> குருத்து: March 2011

March 31, 2011

தேர்தல் புறக்கணிப்பு ‍- சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை!


பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
பல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
பொய்யின் முகத்தில்
சவக்களை.

மாற்றம்... இன்னும்
தொலைவில் இல்லை

பின்குறிப்பு : நான் எழுதிய "சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை" என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது. அந்த கவிதையை மீண்டும் படித்துப்பார்த்தால்... இந்த தேர்தலுக்கும் பொருந்துவருகிறது. ஆகையால் மீள்பதிவு செய்திருக்கிறேன் சில மாற்றங்களுடன்.

தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு!


நன்றி : நல்லூர்முழக்கம்

ஒவ்வொருமுறை தேர்தல் நடக்கும் போதும் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தலில் ஓட்டுப்போடுவதால் பலன் ஒன்றுமில்லை என்பதும் மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் ஓட்டுப் போட தயாராக இருக்கிறார்கள் என்றால் அதன் காரணம் வேறு வழி எதுவும் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது தான். மாற்று இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும், உணர்த்த வேண்டும் என்பதற்காக “ஓட்டுப் போடாதே புரட்சி செய்” எனும் குரலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட ஒரு சிறு வெளியீடு தொடராக இங்கு வெளியிடப்படவிருக்கிறது. படியுங்கள். பரப்புங்கள்.

*****

இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?

அப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று மூன்று தலைமுறைகள் ஏமாந்த பிறகும் புத்தி வராமல்,”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே” என்ற சத்தம் கேட்டவுடனே நான்காவது தலைமுறையும் ஓடுகிறது; மசால் வடைக்கு மயங்கும் எலியைப்போல வாக்குச்சாவடியின் முன்னால் வரிசையில் நிற்கிறது. இந்த மானக்கேட்டை யாரிடம் சொல்லி அழுவது?

தேர்தல் என்ற அறிவிப்பு வந்தவுடன் கரண்டு கம்பத்தைக் கண்டால் காலைத்தூக்கும் தெருநாயைப் போல, தானாக வந்து ஓட்டுப் போடுவான் என்று நம்மைக் கேவலமாக நினைக் கிறார்களே ஓட்டுப் பொறுக்கிகள், இந்த அவமானத்திற்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?

பழனிக்கும் திருப்பதிக்கும் மொட்டை போடும் பக்தன் கூட தன்னுடைய நம்பிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்கிறான். ‘இந்தச் சாமிக்கு நேர்ந்து கொண்டால் இது நடக்கும்” என்று நம்பவும் செய்கிறான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் ‘சாவடியில்’தவறாமல் மொட்டை போட்டுக் கொள்ளும் வாக்காளனுக்கோ இந்தத் தேர்தலின் மீது அப்படியொரு நம்பிக்கை கூடக் கிடையாது.

‘எவன் வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை, விவசாயம் விளங்கப் போவதில்லை, வேலை கிடைக்கப் போவதில்லை, லஞ்சம் ஒழியப் போவதில்லை, ஊழல் குறையப் போவதில்லை” என்று ஆணித்தரமாகப் பேசுகிறான். ‘அப்புறம் எதற்காக ஓட்டுப் போடுகிறாய்?” என்று கேட்டால், ‘வேறென்ன செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறான். வாக்குரி மையை ‘வேஸ்ட்’ க்காமல் யாராவது ஒரு திருடனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட வேண்டுமென்று துடிக்கிறான்.

‘ஓட்டுப் போடவில்லையென்றால் செத்ததுக்குச் சமமாமே” என்று பாமரத்தனமாகச் சிலர்அஞ்சுகிறார்கள். இது உண்மை யென்றால் மன்மோகன்சிங் செத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும். 3 தேர்தலாக ஓட்டுப்போடாத மன்மோகன்சிங் தான் இந்த நாட்டின் பிரதமர். தேர்தல் ஒரு நாடகம் என்றும் எவன் ஜெயித்தாலும் அந்த ஆட்சி நம்ம ஆட்சிதான் என்றும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டாடா பிர்லா போன்ற பெரு முதலாளிகள் முதல் உள்ளூர்ப் பணக்காரர்கள் வரை யாரும் எப்போதும் ஓட்டுப் போடுவதில்லை. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று இந்த ‘ஜனநாயகத்தை’க் காப்பாற்றுவது பாமரமக்கள்தான்.

ஏனென்றால், ‘தேர்தலைப் புறக்கணித்து விட்டால் இருக்கின்ற ஒரே ஒரு பிடியையும் நாம் இழந்துவிடுவோம். ஜெயலலிதா சரியில்லை என்றால் கருணாநிதியைக் கொண்டு வரலாம், சோனியா சரியில்லை என்றால் வாஜ்பாயியைக் கொண்டு வரலாம். புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்து விடமுடியும்? வேறென்ன வழி இருக்கிறது?”என்று எண்ணுகிறான் வாக்காளன்.

தேர்தல் தோல்வி என்பது ஓட்டுப் பொறுக்கிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்ல, இன்று தோற்றாலும் நாளை நாம்தான் என்று ஐந்தாண்டுகள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். ட்சிக்காலத்தில் அடித்த கொள்ளையை அனுபவிக்கிறார்கள். தத்தம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை ஏறுகிறார்கள்.

‘மக்களுக்குத்தான் இதை விட்டால் வேறு வழியில்லை” என்ற சலிப்பு! ஓட்டுக் கட்சிகளுக்கோ ‘நம்மை விட்டால் மக்களுக்கு வேறு நாதி இல்லை” என்ற இறுமாப்பு!
தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் தயங்கலாம். ஆனால் மக்களின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மிகவும் அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறது தேர்தல் அரசியல்.

தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வரும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை நாம் ஏன் புறக்கணிக்க மறுக்கிறோம் என்பதுதான் எங்களது கேள்வி.
வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?

‘கலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்” என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி. ‘இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்” என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா. ‘மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்” என்கிறார் நடிகர் விஜயகாந்த்.

இந்த வாக்குறுதிகளைப் படிப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பிச்சைக்காரர்கள் என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். இப்படி எல்லாவற்றையும் இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்று ஆத்திரம் பொங்க பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள் திமிர் பிடித்த மேட்டுக்குடி அறிவாளிகள்.

யாருடைய பணத்திலிருந்து நமக்கு இந்த ‘இலவசங்களை’ வழங்குகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்? அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில் கப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக, நேர்முக வரிப்பணம்தான். ஏழை களின் வரிப்பணத்திலிருந்து ஏழைகளுக்குச் செலவிடுவதை ‘இலவசம்’ என்று எப்படி அழைக்க முடியும்?

இலவச சைக்கிளுக்கு 83 கோடி, பாடநூலுக்கு 113 கோடி, சத்துணவுக்கு 850 கோடி, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு 300 கோடி – என்று பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.

போர்டு, ஹண்டாய், கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும், சாலை வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு வரிச் சலுகை களையும் வாரி வழங்கியிருக்கிறது ஜெ அரசு. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பன்னாட்டு முதலாளிகள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஆயிரம் கோடி சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற இரகசியத்தை ஜெயலலிதா வெளியிடுவாரா? ‘முதலாளிகளுக்கான இலவசத் திட்டங்கள்’ என்று இவை அழைக்கப் படுவதில்லையே, ஏன்?

2004-05 ஆம் ஆண்டில் மட்டும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு ப.சிதம்பரம் வழங்கி யுள்ள வரித்தள்ளுபடி 1,58,661 கோடி ரூபாய் என்கிறது முதலாளி வர்க்கத்தின் பத்திரிகையான பிசினஸ் ஸ்டாண்டர்ட். னால் இதே ஆண்டில் நாடு முழுவதும் உள்ள மக்களின் ரேசன் அரிசிக்காக சிதம்பரம் வழங்கிய மானியம் ரூ.25,000 கோடி மட்டும்தான். யார் வழங்கும் மானியத்தில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா?

ஆண்டொன்றுக்கு டாஸ்மாக்கின் மொத்த விற்பனை 24,000 கோடி என்கிறார் ஜெயலலிதா. இதில் அரசுக்குக் கிடைக்கும் ண்டு வருவாய் சுமார் 5000 கோடியாம். என்றால், சசிகலாவின் சாராயக் கம்பெனி அடித்த லாபம் எத்தனை யிரம் கோடி? சாராயத்தில் வரவு 5000 கோடி, சத்துணவுக்குச் செலவு 850 கோடி. இந்த அயோக்கியத் தனத்துக்குப் பெயர் இலவசத் திட்டமாம்!

தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது என்றும் இதைச் சாதித்தது நான்தான் என்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் இத்தகைய ‘இலவச’த் திட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுதான் தமிழகத்தின் முன்னேற்றமா?

கிலோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் புழுத்த அரிசியில்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற அளவிற்கு மோசமான வறுமை நிலையில் தமிழ்நாட்டின் பல கோடி மக்கள் வைக்கப்பட்டிருப் பது ஏன்? நிலமில்லாத கூலி விவசாயி மட்டுமல்ல, தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயி கூட சொந்த நிலத்தில் விளைந்ததை வந்த விலைக்கு விற்று விட்டு, இந்த 2 ரூபாய் புழுத்த அரிசியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? எதை நட்டாலும் விவசாயம் விளங்காத போது கருணாநிதி கொடுக்கவிருக்கும் புறம்போக்கு நிலத்தில் யாரை நடுவது?

பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்யவும், கட்டிய மனைவிக்கு சேலை எடுத்துக் கொடுக்கவும், அவளுக்குப் பிரசவம் பார்க்கவும் விஜயகாந்த் பணம் கொடுக்க வேண்டிய நிலைமைதான் 12 தேர்தல்களில் நாம் கண்ட முன்னேற்றமா?

2000 ரூபாய் காசுக்காக சென்னை நகரில் 50 பேர் மிதிபட்டுச் செத்திருக்கிறார்களே, மக்களை இந்த அவலமான வாழ்க்கை நிலைக்கு விரட்டியது யார்?

ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால் சோறு போட்டு 100 ரூபாய், ஸ்டாலின் கூட்டத்துக்குப் போனால் சேலை, இன்னொரு மந்திரி கூட்டத்துக்குப் போனால் 2 கிலோ அரிசி, புரட்சித் தலைவி பிறந்த நாளுக்கு அன்னதானம்… என்று எட்டுத்திக்கும் பிச்சை யெடுத்துத் திரிய வேண்டிய மானங்கெட்ட நிலைமை மக்களுக்கு ஏன் ஏற்பட்டது?

இப்படிப்பட்ட கேள்விகளை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் எழுப்புவதில்லை. இலவச டிவி கொடுக்க முடியுமா முடியாதா, 2 ரூபாய் அரிசி போட முடியுமா முடியாதா என்று அனல் பறக்கும் விவாதம் நடத்துகிறார்கள். பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப்போன பண்ணையாட்களைப் போல மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.

தாம் சொந்தமாகச் சம்பாதித்த காசிலிருந்து பழனி படிக்கட்டில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்கிறார்கள் பக்தர்கள். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகளோ, நம்மைக் கொள்ளையடித்த பணத்திற்குச் சில்லறை மாற்றி 50, 100, 500 என்று நமக்கே விட்டெறிகிறார்கள். இவர்களுக்கு எப்படி வந்தது இந்தப் பணம்?

அரசாங்க காண்டிராக்டில் அடித்த கொள்ளை, காடுகளையும் மலைகளையும் வெட்டி விற்ற காசு, புறம்போக்குகளை விற்று ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் குவித்த பணம், ரேசன் அரிசி,வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம்,வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சுருட்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சப்பணத்தில் வசூலிக்கும் கப்பம், சட்டவிரோத சமூக விரோதத் தொழில்கள், போலீசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் கட்டைப் பஞ்சாயத்து கலெக்சன், இவையனைத்துக்கும் மேலாக பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டைக் கூட்டிக் கொடுத்து வாங்கிய கமிசன்…….. என்று இவர்கள் சூறையாடிய பொதுச் சொத்துதான் தொகுதிக்கு 4 கோடி 5 கோடி என றாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முன்னர் முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கித் தின்று கொண்டிருந்த ஓட்டுப்பொறுக்கிகள், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர் தாங்களே முதலாளிகளாக மாறத் தொடங்கிவிட்டார்கள். கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், சினிமா தயாரிப்பாளர்கள், தண்ணீர் வியாபாரிகள், கிரானைட் அதிபர்கள், பஸ் கம்பெனி அதிபர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகள் .. என இந்த ஓட்டுப் பொறுக்கித் தொழிலதிபர் களின் கொள்ளை லாபம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தன்னுடைய சாராயக் கம்பெனி லாபத்திலிருந்து, ஜெயா-சசி கும்பல் ஓட்டுக்கு 1000 ரூபாய் கூடக் கொடுக்கும்; ஒரே ஆண்டில் போட்ட காசையும் எடுக்கும். தன்னால் போண்டியாக்கப்பட்ட ஏழை மக்களையே தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவர்களைத் தன்னுடைய கையேந்திகளாகத் திட்டமிட்டே மாற்றி வருகிறது ஜெயா – சசி கும்பல். கருணாநிதியோ ஏழைகளை அரசாங்கக் கையேந்திகளாகக்கும் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கிறார்.

தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்துக் கஞ்சி குடிக்கும் மானமுள்ள உழைக்கும் மக்கள் பிச்சைக்காரர்களாக நடத்தப் படுகிறார்கள். சூடு, சொரணை, மான ரோசமில்லாமல் பதவிக்காக எவன் காலையும் பிடிக்கத் தயங்காத இழிபிறவிகளும், அடுத்தவனை ஏமாற்றியே உடம்பை வளர்த்த சோம்பேறிகளும், பொதுச் சொத்தை வளைக்கவும் சொந்த மனைவியை விலை பேசவும் தயங்காத கயவர்களும் ‘எம்.எல்.ஏ காட்டன், மினிஸ்டர் காட்டன்’ சட்டைகளுக்குள் புகுந்துகொண்டு மினுக்கித் திரிகிறார்கள்.

கேவலம் ஒரு டீயைக் கூட அடுத்தவன் காசில் மட்டுமே குடித்துப் பழகிய இந்த அயோக்கியர்கள் மக்களுக்கு இலவசத் திட்டம் அறிவிக்கிறார்கள்; ஓட்டுக்கு 200, 300 பணமும் கொடுக்கிறார்கள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும், இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக்கொள்வதற்குச் சமமல்லவா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.

தொடரும்

March 28, 2011

நாம் ஏன் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்?

முன்குறிப்பு : 2009ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்த சமயத்தில், தோழர் மருதையன் ஆனந்த விகடனுக்காக அளித்த பேட்டி இது. தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? அதற்கு நாம் சொல்லும் மாற்றுத்திட்டம் என்ன? என்பதையும் இந்த பேட்டி விளக்குகிறது. சுருக்கி வெளியிடலாம் என்றால், எதை வெட்டுவது என்பதில் குழப்பமாகிவிட்டேன். ஆகையால், எதையும் மாற்றாமல் வெளியிடுகிறேன்.

*****

ஆனந்த விகடனுக்காக அதன் நிருபர் பாரதி தம்பி ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதையனிடம் எடுத்த நேர்காணலின் சுருக்கப்படாத முழுமையான வடிவத்தை இங்கு பதிவு செய்கிறோம். இதில் இன்றைய இந்திய அரசியலின் உண்மை முகம், ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பு, மாற்று திட்டம், திராவிட அரசியலின் சீரழிவு, ஈழப்பிரச்சினையின் தற்போதைய நிலை, ரசிய-சீன பின்னடைவு, நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி… அனைத்தும் ஒரு பறவைப் பார்வையில் சுருக்கமாக இடம் பெறுகின்றன. தேர்தல் புறக்கணிப்பு குறித்த எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த நேர்காணல் எளிமையாக எடுத்துரைக்கிறது. வரும் நாட்களில் இது குறித்த விரிவான கட்டுரைகளை வெளியிடுவதற்கு இந்த நேர்காணல் ஒரு முன்னுரையாக இருக்கும்.

நட்புடன்
வினவு

ஓட்டுக்கட்சிகளை மக்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?

”ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால், அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை. 1950&லிருந்து இன்றுவரை இந்த தேர்தல் அரசியலில் மக்கள் பங்கேற்று வருவதால் ‘வாக்குச்சீட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ என்று யாரும் சொல்ல முடியாது. ஒட்டுப்போடுகிற மக்களிடம் சென்று ‘தேர்தலில் ஓட்டுப்போடுவதால் என்ன நடக்கும்?’ என்று கேட்டால், ‘எதுவும் நடக்காது’ என்று மிகத் தெளிவாக பதில் சொல்வார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சாலைவசதி, குடி தண்ணீர் என தேர்தல் அரசியல் மூலம் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள். பழநி கோயிலுக்குப் போகும் பக்தனுக்குக் கூட ‘முருகனுக்கு மொட்டைப்போட்டா ஏதாவது நல்லது நடக்கும்’ என்று நம்பிக்கை இருக்கிறது. ஓட்டுப் போடுகிறவர்களுக்கு அந்த நம்பிக்கைக்கூட கிடையாது.

இருந்தாலும் ஓட்டுப்போடுகிறார்கள் என்றால், அது வேறு வழியில்லாத கையறு நிலை. இரண்டாவது இது ஒரு ஆஸ்வாசம். கருணாநிதி மாற்றி, ஜெயலலிதா. அந்தம்மாவை மாற்றி கருணாநிதி என்று மக்கள் தங்களின் கோபத்தை தணித்துக்கொள்வதற்கான வாய்ப்பு. மூன்றாவது வாக்காளர்களில் கணிசமான பிரிவினர் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டு வாங்கிட்டுப் போறவன் எப்படியும் எதையும் செய்ய மாட்டான்னு தெரியும். அதனால் உடனடியா ‘இப்ப என்ன தர்ற?’ என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அண்ணாச்சிக் கடையில் சோப்பு, ஷாம்பு வாங்கும் வாடிக்கையாளன் ‘என்ன ஆஃபர் இருக்கு?’ என்று கேட்பதுபோல ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் ஆஃபர் கேட்கும் அளவுக்கு பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கீழ்மட்ட கிராமங்கள் வரை இந்த ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. கிராமங்களில் இந்தப் பணத்தை வாங்கி விநியோகிப்பவர்களாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. ‘அந்த ஊர்ல அவ்வளவு கொடுத்தீங்க, எங்களுக்கு மட்டும் இவ்வளவுதான் கொடுத்திருக்கீங்க’ என்று ‘உரிமை’யை போராடிப் பெறும் குழுக்களாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த ஜனநாயகத்தை ‘இது இப்படித்தானே இருக்க முடியும்?’ என்று அதன் சகல சாக்கடைத்தனங்களோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். இது தேர்தலுக்கு மட்டுமில்லை. ‘போலீஸுன்னா அப்படித்தான் இருக்கும், கோர்ட்டுன்னா அப்படித்தான் இருக்கும்? வேறு எப்படி இருக்க முடியும்?’ என்பதுவரைக்கும் நீள்கிறது. வேறு எப்படி இருக்க முடியும் என்பதை சித்திரம் போட படம் வரைந்து காட்ட முடியாது. எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மக்கள் போராடி அதை பெற வேண்டும். அதுதான் தீர்வு. அது வரைக்கும் நம் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே… அதனால் இதற்கு ஒரு மாற்று கிடையாது என்று சிந்திக்க வேண்டியது இல்லை. ஓட்டுப்போடுவது என்ற நடவடிக்கை 1950&களில் நம்பிக்கையோடு ஆரம்பித்தது. இன்று அது ஒரு கொடுக்கல்&வாங்கள் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் அவநம்பிக்கையின் எல்லையில் நின்றுகொண்டுதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ‘இருந்தாலும் போடுறாங்கல்ல’ என்பது இந்த அமைப்பு முறையை நியாயப்படுத்துவதற்கும், இதனால் ஆதாயம் அடைபவர்களும் சொல்கிற ஒரு வாதம், அவ்வளவுதான்.

வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை, பேச்சுரிமை என மற்ற உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

சரி, அப்படியானால் என்னதான் மாற்று?

” ‘தேர்தலே கூடாது என்கிறீர்களா, ஜனநாயகமே கூடாது என்கிறீர்களா, சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா?’ என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது. தேர்தலே தப்பு என்று சொல்லவில்லை. இது ஒரு போலி ஜனநாயகம் என்கிறோம். ஓட்டுப்போடும் உரிமை இருப்பதினால் மட்டுமே இது ஜனநாயக நாடாகிவிடாது. வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத் தவிர வேறு எந்த உரிமையையும் கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தருவதும் இல்லை, விரும்புவதும் இல்லை. கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை என இவை எல்லாம் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். பேச்சுரிமைக் கூட அடிப்படை உரிமைதான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

வேறு ஒரு உதாரணத்தின் வழிக்கூட இதை பேசலாம். இப்போது ஈழப் பிரச்னையில் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்கள், அந்த ஒடுக்குமுறையின் கீழ் வாழ சம்மதிக்கவில்லை. ராஜபக்ஷே என்ன சொல்கிறார்? ‘பெரும்பான்மை தமிழர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள், ஈழம் கேட்பவர்கள் சிறுபான்மையினர்’ என்கிறார். இப்போது இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான சிறந்த ஜனநாயக வழி என்ன? தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தமிழர்கள் இலங்கையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்களா, தனித்திருக்க விரும்புகிறார்களா என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த கருத்துரிமையின் மீது குண்டு வீசப்படுகிறது. இதை ஆதரிப்பவர்கள்தான், சுப்பிரமணியன் சாமியின் மீது முட்டை வீசியதை கருத்துரிமையின் மீதான தாக்குதல் என்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்த விஷயம், வாக்குரிமைதான் ஜனநாயகம் என்ற சித்திரம் ஒரு மோசடி. அது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. மற்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லை. அது ஈராக்கில் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை மாதிரி. ஜனநாயகம் பற்றிய இந்த புரிதலின்மையுடன் மக்கள் வைக்கப்பட்டிருப்பது அவர்கள் இந்த மோசடிக்கு இரைவாதற்கு ஒரு முக்கியமான காரணம்.

இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி போராடுவதன் வழியாகத்தான் மாற்றை நாம் கண்டறிய முடியும். ம.க.இ.க&வைப் பொருத்தவரைக்கும் ‘புதிய ஜனநாயகம்’ என்று ஒரு மாற்றை சொல்கிறோம். அதில் தேர்தல் உண்டு. ஆனால் அந்த தேர்தல் இப்படி ‘வாக்காள பெருமக்களே’ என்று அழைக்கிற தேர்தலாக இருக்காது. டாடாவையும், அவரால் துப்பாக்கி சூடுபெற்ற சிங்கூர் விவசாயியையும் சமப்படுத்தி வாக்காளப் பெருமக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரும் மோசடியை அது செய்யாது. அது, விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள், வர்க்கங்கள், சாதிகள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும்போது மட்டும்தான் அங்கு ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படும். அதில் ஆலைகள் அனைத்தும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும், தொழிலாளர்களாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதற்குள்ளே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்கள் போடும் சட்டங்களை தாங்களே அமுல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். accountable and answerable to the people and representative. கோர்ட் உள்பட அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக, மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதாக, அவர்களுக்கு பதில் அளிக்க கடமைப் பட்டதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். ஒரு தொழிற்சங்க தேர்தலைப்போல அது எளிமையானதாக இருக்கும். செயலாளர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து எடுத்துவிடலாம். இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. இந்த உத்தரவாதங்கள் இருக்கும்போதுதான் ஜனநாயகம் என்பது உண்மையிலேயே இயங்கும். உண்மையிலேயே அது பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக இருக்கும். அப்படி ஒரு மாற்றைதான் நாங்கள் முன் வைக்கிறோம். அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே கம்யூனிச நாடுகள் என பொதுவாக அழைக்கப்படும் ரஷ்யாவிலும், சீனாவிலும் அமுலில் இருந்தது.

சோவியத் யூனியன்தான் உடைந்துவிட்டதே, சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதானே..?

அப்படிப் பார்த்தா கடந்த 300, 400 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் ஜனநாயகம் வெற்றியடைந்ததாக சொல்ல முடியுமா..? ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவு மிகச் சாதாரண விஷயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். அது மோடி மஸ்தான் வித்தை கிடையாது. ‘அது தோற்றுவிட்டதே’ என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்யனுமோ அதை செய்ய வேண்டும். ‘அதான் தோத்துடுச்சே, தோத்துடுச்சே’ன்னா நேபாளத்தில் எப்படி வென்றது?

நேபாளத்திலும் அவர்கள் தேர்தல் பாதைக்குதானே வந்திருக்காங்க?

”தேர்தல் பாதைதான். ஆனால் ஒரு புரட்சிக்குப் பிறகு முடியாட்சியை அகற்றி வந்த குடியாட்சி. ஒரு தீவிரமான மக்கள் போராட்டத்துக்குப் பிறகு வந்த குடியாட்சி. இதற்கு அடுத்ததா அடுத்தக் கட்டத்துக்குப் போகனும். நம்ம நாட்டுல இருக்குற பாராளுமன்றம் மக்கள் போராட்டத்தினால் வந்தது அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக வெள்ளைக்காரனால் போடப்பட்ட எலும்புத்துண்டு. நம்மை நிறுவனமயப் படுத்துவதற்காக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடு. அதனுடைய உச்சத்தை இன்று எட்டிவிட்டது. அன்று பெரிய முதலாளிகளும், செல்வந்தர்களும் அந்த சபையை அலங்கரித்தார்கள். 60 ஆண்டுகள் கடந்து ஒரு சுற்று வந்த பிறகு இன்றைக்கும் கோடீஸ்வரர்கள்தான் அந்த சபையை அலங்கரிக்கிறார்கள். இந்த ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதற்கு இதெல்லாம்தான் ஆதாரம்.”

நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது?

”ஊழல் மட்டுமே பிரச்னை என்று சொல்ல முடியுமா..?”

”ஊழல் மட்டுமல்ல. உண்மையான மக்கள் அதிகாரம் இல்லை என்பதுதான் இதன் மையமான பிரச்னை. ஊழல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு. ‘ஊழல் மட்டுமே பிரச்னை. ஆகையால் நல்லவர்களைத் தேர்தெடுங்கள்’ என்றுதான் அதை நியாயப்படுத்துகிறவர்கள் சொல்கிறார்கள். நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? நான் ரொம்ப எதார்த்தமா கேட்கிறேன். ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ இந்த ரெண்டு கேள்விகள்தானே இன்னைக்கு டிக்கெட் கிடைக்க அடிப்படையா இருக்கு? கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது? அதனால் ஊழல்தான் பிரச்னை என்பது அடிப்படைப் பிரச்னையிலிருந்து திசை திருப்பக்கூடிய ஒரு வாதம். இந்த அமைப்பை சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற வாதம்.”

நேபாளத்தில் வந்திருப்பதும் முதலாளித்துவ ஆட்சிதானே..?

”அங்கு முடியாட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் வந்திருக்கிறது. இன்னும் முதலாளித்துவம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை என்றாலும் கீழிருந்து மேல் நோக்கி வந்திருக்கும் புரட்சி அது. ஆனால் இந்தியாவில் கீழிருந்து மேல் வரை எல்லா வகையான முதலாளித்துவக் கூறுகளையும் வைத்துக்கொண்டே ஜனநாயகத்தை ஒரு குல்லா மாதிரி போட்டார்கள். இது ஒரு கோமாளித் தொப்பி மாதிரி. ஜனநாயகமும் இருக்குது, தீண்டாமையும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது, சாதியும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது, ஊர் கட்டுப்பாடும் இருக்குது. கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு முடி திருத்தும் தொழிலாளி இன்னைக்கும் ஊர் உத்தரவு வாங்காமல் கடை வெச்சிட முடியுமா..?”

‘தேர்தல் அரசியலை நீங்க எதிர்க்குறீங்க. ஆனால் தேர்தல் அரசியலில் வந்த கருணாநிதியே ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்‘ என்று சட்டம் கொண்டு வந்தார். ஆனால் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபின்னர் அங்குள்ள கோயில்களில் ‘தென்னிந்திய பார்ப்பனர்களை பூசாரிகளாக தொடர்ந்து வைத்துக்கொள்வதா, நேபாளப் பார்ப்பனர்களை நியமிப்பதா?‘ என்றுதான் சர்ச்சை வந்தது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”இதையெல்லாம் தாண்டி அவர்கள் போக வேண்டும். அதுதான் அடுத்த கட்டமாகவும் இருக்கலாம். ‘கருணாநிதியே’ என்றால், இங்கு நமக்கு திராவிட இயக்கம், பெரியார், சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் என்று ஒரு மரபு இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளினால் கீழ்மட்ட அளவில் சாதி ஒழிக்கப்பட்டிருக்கலாம். கருத்தியல் தளத்தில் சாதி, மதம் ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்றால் என்னால் உடனே சொல்ல முடியவில்லை. அதற்கு ஒரு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படலாம். அதேநேரம் இங்கே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம்தான் போடலாம். ஆனால் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் கோயிலுக்குள் போக முடியாது என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும்.”

நேபாளத்தில் சாதியக் கட்டுமானம் எப்படி இருக்கிறது?

”கிராமப்புறங்களைப் பொருத்தவரை ஓரளவுக்குத் தகர்க்கப்பட்டிருக்கிறது. முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருந்தால் நேபாள காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கக்கூடாது. இப்போது என்ன நிலைமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு என்னிடம் விவரங்கள் இல்லை.”

ஈழப் பிரச்னையில் இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள்.

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழப் பிரச்னை எப்படி எதிரொலிக்கும் என நினைக்கிறீர்கள்?

”ஈழப் பிரச்னை சம்பிராதாயமான முறையில் பேசப்படும். ‘ஆரம்பத்துலேர்ந்து குரல் கொடுத்தேன். முதல் தீர்மானம் நான்தான் போட்டேன்’ என்று கருணாநிதி சொல்வார். ‘போர் என்றால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன அம்மையார் பிறகு உண்ணாவிரதம் நடத்தினார். ஈழப் பிரச்னையை இதைவிட யாரும் கேவலப்படுத்திவிட முடியாது. இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள். இவர்களும் மிச்சமிருக்கும் அணிகளும் ஈழப் பிரச்னையை ஒரு ஊறுகாய்போல் பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் இதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்று நான் கருதவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னை என்பது சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற நிலையைத் தாண்டி இந்திய அரசு, சிங்கள அடக்குமுறையின் அங்கமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. இந்தியா ஈழத் தமிழர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது என்பது மிக நேரடியாக வெளிவந்துவிட்டது. இந்திய நாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கிற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு இவர்கள் அத்தனை பேரும் உடந்தையாக இருக்கிறார்கள். இதைப்பற்றி ஒரு வாக்காளன் கேள்வி கேட்டால் அவனுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இன்னொன்று, ஏதோ காங்கிரஸ் அரசுதான் ஈழத் தமிழனுக்கு துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் யாழ் கோட்டையை புலிகள் சுற்றி வளைத்தபோது அதற்குள் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கியிருந்தனர். அப்போது ‘உடனே முற்றுகையை விலக்கிகொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய விமானங்கள் வரும்’ என்று வாஜ்பேயி அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. அதற்கு வைகோ முதல் நெடுமாறன் வரைக்கும் அனைவரும் உடந்தை. ‘இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது. அனுசரித்துப் போனால்தான் ஈழ விடுதலை சாத்தியம்’ என்ற கண்ணோட்டத்தில் இதை செய்தார்கள். ஆக இந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பேசுபொருளாக இருக்கும்பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியாவின் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக, யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.

ஈழப்போரில் இந்தியாவின் தலையீட்டுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார நலன்கள் பற்றி?

இந்தியாவில் இருக்கும் பெரும் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. டாடாவுக்கு அங்கே டீ எஸ்டேட் இருக்கிறது, மஹிந்திரா கார் கம்பெனிக்கும், டி.வி.எஸ்ஸுக்கு இலங்கை என்பது மிகப்பெரிய வாகன மார்க்கெட், அம்பானிக்கு வரிசையா பெட்ரோல் பங்க் இருக்குது, திரிகோணமலையில் ஓ.என்.ஜி.சி&க்கு எண்ணெய் கிணறுகள் இருக்குது, போர் நடந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் ஏர்டெல் மிட்டல் கடந்த மாதம் இலங்கை முழுவதற்குமான சேவையை அங்கு ஆரம்பித்திருக்கிறார். கடந்தமுறை பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய்விட்டு வந்த பின்னர் போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக, இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். நாளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் இதேபோன்று பெருமுதலாளிகளின் நலனுக்காகத்தான் பேசும். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.

இன்னொன்று ஈழ மக்களின் போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இதுவரைக்கும் இங்கு சொல்லப்படும் ஒரே ஒரு காரணம், ‘அவர்கள் நம் ரத்த உறவுகள்’ என்பது. இது ரொம்ப அபத்தமானது. எந்த ஒரு இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சேர்ந்திருப்பதா, பிரிந்துப் போவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குதான் உண்டு. இந்த நியாயம் காஷ்மீருக்கும் பொருந்தும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். இதை யாரும் பேசலை. தீவிரமான ஈழ ஆதரவாளர்கள் கூட, ‘இந்தியாவில் பிரச்னை இல்லை. அங்குதான் பிரச்னை’ என்கிறார்கள். என்ன அயோக்கியத்தனம் இது? காஷ்மீரில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்திய ராணுவத்தின் பாதி பேர் அங்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இந்தியா ஏன் சிங்கள அரசை ஆதரிக்கிறது என்பதை ஈழ ஆதரவாளர்களும் கூட விளக்குவதில்லை. ‘ஏதோ முட்டாள்தனமா நடக்குது, சில அதிகாரிகள் இந்த மாதிரி பண்ணிட்டாங்க’ என்கிறார்கள். ‘ஜி.பார்த்தசாரதி இருந்தார். அவர் அருமையா பண்ணினார்’ என்று பழ.நெடுமாறன் சொல்லிக்கிட்டிருக்கார். இப்போ பார்த்தசாரதி ‘தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புலி ஆதரவு சக்திகளை ஒடுக்கனும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கார்.

‘இந்தியாவின் தயவில்தான் ஈழத் தமிழன் உயிர்வாழ முடியும்’ என்பது ஒடுக்குபவனின் கருத்து மட்டுமல்ல, ஈழ ஆதரவாளர்களின் நிலையும் அதுதாவாகத்தான் இருக்கிறது. தமிழக மக்கள் மனங்களில் மனிதாபிமான அடிப்படையிலான இரக்க உணர்ச்சியைத் தாண்டி, ‘நீயும் தமிழன், நானும் தமிழன்’ என்ற உணர்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாக இதனுடைய நியாயம் விளக்கப்படவில்லை. அது பாரதூரமான அளவு அரசியல் பிரச்னையாகும் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. அப்படி சொல்லப்படாதபோது நாம் அதில் அதிகமாக எதிர்பார்ப்பது கூடாது. தவிரவும் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க இந்தியா முனையுமானால் இங்கு காஷ்மீருக்கும், வட கிழக்கு மாநிலங்களுக்கும் அதே தீர்வை கொடுக்க வேண்டியிருக்கும். பொதுவா ‘தமிழகம் முழுவதும் ஒரு எழுட்சி நிலவுகிறது’ என்று சொல்லலாம். அது யதார்த்தமா இருக்கனும். நம்ம மனசுல ஆசைப்படுறதுனால அது எழுட்சியா ஆகிடாது.

இந்த தேர்தலில் எவை பேசப்பட வேண்டிய பிரச்னைகளாக இருக்க வேண்டும்?

எவை பேசப்பட வேண்டியவையோ அவைப்பற்றி இவர்கள் யாரும் பேசப்போவதில்லை. கடந்த 15 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்படும் தனியார்மய, தாராளமய கொள்கை ஒரு உச்சத்தை எட்டி, இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்குப் பிறகு முட்டாள்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 18 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த கொள்கைகள் இனியும் இந்தியாவுக்குத் தேவையா, இது கொண்டு வந்து சேர்த்த நன்மை, தீமைகள் என்ன என்பதுபற்றி வலது, இடது கம்யூனிஸ்டுகள் உள்பட எந்தக் கட்சியும் பேசாது. இந்த கொள்கைகள்தான் நாட்டின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களா இருந்திருக்கு. இந்தக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகத்தான் இந்தியா முழுவதும் பல மக்கள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை. நகர்மயமாதலில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 50:50 என்ற விகிதத்திற்கு தமிழ்நாட்டின் நகர&கிராம விகிதாச்சாரம் வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக விவசாயம் சுருங்கிவிட்டது. அதனால்தான் வட மாநிலங்களைப்போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு இல்லை. இந்தப் பிரச்னைப்பற்றி பேசப்போவதில்லை. இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக சென்னையை சுற்றி வந்திருக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் எவற்றிலும் தொழிற்சங்க உரிமை கிடையாது. தொழிற்சங்கம் ஆரம்பித்த குற்றத்துக்காக 250 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலை நேரம் என்பது இல்லாமல் போய்விட்டது. இந்தப் பிரச்னைகள் பற்றி யாரும் பேசப்போவதில்லை. அமெரிக்காவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதை எதிர்த்துக் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எதிர்ப்பு என்ற உணர்வே தெரியாத அடிமைகளைப்போல பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றியும் பேசப்போவதில்லை.

எது பேசப்படும் என்றால், ஜெயலலிதாவுக்கு ஒரு பாய்ண்ட் போதும். குடும்ப ஆட்சி. அந்தம்மாவுக்கு அது போதும். அது சட்டமன்ற தேர்தலா, நாடாளுமன்ற தேர்தலா, உள்ளாட்சித் தேர்தலா… அதெல்லாம் தேவையில்லை. அத்தோட சேர்த்து ‘ஹைகோர்ட்ல அடிக்கிறாங்க, லா காலேஜ்ல அடிக்கிறாங்க, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, தீவிரவாத சக்திகள் தலைதூக்கி விட்டன’ இவ்வளவுதான் அந்தம்மாவுக்கு பாய்ண்ட். கலைஞரைப் பொருத்தவரைக்கும் நல்லாட்சி, சாதனைகள். அதைத்தவிர தளபதி அழகிரி இருப்பதால் அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கலாம்.

கொள்கை என்பது இப்போது கிடையாது. பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது.

கொள்கை என்பது இப்போது கிடையாது. இது நாங்கள் சொல்கிற விமர்சனம் இல்லை. அவர்களே சொல்வதுதான். பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும், ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக்கும் தொடர்பில்லை. ஆனால் இவர்களுக்குள் ஆழமான வேறொரு கொள்கை ஒற்றுமை இருக்கிறது. தனியார்மய, தாராளமய கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் உள்பட எல்லோருக்கும் ரொம்ப தீர்க்கமான ஒற்றுமை இருக்கிறது. அதுதான் இவர்களை ஒன்றிணைந்திருக்கிறது. இவர்களுக்கு இப்போது உள்ள பிரச்னை எல்லாம் தங்களுடைய வேற்றுமையை மக்களிடம் நிரூபிப்பதுதான். ‘நாங்க வேற’ன்னு காட்டனும். ஹமாம், லக்ஸ், ரெக்சோனா சோப்பு வியாபாரிகள் எப்படி தங்களது சோப்பு மற்றதைவிட வேறுபட்டது என்று காட்டிக்கொள்கிறார்களோ அதுபோல ‘நாங்க வேற கட்சி’ என்று நிரூபிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு வேற்றுமை தேவைப்படுகிறது. அதன் வழியா அதிகாரத்தை சுவைப்பதற்கு. மற்றபடி கொள்கை வேறுபாடு என்பது இல்லை. இந்த வேறுபாடு பொய்யாக இருக்கின்ற காரணத்தினால்தான் தேர்தலின் விவாதப் பொருள்களும் பொய்யாகவே இருக்கின்றன. நம்ம நாட்டுல எதுடா எலெக்ஷன் பிரச்னைன்னா, ராஜீவ்காந்தி செத்துப்போனா அதுதான் பிரச்னை, ஜெயலலிதா முடியைப் பிடிச்சு இழுத்தா அதுதான் அந்த எலெக்ஷன் பிரச்னை. கருணாநிதி ‘ஐயோ கொல்றாங்க’ன்னு கத்துனா அந்த தேர்தலின் பிரதான பிரச்னை அதுதான். காங்கிரஸ் மீது இப்போது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் என்றாலும் அது ரொம்ப வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஜெயலலிதா ரொம்பத் தாமதமா ஈழப் பிரச்னையைப்பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசமாட்டாங்க. சரியா சொல்லனும்னா இதுக்கு மேல பேசத் தேவையில்லைன்னு நினைக்கிறாங்க.

இறையாண்மை என்ற சொல் இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”இறையாண்மை என்ற சொல்லுக்கு அர்த்தமாவது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை. அரசுகளுக்கு இடையேயான உறவைப் பொருத்தவரை ஒரு நாடு தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் உரிமை அல்லது அதிகாரம்தான் இறையாண்மை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவோட இறையாண்மையை ஏற்கெனவே வித்தாச்சு. அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங்தான் இன்று இந்தியாவின் பிரதமர். அவர் படத்தைக் கொழுத்தினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு கருத்தைப் பேசக்கூட உரிமையில்லாத ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதைப்போல கேலிக்கூத்து வேறெதுவும் இல்லை. இலங்கையில்தான் பிரச்னை என்றில்லை. இங்கேயே சகல அடக்குமுறைகளும் நடக்குகின்றன. துப்பாக்கிகள் தேவைப்படவில்லை, அவ்வளவுதான்.

ஜனநாயகத்தின் பொய்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கேட்கலாம். உயர்நீதிமன்றம் என்பது என்ன? அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு கட்டடம். அங்கு ஒரு போலீஸ் அத்துமீறல் நடக்கிறது. வழக்கறிஞர்கள் தாக்கப்படுகிறார்கள். போலீஸ் அடிச்சா வாங்கிட்டு மட்டும் போயிருந்தாங்கன்னா அவங்க உண்மையான ஜனநாயகத்துக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள். திருப்பி அடிச்சதுதான் பிரச்னை. ‘இப்படி கல்லால எல்லாம் அடிக்கக்கூடாது. எங்கக்கிட்ட ஒரு பெட்டிஷன் போடுங்க. நாங்க ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துறோம்’னு சொல்ற ஜட்ஜே உள்ளே உட்கார்ந்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட், ‘நீங்க கோர்ட்டுக்குப் போங்க, நாங்க பார்த்துக்குறோம்’ என்று சொன்னாலும் அதில் நம்பிக்கை இல்லாததினால்தான் வக்கீல்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது படிக்காத பாமர மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது இருக்கட்டும். படித்த வழக்கறிஞர்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே இருக்கும் நீதிபதிகள் அத்தனை பேரும் இன்று ரோட்டில் நிற்கிறார்கள். காரணம், அவர்கள் யாருக்கும் நடப்பில் உள்ள இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.”

திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம்.

திராவிடக் கட்சிகள்பற்றிய உங்கள் பார்வை என்ன?

”திராவிட இயக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. அதை மறுக்க முடியாது. இதை நான் பெரியார் என்ற பார்வையிலிருந்து சொல்கிறேன். அதற்குப் பிறகு திராவிட இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்கள் அறிவித்துக்கொண்ட கொள்கைகளான சாதி ஒழிப்பு முக்கியமானது. ‘திராவிடம்’ என்பதெல்லாம் பொதுவான வார்த்தை. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எக்காலத்திலும் ‘நாங்கள் கம்யூனிஸ்ட்’ என்று உரிமை கொண்டாட முடியாது. பெரியாரைப் பொருத்தவரைக்கூட கருத்தியல் ரீதியா கம்யூனிஸத்தின் மீது அனுதாபம் கொண்டவராக இருந்தார்.

சாதி ஒழிப்பு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் ஏன் போகலை என்றால் இந்த நிறுவனத்துக்குள் அவர்கள் வந்தது ஒரு முக்கியக் காரணம். அப்படி இந்த நிறுவனத்துக்குள் திராவிட இயக்கம் வரும்போது பார்ப்பனர் அல்லாத உயர்சாதி, உயர் வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறுகிறது. அவர்களுடைய நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உடனேயே பார்ப்பனர்கள் உடனான சமரசம் தொடங்குகிறது. பிறகு வட இந்திய தரகு முதலாளிகளும் தேவைப்படுகிறார்கள். திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம். திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பவர்கள் வெவ்வேறு கோணத்தில் இருந்து மறுக்கிறார்கள். காங்கிரஸ் தேசியவாதிகள், பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கத்தின் பாத்திரத்தை மறுப்பது என்பது வேறு. நாங்கள் மறுப்பது என்பது வேறு.”

ம.க.இ.க. மற்ற இயக்கங்களை, அமைப்புகளை, கட்சிகளை யாரையுமே ஏற்றுக்கொள்வதில்லை என்ற விமர்சனம் பற்றி?

”ஒருத்தர் இன்னொருவரை நிராகரிப்பதால்தான் இத்தனை கட்சிகளே இருக்கின்றன. ம.க.இ.க. தெளிவாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்காக ஒரு இயக்கமாக இருக்கிறது. தனது கொள்கைகளின் அடிப்படையில் அது மற்றவர்களை நிராகரிக்கிறது. நான் ஒரு தனிக்கட்சி வைத்திருப்பதே மற்றவர்களை நிராகரிக்கத்தான் என்றால், ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களை நிராகரிக்கிறது என்றுதான் போகும். எங்கள் மீது பொதுவாக சொல்லப்படுவது ‘எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பது. ‘நீங்க சொல்லியிருக்கும் விமர்சனம் தவறு’ என்று சொல்லலாமேத் தவிர, ‘நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பதையே ஒரு விமர்சனமாக வைப்பது எப்படி சரியாகும்? ம.க.இ.க. ஒத்தக் கருத்துடன் இருக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது போராடுகிறது. ஆனால் ஒவ்வொரு பிரச்னைக்கும் 40, 50 அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவது, அது அத்துடன் காணாமல் போய்விடுவது என்ற கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அத்தகைய கூட்டமைப்புகளில் நாங்கள் இணைவதில்லை. அதுவும் கூட இப்படி கருதுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”

நன்றி : வினவு

March 27, 2011

தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்!


14வது முறையாக மக்களை ஏமாற்ற வரும் ஓட்டுப்பொறுக்கிகளையும் போலி ஜனநாயகத் தேர்தலையும் அம்பலப்படுத்தி புதிய கலாச்சாரத்தில் வந்த இந்த கட்டுரையினை மக்களின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தில் ஒரு கட்டுரையாக வெளியீடுகிறோம்.

**********

இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?

அப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று மூன்று தலைமுறைகள் ஏமாந்த பிறகும் புத்தி வராமல்,”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே” என்ற சத்தம் கேட்டவுடனே நான்காவது தலைமுறையும் ஓடுகிறது; மசால் வடைக்கு மயங்கும் எலியைப்போல வாக்குச்சாவடியின் முன்னால் வரிசையில் நிற்கிறது. இந்த மானக்கேட்டை யாரிடம் சொல்லி அழுவது?

தேர்தல் என்ற அறிவிப்பு வந்தவுடன் கரண்டு கம்பத்தைக் கண்டால் காலைத்தூக்கும் தெருநாயைப் போல, தானாக வந்து ஓட்டுப் போடுவான் என்று நம்மைக் கேவலமாக நினைக் கிறார்களே ஓட்டுப் பொறுக்கிகள், இந்த அவமானத்திற்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?

பழனிக்கும் திருப்பதிக்கும் மொட்டை போடும் பக்தன் கூட தன்னுடைய நம்பிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்கிறான். “இந்தச் சாமிக்கு நேர்ந்து கொண்டால் இது நடக்கும்” என்று நம்பவும் செய்கிறான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் ‘சாவடியில்’தவறாமல் மொட்டை போட்டுக் கொள்ளும் வாக்காளனுக்கோ இந்தத் தேர்தலின் மீது அப்படியொரு நம்பிக்கை கூடக் கிடையாது.

“எவன் வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை, விவசாயம் விளங்கப் போவதில்லை, வேலை கிடைக்கப் போவதில்லை, லஞ்சம் ஒழியப் போவதில்லை, ஊழல் குறையப் போவதில்லை” என்று ஆணித்தரமாகப் பேசுகிறான். “அப்புறம் எதற்காக ஓட்டுப் போடுகிறாய்?” என்று கேட்டால், “வேறென்ன செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறான். வாக்குரி மையை ‘வேஸ்ட்’ ஆக்காமல் யாராவது ஒரு திருடனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட வேண்டுமென்று துடிக்கிறான்.

“ஓட்டுப் போடவில்லையென்றால் செத்ததுக்குச் சமமாமே” என்று பாமரத்தனமாகச் சிலர்அஞ்சுகிறார்கள். இது உண்மை யென்றால் மன்மோகன் சிங் செத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும். 3 தேர்தலாக ஓட்டுப்போடாத மன்மோகன்சிங் தான் இந்த நாட்டின் பிரதமர். தேர்தல் ஒரு நாடகம் என்றும் எவன் ஜெயித்தாலும் அந்த ஆட்சி நம்ம ஆட்சிதான் என்றும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டாடா பிர்லா போன்ற பெரு முதலாளிகள் முதல் உள்ளூர்ப் பணக்காரர்கள் வரை யாரும் எப்போதும் ஓட்டுப் போடுவதில்லை. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று இந்த ‘ஜனநாயகத்தை’க் காப்பாற்றுவது பாமர மக்கள்தான்.

ஏனென்றால், “தேர்தலைப் புறக்கணித்து விட்டால் இருக்கின்ற ஒரே ஒரு பிடியையும் நாம் இழந்துவிடுவோம். ஜெயலலிதா சரியில்லை என்றால் கருணாநிதியைக் கொண்டு வரலாம், சோனியா சரியில்லை என்றால் வாஜ்பாயியைக் கொண்டு வரலாம். புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்து விடமுடியும்? வேறென்ன வழி இருக்கிறது?”என்று எண்ணுகிறான் வாக்காளன்.

தேர்தல் தோல்வி என்பது ஓட்டுப் பொறுக்கிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்ல, இன்று தோற்றாலும் நாளை நாம்தான் என்று ஐந்தாண்டுகள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். ஆட்சிக்காலத்தில் அடித்த கொள்ளையை அனுபவிக்கிறார்கள். தத்தம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை ஏறுகிறார்கள்.

“மக்களுக்குத்தான் இதை விட்டால் வேறு வழியில்லை” என்ற சலிப்பு! ஓட்டுக் கட்சிகளுக்கோ “நம்மை விட்டால் மக்களுக்கு வேறு நாதி இல்லை” என்ற இறுமாப்பு!

தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் தயங்கலாம். ஆனால் மக்களின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மிகவும் அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறது தேர்தல் அரசியல்.

தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வரும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை நாம் ஏன் புறக்கணிக்க மறுக்கிறோம் என்பதுதான் எங்களது கேள்வி.

நன்றி : தமிழ்சர்க்கிள்

March 24, 2011

அவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்! - தேர்தல் 2011

முன்குறிப்பு : தேர்தல் ஜூரம் துவங்கிவிட்டது. வேட்டி கிழிப்பு காட்சிகள் அரங்கேறுகின்றன. கொள்ளையே கொள்கையாகி போனதால், வாக்காளர்களை கவர, கொள்ளையடிப்பதில் கொஞ்சம் பங்கு தருவதை போல இலவசங்களை அறிக்கையில் அள்ளிவீசுகிறார்கள். பணம் தந்து, பொருள் தந்து, வாக்காளனின் முகத்தில் காறித்துப்புகிறார்கள். இந்த தேர்தலால் பெரும்பான்மையான மக்களுக்கு ஒன்றும் மலர்ச்சி வரப்போவதில்லை. இன்னும் மோசமாக கொள்ளையடிக்கப்பட இருக்கிறார்கள். ஆகையால், நீண்ட கால நோக்கில், ஒரு ஆரோக்கியமான மாற்றத்திற்கு, இந்த தேர்தலை புறக்கணிப்பது தான் சரி! இதை எப்படி புரிந்து கொள்வது? விளக்குவதற்காக பல பதிவுகள் தேர்தல் வரை குருத்து தளத்தில், சில பழைய பதிவுகளும், புதிய பதிவுகளும் வெளியிடப்படும்.

*******
குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில்
புழுதி பரந்திருக்கும்: பாவியகற்கள் பெயர்ந்திருக்கும்
சாக்கடை தேங்கி இருக்கும்; பன்றிகள் மேய்ந்திருக்கும்
உங்கள் தெருக்களில்; சந்துகளில்; முடுக்குகளில்
இருகரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது,
புன்முறுவல் தேக்கி,
உடன்பிறந்தவர்களைப் பார்க்க வரும்
தூரத்தேசத்து தமையன் போல...
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஓகெனக்கல் குடிநீர்திட்டமா?
பொதுமருத்துவமனை திட்டமா?
எதுவேண்டும் வேண்டும் உங்களுக்கு?
வாரிவழங்குவார்கள்;
வாய் எனும் அட்சயப்பாத்திரம் கொண்டு!

68 கிரிமினல் குற்றவழக்குகள்
நிலுவையில் உள்ளவர்கள்
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின்
மனைவிகள்; மைத்துனிகள்;
இனத்துரோகிகள்; மொழித்துரோகிகள்;
மக்கள் துரோகிகள்; நாட்டுத்துரோகிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

'கும்பி எரியுது; குடல் கருகுது;
குளுகுளு ஊட்டி ஒரு கேடா? - என
45 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கியவர்கள்
இன்று தாமே
கொடைக்கானலாக, ஊட்டியாக,
சிம்லாவாக; குலுமனாலியாக
நடமாடி வருகிறார்கள்.

ஆடிக்கொண்டும்; பாடிக்கொண்டும்;
மிமிக்ரி செய்துகொண்டும்
கலையுலக பழைய; புதிய
கலைத்தளபதிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஈழத்தமிழனுக்காக ஆதரவு கோஷம்
விண்ணைத்துளைக்க
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்

ஆடு வெட்டிப் பந்தி வைக்க;
சீமைச்சாராயப் பந்தல் நடத்த
ஊதாநிறக் காந்தித் தாட்கள் வழங்க
குடம், குத்துவிளக்கு, தாலி,
தாம்பளம், தட்டுமுட்டுச் சாமான்கள் தானம்தர
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

உண்ணா நோண்பு இருப்பார்கள்;
பேரணி நடத்துவார்கள்;
மனிதச்சங்கிலி கோப்பார்கள்;
ஆளுக்கு ஆஸ்கர் வாங்குமளவு நடிப்பதில்
திறமைசாலிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆம்...
வந்து கொண்டேயிருக்கிறார்கள்

- நாஞ்சில் நாடன்

'தீதும் நன்றும்' என்னும் தலைப்பில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆனந்தவிகடனில் தொடர் கட்டுரைகள் எழுதினார். 22/04 - 29/04/09 இதழில் "அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்" என்ற உட்தலைப்பில் வெளிவந்த மூன்று பக்க கட்டுரையை சுருக்கி தந்துள்ளேன். அவருடைய சொந்த வார்த்தைகளிலேயே!

நன்றி : ஆனந்தவிகடன்

March 23, 2011

"இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!" - பகத்சிங்!


23/03/1931- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் - அவர்களின் நினைவாக!
***

"முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்டே பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் 'ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி செய்யத் தகுதியில்லாதவன் என நான் கருதப்பட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதனால் சற்று நேரமே உட்கார்ந்துவிட்டு தூக்கம் வருகிறதென்று சாக்குக் கூறி ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டுவிட்டேன். நான் உறங்கவில்லை என்பதை பகத்சிங் அறிவார். அவர் கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டு, என் தோளை மெல்ல உலுக்கி, "சிவா" என்று கூப்பிட்டார்.

"என்ன?" நான் அவர் பக்கம் திரும்பிக் கேட்டேன்.

"ஒரு விஷயம் கேட்கவா?"

"கேளேன்!"

ஒரு நபரின் பெயர் பெரிதா? கட்சியின் வேலை பெரிதா?"

"கட்சி வேலை தான் பெரிது"

"கட்சி வேலை தடங்கலின்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் கைக்கொள்ளும் "ஆக்சன்'கள் எல்லம் வெற்றியடைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றிய செய்தி நாட்டு மக்களுக்குத் தடையின்றிக் கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த சுதந்திரப் போராட்டத்திலே நாம் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? இதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமா?"

"வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான்!"

"மக்களைத் திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாட்டு மக்கள் நமது துணிவையும், செயல்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். நாமும் மக்களுக்கு இதுவரை நாம் குறிப்பிடும் சுதந்திரம் எவ்வாறு இருக்கப்போகிறது, வெள்ளையர்கள் வெளியேறிவிட்ட பிறகு ஏற்பட போகும் நமது அரசு எப்படி இருக்கும் என்கிற விஷயங்களை விளக்கிக் கூறவில்லை. நாம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டி நம்முடைய லட்சியங்களை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லவேண்டும். காரணம், பொதுமக்களின் ஆதரவைப் பெறாமல் நாம் இதுவரை செய்து வந்ததைப் போல, வெள்ளை அதிகாரிகளையும், அவர்களின் ஏஜெண்டுகளையும், கொன்று குவிப்பதிலேயே இனியும் காலத்தைக் கடத்த முடியாது. நாம் இதுவரை மக்களைத் திரட்டுவதையும், பிரச்சாரத்தையும் அலட்சியப்படுத்தி "ஆக்சன்'களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தோம். இச்செயல்முறையை நாம் விட்டுவிட வேண்டும். நான் உன்னையும், விஜயையும் மக்களைத் திரட்டவும், பிரச்சாரத்தை நிர்வகிக்கவும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்" என்று கூறி பகத்சிங் சற்று நிறுத்தி,

"நாமெல்லாம் படை வீரர்கள். படைவீரர்களுக்கு எல்லாவற்றையும் போர்க்களம் தான் விருப்பமானது. அதனாலேயே எல்லோருமே "ஆக்சன்'களுக்குப் போகத்துடிக்கிறார்கள். என்றாலும், நம் இயக்கத்தை முன்னிறுத்தி சிலராவது "ஆக்சன்'கள் மேலுள்ள மோகத்தை விட்டுவிட வேண்டியது தான்; சாதாரணமாக "ஆக்ஷன்'களில் பங்கெடுப்பவர்களையும், தூக்குமேடை ஏறுபவர்களையும் தான், புகழ் தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையின் தலைவாசலில் பதிக்கபட்ட வைரம் போன்றது; ஆனால் அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை"....

"வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை. அதனால் தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையைக் கட்டவும் ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!"

பகத்சிங் மேலும் தொடர்ந்தார்: "தியாகமும், உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை. ஒன்று, குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இதில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவு தான்! இரண்டாவது, வாழ்க்கை பூராவும் மாளிகையைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும் போது நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காகத் தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களிலே தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டு செல்லாதவர்கள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக்கூடாதென்பதற்காகத் தம்மைத் தாமே எரித்துக்கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக்கூடாதென்று தம்மைத் தாமே மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக்கொள்பவர்கள், உயிர்த்தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?"

- சிவவர்மா

விடுதலைப் பாதையில் பகத்சிங்.... புத்தகத்திலிருந்து... பக் 39 முதல் 41 வரை.

குறிப்பு : "ஆக்சன்" (Action) என்றால்... சிறையிலிருந்து யாரையாவது விடுவிப்பதையும், எந்த அதிகாரியையாவது கொல்வதையும், கொள்ளையடிப்பதையும், போலீசாரை எதிர்த்துப் போராடுவதையும் புரட்சியாளர் மொழியில் ""ஆக்சன்' என்பர்.

தொடர்புடைய சுட்டிகள் :

பகத்சிங் - ஒரு அறிமுகம்! இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை - பகத்சிங் மாவீரன் பகத்சிங் நினைவாக! - கீற்று

பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்! - கீற்று

March 22, 2011

இது என்ன வியாதி?

கடந்த வாரம் தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையத்தின் கூட்டத்தில் 62 மருந்துகளின் விலையை 15 விழுக்காடு உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான மருந்துகள் சர்க்கரை நோயாளிகளும் காசநோயாளிகளும் உட்கொள்பவை.

விலையை உயர்த்தினாலும்கூட, இவற்றின் புதிய விலையானது இப்போது இறக்குமதி செய்யப்படும் அதே மூலக்கூறுகள் கொண்ட மருந்துகளின் விலையைவிட 15 விழுக்காடு குறைவாகத்தான் இருக்கிறது என்று இந்த ஆணையம் சமாதானமும் கூறியிருக்கிறது.

உலகிலேயே மிக அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருக்கும் நாடு இந்தியா என்கிற பெருமை விரைவில் வந்துவிடும் என்கின்றன புள்ளிவிவரங்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இப்போது 160 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 40 மில்லியன், அதாவது, 4 கோடி பேர், இந்தியாவில் இருக்கின்றனர். இதன் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சர்க்கரை நோயாளி என்கிற அளவுக்கு இந்த நோய் அதிகரித்து வருகிறது. ஆயினும் இந்த நோய்க்கு இந்திய அரசு முக்கியத்துவம் தராமல் இருப்பதுடன், மக்கள் மத்தியில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் எந்த முனைப்பும் காட்டாமல் இருக்கிறது. ÷சர்க்கரைநோய் தொற்றுநோய் இல்லை என்பதற்காக இந்திய அரசு இதைக் கண்டும் காணாமல் இருப்பது அறிவுடைமை ஆகாது. ஏனென்றால் சர்க்கரை நோய் எல்லா நோய்க்கும் காரணமாகிறது. விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது, சிறுநீரகம் செயலிழக்கிறது. நரம்புகள் பாதிக்கின்றன. இதனால் கால்கள் மரத்து, புண்ணாகி அவற்றை வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலையும் பலருக்கு நேர்ந்துவிடுகிறது.

வட இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ஓராண்டுக்கு எவ்வளவு செலவு நேர்கிறது என்கிற கணக்கெடுப்பை ஐந்து ஆண்டுகளுக்கு சண்டீகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு செய்ததில், ஒரு சர்க்கரை நோயாளி, குறைந்த வருவாய்ப் பிரிவினராக இருப்பின், அவர் தனது வருவாயில் 25 விழுக்காட்டை செலவிட நேர்கிறது. அதாவது குறைந்தபட்சம் மாதம் ரூ.1000 வரை செலவிட நேர்கிறது என்று கண்டறிந்துள்ளனர். மாதம் ஒருமுறை மருத்துவரைச் சந்தித்தல், சர்க்கரை நோய் அளவை அறியும் சோதனைகளைச் செய்துகொள்ளுதல், நாள்தோறும் சாப்பிடும் மருந்துகள் ஆகியவை மட்டுமே இதில் அடங்கும்.

இது தவிர, மறைமுகச் செலவுகளும் இருக்கின்றன. அதாவது சர்க்கரை நோயாளி தனக்காக மருத்துவக் காப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான பிரீமியத் தொகை சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவர் தனக்காக பிரத்யேகமான செருப்புகளை அணிய வேண்டியிருக்கும். இது போன்ற மறைமுகச் செலவுகளையும் சேர்த்தால், ஒரு சர்க்கரை நோயாளிக்கு ஆகும் செலவு மேலும் அதிகரிக்கும்.

ஒரு பொருளைப் பயன்படுத்துவோர் அதிகரித்தால் அப்பொருளின் விலை குறையும் என்பதுதான் வர்த்தக மந்திரம். கைப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து கைப்பேசியில் பேசுவதற்கான கட்டணமும் ஒரு நிமிடத்துக்கு 10 காசுகளுக்கும் குறைவாகவும் சேவை அளிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், வீட்டுக்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக மாறிவரும் சூழ்நிலையில், மருந்துகளின் விலையைக் குறைப்பதுதானே சரியான முடிவாக இருக்கும்?

இந்திய மருத்துவச் சந்தையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடன் உள்ளூர் மருந்து நிறுவனங்கள் போட்டிபோடும் ஆரோக்கியமான சூழ்நிலை கருதி இத்தகைய விலை உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது என்கிறது தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையம். ஆரோக்கியமான வியாபார சூழ்நிலை யாருக்கு? நமது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அல்ல. அதிக விலைக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு. விலை அதிகரிப்பினால், உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள் லாபமடையும் என்பதைவிட, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அதிகம் விற்பனையாகும் என்பதுதானே உண்மை?

சர்க்கரை நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவோர் பணக்காரர்கள் அல்ல, ஏழைகள்தான் என்கிறது மற்றொரு ஆய்வு. காரணம், ஏழைகளால் தங்கள் சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள முடிவதில்லை. உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற மருத்துவரை அணுகவும் ஏழைகளிடம் பணவசதி இல்லை. இதனால் நாள்பட்ட நிலையில், சர்க்கரையின் அளவு அதிகரித்து சிறுநீரகம் விழித்திரை பாதிக்கப்பட்டு அல்லது கால்கள் மரத்துப்போய் ஆறாப் புண்களுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் அவர்களது சிகிச்சைக்கான செலவுகள் மிக அதிகம். ஆனால் அவர்களோ ஏழைகள்.

சர்க்கரை நோய் மருந்துக்கான மூலப்பொருள் விலை, அதை தயாரித்து பெட்டிகளில் அடைத்தலுக்கான செலவு, வெளியிடங்களுக்கு அனுப்பும் லாரி வாடகை எல்லாமும் உயர்ந்துவிட்டது என்று நியாயப்படுத்த முனைகிறது தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம். இந்த அமைப்பு 1977-ம் ஆண்டு அரசால் ஏற்படுத்தப்பட்டது. விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அரசு விரும்பினால், இதன் முடிவுகளில் தலையிட்டு மாற்றங்கள் செய்யவும், முடிவுகளை நிறுத்தி வைக்கவும் இயலும்.

சர்க்கரை நோயை, தொற்றிப்பரவாத நோய் என்பதாகக் கருதி அலட்சியம் செய்யாமல் அதைக் கட்டுப்படுத்த தனி அமைப்பை உருவாக்கி, மருந்துகளைக் குறைந்த விலைக்குக் கிடைக்கச் செய்யும் கடமை, பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதும், இறக்குமதி செய்பவர்களுக்கு ஆரோக்கியமாகப் போட்டியிட்டு பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிப்பதுமா ஓர் அரசின் நோக்கமாக இருக்க முடியும். உள்ளூரோ, வெளியூரோ மருந்துகளின் விலையைக் குறைத்து மக்களை வாழ வைக்க வேண்டிய அரசு, வியாபாரிகளை வாழ வைக்கத் துடிக்கிறதே, இது என்ன வியாதி என்று புரியவில்லை! -

- தினமணி தலையங்கம் - 22/03/2011

March 16, 2011

அழிவின் விளிம்பில் மொழிகள்!

உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிகள் காலத்துக்கும், பல வரலாற்றுப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்விதப் பாதிப்புக்கும் உள்படாமல் தழைத்து நிற்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்.

மானுடத்தை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வேறுபடுத்துவதே, சிரிப்பாலும், பேச்சாலும்தான் என்பார்கள். மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது, வெறும் சப்தங்கள் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில், சப்தங்கள் மொழியாக வளர்ச்சியடைந்தன. மொழி என்பது கலாசாரத்தை வெளிப்படுத்துகிற முக்கிய அடையாளமாகக் கருதப்படுவதால்தான் மொழியின் தனித்தன்மையைப் பாதுகாக்கப் போராட்டங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம்.

அழிந்துவிடும் மொழிகள் பற்றி 2009-ல் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் சுமார் 2,473 மொழிகள் அழிவின் எல்லையில் உள்ளன என்றும், 1950-க்குப் பின் இந்தியாவில் ஐந்து மொழிகள் அழிந்துவிட்டன என்றும் கூறியுள்ளது. மேலும், 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. உலகளாவிய அளவில், 63 மொழிகள் நிச்சயம் மறைந்துவிடும். 82 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று பட்டியலிட்டுள்ளது. 1894-லிருந்து 1928-வரை இந்தியாவில் பழக்கத்திலிருந்த மொழிகள் குறித்து ஜி.ஏ.க்ரியர்சன் ஆய்வு செய்து முழுமையான விவரங்களை வழங்கியிருக்கிறார்.

மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை, பாரம்பரியத்தை மறக்கும்போது கலாசாரமும் மறையத் தொடங்குகிறது. அப்போது அதற்கு அடிப்படை என்று கருதப்படும் மொழி மட்டும் எப்படி நீடித்து நிலைக்கும்? துருக்கியின் வடமேற்குப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி உபிக். இந்த மொழியைப் பேசத் தெரிந்த நபர் டெப்விக் எசன்ச் என்பர். துருக்கியிலுள்ள மொழியியலாளர்கள் அவரைக்காண அவரது கிராமத்துக்குச் சென்றனர். எசன்ச்சின் மூன்று மகன்களில் ஒருவருக்குக்கூட உபிக் மொழி தெரியாது. மாறாக, அவர்கள் துருக்கி மொழியில் பேசுவதையே விரும்புகின்றனர்.

1992-ம் ஆண்டு எசன்ச் இறந்து போனார். அவரது கல்லறையில், ""இது டெப்விக் எசன்ச்சின் கல்லறை. உபிக் என்ற மொழியைப் பேசிய கடைசி மனிதர் இவர்தான்'' என்று எழுதப்பட்டுள்ளது. அவர் மறைந்தவுடன் உபிக் மொழியும் மறைந்துவிட்டது.

"மறையும் மொழிகள்' என்ற பிரிட்டனைச் சார்ந்த ஒரு கலாசார அமைப்பு, அதிகமான ஆய்வுகளைச் செய்துள்ளது. இதில் பணியாற்றும் மொழியியலாளர் ப்ரூஸ் கானல் என்பவர், 1994-95-ல் மாம்பிலா என்ற பகுதியில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது நிறைய மொழிகள் மறையும் அபாயத்தில் இருந்ததைக் கண்டார். கசாபே என்ற மொழி போகோன் என்ற ஒரே ஒருவர் மட்டுமே பேசக் கூடியதாக இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார். அவரது சகோதரிக்கு கசாபே மொழி புரியும். ஆனால், பேசத் தெரியாது. அவரது குழந்தைகள், பேரக் குழந்தைகள் யாருக்குமே கசாபே மொழி தெரியாது. போகோன் மறைந்தவுடன் கசாபே மொழியும் மறைந்துவிடும்.

உலகில் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் வழக்கத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சில பகுதிகளில் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால், பல எழுத்து வடிவத்தில் இல்லை. உலகில் பயன்படும் அனைத்து மொழிகளும் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலிடப்படவில்லை.

சில பூர்வகுடிகள் வித்தியாசமாக ஒரு மொழியைப் பேசும் வழக்கம் கொண்டுள்ளனர். உதாரணமாக, 1998-ம் ஆண்டு ஜகார்த்தாவுக்குக் கிழக்கே மாம்பரமோ நதிக்கருகே வஹீததே, ஆகேததே என்ற குழுக்கள் வசித்தனர். மொத்தமே இவை இரண்டையும் சேர்த்தே 50 குடும்பங்கள்தானிருக்கும். இவர்கள் பேச்சு வித்தியாசமாக இருந்ததால், அவர்கள் பேசியது புதிய மொழிகள் என்றே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டதென டேவிட் கிறிஸ்டல் என்ற மொழி ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

உலகில் வழக்கத்தில் உள்ள மொழிகளில் 90 சதவீதம் வரை இந்த நூற்றாண்டில் இல்லாமல் போய்விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 11 நாள்களுக்கு ஒரு மொழி புழக்கத்திலிருந்து அழிந்துவிடுகிறது. பிப்ரவரி 21-ம் நாள் பன்னாட்டுத் தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டாலும், மொழிகளைப் பேணிக் காக்கவேண்டிய சிந்தனை உலக அளவில் இல்லாமல் போய்விட்டது.

உலகில் சராசரியாக 5,000 பேர்வரை ஒரு மொழியைப் பேசுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 4,000 மொழிகளைப் பேசுபவர்கள் ஆதிவாசிகள் எனக் கணக்கிடப்படுகிறது. 83-84 சதம் மொழிகள் ஒரே ஒருநாட்டில் மட்டுமே பேசப்படுபவையாக உள்ளன.

சில மொழிகள் மிகச் சிலரால் மட்டுமே பேசப்படுகின்றன. பப்புவா நியூகினியாவில் உள்ள குருமுலும் என்ற இனத்தில் 10 பேர் மட்டுமே ஒரு மொழியைப் பேசுகின்றனர். மொழிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களிலுள்ள மொழிகள் மொத்த உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதம் மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.

சில மொழிகளின் எண்ணிக்கை வருமாறு: அமெரிக்கா 1,013 மொழிகள் (15சதம்), ஆப்பிரிக்கா 2,058 மொழிகள் (30 சதம்), ஐரோப்பா 230 மொழிகள் (3 சதம்), ஆஸ்திரேலியா 250 மொழிகள் (1 சதம்), ஆ சியா 2,197 மொழிகள் (32 சதம்), பசிபிக் 1,311 மொழிகள் (19 சதம்). பப்வா நியூகினியா 850 மொழிகள். இந்தோனேஷியா 670 மொழிகள். நைஜீரியா 400 மொழிகள். இந்தியா 380 மொழிகள். கேமரூன் 270 மொழிகள். மெக்சிகோ 240 மொழிகள். பிரேசில் 210 மொழிகள். ûஸர் 210 மொழிகள்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மொழியியலாளர் டோவ் ஸ்கட்நாப் கங்காஸ் என்பவர் மொழி ஆய்வுகள் பல நடத்தப்பட்டபோதிலும், புள்ளிவிவரங்கள் துல்லியமானதாக இல்லையென்றே கருதுகிறார். மொழிகளுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் நிதின் சேத்தி என்கிற ஆய்வாளர். மொழி உலகம் என்ற வரைபடம் மூலம் வெப்பம் மிகுதியாக உள்ள நாடுகளில் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன என்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை மற்றும் இந்தியாவிலிருந்து தொடங்கி, தென் கிழக்காசிய பகுதிகளிலுள்ள இந்தோனேஷியத் தீவுகள் பசிபிக் வரையுள்ள பகுதிகளிலுள்ள இந்தியா உள்ளிட்ட 17 மிகப்பெரிய நாடுகளில் உள்ள மொழிகளில் 60 சதவீதம் பேசப்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் பழங்குடி மக்களால் பேசப்படும் சுமார் 80 சதவீத மொழிகள் அவர்களுடைய குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை. இதனால் கனடாவில் 60 மொழிகள் பேசப்பட்டு இன்றைக்கு 4 மொழிகளே நிலைத்து நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் அங்குள்ள பழங்குடிகள் பேசிய 250 மொழிகள் மறைந்தே விட்டன என்று மொழியியல் அறிஞர் நெட்டல் கூறுகிறார்.

இப்போது ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 54 மொழிகள் படிப்படியாக அழிந்துவிட்டன. 116 மொழிகள் மறையும் சூழலில் உள்ளன என்று மொழியியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பூர்வகுடி இன மக்கள் பேசுகிற மொழிகள்தான் படிப்படியாக அழிந்து வருகின்றன என்றும், நகர்ப்புற வளர்ச்சி, உலகமயமாக்கல் போன்றவை மொழிகளின் அழிவுக்குக் காரணங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

மொழிகள் அழிவது குறித்து தடுக்கக்கூடிய முயற்சிகள் எவை எவை என்று மைசூரில் உள்ள இந்திய மொழியியல் கழகம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மொழிகளைப் பாதுகாப்பதன் மூலமாக ஓர் இனத்தின் கலாசாரம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க முடியும்.

65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமான் நிக்கோபர் தீவில் பேசப்பட்ட போ என்ற மொழி அழிந்துவிட்டது. அந்தமான் மொழிகளில் சிறப்பு வாய்ந்த போ மொழி பேசிய 80 வயதான பெண் இறந்தவுடன் அந்த மொழி முடிவுக்கு வந்துவிட்டது. 2004-ல் ஏற்பட்ட சுனாமி கோரத்தின்போதுகூட துக்கத்தில் பாடப்பட்ட போ மொழி பாடல் விடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இதுதான் உலகிலேயே பழமையான மொழி என ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி கூறுகிறார். அந்தமானில் மறைந்த போ மொழியில் அரிய மருத்துவச் செய்திகள் இருந்தன. செடி, கொடிகளிலிருந்து மருந்து தயாரிக்கக்கூடிய நடவடிக்கைகள் அந்த மொழியில் இருந்தன. ஆனால், அந்த மொழியின் மறைவால் நமக்கு மருத்துவத் தகவல்கள் கிடைக்காமலேயே போய்விட்டன.

குரா என்ற அந்தமான் மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அங்கு ஜிரா என்ற மொழியை 50 பேர் மட்டுமே இப்பொழுது பேசி வருகின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் தீவில் 10 மொழிகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் பெரும்பாலான மொழிகள் இப்பொழுது பேச்சு வழக்கில் இல்லை.

கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ல் மரணமடைந்தவுடன் அப்பகுதியில் பேசப்பட்ட மலையாள போர்ச்சுகீஸ் கிரியோல் என்ற மொழி மறைந்தது. 400 ஆண்டுகளாக கேரள கத்தோலிக்கர்களின் அடையாளமாக இந்த மொழி திகழ்ந்தது.

ரெமோ என்ற ஒரிய மொழி போண்டா என்ற ஆதிவாசிகளால் பேசப்பட்டு, இந்த ஆதிவாசிகள் மக்கள்தொகை குறைந்து இம்மொழியும் அழிந்துவிடும்.

20 லட்சம் மக்கள் பேசும் கோந்தி மொழி சத்தீஸ்கர் மாநிலத்தில் எந்தப் பள்ளியிலும் பாட நூலாகவே இருக்கவில்லை. அதன்பின் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தால் அந்த கோந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு ஆரம்பப் பள்ளிகளில் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.

தென்னிந்தியப் பகுதிகள் டெக்கான் என்று அழைக்கப்பட்ட காலத்தில் அங்கு மராட்டி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசப்பட்டன. வட இந்தியப் படையெடுப்புக்குப் பின் அவர்களது மொழியான அவதியும் இங்கு பேசப்பட்டது. இவையாவும் ஒன்றுசேர்ந்து தக்கனி மொழி உருவாயிற்று.

பாமினி மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் தக்கனி மொழிதான் ஒருகாலத்தில் பேசப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

உலகமயமாதலின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு மொழிகள் மறைந்துள்ளன என்று அழுத்தமாகக் கூறும் கிறிஸ்டல், தொழில் நுணுக்கத்தின் ஊடுருவலால், உலகின் மூலை முடுக்குகளில்கூட பேசும் மொழிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார். ஒரு குறிப்பிட்ட மொழி ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகிறது.

எடுத்துக்காட்டாக, கனடாவில் ஆங்கில மொழியும், தென் அமெரிக்காவில் ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மொழிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக மொழியியல் துறைப் பேராசிரியர் அன்விதா அப்பி, இந்தியாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு மொழியின் ஆதிக்கம் காரணமாக காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள் மறைவதைப் பற்றி டோவ் கூறுகையில், மொழிகளின் மரணம் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. மாறாக, படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன்.

மொழி உரிமை என்பது மனித உரிமையாகும் என்கிறார் டோவ். இந்தியாவையே எடுத்துக் கொண்டால் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தபோதிலும், 16 மொழிகள் மாநில மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து மொழிகளும் முக்கியமானவை என்பதை அங்கீகாரம் செய்வதே மொழிப் பாதுகாப்பின் முதல் படியாகும்.

இந்திய அரசியல் சாசனத்தில் 8-வது பட்டியலில் சொல்லப்பட்டுள்ள 22 மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கை மீது, அரசுத் தரப்பில், ஒரு மொழியை குறைந்தபட்சம் 10,000 பேர்களாவது பேசினால்தான் மொழி என்ற வரையறைக்கு உள்படும். அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்படாத 100 மொழிகளை மூன்று விழுக்காடு இந்திய மக்களே பேசுகின்றனர்.

குஜராத்தில் அழிவின் விளிம்பில் உள்ள பிலி என்ற மொழியைப் பாதுகாக்கும் காஞ்சிபடேல் கூறுவது என்னவென்றால், "ஒரு மொழியைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அந்த மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் இலக்கியங்கள் வெளியிடப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஒரு மொழியைப் பாதுகாக்க முடியும்' என்கிறார்.

இம்மாதிரி மொழிகளைப் பாதுகாக்க பாஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்லி என்பவர் நடத்தி வருகிறார். இமாலயப் பகுதியில் ஹிம்லோக் அமைப்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்டர், ஹோ, அகர், க்ரியா, குருக்ஸ் போன்ற மொழிகளைப் பாதுகாக்க ஜார்கண்டி பாஷா சாகித்திய சனஸ்க்ருதி அகரா என்ற அமைப்பு பாடுபட்டு வருகிறது.

ஜோகர் நிகம் கபர் என்ற மாத இதழ் மூலமாக மொழிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரசன்னஸ்ரீ குர்ரு இன மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளார். ஆந்திரம் மற்றும் ஒரிசாவில் கொண்டா டொரா மொழி பேசப்பட்டு வந்தது. ஆனால், பழங்குடி மக்கள் தற்சமயம் ஒரிய மொழியைப் பேச ஆரம்பித்துவிட்டதால், இந்த மொழியைக் காக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கு வங்கத்தில் சந்தால் மக்களின் மொழியான ஒல்சிக்கி பேச ஊக்குவிக்கப்படுகிறது. லிவிங் டங்க்ஸ், சர்வைவல் இன்டர்நேஷனல், சொரோ சொரோ போன்ற அமைப்புகள் அழிந்து வரும் இந்திய மொழிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அழியும் மொழிகள் பட்டியலில், தமிழ் இடம் பெறவில்லை. தமிழின் உயிர்த்தன்மை அந்த நிலைக்குச் செல்கிற வாய்ப்பில்லை என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

அந்நிய கலாசாரம் பற்றிக் கூறும்போது, ""எனது வீடு சுவர்களால் அடைத்து இருப்பதை நான் விரும்பவில்லை. எனது வீட்டின் ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். உலகின் அனைத்துப் பகுதி கலாசாரமும் எந்தத் தடையுமின்றி வீட்டுக்குள் வருவதை விரும்புகிறேன். ஆனால், அந்த அலை என்னை அடித்துச் சென்றுவிடவும் விடமாட்டேன்'' என்று அண்ணல் காந்தி கூறினார்.

இன்றைய உலகமயமாக்கல் முறையில் பன்னாட்டு உறவால் சிலருக்குத் தாய்மொழி மீது உள்ள பற்று குறைந்து வருகிறது. இது ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். தான் பிறந்த மண், தாய் தந்தை, தாய் மொழி, தனது கலாசாரத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். தாய்மொழி என்பதில் ஒவ்வொருவரின் தன்மானமும், பெருமையும் அடங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

- கே.எஸ். இராதாகிருஷ்ணன் - தினமணி - 17/03/2011

March 15, 2011

இந்தியாவில் 12 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை!


கடன் தொல்லை காரணமாக நம் நாட்டில், 12 மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என, தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த அவலநிலையை போக்க, மத்திய, மாநில அரசுகள் பெரிய அளவில் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என, விவசாய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், கடந்த 1990களில் தான், வெளிச்சத்துக்கு வந்தது. சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதாலும், சில நேரங்களில் அதிகப்படியான மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாலும், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பது இல்லை. இதனால், கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கிய விவசாயிகள், வட்டியையும், முதலையும் திரும்பச் செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கந்து வட்டிக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். சில சமயங்களில், கடன் தொல்லை தாங்க முடியாத விவசாயிகள், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாபமும் அரங்கேறுகிறது.

தேசிய குற்றப் பிரிவு ஆவணத்தில், "நம் நாட்டில் கடந்த 1997ல் இருந்து, இதுவரை இரண்டு லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளை கணக்கில் எடுத்துப் பார்த்தால், 12 மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதாவது, தினமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விவசாய அமைச்சராக பதவி வகிக்கும் சரத் பவாரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள விதர்பாவில் தான், விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கிறது.

இந்த பிரச்சினைக்கான காரணம் குறித்து விவசாய நிபுணர்கள் கூறுவதாவது:-

விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் சில நடவடிக்கைகள் எடுத்தன. விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வழங்குவது, கடன் தள்ளுபடி வழங்குவது, இழப்பீடு மற்றும் உதவித் தொகை வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த நடவடிக்கைகள் தீவிரமாக இல்லை. விவசாயத்தில் இருந்து கிடைக்கும் வருமானம், விவசாயிகளின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற போதுமானதாக இல்லை. ஆகவே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், இங்கு தொடர்கதையாகிறது. இவ்வாறு விவசாய நிபுணர்கள் தெரிவித்தனர்.

நன்றி : கூடல்.காம்

http://www.koodal.com/news/india.asp?id=61781&section=tamil&title=every-12-hours-one-farmer-commits-suicide-in-india

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5015358

March 10, 2011

சென்னையில் பொதுக்கூட்டங்கள்!



ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை,
கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!

தனியார்மயமே இதன் ஆணிவேர்!
தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்!


பொதுக்கூட்டங்கள்

நேரம் : மாலை 5 மணி

நாள் : 11/03/2011 (வெள்ளிக்கிழமை)
இடம் : செங்குன்றம்,
பேருந்து நிலையம் அருகில்


நாள் : 12/03/2011 (சனிக்கிழமை)
இடம் : டிரஸ்ட்புரம் 6 வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை

தலைமை:
தோழர் கார்த்திகேயன்,
மாவட்ட செயலர், சென்னை,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

உரையாற்றுவோர்:

தோழர் சி. பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் காளியப்பன்,
இணைச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி

தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506

March 7, 2011

உழைக்கும் பெண்கள் தினம் - குரோம்பேட்டையில் பொதுக்கூட்டம்




மார்ச் 8 - உலகப் பெண்கள் நாளில் உறுதி ஏற்போம்!
இந்த நாளை
உழைக்கும் பெண்கள் நாளாக வளர்த்தெடுப்போம்!

- பொதுக்கூட்டம் -கலைநிகழ்ச்சி

நாள் : 8/03/2011 செவ்வாய்கிழமை, மாலை 5 மணி

பேருந்து நிலையம், குரோம்பேட்டை, சென்னை

பெண்கள் விடுதலை முன்னணி,

தொடர்புக்கு : தோழர் உஷா,
பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை - 600 095
பேச : 98416-58457

March 2, 2011

மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம்!


March 1, 2011

'அழகிய' சுவர்கள்!


சென்னையில் முக்கிய வீதிகளில் இருக்கும் சுவர்களில் தமிழ் மன்னர்களின் 'கொடை வள்ளல்' மற்றும் இன்னபிற சிறப்புகள், தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் அழகிய ஓவியங்கள் 'அலங்கரித்து' இருக்கின்றன. சென்னையை அழகுப்படுத்தும் பணிகளில் இந்த பணியும் உள்ளடங்கியது. இனி, இந்த 'அழகான ' சுவர்களில் சுவரொட்டி ஓட்டக்கூடாது. மீறினால், கைது, சிறை என சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது.

சென்னையை 'அழகுப்படுத்துதல்' பற்றியே நாம் தனியாக பேச வேண்டும். இப்பொழுது நான் சொல்ல வருவது வேறு.

சுவர்களை வெறும் சுவர்களாக பார்த்தவர்களா நீங்கள்? எனக்கு சுவர்கள் அப்படி இல்லை. இந்த சமூகம் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்றன? ஏன் இத்தனை கோளாறுகள்? இதை சரி செய்ய முடியாதா? சரி செய்வது என்றால் எப்படி என்று தேடுதலோடு திரிந்து கொண்டிருந்தேன். தேடுதலோடு திரிந்த என்னை, பாதைக்காட்டி அழைத்துச் சென்றது சுவர்கள் தான்.

நான் வாழ்ந்த பகுதியில், பட்டிமன்றமா? வழக்காடு மன்றமா? கலை நிகழ்ச்சியா அல்லது பொதுக்கூட்டமா? எல்லாவற்றையும் எனக்கு தெரிவித்தவை சுவர்கள் தான். தினம் ஒரு நிகழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரியான அமைப்பை வந்தடைய உதவியவை சுவர்கள் தான்.

சுவர்களை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்? வாக்கு அரசியல் கட்சிகள். கொள்கை இல்லாது போனதால், தன் தலைவர்களின், வீரத் தளபதிகளின் மூஞ்சிகளை வரைந்து வைக்கிறார்கள். செத்துப்போன பிறகும், இன்று வரைக்கும் சுவரை கெட்டியாக பிடித்திருப்பது தொப்பி எம்.ஜி.ஆர். இன்னும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் மாற்று அரசியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள்.

இப்படி சுவர்களை தடை செய்வதின் மூலம், யாருக்கு உண்மையிலேயே இழப்பு? வாக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுது தனித்தனியாகவே தொலைக்காட்சி அலைவரிசையை சொந்தமாக வைத்திருக்கின்றன. அவ்வளவு வசதியில்லை என்றாலும், பத்திரிக்கைகளை சொந்தமாக வைத்திருக்கின்றன. தன் சரக்குகளை விற்பனை செய்யும் விளம்பரதாரர்கள் வேறு ஊடகங்களுக்கு எளிதாக நகர்ந்துவிடுவார்கள். பணம் கொஞ்சம் கூடுதலாக செலவழியும். அவ்வளவு தான். உண்மையில் பாதிப்பு என்பது முற்போக்கு, புரட்சிகர சக்திகளுக்கு தான்? தனது நிகழ்ச்சி நிரலை பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், தேசிய நீரோட்டத்தில் கலந்து அவர்களோடு அந்த ஜனநாயக சகதியில் படுத்து உருண்டால் தான், சின்ன செய்திகளை கூட வெளியிடுவார்கள். இல்லையென்றால், இருட்டடிப்பு தான்.

இதனால் தான், அரசு, தன்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிற, குடைச்சலை தருகிற சுவர்களை, 'அழகிய' ஓவியங்கள் மூலம் தடை செய்கின்றன. இனி, மக்களை சென்றடைய புதிய 'சுவர்களை' நாம் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால், பழைய 'அழகில்லாத' சுவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும்.