சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசித்திரமான பொதுநல வழக்கொன்று வந்தது. உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டுமென்று கோரப்பட்டது. மனுநீதிச் சோழன் பற்றிக் கூறப்படும் கதையிலுள்ள சம்பவங்கள் தற்போதைய சட்டத்துக்கு ஒவ்வாதவை என்றும் கூறப்பட்டது. உயர் நீதிமன்றம் அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. உண்மையிலேயே மனுநீதிச் சோழன் தனது மகனைக் கொல்ல உத்தரவிட்டது தற்போதைய நீதிமன்ற நடைமுறையில் சாத்திய மில்லை. மன்னராட்சியில் நிர்வாகத்தையும் நீதித் துறையையும் அரசன் ஒருவனே கையாண்டிருந்தாலும், தற்போதைய அரசமைப்புச் சட்டப்படி நீதித் துறைக்கும், நிர்வாக இயந்திரத்துக்கும் அதிகாரப் பங்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நீதிபதியே விரும்பினாலும் தன்னுடைய மகனுடைய வழக்கை அவர் விசாரிக்க முடியாது.

கடந்த வாரம் பதவியேற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லோதாவிடம் நீதிபதியின் உறவுகள் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகத் தொழில் நடத்துவதைத் தடுக்க முடியாதா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இந்தப் பிரச்சினையில் தீர்வுகாண வேண்டியது வழக்கறிஞர் அமைப்புகளே தவிர, நீதிமன்றமல்ல என்று பதில் கூறினார். மேலும், எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், நீதிபதியின் உறவுகள் அதே நீதிமன்றத்தில் தொழில் நடத்துவதால் ஏற்படும் நடத்தைக் கேடுகளைத் தடுக்கக் கோரி போட்ட பொதுநல வழக்கையும் லோதா தள்ளுபடி செய்துவிட்டார்.

நடத்தை விதி

1961-ம் வருடம் இயற்றப்பட்ட வழக்கறிஞர் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய பார் கவுன்சில் உருவாக்கிய நடத்தை விதி எண் 6-ன் கீழ் வழக்கறிஞர் எவரும் தன்னுடைய அப்பா, தாத்தா, மகன், பேரன், கொள்ளுப்பேரன், மாமா, சகோதரன், மருமான், ஒன்றுவிட்ட சகோதரன், கணவன், மனைவி, மகள், சகோதரி, மாமி, மருமகள், மாமனார், மாமியார், மருமகன், மருமகள், மைத்துனர், மைத்துனி நீதிபதியாக உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்விதியில் காணப்படும் ‘நீதிமன்றம்' (கோர்ட்) என்ற சொல் அந்த நீதிபதியை மட்டும் குறிக்குமா அல்லது அவர் பரிபாலனம் செய்யும் முழு நீதிமன்றத்தையும் உள்ளடக்குமா என்ற சர்ச்சை பரவலாக எழுந்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேசர்கி என்ற ஒரு நீதிபதி இருந்தார். அவருடைய மனைவி இறந்த சில வாரங்களில், அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த பிரமிளா என்பவரை அவர் மணந்துகொண்டார். இது பலருக்குக் கசப்பை உண்டாக்கியது. அப்படித் திருமணம் நடந்த பிறகு பிரமிளா நேசர்கி, போபண்ணா என்ற நீதிபதியின் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்காக வந்தார். உடனே நீதிபதி போபண்ணா, “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எந்த கோர்ட்டிலும் பிரமிளா நேசர்கி ஆஜராகக் கூடாது” என்று உத்தரவு போட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், “தனது நெருங்கிய உறவினர் நீதிபதியாக உள்ள கோர்ட்டில் ஆஜராகக் கூடாது என்று பார்கவுன்சில் நெறிமுறைகளில் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட ‘கோர்ட்’ என்ற வார்த்தை மொத்த நீதிமன்றத்தைக் குறிக்காவிட்டாலும் ‘மனைவி' விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும். மனைவிக்கு நெருக்கமான உறவு கணவனிடம் உண்டு. நீதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் பல விஷயங்கள் மனை வியின் காதுகளுக்கும் எட்டும். கோர்ட்டின் அந்தரங்க விஷயங் களைப் புரிந்துகொண்ட பெண்மணி, அதே கோர்ட்டில் வக்கீலாக ஆஜராவது மிகவும் அபாயம்” என்று கூறினார். சட்ட உலகிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது இவ்வுத்தரவு.

1997-ம் வருடம் நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளனைவரும் ‘நீதி வாழ்வின் விழுமியங்கள்' பற்றி வலியுறுத்தும் விதமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். தன்னுடைய நெருங்கிய உறவினர்களைத் தன்னுடைய நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தடுக்க வேண்டும் என்றும், நீதிபதியினுடைய உறைவிடத்தில் தங்கிக்கொண்டு அவருடைய உறவினர்கள் தொழில் நடத்தக் கூடாது என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டது.

வாரிசுகள் தொடர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்யும் நிலைமை இருந்தால், அந்த நீதிபதி வேறு மாநிலத்துக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று நீதிபதிகள் ஊர்மாற்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், ஒரு நீதிபதி தனது ஆலோசனையாகக் கூறியுள்ளார்.

வரலாறு

தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதியின் மகள் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, அவர் தந்தையுடன் அதிகாரபூர்வ உறைவிடத்தில் தங்கியிருந்ததோடு மட்டு மல்லாமல், அறிமுக அட்டையில் அதே முகவரியைக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் மகன் பரமேஷ், சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராகத் தயார்செய்துகொண்டார். வி.ஆர். கிருஷ்ணய்யர் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெறும் வரை இந்தியாவில் எங்கும் தான் வக்கீல் தொழில் நடத்தப்போவதில்லை என்று முடிவெடுத்த பரமேஷ், ஒரு வங்கி வேலையில் சேர்ந்துவிட்டார்.

நீதிபதி கிருஷ்ணய்யருடைய ஜுனியராக இருந்து, பின்னர் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான வி. சிவராமன் நாயர் தனது மகளும் மருமகளும் கேரள நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றத் தொடங்கியவுடன், குடியரசுத் தலைவருக்கு ஒரு விண்ணப்பம் கொடுத்து, வேறு மாநிலத்துக்கு ஊர்மாற்றம் வாங்கிக்கொண்டார். அவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, சக நீதிபதிகள் பலர் அவரிடம் பேச மறுத்து அவரைப் புறக்கணித்தனர் என்று நீதிபதி சிவராமன் நாயர் ஒருமுறை கூறினார். காரணம் கேட்டபோது, ஆந்திர உயர் நீதிமன்றத்திலேயே பல நீதிபதிகளுடைய உறவினர்கள் வழக்கறிஞர் தொழிலை வெற்றிகரமாகச் செய்துவரும் சூழ்நிலையில், நீதிபதி சிவராமன் நாயர் தன்னிச்சையாக ஊர்மாற்றம் கேட்டுவந்தது அவர்களுக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியதால் அப்படித் தன்னைப் புறக்கணிக்க நேரிட்டது என்று குறிப்பிட்டார்.

லைலா சேத் என்ற பெண் நீதிபதி தன்னுடைய சுயசரிதையில் (2003), தான் பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தபோது கிடைத்த கசப்பான அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நீதிபதிகளின் உற்றமும் சுற்றமும் செய்யும் தொழிலை அவர் இரண்டாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார். ஒன்று, சித்தப்பா/பெரியப்பா நடைமுறை (அங்கிள் பிராக்டிஸ்). மற்றொன்று, செங்கொடி நடைமுறை (லால் ஜண்டா பிராக்டிஸ்). முதல் வகையினர் தங்களது சக நீதிபதிகளின் வாரிசுகளுக்கு உதவிசெய்வது. இரண்டாம் வகை, குறிப்பிட்ட நீதிபதியிடம் தங்களது வழக்கு போகக் கூடாது என்று முடிவெடுத்தால், அவரது வாரிசை அந்த வழக்கில் ஆஜராகும்படி செய்து அவ்வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றிக்கொள்வது. இப்படிப்பட்ட ஊழல்களைக் குறிப்பிட்ட அவர், இதற்கு அடிப்படையான காரணம் வழக்கறிஞர்களே என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அலகாபாதும் அரியானாவும்

அலகாபாத் நீதிமன்றத்திலுள்ள சில நீதிபதிகளின் உறவுகள் அதே நீதிமன்றத்தில் தொழில் நடத்திவருவதும், தொழில் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அவர்கள் கோடீஸ்வரர் களாகிப் பெருந்தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருப் பதும், சொகுசுக் கார்களில் பவனிவந்து மிகப் பெரும் மாளிகையைக் கட்டி அதில் உல்லாசமாக வாழ்ந்துவருவதைப் பற்றியும் ஒரு காட்டமான தீர்ப்பை நீதிபதி மார்கண்டேய கட்ஜு வழங்கினார். நீதிபதிகளின் உறவுகள் தங்களது உறவை முறைகேடாகப் பயன்படுத்திப் பொருளீட்டுவதைக் கண்டித்த அவர், அப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு இடம்கொடுக்கும் நீதிபதிகளை உடனடியாக ஊர்மாற்றத்துக்குச் சிபாரிசுசெய்ய அங்குள்ள தலைமை நீதிபதிக்கு அறிவுரை வழங்கினார். அதையெல்லாம் யாரும் தீவிரமாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், குதிரை கீழே தள்ளி குழிபறித்த கதையாக நடக்கும் சம்பவங்கள் தற்போது பெருகிவிட்டன. நீதிமன்றத்தின் நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் முறை உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. அதனால், புதிய நீதிபதி ஒருவரை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்யும்போது பல சமயங்களில் நீதிபதிகளின் உற்றார் உறவினருக்கே முன்னுரிமை வழங்கப் பட்டுவருகிறது. கடந்த வருடம் பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்த எட்டு பேர்களில் ஆறுப் பேர் நீதிபதிகளுடைய உறவினர்கள். நீதிபதி பதவிகளுக்கு வாரிசுரிமையை எதிர்த்துக் கொதித்தெழுந்த பஞ்சாப் மற்றும் அரியானா வழக்கறிஞர்களின் போர்க் கொடியால் அப்பெயர்களை உச்ச நீதிமன்றம் திருப்பியனுப்பிவிட்டது.

குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டமஸ் கபீருக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பத்திரிகைகள் வெளி யிட்டன. அக்கடிதத்தில் அவர் தனக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி முதுநிலைப்படி கிடைத்திருக்க வேண்டுமென்றும், அது தனக்குக் கிடைக்காததன் காரணம், தான் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்தபோது அல்டமஸ் கபீரின் சகோதரியின் பெயரை உயர் நீதிமன்ற நீதிபதிக்குப் பரிந்துரைக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், எழுத்துபூர்வமான எதிர்ப்பைப் பதிவுசெய்ததும்தான் காரணம் என்று குறிப்பிட் டிருந்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்பிரச்சினைக்கு விடிவுக்காலம் உண்டா? உச்ச நீதிமன் றத்தைப் பொறுத்தவரை இப்பிரச்சினையில் தலையிட மறுத்து விட்டதால் தற்போது இதில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் இந்திய பார் கவுன்சிலுக்குத்தான் உண்டு. வழக்கறிஞர் களுக்கான நடத்தை விதி எண்.6-ஐத் திருத்தி, அதில் ஏற்கெனவே இருந்த ‘நீதிமன்றம் (கோர்ட்)' என்ற சொல் குறிப்பிட்ட நீதிபதியை மட்டும் குறிக்காது; அவர் பரிபாலனம் செய்யும் முழு நீதிமன்றத்தையும் உள்ளடக்கும் என்று அவ்விதி திருத்தப்பட வேண்டும். அதாவது, நீதிபதியின் உறவினர்கள் அந்த நீதிபதி இருக்கும் நீதிமன்ற வளாகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தொழில் நடத்த முடியாது என்பது அவ்விதியின் சாராம்சமாக்கப்பட வேண்டும். இதனால், பலருக்குச் சங்கடங்கள் ஏற்படலாம். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியதுபோல் தங்களது வாரிசுகளின் தொழில் தொடர வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட நீதிபதி வேறு மாநிலத்துக்கு ஊர்மாற்றம் கேட்டுச் செல்வது மட்டுமே உத்தமமான வழியாக இருக்கும்.
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி.
-
 சந்துரு, ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம், சமூக விமர்சகர்,