> குருத்து: March 2024

March 22, 2024

Attam (2023) மலையாளம்


கேரளாவைச் சார்ந்த ஒரு நாடகக் குழு. ஒரு மேடை நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு தம்பதியினர் அந்த குழுவை பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விருந்து தர விரும்புகிறார்கள்.


ஒரு ரிசார்ட்டில் கூடுகிறார்கள். பெரும்பாலோர் தண்ணியடிக்க, விருந்து முடிகிறது. இரவு 2.30 மணியளவில் குழுவில் உள்ள ஒரு பெண் அறையின் சன்னலை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பொழுது, குழுவில் உள்ள ஒருவர் பாலியல் சீண்டல் செய்துவிடுகிறார்.

இந்தப் பிரச்சனையை குழுவில் உள்ள தன் ’காதலனிடம்’ சில நாள்கள் கழித்து தெரிவிக்கிறார். குழுவில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சினிமா நடிகர் இருக்கிறார். அவர் போட்டிருந்த சென்ட், உருவத்தைக் கொண்டு அவராகத் தான் இருக்கும் என சந்தேகிக்கிறார். காதலன் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கிறார்.

இந்தப் பிரச்சனையை குழுவிலேயே பேசி தீர்த்துவிடுவது நல்லது. வெளியே போலீசு, வழக்கு என போனால், குழுவின் பெயர் கெட்டுப்போய்விடும் என அஞ்சுகிறார்கள்.

குழு கூடுகிறது. அந்த நடிகரால் கலந்துகொள்ள இயலவில்லை. அவரைத் தவிர மற்ற குழு ஆட்கள் விவாதிக்கிறார்கள். பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணையும் அழைக்கிறார்கள்.

ஒரு வீட்டில் கூடி விவாதிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***


படம் எடுத்த விதத்தில் 1950களில் வெளிவந்த “12 Angry Men” படத்தை நினைவுப்படுத்துகிறது. ஒரு வழக்கு குறித்து, 12 ஜூரிகள் விவாதித்து ஒத்த கருத்துக்கு வரவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துவிடும். அவர்கள் விவாதித்து ஒத்த முடிவுக்கு வருவது தான் முழுப்படமும். அருமையான படம்.

ஒரு முக்கியப் பிரச்சனை. கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். காதலனுக்கு இருக்கும் ஒரு மறைமுக அஜண்டாவில் ஒரு முன்முடிவோடு துவங்கும் விவாதம், பிறகு ஒரு திருப்புமுனைக்கு பிறகு அவர்களின் மனநிலை எப்படி சாய்கிறது? எந்த திசையில் விவாதம் செல்கிறது? பெண்களைப் பற்றிய அவர்களுடைய பார்வை? எந்த முடிவுக்கு வருகிறார்கள் என்பதில் இருந்து நாம் நிறைய புரிந்துகொள்ள முடிகிறது.

படத்தின் இறுதியில் வர்க்க மனநிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. தங்களுக்கு வரும் பணபலன்கள், பிற பலன்களுக்கு ஏற்ப கருத்துகளை வளைப்பது, எளிய மக்கள் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கம் மனநிலை தான் பெரும்பாலும் ஊசலாட்டத்துடன் இருப்பதை நான் என் அனுபவத்திலேயே கவனித்திருக்கிறேன். சமூகம் குறித்த அறிவியலும் அதைத்தான் சொல்கின்றன.

ஒரு பெண் தனக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்கும் பொழுது, அவளுடைய உடை, பழக்கவழக்கங்கள் என சிலர் கேள்விக்குள்ளாக்குவது அபத்தம். அப்பொழுதே சிலர் கண்டிக்கிறார்கள். படத்தின் கேரள பின்னணி என்பது இன்னும் சுவாரசியம். இப்படி ஒரு படம் தமிழில் வந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்.

திரைப்பட நடிகர்கள், நிஜ நாடக நடிகர்கள் என கலவையோடு படத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். எல்லோருமே கொடுத்தப் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனந்த் ஏகர்ஷி இயக்கியிருக்கிறார்.

இது வழக்கமான படம் இல்லை. இந்த படம் திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்று, இப்பொழுது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளிவந்துள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Kung pu panda (2024)


வழக்கம் போல ஒரு டிராகன் வீரராய், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி உதவுகிறார். எதிரிகளை வீழ்த்துகிறார் பாண்டா கரடி

”இதுவரை டிராகன் வீரனாய் இருந்துவிட்டாய். அடுத்தப் பொறுப்புக்கு நகரவேண்டும். ஆகையால் மரபுப்படி புது வீரரை தேர்ந்தெடுக்கவேண்டும்” என மாஸ்டர் ஷிபூ கறாராக சொல்கிறார். “எனக்கு என்ன வயசாயிருச்சுன்னு இவ்வளவு அவசரப்படுறீங்க!” என்கிறது பாண்டா.

புதுவீரனை தேர்ந்தெடுக்கும் விழா நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் ஒரு புது வில்லி உருவெடுக்கிறார். பச்சோந்தி வடிவத்தில் இருக்கும் சூனியக்காரி. குறுக்கு வழிகளை கையாண்டாவது பலசாலியாகிவிட வேண்டும். சீனாவின் எல்லா பகுதிகளையும் தானே ஆளவேண்டும் என காய்களை நகர்த்துகிறது. நினைத்தப்படியே ஒவ்வொன்றாக முடித்தும் வருகிறது.

மிக மிக பலசாலியான வில்லியை எதிர்கொள்ள கிளம்பி போகிறார் பாண்டா. பழைய நண்பர்கள் எல்லாம் வேறு வேலையில் பிசியாக இருக்க இந்த முறை பாண்டாவிற்கு புதிய ”நண்பனாக” ஒரு பெண் நரி வருகிறது.

பையன் புதுப்பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும். அவனுக்கு உதவலாம் என பிள்ளை சென்ற வழியில் அப்பாவும், வளர்த்த அப்பாவும் தேடிப்போகிறார்கள்.

பிறகு என்ன ஆனது என்பதை பல்வேறு கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****
ஒரு குழந்தையைப் போல கண்கள் விரிய பலவற்றையும் ஆச்சர்யமாய் பாண்டா பார்ப்பது ஆச்சர்யம். வில்லி தனது சக்தியை பயன்படுத்தி மிகப்பெரியதாய், கோர உருவமாய் எழுந்து நிற்கும் பொழுது, பயந்து போகாமல், “இது புதுசா, அற்புதமால்ல இருக்கு” என வாய்விட்டு பாராட்டுவது கல கல!

Zootopia வில் வரும் கல கல ஆண் நரியைப் போல, இந்தப் படத்தில் ஒரு கல கல பெண் நரியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நல்ல அறிமுகம் இனி வரும் படங்களில் தொடர்ந்து இந்தப் பாத்திரம் வரும். எதிர்பார்க்கலாம்.

படம் துவக்கம் முதல் இறுதி வரை தொய்வு இல்லாமல் போகிறது. வலுவான வில்லன், நகைச்சுவை காட்சிகள், சண்டைகள் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது போல எனக்கு தோன்றியது. அது என்னவென்று யோசித்துகொண்டிருக்கிறேன். உங்களுக்கு தோன்றினால் சொல்லுங்கள்.

3Dயில் தமிழ் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு தேர்வு நடந்துகொண்டிருக்கும் பொழுது என்ன கணக்கில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியிட்டார்களோ தெரியவில்லை. 19/03/2023 அன்று மாலை காட்சியில் பத்து பேர் தான் இருந்தோம்.

பாருங்கள்.

Anweshippin Kandethum (2024)


காலம் 90. கோட்டயம். கல்லூரி சென்று திரும்பிய பெண்ணை காணவில்லை. புகார் வருகிறது. நாயகன் துணை ஆய்வாளராக இருக்கிறார். விசாரணையை துவக்குகிறார். ஒரு மத போதகரின் வீட்டு வாசலில் ஒருவர் கடைசியாய் பார்த்ததாய் சொல்கிறார். ஆனால் உள்ளே சென்று விசாரிப்பதற்கு உள்ளூரில் சிலர் தடுக்கிறார்கள்.


மேலதிகாரி யாரையாவது சிக்கவைக்க காய்கள் நகர்த்துகிறார். நாயகன் வேறு விதமாக யோசித்து உண்மையை நோக்கிப் போகிறார். குற்றவாளியை நெருங்கும் பொழுது, எதிர்பாராத சம்பவத்தால் அவரும் அவருடைய குழுவும் தண்டிக்கப்படுகிறார்கள்.

இன்னொரு வாய்ப்பு என இன்னொரு மேலதிகாரி ஒரு வழக்கைத் தருகிறார். ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். ஒரு புகழ்பெற்ற விசாரணை அதிகாரி அவரால் கண்டுபிடிக்க முடியாத விரல் விட்டு எண்ணக்கூடிய வழக்குகளில் இதுவும் ஒன்று. இது தவிர அடுத்து விசாரணை என ஊருக்குள் யார் வந்தாலும், நாங்கள் விடமாட்டோம் என உள்ளூர் மக்கள் கடந்த கால விசாரணையின் வெறுப்பில் இருக்கிறார்கள். ”உங்களால் ஏதாவது செய்யமுடிந்தால் செய்யுங்கள். இல்லையெனில் என்ன விசாரித்தீர்களோ! அதை எழுதித் தந்துவிடுங்கள்” என அனுப்பி வைக்கிறார்.

அந்த வழக்கை அவர்கள் விசாரித்து உண்மையை கண்டறிந்தார்களா? என்பதை சுவாரசியமாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
*****

ஒரு துணை ஆய்வாளருக்கு கிடைக்கும் வெளிச்சம். மேலதிகாரிகளுக்கு கடுப்பாகிறது. படத்தில் அதைத் தாண்டி செல்வதாக காண்பிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அதெல்லாம் சிரமம் தான்.

ஒரு கொலை. அதைத் தொடர்ந்து விசாரணை. கன்னாபின்னாவென்று டீல் செய்ததில், பாடியைப் பார்த்து சொன்ன ஒரு மனுசன், போலீசின் டார்ச்சரில் தற்கொலை செய்துகொள்கிறார். இப்படி போலீசின் அணுகுமுறையே அந்த கொலை வழக்கை கண்டுபிடிப்பதற்கு தடையாய் முன்வந்து நிற்கிறது. தண்டிக்கப்பட்ட நாயகனின் குழுவிலும் ஒரு போலீசு திமிரோடும், எப்பொழுதும் அடித்து நிமிர்த்தும் தன்மையோடு தான் நடந்துகொள்வார்.

இரண்டாவது வழக்கை விட முதல் வழக்கு விசாரணை சிறப்பு. இந்த படத்தின் இயக்குநரான டார்வின் குரியகோஸ்க்கு முதல் படம் என்கிறார்கள். தேறிவிட்டார் என சொல்லலாம். ஆனால் படம் ஆஹோ ஓஹோ என யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

டோவினோ தாமஸ், அவருடன் நடித்த நடிகர்களும் படத்திற்கு துணை நின்றிருக்கிறார்கள். படம் வெற்றி பெற்றதாய் சொல்கிறார்கள். இந்த விசாரணை குழு அடுத்த பாகத்திலும் வருவதற்கு லீட் தருகிறார்கள். சுவாரசியமான கதையோடு வரட்டும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மலையாளத்துக்கு நகர்ந்திருக்கிறார். வாழ்த்துகள்.

நெட் பிளிக்சில் கிடைக்கிறது. பாருங்கள்

Indigo (2023) இந்தோனேசியா பேய் படம்


தங்கள் எட்டு வயது மகளின் கண்களுக்கு மட்டும் தெரியும் உருவம் குறித்து அம்மாவும், அப்பாவும் கவலைப்படுகிறார்கள். மாந்தீரிக வேலைகளில் ஈடுபடும் ஒரு அம்மணியிடம் அழைத்துச் செல்கிறார்கள். இறந்தவர்களை”பார்க்கும்” ஆற்றல் கொண்டவர்கள் இண்டிகோ. உங்கள் மகள் ஒரு இண்டிகோ” என்கிறார்.


பேய்கள் இவள் உடலை ஆட்கிரமிக்கும் அபாயத்தை சொல்லி, தடுத்து, அவளை இண்டிகோ தன்மையை நீக்கிவிடுகிறாள். வழமையான வாழ்க்கைக்கு நகர்ந்துவிடுகிறார்கள்.

ஆண்டுகள் ஓடுகின்றன. அந்த பெண்ணின் அம்மாவும், அப்பாவும் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு தங்கை மூத்தவளுக்கு தெரிந்தது போலவே, இப்பொழுது இளையவளுக்கும் காதில் குரல்கள் கேட்கின்றன. உருவம் தெரிய ஆரம்பிக்கின்றன.

மூத்தவளுக்கு பழைய விசயம் எதுவும் நினைவில் இல்லை. அவளுக்கு இப்பொழுது பேய், பிசாசு விசயத்திலும் நம்பிக்கை இல்லை. அவளை திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை, அந்த பழைய அம்மணியைப் பெற்றி தெரிந்துகொண்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு போகிறான்.

மூத்தவளுக்கு பழையதை நினைவுப்படுத்தி சொல்லி, இந்தமுறை தங்கைக்கு அப்படி எளிதில் இந்த பிரச்சனையிலிருந்து கழன்றுகொள்ள முடியாது. அந்த பேய் இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறது. ஆகையால் அது விடாது சண்டை செய்யும். அதனால், இந்த முறை கொஞ்சம் சுத்தாக இருந்தாலும், அந்த வழியைத் தான் கையாளவேண்டும் என திட்டமிடுகிறார்கள்.

பேயை விரட்டினார்களா? இவர்களை பேய் எப்படி பாடாய் படுத்தியது என்பதை சுவாரசியமாகவும், கொஞ்சம் பயமுறுத்தியும் சொல்லியிருக்கிறார்கள்.
****

ஒரு கதையை எடுத்துக்கொண்டு, நூல் பிடித்தாற் போல கடைசி வரை சுவாரசியமாக கொண்டு சேர்த்துவிட்டார்கள். படத்தில் நடித்தவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்தோனோசியா தானே நமக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்போகுது என ஜாலியாய் பேய் படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது, இந்தப் பேய் மட்டும் இந்த அமாவாசையை கடந்திருச்சுன்னா அதுக்கு கிடைக்கிற ஆற்றலை வைச்சு இந்த உலகத்தையே ஆட்டிப் படைச்சிரும்னு திடீர் சொன்ன பொழுது, பகீருன்னு ஆயிருச்சு!

நம்மூர் போல இந்தோனோசியாவிலும், பேய் படங்கள் நன்றாக கல்லாக்கட்டும் போல, இந்தோனோசியா ஹாரர் படங்கள் என தேடினால், ஒருவருடத்திலேயே பல படங்கள் பட்டியல் காட்டுகின்றன.

இந்தப் படம் பட்ஜெட் படமெல்லாம் இல்லை. ஒரு பெரிய படத்திற்கு தேவையான தரமான ஒளிப்பதிவு, இசை எல்லாமும் பக்காவாக இருந்தன.

நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

March 8, 2024

ரணம் - அறம் தவறேல் (2024)


நாயகன் அடையாளம் அழிந்து, சிதைந்த முகங்களைப் பார்த்து, வரைந்து தரக்கூடிய முக மீட்டுருவாக்க திறமையான வரை கலைஞர்அவர் தரும் ஓவியத்தை வைத்து போலீசு தனது விசாரணையை நடத்துகிறதுகூடுதலாக சுயமாக துப்பறிந்து வழக்கை முடிக்கவும் உதவி செய்கிறார்.

ஒருநாள் போலீசு ஸ்டேசன் வாசலிலேயே முழுவதும் எரிக்கப்பட்ட இரண்டு கால்கள், இன்னொரு ஸ்டேசன் வாசலில் கைகள், இன்னொரு இடத்தில் உடலும் கிடைக்கின்றன. தலையை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு முகமூடி மட்டும் கிடைக்கிறது.

யார் செய்தது என விசாரணையை இன்ஸ்பெக்டரும், ஒருபக்கம் நாயகனும் விசாரணை செய்யும் பொழுது, திடீரென நாயகனை போனில் அழைத்துஇனிமேல் வழக்கை விசாரிக்காதே என சொல்கிறார். சொன்ன நாளில் இருந்து இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார்

புதிய பெண் அதிகாரி வருகிறார்இருவரும் விசாரணை செய்துக் கொண்டிருக்கும் பொழுது, நாயகன் தனித்து ஆராய்ந்து முழு உண்மையையும் கண்டறிகிறார்.

ஸ்டேசன் வாசல்களில் கிடைத்தது ஒருவருடைய உடல் பாகங்களா, அல்லது பலருடையதாஏன் இந்த கொலைகள்? இதற்கு பின்னால் யார் இருப்பது என்பதை ஒரு உணர்ச்சிகரமான  பிளாஷ்பேக்குடன் சுவாரசியமாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

****


நாயகன் வைபவை இங்கொன்றும் அங்கொன்றும் பார்த்த மாதிரி இருக்கிறது. 25வது படம் என்கிறார்கள். ஆச்சர்யம். அவர் குண இயல்புக்கேற்ப (!) அந்தப் பாத்திரமும் பொருந்தி போகிறது. ஆனால், திடீர் திடீரென அவருக்கு அதிர்ச்சி ஏற்படுவது, நரம்பு சுளுக்கி கொள்வது எல்லாம் கதைக்கு அத்தனை பொருந்தி போகவில்லை.

படம் மிஸ்கினின் சேரன் நடித்தயுத்தம் செய் படத்தை நினைவுப்படுத்துகிறதுஅதிலும் மக்கள் கூடும் இடங்களில் உடல் பாகங்களை கையாண்டிருப்பார்கள். அதில் மிஷ்கின் உணர்வுப்பூர்வமாய் நன்றாக கையாண்டிருப்பார்இதில் அந்த உணர்வு  கிடைக்கவில்லை என்பது தான் படத்தின் பெரிய பலவீனம். நாயகனுக்கு அறிமுகம், ஒரு சண்டைக் காட்சி, ஒரு பாடல் என படத்தின் துவக்க காட்சிகள் இன்னும் சோர்வை ஊட்டுகின்றன.

இன்ஸ்பெக்டர் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை எல்லாம், தனிநபராக நாயகன் கண்டுபிடிக்கிறார் என்பது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா! நந்திதா கொடுத்த பாத்திரத்தை நன்று செய்திருக்கிறார்தன்யா சமாளித்திருக்கிறார்

அடுத்து ஸ்பாய்லர் அலர்ட். இவ்வளவையும் படித்துவிட்டு படம் பார்க்கும் மன உறுதி கொண்டவர்கள் இத்தோடு நகர்ந்துவிடலாம்.  மீதி பேர் தொடருங்கள். J

படத்தில் சொன்ன முக்கிய விசயம்இறந்த உடல்களோடு புணர்வது என்பது மிகவும் கேவலம். அது புனிதமான உடல் அல்லவா! இப்படி அறம் தவறி நடக்கலாமா என்பது தான் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷெரீப் சொல்ல வந்த செய்தி. அவருடைய கவலை சரியானது தான்.

இறந்த உடலோடு உறவு கொள்ளுதல் என்பதை மருத்துவ ரீதியாக Necrophilia என பெயர் வைத்திருக்கிறார்கள்இந்த பழக்கம்  சில நூற்றாண்டு காலமாக நீட்டித்துவருகிறது என வரலாறு சொல்கிறதுஇந்த சிக்கலை எதிர்கொள்ளஅழகான பெண்கள் இறந்தால், உடலை சில நாட்கள் அழுகவிட்டு, அதற்குப் பிறகு தான் புதைத்திருக்கிறார்கள்.   சில மன்னர்களுக்கு இந்த கெட்ட பழக்கம் இருந்திருக்கிறது.

திருமணமாகாத பெண்கள் இறக்கும் பொழுது, அப்படியே புதைத்தால், ”நிம்மதி இல்லாத ஆவியாக அலைவார்கள் என ஒரு குறிப்பிட்ட சமூக வழக்கப்படியே  அந்த பெண்ணின் உடலோடு புணர்ந்துவிட்டு, புதைக்கிற/எரிக்கிற பழக்கமும் இருந்திருக்கிறது என்கிற செய்தியை ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள்/பழக்கவழக்கங்கள் நிறைய உள்ள சமூகம் தானே நம்முடையது.

சம காலங்களில், உயிரோடு பாலியல் பலாத்காரம் செய்வது ஒரு வகை கொடூரம் என்றால், கொன்றுவிட்டு அதன்பிறகு உறவு கொள்வதை பல சீரியல் கொலையாளிகள் தொடர்ந்து செய்திருக்கிறார்கள்.

இறந்த உடலை உறவு கொள்ளுதல் தகுமா? ”புனித உடல் அல்லவா என்று பார்ப்பதை விடஇப்போதைக்கு இரண்டு இடங்கள் தான் அதற்கான வாய்ப்பு. ஒன்று சுடுகாடு. இன்னொரு இடம் மார்ச்சுவரி. இரண்டையும்  சிசிடி உட்பட கண்காணிப்பை கடுமையாக்கினால் நிலைமை கட்டுக்குள் வரும்.

சமூகத்தில் உயிரோடு வாழும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத இந்த சமூகத்தில்இறந்த உடல்களைப் பற்றி கவலைப்படுமா இந்த அரசும், இந்த அமைப்பு முறையும் என்பது தான் நமது கவலை.

திரையரங்கில் பிப்ரவரியில் வெளிவந்தது. விரைவில் ஓடிடிக்கு  வந்துவிடும்.

Dinosaurs (2023)


இந்தப் படம் நன்றாக இருந்தது என யாரோ எழுத, பார்த்தேன்.


வடசென்னையை களமாக கொண்ட படம். இரண்டு ரவுடிகள். அவர்களுக்குள் நடக்கும் மோதல்களே கதை.

ஒரு அம்மா அவருக்கு இரண்டு மகன்கள். தன் கணவன் ரவுடியாக வாழ்ந்து, அவருக்கு ஏற்பட்ட கதி தன்னுடைய மகன்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என ரவுடித்தனத்திலிருந்து ஒதுக்கி வைத்து, இருவரையும் வளர்க்கிறார். இதில் தம்பி தான் நாயகன்.

இதில் ஒரு ரவுடியின் தம்பியை கொன்ற வழக்கில், கொன்ற ரவுடியின் கையாட்கள் எல்லோரும் கைதாக, அதில் ஒருவருக்கு பதிலாக நண்பனை காப்பாற்றுவதற்காக நாயகனின் அண்ணன் பழியை ஏற்று ஜெயிலுக்கு போகிறார்.

இதில் கோயில் வசூலுக்காக பணத்தை வாங்கி வர ஒருமுறை மட்டும் போய்வா! என சொன்னதற்காக அதே ரவுடி வீட்டிற்கு அழைத்துப்போகிறார்கள். போன இடத்தில் கொன்றவர்களின் இவனும் ஒருவன் என அறிந்து விரட்டி விரட்டி கொல்கிறார்கள்.

பிறகு என்ன நடந்தது என்பதை அடிதடி, வெட்டுகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****


பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றி, தன் நண்பன் ஜெயிலுக்கு போயிருக்கிறான். பிறகு அதே ரவுடி சொன்னார் என ஒரு இடத்திற்கு பணம் வாங்க போவாரா! என்பது பெரிய நெருடல். ஆனால் அங்கு மாட்டிக்கொண்டது, தெரியாமல் அவனை கொன்றுவிடக்கூடாது என தம்பியை கொன்ற ஆட்களை வேறு வேறு வகைகளில் சரிப்பார்ப்பது, பிறகு கொன்றவர்களின் அவனும் ஒரு ஆள் என முடிவு செய்து கொலை வெறியோடு துரத்துவது வரைக்குமான அந்த காட்சிகள் நல்ல விறுவிறுப்பு,

ரவுடித்தனம் வேண்டாம்! வேண்டாம்! என திரும்ப திரும்ப ரவுடித்தனத்தின் பல அம்சங்களையும் ஒவ்வொன்றாக காட்டுவது, இன்னும் வட சென்னையைப் பற்றியான எதிர்மறையான அம்சங்களையே எடுப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?

வட சென்னை ஏன் அப்படி இருக்கிறது? என்பதை அதன் சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை விளக்கி நல்ல அரசியல் படங்கள் வரவேண்டும். அதற்கான சில படங்களும் சம காலத்தில் வரத் துவங்கியிருப்பது நல்ல தொடக்கம்.

இந்தப் படத்தின் இயக்குநர் பல புதுமுகங்களை கொண்டு எம்.ஆர். மாதவன் நன்றாகவே இயக்கியிருக்கிறார். அவரின் அடுத்தப் படத்தை ஆர்வமாக எதிர்நோக்கலாம். நாயகனாக உதய் கார்த்திக், மற்ற சில பாத்திரங்களும் நினைவில் நிற்பது சிறப்பு. “Die no Sirs”என படத்தின் பெயருக்கு படத்திலேயே ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். அது அத்தனை பொருத்தமாயில்லை. வேறு ஒரு நல்ல பெயரை கொடுத்திருக்கலாம்.

பிரைம் வீடியோவில் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

Brave Citizen (2023) தென்கொரியா


ஒரு உயர்நிலைப் பள்ளி. எந்தவித ராக்கிங்கும் நடக்கவில்லை என விருது பெற்ற பள்ளி. ஆனால் அது பெரிய பொய். போலீசு உயரதிகாரி அப்பா, அரசு தரப்பு வழக்கறிஞர் அம்மா என செல்வாக்கு உள்ள அவர்களுடைய மகன் தினம் யாரையாவது தன் குழுவோடு டார்ச்சர் செய்துக்கொண்டே இருக்கிறான்.


நாயகி அந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராய் சேர்ந்திருக்கிறார். பாக்சிங்கில் தேசிய அளவில் பங்கேற்கும் நபராய் இருந்தாலும், அப்பா பெற்ற கடனுக்காக அதை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு ஆசிரியராக வேலை செய்ய வந்திருக்கிறார்.

நடக்கிற அனைத்தும் பார்த்துக்கொண்டு எளிதாய் கடக்கமுடியவில்லை. அந்த பையன் நாயகியையும் விட்டுவைக்கவில்லை. தொந்தரவு செய்கிறான். வேலையை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் அவனையும் கட்டுப்படுத்தவேண்டும் என முடிவெடுத்து, ஒரு பூனை மாஸ்க் போட்டுக்கொண்டு தன்னையும் மறைத்துக்கொண்டு அவனை எதிர்கொள்கிறாள்.

பிறகு என்ன ஆனது என்பதை கலகலப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
***


ரெம்ப லைட்டான படம். நாயகியை மையப்படுத்திய படம். பெரும்பாலும் பள்ளி வளாகத்திலேயே முடித்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தெரிந்தே இவ்வளவு அட்டூழியம் செய்யமுடியுமா என யோசித்தால், முடியாது தான். அதுவும் அந்த மாணவன் கல்லூரி முடித்துவிட்டு, வேலைக்கு செல்கிற வயது உள்ள ஆளாய் போட்டிருப்பது நெருடல். பொருத்தமான ஆள் கிடைக்கவில்லை போல!

நேற்று கடுமையான உடற்சோர்வு. எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. இப்படி ஒருபடம் தேவையாய் இருந்தது.

அமேசான் ஓடிடியில், தமிழ் டப்பிங்கிலேயே கிடைக்கிறது. பாருங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்க மாட்டேன்.

March 2, 2024

வயிற்றுவலி தற்கொலை!


தற்கொலைகள் பலவிதம்.

 
யாருமில்லாமல் சாகலாம்.
எல்லோரும் இருந்தும் சாகலாம்.

காதலால்சாகலாம்.

கடனால் சாகலாம்.
காரணமே இல்லாமல் கூட சாகலாம்.

தற்கொலைகளில்
வயிற்றுவலிதற்கொலைதான்

சிறப்பானது.
அடிக்கடி பத்திரிக்கைகளில்
இடம் பெறுபவை.
பெரும் உலகப்புகழ் பெற்றவை.

படிக்கவேண்டும் என சொல்லி
சித்தி ஒத்துக்காததால்
மருந்து குடித்து செத்துப்போனான்
என் நண்பன் குருசாமி.
அவன்வயிற்றுவலியால்” தான் செத்தான்
அடுத்தநாள் செய்தி வந்தது.

வாட்டும் கொடிய நோய்
யாருமில்லாத தனிமை
தற்கொலை செய்துகொண்டார்
ஒன்றுவிட்ட மாமா.
அவரும் வயிற்றுவலியால் தான்
என செய்தி வந்தது.

தன் துணையின்
நடத்தை சரியில்லை என நொந்து
தற்கொலை செய்துகொண்டார்
தூரத்து அண்ணா.

உண்மை காரணத்தை
அறிய முடியாமல் போனால்
அறிந்துகொண்டும் சொல்லாமல் போனால்
அரசுக்கு சங்கடம் தருமென்றால்
போலீசின் கைவயிற்றுவலிஎன
தயக்கமே இல்லாமல்
தானாக எழுதிவிடும்.

வயிற்று வலியால்என படித்தால்
என்ன காரணமாக இருக்கும் என
மனம் இப்பொழுதெல்லாம்
ஆராய ஆரம்பித்துவிடுகிறது.

தற்கொலைகளை ஆய்வு செய்தால்
உண்மை காரணம் அறியப்படலாம்.
அதெல்லாம் அறிந்து….?

வயிற்று வலியால்….
சிந்துபாத் கதை போல
நம்மை தொடரத்தான் போகின்றன!