> குருத்து: 2026

May 3, 2026

Big bad wolves (2013) – இஸ்ரேலிய திரைப்படம் Horror Thriller movie

 


பள்ளி செல்லும் மூன்று சிறுமிகள் மூவர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தீடீரென ஒரு சிறுமி காணாமல் போகிறாள். தலைவெட்டப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு உடல் மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.   யூதர்களை பொறுத்தவரையில் முறையாக முழுமையாக உடல் அடக்கம் செய்யப்படவேண்டும். இல்லையெனில் அதை பெரிய சிக்கலாக கருதுகிறார்கள்.

 

ஒரு அதிகாரி ஒரு ஆண் ஆசிரியரை   சந்தேகித்து போலீசு தன் ஆட்களை இருவரை வைத்து அடித்து உதைத்து “உண்மையை” கக்க வைக்க முயற்சி செய்கிறார்.  ஆனால், அந்த காட்சிகள் மக்கள் மத்தியில் வைரலாகிறது.

 

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வேலை பறிபோகிறது. ஆனால் அந்த ஆசிரியரை பள்ளியில் மாணவர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அவருடைய வேலையும் சிக்கலாகிறது.

 

வேலை இழந்த அதிகாரி அந்த ஆசிரியரை கடத்தி வந்து ”உண்மையை” வரவழைத்து வேலையை காப்பாற்றிக்கொள்ளலாம் என திட்டமிடுகிறார். அதே வேளையில் அந்த பெண்ணின் அப்பா அந்த ஆசிரியர் மீது கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்.

 

அதற்கு பிறகு நடப்பதெல்லாம் களேபரம் தான்.

****

 


படத்தின் இறுதியில் எதையும் பளிச்சென சொல்லாமல், பார்வையாளர்களே சிந்திக்கட்டும் என இயக்குநர் விட்டுவிடுகிறார்.

 

எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த போலீசு அந்த ஆசிரியரை சந்தேகிக்கிறது என்பதை கடைசி வரை சொல்லமாட்டார்கள். அந்த ஆசிரியரும் கடைசி வரை தான் குற்றம் செய்யவில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார்.

 

ஆதாரங்களின் அடிப்படையில் முறையாக சட்ட விசாரணை நடைபெறாமல், கொலைவெறியோடு முன்முடிவோடு “விசாரணை” செய்வது எவ்வளவு பெரிய கொடூரம் என்பதைத் தான் படம் சொல்கிறது.

 

படத்தில் குதிரையில் ஒருவர் சுற்றிக்கொண்டிருப்பார்.  ஓரிடத்தில் கேட்பார். அரேபியன் என்றாலே ஏன் கொலை செய்ய போகிறவர் என்றே பார்க்கிறீர்கள்? என்பார். அப்பொழுது தான் இது இசுரேலிய படம் என்பது நினைவுக்கு வருகிறது.

 

இந்தப் படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இரண்டு இயக்குநர்கள் எழுதி, இயக்கியுள்ளனர்.

 

எந்த ஓடிடியிலும் இல்லை. யூடியூப்பில் இருக்கிறது. அதன் சப்டைட்டில் செட்டிங்க்ஸ்ல் கொஞ்சம் மாற்றினால் தமிழிலேயே கிடைக்கிறது. பாருங்கள்.

April 30, 2026

மே நாள் – பயத்தை உடைக்கும் நடை



அந்த நாள்
காலை மட்டும் பிறக்கவில்லை
ஒரு சிந்தனை பிறந்தது

 

மூடப்பட்ட கதவுகளுக்குள்
சுருண்டு கிடந்த பயம்
வெளியே வந்தது
மனிதர்களின் காலடியில் நசிந்தது.

 

தொழிற்சாலைகளின் புகை
இன்று வானத்தில் ஏறவில்லை
மாறாக
மனங்களில் ஏறிய கோபம்
மேகமாக திரண்டது

 

சாலைகளில்
ஒரு கூட்டம் நகரவில்லை
நெஞ்சங்கள் நகர்ந்தன
நாளையை நோக்கி

 

நாம் வேலைக்காரர்கள் அல்ல
நாம் மனிதர்கள்!”
என்ற குரல்
ஒரு வாயில் இருந்து இல்லை
நூறு இதயங்களில் இருந்து வெடித்தது

 

கைகளில் உயர்ந்த கொடிகள்
காற்றை மட்டும் வெட்டவில்லை
அடக்குமுறையின் அமைதியை வெட்டின

 

ஒவ்வொரு அடியும்
அதிகாரத்திற்கு எதிரான சாட்சியம்
ஒவ்வொரு முழக்கமும்
நீண்ட மௌனத்திற்கு முடிவு

 

அம்மா நின்றாள்
அவள் கண்களில் பயம் இருந்தது
ஆனால்
அதை விட பெரியது
புரிதல்

 

தன் மகன் நடப்பதைப் பார்த்தாள்
ஆனால்
அவள் உணர்ந்தது
ஒரு தலைமுறை எழுந்ததை

 

அந்த நடை
சாதாரண பாதை இல்லை
வரலாறு திசை மாறும் வழி

 

போலீஸின் கண்ணோட்டம்
பயத்தை விதைக்க முயன்றது
ஆனால்
மக்களின் பார்வை
அதை மிதித்தது

 

அடி வாங்கிய உடல்கள்
தாழவில்லை
மாறாக
உயர்ந்து நின்றன

 

இரத்தம் சிந்திய இடம்
வலி மட்டுமில்லை
விதை போல்
எதிர்ப்பை விதைத்தது

 

அன்று
அவர்கள் வென்றார்களா?
அல்ல

 

ஆனால்
அவர்கள் பயத்தை இழந்தார்கள்

 

அது போதும்
ஏனெனில்
பயம் இழந்த மனிதனை
எந்த சக்தியும் அடிமையாக்க முடியாது

 

சூரியன் மறைந்தபோது
ஒளி குறையவில்லை
மாறாக
ஒவ்வொரு உள்ளத்திலும்
ஒரு புதிய விடியல் ஏறியது

 

-          ”தாய்” நாவலில் வரும் மே நாள் நினைவுகளை கொண்டு எழுதப்பட்டது.

லால்பாக் பொட்டனிக்கல் கார்டன் – பெரு நகரத்தின் நடுவே பெரிய பூங்கா

 


ஒரு ஆள் பழைய சிந்தனை கொண்டவராய் இருந்தால், என்னப்பா ஹைதர் காலத்து ஆளாக இருக்கிறாயே?! என்பார்கள்.   உண்மையில், இந்த லால் பாக் திப்புச் சுல்தானின் அப்பா ஹைதர் அலியால் 1760ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திப்புச் சுல்தான் இன்னும் விரிவுப்படுத்தியிருக்கிறார்.

 

நகரத்தின் மையத்தில் 240 ஏக்கரில் பரந்து விரிந்து நிற்கிறது இந்த பூங்கா.  வெளிநாடுகளில் இருந்து விதவிதமான மரங்கள், செடிகளை பார்த்து பார்த்து வரவழைத்து கவனமாய் வளத்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் சிவப்பு மலர்களை நிறைய வளர்த்ததால், சிவப்பு தோட்டம் (Lal bagh) என பெயர் காரணமாகியிருக்கிறது.

 





265 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட பெரிய வரலாறு தான்.   அதனால் பெரிய, மிகப்பெரிய மரங்கள் இருக்கின்றன. 250 வருட  ஒரு இலவம் பஞ்சு மரம் (silk tree) ஒன்று இருக்கிறது. மரமாய் இருந்து, கால ஓட்டத்தில் மில்லியன் ஆண்டுகள் கடந்து அது இப்பொழுது பாறையாய் இருக்கிறது. வேறிடத்தில் இருந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.   நல்ல விசயம்.


 

ஒரு ஏரி உள்ளே இருக்கிறது. அதன் அருகில் செயற்கையாய், மணிக்கு ஒருமுறை 1 முதல் 1.15. 2 முதல் 2.15 என்ற கணக்கில் கால் மணி நேரம் அருவி போல ஒன்றை செயற்கையாய் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கண்ணாடி மாளிகை இருக்கிறது.  இதில் குடியரசு தினத்திலும், சுதந்திர தினத்திலும் சிறப்பாக மலர் கண்காட்சி நடத்துகிறார்கள்.

 

தமிழ் புத்தாண்டு தினத்தில் உள்ளே போயிருந்தோம்.   குடும்பம் குடும்பமாய் ஒரே விதமான ஆட்கள் அவர்களுடைய வண்ணம், பெரிய சிவப்பு பொட்டு வைத்துக்கொண்டு என ஆயிரக்கணக்கில் வந்துகொண்டே இருந்தார்கள். அசாம் மக்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இது விசேச நாள் என நண்பர் கணித்தார்.  ஆனால் பேட்டரி கார் ஓட்டியவர் இவர்கள் நேபாளத்துக்காரர்கள். அவர்களுக்கு இன்று புத்தாண்டு என எங்கள் குழப்பத்தை தெளிவுப்படுத்தினார். மகிழ்ச்சி.

 

விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம்.  வார நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். ஆகையால் நாட்களை திட்டமிட்டு செல்லுங்கள்.

 

உள்ளே நுழைய கட்டணமாய் பெரியவர்களுக்கு ரூ. 50, சிறியவர்களுக்கு ரூ. 25 என்றும் விசேச நாட்களில் இன்னும் கூடுதல் விலை விற்கிறார்கள்.


 

மைசூரில் நகரத்துக்கு உள்ளேயே ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றை நடத்தியது ஆச்சர்யம் தந்தது. நிறைய விலங்குகளும் உற்சாகமாய் வலம் வந்தன.  பர பரவென இயங்கும் ஒரு மெட்ரோ நகரத்துக்கு மத்தியில் 250 ஏக்கரில் லால் பாக் பூங்கா மட்டும் மெதுவாக சுவாசிக்க செய்கிறது எனலாம்.

 

-        -  இரா. முனியசாமி

-         14/04/2026

April 27, 2026

The Shadow’s Edge (2025) ஜாக்கிசானின் அருமையான சீன ஆக்சன் திரில்லர்

 


வில்லனின் வளர்ப்பு மகன்களாகிய இளைஞர்கள் ஒவ்வொன்றிலும் திறன் கொண்டவர்கள். அவர்களை கொண்டு, சாத்தியமில்லாத கொள்ளையை திறம்பட செய்கிறார்.   போலீசுக்கு பெரிய அழுத்தமாகிறது.

 

ஓய்வு பெற்று வாழும் நாயகனை போலீசு துறை மீண்டும் அழைக்கிறது.  அவர் நவீன வசதிகள் கொண்டது இல்லாமல், பழைய முறையில் ஒரு படையை உருவாக்குகிறார்.    அடுத்த கொள்ளைக்காக காத்திருக்கிறார்.

 

இதில் வளர்ப்பு மகன்களுக்கும், வில்லனுக்கும் ஒரு உள்ளுக்குள் முரண்பாடு வருகிறது.  அவர்களுக்குள் சிக்கலாகிறது.

 

நாயகன் அந்த கும்பலின் தலைவனுக்கு  வலை விரிக்கிறார்.  பிடித்தாரா? என்பதை விறு விறுப்பான காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

 

***

 


ஜாக்கிசானின் கடந்த பத்து ஆண்டு வரலாற்றில், இப்படி துவக்கம் முதல் இறுதி வரை ஒரு பரபர ஆக்சன் படம் பார்த்து நாட்களாயிற்று.   அருமையான படம்.

 

என் 20களில் சாகச சண்டையுடன், நகைச்சுவையும் கலந்து மகிழ்வித்த ஜாக்கிசான் இப்பொழுது அவருடைய எழுபதுகளிலும் மகிழ்விக்கிறார்.  சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல்  அவரே நடிக்கிறார். அடிபடுகிறார்.  இறுதி காட்சிகளில் காண்பிக்கிறார்கள்.

 

Eye in the sky (Surveillance என அர்த்தம்)  ஒரு தென்கொரிய படம்  அந்த படத்தை அடிப்படையாக கொண்டு, இன்னும் செழுமைப்படுத்தி, ஆக்சன் காட்சிகளை அதகளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

 

ஆக்சன் ரசிகர்கள், ஜாக்கிசான் ரசிகர்கள் அவசியம் பாருங்கள். ஆங்கிலத்தில் சப் டைட்டிலுடன் பார்த்தேன். இப்போதைக்கு  எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வகைகளில் முயலுங்கள். 

Uber, Rapido : ஓட்டுநருக்கு மதிப்பெண் வாடிக்கையாளருக்கும் மதிப்பெண் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு?


Uber, Rapido : ஓட்டுநருக்கு மதிப்பெண்

வாடிக்கையாளருக்கும் மதிப்பெண் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு?

 

முன்பு ஒருமுறை ஒரு ஓட்டுநரின் மொபைலை கவனித்தபொழுது வாடிக்கையாளருக்கான ரேட்டிங் கண்ணில்பட்டது.

 

இன்று ஊபர் நிறுவனத்தின் CTO பிரவீண் அவர்களுடைய நீண்ட பேட்டியை கவனித்த பொழுது, இடையில் இதைப் பற்றியும் பேச்சும் வந்தது.

 

நாம் பல்வேறு தேவைகளுக்கு வாகனங்களை வாடகைக்கு ஊபர், ரேபிடோ வழியாக அமர்த்திக்கொண்டு சென்று வருகிறோம்.   அந்த சேவை முடிந்த பிறகு நம்மை கட்டாயப்படுத்தி, சேவையை குறித்த மதிப்பெண்ணை இட வைத்துவிடுகிறார்கள்.

 

அதே போல ஒவ்வொரு சேவை முடிந்து சென்ற பிறகு ஓட்டுநர்களும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பெண் அளிக்கிறார்கள். 

 

இந்த மதிப்பெண் குறித்து நாம் ஏன் கவலைப்படவேண்டும் என நினைக்கலாம்.  நான் ஒரு வாகனத்தை பதிவு செய்யும் பொழுது 4.7 மதிப்பெண்ணுக்கு மேல் இருக்கிறதா என பார்ப்பேன். அப்படி இருந்தால், அந்த ஓட்டுநர் எவ்வளவு சேவைக்கட்டணம் வருகிறதோ அதை வாங்கி கொண்டு சென்றுவிடுவார். பேரம் பேசமாட்டார்.

 

இதே தானே ஓட்டுநருக்கும். நாளை நாம் பதிவு செய்யும் பொழுது நமக்கு கொடுக்கப்படும் மதிப்பெண் தான் நமது அழைப்பை ஏற்பதா? மறுப்பதா என முடிவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுவோம்.  நெருக்கடி நிலையில் மிகவும் சிக்கலாகும்.

 

உடனே போய், Uber ஆப்புக்குசென்று Account பகுதிக்கு சென்று Privacy & Data பகுதிக்கு சென்று … Privacy Center போய், Would you like to see a summary of how you use Uber? – see summary பகுதிக்க்கு சென்றால்… நாம் பெற்றிருக்கும் மதிப்பெண்ணைப் பார்க்கலாம். என்னுடையது 4.92 யாக இருந்தது. மகிழ்ச்சி.

 

ஓட்டுநர் நம்மை எப்படி மதிப்பாக நடத்தவேண்டும் என நினைக்கிறமோ, நாமும் அப்படியே மதிந்து நடந்துகொள்வோம்.   ஏறும் பொழுது ஒரு புன்னகை செய்யலாம்.  விடை பெறும் பொழுது நன்றி சொல்லலாம்.

-         

April 23, 2026

முத்து என்கிற காட்டான் (2026) வலைத்தொடர்

 


மதுரை மாவட்டத்தின் கிராமத்தில் உள்ள ஸ்டேசனில் மூன்று ஆண்டுகளாக வழக்குகள் ஏதும் பதியவில்லை என்பதால்,  தூக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.  இந்த சமயத்தில் எல்லைப் புறத்தில் ஒரு வெட்டப்பட்ட தலை மட்டும் கிடைக்கிறது.

 

மெல்ல மெல்ல நூல் பிடித்து நகரும் விசாரணையில், முத்து என்பவரின் தலை தான் என கண்டுபிடிக்கிறார்கள்.  ஊர் ஊராக பயணித்திருக்கிறார். ஒரு நடனக்குழுவோடு இருந்திருக்கிறார். பிறகு கேரளாவில் ஒரு டிரஸ்டில் வேலை செய்திருக்கிறார்.

 

பிறகு இந்த கொலை எதற்காக என்பதை கண்டறியும் பொழுது ஆச்சரியப்படுகிறார்கள்.

 

*****

 


அத்தனை சுவாரசியமில்லை என இரண்டு பேர் சொன்னதை கேட்டும், இந்த தொடரை பார்த்ததற்கு இரண்டு பேர் தான் காரணம். முதலில் இயக்குநர் மணிகண்டன் (இணைந்து அஜித்குமாரும்). இரண்டாவது விஜய் சேதுபதி.

 

முத்து ஊர் ஊராக சுற்றியதற்கான மூல காரணம் என சொல்லப்படுவது எல்லாம் அத்தனை அழுத்தமாகவும், தெளிவாகவும் சொல்லப்படவில்லை.  அதனால் எல்லாமும் பலவீனமாய் தெரிகிறது. மிகவும் மெதுவாக போகிறது என்பதெல்லாம் காரணம் ஒருபக்கம். திரைக்கதையே மிகவும் பலவீனம். அது தான் காரணம்.

 

ஓடிடி வெளியீடு என்பதால்,  கேரளாவிற்கும் கதை செல்கிறது. இன்னும் கொஞ்சம் ஜியோ அழுத்தம் கொடுத்திருந்தால், ஆந்திரா, கர்நாடகாவிலும் கூட முத்துவை சுத்த விட்டிருப்பார்கள் போல!

 

படத்தில் கொஞ்சும் சுறுசுறுப்பான காட்சிகளை எல்லாம் தொகுத்து டிரைலராய் மாற்றியிருக்கிறார்கள்.  அதைப் பார்த்துவிட்டு தொடரை பார்ப்பதற்கு மிகவும் ஏமாற்றமாய் தான் நிச்சயம் இருக்கும்.

 

மற்றபடி நடிகர்கள் அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஜியோ ஹாட் ஸ்டாரில் இருக்கிறது. நேரம் நிறைய இருப்பவர்கள் முயலலாம்.

Pretty Lethal (2026) Action Thriller

 


பாலே என்பது உடலால் மட்டும் ஆடப்படுவது அல்ல; மனதாலும் ஆடப்படுவது.”

****

 

அமெரிக்காவைச் சேர்ந்த பாலே நடனம் ஆடும் பெண்கள் குழு ஒன்று. அந்த குழுவில் ஒருவர் மேட்டுக்குடி சீமாட்டி,  ஒருவர் ஏழ்மை நிலைமையில், ஒருவர் காது கேளாத, வாய் பேச முடியாதவர் என ஐந்து பெண்களும்  வெவ்வேறு குணநலன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் குழுவில் ஒத்திசைவு கூட சிக்கலாக இருக்கிறது.

 

ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் ஒரு சர்வதேச ஒரு போட்டிக்கு அழைக்கப்படுகிறார்கள். தங்கள் ஆசிரியருடன்  போய் ஹங்கேரியை அடைகிறார்கள். அடுத்த நாள் போட்டி நாள்.

 

ஒரு அடர்ந்த காட்டை கடப்பதற்காக செல்லும் வேன் பழுதடைய, போட்டிக்கு தாமதமாகிறது என  நடந்தே அருகில் உள்ள ஒரு விடுதிக்குள் நுழைகிறார்கள். (சுற்றிலும் காடு – நடுவே விடுதி). ஒரு பெரிய கும்பல் பாரில் தண்ணியடித்தும், சூதாடிக்கொண்டும் இருக்கிறார்கள்..

 

ஒரு முன்னாள் பாலே நடனக்காரியான விடுதியின் பெண் முதலாளி அவர்களை வரவேற்கிறார்.  அங்கு மாமூலை வாங்க வந்திருக்கும் ஒரு மாபியா கும்பலின் மகன் அந்த குழுவின் ஆசிரியை சீண்ட, அந்த அம்மா கடுப்பில் அவனை உதைக்க அவன் சுட்டு கொன்றுவிடுகிறான்.

 

நிலைமை மோசமடைகிறது. இந்த செய்தி வெளியில் இருந்தால், நிலைமை சிக்கலாகும் என அவர்கள் இங்கு வரவேயில்லை எல்லாவற்றையும் மறைக்க முயல்கிறார்கள்.   படம் துவங்கி 20 நிமிடங்களில் இதையெல்லாம் சொல்லிவிடுகிறார்கள்.

 

மாபியா கும்பலிடம்  மிக மோசமாக சிக்கிக்கொண்ட அந்த பாலே நடன பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா என்பது தான் முழு நீள சண்டைக் கதை.

 

****


பாலே நடனம் என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிக கடுமையான பயிற்சி கொண்டது.  கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டவர்களால் தான் முழுமையான கட்டுப்பாட்டுடன் மேடையில் நடனமுடியும் என்கிறார்கள்.

 

அந்த பயிற்சியை கொண்டு நம் நம்மை காப்பாற்றிக்கொள்வோம் என போராடுகிறார்கள்.  பாலே நடன சண்டைக் காட்சி நன்றாகவும் படத்தில் வேலை செய்திருக்கிறது.

 

ஐந்து பெண்களும் ஐந்து விதமான குண நலன்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் தான் மொத்த படத்தையும் தாங்குகிறார்கள்.

 

மொத்தப் படம் 88 நிமிடங்கள் தான். சண்டைப் பிரியர்களுக்கு பிடிக்கும்.  அமேசானில் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது.

 

நிறுவனத்தின் DSC ஒப்புதல் தாமதம் – சட்ட ரீதியான தீவிர விளைவுகள்

 


ஒரு நிறுவனம் தனது பணியாளர்களின் (Employees) விவரங்களை EPFO தளத்தில் பதிவு செய்யவும், திருத்தவும், உறுதிப்படுத்தவும், நிறுவனத்தின் பொறுப்பாளர் (Authorised Signatory) அவர்களின் DSC (Digital Signature Certificate) பதிவு மற்றும் அதன் ஒப்புதல் (Approval) அவசியமாக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய நடைமுறைகளின் படி, DSC Active நிலையில் இருந்தால் மட்டுமே… புதிய பணியாளர்களை சேர்க்க முடியும். பணியாளர் விவரங்களை திருத்த முடியும். KYC போன்ற அம்சங்களுக்கும் ஒப்புதல் தரமுடியும். மாதாந்திர நிதியை தாக்கல் செய்ய என அனைத்தையும் செய்ய முடியும்.

 

சட்ட ரீதியான கட்டுப்பாடுகள்

 

இந்த நடைமுறைகள், கீழ்கண்ட சட்டப் பிரிவுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன:

 

Section 6 of EPF Act, 1952 -  பணியாளர்களின்  பி.எப். நிதி பங்களிப்பு கட்டாயம்

 

Paragraph 36(1) of EPF Scheme, 1952 - பணியாளர்களின் விவரங்களை சரியாக பராமரிக்கும் பொறுப்பு நிறுவனத்திற்கு இருக்கிறது.

 

Paragraph 38 of EPF Scheme, 1952 - மாதாந்திர நிதி செலுத்த வேண்டிய கடமை

 

Section 14B of EPF Act  - தாமதத்திற்கு அபராதம்

 

Section 7Q of EPF Act -  தாமதத்திற்கு வட்டி

 

நிறுவனங்கள் DSC பதிவு செய்த பின்னர், அந்த DSC-க்கு PF அலுவலக ஒப்புதல் பெற
1 மாதம் முதல் 2 மாதங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்படுகிறது.  இந்த தாமதம் காரணமாக - புதிய பணியாளர்களை EPF-ல் பதிவு செய்ய முடியவில்லை.  ECR தாக்கல் செய்ய முடியவில்லை  PF நிதியை செலுத்த முடியவில்லை

 

1.       சட்டப்படி தவறு (Statutory Default)

 

நிறுவனம் தவறு செய்யவில்லை என்றாலும், DSC அப்ரூவல் இல்லாததால் நிதியை செலுத்த முடியாத நிலை  சட்டப்படி செலுத்த மறுத்ததாக (default) கருதப்படும்

 

2. வட்டி &  அபராதத்தை தவிர்க்க முடியாது

 

  • Section 7Q –  வட்டி
  • Section 14B – அபராதம்

நிறுவனத்தின் மீது தவறே இல்லையென்றாலும், இப்பொழுது சட்டப்படி தவறாகிவிடுகிறது. இதை செலுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை உருவாகிறது.

 

3. பணியாளர் உரிமை பாதிப்பு

 

புதிய பணியாளர் EPF-ல் சேர்க்கப்படவில்லை என்றால், PF தொகை செலுத்த முடியாது போகும்.  இந்த காலத்தில் வேலை செய்யும் பொழுது பணியாளர் உயிர் துறந்தால், அவரது குடும்பத்தினருக்கு, PF நிதி, EPS ஓய்வூதியம், EDLI Insurance (₹7 lakh வரை)  இவற்றை பெற முடியாத நிலை உருவாகலாம்.

இதில் நிறுவனத்தின் தவறு இல்லாதபோது..  PF  தன்னுடைய அலுவலக தாமதத்தினால் காரணமாக ஏற்பட்ட விளைவுக்கு யார் பொறுப்பு ஏற்பது?

நடப்புச் சட்டப்படி- EPFO தாமதம் குறித்து வெளிப்படையான நிவாரண ஏற்பாடு இல்லை. நீதிமன்றத்திற்கு சென்று முறையிடவேண்டிய நிலை வரும்.   

 

நிர்வாக ரீதியான குறைபாடு என்பது ஒரு சாதாரண தொழில்நுட்ப தாமதம் அல்ல:

 

Statutory compliance பாதிப்பு, பணியாளருக்கான பலன்கள் (Social security) பாதிப்பு , நிறுவனத்தின் மீது தவறான பொறுப்பு (liability ) உருவாகிறது. இது அலுவலக ரீதியான தோல்வியாக (Systemic Failure) பார்க்கவேண்டும்.

 

இந்த நிலைமையில் நிறுவனங்கள், தங்களுக்கான பாதிப்புகளில் இருந்து தப்பிக்க..

 

  1. DSC பதிவு செய்த உடனே புகார் ஒன்றை (Grievance) பதிவு செய்ய வேண்டும்
  2. பி.எப் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். (email / letter)
  3. அதற்கான ஆதாரங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும்
  4. தாமதம் காரணமாக அபராதம் வந்தால்  நாம் தரப்பில் ஆதாரம் (representation) தர தயாராக இருக்க வேண்டும்

 

சமூக பாதுகாப்பு (Social Security) என்பது சட்டத்தின் நோக்கம்; தொழில்நுட்ப தடை காரணமாக அதை மறுக்கும் நடைமுறை ஏற்க முடியாது.  இந்த தாமதம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினை ஆகும்.

 

இந்த நிலைமைக்கு EPFO துறையிலிருந்து தெளிவான வழிகாட்டுதல் (clarification) அல்லது தற்காலிக தளர்வு (relaxation) வழங்கப்படுவது மிகவும் அவசியம்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721