> குருத்து: February 2021

February 21, 2021

புத்தகங்களை அனுப்பி வைத்த மோகன் குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

டாக்டர் அம்பேத்கார் இரவு பாடசாலைக்கு புத்தகங்களை அனுப்பி வைத்த மோகன் குமார்  அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

சென்னை வியாசர்பாடி சுருக்கமாக வியாசைப் பகுதியில் வசிக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கற்றுத்தரவேண்டும் என்பது அந்த பகுதியில் உள்ள இளைஞர்களின் பல ஆண்டுகள் கனவு.

அந்த கனவை கடந்த சில ஆண்டுகளாக பகுதி மக்கள் உதவியுடனும், சமூக அக்கறை கொண்டவர்களின் உதவியுடனும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றிவருகிறார்கள். 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள்/மாணவிகள் அங்கு கற்று வருகிறார்கள்.

அந்த இரவு பாடசாலையில் ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்பது அவர்களது ஆசை. புதுப்புத்தகங்கள் வாங்க விருப்பம் இருந்தாலும், வாய்ப்பில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடுகளில் அண்ணன், அக்காவினுடைய புத்தகங்கள் தான் தம்பி/தங்கைகளுக்கு கிடைக்கும். அது போல படித்த புத்தகங்களை சமூக அக்கறை கொண்டவர்களிடம் கேட்கலாம் என கேட்க ஆரம்பித்தார்கள். எனக்கு தெரிந்ததும், வீட்டில் இருந்து படிப்பதற்கான மேஜையையும், 50 புத்தகங்கள் வரை அனுப்பிவைத்தேன்.
முகநூல் வழியாகவும், நண்பர்களிடம் கேட்க ஆரம்பித்தோம். அவர்களும் கொடுக்க ஆரம்பித்தார்கள். சிறுக சிறுக புத்தகங்கள் சேர துவங்கியிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில், மதுரையில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் என்னுடைய நண்பன் மோகன் குமாரிடம் தெரிவித்தேன். ”படிக்கும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள் இல்லையா! உடனே அனுப்பி வைக்கிறேன்” என புத்தகங்களை ஒரு பெட்டியில் போட்டு மதுரை ரதிமீனா டிராவல்ஸ் வழியே அனுப்பிவைத்தார். தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டு, பிறகு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். பாடசாலையை இயக்கும் இளைஞர்கள் நேற்று எடுத்துவந்தார்கள்.

பெட்டியில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. அதைப் பார்த்ததும் மாணவர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சி. மாணவர்கள் சார்பாக மோகன்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நூலகம் அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற துவங்கியிருக்கிறது.

இருவர் செத்த பிறகு கால்வாயை மூடும் பணி!


மதுரவாயில் பகுதியை ஒட்டி புறவழிச் சாலை (Bypass Road) கடந்து செல்லும். அந்த பாலத்திற்கு கீழே உள்ள சாலையை நொளம்பூர், முகப்பேர், அயனம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி என பல பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் அந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த கூவம் கரையோரம் தான் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஹாஸ்டல்களும் இருக்கின்றன. அந்த மாணவர்களும் அந்த பாலத்தின் வழியே தான் தினம் போய்வருகிறார்கள்.

அந்த பாலத்திற்கு அடியே கூவம் ஓடுகிறது. அந்த கூவத்திற்கு மேலே உள்ள பாலம் தாழ்வானது. அந்த பாலத்திற்கு எந்த தடுப்பும் கிடையாது. அந்த பகுதியில் வெளிச்சமும் கிடையாது. அங்கு கடந்து செல்பவர்கள் கொஞ்சம் பிசகினாலும் கூவத்தில் கவிழ்ந்துவிட கூடும்.
புறவழிச் சாலையில் பெய்கின்ற மழையும், அந்த பகுதியில் பெய்கின்ற மழையும் நொளம்பூர் பகுதியிலிருந்து வரும் திறந்த வழி கால்வாய் வழியே தான் கூவத்திற்கு வந்து சேரும். அவ்வப்பொழுது எங்கிருந்தோ கழிவுநீரை எடுத்து வரும் லாரிகள் அந்த கால்வாயில் கலந்துவிடும் காட்சியையும் அவ்வபொழுது பார்க்கமுடியும். பலமுறை மக்கள் புகாரளித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம். ஒரு மழை நாளில் தனியார் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் பேராசிரியரும் (வயது 45), அவருடைய மகள் (22) இருவரும் ஒரு லாரி கடந்து போகும் பொழுது சறுக்கியதில் இருவரும் இரு சக்கர வண்டியோடு கால்வாயில் விழுந்துவிட்டார்கள். அவர்களால் உடனடியாக தப்ப முடியவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து தூக்கிய பொழுது இருவரும் இறந்துபோயிருந்தார்கள்.
இருவர் பலி கொண்ட பிறகும் கூட அந்த கால்வாயை மூட, கூவத்தில் உள்ள பாலத்திற்கு தடுப்பு சுவர் எழுப்ப மிகவும் தாமதப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக மக்கள் கேள்வி எழுப்பிய பிறகு, மனித உரிமை ஆணையமும் முன்வந்து அரசை கேள்வி எழுப்பியிருக்கிறது. இப்பொழுது தான் கால்வாயை மூடும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கூவத்தில் மேலே உள்ள தரைப்பாலத்திற்கு தடுப்பு கம்பிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. சில உயிர்களை பலி கொடுத்தால் தான் ஒரு கால்வாய்க்கு மூடியே போடுவார்கள் என்றால், இந்த நாட்டில் மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு அரசிடம் எவ்வளவு கடுமையாக போராடவேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கும் விவசாயிகள் போராட்டம் ஒரு வாழும் சாட்சியாக நம்முன் நடந்து கொண்டிருக்கிறது.
#புகைப்படங்கள் : இறந்த பேராசிரியரும், அவரது மகளும், திறந்த கால்வாய், தரைப்பாலத்தில் போடப்பட்ட தடுப்பு கம்பிகள், கால்வாயை மூடும் பணி

கேட்டால் கிடைக்கும்!


இரவு 3.30 மணி. திருப்பதியில் ஒரு வேலை. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், வண்டியை பார்க் செய்யும் பொழுது, 3 மணி நேரம் வரை ரூ. 10. ஒரு நாள் என்றால் ரூ. 40 வசூலித்தார்கள்.

பார்க் செய்துவிட்டு, திருப்பதி பேருந்து விசாரிக்கும் பொழுது தான் தெரிகிறது. வடக்கு நோக்கி செல்லக்கூடிய பேருந்துகள் "மாதவரம் மாறி மூன்று வருசங்களாச்சே!" என்றார்கள். விசேச காலங்களில் மட்டும் இப்படி பிரித்துவிடுவார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.
மாதவரத்திற்கு பேருந்தில் போய்விடலாம் என பேருந்தை தேடினால் உடனடியாக இல்லை. பைக்கில் போய்விடலாம் என முடிவெடுத்தேன்.
மீண்டும் வண்டியை எடுத்து பார்க்கிங்கிற்கு வந்தால், ரூ. 40யும் சரியாப் போச்சு! No Refund என கூலாக சொல்கிறார்கள்.
"இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு! No refundன்னு எங்க எழுதி வைச்சிருக்கீங்க காட்டு!" என்றேன்.
"இது தான் எங்க ரூல்! வேணும்னா எங்க மேனஜர்கிட்ட பேசுங்க!" என்றார்.
"வரச் சொல்லுங்க!" என்றேன்.
ஒருவர் தேடிப்போனார். அங்கு இல்லை. அவர் வேறிடத்தில் இருக்கிறார். இவர் போனில் விளக்கினார்.
"ரூ. 40 யும் கேட்கிறார்" என்றார்.
"மூணு மணி நேரத்திற்குள்ளே என்றால், ரூ. 10 தானே! அத எடுத்துட்டு மிச்சம் கொடுங்க!" என்றேன்.
பேசிவிட்டு, ரூ. 30 யை திருப்பி தந்தார்கள்.
இப்படி எத்தனை பேரிடம் பணத்தை ஏமாற்றினார்களோ! ஊரிலிருந்து வந்ததும் ஒரு புகார் கடிதம் எழுதி அனுப்பவேண்டும்.
கமிசன் ஆட்சித்தானே நடக்கிறது. அதனால் தைரியமாய் ஏமாற்றுகிறார்கள்.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இப்பொழுது ரூ.90 விரைவில் 100 ஐ எட்டிவிடும்!ஒரு இந்திய குடிமகன் தான் சம்பாதிப்பதில் 30% (பத்து லட்சத்திற்கும் மேலாக) வரி கட்டவேண்டும். ஆனால், இந்த நாட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு வரி 22% கட்டினால் போதும். காரணம் கார்ப்பரேட்டுகளுக்கு இப்படி வரியை குறைக்காவிட்டால், தங்கள் நிறுவனங்களை எடுத்துக்கொண்டு பக்கத்து நாடுகளுக்கு ஓடிவிடுமாம்.

இப்படி கார்ப்பரேட்டுக்களுக்கு வரியை குறைப்பதால், நாட்டுக்கு மிகப்பெரிய வரி இழப்பு ஏற்படுகிறது. கொரானா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலோர் ஊதியம் இழந்து, தொழில் இழந்து வாழ்வா, சாவா என தவித்த பொழுது, 100 கோடீஸ்வரர்களின் சொத்து 15 லட்சம் கோடி சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்திருக்கிறது.
இப்படி நேரடி வரியை (Direct Tax) குறைத்த மத்திய அரசு தான், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பெட்ரொல், டீசல் மீதான வரியை (indirect Tax) குறைக்க மறுக்கிறது. கூடுதலாக சாவுங்கடா! என பெட்ரோல் மீது ரூ 2.50யும், டீசல் ரூ.4யும் வேளாண் செஸ் வரியாக வசூலிக்க போகிறேன் என நம்ம நிதி அமைச்சர் நிம்மி இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டார். வேளாண் செஸ்ஸாக வசூலித்தால் மத்திய அரசே வைத்துக்கொள்ளலாம். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை. இந்த அறிவிப்பை நம்ம முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே எதிர்த்தார் என்றால், இது எவ்வளவு மோசம் என நீங்கள் கணக்கிட்டு கொள்ளலாம்.
நாமாவது பெட்ரோல் போடும் பொழுதெல்லாம், திட்டுவதற்கு ஞாபகப்படுத்தும் விதமாக பங்கிலேயே மோடி பேனரில் கோணலாய் சிரித்துக்கொண்டிருப்பார். இந்த சங்கிகளை நினைத்தால் தான் ஆச்சரியமாக இருக்கிறது. யாரை திட்டுவார்கள்?
#பின்குறிப்பு : படத்தைப் பாருங்கள். ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ஜனவரி 1ந் தேதி 2021 அன்று தில்லியில் என்ன விலை? மத்திய மாநில அரசுகள் எவ்வளவு வரி விதிக்கிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஒரே நாடு ஒரே வரி என ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தும் பொழுது, ஆரவாரமாய் அறிவித்தார்கள். பெட்ரோல், டீசலை மட்டும் ஜிஎஸ்டியிலிருந்து நைசாக கழட்டிவிட்டார்கள்.

75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி தாக்கல் செய்ய தேவையில்லை?


பட்ஜெட்டில் இப்படி ஒரு அறிவிப்பை நிதி அமைச்சர் அறிவித்ததாக ஊடகங்கள் அறிவித்தன. பா.ஜ. தலைவர்கள் இந்த அறிவிப்பு ஒரு சாதனை என பத்திரிக்கைகளில் சொல்லியிருந்தார்கள்.

#உண்மை என்னவென்றால்...
75 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலும் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்து வட்டி வாங்குவார்கள். அந்த வட்டிக்கு வங்கி எப்போதும் போல வரி (TDS) பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்திவிடும். வரி தாக்கல் செய்வதில் (Income Tax Return) இருந்து மட்டும் தான் விலக்கு என சொல்லிவிட்டார்கள்.
வேறு வகைகளில் வருமானம் இருந்தால், கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும்.

உயிர் பலி வாங்குவது பாதாள சாக்கடைகளா? அலட்சியமான அரசுகளா?


ஒருநாள் நம் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், வீடே நாறி திணறிப்போய்விடுகிறோம். நமது பகுதிகளில் இரண்டு நாட்கள் குப்பைகளை அகற்றாவிட்டால், பாதாள சாக்கடை அடைத்துவிட்டால், அந்த பகுதியே நாசமாகிவிடுகிறது. அந்த பகுதியை கடப்பதற்குள் நரக வேதனையாகிவிடுகிறது.


ஆனால், அந்த கழிவுகளையும், குப்பைகளையும் நாள் முழுவதும் கையாளும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கையை நாம் பல சமயங்களில் நினைத்துப் பார்க்க தவறுகிறோம்.

“கக்கூஸ்” ஆவணப்படத்தில், மதுரையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்யும் அந்த இளம் தாய், “என் மேலே நாத்தமடிக்குதுன்னு.. என் குட்டி பையன் என் பக்கத்துல வரமாட்டேன்னு தினம் சொல்றான்” என கண் கலங்கி சொல்கிற காட்சி ஆண்டுகள் கடந்தும் இன்னும் மனதைவிட்டு அகல மறுக்கிறது.

ஊரையை சுத்தமாக வைத்திருக்க கூடிய அவர்களின் சமூக மதிப்பும் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே தான் வைத்திருக்கிறோம்.

எங்கள் பகுதியில் குப்பை சேகரிக்கிற தூய்மை பணியாளர் ஒரு விசேசத்தில் தனது சொந்தங்களூக்கு சந்தோசமாய் சாப்பாடு பரிமாறிய பொழுது, ஓடி வந்து, அவரை அங்கிருந்து “நைசாக” நகர்த்தி கூட்டிப் போய்விட்டார்கள்.

இப்படி ஊரையே சுத்தமாக வைத்திருப்பதற்கு தூய்மை பணியாளர்களுக்கு தண்டனையாக வருடத்திற்கு சில பேரை அரசு பலிகொடுக்கிறது. இது என்ன நியாயம்?

பல துறைகளில் “தலை நிமிரும் தமிழகம்” என ஊடகங்களில் அரசு விளம்பரம் செய்து பெருமை கொள்கிறது. தூய்மை பணியாளர்களின் விசயத்தில் எப்பொழுதும் “தலை குனியும் தமிழகம்” தான்!

இதை கண்டும் கேட்டும் ’நாகரிக’ சமூகமான நாமும் தலை குனிந்து செல்வது சரியா? 

டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தந்ததற்கு நன்றி!சென்னையில் வியாசைப் பகுதியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை ஏழை மாணவர்கள் படிப்பதற்காக ஒரு சிறு நூலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. “அரசியல், பொருளாதாரம், பண்பாடு என எந்த தலைப்பில் இருந்தாலும் பரவாயில்லை. மாணவர்களுக்காக நீங்கள் படித்த புத்தகங்களை தாருங்கள்” என சமூக அக்கறை கொண்டவர்களிடம் கேட்டோம்.

சென்னையில் பல ஆண்டுகளாக வரி ஆலோசகராக (Tax Consultant) இயங்கி வருபவரான நாராயணசாமி அவர்கள் படிக்கும் மாணவர்களுக்கு ”படித்தப் புத்தகங்கள் ஏன்? புதிய புத்தகங்களே வாங்கித் தருகிறேன்” என முன்வந்தார்.
நமது பாடசாலையில் படித்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்துவருவதால், பள்ளியிலேயே புத்தகங்களை வழங்கிவிடுகிறார்கள். நமது பாடசாலையில் பயின்று வரும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சட்டப்புத்தகங்கள் வாங்கித்தாருங்கள் என கேட்டுக்கொண்டதற்கு மகிழ்வுடன் வாங்கிக் கொடுத்தார். கூடுதலாக திருக்குறளை விளக்கும் பாடல்கள், கதைகள், நாடகங்கள் என மூன்று புத்தகங்கள் உட்பட சிறுவர்களுக்கான புத்தகங்களையும் வாங்கித்தந்தார்.
மாணவர்கள் சார்பாக புத்தகங்கள் வாங்கித் தந்த நாராயணசாமி அவர்களுக்கு நன்றி.

கேஸ் மானியம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி போனது!


 #கேஸ் மானியம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி போனது!

மானியத்தை அவரவர் வங்கி கணக்கில் போடுவதாக பிரதமர் சொன்னார்.
2018ல் ஜூனில் ரூ. 230.66 மானியம்
2021ல் ஜனவரியில் ரூ. 24.95 மானியம்.
அதையும் வங்கியில் வரவு வைக்கிறார்களா என நம்மில் பலரும் சரிபார்ப்பதுமில்லை!
மானியத்தை சொல்லி, சொல்லி ஆதாரை குறுக்கு வழியில் மக்கள் தலையில் கட்டினார்கள். எதிர்காலத்தில் மானியம் இருக்காது! ஆதாரை வைத்து நம்மை எல்லாம் நசுக்கப் போகிறார்கள் என்றோம்.
இதோ கேஸ் மானியத்தை இன்னும் சில மாதங்களில் அநேகமாக இல்லாமல் செய்துவிடுவார்கள்!

ரப்பர் வளையல்கள் – சிறுகதை தொகுப்பு - சிவஷங்கர் ஜெகதீசன்


முகநூலில் நண்பராக இருக்கும் ( Sivashankar Jagadeesan) சிவசங்கர் ஜெகதீசன் தான் எழுதிய புத்தகத்தை தபாலில் அனுப்பிவைத்தார். தொகுப்பில் 19 கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பிரிவை சார்ந்தவைகளாக இருக்கின்றன. இதில் ஒரு சரித்திர கதையும் உண்டு. எதிர்காலத்தில் நடக்கிற கதை கூட உண்டு. இன்னும் கூட நிறைய கதைகள் கைவசம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும், சமீபத்தில் பிக்பாஸில் கமல் ’ரப்பர் வளையல்களை’ கண்டுப்பிடித்ததே கூட்டுக்குடும்பத்தில் உள்ள சூழ்நிலை தான் என சொன்ன பொழுது ஈர்த்தது.

கடந்த சில மாதங்களாக கொரானா தொற்றை முன்வைத்து திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பலர் வேலை இழந்தார்கள். தொழில்கள் முடங்கின. பொருளாதார சிக்கலில் பலரும் மன உளைச்சலில் சிக்கிக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியில் கொஞ்சம் சமாளிக்க முடிந்தவர்கள் நிறைய படித்தார்கள். நிறைய விதவிதமாய் சமைத்தார்கள். யூடியூப்பில் சானல் ஆரம்பித்தார்கள்.

இதில் இந்த ஊரடங்கில் சிவசங்கர் ஜெகதீசன் சிறுகதை எழுத்தாளராகியிருக்கிறார். வெற்றிகரமாக புத்தகமாகவும் கொண்டு வந்திருக்கிறார். முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ’ரப்பர் வளையல்கள்’ கதையிலும், ’மாற்றுக்கொலை’ கதைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் அவர் நிற்பதில் சந்தோசம்.

தனக்கு ஒன்று மனதில் பட்டதும், உடனே கதையாக மாற்றியிருக்கிறார். உள்ளடக்கத்தை தேர்வு செய்வதில் இன்னும் மெனக்கெடல் வேண்டும்.

அதே போல தரவுகள் நம்பகத்தன்மையுடன் இருக்கவேண்டும். முதல் கதையில் மெக்கானிக் அன்புக்கு வங்கி ஆறு லட்சம் கடன் தந்திருப்பதாக சொல்கிறார். பொதுவாக வங்கிகளை எல்லாம் எளியவர்கள் அணுக முடிவதேயில்லை. அப்படியே விதிவிலக்காய் தந்தாலும் ஆறு லட்சம் தர வாய்ப்பேயில்லை. தொழில்துறையில் சேவைத்துறையில் தான் நானும் இருக்கிறேன்.

ஆகையால், கதையின் உள்ளடக்கம்; தரவுகள்; வடிவம் என எல்லாவற்றிலும் மெனக்கெடவேண்டும்.

இருபது வயதில் என்னைவிட என் நண்பர்கள் இருவர் நன்றாக கவிதை எழுதுவார்கள். ஆனால் தொடர்ச்சியாய் அவர்கள் எழுதுவதில்லை. அந்த கோபத்தில் அவர்களை பழிவாங்க நான் எழுத துவங்கினேன். நாலு பேருக்கு படிக்க கொடுத்தேன். முகத்தில் அடித்தாற் போல எதுவும் சொல்லாமல், கொஞ்சம் பாராட்டும், கொஞ்சம் விமர்சனமும் செய்தார்கள். அந்த பாராட்டை வரவில் வைத்துக்கொண்டு, விமர்சனத்தை கவனமாய் எடுத்துக்கொண்டேன். நிறைய படித்தேன். தொடர்ந்து எழுதினேன். சில காலம் கழித்து, நான் மதிக்கும் ஒரு அண்ணன் ’கவிஞரே’ என அழைத்த பொழுது, உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரமாய் எடுத்துக்கொண்டேன். ( இப்பொழுது கவிதை எல்லாம் எழுதுவது இல்லை!)

சிவஷங்கர் ஜெகதீசனுக்கும் என் அனுபவத்தை தான் பகிர்ந்துகொள்கிறேன். இன்று காலையில் பானு இக்பால் எழுதிய ’ஜீரோ டாலரன்ஸ்” நாவல் வெளியிட்டு விழாவில் பேசிய கவிஞர் மனுஷ்யப்புத்திரன் பேசிய உரை தான் நினைவுக்கு வருகிறது. இளம் படைப்பாளிகள் கவனத்துடன் எடுத்துக்கொள்ளவேண்டிய உரை. சுட்டியை கீழே இணைத்து இருக்கிறேன். ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.

மீண்டும் ஒருமுறை சிவஷங்கர் ஜெகதீசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை வியாசை பகுதியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கார் பகுத்தறிவு பாடசாலையில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுத்தருகிறார்கள். அங்கே மாணவர்கள், இளைஞர்கள் படிப்பதற்கு நூலகம் ஒன்றை உருவாக்கும் ஆரோக்கியமான முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிவஷங்கர் ஜெகதீசன் புத்தகத்தை அன்பளிப்பாக தர இருக்கிறேன். இளையவர்களுக்கு பயன்படும்.

காட்டு யானை
காட்டில் வாழும் ஒரு யானையின் குணங்கள் எல்லாம் என்ன என்பதை பற்றி முழுமையாக தெரியாமல் அதற்கு ஒரு பெயரை வைத்து குழந்தை போல இருக்கிறது, பருப்பி சாப்பிடுகிறது, நம் வீட்டு புள்ள மாதிரி ன்னு நீயூஸ்ல செய்தி கொடுக்கும் லூசு பயலுகளை எல்லாம் நினைச்சாவே காண்டாகுது... இவனுக சொல்லுறத எல்லாம் உண்மைன்னு அதை அப்படியே கேட்டுகினு போய் காட்டு யானையை பாத்த உடனே ஓடி போய் செல்லாகுட்டி வாடா தங்கம் ன்னு குழந்தையை கொஞ்சுறத மாதிரி பண்ணிடாதீங்கயா.... அப்புறம் ரோட்டுல இருந்து சுரண்டி தான் உங்களை எடுக்கனும்.... தூக்கி போட்டு மிதிச்சுடும்

... குழந்தை மாதிரியாம்லே யானை😀😀....
இவனுங்க மாதிரி அரைகுறை ஆப்பாயில் பயலுகளை எல்லாம் திருத்தவே முடியாது... பேசி பேசியே தான் ஏமாத்திட்டு வரானுங்க...
கண்டிப்பா ஒருநாள் மாட்டுவானுங்க... உண்மையான காட்டுயானை குறித்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே....
மகா புத்திசாலி. வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். ஆனா, காட்டு யானைகள் சுயமா யோசிச்சு முடிவெடுக்குற, அபார அறிவு கொண்டது. சுயம்பு. அதோட புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம். வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களை சுத்தி, 'மெக்கர்' ன்னு சொல்லப்படுற மின்சாரவேலி போட்டிருப்பாங்க. விசேஷ வீடுகள்ல போட்டிருக்குற சீரியல்லைட் சரங்கள், விட்டுவிட்டு எரியுமே... அந்த டெக்னாலஜி. இது சோலார்ல (சூரியஒளி மின்சார பேட்டரி) மட்டும்தான் அமைக்கப்படனும். 'கட் அவுட்' வெச்சு சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும், அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். இதை தொட்டு கரன்ட் அடிச்சாக் கூட... பலமான மின்சார தாக்குதல் மட்டுமே இருக்கும். எந்த வனவிலங்குகளோட உயிருக்கும் ஆபத்து ஏற்படாது. இந்த சோலார் மெக்கர வாங்க சங்கடப் பட்டுட்டு, சில லூசுப்பயலுக... கிணத்து மோட்டருக்கு குடுக்குற த்ரீபேஸ் லைன்ல ஒயரசொருகி, நேரடியா கம்பி வேலிக்கு கனெக்க்ஷன குடுத்துடுவானுங்க. எவ்ளோ பெரிய யானையா இருந்தாலும், இருபதே செக்கன்ட்ல தட்டித் தூக்கிரும். அதை காப்பாத்த வர்ற யானைகளும் மாட்டி உயிரிழந்துடும்.(நானே பலமுறை மெக்கர் லைன தொட்டு, அடி வாங்கி இருக்கேன். அடி வாங்குன ஒரு ஒருமணி நேரத்துக்கு, கையத் தூக்க முடியாது. ஒருநாள் வனத்துறை அதிகாரி ஒருத்தரு, "அடிக்கடி, மெக்கரை தொட்டு ஷாக் வாங்கினா, மூளைக்கு போற நரம்பு மண்டலம் பாதிக்கும்" ன்னு, எச்சரிக்கை பண்ணாரு. அது இருக்குறவனுக்கு தானே பிரச்சன. நமக்கென்ன ?)
இப்போ, இந்த மெக்கர் லைன... காட்டு யானைகள் எப்படி டீல்பண்ணும் தெரியுமா ? முன்காலை தூக்கி தயாரா மெக்கர் போடப்பட்டிருக்குற இரும்பு போஸ்ட்டுக்கு முன்னாடி நிக்கும். கரன்ட் சப்ளை இருக்குற அந்த 3 நொடி ஸ்ஸ்ஸ்... சத்தத்த விட்டுட்டு, அந்த சத்தம் நிக்கும்போது சப்ளை வராத அந்த 5 நொடிய மட்டும் கரெக்ட்டா பயன்படுத்தி, போஸ்ட்டை ஒரே மிதிமிதிச்சு தாண்டி போயிடும். இல்லேன்னா... காய்ஞ்ச மரங்களை தூக்கி மெக்கர் மேலபோட்டு ஒடைச்சு, ஏறிமிதிச்சு தாண்டி போயிடும். இன்னொரு விஷயம், பத்து பதினைஞ்சு யானைகள்... கூட்டமா வந்தாலும், ஒரே ஒரு போஸ்டை மட்டுமே சாய்ச்சு, அதுவழியா மட்டுமே எல்லா யானைகளும் போகும். பலமிருக்கு ன்றதுக்காக, எல்லா போஸ்டுகளையும் உடைக்காது. எப்பவுமே யானை, தேவையில்லாம தன்னோட சக்திய வீணடிக்காது. வனத்துறை பல டெக்னாலஜிகளை கையாண்டும் கூட, காட்டு யானைங்க கிட்ட ஒன்னும் செல்லுபடியாகல. தோண்டி வெக்குற அகழியவெல்லாம் சர்வ சாதாரணமா மூடிட்டு, தாண்டி வந்துடும். ஓரளவுக்கு கை கொடுக்குறது... வேலியோர தேனி வளர்ப்பு & சுரைமுள் வேலி மட்டும்தான்.
காட்டு யானைகளுக்கு தலைமை தாங்குறது, வயதான பெண் யானைதான். கூட்டத்துல இருக்குற, ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு வேலைகளை ஒதுக்கி குடுக்கும். ஆபத்துன்னு... சின்ன பொறி தட்டினாலும், குட்டிங்கள பூரா நடுவுலவிட்டு, அத்தனை பெண் யானைகளும் சுத்தி அரண்அமைச்சு நிக்கும். அதே போல அங்க இங்க ஓடுற குட்டிகளை, அடிச்சு மிரட்டி கூட்டத்துக்குள்ள கொண்டு வர வேண்டியது, கொஞ்சம் வளர்ந்த குட்டிகளோட வேலை (LKG பசங்கள கவனிக்கிற வேலைய, அஞ்சாம் கிளாஸ் பசங்களுக்கு குடுத்தா... நல்லா 'சட்டாம்புள்ள' வேல பாப்பாங்க. அது மாதிரி...). யானைகளோட 'டேஞ்சர் சூன்' 30 மீட்டர். மற்ற விலங்குகளோ, மனிதர்களோ அந்த எல்லைக்குள்ள வர்றத யானைகள் அனுமதிக்காது. உடனே ஏறிவந்து, "நெருங்கி வராத" ன்னு, மிகக் கடுமையான எச்சரிக்கை கொடுக்கும்.
மேலும் யானைகள், உணவு தேடலுக்காக ஒருநாளைக்கு 30 to 50 கி.மீ நடக்கும். அப்படி போகும்போது... வனப்பகுதிகளில் போடப்பட்டிருக்கும், வாகன போக்குவரத்துகள் இருக்கும் சாலைகள கடக்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போ, சடார்ன்னு எல்லாமுமா ஓடிப்போய் ரோட்டை கடந்துடாது. முதல்ல ஒரேஒரு ‘செக்யூரிட்டி’ கொம்பன் மட்டும் காட்டைவிட்டு வெளியவந்து, ரோட்டில் நின்னு தும்பிக்கைய தூக்கி சத்தம்போட்டு , வாகனங்களுக்கு எச்சரிக்கை செஞ்சு நிறுத்தும். ரெண்டு பக்கமும் வாகனங்கள் நின்னு அமையானதும், தன் கூட்டத்தை பார்த்து ஒருசத்தம் மூலமா, "வரலாம் வா..." ன்னு, சிக்னல் கொடுக்கும். அதுக்கு அப்புறம்தான் ஒன்னொன்னா வெளியவரும். நாம வரிசைல போகும்போது... தலைகள எண்ணினாக் கூட ரெண்டுமூணு பேர மறந்துடுவோம். ஆனா அது, ரோட்டை மட்டுமே ரெண்டு பக்கமும் பாத்துட்டு நிக்கும். ஆனா மிகச்சரியா... கடைசி யானை ரோட்டை தாண்டினதும், யோசிக்காம... சடார்னு அதுக்கு பின்னாடி போயிடும். அதேபோல ஏதாவது ஒன்னு, வராம மிஸ்ஸானாலும் கூட, காட்டை பார்த்து சத்தம் குடுத்து, "ரெட் சிக்னல் விழப் போகுது. சீக்கிரமா வந்து தொல" ன்னு, அதட்டும். (எந்த மேத்த மெடிக்சை வெச்சு, கூட்டத்தோட எண்ணிக்கைய கணிக்குதுன்றது புரியாத புதிர்) இந்த ரெண்டு பொறுப்பும், 'செக்யூரிட்டி கார்ட்ஸ்' ன்னு சொல்லப்படுற, ஓரளவுக்கு வளர்ந்த ஆண் யானைகள்ட்ட கொடுக்கப் பட்டிருக்கும். (ஒரு கட்டத்துக்கு மேல... முதல் மஸ்து நேரத்துல, வளர்ந்த கொம்பன்கள், தலைமை யானைக்கு கட்டுப்படாம... அடாவடி செய்ய ஆரம்பிக்கும். அப்போ, இந்த ஆண் யானைகள் கூட்டத்தவிட்டு, விலக்கப்படும். ஆனாலும், பாசத்துக்கு ஏங்கி... கிட்டத்தட்ட 48 நாட்கள் கூட்டத்த விட்டுப் போகாது. கூட்டம் எங்கெல்லாம் போகுதோ... இதுவும் கொஞ்சதூர இடைவெளில, பின் தொடர்ந்து போகும். கூட்டத்தின் மேலானபாசம் வடிஞ்சு, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடும். இதுதான், ஆக்ரோஷமா சுத்துற ஒற்றை கொம்பன்கள்).
(கொம்பனை பற்றிய ஒரு கொசுறு தகவல்...
ஒரு கொம்பன் உங்கள விரட்டி பிடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா... நீங்க 'உசைன் போல்ட்' டாவே இருந்தாலும், தப்பிக்க முடியாது. உங்களோட உட்சபட்ச வேகத்தை எட்டிப் பிடிக்க உங்களுக்கு 8 நொடிகள் தேவை. ஆனா... நாலே நொடில, யானை உங்கள பிடிச்சிடும். அவ்ளோ பெரிய உருவம், உங்கள ஆக்ரோஷமா விரட்டுதுன்ற உணர்வே... உங்கள மிரட்டி, ஓடவிடாம செஞ்சுடும். அதனால, யானைங்க கிட்ட விளையாடாதீங்க. பெரும்பாலும் எல்லா யானைகளும் மனிதர்கள கொல்லாது. வெறும் மிரட்டல்தான். ஆனா... ஒற்றை தந்தத்துடனோ, தாறுமாறா வளர்ந்த தந்தத்தோடவோ, சூறை நாற்றத்துடன் சுத்துற யானையவோ கண்டா... தலை தெறிக்க ஓடிடுங்க.
இத்தனை வேலைகளையும் தலைமை பெண்யானை துல்லியமா கண்காணிச்சுட்டே இருக்கும். இதுல எங்க தடங்கல் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட அந்த பொறுப்புல இருக்குற யானைக்கு அதட்டல் விடுக்கும். சிலநேரம் அடிவிழும். மேலும் யானைகளுக்கு புளிப்பு, உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு, எலும்புகளுக்கு தேவையான கால்ஸியம் சத்துக்கள் அவசியமானது. வளர்ப்பு யானைகளுக்கு அடிக்கடி உணவுல வெச்சு குடுப்பாங்க. ஆனா... காட்டு யானைகளுக்கு இயற்கைதான் வைத்தியன். புளிப்பு சத்துள்ள விளாம் பழங்கள், காட்டுப் புளி எங்க கிடைக்கும், சுண்ணாம்பு, உப்புமண் எங்க கிடைக்கும், மஞ்சளுக்கு இணையான மூலிகை வேர்கள் எங்க கிடைக்கும், கால்ஸியத்துக்கு தேவையான நெல்லிக்காய் எங்க கிடைக்கும் ? (சில தாவரங்களின் விதைகள், மரத்திலிருந்து நேரடியா பூமில விழுந்தா முளைக்காது. அந்த பழங்களை யானை சாப்பிட்டு, அந்த விதைகள்... யானையின் வயிற்றில் சுரக்கும் ஒருவித திரவத்தில் நொதிக்கப்பட்டு, சாணத்தின் வழியா வெளில வந்தா மட்டுமே உயிர்ப்புடன் முளைக்கும்) கோடை காலத்துல வழக்கமான நீரோடைகள், குட்டைகள் வற்றி வறண்டபிறகு... மான், காட்டெருமை போன்ற மற்ற விலங்குகள் நீருக்கு அலைமோதி இறக்க ஆரம்பிக்கும். தப்பிப் பிழைத்த விலங்குகள் மட்டும்... நீருக்காக யானைகளை பின்தொடரும். யானைகள் பெருசா அலட்டிக்காது. தலைமை யானை தன்கூட்டத்த கூட்டிட்டு, அதுவரைக்கும் போகாத ஒரு திசையில பயணிக்கும். அங்க போய், ஒரு குறிப்பிட்ட மணல் பாங்கான இடத்துல, காலால உதைச்சு தோண்டும். மற்ற யானைகளையும் தோண்ட சொல்லும். நாலஞ்சு அடில, தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும். வேண்டிய மட்டும் குடிக்கும். இதுபோல தன்னோட வழித்தடங்கள்ல, பத்துக்கும் மேற்பட்ட ரகசிய இடங்கள வெச்சிருக்கும். இந்த ரகசியங்கள்... தலைமை பெண் யானைக்கு மட்டுமே தெரியும். அதோட மூதாதையர்கள் அதுக்கு சொல்லிக் கொடுத்திருக்கும். எத்தனை காலங்கள் ஆனாலும் மறக்காது.
அதேபோல யானையின் பிரசவ காலங்களில், வயிற்றுப்புண் ஆற... பல கி.மீட்டர்கள் பயணித்து, ஒருவித விசேஷமான புற்கள், தாவரங்களை உண்ணும். இதுவும் தலைமுறை தலைமுறையா சொல்லி கொடுக்கப் பட்டிருக்கும். வயது முதிர்ச்சியின் காரணமா ஒரு கட்டத்திற்கு மேல, தலைமை பதவியை... திறமையான இன்னொரு வயதும், அனுபவமும் முதிர்ந்த பெண்யானைக்கு மாற்றிக் கொடுக்கும். சில அரசியல் தலைவர்களைப் போல... தான் ஈன்ற குட்டிக்கு மட்டுமே கொடுக்கணும்னு நினைக்காது. திறமையுள்ள யானைக்கு மட்டுமே கொடுக்கும். அப்படி தலைமை மாறினால், முன்பு தலைமை பதவியில் இருந்த யானைகூட, புதிய தலைவிக்கு கட்டுப்பட்டே நடக்கும்.
ரொம்ப வயசான, நோய்வாய்ப்பட்ட, நடக்க முடியாத, இனி வாழ்வது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட யானைகள்... தன் கூட்டத்திடம் பிரியா விடை பெற்று பிரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போய், உணவு உண்ணாமல் இருந்து தற்கொலை செய்து கொள்ளும். பிரியும்போது... கூட்டத்தின் மொத்த யானைகளும் அந்த தற்கொலை செய்யப் போகும் யானையை சுற்றிநின்று அழும். ஆப்பிரிக்க யானை ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்க கண்டம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில்... ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டு பிடித்தார்கள். இது தற்கொலைதான் என்று உறுதியாக சொல்கிறார்கள். ஆப்பிரிக்காவின் சமவெளிக் காடுகள் போல் அல்லாமல், ஆசிய யானைகளின் வாழ்விடங்கள், பெரும்பாலும் மலைக் காடுகளை சார்ந்தே இருப்பதால்... காசிரங்கா, வியட்நாம் போன்ற ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே, இதுபோன்ற யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டார்கள்.
இந்தியாவில்... யானைகளுக்கான பாரம்பரிய வலசை பாதைன்றது 88 இருக்கு. (இப்போ பெரும்பாலும், அந்த பாதைகள் ஆக்ரமிக்கப் பட்டிருக்கு). ஆறுமாச குட்டியா, அந்த வலசை பாதைல அதோட அம்மாகூட நடந்துபோன ஒரு யானைகுட்டி, 70 வயசானாலும் மறக்காம அந்த பாதைகள நியாபகம் வெச்சிருக்கும். யானை என்னைக்குமே, அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படாது. அதேபோல தன்னோட பரம்பரை சொத்தை விட்டுக் கொடுக்காது. தன்னோட பரம்பரை சொத்தான வலசை பாதைகளை மீட்டெடுக்கவே, 'மனித - விலங்கு மோதல்' ன்ற, இவ்வளவு பெரிய போராட்டங்களை செய்யுது.
அதுங்கள நிம்மதியா வாழவிடுங்க !!! 🐘🙏💞
காட்டு_யானை - Sakthi Venkatesan அவர்களின் பதிவுகளில் இருந்து !
படங்கள் - Abraham Raj

ஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!


ஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்- மறு ஆய்வு மனுக்கள் அதிரடி டிஸ்மிஸ்!

நலத்திட்டங்கள், மானியங்கள் பெயரைச் சொல்லி, ஆதாரை நைச்சியமாக திணித்துவிட்டது மத்திய அரசு. மெல்ல மெல்ல நலத்திட்டங்களை, மானியங்களை ரத்து செய்துக்கொண்டே வருகிறது. எதிர்காலத்தில் மான்யமோ, நலத்திட்டங்களோ இருக்கப்போவதில்லை. ஆனால், ஆதாரைக் கொண்டு நம்மையெல்லாம் வதைக்கப்போகிறார்கள்.
*****
டெல்லி: மத்திய அரசின் ஆதார் அட்டைகள் அரசியல் சாசனப்படி செல்லும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. ஆதார் அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 27 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த அரசியல் சாசன பெஞ்ச் கடந்த 2018 பிப்ரவரி முதல் மே மாதம் வரை 38 நாட்கள் தொடர் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் 2018 டிசம்பர் 26-ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், அரசியல் சாசனத்தின்படி ஆதார் முக்கியமானது. மத்திய அரசின் திட்டங்கள், சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்; அரசியல் சாசனப்படி ஆதார் அட்டை செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டிஒய் சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் டிஒய் சந்திரசூட் தவிர 4 நீதிபதிகளும் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்யலாம் என தீர்ப்பு வழங்கினர். ஆனால் நீதிபதி டிஒய் சந்திரசூட் மட்டும் ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது தொடர்பான வழக்கு அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நிலுவையில் உள்ளதால் மறு ஆய்வு மனுக்கள் மீதான உத்தரவை நிறுத்தி வைக்கலாம் என கூறியிருந்தார்.
இருப்பினும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு அடிப்படையில் மத்திய அரசின் ஆதார் அட்டைகள் அரசியல் சாசனப்படி செல்லும் என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் நீதிபதி டிஒய் சந்திரசூட், ஆதார் சட்டம் செல்லும் என்கிற 4 நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
- Oneindia Tamil தளத்திலிருந்து…

இலக்கியாவின் கைவண்ணத்தில்! 🙂

 


பிசினஸ் சைக்காலஜி – சதீஷ் கிருஷ்ணமூர்த்தி


கடைகளில், இசையை பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களை நெடுநேரம் இருக்கவைக்கவேண்டுமா? வந்ததும் ஓட வைக்கவேண்டுமா? அதற்கான இசையை நாம் தேர்ந்தெடுத்தால் போதும்!

நமது வாடிக்கையாளர்களை பொருளை/சேவையை வாங்கினால் போதும்! நாம் நாலு காசு பார்த்தால் போதும்! என நினைக்காமல், அவர்களை தொடர்ந்து பயன்படுத்த வைப்பதின் மூலம் தான் தொடர்ந்து லாபம் பார்க்கமுடியும்.
வர்ணங்களும், வாசனையும் எப்பொழுதும் ஈர்ப்பானவை. இரண்டையும் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் ஐம்புலன்களையும் ஈர்ப்பது எப்படி? உதாரணம் : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
பற்றாக்குறை கோட்பாடு – குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஒரு பொருளை வெளியிட்டு, எப்படி வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டு, பொருளை விற்றுத்தீர்ப்பது!
நிறுவனங்களில் எல்லா நிலைகளிலும் உள்ள ஊழியர்கள் மேலே என்ன சொல்கிறார்களோ, ”நமக்கென்னப்பா! அவங்க சொன்னதை அப்படியே கேட்போம்” என அதை அப்படியே கேட்டு நடக்கிறார்கள். விளைவு நிறுவனத்திற்கு தான் இழப்பு ஏற்படுகிறது. இந்த அணுகுமுறைக்கு பதிலாக, “நிர்வாகம் இப்படி யோசிக்கிறது! உங்கள் ஆலோசனைகளையும் மனந்திறந்து சொல்லுங்கள்” என்றால், ஆலோசனைகளையும் சொல்கிறார்கள். எடுக்கப்படும் முடிவுகளை ஆர்வத்துடனும் செயல்படுத்துகிறார்கள்.
இப்படி 20 தலைப்புகளில் பல சந்தை ஆய்வு (Market Psychology) குறித்த தகவல்களுடனும், நகைச்சுவையாகவும் பல எளிய உதாரணங்களுடனும் எழுதியிருக்கிறார். தொழில் செய்பவர்களுக்கு பயன்படக்கூடிய நல்ல புத்தகம்.
****
புத்தத்தின் தலைப்புக்கு கீழே “போட்டியாளர்களை முறியடித்து, வாடிக்கையாளர்களைப் பெற்றுத்தரும் பார்முலாக்களை உள்ளடக்கிய வெற்றிப் புத்தகம்” என போட்டிருக்கிறார்.
எளியவனை வலியவன் அமுக்குவது தான் முதலாளித்துவ கோட்பாடாக இருக்கிறது. அதனால் தான் “போட்டியாளர்களை முறியடித்து” என்ற சொற்பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
நாம் எல்லோரும் அறிந்த நடைமுறை. இந்தியாவில் இப்பொழுது சந்தைப்படுத்துவதில் உள்ள முதன்மையான நடைமுறை. அரசாங்க ஆட்களை கைக்குள் போட்டுக்கொண்டு, மறைமுகமாக எல்லாம் இல்லை. வெளிப்படையாகவே தங்கள் தொழிலை சந்தைப்படுத்துவது! போட்டியாக இருக்ககூடிய நிறுவனங்களை அரசப் படைகளையே அடியாட்களாக வைத்து காலி செய்வது!
****
ஆசிரியர் அமெரிக்காவில் முதுகலை நிர்வாக படிப்பு முடித்திருக்கிறார். பிரபல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். இப்பொழுது பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார்.
***
புத்தகத்தில் எனக்கு உள்ள குறை. புத்தகம் தமிழில் இருந்தாலும், ஆங்கிலத்திற்கு நடு நடுவே தான், தமிழ் வருகிறது. நிறைய வாசிப்பு இல்லாமல், இந்த புத்தகத்தை எளிமையாக புரியும்படி எழுதுவது சாத்தியமில்லை. ஆனால், இப்படி எழுதினால் தான் வாசகர்களை எளிதாக சென்றடைய முடியும் என நினைத்து தமிங்கிலீசில் எழுதியிருக்கிறார். ஆசிரியர் இந்த நடையை தேர்ந்தெடுத்ததால், அவர் சொல்ல வருகிற எதுவும் மனதில் அழுத்தமாய் பதிய மறுக்கிறது. ஆகையால், ஆசிரியர் அடுத்த புத்தகத்தை எளிய தமிழில் எழுதவேண்டும் என கோருகிறேன்.
பக்கங்கள் : 117
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ. 135
இணையத்தில் தேடினால், கொஞ்சம் விலை குறைவாகவே கிடைக்கிறது. படியுங்கள்.
#2021/1

அம்பேத்கார் பாடசாலைக்கு புத்தகங்கள் தந்ததற்கு நன்றி


டாக்டர் அம்பேத்கர் பகுத்தறிவு பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிய சகோதரி மைத்ரேயி அவர்களின் தாயார் மற்றும் சகோதரர் அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் வியாசை தோழர்கள் சார்பாக நன்றிகளும் பேரன்புகளும்

💙.
இதற்கு மூல காரணமாக இருந்து உதவிய சகோதரி
Shalin Maria Lawrence
அவர்களுக்கும் நன்றி! 💙

சிறந்த எழுத்தாளன் ஆவது எப்படி?

 


என் பேரன் ரித்விக் மோகனுக்கு நான் சொன்ன எட்டு கட்டளைகள்.

1. முதலில் நிறைய படி.
2. எழுதுவதற்கு "மூடு" வருவதற்காகக் காத்திருக்காதே!
3. உண்ணும் சோறும் பருகும் நீரும் போல எழுத்து நமது அன்றாட நிகழ்வாக இருக்க வேண்டும்.
4 மொழியைப் பிழையின்றி எழுத கற்றுக்கொள். அப்போதுதான் அலாவுதீன் பூதம் போல மொழி நமக்கு கீழ்ப்படிந்து ஏவல் செய்யத் தொடங்கும்.
5. நீ எழுதியதை உனக்குத் தெரியாத யாரோ ஒருவன் எழுதியது போல எடுத்துப் படி. நாம்தான் எழுதினோமா என்று சந்தேகம் வரும் போது நீ வளர்கிறாய் என்று தெரிந்து கொள்.
6. நீ எழுதியவற்றை உடனுக்குடன் படித்து கருத்துச் சொல்வதற்கு உன் மேல் பொறாமை படாத ஒருவன் அல்லது ஒருத்தியைக் கண்டுபிடித்து வைத்துக்கொள்.
7. தினமும் மரம் மட்டை குளம் குட்டை ஆண்கள் பெண்கள் எருமைகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் உன் மனதில் கனியும் தூய எண்ணங்களை பயப்படாமல் எழுது.
8. கடைசியாக ஒரு எச்சரிக்கை: எழுத்து என்பது தவம் என்றும், அது தானாக உன்னிடமிருந்தே நிரம்பி வழிய வேண்டும் என்றும், ஒரு மலர் மலர்வது போல ஒரு செடி வளர்வது போல எழுத்து உன்னிடமிருந்து தானாக தோன்ற வேண்டும் என்றும் பேசுபவர்களை தூரத்தில் வை. இவை எல்லாமே மாயைகள். இப்படிப் பேசுபவர்கள் எழுத்தை ஒரு புனிதப் பிரதேசத்துக்கு கடத்திச்சென்று காணாமல் அடித்து விடுவார்கள். எனவே எழுத்தை மேட்டிமைப் படுத்தாமல் அன்றாட வாழ்க்கை போல் தினந்தோறும் எழுது.

- இந்திரன் ராஜேந்திரன்❤️

பொங்கலை ஒட்டி மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி குரோம்பேட்டையில்!

 


The Pledge - மேஜிக் நிபுணர் முதலில் ஒரு பொருளைக்காட்டி, பார்வையாளர்களைச் சோதிக்கச் சொல்வார்.

The Turn - அந்தப்பொருளை வைத்து அசாதாரணமான ஒன்றைச் செய்தல் (உதாரணம் மறையச் செய்தல்)
The Prestige - மறையச் செய்வதோடு நாம் மகிழ்வதில்லை.மறைந்ததை மீளக் கொண்டுவர வேண்டும். இதுதான் மிகவும் கடினமான மூன்றாவது பகுதி. இது தான் The Prestige!
- ’Prestige’ படத்திலிருந்து…

****
கடந்தவாரம் குரோம்பேட்டையில் நண்பரை பார்க்க சென்றிருந்த பொழுது, பெரியார் மன்றத்தில் இருந்து நிறைய கைதட்டல்கள் கேட்டுக்கொண்டிருந்தது. உள்ளே போய் பார்த்தால், மேஜிக் ஷோ ஒருவர் நடத்திக்கொண்டிருந்தார். ஐம்பது பேருக்கும் மேலாக மாணவர்கள் உற்சாகமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்த 20 நிமிடத்தில் பேபி ஜெயக்குமார் சின்ன சின்னதாய் நிறைய மேஜிக் செய்துக்காட்டினார். இறுதி நிமிடங்களில் மேஜிக்கை எப்படி செய்கிறேன் என்பதை விளக்கி சொன்னார். முன்பை விட மாணவர்கள் உற்சாகமாக கைத்தட்டினார்கள். வருகிற பொங்கலன்று நடத்த இருக்கும் சிறப்பாக நடத்த இருக்கும் மேஜிக் ஷோவிற்கான விளம்பர காட்சி (Promo) தான் நாங்கள் பார்த்தது!
திராவிடர் கழக அமைப்புகள் முன்பெல்லாம் “மந்திரமா! தந்திரமா” நிகழ்ச்சியை நிறைய நடத்தி வந்தார்கள். இப்பொழுதும் தங்கள் மேடைகளில் நடத்துவார்கள் என நினைக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என புரிந்துகொள்கிறேன்.
ஆட்சியதிகாரத்தில் பா.ஜனதாவும், மாநிலத்தில் அதிமுகவும் ஆட்சி செய்யும் இந்த காலங்களில் எங்கு பார்த்தாலும், மூடநம்பிக்கைகள் ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே பின் தங்கி இருக்கிற மாநிலங்களையும் இவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னுக்கு இழுக்கிறார்கள். நாம் விரைந்து செயல்பட வேண்டிய தருணமிது!
வருகிற பொங்கலன்று 16/01, 17/01 இரண்டு நாட்களிலும் மாலை 4 முதல் 6 மணி வரை ஒரு காட்சியும், இரவு 7 முதல் 9 மணிவரை ஒரு காட்சி என மொத்தம் நான்கு காட்சிகள் நடத்த இருக்கிறார்கள்.
காட்சிகள் இலவசம் அல்ல! கொஞ்சம் மெனக்கெட்டு சிறப்பாய் செய்கிறார்கள். மேலும், பகுத்தறிவு இதழ் வளர்ச்சி நிதிக்காக நடத்துகிறார்கள். ஆகையால் கட்டணம் உண்டு. போன் செய்து கேட்டுக்கொள்ளுங்கள்.
நாங்கள் குடும்பத்தோடு போகலாம் என முடிவெடுத்திருக்கிறோம். நீங்களும் வாருங்கள். நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.