன்னை உச்சாணி கொம்பில் இருப்பதாக நினைத்து வாழ்பவர்கள்.

தென்பகுதியில் நெசவு தொழில் செய்யும் கைக்கோலர் என்கிற செங்குந்த முதலியார்கள் ஒரு வகை. தொண்டை மண்டல முதலியார்களுக்கும், இந்த செங்குந்த முதலியார்களுக்கு கொள்வினை, கொடுப்பினை கிடையாது (பெண் கொடுக்கவோ, பெண் எடுக்கவோ மாட்டார்கள்).

June 18, 2009

பிள்ளைப் பூச்சிகளை பிடித்து வதைக்கும் அரசியல் போலீசார்!

சென்னை நகரத்தின் ஒரு முக்கிய சந்திப்பில் உள்ள ஒரு பொட்டிக்கடை அது. வழக்கம்போல இந்த மாதமும் புதிய ஜனநாயகம் மாத அரசியல் இதழை கொடுக்க போயிருந்தேன். கடந்த மாதம் கொடுத்திருந்த ஐந்து இதழ்களையும் அப்படியே தந்தார். ஐந்து இதழ்களும் விற்ககூடிய கடையாயிறே! "ஏன்?" என கேட்டேன்.

சொல்ல தயங்கினார். ஐந்து இதழ்களும் விற்காமல் வீணாகி போனதே என்ற ஆதங்கம் எனக்கு. மீண்டும் கேட்டதற்கு... "பிரச்சனையாகிவிட்டது" என்றார்.

"என்ன பிரச்சனை?"

கடந்த மாதம் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்து... விற்பனைக்கு கொஞ்சம் புத்தகம் தந்தார்கள். புத்தகங்களை பார்வைக்கு வைக்க அவர்களே ஒரு சின்ன ஷோ-கேஸ் மாதிரி தந்தார்கள். அதில் புத்தகங்களை அடுக்கி வெளியில் பார்வைக்கு வைத்திருந்தேன். ஈழம் பேசப்படுவதால்.. நன்றாக விற்குமே என்ற எண்ணத்தில்.. பிரபாகரன் குறித்த இரண்டு புத்தகங்களை புத்தக வரிசையில் முதலில் வைத்திருந்தேன்.

இப்படி வைத்த இரண்டாவது நாள் மப்டியில் இருந்த போலீசு வந்து... "உங்க மேலே கம்பைளைண்ட் வந்திருக்கு! விசாரிக்கனும். கூட வர்றீங்களா!" என அழைத்தார். அப்பாவை கடையில் நிற்க வைத்து போனேன். காலையிலிருந்து மாலை வரை விசாரித்தார்கள். அடுத்தடுத்த இரண்டு நாள்களும் இதே மாதிரி தொடர்ச்சியாக விசாரணை. விசாரணைக்கு வர வில்லையென்றால்... என்ற மிரட்டல் வேறு.

நான் யார்? எங்கே பிறந்தேன்? என் குடும்ப பின்னணி என்ன? என் சொந்தகாரன் எங்கெல்லாம் இருக்கிறார்கள்? .. என்கிற ரீதியில்.. என் மொத்த ஜாதகத்தையும் கிளறிவிட்டார்கள்.

"நீங்க சொல்ல வேண்டியது தானே! கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்களைத் தானே விற்கிறேன்" என நீங்கள் கேட்டிருக்கலாமே! என்றேன் நான்.

அதை சொன்னதற்கு... புத்தகத்தை வெளியிட்டது அவங்க! உன்னை விற்க சொன்னது யார்? என்றார்கள்.

மூன்றாவது நாள்... 'இனி இப்படி புத்தகங்களை விற்காதே!" என மிரட்டி அனுப்பினார்கள். முதல் நாள் அப்பா பார்த்துகொண்டார். இரண்டு நாள் கடையை மூடிவிட்டு போனேன். இரண்டு நாள் பொழப்பு கெட்டுப்போச்சு!

நல்ல வேளைக்கு கடைக்குள்ளே கிழக்கு பதிப்பகத்தோட 'அல்கொய்தா'ப் பற்றிய புத்தகம் வைத்திருந்தேன். அது அவங்க கண்ணுல படல! பட்டிருந்துச்சு... நான் ஒரு முஸ்லீமாகவும் இருக்கிறதனால... என்னை காலி பண்ணியிருப்பார்கள்."

இதை விவரிக்கும் பொழுது... வருத்தம், கோபம், விரக்தி என அவர் முகத்திலும், பேச்சிலும் வெளிப்பட்டது.

***

ஈழத்திற்கு உருகு உருகு உருகிற கருணாநிதியின் ஆட்சியின் கீழ் தான், கிழக்குப் பதிப்பகம் புத்தகங்களை விற்றதற்கே... மூன்று நாள் ஒரு பொட்டிக்கடைகாரரை விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்து இருக்கிறர்கள்.

இங்கு விடுதலைக்கான இயக்கங்கள் வளர வேண்டும். அப்பொழுது தான் இந்த அரசு, அரசியல் போலீசார் (க்ரைம் போலீசு = ரகசிய போலீசு) எல்லாம் வாலைச்சுருட்டி அடங்கியிருப்பார்கள்.

அப்படி வளராத வரை... இப்படி பிள்ளை பூச்சிகளை பிடித்து... "சரோஜா படத்தில் கேனை மண்டையில் தட்டி விசாரிப்பார்களே!" அது மாதிரி, வதைத்து கொண்டுதான் இருப்பார்கள்.

June 17, 2009

என்னை சக மனுசியாக மதித்தார்கள்!

வினவில் வெளிவந்த "பொட்டை" பதிவை ஒரு சிபிஎம் தோழரிடம் பகிர்ந்து கொண்ட பொது, அவர் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

பகுதியில் நடந்த போராட்டத்தில் கைதாகி, கல்யாண மண்டபத்தில் மாலைவரை தங்க வைக்கப்பட்டிருந்தோம். அதில் திருநங்கையும் ஒருவர்.

அவரிடம் பேச்சு கொடுத்தேன். "நீங்கள் எப்படி கட்சிக்கு அறிமுகமானீங்க?"

"என்னுடன் ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு நிறைய கடன் இருந்தது. அவனுக்காக என்னிடம் இருந்த பணத்தை கொண்டு பாதிக்கடனை அடைத்தேன். மீதி கடனையும் அடைக்க நானே பொறுப்பேற்று கொண்டேன்.

சில காலம் கழித்ததும், அவனுக்கு திருமணம் முடிக்க அவனுடைய வீட்டில் ஏற்பாடு செய்தார்கள். இவனும் அதற்கு உடன்பட்டான்.

சரி! நீ கல்யாணம் செய். ஆனால், உனக்காக நான் அடைத்த கடனை கூட நீ தரவேண்டாம். மீதி கடனையாவது ஏற்றுக்கொள்! என்பதற்கு மறுத்தான். அவன் சம்பந்தபட்ட நபர்களிடமும், வேறு சிலரிடம் முறையிட்டதற்கு என்னை ஒரு மனுசியாகவே யாரும் மதிக்கவில்லை. பிறகு, இந்த பகுதியில் சிபிஎம் அலுவலகம் போய் முறையிட்டேன். அவர்கள் தலையிட்ட பிறகு இந்த பிரச்சனை முடிந்தது.

இந்த பிரச்சனையில்... தோழர்கள் தான் என்னை சக மனுசியாக மதித்தார்கள். இவர்கள் மத்தியில் தான் இனி இருக்க வேண்டும் என அன்றைக்கே முடிவெடுத்தேன். இப்பொழுது, பகுதி பிரச்சனை எதுவென்றாலும், நானும் கலந்து கொள்கிறேன்" என்றார்

June 9, 2009

பற்றிப் பரவுகிறது வர்க்கப் போராட்டம்! அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்!!


நன்றி -‍ புதிய ஜனநாயகம்

குறிப்பு : உலக பொருளாதார சூதாடிகளால் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரிட் உள்ள பிரபல நிறுவனங்கள் தலைகுப்புற கவிழ்ந்தன. அதன் தொடர்ச்சியில் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதற்கு முன்பு இப்படி பொருளாதார மந்தம் பல வந்திருந்தாலும்... 1930ல் ஏற்பட்ட மந்தம் மிகப்பெரியது. இப்பொழுது ஏற்பட்ட மந்தம் மற்றும் நெருக்கடி அதை விட பல மடங்கு பெரியது.

கொள்ளையடித்தது முதலாளி வர்க்கம். ஆனால், நெருக்கடிகளை தொழிலாளர்கள் மீது சுமத்துகிறார்கள். அதை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதை இந்த கட்டுரை விவரிக்கிறது.

*****

சென்ற ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய முதலாளித்துவத்தின் நெருக்கடி என்று மறைக்கப்படும் முதலாளித்துவத்தின் அழிவுப் பாதை, தனது தடத்தை எல்லா நாடுகளிலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் மீது ஏற்றி வருகிறது. இதில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என வேறுபாடில்லாமல் முழு உலகமே பாதிப்படைந்து வருகிறது.

போரை ஒத்த அழிவினை ஏற்படுத்தும் இந்த பொருளாதாரச் சுனாமியில், முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் மேற்குலகின் அரசாங்கங்கள் கோடி கோடியாக மக்கள் பணத்தினை இனாமாக வழங்கின.

ஆனால், இந்தப் பிரச்சினையை ஒட்டி எல்லா நாடுகளிலும் ஏராளமானோர் வேலையிழந்தும், குறைந்த பட்ச வாழ்க்கை வசதிளைக்கூடப் பெறமுடியாமலும் தவித்து வருகின்றனர். தங்களது இலாபத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முகமாக, எல்லா நிறுவனங்களும் ஆட்குறைப்பை அதிவேகமாக செய்து வரும் வேளையில் திடீரென்று வேலையிழந்து தெருவில் நிற்கும் இம்மக்களைப் பற்றி அக்கறைப்பட எந்த அரசாங்கமும் தயாராக இல்லை. இந்த அநீதியைக் கண்டு தற்போது மேலைநாடுகளில் காட்டுத்தீயாய் மக்கள் போராட்டம் பற்றி வருகின்றது.

திவாலான ஏ.ஐ.ஜி என்ற அமெரிக்க காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு அளித்த உதவிப்பணம், அந்நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு போனஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டதை எதிர்த்து அங்கே நடந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஒபாமா நிர்வாகம், அந்த போனசுக்கு 90% வரி விதித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் பல இலட்சம்பேர் வேலையிழந்தும், வீடிழந்தும் தவித்து வருகின்றனர். ஐரோப்பா போல இங்கு மக்கள் சேமநலத் திட்டங்கள், ஒதுக்கீடு எதுவுமில்லை. ஒருவர் வேலையிழந்தால் மருத்துவம், வீடு, கல்வி எதுவும் அவருக்கு கிடைக்காது.

பிரான்சில் அதிபர் சர்கோசி இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நிதித்துறை மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களைக் காப்பாற்ற பெரும் நிதி ஒதுக்கியிருக்கிறார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் வேலையையும் கருமமாக செய்து வருகிறார். இதன் சங்கிலித் தொடர் விளைவாக பிரான்சில் வேலையிழந்தோர் விகிதம் விரைவில் பத்து சதவீதத்தை எட்டிவிடுமென்று தெரிகிறது. குறிப்பாக, இளைஞர்கள் இந்த வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு சமூகக் கொந்தளிப்பாக மாறியிருக்கிறது.

கடந்த ஜனவரி, மற்றும் மார்ச் மாதங்களில் பிரான்சில் நடந்த பொது வேலை நிறுத்தத்தில் முன்னதில் பத்து இலட்சம்பேரும், பின்னதில் முப்பது இலட்சம் பேரும் கலந்து
கொண்டிருக்கின்றனர். அதிபர் சர்கோசி இந்த எதிர்ப்பியக்கத்தைப் பார்த்து தனது நாடு ஆட்சி செய்வதற்கு மிகவும் சிரமமானது எனத் திருவாய் அருளியிருக்கிறார்.

பிரான்சிலும், இங்கிலாந்திலும் வேலையிழந்த சில தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்களது நிறுவனத் தலைவர்களை அறையில் முடக்கி முற்றுகைப் போராட்டத்தை பல மணிநேரம் நடத்தியிருக்கின்றனர். நேட்டோ அமைப்பின் அறுபதாவது ஆண்டை ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கொண்டாடி வரும் வேளையில், மக்களோ தமது முதலாளித்துவ எதிர்ப்பைக் காட்டுவதற்கு அந்த தினத்தை பயன்படுத்தினர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்தச் சூழலில்தான் உலகப் பொருளாதாரப் பிரச்சினையைத் தணிப்பதற்கு, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பங்கேற்ற ஜி20 கூட்டமைப்பின் சந்திப்பு இலண்டனில் நடந்தது. இந்த
மாநாட்டில் பன்னாட்டு நிதி நிறுவனத்துக்கு நூறாயிரம் கோடி டாலர் பணம் ஒதுக்கி, வளரும் நாடுகளுக்கு கடன் கொடுக்க வளர்ந்த நாடுகள் சம்மதித்திருக்கின்றனவாம். மேலும், இனிமேல் இரகசியமான வங்கி முறையைக் கைவிட்டு வெளிப்படையான உலகமெங்கும் ஒரே விதிமுறைகளைக்கொண்ட வங்கி முறையை ஏற்படுத்தப் போகிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவையெல்லாம் மக்களைக் காப்பாற்றுவதற்காக இல்லை, முதலாளிகள் அளவு கடந்து சூதாடக்கூடாது என கடிவாளம் இடுவதற்குத்தான். எனினும், சூதாட்ட மற்றும் குமிழ் பொருளாதார நிலைக்கு வந்து விட்ட முதலாளித்துவம் தனது கோரப்பிடியை மேலும் இறுக்க முடியுமே ஒழிய, அதிலிருந்து விடுபட முடியாது. இறுதியில், இந்தச் சுமை மக்களின் மேல் சுமத்தப்படும். அதற்குத்தான் ஐ.எம்.எப்.பின் முதலீட்டைக் கூட்டி, வளரும் நாடுகளைக் கடனின் பெயரால் அச்சுறுத்துவதற்கு முன்னேறிய நாடுகள் முடிவு செய்தன.

இலண்டனில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடந்த இந்த அரசாங்கங்களின் சந்திப்பை எதிர்த்து மாபெரும் மக்கள் போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தைக் கடும் போலீசு அடக்குமுறை மூலம் இங்கிலாந்து அரசு ஒடுக்கப் பார்த்தது. இதில் ஒருவர் இறந்து போக, பலர் காயமுற்று, நூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். போராட்டக்காரர்களை ஒரே இடத்தில் பல மணிநேரம் முடக்கி, கண்ணீர் குண்டு, ரப்பர் தோட்டாக்களால் சுட்டு ஒடுக்கியும் போலீசு வெறியாட்டம் நடத்தியது. ஆனாலும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் மக்கள் “முதலாளித்துவம் ஒழிக! சோசலிசமே மாற்று” என கம்பீரத்துடன் முழக்கமிட்டனர்.
கூட்டமைப்பின் சந்திப்பை வெற்றிகரமாக நடத்துவதை விட, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு இங்கிலாந்து அரசு திணறியது. இந்த போலீசு ஒடுக்கு முறையை இலண்டன் மேயர் நியாயப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் முதலாளித்துவத்தின் நெருக்கடியை எதிர்த்து போராடினால், போலீசு இராச்சியம்தான் தீர்வு என்பதை மேற்கத்திய நாடுகள் அமல்படுத்தத் துவங்கலாம். முதலாளித்துவ பொருளாதாரம் சீர்குலைந்தால், அதன் ஜனநாயகமும் பாசிச அவதாரமெடுப்பதுதானே விதி!

ஆனாலும் அமெரிக்கா தொடங்கி ஐரோப்பா வரை அன்றாடம் வலுக்கும் இந்த மக்கள் போராட்டம், நிச்சயம் ஒருநாள் முதலாளித்துவத்தின் கழுத்தை நெரிப்பது உறுதி. “பிரான்டியர்” ஆங்கில வார ஏடுக்குக் கடிதம் எழுதிய ஒரு அமெரிக்க அஞ்சல்துறை ஊழியர், “ இரசியாவில் குறுகிய காலத்திலேயே அரசியல் விழப்புணர்வைப் பெற்ற தொழிலாளி வர்க்கத்தைப் போல, தற்போது அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் நெருக்கடியைப் பட்டு அனுபவித்து அரசியல் விழப்புணர்வைத் தொழிலாளி வர்க்கம் அடையத் தொடங்கியிருக்கிறது” என குறிப்பிட்டிருக்கிறார். உண்மைதான்! கம்யூனிசம் பல காலம் போதித்து வரும் பிரச்சினையை, தற்போது முதலாளித்துவத்தின் தயவில் தொழிலாளிகளும், பிற மக்களும் வேகமாக உணரத் துவங்கியிருக்கின்றனர். இந்த உணர்தல் அரசியல் சக்தியாக உருப்பெற்று, குறிப்பான இலக்குடன் போராடும் போது, நிச்சயமாக மேலை நாடுகளின் அரசாங்கங்கள் அமைதியாகக் காலம் கழிக்க முடியாது.

- கட்டுரையாளர் ‍ சுப்பு

- புதிய ஜனநாயகம், ஜூன்'2009 இதழில் வெளிவந்தது.

June 5, 2009

ஜூன் 6 – நரகத்துக்கு ரயிலேறிய நாள்!


ஒரு வேண்டுகோள்! மீண்டும் ஒரு முறை திருத்தமாக தலைப்பை படித்துவிட்டு வாருங்கள். நகரத்துக்கு அல்ல! நரகத்திற்க்கு!.

என் பிறந்தநாள் கூட பல சமயங்களில் மறந்திருக்கிறேன். பிறந்த நாளுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக நினைவு வரும் அல்லது இரண்டு நாள்கள் கழித்து நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஜூன் 6 மட்டும் சரியாக அந்த நாளே நினைவுக்கு வரும்.

தமிழ்நாட்டில் சிறுநகரங்களுக்கு வேலைக்காக போய், மீண்டும் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய மாதிரி... அப்படி நம்பித்தான் சென்னைக்கும் ரயிலேறினேன். ஒரு உள்ளூணர்வோ, வானில் அசரிரீயோ ஒரு மண்ணாங்கட்டியும் எச்சரிக்கவில்லை. “பெருநகரத்துக்கு போகும் பாதை! ஒரு வழிப்பாதை” என!

சென்னைக்கு என்னுடன் ரயிலேறியவர்கள் இன்னும் இருவர். ஒருவர் தமிழ் இலக்கியம் எம்.ஏ. படிக்க.... இன்னொருவர் பத்திரிக்கைத் துறையில் வேலை செய்ய... வந்தார்கள்.

இலக்கியம் படிக்க வந்தவர்... “இது சாத்தான் ஆள்கிற நகரம். இங்கு வாழ்கிறவர்கள் சாபத்தால் சூழப்பட்டவர்கள். ஓடிப்போய்விடு” என மனித வடிவில் ஒரு தேவதூதனால் எச்சரிக்கப்பட்டு, என்னிடம் கூட அந்த தேவ ரகசியத்தைச் சொல்லாமல் பின்னங்கால் தெறிக்க ஓடிப்போய்விட்டார். இப்பொழுது சொந்த ஊரில் நிம்மதியாக செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை புத்தக கண்காட்சியில் பார்த்தேன்.

மற்றொருவர்... ஒரு பத்திரிக்கையில் கொஞ்ச காலம் வேலை பார்த்து... செட்டாகாமல்.. ஏதோ “உள்ளூணர்வு” எச்சரித்து, அவரும் சொந்த ஊருக்கு பொட்டியை கட்டி போய்விட்டார்.

மாட்டிக்கொண்டவன் நான் மட்டும். நான் ஆசிர்வாதிக்கப்பட்டவன். அதனால் தான் இந்த
பெருநகர சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கிறது என பெருமகிழ்ச்சி அடைந்தேன். சில ஆண்டு பெருநகர வாழ்க்கையில் தான் அறிந்தேன். நரகத்தை சொர்க்கம் எனவும், சபிக்கப்பட்டிருப்பது தெரியாமல், ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவும் புரிந்திருக்கிறேன்.

இந்த நரகத்திலிருந்து தப்பிக்க.. ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நேற்று ஒரு நண்பன் வந்து... சொந்தவீட்டுகாரகள் வாடகை வீட்டுகாரர்களை படுத்தும்பாடு தாங்கமுடியவில்லை. இந்த தொல்லையிலிருந்து விடுபட... இருவரும் சேர்ந்து இங்கு ஒரு வீடு வாங்கலாமா? என்றான்.

நகரத்தில் வீடா? இவன் சாத்தானின் தூதுவனோ? அவனையே முறைத்துப் பார்த்தேன். வாடகை வீட்டில் இருந்தாலாவது... தப்பித்துவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையாவது இருக்கும். சொந்த வீடென்றால்... நினைப்பே பாதி ஆயுசை குறைக்கிறது.

இப்பொழுதெல்லாம்.. ஊரிலிருந்து யாரும் சென்னைக்கு பேருந்தோ, ரயிலோ ஏற முனைந்தால்... வராதே! என உறுதியாய் எச்சரித்துவிடுகிறேன். ஏதோ என்னால் முடிந்தது.

June 3, 2009

நூரம்பர்க்கில் தீர்ப்பு (Judgment at Nuremberg) – திரைப்பட அறிமுகம்!


ஜெர்மனி, இட்லர், நாஜிப்படை, வதைமுகாம், படுகொலைகள்.... பற்றிய பட வரிசையில் பார்க்க வேண்டிய படம் – நூரம்பர்க்கில் தீர்ப்பு.

இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மனி வீழ்ச்சியடைகிறது. நாஜிக்களின் கணக்குப்படியே படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் மக்கள். நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கும் இந்த படுகொலைகளை நாஜிக்களின் சட்டப்படி தண்டனை தர‌ தீர்ப்பு வழங்கிய ஒரு தலைமை நீதிபதி, மற்றும் 3 நீதிபதிகள் மீதான வழக்கு விசாரணை தான் படத்தின் களம்.

படத்தின் முதல் காட்சி. ஒரு பெரிய பாரம்பரிய கட்டடம். அதில் நாஜிக்களின் சின்னமான ஸ்வஸ்திக் தூண் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. அதை குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது.

அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த குற்ற விசாரணை துவங்குகிறது. குற்றங்களை
நிரூபிக்க அரசு தரப்பு அந்த நான்கு நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்புகளை கத்தை கத்தையாக சமர்ப்பிக்கிறது. நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடுகிறவர் அவர்கள் நாஜிக்களின் சட்டப்படி தான் இயங்கினார்கள். அவர்கள் மேல் எப்படி குற்றம் சொல்லமுடியும் என வாதாடுகிறார்.

நாஜிக்களின் ஆட்சியின் பொழுது, நடந்த குற்ற வழக்குகளில் குறிப்பாக இரண்டு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஒரு வழக்கு – கம்யூனிஸ்டு ஒருவரின் மகன் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அவரை மலடாக்குகிறார்கள். (Sterilized). நீதிமன்றத்திற்கு வந்து தனக்கு இழைத்த குற்றத்தை விளக்குகிறார்.


மற்றொரு வழக்கு
– ஆர்ய இனத்தை சேர்ந்த ஒரு 16 வயது பெண், யூத பிரிவைச் சேர்ந்த ஒரு வயதான பெரியவர் அந்த பெண்னுடன் பழகினார் என்பதற்காக, குற்றம் என சொல்லப்பட்டு, 1942ல் அவரை கொன்றுவிடுகிறார்கள். அந்த பெண் மீண்டும் வந்து விளக்குகிறார்.

1948ல் வழக்கு விசாரணை துவங்கி 8 மாதங்களாக நடைபெற்று 1949ல் முடிவடைகிறது. இறுதியில்... நான்கு நீதிபதிகளுக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

படம் 1961ல் வெளிவந்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளுக்குள்ளேயே ஆயுள் தண்டனை பெற்ற நாலு நீதிபதிகளில் ஒருவர் இறந்து விடுகிறார். மீதி 3 பேர் விடுதலை ஆகிவிட்டார்களாம்.

படத்தில் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வழக்கு விசாரணை படத்தை
இவ்வளவு விறுவிறுப்பாக எடுக்க முடியுமா என்பது ஆச்சர்யம் தான். ஆங்கில படங்களில், இதுவரை வந்த வழக்கு விசாரணை படங்களில் சிறந்த படங்களில் ஒன்று எனவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்திற்கு

சிறந்த படம் - (Best Picture)
சிறந்த நடிகர் (Best Actor) ,
சிறந்த நடிகர் (Best Leading Role)
சிறந்த துணை நடிகர் (Best actor supporting Role)
சிறந்த துணை நடிகை (Best actress supporting role, )
சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography)
சிறந்த கலை இயக்கம் (Best Art Direction)
சிறநத உடையமைப்பு (Best Costume design)
சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing)
சிறந்த கருப்பு வெள்ளை படம் (Best Black & White movie)
சிறந்த திரைக்கதை(Best writing, Screenplay)
சிறந்த இயக்கம் (Best Director) – என

அகாடமி விருதுகளை அள்ளி குவித்திருக்கிறது.

186 நிமிடங்கள் – படம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடினாலும், கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் நகர்கிறது. கதை களம் அப்படி! கண்டிப்பாக பாருங்கள்.

பின்குறிப்பு : படத்தில் நான்கு நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடும் பொழுது... இந்த படுகொலைகளுக்கு இந்த நீதிபதிகள் குற்றவாளிகள் என்றால்.. இட்லரை புகழ்ந்துரைத்தாரே சர்ச்சில் அவரும் குற்றவாளி தான். ஜெர்மனியின் நடவடிக்கைகளில் அமெரிக்க முதலாளிகள் பெரும் லாபத்தை சம்பாதித்தார்களே... அவர்களும் குற்றவாளிகள் தான். இந்த படுகொலைகளை உலகம் பார்த்துகொண்டிருந்ததே உலகமே குற்றவாளி தான் என வாதாடுவார்.

உண்மை தான். இதோ நம் அருகேயே ஈழமண்ணில் மக்களை இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கில் கொன்றழிக்கிறது. மக்களை முகாம்களில் வதைக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரசியா என பல நாடுகள் ஆயுதங்கள் தந்து உதவுகின்றன. ஏகாதிபத்தியங்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவுகின்றன. தடுக்க முடிந்ததா நம்மால்? ஈழ படுகொலைகளை தடுக்க ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாத நாமும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான்.

June 2, 2009

மும்பை மாநகரம் பயத்தில் மிதக்கிறது!


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடந்த சமயத்தில், வேலை தொடர்பாய், மும்பைக்கு ஒரு வாரம் சென்றிருந்தேன். இதற்கு முன்பு மும்பைக்கு போன அனுபவமும் இல்லை.

எங்கும் சோதனை! எதிலும் சோதனை!

மும்பையில் எங்கு சென்றாலும் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்த்து பயந்தே போனேன். கேட் வே ஆப் இந்தியா அருகே உள்ள அனைத்து வங்கிகளின் கார்ப்பரேட் அலுவலகங்களிலும், பேருந்து நிலையங்கள், மக்கள் வந்து போகும் பூங்கா, விநாயகர்
கோவில், மகாலெட்சுமி கோவில், ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா கோவில், ரயில் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் மெஷின் கன் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு. ஒவ்வொரு இடத்திற்கும் போகும் பொழுது, நம் உடலை தடவி தடவி பரிசோதிக்கிறார்கள். இங்கே ஒப்புக்கு சோதனை செய்கிறார்களே! அப்படியெல்லாம் இல்லை. போலீஸ் உண்மையிலேயே சோதிக்கிறது. ஆம்! குண்டு வெடித்து வெடித்தால்... அவர்களும் தூக்கியெறியப்படுவார்கள் அல்லவா! உயிர் பயம்.


தேசிய கீதம்

ஒரு மாலை வேளையில் பிரபல திரையரங்கு ஒன்றிக்குப் போனேன். அது பெரிய காம்பளக்ஸ் மால். உள்ளே நுழையும் பொழுதே, அலுவலர்கள் நம்மைச் சோதிக்கிறார்கள். ஆங்காங்கே கடக்கும் பொழுது, நிலைக்கதவு பாதுகாப்பு சோதனை. டிக்கெட் எடுத்து திரையரங்குக்கு நுழையும் பொழுது மீண்டும் சோதனை. ஆண்களின் பர்ஸ், பெண்களின் கைப்பை தவிர திரையரங்கிற்குள் வேறு எதுவும் உள்ளே அனுமதியில்லை.

அறுவை படம். பாதியில் தப்பத்துக்கொள்ளலாம் என நினைத்தால், திரையரங்கை விட்டு நீங்கள் வெளியேற முடியாது. முழுதாய் பார்த்துவிட்டுத்தான் நகல வேண்டும். (ஆமாம். நீங்க பாட்டுக்கு குண்டு வைச்சுட்டு இடைவேளையோடு எந்திரிச்சு போயிட்டிங்கனா! அதுக்கு தான்!)

உங்களுடைய பாதுகாப்புக்காக தான், இவ்வளவு சோதனையும். பலமுறை சோதித்ததற்காக நிர்வாகம் தன்னை மன்னிக்க சொல்லி, திரையில் கார்டு போடுகிறது. படம் போடுவதற்கு முன்பு, தேசிய கீதம் போடுகிறார்கள். எல்லோரும் எழுந்து நிற்க சொல்லி, கார்டும் போடுகிறார்கள். எங்கே எழுந்து நிற்கவில்லையென்றால், “பயங்கரவாதி” என சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில், நானும் நின்றுவிட்டேன்.

தங்குமிடம், சைபர் கபே இடங்களில், நம்முடைய அடையாள அட்டையை நகல் எடுத்து அவர்களே ஒன்றை வைத்துக்கொள்கிறார்கள். எல்லா தகவல்களும் எழுதுகிற ஒரு பெரிய நோட்டை பராமரிக்கிறார்கள்.

“தேர்தல் சமயத்தில் பாதுகாப்பு கொடுக்கமுடியாத காரணங்களுக்காக தான் ஐ.பி.எல். 20/20 கிரிக்கெட் தென்னப்பிரிக்காவில் நடப்பதற்கு காரணம். ஆனால், இப்பொழுது, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு குறைந்திருக்கிறது. ரயில்வே காவலர்களில் பாதி பேரை தேர்தலுக்கு அரசு அனுப்பிவிட்டது” – என பத்திரிக்கைகள் கடுமையான குற்றம் சாட்டின.

“அப்படியெல்லாம் இல்லை. ரயில்வே அலுவலகங்களில் பணிபுரியும் காவலர்களை தான் நாங்கள் தேர்தல் பணிக்கு அனுப்பியுள்ளோம். முக்கிய நிறுத்தங்களில் எண்ணிக்கையை குறைக்கவில்லை.” என்று பதிலளிக்கிறார் ஒரு ரயில்வே பாதுகாப்பு உயரதிகாரி.

ஏன் இந்த நிலை?

இதுவரை, பலமுறை வெடித்துள்ள குண்டுகளும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களும்,
அதனால் விளைந்த ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் தான் காரணம். இப்படி எங்கும் சோதனை! எதிலும் சோதனை! செய்து, எப்பொழுதும் கவனமாய் இருந்து, தேசியகீதம் பாட்டு போட்டு, வலுக்கட்டாயமாக தேசப்பற்றை ஏற்றி.. இனி குண்டுகள் வெடிப்பதை தவிர்த்துவிட முடியுமா! முடியாது. இந்த குண்டுவெடிப்புகளுக்கெல்லாம், அடிப்படை காரணமான இந்து மதவெறி பயங்கரவாதமும், இதுவரை நடந்த மதவெறி கலவரங்களுக்கு காரணமாயிருந்தவர்கள் தண்டிக்கப்படாதவரை.. இந்த குண்டு வெடிப்புகள் தவிர்க்க முடியாது.

பின்குறிப்பு : இந்த மும்பை பயணத்தில், நான் ஒரு இஸ்லாமியனாய் இருந்து போய் வந்திருந்தால்... இன்னும் அதிகமாக பயமுறுத்தப்பட்டிருப்பேன். இனி போகவே கூடாது என்ற முடிவுக்கும் வந்திருப்பேன்.