> குருத்து: November 2010

November 26, 2010

ஊழலில் திளைக்கும் அலாகாபாத் நீதிமன்றம்!


புது தில்லி, நவ. 26: உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிலம் தொடர்பான அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வக்பு போர்டு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் வெள்ளிக்கிழமை விசாரித்தனர்.அப்போது அவர்கள் அலாகாபாத் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அலாகாபாத் நீதிமன்றத்துக்கு எதிராக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தெரிவிப்பதற்கே வருத்தமாக உள்ளது. நீதிபதிகள் பலர் நியாயமாக தீர்ப்பளிப்பதில்லை என்பதே
முக்கியமான புகாராக உள்ளது.இது தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க

வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். தங்களுக்கு வேண்டப்பட்ட வழக்கறிஞர் ஆஜராகும் போது,அவர்களுக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.நீதிபதிகளின் மகன்கள், உறவினர் பலர் அங்கு வழக்கறிஞர்களாக உள்ளனர். இவர்களில் பலர்பணியைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, அவர்கள் விலைஉயர்ந்த கார்களில் வலம் வருகிறார்கள், பங்களாக்களை வாங்கியுள்ளனர், பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றும் தெரிகிறது. நீதிபதிகள் பலர் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளிப்பதே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைப்பதாக அமைகிறது. எனவே அலாகாபாத், லக்னெü உயர் நீதிமன்றங்களைச்
சீரமைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி - 27/11/2010 - இதழிலிருந்து....

பின்குறிப்பு : மாவட்ட நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதி மன்றம் வரை காசு கொடுத்தால், தமக்கு ஆதரவான "நீதி" கிடைக்கிறது என்ற உண்மையை சில ஆண்டுகளாக வரும் பத்திரிக்கை செய்திகள் நிரூபிக்கின்றன. உச்சநீதி மன்றம் அலகாபாத் நீதி மன்றம் லஞ்சத்தில் கொஞ்சம் ஓவராக போவதை கண்டித்திருக்கிறது. இன்னும் நீதித் துறையை மக்கள் 'நம்புகிறார்கள்'. அந்த நம்பிக்கையை முற்றிலுமாய் இழந்துவிடக்கூடாது என்கிற கவலை இந்த கண்டிப்பில் தெரிகிறது.

November 24, 2010

அயோத்தி தீர்ப்பு - அரங்கக்கூட்டம்!

'சர்ச்சைக்குரிய இடம்' யாருக்கு என்பதை, அலகாபாத் தீர்ப்பு அறிவிக்கும் பொழுது, இந்தியா முழுவதும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இந்திய அரசும், பல கட்சித் தலைவர்களும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனால், சொல்லப்பட்டதோ அயோக்கியதனமான தீர்ப்பு. அதற்குப் பிறகு காத்த அமைதியும் அநியாயமானது.

நாடு முழுவதும் உண்மையான ஜனநாயகம் குறித்து கவலைப்படுகிறவர்கள், நீதி மன்ற பாசிசத்தை அம்பலப்படுத்திட வேண்டும். அவர்கள் விரும்பும் "நீதி"க்கு வேண்டும் அமைதியை குலைக்க வேண்டும்.

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்க கூட்டம்!


நிகழ்ச்சி நிரல்:

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை : ”நீதித்துறை பேசும் காவி மொழி”
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் : வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!
அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

ஏற்பாடு :

மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.

தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494

November 23, 2010

வெடிக்காத பட்டாசு!


நேற்று அலுவலகம் முடிந்து, வண்டியை எடுத்து கிளம்பி கொண்டிருந்தேன். எங்கள் நிறுவனத்தின் அருகே தொழிற்சாலையில் வேலை செய்யும் அறிமுகமான தொழிலாளி "உங்க ஏரியா பக்கம் ஒரு வேலை இருக்கு சார். உங்களோட வருகிறேன்" என்றார். அவரையும் ஏற்றிக்கொண்டு, இருவருமாய் கிளம்பினோம்.

பேசிக்கொண்டே போகும் பொழுது, மிதமான தூறல் விழுந்தது. ஒரு தேநீர் சாப்பிட்டால், நன்றாக இருக்குமே என நினைத்தேன். கடை ஒன்றை தேடி, கடைப்பக்கமாய் வண்டியை ஓரங்கட்டினேன். முதல்நாள் பெளர்ணமி. நிலா வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. வானத்தில் பட்டாசுகள் வண்ணமயமாய், அழகாய் வெடித்து சிதறிக்கொண்டிருந்தன். இல்லங்களில் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. நேற்று, பெரிய கார்த்திகை நாள் என நினைவுக்கு வந்தது.

என்னுடன் வானம் பார்த்துக்கொண்டிருந்தவர்...சொல்லத் தொடங்கினார். "தீபாவளி பண்டிகைக்கு வாங்கியதை, கொஞ்சம் மிச்சம் வைத்திருந்து வெடிக்கிறார்களோ?! மிச்சமே இவ்வளவு என்றால்...தீபாவளிக்கு எவ்வளவு வெடித்திருப்பார்கள்? இந்த பட்டாசை பார்க்கும் பொழுதெல்லாம், என் சிறுவயது சம்பவம் நினைவுக்கு வரும் சார்! 8, 9 வயசுல எங்க வீட்ல அவ்வளவு வறுமை சார். அப்பா பொறுப்பில்லாதவர். அம்மா மட்டும் வேலை செஞ்சு, குடும்பத்தை காப்பத்த முடியல! என் அக்கா, அண்ணன் எல்லாம் சின்ன வயசுலேயே வேலைக்கு போய்ட்டாங்க! அப்ப நான் மட்டும் தான் படிச்சுட்டிருந்தேன்."

"தீபாவளி வந்துட்டாலே, அம்மாவுக்கு பதட்டமாயிரும். எப்படியாவது, வட்டிக்கு கடனை வாங்கி, புதுத்துணி எடுத்திருவாங்க. ஒரே ஒரு இனிப்பு பலகாரம் அம்மா செஞ்சிருவாங்க! ஆனால், இந்த பட்டாசு மட்டும் கிடைக்காது சார். விபரம் தெரியாத வயசு வேற. பட்டாசு கேட்டு, பலமணி நேரம் அழுதா கூட, அம்மா வாங்கித்தர மாட்டாங்க! 10 வயசு இருக்கும். இந்த வருடம் எப்படியும் பட்டாசு வெடிக்கனும்னு நினைச்சு, கிடைக்கிற 25 பைசா, 50 பைசாவை எல்லாம் சேர்த்து வைச்சு, எனக்கு பிடிச்ச சங்கு சக்கரம், புஷ்வானம், பாம்பு பட்டாசுன்னு மூணு, நாலு நாளைக்கு ஒண்ணு வாங்கி, ஆசை ஆசையாய் பெட்டிக்குள்ளே சேர்த்து வைச்சேன். தீபாவளி வந்த பொழுது, 15லிருந்து 20 பட்டாசு வரைக்கும் சேர்ந்திருச்சு!"

"தீபாவளி அன்னைக்கு எழும் பொழுதே, பட்டாசு ஞாபகத்தோடு தான் சந்தோசமா எந்திரிச்சேன். குளிச்சு, சாப்பிட்டு, எல்லோரும் வெடிக்கும் பொழுது, என் பட்டாசையும் எடுத்து..பத்த வைச்சா... பட்டாசெல்லாம் பதபதத்து போய், 20ல் சமீபத்தில் வாங்கின மூணு, நாலு மட்டும் வெடிச்சுது. மற்றவையெல்லாம் வெடிக்கவேயில்லை. காசை சேர்த்து வைச்சு, தீபாவளி நாளில் வாங்கனும்னு கூட விபரம் தெரியாத வயசு. அன்னைக்கு எனக்கு வந்த சோகம் இருக்கே! வாழ்வில் மறக்கமுடியாததது" என சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார்.

என்னாலும் ஒன்றும் பேச முடியவில்லை. "வாங்க போகலாம்!" என்று மட்டும் சொன்னேன். வழியெங்கும் வண்ணமயமாய் பட்டாசுகள் வானத்தில் வெடித்து சிதறிக்கொண்டே இருந்தன. இப்பொழுது, எனக்கு அழகாய் தெரியவில்லை. கொண்டாட்டம் என்பது கூட வர்க்கம் சார்ந்தவை தான்.

November 11, 2010

சின்ட்ரல்லா - கவிதை!


உதட்டை மடித்து தூக்கும்
சாந்து சட்டியின் கீழ்
முகத்தில் சரியும் முடிகளை
புறங்கை ஒதுக்கும்பொழுதும்
அவளே! அவளே!
எங்கெங்கும் நிழலாடுகிறாள்.

தூரிகைகளின் தவறுகளால்
வான்காவின் முகம்போல
தனிமை அப்பிக்கிடக்கிறது அவளிடம்!

நிறமில்லா சட்டை
வெளுப்பில் தோய்ந்த
பூப்போட்ட பாவடை - இவையே
சின்ட்ரலாக்களின் அடையாளங்கள்!

எதிர்படும் முகங்கள் எல்லாம்
தாயாய், தங்கையாய்,
கூலியாய்,
சிறுமியாய், வித்தைகாரியாய்
எங்கெங்கும் அணுவாய்
உயிர்த்திருக்கிறாள்!

அவள் எப்பொழுதும் அழுவதில்லை - ஆனால்
அழுவதுண்டு.
அவள் எப்பொழுதும் சிரிப்பதில்லை - ஆனால்
சிரிப்பதுண்டு.

அவளின் வெற்றுப்புன்னகை
துளிக்கண்ணீரை விட கனமானது.
அவளின் கண்ணீரை யாரும்
நுகராதீர்!
மலம் மூடிய சமூகத்தின்
முடைநாற்றம் நெடி அடிக்கும்.
கடைசியில்
அது கண்ணீருக்கல்ல!
உங்கள் பாவங்களின் பின்குறிப்பு.
அவள் புன்னகைக்கு
பொருள் தேடாதீர்!
அதுவும் பூஜ்யங்களை போலத்தான்!

மோனாலிசாக்களுக்கு விடையுண்டு
சின்ட்ரலாக்களுக்கு விடையில்லை.

தூசி பறக்கும் சாலையில்
நடந்து செல்லும் சின்ட்ரலாக்களுக்கு
கவலையும் இல்லை;
கண்ணீரும் இல்லை - எனில்
அவளின் இரவின் பெருமூச்சை யாதென்பீர்?

முன்பொரு நடுநிசியில்
சின்ட்ரல்லா காத்திருந்தாள்
மாய ஷீ-வுக்கும், சாரட் வண்டிக்கும்.

மழைக்கு ஒழுகும் குடிசைக்குள்
சின்ட்ரல்லா காத்திருக்கிறாள்
சில தோட்டாக்களுக்கும்...
துப்பாக்கிக்கும்...

- சுக்ரன்

பின்குறிப்பு : ருசிய புரட்சி தினமான நவம்பர் 7 நினைவுகளில் .. நண்பர் எழுதிய கவிதையை மெயிலில் அனுப்பி வைத்தார். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்...