> குருத்து

May 21, 2023

பின்தொடரும் நினைவுகள்


அழுது அஞ்சலி செலுத்தி

மாதங்கள் கடந்த பின்பும்
நண்பர்கள் குழு வாட்சப்பில்
'அவரும்' இருக்கிறார்.
பதிவைப் படித்தவர்களில்
'அவரும்' இருக்கிறார்.

பேஸ்புக்கில் என்றோ எழுதிய பதிவுக்கு
யாரோ எழுதிய பின்னூட்டத்தால்..
திடீரென மேலெழும்பி
கண்ணில்படுகிறார்.

இறப்பதற்கு முன்பை விட
இப்பொழுது அடிக்கடி
கனவில் வந்துபோகிறார்.

பதட்டமாய்
'அவருடைய' எண்ணை
என் செல்போனில் இருந்து அழிக்கிறேன்.
திடீரென ஒருநாள் அழைத்துவிடுவாரோ என
பயமாக இருக்கிறது.

May 19, 2023

ராஜா என்கிற பிச்சைக்காரன்


என் சொந்த ஊரின் உறவுகளில் ஒன்றுவிட்ட மாமா ஒருவர் இருந்தார். அவர் செய்த தொழிலில் செல்வ செழிப்புடன் இருந்த பொழுது முதல் பையன் பிறந்தான். அவன் ராஜாவாக வாழவேண்டும் என ஆசைப்பட்டு ”ராஜா” என பெயர் சூட்டினார். அதற்கு பிறகு மூன்று பெண்பிள்ளைகள்.


செல்வ செழிப்பு நல்ல விசயங்களையும் கொண்டுவரும். கோளாறுகளையும் கொண்டுவரும். மாமா இன்னொரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டார். அவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள். சண்டைகள் இருந்தாலும், அவரது சொந்தங்கள் அந்த குடும்பத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். சொந்தங்களின் விசேசங்களில் அவரையும், குழந்தைகளையும் பார்க்கமுடியும்.

செய்த தொழில் நொடித்து போகும் பொழுது குடியையும் சேர்த்துக்கொண்டார். எப்பொழுதும் மிதக்க ஆரம்பித்தார். ஏதோ ஒரு விசேசத்திற்காக காவிரி ஆறு மிக மிக குறுகலாய்... ஆனால் நல்ல வேகத்துடன் ஓடும் கொடுமுடி ஊரில் தண்ணியைப் போட்டு மப்பில் நின்ற பொழுது, ஆற்றில் ஒரு தக்கையைப் போல இழுத்து செல்லப்பட்டார். தொடர்ந்து சில நாட்கள் தேடியும் மாமாவின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. காவிரியுடன் கலந்துவிட்டார்.

பிறகு திடீர் திடீரென "உங்க அப்பாவை ஈரோட்டில் பார்த்தேன். சேலத்தில் பார்த்தேன்" என யாராவது சொன்னால்... அவரது மகன் ராஜா இரண்டு நாட்கள் அங்கு போய் தேடிவிட்டு வருவான். பிறகு அவரைப் பற்றிய புரளிகளும் அடங்கிவிட்டன.

இப்பொழுது மாமாவின் வாரிசான ராஜாவிற்கு வருவோம். பள்ளி படிப்பு பெரிதாக இல்லை. இளைஞனான ராஜா பள்ளிகளின் வாசலில் ஐஸ் விற்க ஆரம்பித்தான். ”ஐஸ் ராஜா” என பெயர் பெற்றான்.

சீசனுக்கு சீசன் தொழிலை மாற்றுவான். வெயில் காலங்களில் ஐஸ் விற்பவன், கார்த்திகை, மார்கழியில்.. மீனாட்சியம்மன் கோயில் வாயில்களில் நின்று... ஐயப்ப பக்தர்களிடம் மாலைகள், கவரிங் நகைகள் விற்பான். பழனியின் அடிவாரத்தில் வியாபாரம் செய்வான்.

டல்லான ஆளெல்லாம் இல்லை. நன்றாக உழைக்க கூடிய, நன்றாக பேசக்கூடிய, திறமை கொண்டவன் தான். உதிரி தொழில் செய்பவர்களிடம் நன்றாக காசு புழங்கும். ஆனால் அவர்ளின் தொழிலின் தன்மையைப் போல ஏற்ற இறக்கங்களுடன் இருப்பார்கள்.

ராஜா அப்படித்தான். காசு இருந்தால் தண்ணி தான். நல்ல சாப்பாடு தான். இல்லையென்றால் அமைதியோ அமைதி.

அத்தனைத் தங்கைகள் இருந்த பொழுதும், அவன் ஒழுங்காய் இருந்தால் போதும். என பெண் பார்த்து மணம் முடித்தார்கள். ஒரு பெண் குழந்தை பிறந்தது. குடும்பம் கோருகிற ஒழுங்குக்கு கட்டுப்பட மறுத்தான். சில ஆண்டுகளிலேயே உறவு முறிந்தது.

இன்னும் மோசமானான். குடி. குடி. பார்க்கும் சொந்தங்களிடம் தயங்காமல் பணம் கேட்பான். வேலைக்கு போவது குறைந்தது.

சென்னைக்கு நான் இடம் பெயர்ந்ததும்… அவனைப் பற்றிய செய்திகள் எப்பொழுதாவது யாராவது சொல்வார்கள். அப்படி இந்த முறையும் செய்தி ஒன்றைச் சொன்னார்கள். இந்தச் சித்திரைத் திருவிழாவில் திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பதை சொந்தங்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள்.

அவனை அந்த நிலையில் பார்த்த உறவுக்கார பெண் "உழைக்காமல்... குடும்பத்தை கேவலப்படுத்துற மாதிரி சொந்த ஊரிலேயே இப்படி பிச்சை எடுக்குகிறேயே!" எனத் திட்டியதும் ஒரு புன்சிரிப்புடன் கடந்து சென்றுவிட்டானாம்.

உறவுகளில் பல மனிதர்கள் பொருளாதாரத்தின் பல படிக்கட்டுகளில் வாழ்ந்தாலும்.. நகரம் எங்கிலும் நிறைய மனிதர்கள் கையேந்துவதை பார்த்துக் கொண்டிருந்தாலும். முதன்முறையாக 40+ல் நம்மோடு வாழ்ந்த சக வயது மனிதன் ஒருவன் பிச்சை எடுக்கிறான் என கேள்விப்பட்டதும் பெரும் துக்கத்தை தருகிறது.

ஒரு மனிதனின் வீழ்ச்சி பல சிந்தனைகளை கிளர்ந்தெழ செய்கிறது.

May 18, 2023

I can speak (2017) தென்கொரிய படம்


நியாயம் கேட்கிறாள் அந்த முதிய தாய்!

 தென்கொரியாவின் நகர்ப்புற பகுதியில் ஒரு தையற்காரராக தனித்து வாழ்கிறார். தான் வாழும் பகுதியில் பொது ஒழுங்கை குடியிருப்புவாசிகளோ, சிறு வியாபாரிகள் என யார் மீறினாலும் உரிமையுடன் கண்டிக்கிறார். குறைகளை சரிசெய்ய அரசுக்கு ஆதாரத்துடன் புகார் மனுக்கள் கொடுக்கிறார். சரி செய்யவில்லை என்றால் அதிகாரிகளின் சட்டையைப் பிடித்து கேட்கிறார். இருபது ஆண்டுகளில் எட்டாயிரம் மனுக்கள். அவரின் தலையைப் பார்த்தாலே மாவட்ட நிர்வாக ஊழியர்கள் அலறுகிறார்கள்.



பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகள், அதில் லஞ்சம் என அதிகார வர்க்கம் கல்லா கட்டப் பார்க்கிறது. அவர் தொடர்ந்து தரும் புகார்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. வேறு குறுக்கு வழிகளை கையாள்கிறார்கள்.

அந்த அம்மாவிற்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என ஆசை இருக்கிறது. அவரின் தம்பியை சின்ன வயதிலேயே அமெரிக்காவிற்கு தத்து எடுத்துப் போனதால், தம்பிக்கு கொரியன் புரியாது. இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. இந்த சமயத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் இங்கிலீஷ் பேச தெரிந்த ஒரு இளைஞர் வேலைக்கு புதிதாக சேர்கிறார்.


அவரை தனக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுக்க கேட்கிறார். அவரோ மறுக்கிறார். பின்பு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலீஷ் கற்றுக்கொடுக்க முன்வருகிறார்.

இடையில் படம் என்ன நொண்டுகிறதே என நாம் நினைக்கும் பொழுது, இங்கிலீஷ் கற்றுக்கொள்வதின் பின்னணிக்கு வேறு ஒரு உணர்வுப்பூர்வமான காரணம் சொல்லி நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.

Spoiler Alert

வரலாற்றில் மனித குலத்துக்கு பெரும் சேதம் விளைவித்தவை முதல் உலகப்போரும், இரண்டாம் உலகப் போரும்!

ஏகாதிபத்தியங்கள் தங்களது சந்தைக்காகவும், நாடுகளைப் பிடித்து
கொள்ளையடிப்பதற்காகவும் போட்ட சண்டைகள் தான் இரண்டு உலகப்போர்களும்!

இதில் ஏகாதிபத்திய இராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் சொல்லி மாளாதவை.


இதில் ஜப்பான் இராணுவம் செய்த செயல்கள் இன்னும் கொடூரம். தான் ஆக்கிரமித்த சீனா, கொரியா, தைவான், வியட்னாம் என பல நாடுகளில் பள்ளிப் படிக்கிற பெண் பிள்ளைகளை தங்களின் பாலியல் இச்சைக்கு பலியாக்கினார்கள். அதைத் தொடர்ந்தும் செய்தார்கள். Comfort women என வக்கிரமாய் பெயரிட்டு அழைத்தார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட பல பெண் பிள்ளைகள் மன உளைச்சலினால் தற்கொலை செய்தார்கள். மனநலம் பாதித்தார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஏகாதிபத்தியம் தோற்றுப்போனது.

அதற்கு பிறகு பாதிக்கப்பட்ட அவர்கள் எஞ்சியிருந்த தங்கள் வாழ்நாள் முழுவதும் உலக நாடுகளிடம் தங்களுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஜப்பான் நாட்டினர் இன்றைக்கு வரைக்கும் தங்கள் இராணுவம் இப்படி ஒரு செயலை செய்யவில்லை என அடம்பிடிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கவும் மறுக்கிறார்கள்.

ஏகாதிபத்தியங்கள் அப்படித்தான். தனியுடைமையின் வளர்ந்த வடிவம் தானே ஏகாதிபத்தியம்.

ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ நாடுகளும் வரலாற்றில் நீடிக்கும் வரை சுரண்டலையும் ஒழிக்க முடியாது. அவர்களின் அடியாட்படைகளான இராணுவத்தையும், போலீசையும் ஒழிக்க முடியாது.

பெரும்பாலான மக்களுக்கான அரசு மலர்ந்தால் மட்டுமே, இராணுவத்தை, போலீசை கலைத்து அதன் அடிப்படை மக்கள் விரோத தன்மையை ஒழித்து மக்கள் படையாக மாற்ற முடியும்.

அதை நோக்கி மனித குல நலனுக்காக சிந்திப்பவர்கள் சிந்திக்கவேண்டும். செயலாற்றவேண்டும்.

வரலாற்றில் நடந்த அநீதிக்கு நியாயம் கேட்கும் ஒரு தாயாக அருமையாக நடித்திருக்கிறார். இறுதி காட்சியின் பொது விசாரணை பொழுது தனது கோரமான வயிறை காண்பிக்கும் பொழுது, மொத்த அரங்குமே தலை குனியும்.

Kim Hyeon-Seok அருமையாக இயக்கியிருக்கிறார். அருமையான படம். பாருங்கள்.