> குருத்து: May 2022

May 30, 2022

தோழர் கோ. கேசவனின் தொகுப்பு நூல்கள்


தோழர் கேசவன் பேராசிரியர், மார்க்சிய ஆய்வாளர். அநீதிக்கு எதிராக களத்திலும் நின்று போராடியவர், தன் இறுதி மூச்சு வரை மார்க்சிய லெனினிய அரசியல் நின்றவர் என அவருக்கு பல சிறப்புகள் உண்டு.


மதுரையில் அறிவுச்சுடர் நடுவத்தில் பல மார்க்சிய அறிஞர்கள் 1990 களில் வந்து பேசியதில், தோழர் கேசவனும் ஒருவர். அவர் எழுதிய ”சாதியம்” என்னும் நூலுக்கு அறிவுச்சுடர் நடுவம் சார்பாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு திறனாய்வு கூட்டம் நடத்தியது நினைவுக்கு வருகிறது.

1946ல் பிறந்து 1998ல் தனது 52 வயதில் இறந்தது தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவர் தன் உடலை முறையாக பராமரித்துக்கொள்ளவில்லை என தோழர்கள் வருத்தமாக சொன்னார்கள். அவர் இறந்த பொழுது, இடுகாடு வரை அறிவுச்சுடர் நடுவம் தோழர்களுடன் போயிருந்து அஞ்சலி செலுத்தியது இன்றும் நினைவில் நிற்கிறது.

தோழரின் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்து, பலரும் படிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, செரித்துக்கொண்டவை தான்.

இப்பொழுது அவருடைய மகன் பல தோழர்களின் உதவியுடன், அவர் எழுதிய புத்தகங்களை ஐந்து தலைப்புகள் வாரியாக கொண்டு வந்துள்ளார்.

1. தமிழ்ச்சமூக வரலாறு - இலக்கியம்
2. தலித்தியம்
3. மார்க்சியம்
4. இயக்கங்கள்.
5. பொதுக்கட்டுரைகள்

சில காலம் கடந்து கூட புத்தகங்கள் தொகுப்பாக வருவது ஆரோக்கியமான ஒன்று. அவருடைய மகனுக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம். அவர் பெயரிலெயே ஒரு டிரஸ்ட்டை ஏற்படுத்தி அதன் மூலமாக கொண்டு வந்ததினால், புத்தகங்களின் விலை எல்லாம் குறைவாகவே இருக்கின்றன.

வருங்காலங்களில் புத்தக வெளியீடு, சிறப்பான நூல்களுக்கு பரிசு, கல்வி உதவி என திட்டமிட்டுள்ளதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்தகம் வாங்க தொலைபேசி : 89257 06664

படம் : படத்தில் உள்ள மூன்று புத்தகங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று நம் தோழர் ஒருவர் வாங்கி வந்தவை.

நெஞ்சுக்கு நீதி – ஒரு பார்வை

 


போலீசில் உயரதிகாரியான நாயகன் பொள்ளாச்சிக்கு மாற்றலாகி வந்து சேர்கிறார். இரண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே மரத்தில் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள். ஒரு பெண்ணைக் காணவில்லை. முறையான விசாரணை துவங்காமலேயே அந்த பிள்ளைகளின் பெற்றோர்களே ஆணவ கொலை செய்ததாக போலீசு வழக்கை வெகுவேகமாக முடிக்க பார்க்கிறார்கள்.
 
நாயகன் அந்த கொலைகள் ஏன் செய்தார்கள் யார் செய்தது என ஆராய துவங்குகிறார். உயரதிகாரியாக இருந்தாலும் அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரியாலும், மேலிருக்கும் உயர் அதிகாரியாலும், ஆளும் கட்சியில் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளாலும் வழக்கை அவர்கள் விரும்பியபடி முடித்துவிட அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதையும் மீறி உண்மையை வெளியே கொண்டுவந்தாரா என்பதை மீதிப் படத்தில் சொல்லி முடிக்கிறார்கள்.
 
தாழ்த்தப்பட்ட மக்களின் அவலநிலை படத்தில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண் பள்ளியில் மாணவர்களுக்கு எப்படி சமைக்கலாம் என பிரச்சனை செய்து, ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெற்றோர்கள் ஆக்கி வைத்திருந்த சோறை கீழே கொட்டுவதில் இருந்து தான் படமே துவங்குகிறது. மீண்டும் அந்த பெண் குப்பை அள்ளுவதற்கான வேலையில் ஈடுபடுகிறார். மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது, அது தண்டனைக்குரிய குற்றம் என பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் போட்டுவிட்டாலும், இன்றும் மலக்குழியில் மனிதர்கள் உள்ளே இறக்கப்படுகிறார்கள். பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். பலர் செத்தும்போகிறார்கள். சட்டம் தாள்களிலேயே தூங்கிக்கொண்டு இருக்கிறது.
 
மூன்று பெண் பிள்ளைகள் காணாமல் போகிறார்கள். பெண்களின் குடும்பத்தினர் பதைபதைத்து புகார் கொடுக்க அலைமோதுகிறார்கள். போலீஸ் புகார் பெற மறுக்கிறது. ஏனென்றால், அந்த “கொலைகளை” செய்ததே பெற்றோர்கள் என ஜோடிக்கும் பொழுது, எப்படி புகாரை வாங்குவார்கள். இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து சில இளைஞர்கள் கலகம் செய்ய துவங்குகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு போலீசு ஏகப்பட்ட வழக்குகளை பதிந்து வைத்திருக்கிறார்கள்.
 
அந்த பெண் பிள்ளைகள் குறித்து விசாரிக்கும் பொழுது தான் தெரிகிறது. அவர்கள் கூடுதலாக கூலி ரூ.30 கேட்டிருக்கிறார்கள். வெறும் முப்பது ரூபாய்க்காகவா? என அதிர்ச்சியாய் நாயகன் கேட்கும் பொழுது, அந்த ஆதிக்கச்சாதி முதலாளி வன்மத்துடன் திருத்துவான் “கேட்டதற்காக”. இதே ஆதிக்கச் சாதி வன்மம் தானே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெண்மணியிலும் 44 பேரை எரித்துக்கொன்றார்கள்.
 
அதெல்லாம் ஐம்பது வருடத்திற்கு முன்பான நிலை. இப்பொழுது அப்படி இல்லை. படம் மிகையாக பேசுகிறது என யாரேனும் நினைத்தால், இந்தியாவின் உண்மை முகம் இதை விடக் கொடியது என்பது தான் யதார்த்தம். ஆதிக்கச் சாதிக்கார்களின் அராஜகத்தை, அட்டூழீயங்களை ஒவ்வொரு நாளும் செய்திகளில் பார்க்கமுடியும். அப்படி பார்க்கவில்லை என்றால், ”வழக்கமான” செய்தி என்பதால், போடாமல் தவிர்த்திருப்பார்கள் என புரிந்துகொள்ளலாம். ஏனென்றால் நாய் மனிதனை கடித்தால் அது செய்தியல்ல. மனிதன் நாயை கடித்தால் அது தான் செய்தி.
 
தாழ்த்தப்பட்ட மக்களின் அவல வாழ்க்கை, தங்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு நீதி கிடைக்காமல் அலையும் மக்கள். ஆதிக்கச்சாதி வெறி, அவர்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு, அரசு அதிகாரிகளிடம் கிடைக்கும் செல்வாக்கு என எல்லாவற்றையும் சொல்லும் பொழுது, ஒன்று புரிகிறது. உலகம் உடைமை இல்லாதவர்கள், உடைமை இருப்பவர்கள் என இரண்டாய் இயங்குவது புரிகிறது. சொத்து இருப்பவர்களுக்கு, அவர்கள் என்ன செய்தாலும் உடன் நிற்கும் அரசு, அதிகாரிகள் என்பது பளிச்சென படம் சொல்கிறது. இப்படி எல்லாவற்றையும் பளிச்சென சொல்லிவிட்டு, என்ன இருந்தாலும் ”சட்ட” ரீதியாக செல்வது தான் தீர்வு என சொல்லி முடிக்கும் பொழுது, வலிந்து சொல்கிறார்கள் அல்லது பச்சையாக மறைக்கிறார்கள் என்பது பார்வையாளர்களுக்கு பளிச்சென தெரிகிறது.
 
அரசும் அதன் அதிகார வர்க்கம் தானே இப்படி. “நாம்” தேர்ந்தெடுத்த அரசாங்க பிரதிநிதிகள் இதையெல்லாம் வேடிக்கையா பார்க்கிறார்கள் என்ற கேள்வியை கேட்டால், ஆமாம். அவர்களுக்கு வேலை சட்டம் இயற்றுவது தானே! அதை நடைமுறைப்படுத்துவர்கள் அரசு அதிகாரிகள் தானே! படத்தில் வருவது போல அவர்களோடு ஆட்டம் போடுகிறார்கள். அப்படி யாரேனும் விதிவிலக்காக எதிர்த்து நின்றால், அது இந்தப் படத்தில் நாயகனின் நிலை தான்.
அனைத்து மக்களுக்குமான அரசு, அரசாங்கம் என்று பேசினால் கூட, உண்மையில் நடப்பது சொத்துடைமை இருக்கும் சிறுபான்மையினருக்கான அரசு தான். அரசாங்கம் தான். அதனால் தான் அவர்களின் கரங்களை பக்கபலமாக நின்று வலுப்படுத்துகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதற்காக பாடுபடுகிறார்கள். அதன் மறுபக்கமாக பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறார்கள்.. பெரும்பான்மை மக்களுக்காக சிந்திக்கும் செயல்படும் அரசும் வரலாற்றில் இருந்திருக்கிறது. அதை ரசியாவிலும், சீனாவிலும் இன்னும் பல நாடுகளிலும் உலகம் பார்த்திருக்கிறது.
ஆக, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருக்கிற இத்துப்போன, அழுகி நாறும் நிலையில் இருக்கிற இந்த பழைய ”அரசை” ஏன் தூக்கி சுமக்கவேண்டும். கடாசிவிட்டு, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ”அரசை” நிறுவுவதைப் பற்றி சிந்திப்பதும் மக்களை அதை நோக்கி அணித்திரட்டுவதும் தான் இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கமுடியும்.
 
இந்தியில் வந்த “Article 15” படத்தை முறையாக வாங்கி தமிழ் நிலத்திற்கு பொருந்துவது போல சில அவசிய மாற்றங்களை செய்து படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். “கனா” படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ”நியூட்ரல் என்பது நடுநிலை அல்ல! பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம், நியாயத்தின் பக்கம் நிற்பது தான்”. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை நேர்மையாக சொன்ன இயக்குநருக்கு
வாழ்த்துகள்.
 
இப்பொழுது திரையரங்குகளில் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அவசியம் பார்க்கவேண்டிய படம்.

May 28, 2022

காத்துவாக்குல இரண்டு காதல் – ஒரு பார்வை


ஒரு கிராமம். அந்த குடும்பத்தில் யாருக்கும் திருமணம் நடந்தால், சம்பந்தம் செய்த குடும்பத்தினர் செத்துப்போகிறார்கள். ஆகையால் பயந்து போய் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். நாயகனின் அப்பா ஒரு பெண்ணை காதலித்து திருமணம் முடிக்கிறார். பிறகு அவரும் செத்துப்போகிறார். பையனை பெற்றெடுத்த அம்மா, படுத்த படுக்கையாகிறார். பையன் துருதிருஷ்டகாரன் என திரும்ப திரும்ப சொல்கிறார்கள். அவனும் மெல்ல மெல்ல நம்ப துவங்குகிறான். “கவலைப்படாதே மகனே! ஒருநாள் எல்லாம் மாறும்” என அம்மா ஆசிர்வதிக்கிறாள்.


நகரத்துக்கு வந்துவிடுகிறான். பகலில் டாக்ஸி ஓட்டுகிறான். இரவில் ஒரு கிளப்பில் பவுன்சராக வேலை செய்கிறான். ஊரில் உள்ள தன் பெரிய குடும்பத்துக்கு பொறுப்பாய் பணம் அனுப்புகிறான். இந்த நிலையில் இரண்டு நாயகிகள் அவனுக்கு அறிமுகமாகிறார்கள். இருவரும் வேறு வேறு பிரச்சனையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள். இருவரும் ஒரு விநாயகர் சதுர்த்தி நாளில் நாயகனிடம் காதலைச் சொல்கிறார்கள். அம்மா சொன்ன அந்த நல்ல நாள் வந்துவிட்டதென, இருவரிடமும் உண்மையை சொல்லாமல் இருவரின் காதலையும் ஏற்கிறான்.

ஒரு நாள் இருவருக்கும் உண்மை தெரிந்துவிடுகிறது. ”யாராவது ஒருவரை தேர்ந்தெடு. வாழலாம்” என இருவரும் சொல்கிறார்கள். தன் துரதிருஷ்ட முன்கதையை சொல்லி, அதனால் தான் இருவரிடமும் மறுக்கவில்லை என்கிறான். இரண்டு பேரும் எனக்கு வேண்டும் என அடம்பிடிக்கிறான். எங்கெங்கோ போய் படத்தை முடிக்கிறார்கள்.

கதை சுருக்கம் எழுதும் பொழுதே, எனக்கு உமட்டிக்கொண்டு வருகிறது. உங்களிடம் சொல்லி உங்களையும் சிரமப்படுத்துவதை நினைக்கும் பொழுது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் தமிழில் இப்படிப்பட்ட படங்கள் வருவதை நீங்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

நாயகனின் முன்கதை என்பது ஒரு போலி (Fake). உலகத்தில் அப்படி ஒரு கேனத்தனமான, துரதிருஷ்டவசமான குடும்பம் இருக்க வாய்ப்பேயில்லை. கல்யாணம் தான் ஆகவில்லை. கை, கால்கள் இருக்கிறதே! உழைக்கவேண்டியது தானே! அந்த வெட்டியாய் சுத்தும் குடும்பத்துக்கு தான் நாயகன் இரவும் பகலும் தூங்காமல் உழைக்கிறார். கடைசியில் ஒரே நாளில் காதலித்தவர்களை எல்லாம் கண்டுபிடித்து எல்லாருக்கும் திருமணமும் நடக்கிறது. கஷ்டம். கஷ்டம்.

ஊரில் எவ்வளவோ பேர் இருக்கும் பொழுது இரு நாயகிகளுக்கும் நாயகன் மீது ஏன் அப்படி ஒரு காதல்? இயக்குநர் இரு நாயகிகளையும் எட்டுத்திக்கில் ஏதாவது ஒரு வழியில் கூட தப்பித்துவிடாதபடி, துன்பம், துயரம் என்னும் கட்டையை போட்டு கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு இவரை விட்டுவிட்டு, வேறு யாரையும் காதலிக்க முடியாதபடிக்கு நெருக்கடியில் தள்ளிக்கொண்டே இருக்கிறார். இப்படி ஒரு இயக்குநர் கிடைத்தால், இப்படி ஒரு நாயகன் இரண்டு என்ன? மூன்று நாயகிகள் கூட வெட்கமின்றி கேட்பான். என்னைக் கேட்டால், இரவும் பகலும் தூங்காமல் வேலை (!) செய்வதால்,, அவனுக்கு முதலில் செய்யவேண்டியது வைத்தியம் தான்.

சித்ரா லட்சுமணனுக்கு தந்த பேட்டியில் இந்தப் படத்தின் இயக்குநர் சொல்கிறார். ”என் கதையை என் உதவி இயக்குநர்களிடம் கூட விவாதிக்கமாட்டேன். அதில் உள்ள லாஜிக் ஓட்டைகளை யாராவது ஒரு ஆளாவது கலாய்த்துவிடுவார். பிறகு என்னால் நான் நினைக்கிற கதையை எடுக்க முடியாது” என்கிறார். இவ்வளவு கேவலமாக கதை ஏன் வெளிவருகிறது என நமக்கு புரிகிறது அல்லவா! இந்தக் கதையை கேட்டு நாயகிகளில் சூப்பர் ஸ்டார் நயன் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு டாப் ஸ்டார் சமந்தா ஒத்துக்கொள்கிறார். ”நல்ல” கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி ஒத்துக்கொள்கிறார். ஸ்ப்பா! முடியல!

அதே பேட்டியில் “இதற்கு முன்பும் பல இரண்டு பொண்டாட்டிகள் கதைகள் வந்திருக்கின்றன. அந்த கதைகளில் எல்லாம், மூவரும் ஒரு காட்சியில் தோன்றும் பொழுது, படம் முடிவுக்கு வந்துவிடும். நான் அதற்கு பிறகு என்ன நடக்கும் என சொல்ல முயன்றிருக்கிறேன்” என்கிறார். படத்தின் ஓரிடத்தில் நாயகிகளில் ஒருத்தி சொல்வார். ”இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒண்ணு! நாம் இறந்த காலத்திற்கு போகவேண்டும். இல்லையெனில், எதிர்காலத்திற்கு போகவேண்டும். இப்போதைக்கு இது சாத்தியமில்லை!” என்பார். எப்பா! எவ்வளவு வசதிகள், வாய்ப்புகள் இருந்தாலும் ஒரு குடும்பம் குடும்பமாய் வாழ்வதே சமூக நிலைமைகளில் இன்று பெரும் சவாலாய் இங்கு இருக்கும் பொழுது, இவர்கள் பேசுவதும் விவாதிப்பதும் சகிக்க முடியாததாக இருக்கிறது.

இன்னும் பேசலாம். என்னால முடியலை! இத்தோட நிறுத்திக்கலாம்.

Perfect Strangers (2016) இத்தாலி


அன்றைக்கு முழு சந்திரகிரகணம். நண்பர்கள் எல்லோரும் ஒரு வீட்டில் சந்தித்து, சந்திரகிரகணத்தையும் டெலஸ்கோப்பில் ரசிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். எல்லோருமே நடுத்தர வயதில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நல்ல வேலையிலும் இருக்கிறார்கள்.


மூன்று குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி என ஆறு பேரும், ஒருவர் தன் துணைவியாருக்கு உடல் நிலை சரியில்லை என அவர் மட்டும் என மொத்தம் ஏழுபேர் கூடுகிறார்கள்.

கணவன் மனைவி உறவு குறித்து பேச்சு எழுகிறது. ஒரு மனைவி கணவனுக்கு வந்த வாட்சப் செய்தியைப் பார்த்ததும் சண்டை ஆரம்பித்து பிரிந்துவிட்டார்கள் என்கிறார். நாங்க அப்படியில்லை. எங்களுக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இல்லை என சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ”அப்ப ஒரு விளையாட்டு துவங்கலாம். எல்லோருடைய செல்போன்களையும் மேஜையில் வைப்போம். வருகிற அழைப்புகளை, குறுஞ் செய்திகளை, மின்னஞ்சல்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்வோம்” என முடிவு செய்கிறார்கள்.

ஒவ்வொரு செய்தியாக வர வர, அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன ரகசியங்கள் முதல், பெரிய ரகசியங்கள் வரை ஒவ்வொன்றாக உடைபடுகிறது. அந்த இடம் பதட்டமான நிலைக்கு வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமான இறுதி காட்சியுடன் முடிவடைகிறது. அப்பாடா ஸ்பாய்லர் இல்லாமல் கதை சுருக்கம் சொல்லிவிட்டேன்.
****

2016ல் இந்த இத்தாலிய படம் வந்து, பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. அதற்கு பிறகு ஸ்பெயின், தென்கொரியா, துருக்கி என 20 மொழிகளில் அனுமதி வாங்கி மீண்டும் எடுத்திருக்கிறார்கள். அனுமதி வாங்காமலும் நிறைய எடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஒரு உதாரணம். மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள 12th Man யும் இந்த படத்தின் ஒன்லைன் தான். என்ன கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக, ஒரு கொலையையும் சேர்த்து, ஒரு திரில்லராக்கிவிட்டார்கள்.

ஒரு போனை எடுத்து மேஜை மேலே வைச்சு, இரண்டு மணி நேரத்தில் நாலு குடும்பத்தையும் சல்லி சல்லியா உடைச்சிட்டிங்களேடா! என்று தான் தோன்றியது. நாலு குடும்பத்து ஆட்களை வைத்து கதை சொல்லி, அந்த படத்திற்கு Perfect Strangers என பெயர் வைத்தது இயக்குநரின் கிண்டல் என எடுத்துக்கொள்கிறேன்.

கணவனுக்கு ஒரு விசயம் பிடிக்கும். மனைவிக்கு சுத்தமாக பிடிக்காது. அங்கு மறைப்பது என்பது இயல்பாய் வந்துவிடும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சின்ன சின்ன ரகசியங்கள் இருக்கத்தான் செய்யும். திருமணம் என்பது இருவரும் சின்சியராக இருக்கவேண்டிய ஒரு கமிட்மெண்ட். ஊருக்காக ஒரு குடும்ப அமைப்பில் வாழ்ந்து கொண்டு, இருவரும் வேறு வேறு துணைகளோடு பயணப்பட்டால் என்ன ஆகும்? இதற்கு தனிநபர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியுமா? சமூக நிர்பந்தங்களும் இதில் வினையாற்றுகின்றன.

பல நாடுகளுக்கும் இந்த கதை பயணப்படுகிறது என்பது எதைக் காட்டுகிறது? எல்லா ஊரிலும் குடும்பங்களில் சிக்கல்கள் இருக்கிறது என்பதைத் தானே? ஒவ்வொரு மொழியிலும் என்னென்ன மாற்றங்கள் செய்தார்கள் என அறிய ஆவலாய் இருக்கிறது.

படத்தில் நடித்த அத்தனைப் பேரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். பார்க்கவேண்டிய படம். பாருங்கள். Notify me ல் இருப்பதாக இணையம் சொல்கிறது.

May 23, 2022

12th Man (2022) மலையாளம் – ஒரு நல்ல திரில்லர்கல்லூரி கால நண்பர்கள். எல்லோருக்கும் திருமணமாகி, வெவ்வேறு துறைகளில் ஒரு நல்ல பொசிசனில் இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு வரும் வாரம் திருமணம். மொத்தம் ஐந்து ஜோடி. ஒரு பெண் மட்டும் விவாகரத்தானவர். ஆக மொத்தம் 11 பேர். இடுக்கி பகுதியில் சகல வசதிகளுடன் இருக்கும் இடத்தை (Resort) பிடித்து கொண்டாட வந்து சேர்கிறார்கள்.


அன்று இரவு எல்லோரும் உணவு நேரத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு விளையாட்டை விளையாட்டாக துவங்குகிறார்கள். அதாவது ஒரு மணி நேரம். அவரவர் செல்லை எடுத்து டேபிளில் வைத்துவிடவேண்டும். வரும் அழைப்புகளை, குறுஞ்செய்திகளை, வாட்சப் செய்திகளை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என முடிவாகிறது. சிலர் உடனடியாக ஏற்கிறார்கள். சிலர் தயங்கினாலும், அவரவர் கணவன்/துணைவி ஒத்துக்கொள்ள வைக்கிறார்கள்.

விளையாட்டின் முடிவில் அவர்களுக்குள் இருக்கும் ஒரு ரகசியம் வெளிப்பட்டுவிடுகிறது. அது அவர்களுக்குள் கடுமையான வாக்கு வாதங்களை உருவாக்குகிறது. அன்றிரவு மர்மமான முறையில் ஒருவரின் துணைவியார் இறந்துகிடக்கிறார். தற்கொலையாகவும் இருக்கலாம். கொலையாகவும் இருக்கலாம்.

அடுத்தநாள் உள்ளூரில் இடைத்தேர்தல் என்பதால், அங்கேயே எல்லோரும் தங்கியிருங்கள். விசாரணையை துவங்கலாம் என்கிறார்கள். இவர்கள் அவரவருக்கு சொந்த அலுவல் நெருக்கடி இருப்பதால், விசாரணையை விரைவுப்படுத்த கோருகிறார்கள்.

விசாரணை அதிகாரி எல்லோரையும் மீண்டும் அதே விளையாட்டை விளையாட வைத்து, அவர்களிடம் விசாரணை செய்து, சிசிடிவி உதவியுடன் தற்கொலையா, கொலையா என கண்டுபிடிக்க முயல்கிறார். கண்டுபிடித்தாரா என்பதை சுவார்சியமாக சொல்லியிருக்கிறார்கள்.

****

விளையாட்டு வினையாகும் என்று சொன்னால் ரெம்ப பழசு. கணவன் மனைவிக்குள்ளே எப்பொழுதும் ரகசியங்கள் இருக்கின்றன. இது நம் ஊரில் மட்டுமல்ல! உலகம் முழுவதும் உள்ளவை தான். கணவன் மனைவிக்குள்ளேயே செல்போனை வைத்து விளையாண்டாலே ஏகப்பட்ட ரகளையாகிவிடும். இதே விளையாட்டு, நெருக்கமாக இருக்கும் நண்பர்களின் குடும்பத்தோடு விளையாடினால் என்னவாகும்? ஒரு உயிர் போகும் அளவிற்கு சிக்கலாகிவிடுகிறது. சுவாரசியமான கதைக்களம். விசாரணை அதிகாரியும் அதே விளையாட்டை விளையாட சொல்லி, விசாரணையை முடிப்பது தான் இன்னும் சுவாரசியம்.

திரிஷ்யம் எடுத்த ஜீத்து ஜோசப் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். 12 Angry Men என ஒரு படம். ஒரு கொலை வழக்கு. அந்த கருப்பின சிறுவன் அந்த கொலையை செய்திருப்பானா? என்பதை சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்து விசாரணை நடக்கிறது. சமூகத்தில் பல்வேறு நிலையில் உள்ள அந்த 12 பேர் ஜூரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விவாதித்து நீதிமன்றத்திற்கு தனித்தனியாக அல்ல! பெரும்பான்மையாக ஒரு முடிவு எடுத்து சொல்லவேண்டும். அதை வைத்து நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும். 12 பேரும் அந்த அறையில் கூடுவார்கள். விவாதிப்பார்கள். மொத்தப் படமும் இது தான். வேறு எங்கும் காட்சிகள் போகாது.
அருமையான
படம். உலகப்புகழ்பெற்ற படம்.

அந்த படத்தை இந்த படம் நினைவூட்டியது. படம் பார்த்தவர்கள் இன்னும் சில படங்களை ஒப்பிட்டு சொல்கிறார்கள். எனக்கு படம் பிடித்திருந்தது. ஆங்காங்கே ட்விஸ்ட் இருந்துகொண்டே இருக்கிறது. ஆகையால் நிதானமாக இன்னொருமுறை பார்க்கவேண்டும் என நினைத்திருக்கிறேன். படத்தில் நடித்த அனைவருமே கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மோகன்லால் விசாரணை அதிகாரியாக வருகிறார். நமக்கு தெரிந்த முகங்களாக, அனு சித்தாரா, “உருகுதே மருகுதே” பாடலில் வரும் பிரியங்கா, அதே கண்கள் படத்தில் வந்த ஷிவதா (Shivada) என வருகிறார்கள்.

டிஸ்னி ஹாட் ஸ்டார் படத்தை ஓடிடியில் வெளியிட்டு இருக்கிறது. பார்க்கவேண்டிய திரில்லர். பாருங்கள்.

May 22, 2022

மூத்த குடிமக்களிடம் 1500 கோடி பறித்த ரயில்வேகொரானா உலகை மிரட்ட துவங்கி இருந்த பொழுது, இந்தியாவில் எந்தவித முன் தயாரிப்பும் செய்யாமல், 2020ல் மார்ச் மாதம் மூன்றாவது வாரம் ஒன்றிய அரசு திடீரென ஊரடங்கை அமுல்படுத்தியது. வீட்டை விட்டு யாரும் எங்கும் போகமுடியாது. பேருந்து இயங்கவில்லை. ரயில் இயங்கவில்லை. எந்த வாகனமும் இயங்கவில்லை.


வேலை இல்லை. சம்பளமும் இல்லை எனும் பொழுது உழைத்தால் தான் அன்றைக்கு சாப்பாடு என வாழும் மக்கள் உயிர் வாழ்வதற்கான அடிப்படை பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டனர். ஒன்றிய அரசு பெயருக்கு ரேசன் அரிசியில் அரிசி, கொண்டைக்கடலை என்ற அறிவிப்போடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக அமைதியானது. புயல், மழை, வெள்ளம் என்கிற சமயங்களில் சிவில் சமூகம் தன்னால் சாத்தியமான அனைத்தையும் செய்யும். கொரனா என்பது உயிர்கொல்லும் நோயாக இருந்ததால், இந்தமுறை அந்த உதவியும் பெரும்பாலும் கிடைக்கவில்லை.

வேலையும் இல்லை. வருமானமும் இல்லை என்ற நெருக்கடியான நிலையில் தான், ரயில்வே அதுநாள் வரை வழங்கி வந்த மூத்த குடிமக்களுக்கு பயணச் சீட்டில் கொடுத்த கழிவை ரத்து செய்தது. கொரானா என்பது ஆரோக்கியமாக இருப்பவர்களை அப்பொழுது பெரிதாக பாதிக்கவில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களோடு போராடிக்கொண்டு வாழும் மூத்த குடிமக்களை பெரிதும் பாதித்தது. முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் நிறைய மூத்தவர்களை இழந்தோம்.

இப்படி நெருக்கடியான காலக்கட்டத்தில் தான் மூத்த குடிமக்களுக்கு பயணச் சீட்டில் தரும் கழிவை ரத்து செய்தது. ஒருவேளை மூத்த குடிமக்கள் குறுக்கும் நெடுக்கும் பயணித்து கொண்டிருந்தால், உயிரிழப்பு இன்னும் அதிகமாகும். ஆகையால் பயணக் கட்டணத்தை அதிகமாக்கினால், மூத்த குடிமக்கள் பயணிப்பதை குறைப்பார்கள். உயிரிழப்பு குறையும் என்ற ”புத்திசாலித்தனமாக” சிந்தித்து இருக்கலாம். இவர்கள் ஏற்கனவே ”கோ கொரானா” என தட்டை எடுத்து தட்ட சொன்னவர்கள் தானே!

மார்ச் 2020 லிருந்து மார்ச் 2022 வரை 7 கோடிக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் 3500 கோடி வருமானம் வந்திருக்கிறது. மூத்தவர்களுக்கான பயணக் கழிவை ரத்து செய்ததால் 1500 கோடி கூடுதல் வருமானம் ஈட்டியிருக்கிறது.

ஒரு மனிதன் சமூகத்திற்காக 58 வயது வரை உழைக்கிறான். அதற்குள் பல நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. அவர்களுக்கு வரும் குறைந்தப்பட்ச பென்சன் தொகை அடிப்படை செலவுகளை எதிர்கொள்ள உதவி செய்கின்றன. மருத்துவ செலவை கூட அதை வைத்துக்கொண்டு செய்ய முடிவதில்லை. அதே போல பென்சன் என்பதெல்லாம் சமூகத்தில் மிக குறைந்த சதவிகிதத்தினரே வாங்குகிறார்கள். பென்சன் திட்டத்தை மெல்ல மெல்ல அரசுகள் காலி செய்துவிட்டார்கள். பெரும்பாலான மக்கள் வாழவேண்டும் என்றால் சாகும் வரை உழைப்பது என்பது சமூக எதார்த்தமாக இருக்கிறது. இந்த நிலை என்பது அவலமானது. இது சமூகத்தின் இயலாமை. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம். நல்ல ஆட்சி தருவோம். அதற்கான தகுதி இருக்கிறது என ஆட்சிக்கு வந்தவர்கள் தான் இதற்காக வெட்கப்படவேண்டும்.

இப்படி கடும் நெருக்கடியில் வாழும் மூத்த குடிமக்களிடம் 1500 கோடி ரயில்வே கொள்ளையடித்து இருக்கிறது. இது சம்பந்தமாக கடந்த மாதம் சு. வெங்கடேசன் எம்,பி. ”இப்பத்தான் நிலைமை சரியாயிருச்சே! பழைய படி சலுகை கழிவு தரலாம் அல்லவா!” என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதினால், ”கொரானா காலத்தில் ரயில்வே நிறைய நட்டமாயிருச்சு! அப்படி எல்லாம் கொடுக்கமுடியாது” என தெனாவட்டாக பதிலளித்திருக்கிறார்.

ஒன்றிய அரசு பெரும்பாலான மக்களின் சிரமங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பதேயில்லை. ஒரு மனிதனை நெருக்கடியில் தான் அவன் தரத்தை உரசிப் பார்க்கமுடியும் என்பார்கள். ஒன்றிய அரசு இயல்பு நிலையிலும் மோசமாக தான் இருக்கிறது. நெருக்கடியிலோ இன்னும் கேவலமான நிலைக்கு போய்விடுகிறது. மக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.

May 21, 2022

வசீகரா (2003)

 


”தன் மகன் படித்துவிட்டு வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து பொறுப்புள்ள மனிதனாக்கு,!” என பெருநகரத்தில் இருக்கும் தன் நண்பனிடம் அனுப்பிவைக்கிறார்.  நண்பனுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்து, கல்யாண வேலைகள் நடந்துவருகின்றன.

 

வீடு வந்து சேர்ந்த பிறகு, சில பல கலாட்டாக்கள், முட்டல், மோதலுக்கு பிறகு நாயகனின் குணம் பிடித்துப் போய், நிச்சயம் ஆன நாயகி நாயகனை காதலிக்கிறாள். அவனுக்கு பிடித்திருந்தாலும், ஊருக்கு கிளம்பும் பொழுது “எந்த சூழ்நிலையிலும் என் நண்பனிடம் மன்னிப்பு கேட்கும் நிலையை மட்டும் உருவாக்கிவிடாதே!” என அப்பா சொன்னது நினைவுக்கு வருகிறது. விலகி விலகி போகிறான். பிறகு என்ன ஆனது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

 

சில படங்கள் எப்பொழுதுமே பார்க்க பிடிப்பவை. அதில் இந்தப் படமும் ஒன்று.  தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கும் இயக்குநர் திரி விக்ரம்  கதை வசனம் எழுத வெங்கடேஷ் ஆர்த்தி நடிக்க தெலுங்கில் பெரிய ஹிட். விஜய்யை வைத்து ”நினைத்தேன் வந்தாய்”  (இதுவும் ரீமேக் தான்) எடுத்த இயக்குநர் செல்வபாரதி இந்த கதையை வாங்கி விஜய், சிநேகா, நாசர் நடிக்க படத்தை எடுத்தார். எஸ்.ஏ. இராஜ்குமாரின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை படத்தோடு ஒட்டி வரும் வடிவேலின் நகைச்சுவை நன்றாகவே எடுப்பட்டிருக்கும். படம் பலருக்கு பிடித்திருந்தாலும், வெளியான பொழுது கையை கடிக்காமல் ஓடியது என்கிறார்கள்.

 

பார்த்த உடனே காதல் என்பதை விட, பழகி, குணம், பழக்க வழக்கங்கள் பிடித்து வரும் காதல் யதார்த்தமானது தான்.  முதலில் தனக்கான வரன் பற்றி எந்த கருத்தும் இல்லாமல் இருக்கும் நாயகி, மெல்ல மெல்ல நாயகின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு, அவன் தனக்கு பொருத்தமானவன் என அறிந்ததில் இருந்து, அதில் உறுதியாய் இருப்பது அருமையாக இருக்கும்.  விஜய்யும், சிநேகாவும் சிறப்பாக பொருந்தியிருப்பார்கள்.  மற்றவர்களும் சிறப்பாக செய்திருப்பார்கள்.

 

தெலுங்குப் படத்தை அச்சு அசலாக காப்பியடித்த படங்களில் இதுவும் ஒன்று. இரண்டு படங்களுமே மூன்று மணி நேரப் படங்கள். இருந்தாலும் போராடிக்காத படம். பார்க்காதவர்கள் யூடியூப்பிலேயே இலவசமாக கிடைக்கிறது. ஒருமுறை பாருங்கள். பிறகு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பார்ப்பீர்கள்.

May 19, 2022

Love (2020) மலையாளம்


Black Comedy Psychological thriller Film

நாயகி மருத்துவமனையில் இருக்கிறாள். அவள் கர்ப்பமாய் இருக்கிறாள் என செய்தி சொல்கிறார்கள். ஆனால் அவளிடம் மகிழ்ச்சி இல்லை. அவள் நாயகனுக்கு போன் செய்துகொண்டே இருக்கிறாள். அவன் எடுக்காமல் இருக்கிறான்.

நாயகி வீட்டிற்கு வருகிறாள். நாயகியின் கணவன் பகலிலியே வீட்டில் தண்ணியடித்துக்கொண்டு இருக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது.கைகலப்பு ஆகிறது. அவன் அவளை கோபத்தில் அடிக்கிறான். அப்படியே மடங்கி விழுகிறாள். அவளிடம் எந்த அசைவுமில்லை. காலிங்பெல் அழைக்கும் சத்தம் விடாமல் கேட்கிறது. பாத்ரூமில் அவளை நகர்த்திக்கொண்டு தற்போதைக்கு மறைத்து வைக்கிறான்.

ஒரு நண்பன் வருகிறான். தன் வீட்டு நிலைமை, தொழில் நிலைமை, பொண்டாட்டியைப் பற்றி புலம்புகிறான். அங்கிருக்கும் சரக்கை அடித்துக்கொண்டே இருக்கிறான். இன்னொரு நண்பன் தன் காதலியோடு வருகிறான். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்புகிறோம் என்கிறான். எப்ப கிளம்புங்கடா! என சொன்னால் கூட நகர மறுக்கிறார்கள்.

இப்பொழுது மீண்டும் காலிங்பெல் அழைக்கிறது. திறக்கிறான். அங்கு நாயகி நிற்கிறாள். பிறகு என்ன நடந்தது என்பதை சொல்கிறார்கள்.

****

நம்மூரில் செல்லம் கொஞ்சினாலும், கணவன் மனைவி அதிகமாய் கொஞ்சுவார்கள். அடித்துக்கொண்டாலும் கடுமையாக அடித்துக்கொள்வார்கள். அப்படி ஒரு தம்பதியைப் பற்றிய கதை. படத்தின் பெயர் Love. American Beauty என ஒரு படம். இரண்டு குடும்பங்களை எடுத்துக்கொண்டு, அமெரிக்க குடும்பங்கள் எவ்வளவு சிதையுண்டு போயிருக்கின்றன என்பதை
அருமையாக
சொல்லியிருப்பார்கள்.

கொரானா காலத்தில் எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று போல! பெரும்பாலான காட்சிகள் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டிற்குள்ளேயே முடித்துவிட்டார்கள். மொத்தப் படமும் 1.30 மணி நேரம் தான் இது! அடுத்தடுத்து என்ன? என்று போனாலும், போதவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

Shine tom Chacko, கர்ணன் படத்தில் வரும் நாயகி ரஜிஷா நடித்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.

நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள்.

நடத்துநர் கொலை : டாஸ்மாக் கணக்கில் தான் சேரும்!


சென்னையிலிருந்து அதிகாலையில் விழுப்புரம் நோக்கி பேருந்து கிளம்பியது. மதுராந்தகம் புறவழிச்சாலையில் ஒரு பயணி ஏறுகிறார். பீணாம்மேட்டுக்கு டிக்கெட் கேட்கிறார். பேருந்து அந்த ரூட்டில் போகாது. மேல்மருவத்தூர் இறங்கி மாறிக்கொள்ளுங்கள் என நடத்துநர் சொன்னதை பயணி ஏற்கவில்லை. குடிபோதையில் இருந்த அவர் பீணாம்மேட்டில் தான் இறக்கிவிடவேண்டும் என அடம்பிடிக்கிறார்.


வாய்த்தகராறு அடிதடிக்கு போக, பயணி தாக்கியதில் தலையில் அடிப்பட்டு மயக்கமாகிறார். மருத்துவமனைக்கு போகும் வழியில் நடத்துநர் இறந்துவிடுகிறார். அரசு இப்பொழுது பத்து லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் பத்தாயிரம் வழித்தடங்களில், இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் குறுக்கும் நெடுக்குமாய் பயணிக்கின்றன. ஒரு கோடிக்கு மேற்பட்ட பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் சில்லறை பிரச்சனை போலவே, குடிகாரர்களையும் எதிர்கொள்கிறார்கள். மன உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள். இப்படி எதிர்கொள்ளும் பொழுது, சில நேரங்களில் கைமீறிப் போகும் பொழுது கொலையாகிவிடுகிறது.

காலை பணிரெண்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் டாஸ்மாக் கடைகள் குடிகாரர்களுக்கு சேவை செய்கின்றன. அதற்கு பிறகு குடிகாரர்கள் தட்டுத் தடுமாறி வீட்டுக்கு போய்விடக்கூடாது என்றெண்ணி, டாஸ்மாக் அருகே உள்ள பாரில் கூடுதல் விலைக்கு விற்று சம்பாதிக்கிறார்கள். பாருக்கென்று நேரம் தீர்மானிக்கவில்லையா என்று அப்பாவியாய் கேட்காதீர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 140 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இதில் அரசு
அனுமதியுடன் 36 பார்கள் இயங்குகின்றன. மீதி 104 கடைகள் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன என பத்திரிக்கைகள் வெளிப்படையாக எழுதுகின்றன. ஆக, பாரிலிருந்து கணிசமான பணம் போலீசுக்கு போவதால், கண்டுகொள்வதேயில்லை. அதுவும் பார் வைத்திருப்பவர் அரசியல் செல்வாக்கோடு இருந்தால், சொல்லவே தேவையில்லை. ஆக 24 மணி நேரமும் குடிகாரர்கள் மனம் கோணாமல் இந்த அரசு ஊத்திக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

”குடி” நேரடியாக குடிப்பவர்களின் உடலை, சிந்தனையை, செயல்பாட்டை பாதிக்கிறது என்றால், பக்க விளைவாக போக்குவரத்து தொழிலாளர்களை போலவே, மொத்த சமூகமும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசுக்கு மக்களின் நலனைப் பற்றி சிந்திப்பதற்கெல்லாம் நேரமேயில்லை. கல்லா கட்டுவதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். மக்கள் தான் போராடி பிரச்சனையை தீர்க்கவேண்டும்.

May 18, 2022

தடை செய்யப்பட்ட லாட்டரியும் தாராளமாய் கிடைக்கும் லாட்டரியும்!
"கவுன்சிலரின் கணவரே லாட்டரி ஏஜென்சி நடத்தினார் என்றால் போலீசாரின் ஆசியும் தாராளமாக கிடைத்துவிடுகிறது. பிறகென்ன, லாட்டரி ”சட்டபூர்வமாகி”விடுகிறது."

***

ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நூல்வியாபாரி 13/05/22 அன்று தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு காணொளியை பதிவு செய்து அனுப்பிவிட்டு தன் உயிரை மாய்த்துள்ளார்.

”இதுவரை லாட்டரியில் 62 லட்சம் தொலைத்துவிட்டேன், ஆகையால் ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொண்டேன். இனிமேலும் உயிரோடு இருந்தால், மீண்டும் லாட்டரி வாங்குவேன், ஆகையால் தற்கொலை செய்துகொள்கிறேன். தான் வசிக்கும் பகுதியில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் லாட்டரி ஏஜென்சி நடத்திவருகிறார். அவரிடம் 30 லட்சத்தை வாங்கி என் குடும்பத்திற்கு தாருங்கள். எப்படியாவது லாட்டரியை ஒழித்துக்கட்டுங்கள்” என அழுதுகொண்டே பேசியுள்ளார்.

”விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என பஞ்ச் வசனம் பேசி துவக்கி வைக்கப்பட்ட லாட்டரி பல உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சியது. கடன் வலையில் விழவைத்தது. தற்கொலைகளுக்கு தள்ளியது. 90களில் தற்கொலைகள் உச்சத்துக்கு சென்ற பொழுது, மக்களும் போராடினார்கள். 2003ல் ஆட்சியில் இருந்த ஜெ. தடை செய்தார்.

தடை செய்த பிறகும், தமிழகத்தின் பல பகுதிகளில் லாட்டரி தாராளமாக கிடைக்கின்றன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூன் முதல் இன்றைக்கு வரை 147 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். 215பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடனே அறிக்கை விடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்படி மாவட்ட வாரியாக பெயரளவில் போடப்படும் வழக்குகளும், கைதுகளுமே லாட்டரி தாராளமாய் விற்பதற்கான வாழும் சாட்சிகளாக இருக்கின்றன.

கவுன்சிலரின் கணவரே லாட்டரி ஏஜென்சி நடத்தினார் என்றால் போலீசாரின் ஆசியும் தாராளமாக கிடைத்துவிடுகிறது. பிறகென்ன, லாட்டரி ”சட்டபூர்வமாகி”விடுகிறது.

இதற்காக பொங்கியுள்ள எடப்பாடி தாங்கள் ஆட்சியில் லாட்டரியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதாக புளுகுகிறார். 2011, 2016 இரண்டு தேர்தலிலும் விழுப்புரம் நகர்ப்புற தொகுதியில் அதிமுகவைச் சார்ந்த சி.வி. சண்முகம் தான் எம்.எல்.ஏயாக ஜெயித்தார். அந்த தொகுதியில் 2019ல் லாட்டரியால் கடன்பட்ட நகை தொழிலாளி அருண் என்பவர் தன் துணைவியார், மூன்று பெண் குழந்தைகளோடு சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். சாகும் பொழுது அவரும் காணொளி ஒன்றை பதிவு செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பினார். அப்பொழுதும் போடப்பட்ட வழக்குகள் இத்தனை, கைது செய்யப்பட்டவர்கள் இத்தனை பேர் என வழக்கம் போல ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

ஏற்கனவே தொழில் நசிவால், வேலை இல்லாமல் வாடி வரும் உழைக்கும் மக்கள் ஏதாவது லாட்டரி அடித்தால் தங்கள் துன்ப, துயரங்களில் இருந்து தங்களை விட்டு மீண்டுவிடமாட்டோமா என்ற நப்பாசையில் தான் லாட்டரிகளை வாங்குகிறார்கள். கடன்படுகிறார்கள். மீண்டும் மீண்டும் விச சுழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.

ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இப்படி அறிக்கைப்போர் நடத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களை நம்பி பலனில்லை.

டாஸ்மாக் கடைகளை மக்கள் அடித்து நொறுக்கியது போல, புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் மக்களை திரட்டி களத்தில் இறங்கி சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் கடைகளை அடித்து நொறுக்கினால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

May 15, 2022

ஜன கண மன (2022) மலையாளம் – திரைப்பார்வை


ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்”கொலை”களுக்கு நீதி கேட்கிறது!

கர்நாடகா மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஒரு கல்லூரி. அந்த கல்லூரியில் பெண் பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார். இந்த செய்தி ஊடகங்களுக்கு பரவுகிறது. அடுத்த நாள் தலைப்பு செய்திகளில் வெளிவருகிறது. நாடெங்கும் போராட்டங்கள் வெடிக்கிறது. போலீசு அடக்குமுறை தொடங்குகிறது.


இந்த வழக்கை விசாரிக்க ஒரு போலீஸ் உயரதிகாரி நியமிக்கப்படுகிறார். தன் விசாரணையில் உள்ளூரில் கஞ்சா மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிற நால்வர் இதில் ஈடுபட்டுள்ளதாக கண்டறிகிறார். மேலும் விசாரணையை துரிதப்படுத்துவதற்குள் அந்த வழக்கு வேறு ஒருவருக்கு கைமாற்றிவிடுவதாக தகவல் வருகிறது.

நால்வரையும் ஒப்படைக்க செல்லும் பொழுது, நால்வரையும் சுட்டுக்கொல்கிறார். அடுத்தநாள் அந்த உயரதிகாரியின் செயலைப் பாராட்டி மக்களும், ஊடகங்களும் கொண்டாடுகிறார்கள். இந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை கமிஷன் கேள்வி எழுப்புகிறது. வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

விசாரணையின் பொழுது அந்த பேராசிரியர் கொலை, மோதல் கொலையின் (Encounter) பின்னணியில் அடுத்தடுத்து நிறைய விசயங்கள் வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக வைக்கிறது.

படம் நிறைய விசயங்களை பேசுகிறது. மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் பல உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆதிக்கசாதி வெறி, அதை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள். ஆதிக்கசாதி வெறியுடன் நடந்துகொள்ளும் பேராசிரியர்களை காப்பாற்றும் நிர்வாகம். இது யதார்த்ததில் நடப்பது தான்.

ஐஐடி, ஐஐஎம், இந்திய அறிவியல் கழகம் போன்ற இந்திய உயர் கல்வி நிறுவனங்களில். கடந்த ஏழு ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கல்லூரியிலும், விடுதியிலும் தற்கொலை செய்துகொண்டவர்களைத் தான் கணக்கில் எடுத்துள்ளார்கள். வீடுகளில், வெளியிடங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்கிறார் திராவிட பகுஜன வேதிகாவின் நிறுவனரும் தலைவரும் ஹைதராபாத் மத்திய பல்கலை கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி அறிஞருமான முனைவர் ஜிலுகர ஸ்ரீனிவாஸ்.

மாணவர்களின் பெரும்பாலான தற்கொலைகளுக்கு சாதியப் பாகுபாடு தான் காரணம். மாணவர்களிடையே, ஆசிரியர்களிடம் இருக்கும் ஆதிக்க சாதி மனோபாவத்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை இழிவுப்படுத்துகிறார்கள் என்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் மூத்த மாணவரும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் தலைவருமான முன்னா கூறுகிறார்.

தற்கொலை செய்த மாணவர்களை வகைப்பிரித்து பார்த்தால், 24 மாணவர்கள் பட்டியல் சாதியினர் (SC), 41 மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் (OBC), பட்டியல் பழங்குடி பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் மூவர், சிறுபான்மையினர் பின்னணி சார்ந்தவர்கள் 3 மாணவர்கள் ஆக 58% மேலே முன்னா சொன்னது உண்மை என விளங்கும்.

தற்கொலைகளுக்கான காரணங்களை ஏற்றுக்கொள்ளும் அரசு, தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்பொழுதும் போல ”மகிழ்ச்சி, உடற்பயிற்சி, யோகா” என மேலோட்டமாகவும், அலட்சியமாகவும் பேசுகிறது. எப்படி தடுப்பது? என ஆய்வு செய்த குழு, ”விடுதிகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளை கழட்டிவிடுங்கள்” என்று சொன்ன ஆலோசனைகளில் ஒன்றை மட்டும் நாட்டின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விடுதி அறைகளில் உடனடியாக அமுல்படுத்தியிருக்கிறது.

இது தான் எதார்த்த நிலைமை. இப்படித்தான் ஒன்றிய அரசு மாணவர்களின் தற்கொலைகளுக்காக தீர்வையும் முன்வைக்கிறது. சென்னை ஐஐடியில் சமீபத்தில் ஒரு முசுலீம் மாணவி தற்கொலை செய்துகொண்ட பொழுது, அந்த பெண்ணின் பெற்றோர், “உங்களை நம்பித்தானே தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்தோம். இப்பொழுது அந்த மகள் உயிரோடு இல்லை” என ஊடகத்தின் முன்பாக கேள்வி கேட்ட பொழுது, தமிழ்நாடு தலை குனியத்தான் வேண்டியிருந்தது. அந்த ”கொலை”க்கு நீதிக்கேட்டு மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடினார்கள். தொடர் போராட்டங்களின் வழியாக தான் ஆதிக்கச்சாதி திமிரை மிதிக்க முடியும்.

அதே போல மோடி ஆட்சிக்கு வந்த கடந்த எட்டு ஆண்டுகளில் படத்தில் ”பேராசிரியர் கொலை” போல,”மாட்டுக்கறி வைத்திருந்தார் என சந்தேகத்தில் அடித்து கொலை” ”தலித்கள் அடித்தே கொலை” என்று வெளிவருகிற ஒவ்வொரு பரபரப்பான செய்திக்கு பின்னாலும் ஆளும் வர்க்கங்கள், ஆளும் அரசியல்வாதிகளின் நலன் இருக்கிறது. திசைதிருப்புதல் இருக்கிறது. மக்களாகிய நாமும் அவர்களின் விரிக்கும் வலையில் விழுந்துவிடுகிறோம். அப்படித்தான் போலி என்கவுண்டர்களை கூட வெளிப்படையாக ஆதரிக்கிறோம் என சாடுகிறது.

உண்மை தான். நாட்டில் நிறைய வதந்திகளை பரப்புவதில் முதலிடத்தில் சங்கிகள் தான் இருக்கிறார்கள். பா.ஜனதா அதற்காக ஒரு பெரும்படையை வைத்திருக்கிறது. அந்த படைக்கு தொடர்ந்து பெரும் கூலி கொடுத்து கொழுக்க வைத்திருக்கிறது. கட்சியில் பதவி கொடுக்கிறது. அந்த காவிப்படை தான் பா.ஜனதாவை விமர்சனம் செய்பவர்களை, பொதுப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பவர்களை, போராடுபவர்களை எல்லாம் அவதூறு செய்கிறது. இப்படித்தான் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்றது. வதந்திகளைப் பரப்பி, கலவரங்களையும் அதுவே தூண்டிவிடுகிறது. இந்த வானரப்படைகளை தடை செய்தாலே போதும் நாடு நிம்மதியாய் இருக்கும்.

படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு அநீதியை எதிர்த்து போராடும் பேராசிரியருக்கு ஆதரவாக உடன் வேலை செய்யும் சக பேராசிரியர்கள் ஆதரவு தெரிவிக்கவிட்டார்கள். உண்மை அறிந்தும் மெளனம் காப்பார்கள். அதனாலேயே தனிமைப்படுவார். அநீதி இழைப்பவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். அடுத்த அநீதியை உற்சாகத்தோடு செய்வார்கள். அநீதி செய்பவர்களை விட, எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்ப்பவர்கள் அந்த அநீதியில் பங்குகொள்கிறவர்கள் தான்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக பொய்யையும், புளுகுகளையும் வைத்து, உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளாக்கி படம் எடுத்து வரும் ஒன்றிரண்டு இயக்குநர்களுக்கு மத்தியில், சமூக பிரச்சனைகளை தைரியமாக சொல்லி, அதற்கு பின்னணியில் இருப்பவர்களையும் அம்பலப்படுத்தியிருக்கும் இயக்குநர் டிஜோ ஜோஸ் அந்தோணிக்கு
வாழ்த்துக்கள்
. படத்தை தயாரித்து முக்கியப் பாத்திரத்திலும் நடித்திருக்கும் பிருத்திவிராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வெளிவர இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

மலையாளப்படம். தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். சென்னையில் சில திரையரங்குகளில் கடந்த ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

May 14, 2022

Doctor Strange in the Multiverse of Madness (2022)


ஒரு இளம்பெண்ணை ஆக்டபஸ் போல ஒரு கொடிய மிருகம் பிடிக்க துரத்துகிறது. அவளை டாக்டர் ஸ்ட்ரேஞ் தனது கூட்டாளியுடன் காப்பாற்றுகிறார். என்ன ஏது என விசாரித்தால், தன்னால் பல்வேறு யூனிவர்ஸ்க்கு பயணிக்க முடியும். எப்படி என்றால் எனக்கு சொல்ல தெரியாது. என்னை கொன்று அந்த சக்தியை அடைய பலரும் முயல்கிறார்கள். வேறு ஒரு யூனிவர்சில் அங்கு வாழும் டாக்டர் ஸ்ட்ரேஞ் ஒரு நெருக்கடி கட்டத்தில் எதிரியிடம் சேரக்கூடாது என அந்த பெண்ணின் சக்தியை எடுத்துக்கொள்ள முயன்றார் என்கிறாள்.


வாண்டாவிடம் (Wanda) போய் ஸ்ட்ரேஞ் உதவி கோருகிறார். அப்பொழுது தான் தெரிகிறது. அந்த சக்தியை எடுக்க முயற்சி செய்வதே வாண்டா தான் என! இதைப் புரிந்துகொள்ள வேறு ஒன்றை சொல்லவேண்டும்.

தானோஸிடம் அவெஞ்சர்ஸ் மல்லுக்கட்டியதில் கொல்லப்பட்டவர்களில் வாண்டாவின் கணவர் விஷனும் ஒரு ஆள். அதற்கு பிறகு யூனிவர்சில் பாதிபேர் காணாமல் போனதும் தனிக்கதை. ஆகையால், தனிமையில் வாடிய வாண்டா, தன் ஆற்றலால் தன் கணவன் உட்பட ஊரையே உருவாக்குகிறாள். அங்கு வாழும் மனிதர்களின் சிந்தனையை அவள் திறனால் கட்டுப்படுத்துகிறாள். அதில் இரண்டு பையன்கள் கூட பிறக்கிறார்கள். வேகமாக வளர்கிறார்கள். ”இது செயற்கை உலகம். நீ கற்பனையில் வாழ்கிறாய். மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறாய்” என யாராவது அந்த ”உலகத்தை” கலைக்க முயன்றால், அவர்களை கடுமையாக தாக்குகிறாள். ஒரு வழியாக அதை கலைத்து, மக்களை மீட்டார்கள் (பார்க்க : Wanda and Vision Series).

இந்த படத்தில் தன்னைப் போலவே மல்டி யூனிவர்சில் வாண்டா பிள்ளைகளோடு வாழ்வாள் அல்லவா! அங்கு போவதற்கு அந்த இளம்பெண்ணின் சக்தி அவளுக்கு தேவைப்படுகிறது. அதை அடைவதற்கு தான் இத்தனையும் செய்கிறாள். ஸ்ட்ரேஞ் இது தவறு என வாதாடுகிறார். அவள் அதை ஏற்க மறுக்கிறாள். இருவருக்கும் நடக்கும் சண்டை தான் மொத்தப் படமும்! அதை சாசகங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

எப்பொழுதும் மிகப்பெரிய ஆற்றல் உள்ளவர்கள் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும். அந்த நெறி தவறினால் என்ன நடக்கும் என்பதைத் தான் படம் நீதியாக சொல்கிறது. கூடுதலாக, வாண்டா விரும்புவது ஒரு நிம்மதியான குடும்பம். ஏம்மா வாண்டா, இன்னொரு கல்யாணம் முடிச்சுக்க வேண்டியது தானே! உங்க ஊர்ல அது இயல்பு தானே! என்றெல்லாம் கேட்க முடியாது. எரித்து கொன்றேவிடுவாள்.

அமெரிக்காவில் முதலாளித்துவ சமூகத்தில் குடும்பங்கள் பல ஆண்டுகளாக சில்லு சில்லாக சிதறிக்கொண்டிருக்கின்றன. அதை மீட்டெடுப்பதற்காக தான் சமீபத்திய படங்கள் போதிக்கின்றன. தன் குடும்பத்தின் நலனுக்காக கடைசியாக வந்த படத்தில் ஜேம்ஸ்பாண்ட் தன் உயிரை விட்டார் கவனித்தீர்களா!

குடும்பம் சிதைவுறுவது என்பது அந்த சமூக அமைப்பில் உள்ள கோளாறு தான். அந்த அமைப்பை மாற்றாமல் அதை சரி செய்யமுடியாது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல! பிள்ளைகள் அமெரிக்காவில்! ஐரோப்பாவில்! வயதான தாய், தந்தைகள் இந்தியாவில் வாழ்கிறார்கள். 25 வயதில் துபாய் போன அப்பா, 54 வயதாகியும் துபாயில் தான் இருக்கிறார். அப்பாவின் அருகாமைக்காக பல நாட்கள் ஏங்கியிருக்கிறேன் என ஒரு மகன் நேற்று முகநூலில் உருக்கமாக எழுதியிருந்தார்.

இது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை. ஏனென்றால் உலகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தில் முதலாளித்துவம் தானே ஆள்கிறது. ஆகையால் இது தவிர்க்கமுடியாதது. மாற்று சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பது தான் பளிச்சென தெரிகிறது.

மற்ற படி, தொழில்நுட்ப ரீதியாக, ஸ்ட்ரேஞ் VS வாண்டா இருவரின் சாசகங்கள் நிறைந்த படம் தான். பாருங்கள். கோடை கால விடுமுறையில் பள்ளி குழந்தைகளுக்காக திரையரங்குகளில் 3Dயில் வெளியிட்டிருக்கிறார்கள். பாருங்கள்.

May 5, 2022

தோழர் மார்க்ஸ்


18 வயதில் வறுமை ஏன்? ஏற்றத்தாழ்வு ஏன்? என்ற மண்டையை குடையும் கேள்விகளோடு பதில் தேடி அலைந்த நாட்கள் நினைவில் மேலெழும்புகின்றன.


தேடித் தேடி படித்திருக்கிறேன். தேடித்தேடி பார்த்திருக்கிறேன். தேடித்தேடி விவாதித்திருக்கிறேன். கிடைத்த பதில்களும் முரண்பட்டவைகளாக இருந்தன. உலகை வியாக்கியானம் செய்வதல்ல! மாற்றுவது தான் தேவை! என அழுத்தமாய் சொன்ன தோழர் மார்க்சை கண்டடைந்தேன். எல்லாவற்றிற்கும் முரணற்ற முறையில் எனக்கு பதில் வைத்திருந்தார்.

20களில் இளமை வேகத்தில் மார்க்சை, லெனினை நேசிப்பீர்கள். 30களில் சராசரியாகிவிடுவீர்கள் என்றார்கள் சில மூத்தவர்கள். இதோ 40+களிலும் மார்க்சை பின்பற்றிவருகிறேன். சொன்னவர்கள் குழம்பிபோய்விட்டார்கள்.

சமூகத்தின் மீதான நேசம் குறையாதவரை எப்பொழுதும் மார்க்சின் மாணவன் தான். மனித குலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சியம் என்னும் தீச்சுடரை நமக்கு தந்துள்ளார். அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்.

மார்க்ஸ்க்கும் எனக்கும் பிறந்தநாள் தொடர்பு இருக்கிறது. பள்ளியில் சேர்க்கும் பொழுது எனக்கும் அவரின் பிறந்த நாளை தான் கொடுத்துள்ளார்கள்.

உலக மக்களின் மீது மாறாத அன்புகொண்டு தன் இறுதிநாள் வரை உழைத்த தோழர் மார்க்சுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
நம் கனவு தான் அவரின் கனவும்! அதை உறுதியுடன் முன்னெடுத்து செல்வோம்!!